மீண்டும் மலேசியா 2

பதினெட்டாம் தேதி காலையில் நண்பர் யுவராஜன் காரில் வந்து எங்களை கூலிம் அழைத்துச்சென்றார். கூலிம் கெடா மாநிலத்தில் இருந்தது. கொலாலம்பூரில் இருந்து ஐந்துமணிநேரம் பயணம்செய்யவேண்டும். யுவராஜன் எங்கள் ஊட்டி சந்திப்புகளுக்கு மூன்றுமுறை வந்திருக்கிறார். அவரும் அவர் மனைவி ‘தோழி’யும் நல்ல வாசகர்கள். வண்டியில் பேசிக்கொண்டே சென்றோம். இலக்கியம் அரசியல் எதுவானாலும் அது சிரிக்கும்படியாக இருந்தாகவேண்டும் என்பது எங்கள் நட்புக்குழுவின் கொள்கைகளில் முக்கியமானது.

2010ல் கூலிம் ஆசிரமத்தில் நான் பாலமுருகன் மணிமாறன் சுவாமி புண்ணியவான் தமிழ்மாறன்

மதியம் கூலிம் ஆசிரமம் சென்று சேர்ந்தோம். செல்லும் வழியில் மலாய்மக்கள் செய்யும் வாழைப்பழ பஜ்ஜி போன்ற இனிப்பை சாப்பிட்டிருந்தாலும் மதியம் ஆசிரமத்தின் சைவ உணவையும் உண்டோம். மாலையில் சுவாமியின் நண்பர்கள் வந்தனர். குமாரசாமி, மணிமாறன், தமிழ்மாறன் போன்றவர்கள். இரவு பன்னிரண்டுமணிவரை பேசிக்கொண்டிருந்தோம்.

பத்தொன்பதாம் தேதி குமாரசாமி அவர்களின் மாணவர்களிடம் உரையாற்ற அவர் பணியாற்றும் பினாங்கு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்குச் சென்றேன். என்னைப்பற்ற்றிய அறிமுகமாக ஒரு காணொளி நிகழ்ச்சியை மாணவர்களே அமைத்து அங்கே காட்டினார்கள். என்னுடைய வெண்முரசு நாவல் வரிசையில் முதற்கனல் நாவலில் உள்ள பீஷ்மர்-அம்பை சந்திப்பு நிகழ்ச்சியை நாடகமாக போட்டனர். அரங்க அமைப்புகள் மற்றும் ஒப்பனையுடன் நடந்த பதினைந்துநிமிட நாடகம் பெரும்பாலும் நாவலில் உள்ள வசனங்களையே எடுத்தாண்டிருந்தது.

சுவாமியும் நானும் 2010 ல் பாலமுருகன் எடுத்தபடம்

பீஷ்மராக நடித்த மாணவரும் அம்பையாக நடித்த மாணவியும் மிகுந்த உத்வேகத்துடன் சரளமாக நடித்தனர். ஒரு நாவலை நாடகமாகக் காணும்போது முதற்சில நிமிடங்கள் உருவாகும் அன்னியத்தன்மையை இயல்பாக வெல்லமுடிந்ததை நாடகத்தில் ஒன்ற முடிந்ததை பெரிய வெற்றி என்றே சொல்லவேண்டும். அந்தக்காட்சியின் உச்சமான ஒரு கையறுநிலையை அவர்களால் காட்டமுடிந்தது.

அதன்பின் நான் இலக்கியத்தின் அறிதல்முறைகளைப்பற்றிப் பேசினேன். மாணவர்கள் மிகக்கூர்ந்து கவனித்ததும் வாசிப்பின் பின்புலம் கொண்ட வினாக்களை முன்வைத்ததும் தமிழகத்தில் எதிர்பார்க்க முடியாதவை. அவர்களில் கணிசமானவர்கள் வெண்முரசு வாசிக்கிறார்கள் என்பதும் வியப்புதான். காரணம் முதன்மையாக அவர்களின் ஆசிரியர் குமாரசாமிதான். அவருக்கு அவரது மாணவர்கள்மீதிருக்கும் பெரும்பற்று வியப்புக்குரியது. திரும்பத்திரும்ப ‘நம்ம புள்ளைங்க’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆசிரியர் வேலையில் விருப்பம்கொண்ட ஆசிரியர்களை தமிழகத்தில் காண்பதே அரிதாகிவிட்டது.

இருபதாம் தேதி நாங்கள் யுவராஜனுடன் கெடாவில் உள்ள புஜாங் சமவெளிக்குச் சென்றோம். அங்கிருந்த அருங்காட்சியகத்தில் கெடா மாவட்டக் கடலோரப்பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்சின்னங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தன. அந்த இடம் ஒரு முக்கியமான வணிகமையமாக இருந்திருக்கிறது. சீனர்களும் தமிழர்களும் கலிங்கர்களும் புழங்கிய இடமாக நெடுங்காலம் நீடித்திருந்தது.

அங்கே முக்கியமான சைவக்கோயில்கள் பல இருந்திருக்கின்றன. அவை கற்கோயில்கள் அல்ல, செங்கற்றளிகள். செங்கல்லால் ஆன அவற்றின் அடித்தளங்கள் மட்டும் இப்போது கிடைக்கின்றன. முந்நூறாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி சோழர்களின் நேரடி ஆட்சியின்கீழ் இருந்திருக்கிறது. கடாரம் என சோழர்காலக் கல்வெட்டுகளில் சொல்லப்படும் இடம் இதுவே என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இப்பகுதியில் கல்லால் ஆன விக்ரகங்களை நிலைநிறுத்தும் பீடங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.அவற்றை பெரும்பாலும் மாவரைக்கும் கற்கருவிகள் என எழுதி வைத்திருக்கிறார்கள் முழுமையான சிலைகள் அனேகமாக இல்லை. உடைபட்ட பிள்ளையார், சிவலிங்கம், புத்தர் சிலைகள் பல கிடைத்துள்ளன.

அங்கே வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டன. அதன்பின் புதைபொருளாய்வே முழுமையாக கைவிடப்பட்டிருக்கிறது. அப்பகுதி பெரிதாக பேணப்படவும் இல்லை. அந்த மனக்குறை அங்குள்ள தமிழர்களுக்கு உள்ளது. அதைவிட முக்கியமான தமிழ் வரலாற்று இடங்கள் கிடக்கும் கைவிடப்பட்ட நிலை அவர்களுக்குத் தெரியாது.

கோ.புண்ணியவான் அவர்களின் இல்லத்தில் மதிய உணவு. புண்ணியவான் மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இருமுறை எங்கள் ஊட்டி சந்திப்புக்கும் வந்திருக்கிறார். நண்பர்கள் இருவரும் சைவம். ஆகவே அங்கே நான் சாப்பிட்ட மிகச்சிறந்த கறிக்குழம்பை அவர்கள் சாப்பிட வாய்ப்பில்லாமல் போனதில் எனக்கு கொஞ்சம் நிறைவுதான்.

கோ.புண்ணியவான்

மாலை சுங்கைப்பட்டாணியில் நண்பர் தமிழ்மாறனின் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நான் பேசினேன். அங்கும் என்னைப்பற்றி ஒரு காணொளி உருவாக்கி காட்டினார்கள். இலக்கியவாசிப்பின் படிநிலைகளை வெவ்வேறு கதைகளின் வழியாகவே விளக்கும் உரை. மாணவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்கள். தமிழ்மாறனும் மாணவர்களுக்கு தொடர்ந்து இலக்கியத்தை அறிமுகம்செய்துவைப்பவர். 2003 வாக்கில் தமிழகம் வந்து சுந்தர ராமசாமியை சந்தித்திருக்கிறார்.

கல்லூரிகளில் ஆற்றும் உரைகள் மிகச்சம்பிரதாயமாக ஆகிவிடுமென்பது என் எண்ணம். அப்படி ஆகாமல் தடுத்தது அங்கிருந்த இளம் மாணவ மாணவிகளின் உற்சாகம்தான். பதின்பருவத்தில் இருக்கும் மகளைக் கொண்ட எனக்கு நூற்றுக்கணக்கான சைதன்யாக்களை பார்த்த ஒரு பரவசம் ஏற்பட்டது. சிரிப்புகள் துள்ளிக்குதிப்புகள் கலகலவென்ற ஓயாத பேச்சுக்கள். இந்திய மாணவிகளிடம் அந்த இயல்பான சுதந்திரம் இருப்பதில்லை.

இருபதாம் தேதி புண்ணியவானுடன் சென்று பினாங்கு அருகே இருந்த ஒரு காட்டில் நடந்து வந்தோம். மழைக்காடு. ஆனால் மூன்றுமாதமாக மழை இல்லை. மரங்கள் ஓங்கி உயர்ந்து கொடிகளைப் பூண்டு நின்றன. அடர்காடாக இருந்தாலும் வனமிருகங்கள் பெரும்பாலும் இல்லை – குரங்குகளைத் தவிர. இடைவெளியே இல்லாமல் சீவிடுகளின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்த காடு இருளை நினைவில் நிறுத்தியபடியே இருந்தது. காட்டுச்சாலையில் ஒரு மலைநடை. குமாரசாமி அவர்களின் இல்லத்தில் மாலைச் சிற்றுண்டிக்குச் சென்று மீண்டு வந்தோம்.

அன்று மாலை கூலிம் ஆசிரமத்தில் நான் நித்ய சைதன்ய யதியை சந்தித்தது அவருடனான என் உறவு குறித்து சுவாமியின் மாணவர்களிடம் பேசினேன். அதன்பின் இரவில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஆசிரமம் ஓர் இலக்கிய மையம். அங்கே வரும் இலக்கியவாசகர்களுடனான உரையாடல் மிகுந்த மனஎழுச்சியை உருவாக்குவதாக இருந்தது.

கெக் லோக் சி கோயில்

இருபத்தொன்றாம் தேதி யுவராஜனுடன் பினாங்கு நகரை சுற்றிப்பார்த்தோம். சென்றமுறை வந்தபோது நான் பினாங்கை விரிவாகப் பார்க்கவில்லை. நகரத்தின் துறைமுகப்பகுதியையும் கடலோரத்தையும்தான் பார்த்தேன். . இம்முறை கிருஷ்ணன் ஏற்கனவே இணையத்தில் எதையெல்லாம் பார்க்கவேண்டுமென முன்னரே முடிவுசெய்திருந்தார்.

பினாங்கு ஒரு சிறிய தீவு. கிழக்கின் குட்டி இளவரசி என்று புகழ்பெற்றிருந்த துறைமுகம். வெள்ளையர் கொஞ்சி வளர்த்த இளவரசி. கிழக்கில் இன்று பழைய பிரிட்டிஷ்கால அடையாளங்கள் அழியாமலிருக்கும் நகரம் இதுவே. சிங்கப்பூரில் இருந்து முதியவர்கள் தங்கள் பழமையை நினைவுகூர இங்கே வருவார்கள் என்றார் யுவராஜன்.

இதை சிங்கப்பூர் பயணத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தேன். நகரம் வளர்வது சரி, ஆனால் அனைத்து பழமையையும் உடனடியாக அழித்துக்கொண்டே இருந்தால் எஞ்சுவது என்னவாக இருக்கும்? கனவுகளும் நினைவுகளும் அழியும் இடத்தில் மெல்லமெல்ல மரபும் இலக்கியமும் அழியும்.

பினாங்குக்குச் செல்ல மூன்று வழிகள். இரண்டு மாபெரும் பாலங்கள். ஒன்று பழைய பாலம். புதியபாலம் போட்டு சிலமாதங்களே ஆகின்றன. பண்டைக்காலத்தில் கப்பல்தெப்பம் [ஃபெரி ]வசதி மட்டுமே. இப்போதும் அந்த கப்பல்தெப்பங்களை தொடர்கிறார்கள். சாலைவழியாகச் சென்று காரிலேயே அதில் ஏறி பத்து நிமிடத்தில் மறுபக்கம் செல்லலாம். செல்லும்போது கப்பல்தெப்பத்தில் சென்று பாலம் வழியாக திரும்பிவந்தோம்.

கொலாலம்பூரில் உள்ள இரட்டைகோபுரம் வருவதற்கு முன் மலேசியாவின் உயரமான கட்டிடமாகக் கருதப்பட்ட கோம்தார் கட்டடத்யையும் அதைச்சுற்றி இருந்த உயரமான கட்டடங்களையும்தான் பார்த்திருக்கிறேன். பினாங்கு பல இடங்களில் சென்னையை நினைவூட்டியது. சீனர்களின் மலிவான உணவு விடுதிகள், நெரிசலான கடைவீதிகள் உயிர்த்துடிப்புடன் இருந்தன.

பினாங்கில் முக்கியமான பௌத்தக் கோயில்களைப் பார்த்தோம். சீன பௌத்தர்களின் கெக் லோக் சி புத்தர் கோயில் மிகப்பெரியது. பல அடுக்குகளாக ஒரு மலையில் உள்ளது. இங்கே உச்சியில் உள்ள சீன பௌத்த தாராதேவியான குவான் யின் தேவியின் மிகப்பெரிய வெண்கலச்சிலை புகழ்பெற்றது. அங்கே செல்ல தண்டவாளத்தில் ஏறும் மின் தூக்கி உள்ளது.

அப்பகுதியில் இன்னும் பணிமுடியவில்லை. சிலையைச்சுற்றி பெரிய மண்டபம் ஒன்றை எழுப்புகிறார்கள். சிலை பாதுகாப்பாக இருக்க அது உதவலாம். ஆனால் சிலைக்குப்பின் வானம் தெரியும்போது உருவாகும் பேருணர்வு அதன்மூலம் குறைகிறது.


இளஞ்செவ்வண்ணம் கொண்ட பேருருவப் புத்தர்களும் விதவிதமான போதிசத்வர்களும் காவல் தெய்வங்களும் அமர்ந்திருக்கும் ஆலயங்கள் பௌத்த ஆலயங்களுக்கே உரிய குளிர்ந்த அமைதி கொண்டவை. அமைதியுடன் இருளையும் கருமையையும் இணைத்துக்கொள்ளும் நம் மனம் வண்ணமயமான அமைதியை விசித்திரமான திகைப்புடன் உள்வாங்கிக்கொள்கிறது. புத்தர்சிலைகள் அனைத்துமே அழகானவை. மரபார்ந்த பாணியில் நுட்பமாக அமைக்கப்பட்டவை.


வாட் சாயாமங்கல்ராம் ஆலயத்தில் உள்ள படுத்திருக்கும் புத்தர் சிலை சமீபத்தில் கட்டப்பட்டது. அவ்வளவு அழகான சிலை அல்ல. ஆனால் மிதமான வண்ணம் அதை உறுத்தாத காட்சியாக ஆக்குகிறது. நான் பார்த்த விதவிதமான சயனபுத்தரின் சிலைகளை நினைவில் எழுப்பிய்து அச்சிலை. அங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் நுண்ணிய வேறுபாடுள்ளவை. தாய்லாந்து பாணி புத்தர் கோயில் அது.

பர்மியப்பாணியிலான தாம்மிக்கரமா புத்தர்கோயிலுக்கு மூன்றாவதாகச் சென்றோம். ஒரே நாளில் மூன்று பண்பாடுகளைச்சேர்ந்த பௌத்த ஆலயங்களுக்கு நான் சென்றது அதுவே முதல்முறை. புத்தர் ஒருவர், ஆனால் அவரைப்பார்க்கும் கண்கள் வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவை. ஆகவே அவர்காட்டும் தோற்றமும் வேறுவேறு.

தாம்மிக்கரமா புத்தர்கோயில்

கூலிம் ஆசிரமத்துக்கு நான் வருவது இரண்டாவது முறை. முதல்முறை வந்ததன் நினைவுகள் இம்முறை இணைந்துகொண்டன. அங்கிருக்கும் நட்பான சூழல். இலக்கிய அரட்டை. சிரிப்பு. சுவாமியின் அற்புதமான அருகாமை.

[மேலும்]

கெடா-முன்பு சென்ற பதிவு

பினாங்கில் நான்காம் நாள்

பினாங்கிலே

2010 வருகை பற்றி பாலமுருகன் பதிவு 1

2010 பயணம் பாலமுருகன் குறிப்புகள்

பாலமுருகன் 2010 வருகை பற்றி எழுதிய பதிவு 2

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 33
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34