‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53

பகுதி பத்து : அனல்வெள்ளம்

[ 6 ]

விதுரன் சத்யவதியின் அறைக்குள் நுழைந்து தலைவணங்கினான். சத்யவதி கைகாட்டியதும் சியாமை கதவைமூடிவிட்டு வெளியே சென்றாள். “அமர்ந்துகொள், களைத்திருக்கிறாய்” என்றாள் சத்யவதி. விதுரன் பீடத்தில் அமர்ந்துகொண்டு “ஆம், காலைமுதல் வெளியேதான் இருக்கிறேன்” என்றான். “சகுனியின் படையும் பரிவாரங்களும் அமைந்துவிட்டனரா?” என்றாள் சத்யவதி. “அவர்கள் கூட்டமாக புராணகங்கைக்குள் புகுந்து குடில்களை அமைத்துக்கொண்டே முன்னேறி நெடுந்தூரம் சென்றுவிட்டனர். இப்போது நம் வடக்குவாயிலில் ஏறி நின்றால் அப்பால் நகருக்கு ஒரு சிறகு முளைத்திருப்பது தெரிகிறது” என்றான் விதுரன்.

“உண்மையில் நான் மெல்ல அந்தப்படைகளை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன் விதுரா” என்றாள் சத்யவதி. “அவர்கள் நம்மைவிட எவ்வகையிலோ கூரியவர்கள் என்று தோன்றுகிறது. நடையிலா கண்களிலா தெரியவில்லை, ஒரு காந்தாரப்படைவீரனைக் கண்டால் அவன் நம் வீரர் இருவருக்கு நிகரென்று தோன்றுகிறது.” விதுரன் “பேரரசி எண்ணுவது முற்றிலும் உண்மை. ஆயிரம் காதம் கடந்து இங்குவந்திருக்கும் காந்தார வீரன் வீடோ குடியோ உறவோ சுற்றமோ இல்லாதவன். தன் வாளை நம்பி இங்கு வந்தவன். நம் வீரர்கள் இனிய இல்லங்களில் மனைவியும் புதல்வர்களும் கொண்டவர்கள். தந்தையர் தனயர், ஏன் பாட்டன்களும் இருக்கிறார்கள். நாம் வைத்திருக்கும் துருவேறிய படைக்கலங்களைப்போன்றவர்கள் நம் வீரர்கள். அவர்களோ ஒவ்வொருநாளும் கூர்தீட்டப்பட்டவர்கள்.”

“உண்மையில் இந்நகரம் இன்று நம் ஆணையில் இருக்கிறதா?” என்றாள் சத்யவதி. “இன்று இருக்கிறது” என்றான் விதுரன். அவள் பெருமூச்சுடன் “நான் முடிவுகளை எடுத்தபின் திரும்பிப்பார்ப்பதில்லை. ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் ஐயங்கள் என்னை வதைக்கின்றன. சரியானதைத்தான் செய்திருக்கிறேனா? அஸ்தினபுரியை குழந்தையைக்கொண்டுசென்று ஓநாய்முன்போடுவதுபோல விட்டுவிட்டேனா? தெரியவில்லை” என்றாள். அவளுடைய கண்களுக்குக் கீழே தசைவளையம் தொங்கியது. முகமே சுருங்கி நெளிந்த கரும்பட்டால் ஆனதுபோலத் தோன்றியது.

“பேரரசியார் இந்த இக்கட்டை நன்கு தேர்ந்தபின்னர்தானே எடுத்தீர்கள்?” என்றான் விதுரன். “ஆம், அனைத்தையும் சிந்தனை செய்தேன். சூதரும் ஒற்றரும் அளித்த அனைத்துச்செய்திகளையும் நுண்ணிதின் ஆராய்ந்தேன். ஆனால் அரசுசூழ்தலில் முதன்மை விதியொன்றுண்டு, அதை தவறவிட்டுவிட்டேன்” என்றாள் சத்யவதி. “ஒருவனைப்பற்றி எந்த இறுதிமுடிவையும் எடுப்பதற்கு முன் அவனை நேரில் பார்த்தாகவேண்டும். அவனிடம் சிலமுறையாவது பேசியாகவேண்டும். எத்தனை நுணுகியறிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் நம் அனைத்து கணிப்புகளும் பிழைபட்டுவிடுகின்றன.” அவள் தலையை அசைத்தாள். “நான் சகுனியைப்பற்றி அனைத்தும் அறிவேன் என நினைத்தேன். அவனை நேரில் கண்டதும் என் கணிப்புகளை எண்ணி திகைத்தேன்.”

“நேரில் கண்டதும் எதை அறிந்தீர்கள்?” என்றான் விதுரன் சற்றே வியப்புடன். “அறிந்தது எந்த புதுச்செய்தியையும் அல்ல. அவனை நேரில் கண்டு அறிந்தவை இரண்டுதான். தன்னை முற்றிலும் இறுக்கிக்கொண்டிருக்கும் அரசியலாளன் அவன். ஆனால் காந்தாரியைப்பற்றி பேசும்போது அவன் உள்ளம் நெகிழ்கிறது. தேவவிரதனை அவன் விரும்புகிறான். ஆனால் அவை எவ்வகையிலும் முக்கியமான அறிதல்களல்ல. நானறிந்தது அறிதல் அல்ல. உணர்தல். அவனருகே நிற்கையில் என் அகம் தெளிவாகவே அச்சத்தை உணர்கிறது. அவன் இந்நகரின் அழிவுக்கு வழிவகுப்பான் என எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது.”

விதுரனை நோக்கி சத்யவதி சொன்னாள் “ஆகவேதான் நேரில் பார்க்காமல் முடிவெடுக்கலாகாது என்கிறார்கள் அரசுசூழ்தல் அறிஞர்கள். பிறர் சொல்லும்போது நம் சிந்தைதான் அவற்றைக் கேட்கிறது. நம் தர்க்கம்தான் அவற்றைப் புரிந்துகொள்கிறது. அம்மனிதன் நம்மருகே நிற்கையில் நம்முடைய ஆன்மா அவனை உணர்கிறது. உள்ளுணர்வின் மூன்றாம் விழியால் அவனை நாம் பார்க்கமுடிகிறது.”

“பேரரசி சற்று மிகைப்படுத்திக்கொள்கிறீர்களோ என ஐயுறுகிறேன்” என்றான் விதுரன். “இருக்கலாம் விதுரா. நான் பெண் என உணரும் தருணங்கள் இவை” என்று சத்யவதி பெருமூச்சு விட்டாள். “அனைத்திலும் வரப்போகும் புயலின் உறுமலை என் செவிகள் கேட்கின்றன போலும்.” அவள் வலிந்து புன்னகை புரிந்தாள். “உன் மூதன்னையை ஒரு பேதையாகக் காண்பது உன்னுள் உவகையை நிறைக்குமே…” விதுரன் புன்னகை புரிந்தபடி “சிறப்பாக உய்த்தறிகிறீர்கள்” என்றான்.

சத்யவதி வாய்விட்டுச்சிரித்தபோது அவள் இளமையில் சந்தனுவை பித்துகொள்ளவைத்த பேரழகி என்பதை விதுரன் எண்ணிக்கொண்டான். காற்றில் சாம்பலுக்குள் இருந்து கனல் சுடர்வதுபோல அவள் முதுமைக்குள் இருந்து அப்பேரழகு வெளிவந்தது என எண்ணிக்கொண்டான். மூதன்னையிடம்கூட எஞ்சும் பெண்ணழகை தவறவிடாத தன் ஆண்விழிகளை எண்ணியும் வியந்துகொண்டான். அதேகணம் அவன் எண்ணம் ஓடுவதை உணர்ந்து அவள் கண்கள் எச்சரிக்கை கொண்டன. “என்ன பார்க்கிறாய்?” என்றாள். “அன்னைய, நீங்கள் அழியா அழகுகொண்டவர்” என்றான் விதுரன் .

அரசைத் துறந்து முதுமையைத் துறந்து அஸ்தினபுரியையும் அத்தனை ஆண்டுகளையும் துறந்து யமுனைக்கரை இளம்பெண்ணாக நின்று முகம் சிவந்து கண்வெட்கி “என்ன சொல்கிறாய் மூடா?” என்றாள் சத்யவதி. “ஆம் அன்னையே. உங்கள் சிரிப்புக்கு நிகரான பேரழகு இங்கு எந்தப்பெண்ணிடமும் வெளிப்படவில்லை.” அனலென சிவந்த கன்னங்களுடன் அவள் சிரித்துக்கொண்டு “எத்தனை பெண்களைப் பார்த்தாய் நீ?” எனறாள். “ஏராளமாக” என்றான் விதுரன். சத்யவதி “அதுசரி, ஆண்மகனாகிவிட்டாய். தேவவிரதனிடம் சொல்லவேண்டியதுதான்” என்றாள். “அன்னையே நான் கண்ட பெண்களெல்லாம் காவியங்களில்தான். உங்கள் மைந்தரின் சொற்கள் வழியாக.”

சத்யவதி சிரித்து “அவன் உன்னைப்பார்த்தால் மகிழ்வான். அவன் சொற்களெல்லாம் முளைக்கும் ஒரு வயல் நீ” என்றாள். “நீ வந்ததனால்தான் நான் சற்றே கவலை மறந்தேன். என் முகம் மலர்ந்தாலே அதை அழகென நீ சொல்கிறாய் என்றால் நான் எப்போதும் துயருற்றிருக்கிறேன் என்றல்லவா பொருள்?” என்றாள் சத்யவதி. மேலும் அழகை புகழச்சொல்லிக் கோரும் பெண்மையின் மாயத்தை உணர்ந்த விதுரன் தனக்குள் புன்னகைத்தபடி “அன்னையே, நீங்கள் அசைவுகளில் அழகி. புன்னகையில் பேரழகி. பற்கள் தெரிய நகைக்கையில் தெய்வங்களின் அழகு உங்களில் நிகழ்கிறது” என்றான்.

“போதும்… யாராவது இதைக்கேட்டால் என்னை பித்தி என்று நினைப்பார்கள். பெயரனிடம் அழகைப்பற்றி அணிச்சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றாள் சத்யவதி. விதுரன் “ஏன் கேட்டாலென்ன? மூவுலகையும் ஆளும் அன்னை பார்வதியே பராசரரின் தேவிஸ்தவத்தை கேட்டு மகிழ்ந்திருக்கிறாள் அல்லவா?” என்றான். சத்யவதி “நீ என்ன என்னைப்பற்றி காவியமெழுதவிருக்கிறாயா?” என்றாள். “ஆம். அன்னையே நான் காவியமெழுதுவேன் என்றால் அது உங்களைப்பற்றி மட்டும்தான். அதற்கு மாத்ருசரணம் என்று பெயரிடுவேன். உங்கள் பாதங்களில் இருந்து தொடங்குவேன்.”

“போதும்…” என்றாள் சத்யவதி பெருமூச்சுடன். அவள் முந்தைய எண்ணங்களுக்கு மீண்டாலும் முகத்தின் அந்த மலர்ச்சி நீடித்தது. “அந்தப்புரத்தில் என்றும் வாழப்போகும் ஒரு கசப்பு முளைத்துவிட்டது விதுரா. அதைப்பற்றிச் சொல்லத்தான் நான் உன்னை அழைத்தேன்.” விதுரன் தலையசைத்தான். “நீயே உய்த்தறிந்திருப்பாய். காந்தாரிக்கும் குந்திக்கும் இடையேதான்.” விதுரன் “அது நிகழுமென நான் முன்னரே எண்ணினேன்” என்றான். “ஏன்?” என்றாள் சத்யவதி. விதுரன் “குந்திபோஜனின் மகள் இயல்பால் ஷத்ரியமகள். வணங்காதவர். வெல்பவர். ஆள்பவர்” என்றான்.

“ஆம், அவள் கையில் நிறைகுடமும் சுடர்அகலும் கொண்டு வண்டியில் இருந்து என் மாளிகைமுற்றத்தில் இறங்கும்போது நான் அவளைக் கண்டேன். அக்கணமே இவள் சக்ரவர்த்தினி அல்லவா என எண்ணிக்கொண்டேன். பெரும்பிழை செய்துவிட்டோம் என்ற எண்ணமே எழுந்தது. நேரில்காணாமல் எடுத்த இன்னொரு பிழைமுடிவு. அவள் இந்த அந்தப்புரத்தில் திருதராஷ்டிரனின் பதினொரு ஷத்ரிய அரசிகளின் சேடியாக ஒருபோதும் ஒடுங்க மாட்டாள்.” விதுரன் “ஆம், ஆனால் தானிருக்கும் இடமும் தன்னிடமும் தெரிந்தவர் குந்திதேவி. எங்கே பிழை நிகழுமென்றால் காந்தாரத்தின் அரசிக்கு விழியில்லை. அவர் தங்கையருக்கும் விழியிருக்க வாய்ப்பில்லை. அவர்களால் குந்திதேவியைக்  காணமுடியாது. வைசியகுலத்தவளாகவே அவரை நடத்துவார்கள்.”

“அதுதான் நடந்தது” என்றாள் சத்யவதி. “குந்தி புதுமணப்பெண்ணாக வந்திறங்கி புத்தில்லம் புகுந்தபோது அவளை முறைப்படி எதிரேற்று கொண்டுசெல்ல கையில் நிறைவிளக்கும் மலருமாக அவளுடைய மூத்தவள் வந்திருக்கவேண்டும். அவள் விழிமூடியவள். ஆனால் அவளுடைய பத்து தங்கையரில் எவரும் வரவில்லை. வண்டிகள் வரும் ஒலி கேட்டதும்கூட எவரும் வரவில்லை என்று கண்டு நான் சியாமையிடம் முதல் மூன்று இளவரசிகளும் வந்தாகவேண்டும் என்று ஆணையிட்டு அனுப்பினேன். ஆனால் கடைசி மூன்று பெண்களும்தான் வந்தனர். அவர்களும் கைகளில் எதையும் வைத்திருக்கவில்லை.”

“அந்தக் கடைசிப்பெண் தசார்ணை மிகச்சிறுமி. ரதங்கள் வந்து நின்றபோது அவள் வேறெதையோ பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். அணிமங்கலத்துடன் இல்லம்புகுந்த குந்தியை எதிர்கொள்ள இரட்டையாக அமங்கல முறைகாட்டி நின்றனர் அவ்விளவரசியர். நான் என் முகத்தில் எதையும் காட்டவில்லை. அவளை எதிர்கொண்டழைத்து மாளிகைக்குள் கொண்டுசென்று மங்கலத்தாலம் காட்டி, மஞ்சள்நீர் தெளித்து, மலர்சூட்டி இல்லத்துக்குள் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அவள் மிகக்கூரியவள். என்ன நிகழ்ந்ததென அக்கணமே அவள் உணர்ந்துகொண்டாளென அவள் கண்களில் நான் கண்டேன்” சத்யவதி சொன்னாள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“அவள் அந்த அவமதிப்புக்கு எதிர்வினையாற்றுவாள் என நான் எண்ணினேன்” என்றாள் சத்யவதி. “இல்லம் சேர்ந்தபின் நீராடி ஆடைமாற்றி மூன்று மூதன்னையரின் பதிட்டைகளில் வழிபட்டு மலர்கொண்டபின் அவள் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். அவளுடன் வந்த சேடியை நான் வரச்சொன்னேன். அவளிடம் மூத்தவளைச் சென்று நோக்கி வணங்கிமீளும்படி குந்தியிடம் சொல்லச் சொன்னேன். மூத்தவள் விழிமறைத்தவளாதலால் அதுவே முறையாகுமென விளக்கும்படி கோரினேன். என் ஆணையை குந்தி மீறமாட்டாளென நானறிவேன்” சத்யவதி தொடர்ந்தாள்.

“சத்யசேனையின் சேடியை வரவழைத்து அவர்கள் குந்தியை வரவேற்க வராமலிருந்தமை பெரும் பிழை என்று கண்டித்தேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் சூத்திரப்பெண்களுக்கு அப்படி வரவேற்பளிக்கும் முறை காந்தாரத்தில் இல்லை என்று அவள் எனக்கு பதில் சொல்லியனுப்பினாள்.” விதுரன் கண்களில் சினம் தோன்றியது. “அத்தகைய பதிலை தாங்கள் பொறுத்துக்கொண்டிருக்கக்கூடாது அன்னையே” என்றான். சத்யவதி “நான் எதையும் பெரிதாக்க எண்ணவில்லை. ஏனென்றால் பெண்களுக்கிடையே விளையும் சிறுபொறிகூட பெருநெருப்பாகிவிடும். அனைத்தும் எளிதாக கடந்துசெல்லட்டும் என்றே முயன்றேன்” என்றாள்.

“அத்துடன் திருமண வேளை என்பது மிகநுட்பமான அகநாடகங்களின் களம் விதுரா. ஒருவருக்கொருவர் முற்றிலும் அயலான குடும்பங்கள் இணைகின்றன. ஒருவரை ஒருவர் அறியாதவர்கள். ஒருவரை ஒருவர் கண்காணிப்பவர்கள். மதிக்கப்படுகிறோமா என்ற ஐயம். அவமதிக்கப்படுவோம் என்னும் அச்சம். தாங்கள் தங்களைப்பற்றி எண்ணியிருப்பவற்றை பிறர் ஏற்கிறார்களா என்னும் பதற்றம். சிறு சொல்லும் பெரும் அகக்கொந்தளிப்பாக ஆகிவிடும். எளிய செயல்கள்கூட நினைத்துப்பார்க்க முடியாத உட்பொருட்களை அளித்துவிடும். மணக்காலத்தில் குடும்பங்கள் கொள்ளும் சிறு கசப்புகூட பெருகிப்பெருகி அவ்வுறவுகளை முற்றாகவே அழித்துவிடும்.”

“ஆகவே காந்தார இளவரசி அஸ்தினபுரியின் பேரரசிக்கு அவமதிப்பான பதிலை அளிக்க ஒத்துக்கொண்டீர்கள்” என்று விதுரன் சினம் அடங்காமல் சொன்னான். “அவள் சிறுமி. அவள் சொன்னதும் சரியே. காந்தாரத்தின் நடைமுறைகளை நாம் அறியோம் அல்லவா? அவளிடம் யாதவர்கள் ஷத்ரியர்களல்ல சூத்திரர்களே என்று எவரேனும் சொல்லியிருக்கலாம். அனைத்தையும் மெல்ல பின்னர் பேசி சீர்செய்துகொள்ளலாமென எண்ணினேன்.” விதுரன் “என்ன நிகழ்ந்தது?” என்றான்.

“நான் சொல்வதை குந்தி ஒருபோதும் மீறமாட்டாளென அவளைக் கண்ட முதற்கணமே அறிந்துகொண்டேன். ஆனால் நான் சொன்னதைக்கொண்டே அவள் பழிதீர்ப்பாளென எண்ணவில்லை” என்றாள் சத்யவதி. விதுரன் புன்னகை செய்தான். “சிரிக்காதே. ஒவ்வொன்றும் என்னை பதறச்செய்கிறது” என்றாள் சத்யவதி. “அவள் தன்னை பேரரசி என அலங்கரித்துக்கொண்டாள். அம்பாலிகையின் சேடியரை அழைத்து தனக்கு சாமரமும் மங்கலத்தாலமும் எடுக்கச்செய்தாள். குந்திபோஜன் அவளுக்களித்த விலைமதிப்புள்ள மணிகளையும் மலர்களையும் மங்கலப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு அணிச்சேடியர் துணைவர காந்தாரியை காணச்சென்றாள். புஷ்பகோஷ்டத்தின் அந்தப்புரத்துக்குள் சென்று காந்தாரியைக் கண்டு முறைப்படி தாள்பணிந்து முகமனும் வாழ்த்தும் சொல்லி வணங்கினாள். தங்கையரையும் முறையாக வணங்கி மலர்கொடுத்தாள்.”

விதுரன் பெருமூச்சுடன் “ஆம், அவர்கள் அதையே செய்வார்களென நானும் எதிர்பார்த்தேன்” என்றான். “அச்செயல் அவர்களை நெருப்பென எரியச்செய்துவிட்டது. சத்யசேனை குந்தி திரும்பியதும் அவள் கொண்டுசென்ற பரிசில்களை அள்ளி வீசி அவள் நாடகமாடுகிறாளென கூவியதாக சேடியர் சொன்னார்கள்” சத்யவதி பெருமூச்சு விட்டாள். “அதைக்கேட்டபோது நான் குந்திமீதுதான் கடும்சினம் கொண்டேன். அரண்மனைமுகப்புக்கு மங்கலஏற்புக்கு அவர்கள் வராததைக் கொண்டே அவர்களை அவள் எடைபோட்டுவிட்டாள். அவர்களின் சிறுமையை வதைப்பதற்குரிய மிகச்சிறந்த முறை அவர்கள் முன் பேரரசியின் நிமிர்வுடனும் பெருந்தன்மையுடனும் இருப்பதே என்று கண்டுகொண்டாள்.”

“அது அவர்களின் இயல்பாக இருக்கலாம்” என்றான் விதுரன். “ஆம், அவள் இயல்புதான் அது. அவள் யானைபோன்றவள். அவளால் தலைகுனிய முடியாது. பதுங்கவும் ஒடுங்கவும் முடியாது. ஆனால் அவளுக்கு தன் ஒளி தெரியும். நோயுற்ற விழிகள் அதைக்கண்டு கூசித்தவிக்குமென தெரியும். அந்த வதையை அவர்களுக்கு அளிக்கவேண்டுமென்றே அவள் சென்றாள்” என்றாள் சத்யவதி. “இனி நிகழவிருப்பது இதுதான். அவள் தன் நிமிர்வாலும் ஒளியாலும் அவர்களை வதைத்துக்கொண்டே இருப்பாள். அவர்கள் அந்த வலியாலேயே புழுவாக ஆவார்கள். அவளுடைய ஒவ்வொரு பெருந்தன்மையாலும் மேலும் மேலும் சிறுமையும் கீழ்மையும் கொள்வார்கள்.”

“அவர்களை அப்படி ஆக்குவது எது?” என்று விதுரன் கேட்டான். “அவர்களின் நகரம் பாரதவர்ஷத்தின் மேற்கெல்லை. அங்கே கங்கைக்கரையின் எண்ணங்களும் நடைமுறைகளும் சென்றுசேர்ந்திருக்க வாய்ப்பில்லை” என்றாள் சத்யவதி. “இல்லை, பேரரசி. அதுவல்ல. அவர்கள் இங்கு வந்திறங்கியபோது நான் அவர்களைப் பார்த்தேன். அச்சமும் ஆவலும் கொண்ட எளிய பெண்களாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்குள் அந்தக் கசப்பை நிறைப்பது எது?” சத்யவதி அவன் சொல்லப்போவதென்ன என்பதைப்போல பார்த்தாள். “அவர்களில் எவருக்கேனும் இசை தெரியுமா?” என்றான் விதுரன். சத்யவதி புரிந்துகொண்டு விழிவிரிய மெல்ல உதடுகளைப்பிரித்தாள்.

“அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது பேரரசி. அவரது இசைக்குள் அவர்கள் செல்லவேண்டும் மூத்த அரசியைப்போல. அல்லது தங்கள் இசையால் அவரிடம் உரையாடவேண்டும்.” சத்யவதி “திரும்பத்திரும்ப இதுவே நிகழ்கிறது” என்றாள். விதுரன் “அத்துடன் அந்த வைசியப்பெண் பிரகதி, அவள் உமிக்குள் வைத்த நெருப்புத்துளி போல ஒவ்வொரு கணமும் இவ்வரசிகளின் ஆன்மாவை எரித்துக்கொண்டிருப்பாள்”   என்றான். தன்னையறியாமலேயே சத்யவதி தலையை மெல்ல தட்டிக்கொண்டாள். “ஆம்… அதை நன்றாகவே உணர்கிறேன். அந்த உணர்வுகளெல்லாம் எனக்கு நெடுந்தொலைவாக ஆகிவிட்டன. ஆயினும் தெளிவாகவே தெரிகின்றன.” சத்யவதி பெருமூச்சு விட்டாள். “எளியபெண்கள். பாவம். இனி இப்பிறவியில் அவர்களுக்கு காதல் இல்லை. உவகை இல்லை. நிறைவளிக்கும் துயில்கூட இல்லை.”

விதுரன் “தாங்கள் இதில் கவலைகொள்ள ஏதுமில்லை பேரரசி” என்றான். “தாங்கள் இருவரை நம்பலாம். குந்திதேவி ஒருபோதும் அவரது எல்லையில் இருந்து நிகழ்வுகள் மீறிச்செல்ல விட்டுவிடமாட்டார்கள். தன் மாண்பை எந்நிலையிலும் இழக்கமாட்டார்கள். ஆகவே விரும்பத்தகாதது என ஏதும் எந்நிலையிலும் நிகழாது. காந்தாரிதேவி இவர்கள் உழலும் இவ்வுலகிலேயே இல்லை.” சத்யவதி “நீ உன் தமையனிடம் பேசலாகாதா? அந்த வைசியப்பெண்ணை இசைக்கூடத்தில் இருந்து விலக்கினாலே பெரும்பாலும் அனைத்தும் சரியாகிவிடும்” என்றாள். “இல்லை அன்னையே, அதைச்செய்ய எவராலும் இயலாது” என்றான் விதுரன்.

பெருமூச்சுடன் “நீ வந்து சொன்ன சொற்களை நினைத்துப்பார்க்கிறேன். ஒன்றும் செய்வதற்கில்லை என்றுதான் சொல்லியிருக்கிறாய். ஆனால் அச்சொற்களே ஒரு பெரும் அமைதியை அளிக்கின்றன. விந்தைதான்” என்றாள் சத்யவதி. “சிலசமயம் அப்படி ஒரு முழு கையறுநிலை அமைதியை நோக்கிக் கொண்டுசெல்லும்போலும்.” விதுரன் “அன்னையே நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்றான். “நான் ஏதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏதேனும் ஒன்று பிழையாக நிகழுமென்றால் அப்பிழையை பெரிதாக்கிக்கொள்ளத் தேவையான அனைத்து கசப்புகளும் இங்கே திரண்டுவிட்டிருக்கின்றன என்றுமட்டும் உணர்கிறேன்” என்றாள்.

விதுரன் எழுந்து “நான் வருகிறேன் பேரரசி, என் ஆணைகளுக்காக அங்கே பலர் காத்திருக்கிறார்கள்” என்றான். “ஷத்ரிய மன்னர்களுக்கு அழைப்புகள் சென்றுவிட்டனவா?” “ஆம், அனைவருக்கும் முறைப்படி அழைப்பு சென்றுள்ளது. மகதத்தை அழைக்க பலபத்ரரே சென்றிருக்கிறார்.” சத்யவதி பார்வையைத் திருப்பியபடி “காசிக்கு?” என்றாள். “காசிக்கு கங்கர்குலத்தைச் சேர்ந்த படைத்தலைவர் சத்யவிரதனை அனுப்பியிருக்கிறேன்” என்றான் விதுரன். சத்யவதி அனிச்சையாகத் திரும்பியபோது விதுரன் புன்னகைசெய்தான். “ஒவ்வொன்றும் முறையாக நிகழ்கிறது பேரரசி. மணப்பந்தல் அமைக்க கலிங்கச்சிற்பிகள் நகருக்கு வந்துவிட்டார்கள். விருந்தினர் தங்குவதற்காக நூறு பாடிவீடுகளை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது.”

“சரி, நிகழ்வுகளை ஒவ்வொருநாளும் இரவுக்குள் என்னிடம் தெரிவிக்கச்சொல்” என்றாள் சத்யவதி. விதுரன் தலைவணங்கி வெளியே வந்தான். அத்தனை சொற்களில் இருந்தும் சிந்தனையை விடுவித்துக்கொண்டு மீண்டும் செய்யவேண்டிய பணிகளை நோக்கிச் செலுத்த முயன்றான். ஓலைநாயகங்களுக்கு செய்திசொல்லுதல். யானைக்கொட்டில்களுக்கும் குதிரைநிரைகளுக்கும் பொறுப்பாளர்களை அமைத்தல். கங்கைக்கரை படகுத்துறையை செப்பனிடுதல். வடக்கே புராணகங்கைக்குள் குடியேறிய காந்தாரவீரர்களின் குடியிருப்புகளை ஒழுங்குசெய்தல்… அனைத்துக்கும் தொடர்பற்ற இன்னொரு உலகம் இங்கே. உணர்ச்சிகளால் ஆனது. புறமும் அகமும். ஆணும் பெண்ணும். எது பொருளற்றது? எது சிறுமையானது?

அந்தப்புரத்தின் பெருமுற்றத்தில் செம்பட்டுத்திரைச்சீலைகள் அலைபாய அணிப்பல்லக்கு வந்து நிற்பதை விதுரன் கண்டான். மூங்கில்கால்களில் பல்லக்கு நிலத்திலமர்ந்ததும் நிமித்திகன் கையில் வெள்ளிக்கோலுடன் முன்னால் வந்து இடையில் இருந்த சங்கை எடுத்து முழங்கினான். அந்தப்புரத்துக்குள் இருந்து ஐந்து சேடிகள் மங்கலத்தாலங்களுடன் வந்தனர். பல்லக்கின் உள்ளிருந்து திரைச்சீலையை விலக்கி குந்தி வெளியே வந்தாள். சிலம்பணிந்த மென்பாதங்கள் இரு பொன்னிற முயல்கள் போல மரவுரி மெத்தை மேல் வந்தன. இளஞ்சிவப்பு பட்டாடையின் பொன்னூல் பின்னல் விளிம்பு அலைநுரையென நெளிந்து உலைந்தாடியது. நடையில் ஆடிய கைவளைகள் எங்கோ குலுங்கின. கண்முன் மேகலை நலுங்கி குலைந்து பிரிந்து இணைந்து அதன் தொங்கும் முத்துக்கள் துள்ளித் துவண்டு துவண்டு …

அவள் அருகே வந்ததை அறிந்ததும் விதுரன் தலைவணங்கி “சிறிய அரசியை வணங்குகிறேன். இத்தருணத்தில் தங்களை காணும் பேறுபெற்றேன்” என்றான். கூந்தலை மூடிய மெல்லிய கலிங்கத்துணியை இழுத்து விட்டபடி இருகன்னங்களிலும் குழிகள் தெளிய புன்னகைசெய்து “என் பேறு அது” என்றாள் குந்தி. காதோரத்தில் கருங்குருவி இறகு போல வளைந்து நின்ற குழல்புரி ஆடியது. பீலி கனத்த இமைகள் செம்மலரிதழ்களென இறங்கின. விதுரன் மீண்டும் தலை வணங்கினான். சிலம்புகள் கொஞ்சிக் கொஞ்சி விலகிச்சென்றன. வளையல்கள் சிரித்துச் சிரித்துச் சென்றன. அணிகளுக்கு இத்தனை ஓசை உண்டா என்ன?

அவள் அப்பால் வாசலுக்குள் மறைந்தபின்னரும் அங்கேயே நின்றுகொண்டிருப்பது போலப்பட்டது. சென்றது ஒரு விழிமயக்கா? அவளிடமிருந்து ஒன்று அங்கேயே பிரிந்து நின்றுவிட்டதா என்ன? அது அவளிடமிருந்து எழுந்த வாசனை என்று எண்ணினான். குளியல்பொடியும் கூந்தல்தைலமும் புதுமலரும் அகிலும் செம்பஞ்சுக்குழம்பும் கலந்த வாசனை. ஆனால் அவற்றைக் கலந்து அவளைச் செய்துவிடமுடியாது. அவளுடைய புன்னகையையும் அதில் சேர்க்கவேண்டும். கண்கள் மின்ன கன்னங்கள் குழிய செவ்விதழ்கள் விரிந்து வாயின் இருபக்கங்களும் மடிய மலரும் ஒளியை.

முந்தைய கட்டுரைஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்
அடுத்த கட்டுரைஅன்னியநிதித் தன்னார்வர்கள் – ஒரு கடிதம்