மீண்டும் மலேசியா 3

22-ஆம் தேதி காலை கிளம்பி தண்ணீர்மலை முருகன்கோயில் முன்னால் உள்ள கார்நிறுத்தகத்தில் கூடினோம். மலை இலக்கியச்சந்திப்புக்கு வந்தவர்கள் அனைவரும் அங்கே கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்திருந்தனர். கொலாலம்பூரில் இருந்து வந்திருந்த நவீன் பாலமுருகன் போன்றவர்கள் முன்னதாகவே சென்றிருந்தார்கள்.

அந்த மலையின் மீது ஏறுவதற்கு அதற்குரிய வண்டிகளுக்கு மட்டுமே அனுமதி. ஹோ சி மின்னை நினைவுறுத்தும் ஒரு சீனர் அழகிய சிரிப்புடன் நான்குசக்கரச் சுழற்சி கொண்ட வண்டியில் எங்களை ஏற்றி மேலே கொண்டுசென்றுவிட்டார். சுழன்று சுழன்று செல்லும் சாலை கொடைக்கானலை நினைவூட்டியது. இருபக்கமும் தம்பூராபோல ஒலித்துக்கொண்டிருந்த மழைக்காடு.


பிரதர்ஸ் பங்களா என்றழைக்கப்பட்ட அந்த இடம் முன்பு ஒரு கிறித்தவ தேவாலயத்துக்குச் சொந்தமான பாதிரியார் பயிற்சிப்பள்ளி. பின்னர் மலேசியாவின் பெரும் செல்வந்தரும் பெட்ரோனாஸ் நிறுவன உரிமையாளருமான ஆனந்தகிருஷ்ணன் அதை வாங்கினார். அவரது மைந்தர் தாய்லாந்தில் ஒரு புத்தத் துறவியாக வாழ்கிறார். மகனுக்காக அந்த இடத்தை ஆனந்தகிருஷ்ணன் வாங்கினாலும் அவர் அங்கே ஒரே ஒருமுறைதான் வந்திருக்கிறாராம்.


பெரிய பங்களா. முப்பதுபேர் அறைகளில் தங்கலாம். ஐம்பதுபேர் தங்கும் பொதுத்தங்குமிடமும் உண்டு. முன்பு தேவாலயமாக பயன்படுத்தப்பட்ட இடம்தான் கூடம். மூன்றுநாளிலாக தொடர்ந்து ஊட்டி போலவே விவாத அரங்குகள். தமிழ்இலக்கியமரபின் இலக்கிய மதிப்பீடுகள் பற்றி முதல் அமர்வில் நான் பேசினேன். தொடர்ந்து நவீன் மலேசிய நாவல்களைப்பற்றி பேசினார். கோ.புண்ணியவான் மலேசியத்தமிழ் சிறுகதைகளைப்பற்றியும் யுவராஜன் மலேசியக் கவிதைகளைப்பற்றியும் பேசினார்கள்.

நான் மீண்டும் இலக்கியக்கோட்பாடுகளைப்பற்றியும் இந்திய ஞானமரபு குறித்தும் இரு அறிமுக உரைகளை ஆற்றினேன். அவற்றை ஒட்டி தொடர்ச்சியாக விவாதம் நிகழ்ந்தது. விவாதம் சம்பிரதாயமான சர்ச்சையாக இல்லாமல் நகைச்சுவையும் வேடிக்கையும் கலந்ததாக இருக்கும்படிப் பாத்துக்கொண்டதனால் அனைவரையும் உள்ளிழுத்து ஈடுபடச்செய்வதாக இருந்தது. நவீன் மிகத்தீவிரமாக பங்காற்றினார். பாண்டியன், யுவராஜன், பூங்குழலி வீரன், விஜயா, கோ. புண்ணியவான், மணிமாறன், குமாரசாமி, தமிழ்மாறன் தினேஸ்வரி, அன்புக்கரசி போன்றவர்கள் ஆர்வமாக விவாதங்களில் பங்கெடுத்தனர்.

விவாதங்கள் முடிந்தபின் மாலையில் கூட்டமாக அருகே சூழ்ந்திருந்த அடர்காட்டுக்குள் நடக்கச்சென்றோம். சாதாரணமாக அந்தக்காடு ஈரம்சொட்டிக்கொண்டே இருக்கக்கூடியது என அனைத்துப்பாறைகளும் காட்டின. எப்போதும் இருள் எஞ்சியிருக்கும் காடு அது.

24-ஆம்தேதி காலை பதினொரு மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது. நாங்கள் யுவராஜனின் காரில் கொலாலம்பூர் கிளம்பினோம். திரும்பும் வழியில் ஈபோ நகரில் உள்ள புராதனமான பௌத்த குகையான சான் பொடாங்குக்குச் சென்றோம். பத்துமலைக் குகைகளைவிட சற்றுச் சிறியது. ஆனால் மிக அழகாகவும் துப்புரவாகவும் பேணப்பட்டிருந்தது. அங்குள்ள வைரோசன புத்தரின் சிலை மிக அழகானது. இருபக்கமும் சிங்கம் மீதும் யானைமீதும் அமர்ந்திருக்கும் போதிசத்வர் சிலைகளும் மனம்கவர்பவை.


ஈப்போவில் சீன உணவகத்தில் மாலையுணவை சாப்பிட்டுவிட்டு இரவில் கொலாலம்பூர் திரும்பி வந்தோம். யுவராஜனின் இல்லத்தில் தங்கினோம். மறுநாள் யுவராஜனுடன் மீண்டும் ஒருமுறை கொலாலம்பூரின் வணிகவளாகங்களைச் சுற்றிவந்தோம். நான் அருண்மொழிக்கு ஒரு சிறிய நகை பரிசாக வாங்கினேன். சென்ற முறை சிங்கப்பூரில் சைதன்யாவுக்கு வாங்கிய நகையை ஈடுகட்டுவதற்காக.

மாலை யுவராஜனும் தோழியும் மைந்தன் அருணும் எங்களை கொலாலம்பூர் விமானநிலையத்திற்குக் கொண்டு வந்து ஏற்றிவிட்டார்கள். விடைபெறும்போது நினைத்துக்கொண்டேன், வரவர மலேசியா ஓர் வெளிநாடாகவும் சொந்தநாடகவும் தோற்றமளிக்கும் விந்தையை. எங்கே நம் மனிதர்கள் இருக்கிறார்களோ அது நம் நாடல்லவா?


பாலமுருகன் பதிவு

more photos

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34
அடுத்த கட்டுரைமலேசியா படங்கள்