ஆதிச்ச நல்லூர் புதிய உண்மைகள்

முனைவர் ஆர். தேவ அருணாச்சலம் அவர்கள் எழுதிய ‘தமிழர் நாகரீகம் தொன்மையும் உண்மையும்’ [தேவ ஒளி பதிப்பகம், 18-8 [பழைய எண் 213] சிந்தாதிரிப்பேட்டை, சென்னை] பலவகையிலும் தமிழ் வரலாற்றாய்வாளர்களுக்கு திறப்பாக அமையக்கூடிய நூல். தமிழ் வரலாற்றின் இதுவரை அறியப்படாத பல பகுதிகளை நோக்கியும் தன் ஆய்வின் ஒளியை வீசுகிறார் தேவ அருணாச்சலம் அவர்கள்.

சென்னை பல்கலையிலும் பின்னர் பெர்க்லி பல்கலையிலும் முனைவர் பட்ட ஆய்வை முடித்திருக்கும் தேவ அருணாச்சலம் அவர்கள் மண்ணியல், மொழியியல், உயிரியல் ஆகியவற்றிலும் பட்டம் பெற்றவர். இறையியலில் மேலதிக ஆய்வுசெய்துள்ளார். அறிவியல் கொள்கைகளின்படி விவிலியத்தை விளக்கும் இருபது நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.

The ancient christian letters of south India

முனைவர் தேவ அருணாச்சலம் அவர்களின் நோக்கில் தமிழர் நாகரீகம் என்பது இரு பெரும் பிரிவுகளால் ஆனது. தொன்மையான தமிழர்நாகரீகம் கீழ்வாலை குகை ஓவியங்கள், மறையூர் பெருங்கற்கால அடையாளங்கள் ஆகியவற்றின் வழியாக தெரியவருவது. இக்காலகட்டத்தை இருண்டகாலம் என்று அவர் சொல்கிறார். மக்கள் மாமிசத்தை சுட்டு உண்ணும் வேட்டைக்குலங்களாக வாழ்ந்தனர். பேய்களையும் கற்களையும் வணங்கினர். பாடல்பாடி நடனம் ஆடும் பழக்கம் இருந்திருக்கிறது. உடலுறவு கொள்ளும் வழக்கமும் இவர்களிடம் இருந்திருக்கிறது.

அதன்பின் ஒரு இடைவெளியை நாம் தமிழர் வாழ்வில் காண்கிறோம் என்கிறார் முனைவர் தேவ அருணாச்சலம் அவர்கள். நமக்கு அதன்பின் கிடைப்பது ஆதிச்சநல்லூர் கொடுமணல் போன்ற இடங்களில் உள்ள வளர்ந்த நாகரீகங்கள். இந்த வளர்ச்சி எவ்வாறு தமிழகத்தில் உருவானது என்பதை இன்றுவரை எந்த தமிழ் வரலாற்றாய்வாளனும் விளக்கமுடியவில்லை என்றுசொல்லும் ஆசிரியர் அதற்குக்காரணம் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்தின் கருத்துக்கள் இங்கே வந்து சேர்ந்தமைதான் என்று கருதுகிறார்.

கிறித்தவ மதத்தின் போதகரும் ஏசுகிறித்துவின் முதன்மைச்சீடரும் ஆகவே அவரை சந்தேகப்பட்டவருமான புனித தாமஸ் தமிழ்நாட்டுக்கு வந்தார். இவர்தான் ஆதிச்சநல்லூரை மையமாகக் கொண்டு இயங்கிய பழந்தமிழ்ப்பண்பாட்டை உருவாக்கியவர் என ஏராளமான தொல்லியல் சான்றுகளுடன் முனைவர் தேவ அருணாச்சலம் அவர்கள் நிறுவுகிறார்.

அதுவரை தமிழகக் காட்டுமிராண்டிகள் உடலை சுட்டுத்தின்னும் வழக்கம் கொண்டிருந்தனர். அதன் எச்சமாகவே இன்றுகூட அவர்கள் உடலை தீயில் போட்டு எரிக்கிறார்கள். நியாயத்தீர்ப்புநாள் குறித்த தாமஸின் போதனைகளால்தான் அவர்கள் உடல்களை முதுமக்கள் தாழிகளில் வைத்து புதைக்க ஆரம்பித்தனர். நியாயத்தீர்ப்புக்குப்பின் உயிர்த்தெழும்போது உதவுமே என்றுதான் கருவிகளும் பொம்மைகளும் சேர்த்து புதைக்கப்பட்டன என முனைவர் தேவ அருணாச்சலம் அவர்கள் விரிவாகவே விளக்கிச் செல்கிறார்.

ஆதிச்சநல்லூர் என்பது ஆதி முதல்வனாகிய ஆதமின் நினைவாக அமைக்கப்பட்டது என்று ஆய்வாளர் சொல்கிறார். ஆத அச்ச நல்லூர் என்று இது முற்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கலாம். அச்சன் என்ற சொல் தந்தை என்ற பொருள் கொண்டது. கேரளத்தில் இன்றும் தந்தையை அச்சன் என்றே அழைக்கிறார்கள். பார்ப்பனர்கள் எதையாவது கைதவறிப்போட்டுவிட்டால் அச்சச்சோ என அழைப்பது இன்றும்கூட நிகழ்கிறது. அச்சம் என்ற சொல்லின் வேரே இதுதான். தந்தையிடம் உருவாகும் உணர்வுக்கே பழந்தமிழர் அச்சம் என்ற சொல்லை அளித்தனர்.

ஆதன் என்ற சொல் பழந்தமிழிலக்கியத்தில் எங்கெல்லாம் வருகிறது என்பதை முனைவர் தேவ அருணாச்சலம் அவர்கள் மிக விரிவாகவே நிறுவுகிறார். நல்லாதனார் போன்ற புலவர்கள் ஆதன் வழிவந்தவர்கள். சேரலாதனார் போன்ற மன்னர்களும் ஆதர்களே. தன் ஆதன் என்பதே தாதை என மருவி தந்தை என ஆகியது. ஆகவே தமிழ்ப்பண்பாடு உருவாகும் காலத்திலேயே தாமஸ் அவர்களின் பங்களிப்பு இங்கே நிகழ ஆரம்பித்துவிட்டது.

முனைவர் தேவ அருணாச்சலம் அவர்கள் அளிக்கும் ஆதாரங்கள் முக்கியமானவை. தாமஸ் இந்தியாவில் புனித நீராட்டுச்சடங்குகளை கிபி ஒன்றாம் நூற்றாண்டிலேயே செய்ய ஆரம்பித்திருக்கவேண்டும் என்று அவர் ஊகிக்கிறார். முனைவர் மரியசிறுபுஸ்பம் அவர்களின் ஆய்வேட்டை [தமிழர் வாழ்வியலில் விலங்கியல் முறைகளும் மொழியியலில் ஒழுக்கவிலக்கியல் கூறுகளும் ஓர் ஒப்பாய்வு] அடிப்படையாகக் கொண்டு அவர் சுட்டும் இரு தகவல்கள் முக்கியமானவை.

இங்கே மன்னர்கள் ஞானஸ்னாநம் செய்யப்பட்ட பின்னரே அரியணையில் அமரச்செய்யப்பட்டார்கள். இது பட்டாபிஷேகம் என அழைக்கப்பட்டது. அபிஷேகம் என்னும் நீராட்டு முடிந்தபின் பட்டால் தலைதுவட்டுவதையே இது குறிக்கிறது. அபிஷேகத்துக்குமுன் பட்டைச்சாராயம் மாந்துவதை அல்ல என அவர் நகைச்சுவையாகச் சொல்கிறார். இந்த நீராட்டை அக்காலத்தில் கிறித்தவ மதகுருமார்கள் மட்டுமே செய்தனர். பின்னாளில் இதை பார்ப்பன வந்தேறிகள் கைப்பற்றிக்கொண்டனர் என்கிறார் ஆய்வாளர் தேவ அருணாச்சலனார். அவர்கள் தாங்கள் பெரியவர்கள் என்பதைக் காட்ட கோபுரத்தில் ஏறி கும்பங்களுக்கே திருமுழுக்காட்ட ஆரம்பித்த கொடுமையை அவர் விளக்கிச் செல்கிறார்.

இதேபோல பெண்களுக்கு வயதுவந்ததும் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா பற்றி பல அரிய தகவல்களை அவர் அளிக்கிறார். இணைக்கப்பட்டுள்ள படத்தில் மாமன் சடங்கில் உலக்கை சிலுவை வடிவில் வைக்கப்பட்டிருப்பதை நாமே காணமுடிகிறது. புனிதநீராட்டு முன்னரே இருந்தமையால்தான் பூப்புனிதநீராட்டு என்ற சொல் இங்கே புழங்கியது. பெண்களில் உருவாகும் புனிதர்கள் அக்காலத்தில் பூப்புனிதர்கள் என அழைக்கப்பட்டிருக்கலாம். பரிசுத்த ஆவியின் எழுச்சியை வெறியாட்டு என்று பழந்தமிழர் அழைத்திருந்தார்கள் என ஆய்வாளர் சொல்கிறார்கள்.

தொடர்ந்து சங்க இலக்கியங்களை முன்வைத்து அவை வெளிப்படுத்தும் கிறித்தவக் கொள்கைகளை முனைவர் தேவ அருணாச்சலம் அவர்கள் விளக்குகிறார். ‘என் கை கோடு ஈர் கைவளை நெகிழ்த்த பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே’ என்னும் ஆதிமந்தியாரின் கூற்றை இருமுனையில் நின்று அவர் விளக்குவது வியப்பூட்டுவது. குரிசு என்பதே குரிசில் என பார்ப்பன வந்தேறிகளால் மழுப்பப்பட்டது என அவர் குறிப்பிடுகிறார். குரிசு என்பது சிலுவையைக் குறிக்கும் கிராஸ் என்னும் சொல்லின் மரூஊ என்பதும் அது இன்னமும்கூட குமரி வட்டாரத்தில் புழங்கிவருவதும் குரிசு முத்து குரிசு அந்தோனி போன்ற பெயர்கள் இன்றும் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். தன் கையில் அணிந்திருந்த வளையல்களை தலைமகள் குரிசு என்னும் பெயருடைய தலைவனை அடைந்தபோது கழற்றிவிட்டு திருமுழுக்கு பெற்றதையே இப்பாடல் குறிக்கிறது என்கிறார்.

ஆதிமந்தி என்ற சொல் ஆதமின் மனையாட்டியாகிய ஏவாளையே குறிக்கிறது. பூமியில் மானுடர் மந்திகளாகவும் குரங்குகளாகவும் தோன்றினர் என்பது அறிவியல் கூற்று. ஆதி மந்தி ஏவாளாக தானே இருக்கமுடியும் என்று கேட்கிறார் ஆய்வாளர்.

பழந்தமிழ் பானையோடுகளில் உள்ள கீறலெழுத்துக்கள் அனைத்துமே சிலுவைக்குறியை போட முயன்ற அக்காலத்துப் பண்படா மக்கள் விதவிதமாகச் செய்த முயற்சிகளே என்றும் அதுவே மெல்ல மெல்ல பிராமி லிபியாக தாமஸ் அவர்களால் மேம்படுத்தப்பட்டது என்றும் தேவ அருணாச்சலம் அவர்கள் விவரிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சாம் லிவிங்க்ஸ்டன் அவர்களின் ஆய்வை மேற்கோளாகக் காட்டுகிறார்.

பிராமி எழுத்துக்கள். கிறிஸ்துவைக்குறிக்கும் சிலுவைச்சின்னமே க என்னும் எழுத்தாக இருந்துள்ளது

பலகோணங்களில் தமிழக வரலாற்றை ஆராயும் இந்நூலுக்கு அணிசேர்க்கும் சொல்லாராய்ச்சிகளும் படிம ஆராய்ச்சிகளும் பின்னிணைப்பாக அளிக்கப்பட்டுள்ளன. சிவனின் சூலாயுதமென்பது இருமுனைகளும் மேல்நோக்கி உயர்த்தப்பட்ட சிலுவையே என்பதும் சந்தனதிலகம் என்பது ஏசு சிலுவையில் மாண்டதன் அடையாளம் என்பதும் விபூதி ஏசுவின் புனித அப்பத்தின் நினைவாக போடப்படுவது என்பதும் வியப்பூட்டும் செய்திகள். தமிழக வைணவ ஆலயங்களில் உள்ள தோசை நைவேத்யம் என்பது புனித அப்பமேதான் என்று அவர் சொல்லும்போது நா ஊறுகிறது. ஆனால் ஒயின் துளசிநீராக மாறியது என்பது ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளது.

முக்கியமான நூல். ஆய்வாளர்கள் இதிலுள்ள புதிய வழிகள் வழியாக புகுந்து புறப்பட்டால் தமிழ்கூறும் நல்லுலகம் தன்னை உண்மையில் கண்டுகொள்ள ஏதுவாகும்.

[‘தமிழர் நாகரீகம் தொன்மையும் உண்மையும்’, தேவ ஒளி பதிப்பகம், 18-8 [பழைய எண் 213] சிந்தாதிரிப்பேட்டை, சென்னை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல்இரண்டு – ‘மழைப்பாடல்’ – 37
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 38