அன்னியநிதி- கேஜ்ரிவால்- வினவு

அன்புள்ள ஜெமோ

வினவு தளத்தில் வெளிவந்த இந்த இணைப்பை நீங்கள் பார்க்கவேண்டுமென விரும்புகிறேன். அன்னியநிதி குறித்து நீங்கள் நிறையவே எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் ஆதரிக்கும் அரவிந்த் கேசரிவால் அன்னியநிதி பெற்றவர். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். கலவரநிதியை வைத்து மோசடி செய்தமைக்காக இப்போது தீஸ்தா செதல்வாட்டை கைதுசெய்யப்போகிறார்கள். இதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?

அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி

சுகுமார்


அன்புள்ள சுகுமார்

நான் என் தரப்புகளை எப்போதும் தெளிவாகவே சொல்லிவந்திருக்கிறேன். பொத்தாம்பொதுவாகவே அரசியல்பேசிக்கொன்டிருக்கும் நம் இணையச்சூழலில் மீண்டும் மீண்டும் அவற்றை தெளிவுபடுத்தவேண்டியிருக்கிறது.

1. நான் அன்னிய நிதியை எவ்வகையிலேனும் பெற்ற அனைவரும் அயோக்கியர்கள் என்னும் ஒற்றை வரியை ஒருபோதும் சொல்வதில்லை. பல நோக்கங்களுக்காக பல்வேறு செயல்திட்டங்களுக்காக இங்கே வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்படுகிறது. அந்த நிதி எந்த அமைப்புகளிடமிருந்து பெறப்படுகிறது என்பது முக்கியம். எதன்பொருட்டு பெறப்படுகிறது என்பது முக்கியம். நேர்மையாக அது செலவிடப்பட்டிருக்கிறதா என்பது முக்கியம்.

உதாரணமாக எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக செயல்படும் ஒருவர் அதற்கான நிதியை சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்று சிறப்புறச் செலவிட்டு இங்கே இன்றியமையாத விழிப்புணர்ச்சியை உருவாக்குவாரென்றால் அவரை மோசடியாளன் என்று பழிப்பது அயோக்கியத்தனம்.

இந்தியாவில்செயல்படும் ஏராளமான சமூகசேவை அமைப்புகள் சர்வதேச சமூகத்தின் பல்வேறு அறக்கட்டளைகளின் நிதி பெறுபவையே. அவையே இங்கே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காகவும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காகவும் அரும்பணி ஆற்றியுள்ளன. அவ்வாறு நிதி பெற்றுச் செயல்படும் பல கிறித்தவ அமைப்புகளை நான் அறிவேன். அவற்றை பற்றி எனக்குப் பெருமதிப்பே உள்ளது. அவை செயல்பட்டிருக்காவிட்டால் இங்கே ஒன்றுமே நிகழ்ந்திருக்காது. அக்குழந்தைகள் கைவிடப்பட்டு துயரில் அழிந்திருக்கும். அதன்பொருட்டு அவர்கள் கிறித்தவ மதமாற்றம் செய்வதையும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

அதைப்போல எழுபதுகளின் இறுதியில் ஐரோப்பாவில் உருவான சூழியல் விழிப்புணர்வு பெரும் பசுமை இயக்கங்களை உருவாக்கியது. அவ்வியக்கங்கள் சூழியல்பிரக்ஞையை உலகமெங்கும் கொண்டு சென்றன. அவை அளித்த நிதியுதவிகளினாலேயே மூன்றாமுலநாடுகளில் சூழியல் குறித்த விழிப்புணர்வு உருவானது. அவைசெயல்பட அனுமதிக்கப்படாத நாடுகளில் – குறிப்பாக மலேசியாவைச் சுட்டிக்காட்டலாம்- இன்றும்கூட சூழியல் குறித்த அடிப்படை நோக்கு உருவாகவில்லை. அந்த உண்மையை பொருட்படுத்தாமல் பேசப்படும் மொட்டைவாதங்களை நான் கருத்தில்கொள்வதில்லை

சர்வதேச சமூகத்தில் பல்வேறு நோக்கங்கள் கொண்ட சமூக, பண்பாட்டு அமைப்புகள் உள்ளன. பெண்ணுரிமைக்காக, மானுட உரிமைக்காக செயல்படும் தனியார் அமைப்புகளும் தனிநபர் அறக்கட்டளைகளும் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தும் ஏகாதிபத்திய பரப்பு நோக்கம் மட்டுமே கொன்டவை என்பது அரசியல் அயோக்கியர்களின் வாதம். அவை எவை என்பது எனக்கு எப்போதுமே முக்கியம்.

அதேபோல நிதியை பெற்றவர்கள் அந்நிதியைக்கொன்டு என்ன செய்தார்கள் என்பதும் எனக்கு முக்கியமே. ஒன்று நிதி பெறுவது வெளிப்படையாக இருக்கவேண்டும். அந்நிதியில் செயல்படும் திட்டங்களும் வெளிப்படையாக இருக்கவேண்டும். சிறந்த உதாரணம் ந.முத்துசாமியின் அமைப்பு. கூத்துப்பட்டறை எப்போதுமே வெளிப்படையானதாகவும் தெளிவான செயல்திட்டங்களுடன் இயங்குவதாகவுமே இருந்துள்ளது. அதன் சாதனைகளும் வெளிப்படையானவை.

2. ஆனால் அப்படி நிதிபெற்றுச் செயல்படுபவர்கள் அரசியல் தளத்தில் கருத்துச் சொல்லும்போது அக்கருத்துக்களை அவர்களின் நிதியையும் கருத்தில்கொண்டே நோக்கவேண்டும் என்றே நான் வாதிடுகிறேன். அமெரிக்க சார்பு அமைப்பு ஒன்றின் பெருநிதி பெற்றுச்செயல்படும் ஒருவர் இந்தியா ஒரு தேசமல்ல, அது துண்டுதுண்டாக உடைந்தால்தான் நல்லது என்பார் என்றால் அவரது அக்கருத்துக்கு அந்நிதி அளிக்கும் பின்புலம் என்ன என்று கண்டிப்பாக நோக்கப்படவேண்டும். அது அவரது சொந்தக்கருத்து மட்டும் அல்ல. உண்மையில் இந்தியா உடையவேண்டும் என்றும், இந்தியா ஒருநாடே அல்ல என்றும் பேசுபவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏதேனும் வகையில் அன்னிய நிதி பெறுபவர்கள் என்பது அப்பட்டமான உண்மை. இந்தப்பின்புலத்திலேயே நாம் இதைக் கவனிக்கவேண்டியிருக்கிறது.

3. இந்திய இடதுசாரிகள் நெடுங்காலமாக அன்னிய நிதிபெற்றே செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் ருஷ்ய நிதிபெற்று வெளியிட்ட நூல்கள் நம் சிந்தனையை பாதித்துள்ளன. இலக்கியங்கள் நம் மொழிக்கு வளம்சேர்த்துள்ளன. நாம் ராதுகா பதிப்பகத்தை நிராகரிப்பதில்லை. ஏனென்றால் அது ரகசியமல்ல. அதை கருத்தில்கொன்டுதான் நாம் அவர்களின் கருத்துக்களை பரிசீலிக்கிறோம்

அன்னியநிதியை பெற்று ஒருவர் பண்பாட்டுத்தளத்தில், சமூகசேவைத்தளத்தில் செயல்படுவதை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது. எயிட்ஸ் ஒழிப்பிலோ மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளிலோ எங்கிருந்து வந்தாலும் நிதி வரட்டுமே, சிறிய அளவிலேனும் நல்லது நடந்தால் நடக்கட்டுமே என்றுதான் நான் யோசிப்பேன். அது மதமாற்ற நோக்கம் கொண்டிருந்தாலும்கூட அதை வரவேற்பேன். ஆனால் அன்னியநிதிபெற்று அரசியலியக்கங்களை நடத்துவதும் அரசியல்கருத்துக்களை பிரச்சாரம்செய்ய அனுமதிப்பதும் மிகமிக ஆபத்தானவை. ஒரு தேசத்தின் சிந்தனையை அன்னிய சக்திகள் கூலி கொடுத்து அறிவுஜீவிகளை உருவாக்கி மாற்றியமைக்க முடியும் என்றால் அதைவிட கேவலமான ஏதுமில்லை. நான் வன்மையாகக் கண்டிப்பது இதையே.

4 .அரவிந்த் கேஜரிவாலை நான் முழுமையாக ஆதரிக்கவில்லை . ஊழலுக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் மெல்லமெல்ல சரணடைந்துகொண்டிருக்கும் இந்த தேசத்தில் அண்ணா ஹசாரே தலைமையில் உருவான எதிர்ப்பலை என்பது ஒரு முக்கியமான தொடக்கம் என்றே நான் இப்போதும் எண்ணுகிறேன். அது குறிப்பிட்டுச்சொல்லும்படியான விளைவுகளை உருவாக்கியதென்றும் நினைக்கிறேன்.

தேசத்தின் வரிச்செல்வத்தில் பாதிக்கும் மேல் இன்று ஊழலுக்க்கு சென்றுகொன்டிருக்கிறது. ஊழல்பணம் அன்னியவங்கிகள் வழியாக ஏகாதிபத்தியத்தின் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. சமீபத்தில் நான் வாசித்த சில நூல்கள் அதிர்ச்சியளிக்கும் உண்மையைச் சொல்கின்றன. அன்னிய வங்கிகளில் சென்று சேரும் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளின் ஊழல் ஆட்சியாளர்களின் செல்வம் திரும்ப அவர்களால் எடுக்கப்படுவதேஇல்லை. ஒரு சர்வாதிகாரி தான் சுவிஸ் வங்கியில் போட்ட செல்வத்தை எடுக்கமுயன்றால் உடனடியாக கொல்லப்படுவான். அவனுடைய இரண்டாமிடத்தில் இருப்பவன் ஆட்சிக்கு வருவான். இந்த ஊழல்பணம் முழுக்க வெற்று அடையாள எண்களாக மற்றப்பட்டு ஊழல் ஆட்சியாளனுக்கு அளிக்கப்படுகிறது, அவ்வளவுதான். இது சென்றகால காலனியாதிக்கச் சுரண்டலை விட பலமடங்கு பெரிய சுரண்டல்.

நம் நாட்டில் அனைத்து மக்கள்நலத்திட்டங்களும் அனைத்து நிர்மாணப்பணிகளும் ஊழலால் முற்றாக அழிக்கப்படுகின்றன. அதற்கெதிராக சிறிய அளவிலேனும் ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் எந்த வித செயல்பாடும் வரவேற்புக்குரியதே. ஊழலுக்கு எதிராக அரசியல் சாராத மக்கள் கண்காணிப்பு ஒன்று உருவானால் மட்டுமே ஏதேனும் மாற்றம் இங்கே நிகழமுடியும். அண்ணா ஹசாரே தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்துவரும் போராட்டம் அவ்வகையில் முக்கியமானது.

மருதையன்

அத்தகைய போராட்டத்தை கூடுமானவவரை ஒத்த கருத்துள்ள அனைவரையும் திரட்டிக்கொன்டுதான் செய்ய முடியும். அதையே அண்ணா ஹசாரே செய்தார். அவருடன் இணைந்து செயல்பட்டவர் என்ற வகையிலேயே எனக்கு அர்விந்த் கேஜ்ரிவாலை தெரியும். அவரது அரசியல் நுழைவுக்குப்பின் தொடர்ந்து வெளிவரும் தகவல்கள் அவர் முன்பு ஃபோர்டு ஃபவுன்டேஷனின் நிதியை பெற்றிரு ப்பதை முன்வைக்கின்றன.

உண்மையில் இது எனக்கு மிகுந்த வருத்ததையே அளிக்கிறது. அவரது அரசியல்நுழைவு பெரிய பிழை என்றே நினைக்கிறேன். கூடவே அவர் அன்னிய நிதி பெற்றிருந்தார் என்பதனாலேயே அவர் இந்தியாவின் அதிகாரபதவிகள் எதிலும் அமரக்கூடாதென்றே இன்று எண்ணுகிறேன். எவ்வகையிலேனும் வெளிநாட்டு நிதியைப்பெற்ற ஒருவர், அதுவும் ஃபோர்டு ஃபவுண்டேஷன் போன்ற அன்னிய ஏகாதிபத்திய அமைப்பின் நிதியை பெற்ற ஒருவர் அரசியல் அதிகாரத்தை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படலாகாது.

5. கடைசியாக என் தரப்பு. நான் எந்த நிதியையும் எங்கிருந்தும் எப்போதும் பெறக்கூடாதென நினைப்பவன். அதற்குக் காரணம் நிதியைக் கையாள எனக்குத்தெரியாதென்பதும் அந்நிதியின் வேர்கள் வரைச்சென்று பார்க்கும் அரசியல் பிரக்ஞை எனக்குக் குறைவு என்பதும்தான். இதுவரையிலான என் இலக்கிய பொதுச்செயல்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் என் சொந்தப் பணத்தில்தான் நிகழ்ந்துள்ளன. எனக்கு சினிமா வருமானம் நிலைக்குமென்றால் அவையும் இல்லாமலாகும். நான் ஏற்றுக்கொண்டுள்ள என் நண்பர்களின் குழுவிடம் மட்டுமே சமீபகாலமாக நிதிச்செலவுகளை பகிர்ந்துகொள்கிறேன். அதுவும் தனிப்பட்ட முறையில் அறிந்த உள்வட்ட நண்பர்களிடம் மட்டும்.

என் வெளிநாட்டுப்பயணங்கள் என் வாசகர்களும் தனிப்பட்ட நண்பர்களுமாக இருப்பவர்களின் அழைப்பு மற்றும் உதவியாலும் என் சொந்தச் செலவாலும் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளன. எந்த பெரிய அமைப்பும் என்னை இதுவரை அழைத்ததில்லை. அமைப்புகள் சார்ந்து தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்குகளுக்கும் மற்றும் உலகமெங்கும் சென்றுகொன்டிருக்கிறார்கள். நான் பொதுவாக அமைப்புகளுக்கு வெளியேதான் இன்றுவரை நின்றுகொன்டிருக்கிரேன்

என் வெளிநாட்டுப்பயணங்களில் நண்பர்களின் அழைப்பை ஏற்றுச் செல்லும்போதுகூட அவர்களின் எல்லைக்குள் என்னை நிறுத்திக்கொள்வதில்லை. நான் செல்லும் ஊரின் அனைத்து தமிழிலக்கிய வாசகர்களிடமும் பேசவே முனைந்துள்ளேன். ஒரு தரப்பால் அழைக்கப்பட்டால் அதற்கு எதிர்தரப்பின் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது என் வழக்கம். எவரும் அதை இன்றுகூட குறையாகச் சொன்னதில்லை

என் நண்பர்கள், வாச்கர்கள் அறியாத ரகசியமென எதையும் எப்போதும் வைத்துக்கொள்வதில்லை. முப்பதாண்டுக்காலமாக இதுவே என் வழக்கம்.

6 இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் சொல்லும்போது அதற்கொரு கௌரவம் உள்ளது, சொந்தச்செலவில் இலக்கியச்செயல்பாடுகளைச் செய்பவன் நான். வினவு [ம.க.இ.க] போன்ற குழுக்கள் பேசும்போது வேடிக்கை உணர்வே எழுகிறது. சென்ற இருபதாண்டுக்காலமாக இவர்களை நான் நன்கறிவேன். இவர்களின் தலைமையில் அனைவரையும் நான் அறிவேன்

இவர்களின் நிதியாதாரம் இரண்டு. ஒன்று வலுவான இடதுசாரி தொழிற்சங்கம் உள்ள தொழில்நிறுவன்ங்களில் அந்த இடதுசாரித்தலைமையை அவதூறுசெய்யவும் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் அம்முதலாளிகளிடம் கைக்கூலி பெற்றுச் செயல்படுவார்கள். சமீப காலமாக இந்தியாவில் உள்நாட்டு அமைதியின்மையை உருவாக்கும் நோக்குடன் சீனா போடும் பருக்கைகளைத் தின்று வாழ்கிறார்கள்.

இவர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனியுங்கள். ஒரு கம்யூனிஸ்டு இயக்கம் அதன் உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் அரசியலுணர்வை பயிற்றுவிக்கும். மெல்லமெல்ல அமைப்புகளை கட்டி எழுப்பும். இவர்கள் எதையுமே செய்வதில்லை. தொண்டர்களை அறியாமையிலேயே வைத்திருக்க முயல்வார்கள். அவர்களின் எண்ணிக்கை நூறைதாண்டலாகாது என்பதில் மிகமிகக் கவனமாக இருப்பார்கள். அதுவே ரகசியத்தன்மைக்கு உகந்தது. ரகசியம் என்பது வெறுமே எச்சிலைப்பங்கிட்டுக்கொள்வதற்காகத்தான்.எங்கும் எதிலும் நுழைந்து அமைதியின்மையை உருவாக்குவதை மட்டுமே செய்கிறார்கள். அது சீன நலன்களைப் பேணுவதற்காக மட்டுமே

இன்றைய சீனா என்பது உலகின் மிகக்கீழ்மையான முதலாளிகளின் தேசம் என எவருக்குத்தெரியாது? இவர்களின் புரட்சிகோஷமென்பது சீனமுதலாளிகளுக்கு ஆதரவாக இந்தியாவை அமைதியிழக்கச்செய்யும் நோக்கம் கொன்டது மட்டுமே. அதற்கான கூலிபெற்று எந்த வேலையும் செய்யாமல் தொழிலதிபர்களைப்போல முப்பதாண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறார்கள் இவர்களின் தலைவர்கள். தேசத்தின் முதன்மையான ஐந்தாம்படை அன்னிய நிதி பற்றிப் பேசுகிறது!

காரணம் அவதூறே இவர்களின் வழிமுறை. அவதூறு மூலம் தங்களை மறைத்துக்கொள்ளலாமென்னும் அசட்டுத்திட்டமும்தான்

நமது எஜமானர்கள்

அன்னியநிதி கடைசியாக

ஆய்வுலகின் அன்னியக்கரங்கள்

மனசாட்சி சந்தை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 36
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல்இரண்டு – ‘மழைப்பாடல்’ – 37