[ 1 ]
ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொண்டு ‘அப்படியே சாப்பிடுவேன்’ என்று குரல்கொடுக்கும் குழந்தையைப்போன்றவர்கள் நம் கோட்பாட்டாளர்கள். முற்றிலும் லௌகீகவாதியான ஒரு வணிகரிடம் கூட எப்படியோ கலையைப்பற்றி விவாதித்து சில அடிப்படைப்புரிதல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும், ஒருபோதும் நம் கோட்பாட்டாளர்களிடம் கலையின் ஆரம்ப அடிப்படைகளைக்கூட பேசிவிட முடியாது. உண்மை என்பது தானறிந்த ஒற்றைவடிவில் திட்டவட்டமாக கைக்குச் சிக்குவது என்றும் அதை நேரடியாகச் சொல்லும் எந்த முயற்சியும் கலையே என்றும் அவர்கள் திரும்பத்திரும்ப வாதிடுவார்கள். இலக்கியத்தில் ‘அப்படியே சாப்பிட’ தயாராக எப்போதும் மேஜைக்கு நிலைகொள்கிறார்கள் இவர்கள்.
சற்று யோசித்துப்பார்க்கலாம். நமது கோட்பாட்டாளர்களின் வரிசையை எடுத்து பார்த்தால் ஒரு சராசரி வாசகன் அளவுக்குக் கூட இலக்கியப்படைப்புகளுக்குள் சென்ற ஒருவரைக்கூட நம்மால் காணமுடிவதில்லை என்று உணர முடியும். கைலாசபதி ,நா.வானமாமலை முதற்கொண்டு யமுனா ராஜேந்திரன் ஈறாக நாம் மார்க்ஸியக் கோட்பாட்டாளர்களை கண்டு வருகிறோம். பக்கம் பக்கமாக நூல்களை மேற்கோள் காட்டி தேற்றங்களை நிறுவி இவர்கள் பேசக்கேட்கிறோம். ஆனால் இலக்கியத்தைப்பற்றி எதுசொன்னாலும் அபத்தமாகவே சொல்வார்கள். இவர்கள் தெரிவுசெய்து முன்வைக்கும் படைப்பாளிகள் எப்போதுமே புடைத்துத்தெரியும் பிரச்சாரகர்கள். ஒருபோதும் ஒரு நல்ல படைப்பாளியை இவர்கள் அடையாளம் கண்டதில்லை. இவர்கள் அடையாளம் கண்ட படைப்பாளிகள் எவரும் காலத்தில் நின்றது இல்லை. ஏன், இன்று இவர்கள் தங்களவர்களாகக் கொண்டாடும் காலத்தை தாண்டிவந்த படைப்பாளிகள் பெரும்பாலும் அனைவருமே இவர்களால் முதலில் புறக்கணிக்கபப்ட்டு அதை மீறி அவர்கள் இலக்கியதளத்தில் தங்களை நிறுவிக்கொண்ட பின் இவர்களால் ஏற்கப்பட்டவர்களே. கைலாசபதியின் ‘ரசனை’யின்படி தமிழின் மாபெரும் நாவலாசிரியர் செ.கணேசலிங்கன்,நாவல் ‘செவ்வானம்’. கஷ்டம்தான்.
இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். தமிழைப்பொறுத்தவரை நம் கோட்பாட்டாளர்கள் எப்போதும் நுண்ணிய கலைப்படைப்புகளுக்கு எதிரானவர்களாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே போட்டுக்கொடுத்துள்ள தடத்தில் நகரும் பழகிப்போன மாடுகளையே இவர்களால் அறிய முடியும். தனி வழியை தானே அறியும் இலக்கியப்படைப்பின் சுதந்திரம் இவர்களை அச்சுறுத்துகிறது. புதுமைப்பித்தன் முதல் கி.ராஜநாராயணன் வரை, வண்ணதாசன் நாஞ்சில்நாடன் வரை தமிழின் அத்தனை படைப்பாளிகளும் இந்தக் கோட்பாட்டாளர்களால் உதாசீனம் செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்டு, எதிர்க்கப்பட்டு மீறி உருவாகி தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்களே. தமிழில் ஒரு மாற்று உதாரணம் கூட கிடையாது.
அரசியல் கோட்பாட்டாளர்கள் எப்போதுமே சீரிய படைப்புகளுக்கு எதிராக நிலைகொள்ளும் வழக்கம் கொண்டிருந்தார்கள் என்றால் பின்னர் உருவாகிவந்த மொழியியல் ,பின் நவீனத்துவ கோட்பாட்டாளர்களும் அந்தப் பாதையையே பின்தொடர்ந்தார்கள். தமிழவன்,எம்.டி.முத்துக்குமாரசாமி,நாகார்ஜுனன், அ.மார்க்ஸ் வரையிலான இலக்கியக் கோட்பாட்டாளர்களின் ஒட்டுமொத்த எழுத்துக்களை எடுத்துப்பார்க்கும்போது இந்த அம்சம் மிக ஆச்சரியமளிக்கிறது. இவர்களின் பிரசுரமான எழுத்துக்களில் பெரும்பகுதி முக்கியமான படைப்பாளிகளை அவமதிப்பதற்கும் ,அவர்களின் ஆக்கங்களைச் சிறுமைப்படுத்துவதற்குமே செலவழிக்கப்பட்டுள்ளது. விரிவான வாசிப்பு, ஆவேசமான உழைப்பு என இவர்களின் தகுதிகள் எல்லாமே இதற்காகவே செலவிடப்பட்டுள்ளன.இதற்கு முற்போக்குப்பார்வை, விளிம்புநிலை ஆய்வு என பலப்பல காரணங்கள் அவ்வப்போது சொல்லப்பட்டாலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இலக்கிய நிராகரிப்பையே காணமுடிகிறது.
இவர்கள் முன்வைப்பது இலக்கிய விவாதம் அல்ல, இலக்கிய மறுப்பே .ஏனென்றால் ஒருவகை இலக்கியப் படைப்புகளை நிராகரித்து இவர்கள் வேறு எவ்வகை இலக்கியங்களை முன்வைத்தார்கள் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. சென்ற எழுபது வருடத்தில் தமிழ் இலக்கியக் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டு நிறுவப்பட்ட ஒரே ஒரு படைப்பாளியின் பெயரை நம்மால் சொல்ல முடியுமா? எந்த தளத்திலேனும்? உள்ளூர் படைப்பாளி தேவையில்லை என்றே வைப்போம். எப்போதும் தமிழ் படைப்பாளிகளை மட்டம்தட்ட மேலைபப்டைப்புகளை சுட்டிக்காட்டும் இவர்கள் மேலைநாட்டுப் படைப்பாளி என்றாவது எவரையாவது ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசி நிறுவியிருக்கிறார்களா? நம் முற்போக்கு வட்டத்தில் இன்றுவரை கார்க்கி அல்லது செகாவ் அல்லது ஷோலக்கோவ் அல்லது லூஷ¤ன் பற்றி ஒரு நல்ல கட்டுரையாவது எழுதப்பட்டிருக்கிறதா? நம் பின் நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் ஒரு பின் நவீனத்துவப் படைப்பைப்பற்றியாவது ஆழமாக எழுதியிருக்கிறார்களா? போர்ஹெயையும் மார்க்யூஸையும் பற்றி இங்கே பேசியதெல்லாமே படைப்பாளிகள்.
இலக்கிய விமரிசனம் என்பது வாசகனுக்கு இலக்கியத்தை புதிய கோணங்களில் மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்வது. இலக்கியப் படைப்புகளில் புதிய வாசல்களை வாசகனுக்கு திறந்து காட்டுவது. இலக்கிய விமரிசனம் என்பது ஒரு சமூகம் கொள்ளூம் வாசிப்புப் பயிற்சி. நம் கோட்பாட்டாளர்கள் யாராவது தமிழில் எழுதப்பட்ட எந்த ஒரு படைப்பைப்பற்றியாவது ஒரு எளிய வாசகன் அவனது வாசிப்பில் அறிய முடியாத ஒரு வரியையாவது சொல்லியிருக்கிறார்களா? மௌனி பற்றி புதுமைப்பித்தன் பற்றி சுந்தர ராமசாமி பற்றி எழுதப்பட்டுள்ளனவற்றை திரும்பிப்பார்க்கையில் பகீர் என்கிறது. கீழத்தரமான தனிப்பட்ட வசைகள், அவதூறுகள், முத்திரைகுத்தல்கள், அவ்வளவுதான். சற்றும் மிகையாகச் சொல்லவில்லை. ஆர்வமுள்ளவர்கள் இதுவரை எழுதப்பட்டவற்றை திரும்பிப் பார்க்கலாம். நெடுங்காலம் கோட்பாட்டாளர்களுக்குப் பிரியமானவராக இருந்த ஜெயகாந்தனைப்பற்றிக்கூட அவரது படைப்புகளுக்குள் ஆழ்ந்துசெல்லும் ஒரு கட்டுரை இங்கே எழுதப்பட்டதில்லை என்பதை ‘ஜெயகாந்தன் இலக்கியத்தடம்’ போன்ற நூல்களை காண்கையில் வாசகன் அறியலாம்.
ஏன் இந்த அவலநிலை? நானறிந்தவரை மேலைநாட்டுக் கோட்பாட்டுத்திறனாய்வில் இந்நிலை இல்லை. மலையாளத்திலும் கன்னடத்திலும் கூட இல்லை. கன்னடக் கோட்பாட்டாளர் டி.ஆர்.நாகராஜ் எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரைகள் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றவர்களை அறிய மிக உதவிகரமானவை. கேரளக் கோட்பாட்டாளர்கள் தகழி சிவசங்கரப்பிள்ளையைப்பற்றி எத்தனை கோணங்களில் எவ்வளவு விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள்!. இங்குள்ள பிரச்சினை இரண்டு. முதலில், நம் கோட்பாட்டுத்திறனாய்வாளர்களில் விதிவிலக்கான சிலர் தவிர பிறர் மிக மொண்ணையானவர்கள். கோனார் நோட்ஸ் படித்து பட்டம்பெற்றவர்கள், படிப்பதை தொகுத்து எழுதுவதன்றி சுயமாக ஏதும் எழுத அவர்களால் இயலாது. இரண்டாவதாக, இவர்கள் கோட்பாட்டை கடவுள் போல நம்புகிறார்கள். கடவுளே கையிலிருக்கும்போது அப்புறம் வேறென்ன தேவை? அந்த மிதமிஞ்சிய தன்னம்பிக்கை காரணமாக படைப்பாளியை விட ஒருபடி மேலாக தன்னை நிலைநாட்டிக் கொள்கிறார்கள். படைப்பைப் ‘படித்து மார்க் போடும்’ இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்கிறார்கள். ஒருபோதும் படைப்பாளி இவர்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. அப்போது இவர்களின் அகங்காரம் தூண்டப்படுகிறது. வசைபாட ஆரம்பிக்கிறார்கள்.
கோட்பாட்டாளர்களின் ஆணவத்தால் அழிக்கப்பட்ட இலக்கியநிலம் என்றே ஈழத்தை எண்ணுகிறேன். ஈழ எழுத்தின் பெருக்கத்தை வைத்துப் பார்த்தால் மிகமிகக் குறைவான அளவு எழுத்துகக்ளையே இலக்கிய வாசகன் பொருட்படுத்த முடியும் என்பதே உண்மை. இதை பல காலகட்டங்களில் பல தமிழ் எழுத்தாளர்கள் சொல்லி , ஈழ எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். [ஈழத்தில் முற்போக்கு நோய்க்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும் என்ற வண்ணநிலவனின் கருத்து நினைவுக்கு வருகிறது] சங்கடமான விஷயம்தான் இது, ஒரு பிராந்திய உணர்வின் மீது தொட்டுச் சீண்ட நேர்வது. ஆனால் வேறு வழியில்லை. எத்தனை மழுப்பினாலும் இதமாகச் சொன்னாலும் அதுவே உண்மை, ஈழம் கிட்டத்தட்ட ஓர் இலக்கியப்பாலைவனம். மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுதுரை, அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி முதலிய சிற்சில சோலைகள். ரஞ்சகுமார், சட்டநாதன், உமாவரதராஜன் போல உருவாகும் நிலையிலேயே நின்று விட்டவை பல. பெரும்பாலான ஈழ இலக்கியங்கள் அவர்களின் வாழ்க்கையின் எளிய ஆவணங்கள் என்ற அளவிலேயே கவனிக்கத்தக்கவை. இலக்கியமாக அல்ல. ஈழத்தை மொட்டையாக்கியது கோட்பாட்டுநோக்கின் மிதமிஞ்சிய மேலாதிக்கம்.
ஈழம் அளவுக்கு செல்வாக்கான கோட்பாட்டாளர்கள் எவரும் தமிழில் இருந்ததில்லை என்பதை ஓரு நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். இங்கே அரசியல் இயக்கங்களின் குரல்களாக மட்டுமே கோட்பாடுகள் பேசப்பட்டன. அவற்றை மறுத்து இலக்கியத்தின் தனித்த இயக்கத்தை முன்வைக்கும் அழகியல் திறனாய்வாளர்களான ஏ.வி.சுப்ரமணிய அய்யர், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா போன்றவர்களின் குரல்கள் எப்போதும் இருந்தன. இலக்கியம் என்றுமே தன் முக்கியத்துவத்தை இழக்க நேரவில்லை. ஆனால் ஒப்புநோக்க தமிழகத்தைவிட மேலான கல்வியறிவும் மேலான இலக்கிய அறிமுக விகிதாச்சாரமும் இருந்தும் கூட ஈழத்தில் நேர் மாறான நிலையே நிலவியது. ஈழத்து அரசியலியக்கங்களை விட வலிமையான மையங்களாக அங்கே கோட்பாட்டாளர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இருவரும் இருந்தார்கள் என்று தோன்றுகிறது. இருவருக்குமே மிக விரிவான கல்வியறிவும் வாசிப்பும் இருந்தது. மிகவும் மதிக்கப்படும் பதவிகளில் இருந்தார்கள். கைலாசபதி நெடுநாள் இதழியல் தளத்தில் செல்வாக்குடன் விளங்கினார் . எழுத்தாளர்கள் நாடும் பதிப்பு வசதியை எளிதில் செய்துகொடுக்கக் கூடியவராக இருந்தார். மேலும் முக்கியமாக இருவருமே தனிப்பட்டமுறையில் மிக இனிய குணம் கொண்டவர்களாக, நட்பும் பெருந்தன்மையும் மிக்கவர்களாக இருந்தனர். இக்காரணத்தால் இவர்களே ஈழ இலக்கியத்தின் மையங்களாக ஆனார்கள்.கோட்பாடு மையம் கொள்ளும்போது இலக்கியம் விலகிச்செல்கிறது
கோட்பாட்டாளன் நிலைத்த பாறை போல அசைவற்றவன். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நாம் தி.க.சிவசங்கரனை கண்டுவருகிறோம். அவரது நம்பிக்கைகள் நிலைபாடுகள் எதிலுமே சஞ்சலம் இல்லை. சஞ்சலம் கொள்ளும் கோட்பாட்டாளன் நிலையழிந்து காணாமல் போகிறான். வீழ்ச்சி அடைகிறான். மாறாக சஞ்சலமே படைப்பிலக்கியவாதியின் அடிப்படை இயல்பாக இருக்கிறது. மாபெரும் காந்தப்புலம் ஒன்றின் முன் நிற்கும் சிறிய காந்தமுள் போன்றவன் கலைஞன். அவனை மீறிய ஒன்று அவனை எப்போதுமே நிலையழியச் செய்கிறது. அவன் எப்போதுமே நேரடியான வாழ்க்கையின் முன் நிற்கிறான். அவனது அசைவுகள் அவன் கையில் இல்லை. அவன் எந்த சூழலில் நிற்கிறான், அதற்கு அவன் அகத்தின் அவனை மீறிய ஆழம் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பொறுத்தது அது. எழுத்தாளனைப்பற்றி எது சொன்னாலும் அரை உண்மையாக இருக்குமென்றாலும் இப்படிச் சொல்லிப்பார்க்கலாம், எழுத்தாளன் எப்போதுமே உறுதியற்றவன்,தேடிக் கொண்டும் வளர்ந்து கொண்டும்,அழிந்துகொண்டும் இருப்பவன்,ஆகவே அவன் அமைதியற்றவன்.
உறுதியான நிலைபாடுகளுக்காகவும் தொடர்ச்சியான வளர்ச்சிப்போக்குகளுக்காகவும் படைப்பிலக்கியவாதியிடம் தேடுவதுபோல முட்டாள்தனம் ஏதுமில்லை. தல்ஸ்தோய் முதல் புதுமைப்பித்தன் வரை அப்படித்தான். எஸ்.பொன்னுதுரை முதல் சு.வேணுகோபால் வரை அப்படித்தான். ஆகவேதான் எழுத்தாளனின் மரணம் முக்கியமான ஒரு முழுமைப்புள்ளி ஆகிறது. அதன்பின் நம் மதிப்பீடுகளை தலைகீழாக்கும் எதையும் அந்த எழுத்தாளன் செய்துவிடமுடியாது. அவனது அதுவரையிலான எழுத்துக்களும் செயல்பாடுகளும் முழுக்க நம்மிடையே தொகுத்து அளிக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றைக் கொண்டு நாம் அவனது சித்திரத்தை வனைந்து கொள்ள முடிகிறது. ஆகவேதான் எழுத்தாளனின் மரணம் கொண்டாடப்படுகிறது. அவன் இருக்கும்போது அவனைப்பொருட்படுத்தாதவர்கள்கூட அவனது மரணத்துக்குப் பின்னர் அவனை விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.
படைப்பிலக்கியவாதியின் கருத்துலகம் புறத்தே நின்று நோக்கும் கோட்பாட்டாளனுக்கு முரண்பாடுகளின் தொகையாகவே தெரியும். முதிர்ச்சியின்மையும் அபூர்வமான முழுமைக்கணங்களும் ஒழுங்கின்றிக் கலந்திருப்பதாகத் தோன்றும். அப்படைப்பிலக்கியவாதியுடன் கோட்பாட்டாளனுக்கு இருக்கும் நல்லுறவைப்பொறுத்து அப்படைப்பிலக்கியவாதியின் ஒத்த கருத்தோ அல்லது முரண்பாடோ கோட்பாட்டாளனுக்கு முக்கியமானதாகப் படுகிறது. அப்படைப்பிலக்கியவாதியை கோட்பாட்டாளன் கொண்டாடவோ தூற்றவோ செய்கிறான். என் நோக்கில் ஒரு கோட்பாட்டாளன் படைப்பிலக்கியவாதிக்கு அளிக்கும் அங்கீகாரம் எதிர்ம¨றையான விளைவுக¨ளையே ஏற்படுத்தும். அவனது ஆக்கங்களை எளியவாசகர் அக்கோட்பாட்டின் விளக்கங்களாக மட்டுமே மருளும் நிலை உருவாகும். வலுவான கோட்பாட்டாளன் நல்ல படைப்புகளை தன் எதிர்மறை விமரிசனங்கள் மூலம் தற்காலிகமாக மறைக்க முடியும், திரிக்க முடியும். ஆனால் காலப்போக்கில் கோட்பாட்டாளர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பும்போது அப்படைப்பாளி தன் படைப்பின் பலத்தால் மேலெழுந்து வருவான். ஆகவே பொதுவாக கோட்பாட்டாளனின் எதிரணியில் நிற்பதே படைப்பாளிக்கு பாதுகாப்பானது. ஏனெனில் எப்போதும் நல்ல இலக்கியப்படைப்பு வாழ்க்கையைப்பற்றிய கோட்பாடுகளுக்கு எதிரானதேயாகும்.
[ 2 ]
ஈழ இலக்கியத்தில் இந்த கோட்பாட்டு மையத்துக்கு மாற்றாக இரு புள்ளிகள் மட்டுமே இருந்தன, அவையே இலக்கிய ரீதியாகப் பொருட்படுத்தத்தக்கவை. இதை இருபதுவருடம் முன்பு சொன்னால் உடனே வலதுசாரி அரசியல் என்று கோட்பாட்டுத்தரப்பினர் முறைகூவல் எழுப்புவார்கள். இன்றைய வாசகன் இப்போது கோட்பாட்டாளர் தரப்பால் முன்வைக்கப்பட்ட எழுத்துக்கள் சாரமற்ற சருகுகளாக உதிர்ந்து கிடப்பதையே காண்பான் என்பதனால் இக்கூற்று நிரூபணம் தேவையற்ற ஒன்றாகிறது. அவ்விரு மையங்களை மட்டுமே உண்மையான படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண்கள் என நான் எண்ணுகிறேன். மு.தளையசிங்கம்,எஸ்.பொன்னுதுரை இருவருமே அம்மையங்கள். இருவகையில் அவர்கள் இலக்கியத்தின் கட்டற்ற பாய்ச்சலுக்கு உதாரணங்கள்.
இலக்கியத்தில் படைப்பாளியின் அந்தரங்க எழுச்சியை நிராகரித்த மார்க்ஸிய விமரிசனம் அதை ஒரு சமூகக் கூட்டுச் செயல்பாடாக தொடர்ந்து முன்னிறுத்தியது. ஒரு சமூகத்தின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதே இலக்கியவாதியின் வேலை என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. இதை கம்யூனிஸம் என்பதைவிட ‘கம்மிஸாரிசம்’ என்று சொல்வதே பொருத்தம். ஈழச்சூழலில் ஓங்கியிருந்தது அதுதான். இதற்கு எதிராகவே அன்றைய சூழலில் எங்கும் தனிமனிதவாதம் முன் வைக்கப்பட்ட்டது. ‘நான் சிந்திக்கிறேன், ஆகவே என் எழுத்து என்னுடையது, என் ஆத்மாவின் வெளிப்பாடு அது, என்னுடைய தரிசனம் அது’ என்ற கூற்று மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்ட காலகட்டம் இது. தன் அகஎழுச்சியின் பலத்தால் நிற்க முயல்வதே இலக்கியவாதியின் முதற்கடமை என்று வலியுறுத்தப்பட்டது. மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுதுரை ஆகிய இருவரும் இருவகையான தனிமனித வாதத்தின் குரல்கள்.
மு.தளையசிங்கத்தின் தனிமனிதவாதம் தன்னை ஒரு தனித்த பிரக்ஞையாக கண்டறிவதிலிருந்து தொடங்குகிறது. தன்னுடைய ஆழ்மனம் வரலாற்றால் ஆனது என்றும் அதை அறிவதனூடாக வரலாற்றையும் வாழ்க்கையையும் அறிந்துவிடலாம் என்றும் நம்புகிறது அது. ஆகவே கோட்பாடுகளுக்கு எதிராக தான் உணர்ந்த அகத்தரிசனங்களை அது முன்வைக்கிறது. அந்த ஆழத்தை உணரும்போது அவரது தரிசனம் தன்னை பிரம்மாண்டமான ஒரு பொதுமை ஒன்றின் சிறுதுளியாக கண்டுகொள்கிறது. சமூகம் என்றும் வரலாறு என்றும் கோட்பாட்டாளர்கள் தர்க்கபூர்வமாக நிறுவமுற்படும் பொதுமை என்பது மிகச்சிறிய ஓர் உருவகமே என்றும் மானுட அகம் என்பது அதையெல்லாம் தன்னுள் சிறுதுளிகளாக அடக்கிக் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு ஒன்றின் கூறு என்றும் அறிகிறது. அதன்பின் அந்த பெரும்பொதுமையின் குரலாக நின்று அரசியல் சார்ந்த சிறு பொதுமைகளைப் பரிசீலிப்பவராகவும் நிராகரிப்பராகவும் தளையசிங்கத்தை மாற்றியது. தளையசிங்கத்தின் இலக்கியத்தின் ‘ஆன்மீக’ அம்சம் இதுவேயாகும். தனிமனிதவாதம் ஆன்மீகம் நோக்கிச்செல்லும் பயணம் என தளையசிங்கத்தைப் பற்றிச் சொல்லலாம்.
எஸ்.பொன்னுத்துரை தனிமனிதவாதத்தை தன் படைப்பு மனத்தில் இருந்து மட்டுமே பெற்றுக் கொண்டு தன் படைப்பாணவத்தினால் மட்டுமே நிலை நிறுத்த முயன்ற படைப்பாளி. கோட்பாட்டாளர்களின் பொதுமைப்பாடுகளை தன் படைப்பனுபவம் மூலமே நிராகரித்தவர். மனிதனை தொகுத்து வரையறை செய்து காட்ட ஓயாது முயன்ற மார்க்ஸியத்துக்கு எதிராக தான் அறிந்த யாழ்ப்பாண மனிதனை பகுத்துக்காட்டிக் கொண்டிருந்தவர். அவன் காமமும் குரோதமும் நிறைந்தவன். ஆசைகளினால் அலைப்புறுபவன். உறவுகளில் சிக்கி தடுமாறுபவன். வாழ்தலுக்கும் இருத்தலுக்கும் இடையேயான சஞ்சலமாக வாழ்க்கையை அறிபவன். மீண்டும் மீண்டும் எஸ்.பொன்னுத்துரை இம்மனிதனைச் சித்தரித்து, அவனை மார்க்ஸியம் காட்டிய வரலாற்றுவாதத்துக்கு எதிராக முன்வைத்தார். மனிதனின் வற்றாத வாழ்வாசையையும் அதன்பொருட்டு அவன் கொள்ளும் போராட்டத்தையும் அதன் விளைவாக அவன் உருவாக்கிக் கொண்டுள்ள நெறிகளையும் அவனது சாரமாகக் கண்டார். மார்க்ஸியர்கள் சொன்ன முற்போக்கு வாதத்துக்கு எதிராக எஸ்.பொன்னுத்துரை முன்வைத்த ‘நற்போக்கு’ வாதம் இதுவேயாகும்.
நற்போக்கு வாதத்தை எஸ்.பொன்னுத்துரை ஒரு கோட்பாட்டாளனாக முன்வைக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அதை தெளிவாக வகுத்துக் கூறவோ அதை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளை உருவாக்கவோ செய்யவில்லை. கோட்பாட்டுநோக்குக்கு எதிரான படைப்பிலக்கியவாதி என்ற முறையில் எஸ்.பொன்னுத்துரையின் இந்த இயல்பை விளங்கிக் கொள்ளலாம். எஸ்.பொன்னுத்துரையை மதிப்பிடும் மு.தளையசிங்கம் அவரது ‘நற்போக்கு’ தெளிவாக வரையறை செயப்படாத குழப்பம் என்று சொல்கிறார். [ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி] ஆனால் மு.தளையசிங்கத்தின் ‘பிரபஞ்ச யதார்த்தமும்’ அதேயளவுக்கு குழப்பமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அதைச்சார்ந்து மு.தளையசிங்கம் முன்வைக்கும் வரிகளில் உள்ள படைப்பூக்கமே நம்மை அவர் சொல்வதென்ன என்பதை உணரச்செய்கிறது. இவ்வியல்புக்குக் காரணமே இவ்விருவரிடமும் உள்ள இலக்கிய எழுச்சிதான்.
எஸ்.பொன்னுத்துரையின் நற்போக்குவாதம் இன்றைய வாசகனுக்கு முக்கியமல்ல என்றே எனக்குப் படுகிறது. அன்றைய இலக்கிய விவாதங்களில் தன்னை நிறுவும் பொருட்டு எஸ்.பொன்னுத்துரை உருட்டி விட்ட ஒரு பாறை மட்டுமே அது. ஒரு புனைவிலக்கியவாதியாக மட்டுமே எஸ்.பொன்னுத்துரை பொருட்படுத்த தக்கவர் என்பதே உண்மை. மார்க்ஸியர்களின் கூற்றுக்களை அவர் நிராகரித்தமைக்குக் காரணம் அவற்றின் தர்க்கமுறைகளை அவர் கூர்ந்து அவதானித்து உள்வாங்கியமை அல்ல, அவர்கள் சொன்ன முடிவுகளும் முன்வைத்த படைப்புகளும் எஸ்.பொன்னுத்துரையின் படைப்புமனத்தால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதனவாக இருந்தமையே. எஸ்.பொன்னுதுரை அன்றைய மார்க்ஸியக் கோட்பாட்டு மேலாதிக்கத்துக்கு எதிராக தன் படைப்புகளையும், அவற்றின் படைப்பாளியாக தன்னையுமே முன்வைத்தார்.
எஸ்.பொன்னுத்துரை தன் நற்போக்கு வாதத்தை ஒரு கோட்பாடாக முன்வைக்கவில்லை எனபதற்கு முக்கியமான காரணம் அவரது படைப்புமனம் மனிதமனங்களின் இருளையும் ஆழத்தையும் மட்டுமே பொருட்படுத்துவது, காமகுரோதங்களின் அலைகளை சொற்களால் தொட்டு உருவாக்கிக் காட்ட முயல்வது என்பதே. அத்தகைய படைப்பாளி முற்போக்கு வாதத்தையும் ஒரு கோட்பாட்டாகவோ கருத்துநிலையாகவோ காணவில்லை. அதை மனிதர்கள் கொள்ளும் பல்வேறுவகையான சுயபாவனைகளில் ஒன்றாகவே அவர் காண்கிறார். தன்னை பலவகையாக காட்டிக் கொள்ள வேண்டிய தேவை மனிதனுக்கு இருக்கிறது. தனக்குத்தானே காட்டிக் கொள்ளுதல், பிறருக்குக் காட்டிக் கொள்ளுதல். தன்னகங்காரம், தன்னிரக்கம் என அதற்கான காரணங்கள் ஏராளமானவை.அந்த ஆழங்களுக்குள் செல்லும் எஸ்.பொன்னுத்துரை முற்போக்குவாதத்தை முன்வைத்தவர்களின் தனிப்பட்ட ஆளுமைச்சிக்கல்களையே ஆழமாக கவனிக்கிறார். பொதுவான நோக்கில் அவரது முற்போக்கு எதிர்ப்பு என்பது தனிநபர் தாக்குதலாகவோ அல்லது இலக்கிய அரசியலை விட்டு மேலெழாததாகவோ தோன்றலாம். ஆனால் வரலாற்றையே தனிமனித அகநிலைகளின் ஒட்டுமொத்த விளைவாக நோக்கிய ஒரு இலக்கியவாதியால் கோட்பாடுகளையும் அப்படித்தான் அணுக முடியும் என்பதே கவனிக்க வேண்டியது
இன்னும் ஒரு முக்கியமான கூறு இதில் உண்டு. ஈழச்சூழலில் உழைக்கும் மக்களுக்கான முற்போக்குவாதத்தை முன்வைத்து படைப்பிலக்கியத்தளத்தில் மேலாதிக்கம் புரிந்தவர்கள் உழைக்கும் மக்களுக்கு எதிரான நில உடைமைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் எஸ்.பொன்னுத்துரை உழைக்கும் மக்களின் அடித்தட்டைச் சேர்ந்தவர். ஆகவே இயல்பாகவே அவருக்கு இத்தகைய கோஷங்களிலும் கோட்பாடுகளிலும் ஐயம் இருந்ததும் அவற்றை ஓங்கிச்சொன்னவர்களின் அந்தரங்கத்தை அவர் கூர்ந்து கவனிக்க முயன்றதும் இயல்பானதேயாகும்.
எஸ்.பொன்னுத்துரை மனித மனத்தின் ஆன்மீகக்கூறுகள் எதையும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. அவரது படைப்புலகம் முற்றிலும் லௌகீகமானது. காமகுரோதமோகங்களின் நுண்மையை பற்றி மட்டுமே அவரது படைப்புக்கண்கள் கவனம் கொள்கின்றன. இந்நிலையில் அவர் சொல்லும் ‘நற்போக்கு’ என்பதை நாம் தத்துவ, அரசியல் தளங்களில் வைத்து பொருள் காணமுடியாது. அதற்கு ஒழுக்கம் சார்ந்த பொருள் மட்டுமே அளிக்கபப்ட இயலும். அவரது போக்கில் உள்ள ‘நற்’ என்ற விகுதியானது மரபான முறையில் ஒழுக்கநோக்கையே சுட்டுகிறது என்று தோன்றுகிறது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று கூறா நேர்மை, பாலியல் நேர்மை, பொருளியல் நேர்மை முதலியவற்றையே எஸ்.பொன்னுத்துரை தன் இலக்கிய அரசியல் கட்டுரைகளிலும் சுட்டிச் செல்கிறார்.
ஆனால் எஸ்.பொன்னுத்துரை மரபான முறையிலான ஒழுக்கவாதி அல்ல. அவரைப்பொறுத்தவரை வெளிபப்டையாக இருப்பது என்பது நேர்மையாக இருப்பது என்பதற்குச் சமமானது. பாவனைகளே பாவம். குடி,விபச்சாரம் என நம் மரபு விலக்கும் எதையுமே விலக்காகக் கருதாத ஒரு நோக்கு எஸ்.பொன்னுத்துரை படைப்புலகில் உள்ளது. தன்னை தான் ஆக முன்வைத்தலையே பேரறமாக அவர் மீண்டும் மீண்டும் உத்தேசிக்கிறார்.’சத்தியத்துக்கு அதன் இயல்பே வடிவு. அதனை அழகுபடுத்தும் எத்தனம் அதர்மம். பொய்மைக்கும் போலிக்கும்தான் அலங்காரத்தேவை… சத்தியத்தினை விசுவாசிக்காத இலக்கியவாதி தன் ஊழியத்தின் ஆன்மாவையே இழந்துவிடுகிறான்…” என்று சொல்லும் எஸ்.பொன்னுத்துரை சத்தியம் என்பதை எப்படி வரையறைசெய்கிறார்? ”ஆனால் இலக்கியவாதி என்ற முறையில் எனக்கு மானுஷீகத்தின் அமரத்துவத்திலே நம்பிக்கை இருக்கிறது.” எஸ்.பொன்னுத்துரைவின் நோக்கில் மனிதனை ஒட்டுமொத்தமாக நோக்கும் மனிதமைய நோக்கும் அவனது உள்ளார்ந்த நன்மை மீதுள்ள நம்பிக்கையுமே ‘சத்தியம்’ என்பது. அந்த சத்தியத்துக்கு மாறானவற்றைக் காண்கையில் ஏற்படும் சினம் அவரது ஆளுமையின் பகுதியே ”என்னுள் வாழும் அம்சங்களிலே தூக்கலானது சினம். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பார்கள். புத்திஜீவியாக வேஷம் புனைவதிலும் பார்க்க ஆத்திரக்காரனாக வாழ்வது மேலானது…” இந்த அம்சங்களையே அவரது நற்போக்கு வாதமாக நாம் காண்கிறோம் [ ‘அவா’ தொகுதிக்கு முன்னுரை]
மார்க்ஸியராகத் தொடங்கி மார்க்ஸியர்களின் அந்தரங்க நேர்மையை ஆராய்வதனூடாக மார்க்ஸியத்தை விட்டு விலகி தனிமனிதவாதம் வழியாக நவீனத்துவத்தின் படிகளில் கால் வைத்தவர் என எஸ்.பொன்னுத்துரையை மதிப்பிடலாம். அவரது தேடல் நவீனத்துவத்திற்குள் ஓர் ஏற்கத்தக்க ஒழுக்கவியலை நோக்கியே என்றும் சொல்லலாம்
[ 3 ]
தமிழ்இலக்கிய உலகில் எஸ்.பொன்னுத்துரைவுடன் ஒப்பிடத்தக்க படைப்பாளி என்று ஆ.மாதவனைச் சொல்லலாம். பொதுக்கூறுகள் என ஒரு வாசகனுக்குத்தோன்றக்கூடியவை இவை. காமகுரோதமோகங்களின் விளைநிலமாகவும் விளையாட்டரங்காகவும் மனித மனத்தைக் கண்டு அவற்றைச் சித்தரிப்பதிலேயே தன் கலையை கையாண்டமை 2. நுண்சித்தரிப்புகள் வழியாக எளியமனிதர்களைக் காட்டியமை 3. சம்ஸ்கிருதம் கலந்த அலங்கார மொழிக்கான மோகம் 4. தனிமனித நேர்மையை மாறாவிதியாகக் கொண்ட ஒழுக்கமைய நோக்கு.
ஆ.மாதவனின் உலகம் மானுடத்தீமையின் முடிவிலாத வகைபேதங்களைச் சொல்லிச் சொல்லித் தீராது விரியும் ஒரு தளம் [பார்க்க: இவ்வாசிரியரின் ‘தீமை நடமாடும் தெரு- ஆமாதவனின் படைப்புலகம்’] எஸ்.பொன்னுத்துரைவின் பெரும்பாலான படைப்புகளும் இத்தளத்தைச் சார்ந்தவையே. இருவருக்குமே காமம் ஒரு முக்கியமான பேசுபொருள். குறிப்பாக காமம் கொள்ளும் வேடப்புனைவுகளும் மாயங்களும். நாம் சாதாரண வாசிப்பில் மாதவன் திரும்பத்திரும்ப ஆஷாடப்பூதிகளைச் சாடி எழுதியிருக்கிறார் என்று எண்ணக் கூடும். உண்மையில் அக்கதைகளில் அவற்றை கவனிப்பவனின் பதற்றமும் ஆர்வமும் கூடவே பதிவாகியிருப்பதனாலேயே அவை முக்கியமான உள ஆய்வுகள் ஆகின்றன. எஸ்.பொன்னுத்துரைவின் படைப்புகளைப்பற்றியும் இவ்வரிகளைச் சொல்லலாம்.
எஸ்.பொன்னுத்துரை,ஆ.மாதவன் இருவரிடமும் ·ப்ராய்டியப் பாதிப்பு உண்டு. இருவருமே ·ப்ராய்டின் கோட்பாடுகளைப் படித்து அவற்றை தங்கள் படைப்புகளில் கையாண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. இருவரும் தங்களைச்சுற்றி கண்ட வாழ்க்கையை ஏதோ ஒருவகையில் அன்றிருந்த சூழலில் பேசப்பட்ட ·ப்ராய்டியத்தைக் கொண்டு நியாயப்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்லலாம். காமத்தை ஒரு பாவமாகவோ, ஒழுக்க மீறலாகவோ காணாமல் மானுட உறவுகளின் இயல்பான நிலையாகக் காண இவர்களுக்கு ·ப்ராய்டியம் உதவியிருக்கிறது. காமம் மனித அகத்தின் இயல்பான ஆழம் என்பதை நம் மரபு கற்பித்திருந்தாலும் அதற்கு ஒரு ·ப்ராய்டிய அடிக்கோடு மிக உதவியாக இருந்திருக்கலாமென படுகிறது.
இருவருமே அதிகமும் நடுத்தர, அடித்தட்டு மக்க¨ளைப்பற்றி எழுதினார்கள். ஆனால் ஆ.மாதவன் அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்க¨ளைப்பற்றி எழுதிய அளவுக்கு எஸ்.பொன்னுத்துரை எழுதவில்லை. யாழ்ப்பாணத்து நடுத்தர வற்கத்தின் பாவனைகளிலேயே அவரது மனம் அதிகமும் லயிக்கிறது என்று தோன்றுகிறது. ஆ.மாதவன் உலகில் பசியும் வன்முறையும் காமம் அளவுக்கே முக்கியமான கூறுகளாக இருக்கின்றன. எஸ்.பொன்னுத்துரை அவற்றை படைப்புரீதியாகப் பெருமளவுக்குப் பொருட்படுத்தவில்லை. ஆ.மாதவன் கதைகளுக்கு திட்டவட்டமான ஒரு ‘இட’ சூழல் உள்ளது, திருவனந்தபுரம் சாலைத்தெரு. ஆனால் எஸ்.பொன்னுத்துரை பொதுவாக ஒரு யாழ்ப்பாணச் சூழலையே களமாகக் கொண்டிருக்கிறார். ‘சடங்கு’ மட்டுமே திட்டவட்டமான நில அடையாளத்துடன் இருக்கிறது. ஒரு கதைநிலம் நுட்பமான முறையில் கதைமாந்தரின் அகஓட்டங்களுடன் பிணைக்கப்படும்போது ஆழமான குறியீட்டுத்தன்மை அதற்கு கைகூடுகிறது. ஆ.மாதவனின் சாலைத்தெரு அப்படி ஒரு குறியீடாகவே வளர்ச்சி கொள்கிறது. அது எஸ்.பொன்னுத்துரை கதைகளில் நிகழ்வதில்லை.
இருவருக்குமே புராண,ஐதீகக் கதைகளில் உள்ள ஆர்வமும் சம்ஸ்கிருதம் கலந்த அலங்கார மொழியை பயன்படுத்துவதில் உள்ள மோகமும் கவனத்திற்கு உரியவை. என் வாசிப்பில் இவ்வம்சத்தை எதிர்மறையான ஒன்றாக, படைப்புத்தன்மையுடன் மேலெழாத மொழிப்பயிற்சியாகவே இருவரிடமும் காண்கிறேன். ஆ.மாதவன் ஆரம்பகாலத்தில் எழுதிய இத்தகைய கதைகள் பெரும்பாலானவற்றை நிராகரித்து அச்சில் கிடைக்காதபடிச் செய்துவிட்டார். அவரது கதைகளுக்குள் ஆங்காங்கே ஊடாடிச் செல்லும் சில வரிகளாகவே நாம் இப்போது இவற்றைக் காணமுடிகிறது. எஸ்.பொன்னுத்துரையின் கதையுலகில் கணிசமான ஒரு பகுதியை இவ்வகை எழுத்து நிரப்பியிருக்கிறது. அவரது எழுத்தில் பெருமளவு பொருட்படுத்தத் தக்கதல்ல என்று நான் எண்ணும் பிராந்தியம் இதுவே. இக்கூறு எஸ்.பொன்னுத்துரையைப்பொறுத்தவரை ஒரு மேடைசார்ந்த திறனாட்டமாக மட்டுமே இருக்கிறது.
எஸ்.பொன்னுத்துரை ,ஆ.மாதவன் இருவரையுமே இயல்புவாதிகள் [Naturalists] என்று சொல்லலாம். இயல்புவாதம் யதார்த்தவாதத்தின் ஒரு தீவிரநிலை என்று பொதுவாகப் புரிந்துகொள்ளலாம். இலட்சியவாத, அகஎழுச்சி சார்ந்த கூறுகள் எதுவுமே இல்லாத தூய உலகியல் நோக்கு, துல்லியமான தகவல்களைச் சார்ந்து இயங்கும் போக்கு, கதாபாத்திரங்கள் மேல் அனுதாபமோ கனிவோ இல்லாத கறாரான சித்தரிப்பு போன்றவை இயல்புவாதத்தின் அடிப்படைக்கூறுகள். இலட்சியவாதம் இல்லாத மானுட அகச்சித்தரிப்பு என்பது உடனடியாக காம குரோத மோகங்களின் விவரிப்பாக மாறிவிடும் என்பதனால் இந்த ‘தீமைச்சித்தரிப்பு’ தன்மையை நான் இயல்புவாதத்தில் இருந்து விலக்கிவிட முடியாது. இயல்புவாதத்தின் முன்னோடியான எமிலி ஜோலா முதல் இதை நாம் காண்கிறோம். [இயல்புவாதம் தமிழில் வருவதற்கு முந்தைய ஒரு கட்டத்தில் எமிலி ஜோலாவின் படைப்புகள் சில தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன] ஆ.மாதவனின் ‘எட்டாவது நாள்’ போன்ற கதைகள் தீமைச்சித்தரிப்புத்தன்மைக்கு மிகச்சிறந்த உதாரணங்கள்.
தமிழின் இயல்புவாத எழுத்தின் தொடக்கப்புள்ளிகள் என ஆ.மாதவனையும், நீல பத்மநாபனையும் சொல்லலாம். எஸ்.பொன்னுத்துரையின் சடங்கு தமிழின் சிறந்த இயல்புவாத இலக்கியப்படைப்புகளில் ஒன்று. அவ்வெழுத்துமுறைக்கு தமிழின் பண்பாட்டுச்சூழல் சார்ந்து ஒரு பங்களிப்பு எப்போதும் இருக்கிறது. அது தொடர்ந்து இங்கே வளர்ந்துகொண்டிருக்கிறது. பூமணி அடுத்த தலைமுறையின் முக்கியமான இயல்புவாத எழுத்தாளர். சுப்ரபாரதி மணியன், சூரியகாந்தன், சி.எம்.முத்து,சி.ஆர்.ரவீந்திரன்,சோலை சுந்தரப்பெருமாள் என அடுத்த தலைமுறையில் தொடர்ந்த அவ்வெழுத்துமுறை இமையம்,பாமா,சொ.தருமன்,அழகியபெரியவன் போன்ற தலித் எழுத்தாளர்கள் எழுதவந்தபோது திடீரென்று பேருருவம்கொண்டு தமிழின் முக்கியமான இலக்கிய அலையாக மாறியது. கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால்,எம்.கோபாலகிருஷ்ணன் போன்ற முக்கியமான படைப்பாளிகளுக்கன அழகியலாக அது இன்று உள்ளது.
இதற்கான காரணங்கள் பல. பொதுவாக தமிழகம் அதன் வாழ்க்கைவிரிவின் பெரும்பகுதி இலக்கியரீதியாகப் பொருட்படுத்தப் படாமல் விடப்பட்டதாகவே உள்ளது. சொல்லப்போனால் எழுதப்படாத வாழ்க்கையே இங்கே அதிகம். அப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறதென்ற போதமே இல்லாதது நம் பண்பாட்டுச் சூழல். ஆகவே அந்த தளங்களிலிருந்து இலக்கியவாதிகள் உருவாகி தங்கள் வாழ்க்கையைச் சொல்லப்புகுந்த போது ‘அப்படியே’ சொல்வதான பாவனை கொண்ட இயல்புவாதம் ஓர் அழகியல் கருவியாக அவர்களுக்கு உதவியது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உழைக்கும் மக்களின் யதார்த்ததை சொல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இயல்புவாதம் உருவான சூழலுக்கு பெரிதும் சமானமாக இருக்கிறது.
ஈழச்சூழலில் முற்போக்குமுகாமானது யதார்த்தவாதத்தை தன் அழகியலாக முன்வைத்தபோது அதற்கு எதிரான அழகியலாக தன் இயல்புவாதத்தை எஸ்.பொன்னுத்துரை முன்வைத்ததை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். முற்போக்கு யதார்த்தவாதம் என்பது இலட்சியவாத உள்ளடக்கம் கொண்டது. இலட்சியவாதநோக்குக்கு ஏற்ப புலன்களும் தர்க்கமும் அறியும் யதார்த்ததை மறு ஆக்கம் செய்து முன்வைக்கும் தன்மை கொண்டது.தன் இலட்சியவாதத்தை அது கோட்பாடாக உருமாற்றிக் கொண்டு தன்னை அமைப்பு ரீதியாக திரட்டிக் கொண்டும் உள்ளது.
எஸ்.பொன்னுத்துரை முற்போக்கு முகாமில் இருந்து வேறுபடுவது எங்கே? அவரே சொல்வதுபோல அவர் ‘முன்னரே’ முற்போக்காகவும் இடதுசாரியாகவும் ஆகிவிட்டவர். ”தோழர் ஜெயகாந்தன் ஜனசக்தி காரியாலயத்தில் புகுந்து எழுத்துப் ‘பயிற்சி’ பெறுவதற்கு முன்னரே எழுத்தாளன் என்ற மிடுக்குடன் கம்யூனிஸ்டுக் கட்சிப்பணிகளிலே என்னை இணைத்துக் கொண்டவன் நான்.” என்று சொல்லும் எஸ்.பொன்னுத்துரை ”மாஸ்கோ-பீகிங் வாதப்பிரதிவாதங்களினால் மனம் புழுங்கி கட்சி அரசியலில் இருந்து நான் ஒதுங்கிக் கொண்டாலும் மார்க்ஸிஸ சித்தாந்தத்தில் எனக்கு இருக்கும் பிடிப்பு இம்மியளவும் தளர்ந்துவிடவில்லை” என்கிறார்.[சில நேரங்களில் சில தோழர்கள்] ஆக அவரைப்பொறுத்தவரை முரண்படும் அம்சம் என்பது இரண்டுதான், முற்போக்கு முகாமின் வரட்டுத்தனமான கோட்பாட்டுக்கூச்சலால் வாழ்க்கையை அளக்கும் முறை. அவ்வமைப்பில் உள்ள தனிநபர்களின் தனிப்பட்ட குணச்சிக்கல்கள்.”கூட்டத்தில் ஒருவன் என்றாலும் செம்மறிக்கூட்டத்தில் ஒருவனல்லன். பழைய வழிகளிலே நடந்து கற்பனை வேலி வரை முன்னேறியவன்.. அவன் துணிந்தவன். கூச்சலை நிறுத்தி எல்லையைக் கடந்தான்….” என்று தன்னைப்பற்றி சொல்கிறார்.[அவா]
இந்நிலையில் மார்க்ஸியலட்சியவாதமோ, அதன் கோட்பாட்டு அமைப்போ இல்லாத ஓரு யதார்த்தவாதமே எஸ்.பொன்னுத்துரையின் இலக்கிய அழகியலாக அமைய முடியும். அவரது கறாரான வாழ்க்கை நோக்கும், ஆன்மீக மறுப்பும் அவரை எளிதாக இயல்புவாதத்தை நோக்கி இட்டுச்சென்றிருக்கிறது. மனிதமனத்தைச் சித்தரிக்கும் ஒரு படைப்பாளி இலட்சியவாதத்தையும் அதன் வெளிப்பாடான மனிதாபிமானத்தையும் விலக்கிவிடுவானாகில் அது இயல்புவாதமாகவே மாறிவிடும். மார்க்ஸிய இலட்சியவாதத்தை மறுக்கும் ஆன்மீக இலட்சியவாதங்களை விடவும் இதையே மார்க்ஸியர் அபாயகரமானதாகக் கண்டு நிராகரிப்பார்கள். இதை தமிழ்நாட்டிலும் காணலாம். நீல பத்மநாபன், ஆ.மாதவன் போன்றவர்கள் வலதுசாரிகள் அல்ல. அவர்களும் எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையை எழுதியவர்களே. சொல்லப்போனால் மேலும் தீவிரமாக எழுதியவர்கள். ஆனால் மார்க்ஸியர்கள் இங்கே அவர்களை பொருட்படுத்தவே இல்லை. பூமணிக்கும் சின்னப்பபாரதிக்கும் என்ன வேறுபாடு? பூமணியில் சின்னப்பபாரதியில் உள்ள இலட்சியவாத அம்சம் இல்லை. இன்னும் கறாரான யதார்த்தச் சித்தரிப்பு உள்ளது. ஆகவே பூமணியை மார்க்ஸியத் தரப்பு நிராகரித்தது, பின்னர் உதாசீனம் செய்தது. இன்றும் அவரை அது தம்மவராக எண்ணவில்லை.
ஆகவே ஈழ முற்போக்கு முகாம் எஸ்.பொன்னுத்துரையை நிராகரித்ததையும் எதிர்த்ததையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நவீன இலக்கியவாதிகள் மேல் முற்போக்கு முகாம் போடும் எல்லா முத்திரைகளும் அவர் மீது போடப்பட்டன.’ஆபாச எழுத்தாளர்’ ‘தனிமனித வாதி’ ‘இருண்மையான எழுத்துமுறை கொண்டவர்’ என்று அவர் குற்றம் சாட்டப்பட்டார். இன்றைய வாசகன் எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’ குறுநாவலை வாசிக்கும்போது அது சற்று அழுத்தமான குரலில் பேசும் ஒரு வகை முற்போக்கு இலக்கியமாகவே எண்ணுவான். ஒரு நடுத்தர வற்க எளியமனிதனின் சாரமில்லாத வாழ்க்கையின் சில நாட்களைச் சொல்வது வழியாக இந்த சமுக அமைப்பும் பொருளியல் அமைப்பும் அவனைக் கட்டிப்போட்டிருக்கும் எல்லையையைப்பற்றிய நம்பகமான சித்திரத்தை அவனுக்கு அது அளிக்கிறது என்று அவன் எண்ணுவான். ஆனால் அப்படைப்பு அக்காலகட்டத்தில் மார்க்ஸியர்களின் பெரும் எதிர்ப்பையும் வசைகளையும் பெற்றிருக்கிறது. அதில் எந்தவித இலட்சியவாதமும் இல்லை. விடுதலைக்கான குரலே இல்லை.சமகாலத்து ஒழுக்க எல்லைகளைத்தாண்டிச் சென்று பேசமுனைகிறது– போதாதா?
எஸ்.பொன்னுத்துரையை இயல்புவாதம் மூலம் முற்போக்கு முகாமின் கோட்பாட்டு மேலத்திக்கத்தை எதிர்கொண்ட படைப்பாளி என்று வகுத்துக் கொள்ளலாம். அவரை ஆ.மாதவன், நீல பத்மநாபன் வரிசையில் முன்னோடி இயல்புவாத படைப்பாளியாக எண்ணலாம். இன்றும் தமிழின் முக்கியமான அழகியல்முறையாக நீளும் இயல்புவாதத்தின் வழிகாட்டியாக மதிக்கலாம்.
[மேலும்]