நெடுங்குருதி -2

 2. குருதிமுத்திரைகள்

 அன்றாட வாழ்க்கையின் நேரடியான யதார்த்தத்தில் இருந்து தன்னுடைய படிமங்களை உருவாக்கிக் கொண்டு புதியவகை எழுத்தின் சாத்தியக்கூறுகளுக்குள் செல்லும் இலக்கிய ஆக்கம் என்று எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி என்ற நாவலைக் குறிப்பிடலாம். இந்த அர்த்தபூர்வமான  இணைப்பின் வழியாகவே இது முக்கியமான நாவலாக ஆகிறது. இதன் யதார்த்தம் படிமங்களுக்கு உயிரை அளிக்கிறது. படிமத்தன்மை யதார்த்தத்தை பல அடுக்குகள் கொண்டதாக ஆக்குகிறது. இந்த ஊடுபாவு காரணமாக இந்நாவலின் பல இடங்களில்  உயர்கவித்துவம் சாத்தியமாகியிருக்கிறது.

 

வேம்பலை என்ற கிராமத்தின் கதைதான் நெடுங்குருதி. வடநெல்லை முதல் மதுரைவரை கடலை ஒட்டி விரிந்து கிடக்கும் வரண்ட வானம் பார்த்த பூமியின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஒன்று அது. அதன் அப்பட்டமான யதார்த்தம் என்பது வெயிலே. வெயிலில் வெந்து கருகிய மண்ணும் மனிதர்களும்தான். வெயிலில் வெடித்த பாறைகள், வெயில் பழுத்த மரங்கள். தெய்வமே கூட ‘வெயில் உகந்த அம்மன்’தான். காண்பவை எல்லாமே வெயிலை நினைவுறுத்தும் உலகம்

 

இப்பகுதியில் பயணம் செய்திருக்கும் எவருக்குமே இக்கிராமங்களின் காட்சி கண்ணில் எழும். கிட்டத்தட்ட சகாரா பாலைநிலத்துக் கிராமங்களைப் போன்றவை இவை. வரண்ட பொட்டல் காற்றின் அடிவாங்கி அடிவாங்கி காரை உதிர்ந்து செங்கல் தெரியும் சுவர்கள், பனையோலை கூரையிட்ட குடிசைகள், கருவேல மரத்தடியில் அசைபோடும் வரண்ட மாடுகள், பன்றிகளும் கோழிகளும் மேயும் தெருக்கள், நீரில்லாமல் கருகி ஆழமான ரணத்தின் வடு போலத் தெரியும் கிணறுகள், சுருக்கம் விழுந்த கிழமுகம் போல விரிசல் பரவிய ஏரிகள் என்று நீருக்காக ஏங்கித்தவமிருக்கும் மனிதக்குடியிருப்புகள் அவை. அந்தச் சித்திரத்தையே தன் நாவலின் களமாக ஆக்கியிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

 

படிமங்களைக் கொண்டு புனைவை அமைப்பதற்குரிய மிகச்சிறந்த உத்தி இந்நாவலின் தொடக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது – இந்நாவல் ஒரு குழந்தையின் பார்வையில் கூறப்படுகிறது.  அது இயல்பாக நம்மைந் ஆவலின் படிமக்கட்டமைக்குள் இறக்கிவிட்டுவிடுகிறது. பள்ளி செல்லும் வழக்கமில்லாத பதினொரு வயதான நாகுவின் உலகம் இந்நாவல். அத்துடன் நாகுவின் மன உலகை வைத்துப்பார்த்தால் அவன் ஐந்தாறு வயதானவன் போலத்தான் இருக்கிறான். குழந்தைகளை காட்சிகளாக்கி நாவலைச் சொல்லும் போது வேறு வழியில்லாமலேயே படிமங்களுக்குள் சென்றாக வேண்டியிருக்கிறது. ஏனென்றால் குழந்தைகள் உலகை காட்சிவடிவமாகவே பார்க்கின்றன. காட்சிகளையே அவை முதலில் அடைகின்றன; பிறகு தங்கள் அறிதல் மூலமும் கற்பனை மூலமும் அவை அந்தக் காட்சிப்பிம்பங்களுக்கு அர்த்தம் அளிக்கின்றன.

 

குழந்தைகளின் உலகம் முழுக்க முழுக்க படிமங்களால் ஆனது. குழந்தையால் அர்த்தப்படுத்தப்பட்ட உலகம் குழந்தைத்தனம் மிக்கதாகவே இருக்க முடியும். அதன் விளையாட்டுத்தனமும் கவித்துவமும் அபாரமானவை. குழந்தைகளுக்கு இணையான படிமத்தன்மை கொண்ட உலகை ஒரு பார்வையாளன் அடையவேண்டும் என்றால்  ஒன்று அவன் கவிஞனாக இருக்கவேண்டும். அல்லது அவன் ஆதிவாசியாக இருக்கவேண்டும். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் குலக்கதைகளின் தொகுப்பு ஒன்றுக்கு ‘உலகம் குழந்தையாக இருந்த போது’ என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருந்ததை நினைவு கூர்கிறேன்.

 

கதைசொல்லலில் குழந்தையின் பார்வை என்பது ஒரு மாற்றுச் சாத்தியத்தை அளிக்கிறது. ஒரு முதிர்ந்த, யதார்த்த நோக்கில் கிடைக்கும் வாழ்க்கைச் சித்திரம் குழந்தையின் பார்வை அடையும் உலகுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அங்கே யதார்த்தம் இறுக்கமான இரும்பு உடலுடன் அமர்ந்திருக்கிறது. அங்கு மரணம் என்றால் மரணம்தான். பட்டினி என்றால் பட்டினிதான். ஆனால் நாகுவின் உலகில் மரணம் எறும்புகள் தூக்கிச் செல்லும் ஒரு பயணமாக ஆகிவிட முடியும். அப்பட்டமான நீக்குபோக்கற்ற யதார்த்தத்தை புனைவின் சாத்தியத்தால் ஊடுருவி பல பட்டைகள் கொண்டதாக ஆக்குவதற்கு இந்தக் குழந்தையின் பார்வை என்ற அம்சம் பெரிதும் உதவுகிறது.

 

நெடுங்குருதி நாவலில் கதை சொல்லல் இந்த இரு ஓடைகள் வழியாக வழிவதை மாறி மாறிப் பார்க்கிறோம். முதல் அத்தியாயம் நாகுவின் பார்வையில் அமைந்திருக்கிறது. இரண்டாவது அத்தியாயம் ஆசிரியரின் ஈடுபாடற்ற பார்வையில் நேரடியான யதார்த்தத்தைச் சொல்கிறது. முதல் அத்தியாயத்தின்  மொழி ‘ஒரு சாரை எறும்புகள் ஊரைவிட்டு விலகிய பாதையில் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த போது. . .’ என்று ஆரம்பிக்கிறது. இரண்டாவது அத்தியாயம் ‘கோடையின் நீண்ட இரவில் எங்கிருந்தோ இரண்டு பரதேசிகள் வேம்பலை ஊரைநோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்’ என்று ஆரம்பிக்கிறது. ஒன்று கனவு இன்னொன்று யதார்த்தம். ஒன்று அகம் இன்னொன்று புறம். இந்தப் பின்னல் இந்நாவலை நடத்திச் செல்கிறது. அதன் கூறுகளை ஒன்றுக்குமேற்பட்ட தளங்கள் கொண்டதாக,  நுட்பமானதாக ஆக்குகிறது இது.

 

நாகுவின் தோழியான ஆதிலட்சுமி ஊனமுற்ற பெண். அதனாலேயே அவள் பால்யத்திலேயே நின்று விட்டிருக்கிறாள். அந்தக் கிராமத்தில் பாலியமும் ஓர் ஊனம்தான் போலும். நகரமுடியாமல் திண்ணையில் இருக்கும் ஆதிலட்சுமி அங்கு இருந்தவாறே அவள் உருவாக்கிக் கொள்ளும் அதீத கற்பனைகள் மூலம் ஒரு மாற்று உலகை சமைத்துக் கொண்டு அங்கே வாழ்கிறாள். அங்கு மரணம், தனிமை, பசி, கைவிடப்படுதல் எல்லாமே அவளுக்குப் புரியக்கூடியதும் அவனால் கையாளக் கூடியதுமான ஒன்றாக மாறிவிடுகின்றன. நாகுவின் மனதில் ஓயாமல் குழந்தை தன்மையை நிரப்பிக் கொண்டிருப்பவள் அவள்தான். ஆதிலட்சுமி வழியாகவே நாகு தன்னுடைய குழந்தைத்தன்மைக்கும் புறஉலகின் உக்கிரமான யதார்த்தத்திற்கும் இடையேயான தூரத்தைக் கடக்கிறான் என்று சொல்லவேண்டும்.

 

நெடுங்குருதியின் படிம உலகம் நாகுவும் ஆதிலட்சுமியும் இணைந்து உருவாக்குவதாக அறிமுகமாகிறது. அவர்களுக்கு இடையேயான உரையாடல் மூலம் உருவாகின்றது அது. அல்லது இவ்வாறு கூறலாம், இரு சமூகப் புறனடையாளர்கள் சமூகத்தைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்வதன் விளைவுதான் அது.. நெடுங்குருதியின் யதார்த்ததின் மீது பாலைநிலம் மீது அலையும் பருந்து நிழல் போல இவர்களின் கற்பனை அலைந்து கொண்டிருக்கிறது.

 

இரண்டு வகையான வாசிப்புகள் வழியாக இவர்களின் உலகத்தை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நாகுவும் ஆதிலட்சுமியும் இருவகை கதாபாத்திரங்கள். அவர்களுடைய அக வெளிப்பாடே அந்தப் படிமங்கள். அக்கதாபாத்திரங்களின் மனம் செயல்படுவதன்  சான்றுகள். அக்கதாபாத்திரங்களின் ஆளுமைச்சித்திரங்கள் மட்டும்தான் அவை. இதுவே மரபார்ந்த, யதார்த்தவாதம் சார்ந்த வாசிப்பு. அதற்கான இடம் இந்தப் புனைகதையுலகில் உள்ளது. ஆனால் அத்துடன் இந்தப் புனைவுக்குள் ஓர் அக ஒழுங்காகக் செயல்படும் படிம மொழியின் வெளிப்பாடு அது .அப்படிக்கொண்டால் இந்நாவல் முழுக்க இவ்வாறு வெளிப்படும் படிம மொழியை நாவலின் அக மொழியின் சொற்களாக எடுத்துக்கொண்டு நாவலை ஓர் இரண்டாம்தள வாசிப்பிற்குக் கொண்டுவர முடியும்.

 

நாவலின் தொடக்கத்திலேயே நாகுவின் பார்வையில் சொல்லப்படும் எறும்புகள் என்ற படிமத்தையே எடுத்துக் கொள்ளலாம்.  புனைவோட்டத்துடன் இயல்பாக இணைந்து வரும் இப்படிமம் நாவலின் மொத்த புனைவையும் பல்வேறு விதங்கள் தொட்டு இணைந்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது. சாரிசாரியாகச் செல்லும் அவற்றின் இயல்பே நாகுவைக் கவர்கிறது நாகுவின் பார்வையில் முதலில் வருவதே எறும்புகள் சாரிசாரியாக ஊரைவிட்டு விலகிச் சென்று கொண்டிருப்பதுதான்.

 

‘அவன் வீட்டு வேம்படியில் இருந்த எறும்புகள் நேற்றோடு வெளியேறிப் போய்விட்டன. எறும்புகளின் சரசரப்பு ஓசையும் அற்றுப்போன பிறகு மரத்தில் காற்று துளிர்ப்பது கூட ஒடுங்கிவிட்டது. இலைகள் தலைகவிழ்ந்தது போல நிசப்தித்துவிட்டன. எறும்புகள் எங்கே செல்கின்றன என்றே தெரியவில்லை…’ எறும்பு செல்லும் ஓசை கேட்கும் மௌனம் நிறைந்திருந்த கிராமம் மேலும் இறுகி மனம் மட்டுமே அறியும் நுண் மௌனம் ஒன்றை நோக்கிச் செல்கிறது!

 

எந்த ஒரு படிமத்திற்கும் மரபார்ந்த வேர் இருக்கும். இந்தியத் தொன்மங்களில் எறும்புகள் மண்ணுக்குள் வாழக்கூடிய, மண்ணின் உயிராக இருக்கக் கூடிய, ஓர் ஆற்றல் என்ற நம்பிக்கை உள்ளது. அவற்றை வளத்தின் குறியீடுகளாகவே மரபு குறிப்பிடுகிறது. எறும்புகள் இருப்பதென்பது மண்ணுக்குள் ஒரு ஐந்தடி ஆழத்துக்குள் ஈரம் இருக்கிறது என்பதற்கான அடையாளம். எறும்புகளுக்கு உணவிடுதல் ஒரு வளச்சடங்காக விவசாயப் பண்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. எறும்புகளுக்குச் சிறகு முளைத்து அவை மண்ணில் இருந்து வெளிப்பட்டு மறைதல் மாபெரும் பஞ்சத்தின் வரவை அறிவிக்கின்றது.

 

இந்த வழக்கமான பொருளைத்தரும் படிமமாகவே நெடுங்குருதி எறும்புகளை முதலில் காட்டுகிறது. கைவிடப்பட்ட நாவிதனின் வீட்டை கடைசிவரைக்கும் எறும்புகள் கைவிடாமலிருக்கின்றன. ஆனால் கடும் கோடை அவற்றை வெளியேற்றுகிறது .  அதன்பின்னர் வெயிலின் உக்கிரம் தாளாமல் நாவிதனின் வீட்டுக் கூரை தானாகவே பற்றி எரிந்து கொழுந்து விட்டு சாம்பலாகிறது எறும்புகளின் விலகிச்செல்லல் என்ற தீய நிமித்தத்தில் இருந்துதான் நாவல் ஆரம்பிக்கிறது.

 

எறும்புகளின் தொன்மத்தை ஆதிலட்சுமி தன் மாயங்களால் இன்னமும் பெரிதுபடுத்துகிறாள். ”வீட்ல ஈரமிருக்கும் வரைக்கும்தான் எறும்புகள் சுவரேறி நடமாடும். ஈரம் உலந்து போயிட்டா வீட்ல தங்காது. எறும்பு வீட்டை விட்டு போயிட்டா மனுஷன் அந்த வீட்டில குடியிருக்கவே முடியாது. வீடு வெறிச்சோடி போயிடும் இந்த ஊரில் இனிமே எறும்பேயிருக்காதுடா” ஆதிலட்சுமியின் சொற்கள் வழியாக எறும்புகள் அடுத்தகட்ட படிமவளர்ச்சி அடைகின்றன.

 

‘சாயம் காச்சும் சென்னம்மாவை உனக்குத் தெரியும்ல அவவீட்டுக்குள்ள குருணை சிந்தினது மாதிரி செல்லெறும்புகள் இருக்குது. படிக்கல்லைக்கூட மெதுவாக கருகிக் கருகித் திங்கிற எறும்புக அது. வீட்டு எறும்புக இல்லையடா அவக மாதிரியே அந்த எறும்புகளும் எதையோ முணுமுணுத்துக்கிட்டு தெருவிலே வருது. . .” ஆதிலட்சுமி உட்கார்ந்திருந்த திண்ணையில் இருந்துகொண்டே எறும்புகளுடன் சேர்ந்து பயணம் செய்கிறாள். அவளுடைய கண்களுக்குத் தெரியாத எதுவும் இல்லை.

 

”எறும்பு எங்கிருந்து பிறந்து வருது தெரியுமா? ராத்திரியிலே வானத்திலே சுத்திட்டிருக்கும் சாமி தன் சடையிலே ஒட்டிக்கிட்டிருக்கும் எறும்புகள் ஊரிலயும் வீட்லயும் நடக்கிறதைத் தெரிஞ்சுகிடறதுக்காக தூவிவிட்டு போறாரு. ஆகாசத்திலேருந்து எறும்புங்க தரைக்கு வரவரைக்கும் வாய் ஓயாம பேசிட்டே இருக்கும் தரையிறங்கியதும் பேச்சு நின்னிடும். பிறகு நாள் பூரா வீட்டில தெருவில நடக்கிறத எல்லாம் தெரிஞ்சுகிட்டு திரும்பவும் சாமி வீட்டுக்குப் போறதுக்காகத்தான் வழியைத் தேடிட்டிருக்கு”

 

ஒரு நவீன வாசகன் இந்த நாவலை வாசிக்கையில் நாவலின் அந்தரங்கம் வழியாகக் கூட்டிச் செல்லும் மையப்படிமங்களில் ஒன்றாக அவன் எறும்புகளை கண்டு கொள்வான். எறும்புகள் வாழ்வின், வளத்தின், வானிலிருந்து வரும் ஆசியின், நம்பிக்கையின் குறியீடுகளாக அவன் மனத்தில் விரிவடைந்தபடியே இருக்கின்றன.

 

இதற்கிணையான வலுவான படிமமாக வெயிலைக் குறிப்பிடலாம். வெயிலை ஒரு பௌதிக நிகழ்வாக அல்லாமல் ஒரு இருப்பாக, ஆளுமையாகக் காட்டி விடவேண்டும் என்று நாவல் முயல்கிறது. ‘வெயில் திண்ணையைத்தாண்டி படியேறி வந்து கொண்டிருந்தது’ , ‘விரியன் பாம்பைப்போல உடலை அசைத்து அசைத்து தரையில் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது வெயில்’ , ‘பூனைக்குட்டி வாசல்வரை வந்து நின்றது. வெயிலின் நீண்ட கிளைகள் விரிந்து வெளிச்சத்தில் கண் கூசுவதனால் திரும்பவும் இருளுக்குள் போய்விட்டது’ , ‘யாரோ கத்தியை சாணைபிடிப்பது போல வெயில் இரவை தீட்டிக் கொண்டிருந்தது’ என்ற வரிகளை நாவல் முழுக்க காணலாம்.

 

ஒவ்வொரு கதையும் வெயிலை சாட்சியாக்கி ஆரம்பிக்கிறது. அல்லது வெயிலை சாட்சியாக்கி முடிகிறது. வெயிலை ஒவ்வொரு தருணத்துடனும் பொருத்தி வாசிக்கும் வாசிப்பே இந்நாவலின் மேலதிகக் கவித்துவத்தை வாசகனுக்கு அளிக்கும். வேம்பலையின் மீது வெயில் கருணையில்லாமல் பொழிந்து கொண்டே இருக்கிறது. வேம்பலையின் ஈரத்தை இடைவெளியில்லாமல் அது உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.

 

இந்நாவலில் நான்கு பருவங்கள் (கோடை, காற்றடிக்காலம், மழைக்காலம், குளிர்காலம்) பேசப்பட்டாலும் வெயில் எரியும் கோடைகாலமே விரிவாகப் பேசப்படுகிறது. பிற பருவங்கள் குறித்த விவரணைகளும் வெயில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது இங்கே வசந்தகாலமே இல்லை! இந்நாவல் உருவாக்கும் பிம்மங்களுடன் இணைத்து அதையும் ஒரு படிமமாகவே வாசிக்கலாம். நாவல் முழுக்க ரத்தமும் கண்ணீரும்  மண்ணில் கொட்டுகின்றன. வெயில்  வானத்தின் நாக்காக வந்து நாவல் முழுக்க அதை உறிஞ்சியபடியே உள்ளது.

 

வெயில்தான் இந்தக் கிராமத்தின் அதிதேவதை. இங்குள்ள மக்கள் அனைவரும் வெயிலுக்கு பலிகள்தான். ஊரே வெயிலில் ஒவ்வொரு காலமும் காய்ந்து கொண்டிருக்கிறது. ஒரு விரிந்த அர்த்தத்தில் வாசிக்கப்போனால் தளத்தில் இந்நாவலை ஒவ்வொருவரும் ஒவ்வொன்றும் உலர்ந்து போய்க்கொண்டே இருப்பதன் கதை என்று கூறலாம்.

 

நெடுங்குருதியின் படிமங்களில் வேம்பு குறிப்பிடத்தக்க ஒன்று. தொன்மத்தின்படி கொற்கைப்பாண்டியனின் பிடியிலிருந்து தப்பி ஓடிவந்த வேம்பர்கள் இந்த ஊருக்கு வந்தபோது இங்கிருந்த வேம்புகள் அவர்களுக்கு அடைக்கலமளித்தன. வேம்பர்கள் களவை தொழிலாகக் கொண்ட மக்கள். வேம்பு அவர்களின் குலதெய்வம், குல அடையாளம். வேம்பு அவர்களின் குல அடையாளமாவது விசித்திரமானது. அது நிழல் மரமல்ல. கடும் வறட்சி தாங்கக் கூடியதுமல்ல. அவர்களுடைய தோற்றம் சார்ந்து என்றால் பனையும் இயல்பு சார்ந்து என்றால் கருவேலமுமே அவர்களின் மரங்களாக இருக்க முடியும். இயல்பு எதற்கும் அது ஒத்து வரக்கூடியதல்ல.

 

ஏறத்தாழ நெடுங்குருதியின் கதைக்களம் சார்ந்த வரலாற்று நாவலான ‘காவல் கோட்டத்தில்’ தாதனூர் கள்ளர்களின் குலச்சின்னமாக இருப்பது சடச்சி என்ற சடையாலமரம் . வேர் பரவி விழுது விரித்து சடைவிரித்த புராதனமான தாய் போல நிற்கும் மரம். அது அவர்களுடைய குலமரமாக இருப்பது இயல்பானது. ‘சடைச்சி தனக்குள் ஒரு துண்டு இரவை எப்போதும் வைத்திருக்கிறாள்’ என்று சு. வெங்கடேசன் கூறுகிறார். தாதனூர் கள்ளர்கள் இருளின் மைந்தர்கள். இருளில் வாழ்பவர்கள் ஆகவே சடைச்சி அவர்களின் அபயத்தலம். அது வரலாற்றுச் சித்திரம். ஆனால் வேம்பு வரலாற்றுச்சித்திரம் அல்ல இது ஆசிரியர் உருவாக்கும் ஒரு படிமம்.

 

நாவலில் பல வரிகளில் வேம்பின் கசப்பு குறிப்பிடப்படுகிறது. காயமடையும் போதும் நோயுறும் போதும் நாகு தன் நாவிலும் உடலிலும் வேம்பின் கசப்பு உணர்கிறான். திருட்டில் திளைக்கையிலும் வேம்பர்களிடம் வேம்பின் கசப்பு ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. வேம்பர்களின் இயல்புகளைப்பற்றிய விரிவான சித்திரம் ஏதும் நெடுங்குருதியில் இல்லை. அவர்களுடைய உளவியல், அவர்களின் வாழ்க்கை நோக்கு, அவர்களுக்கும் பிற சமூகத்திற்குமான உறவு எதுவுமே நாவலில் பேசப்படவில்லை. வேம்பர்களின் அகத்திற்குள் செல்வதற்கு ஆசிரியர் அளிக்கும் ஒரே வாய்ப்பு எதற்காக வேம்பு அவர்களின் சின்னமாக அமைய வேண்டும் என்ற வினாமட்டுமே.

 

வேம்பின் பல சித்திரங்கள் நாவலில் வருகின்றன. உதாரணம், ஊமை வேம்பு, ‘பிடிபட்ட கள்வனைப்போல எப்போதும் ஒடுங்கி நிற்கும் வேம்பொன்று வேம்பர்களின் தெருவின் வடக்கே நின்றிருந்தது. மற்ற வேம்புகள் பூக்கும், காய்க்கும் காலங்களில் இது பூப்பதோ காய்ப்பதோ இல்லை. அது ஊமைவேம்பு என்று  ஊர்க்காரர்கள் சொன்னார்கள்’. அத்தனை கசப்பை வேர் முதல் பூ வரை தேக்கி வைத்துக் கொண்டு ஊமையாகி நிற்பதன் உக்கிரம் அதில் எப்போதும் உள்ளது.

 

‘அது மூர்க்கமேறிய மனிதனைப் போல ஊரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தது. . . . பேய் பிடித்த பெண்களை கோடாங்கி விரட்டி கல்லைத்தூக்கிக் கொண்டு ஓடச் செய்யும் போது அவர்கள் இந்த வேம்படியில்தான் வந்து உட்கார்ந்து கொள்வார்கள்.’ நாவல் முழுக்க வேம்பர்களில் பலருக்கு வேப்பம்பழம் பிடித்த சுவையாக இருக்கிறது. வேப்பம்பழங்களை பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டே இருக்கிறான் நாகு. அதன் சாறு தன் நாவில் ஊறுவதை மீண்டும் மீண்டும் ருசிக்கிறான். வாழ்நாள் முழுக்க வேம்பலையின் ருசியாக அவனுடன் வந்துகொண்டிருப்பது அந்த கசப்புதான். குழந்தைகள் கூட வேப்பம்பழமே தின்கின்றன.  ஊருக்குப் புதிதாக வரும் குழந்தைகளுக்கு அது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அதுவே வேம்பலையின் சுவை. கனியும் கூட கசப்பாலான ஒரு மரத்தின் அடியில் அவர்கள் வாழ்கிறார்கள்.

 

ஒவ்வொரு முக்கியமான தருணத்தையும் படிமங்களால் அடிக்கோடிட்டபடி செல்கிறது ‘நெடுங்குருதி’ நாகுவுக்கு சிறு வயதில் அம்மைகண்ட போது அவன் உடம்பெங்கும் பரவும் பறவைகளை உதாரணமாகக் கூறலாம். அவன் உடலில் வேம்பலையின் ஆதி சுவையான கசப்பும் குடியேறுகிறது. நோய்விலகி பறவைகள் மறைய பலநாட்களாகின்றன. இறப்பே இல்லாத சென்னம்மா குறுக்கைக்குள் அமரச்செய்யப்பட்டு மண்ணில் இறக்கப்படுகிறார். அங்கே அவள் தீராத தாகத்துடன் நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கிறாள். நாவலில் காலத்தின் பக்கங்கள் மறிகின்றன. தீரா தாகத்துடன் சென்னமாவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

 

கண்கள் இரண்டும் இழந்து வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையேயான எல்லைக் கோட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் சிங்கி வாழ்க்கையின் மறுபக்கத்தில், மரண வெறியில் இருந்து வந்து தன்னுடன் அமர்ந்திருக்கும் குருவனுடன் ஆடுபுலி ஆட்டம் விளையாடுகிறான். பல வகையிலும் இங்க்மார் பர்க்மானின் ஏழாவது முத்திரையை (The Seventh Seal) நினைவூட்டும் இடம் அது. சிங்கி மரணவடிவமான குருவனை வென்று விடமுடியும். ஆனால் ஒரு காய் மட்டும் மிச்சமிருக்கையில் குருவன் எப்போதும் கிளம்பிச் செல்கிறான். ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு சிங்கியுடன் விளையாடுகிறான் குருவன்.

 

நீடித்துவாழ்வதற்கான உயிரின் அபாரமான இச்சையே சிங்கியில் எஞ்சியிருக்கும் ஆற்றல். அவன் உயிர்வாழ ஒரு காரணமும் இல்லை. நிமிர்ந்து வாழ்ந்த காலங்களும் குறுகி வாழ்ந்த காலங்களும் சென்று மறைந்து கனவாகிவிட்டிருக்கின்றன. ஆனாலும் பிடிவாதமாக மரணத்துடன் போராடுகிறான். தன்னை உறிஞ்சி எடுக்க உக்கிரத்துடன் படிஏறி வரும் வேம்பலையின் வெயிலுடன் சிங்கி சமரிடுகிறான்.  ‘வகுந்துருவேன் வகுந்து. சூரியன்னா பெரிய மசிரா? சங்கை அறுத்துப் போடுவேன்’ என்கிறான். ஆனால் சூரியன் எல்லாவற்றையும் உறிஞ்சி சக்கைகளை வேம்பலை மண்ணில் குவித்தபடியே இருக்கிறது.

 

ஒவ்வொரு படிமத்தையும் அந்த மையச்சரடுடன் பிணைத்து வாசித்து முன்னெடுக்க வேண்டிய சவால் எப்போதுமே இந்நாவலால் முன்வைக்கப்படுகிறது. இன்னொரு உதாரணம் மாடு தரகுக்குப் போய்த் திரும்பும் நாகுவும் தாத்தாவும் பார்க்கும் அந்த சித்தரின் சமாதி. வெயில் கடைசி ஈரத்தையும் மூர்க்கமாக உறிஞ்சி கொண்டிருக்கும் அந்தப் பாலைவெளியில் ஒருபோதும் வற்றாத சிறிய சுணையாக இருக்கிறது அவரது சமாதி

 

‘பாறையின் அடியில் சிறிய தாமரை இலை அகலத்தில் குழிந்திருந்தது. அதில் தண்ணீர் கசிந்து தேங்கியிருந்தது. தன் விரல்களால் தண்ணீரைத் தொட்டுப்பார்த்தான். அதே குளிர்ச்சி. ஆடு மேய்ப்பவர்களுக்காகவே இந்த நடுக்காட்டில் சாது சுனையை உருவாக்கினார் என்று சடையன் சொன்னான்’ என்று விவரிக்கிறது நாவல். ‘நாகு சாதுவின் சமாதியைத் தொட்டுப் பார்த்தான். அதிலும் ஈரக்குளிர்ச்சி இருந்தது’.

 

சில சமயங்களில் படிமங்கள் மையமான சரடுடன் தொடர்பில்லாமல் விலகி நிற்கின்றன. உதாரணமாக நாகு சந்தையில் இருந்து வாங்கி ஒரு நாயக்கர் வீட்டில் விற்கும் பெருமாள் மாடு மற்றும் அதை கொண்டு வந்து விற்கும் அந்தப் பெண். மொத்த நாவலுக்கு வெளியே ஒரு தனியான சித்தரிப்பாக நின்று கொண்டிருக்கிறது அந்தக் கதை அத்தகைய கதைகள் கதையை உருவாக்கிய ஆசிரியரின் அக எழுச்சியுடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையவை. அதனாலேயே அவையும் பிரதியின் பகுதிகள்தான். அவற்றை விலக்கி பிரதியை வாசிக்கலாகாது. அதேசமயம் பிரதியில் நீட்டல்களாகவும் அவை நிற்கின்றன. படைப்பியக்கத்தின் மர்மம் என்று மட்டுமே அவற்றை கூறமுடியும்.

 

படிமங்களின் சரடுகளைப் பிடித்துக்கொண்டு தன் அந்தரங்கத்தில் தனக்கே உரிய ஒரு நெசவை நிகழ்த்திக்கொண்டு மேலே செல்லும் வாசகனே நெடுங்குருதியை முழுமையாக வாசிக்க முடியும்.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைபழசி ராஜா தள்ளிவைப்பு