பகற்கனவின் பாதை- கடிதம்

அன்புள்ள ஜெ,

பகற்கனவு எழுத்து பற்றிய அவதானிப்புகள் தெளிவாக, கூர்மையாக இருந்தன. இந்த விஷயத்தை சுட்டிக் காட்ட இப்படி ஒரு காட்டமான சார்பு நிலையும் தேவையானதுதான்.

தி.ஜானகிராமனை நீங்கள் இந்தப் பட்டியலில் சேர்த்தது சரியல்ல என்பது என் எண்ணம். குறிப்பாக, மோகமுள். அந்த நாவலில் யமுனாவுக்கு ஈடாக, யமுனாவின் மூர்த்திகரம் என்று சொல்லத் தக்க வகையில் இசை மீதான பித்தும் சித்தரிக்கப் பட்டுள்ளது. சொல்லப் போனால், தீராத கலைத் தாகம் கொண்ட அந்த வயது இளைஞன் ஒருவனின் அகத்தில், பெண் மீதான விடலைத் தனமும் மோக லாகிரியும் கூடிய காதலும் சேர்ந்து ஏற்படுத்தும் ஒன்றுக்கொன்று சளைக்காத தத்தளிப்புகளைத் தான் மோகமுள் எழுதிச் செல்கிறது. இந்த இசை அம்சம் தான் மோகமுள்ளையும் , திஜாவின் வேறு சில கதைகளையும் பகற்கனவு எழுத்திலிருந்து மேலெழும்பச் செய்து உன்னதத்திற்குக் கொண்டு செல்கிறது என்பேன். தனிமனித இச்சைகளும் சமூக கட்டுப்பாடுகளும் சுய நியதிகளும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளூம் அவரது “அம்மா வந்தாள்” நாவலிலும் பகற்கனவு அம்சம் என ஏதுமில்லை.

லா.ச.ராவின் பிற்காலத்திய கதைகள் அனைத்துக்கும் நீங்கள் கூறியது பொருந்தும். அவரது midlife crisis தான் அந்தக் கதைகளில் வெளிப்படுகிறது. ஆனால் அவரது தொடக்ககாலக் கதைகள் இப்படி ஒதுக்கப் பட வேண்டியவை அல்ல என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

நான் கனகாம்பரம் உள்ளிட்ட குபராவின் கதைகளை ‘ஒதுக்க’க்கூடியவன் அல்ல. அவை இலக்கியத்தின் பகுதிகளே. அவற்றுக்கும் நுட்பமும் அழகும் உண்டு. முதிரா இளமையின் மனநிலைகளும் இலக்கியத்தின் கூறுகளே. ஆனால் அவற்றை இலக்கிய உச்சம் என்றும் அவையே மீண்டும் மீண்டும் இலக்கியத்தில் அடையப்படவேண்டியவை என்றும் நம்பும் ஒரு மனநிலை நம்முள் நீடிப்பதைப்பற்றி மட்டுமே சொல்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 35
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 36