முதிர்மரத்தின் இன்கனி

நாஞ்சில்நாடனின் உரைநடையில் தமிழறிஞர் ஒருவரின் பகடி ஒரு பின்தாளமாக ஒலித்தபடியே இருக்கிறது. சற்று தமிழறிமுகம் உடையவர்கள் அவ்வப்போது புன்னகைத்தபடியும் சிலவேளை வெடித்துச்சிரித்தபடியும்தான் அவரது எழுத்துக்களை வாசிக்கமுடியும். ஆலயநிர்வாகத்தைப் பற்றிப் பேசுமிடத்தில் ‘தக்கார் என்பது இங்கு எப்போதும் தகவிலார்தானே?’ என்று சொல்லிச்செல்கிறார். ஒரு வரி மனதில்வந்ததுமே வாசித்த தமிழ்ச்செய்யுள் ஒன்று நினைவில் கிளர்ந்து பகடியாக மாறுவதன் விளைவு இது. தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்னும் வரி நம் நினைவிலும் அதற்கு முன்னரே எழுந்திருந்தது என்றால் நாம் நகைத்தபடி அங்கே வாசிப்பை நிறுத்தியிருப்போம்.

சென்ற பதினைந்தாண்டுகளில் அவரது எழுத்தில் மேலோங்கி வந்துள்ள அம்சங்களில் முதன்மையானது வலுவான ஆசிரியக்குரல். கதையை ‘உள்ளது உள்ளபடி’ சித்தரிக்கும் யதார்த்தவாதத்தில் இருந்து அவர் வெகுவாக விலகி கதையை நேரடியாகவே சொல்லத்தொடங்கியிருக்கிறார். பெரும்பாலான கதைகள் கதைக்கு உள்ளும் வெளியும் ஆசிரியரின் நேரடிக்குரலால் கூறப்படுகின்றன. அக்குரல் நாஞ்சில்நாடனுக்குரியது. தமிழறிவின் பகடி தவறாமல் ஊடுருவும், அறச்சீற்றமும் கசப்பும் கலந்த, நாஞ்சில்தமிழ் விளையாடும் அவரது பேச்சுமொழி.

பீதாம்பர் பாண்டுரங்க நாத்ரேயின் மரணத்தைச் சொல்லும் ஆத்மா என்னும் கதையில் ‘அடுக்குமாடிக்குடியிருப்பில் ஒன்பதாவது நிலையில் சி ஃப்ளாட்டில் வசிக்கும் எலி கண்டாங்கிப்பாச்சை பல்லி தவிர வேறொரு குருவிக்கும் இந்தத் தகவல் இன்னும் சென்று சேரவில்லை’ என்று சொல்லும் கதைசொல்லியின் ‘பிறகெப்படி உமக்குத்தெரியும்வேய்’ என்ற வினா நியாயமானதுதான். அதுதான் கதாசிரியனின் வசதி. ஒளியும் ஒலியும் வளியும் நுழைய இயலாத இடத்தையும் உற்றுநோக்கும் வசதி’ என்று விளக்கியபின் கதையை மேலே சொல்லிச் செல்கிறார்.

பலகதைகளை கதையா அனுபவக்குறிப்பா என்று அறியமுடியாதபடி எழுதியிருக்கிறார். உதாரணம் காடு. அதில் பொன்னீலன் கதைமாந்தராக வந்து நினைவுப்பரிசாகக் கிடைத்த பித்தளைக் கும்பாவில் துளைபோட்டு பிளாஸ்டிக்காலான வள்ளுவர் சிலையை பொறித்திருப்பதைக் கண்டு மனம் வெதும்பி ‘கும்பாக்க நடுவில ஓட்டை போட்டுட்டானுவோ. வத்தமொளவோ ஈருள்ளியோதான் போட்டு வைய்க்கலாம்’ என்கிறார். கதைசொல்லியே அதைக் கண்டதுமே ‘ஈயம்பூசி வைத்தால் பழையது குடிக்க வாகாக இருக்கும்’ என எண்ணியவர்தான்.

மேலோங்கியிருக்கும் இன்னொரு அம்சம் செறிவு. பழைய நாஞ்சில்நாடன் கதைகளை வாசித்தவர்கள் இக்கதைகளில் அவர் ஊடும்பாவுமாக செருகியிருக்கும் நக்கல்களையும் நையாண்டிகளையும் கவனிக்காமல் தாண்டிச்செல்லக்கூடும். எதைச்சொன்னாலும் வேறெங்கோ பிய்த்துக்கொண்டு செல்லும் கிண்டல் அவரது நடையை உயிர்ப்பொருளுக்குரிய சிக்கலும் நுட்பமும் கொண்டதாக ஆக்கிவிட்டிருக்கிறது. கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடமாடும் தமிழாய்ந்த நல்லபாம்புக்கு ‘நிறைய கொங்குவேளாள, பலிஜா-கம்மவார் நாயக்க, தட்சிணமாறநாடார், தேவேந்திரகுலவேளாள, கள்ள, மறவ, தேவ, மலையாளநாயர், பணிக்க, இருபத்துநான்கு மனைச்செட்டி, ஆரியவைசியச்செட்டித் தவளைகள் உண்ணக்கிடைத்தன’ என்னும் வரி மேலும் தாவி ‘மேட்டுக்குடித்தவளைகளும் வெள்ளாளத் தவளைகளும் கொழுப்பு வற்றிப்போய்க் கிடைத்தன’ என்று குத்திவிட்டு திசைமாறுகிறது.

இக்காரணத்தால் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக ஆக்கும் வல்லமைகொண்டிருக்கின்றன நாஞ்சில்நாடன் கதைகள். நுட்பமும் அழுத்தமும் ஒரு பக்கமிருக்க வாசிப்பதே கொண்டாட்டமாக அமையும் இத்தகைய நூல்கள் அரிதாகவே தமிழில் நிகழ்கின்றன.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே நாஞ்சில்நாடனின் மொழிச்சிறப்பால் முக்கியமானவை. ஆனால் மூன்று கதைகளை இருவகையில் முதன்மையானவை என்று சொல்லலாம். பேச்சியம்மை நாஞ்சில்நாடன் கதைகளில் மட்டும் வரச்சாத்தியமான கதாபாத்திரம். புறக்கணிப்பின் தீவிரமான வலியை வைராக்கியமாக ஆக்கிக்கொண்டு பல்லைக்கடித்தபடி உலகுக்குப் புறம்காட்டி மரணம் நோக்கி நடந்துசெல்லும் பேச்சியம்மையை நாஞ்சில் நுட்பமாகவும் தீவிரமாகவும் படைத்திருக்கிறார். உலகியல் தளத்தின் அநீதிகளையும் சுரண்டல்களையும் சொல்லுமிடத்தில் நாஞ்சில்நாடனிடம் கூடும் வேகம் அமைந்த கதை இது.

பாம்பு நாஞ்சில்நாடனுக்கே உரிய பகடி ததும்பி வழியும் கதை. முன்னரே சில தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த புகழ்பெற்ற கதை இது. தமிழறிஞர்கள் மீது கோவை சிங்காநல்லூர் பிராந்தியத்தில் வாழும் முதுமையால் சற்றே நடுவொடிந்த நல்லபாம்புக்கு இருக்கும் கசப்பும், தருணம் கிடைத்தால் ஒரே போடாகப் போட்டுவிடும் அதன் துடிப்பும் நாடறிந்ததே. வரிக்கு வரி நக்கல் இழையோடும் அக்கதையை பலமுறை வாசித்தால்தான் உள்விளையாட்டுகளை நீவி எடுக்கமுடியும்.

‘பூனைக்கண்ணன் கடத்திய அம்மன்’ நாஞ்சில்நாடன் கதைகளிலேயே அபூர்வமானது. நாஞ்சில்நாடனின் உலகியல் மனம் பொதுவாக தத்துவம் ஆன்மீகம் போன்றவற்றைத் தீண்டாதது. ஆனால் இக்கதையில் ஆண்டை சொன்னதைச் செய்து கர்மயோகியாக வாழும் அடியாளான பூனைக்கண்ணன் ஓர் அம்மன்சிலையைத் திருடப்போய் சித்தனாக மாறும் பரிணாமம் அனைத்து வகையிலும் தீவிரமாக நிகழ்ந்திருக்கிறது. பூனைக்கண்ணன் ஏறும் அந்த மலை, முதலில் சுமையாக இருக்கும் சிலை மெல்லமெல்ல இனிய துணையாக ஆகும் அழகு அனைத்தும் படிமங்களாகிக்கொண்டே செல்கின்றன. நாஞ்சில் எழுதியவற்றில் மிகச்சிறந்த சில கதைகளில் ஒன்று.

தமிழின் முக்கியமான சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று. பெரும்பாலும் புதுவீச்சுடன் மொழிக்குள் நுழையும் இளம்படைப்பாளியைப்பற்றித்தான் இவ்வரிகளைச் சொல்ல வாய்க்கிறது. எழுதத்தொடங்கி அரைநூற்றாண்டை எட்டிக்கொண்டிருக்கும் படைப்பாளியின் தொகுதியைப்பற்றி இந்த வரியைச் சொல்வதென்பது ஓர் இனிய அதிர்ச்சிதான்.

[கொங்குதேர் வாழ்க்கை. நாஞ்சில்நாடன். விகடன் பிரசுரம். விலை ரூ 70]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42
அடுத்த கட்டுரைவல்லினமும் பறையும்