அன்பு ஜெயமோகன்,
கலைச்சொல்லாக்கம் பற்றி கனடாவில் உங்களுடன் நான் நேரில் உரையாடியதுண்டு. அது பற்றி உங்கள் தளத்தில் உள்ள குறிப்புகளையும் வினாவிடைகளையும் நான் வாசித்துள்ளேன். கலைசொல்லாக்கம் குறித்து ஏற்கெனவே “காலம்” இதழில் வெளிவந்த எனது கட்டுரை ஒன்றை இத்துடன் இணைத்துள்ளேன்.
மணி வேலுப்பிள்ளை
கலைச்சொற்களும் சுவாமி விபுலானந்தரும்
மணிவேலுப்பிள்ளை
***
தமிழ் மொழியில் கலைச்சொல்லாக்கத்தை முன்னெடுத்துச் சென்ற புலமையாளர்களுள் விபுலாநந்த அடிகள் (1892-1947) பெயர் போனவர். தமிழில் அறிவியல் நூல்களை ஆக்கவும் பெயர்க்கவும் துணைநிற்கும் வண்ணம் ஈழத்திலும் தமிழகத்திலும் கலைச்சொல்லாக்கத்தை மேம்படுத்திய பெருமை அடிகளாரைச் சாரும்.
யாழ்ப்பாணம்-மானிப்பாயில் பணியாற்றிய அமெரிக்க மருத்துவர் கிறீன் (Dr.Samuel Fisk Green, 1822-1884) வெளியிட்ட “மருத்துவ விஞ்ஞான அகராதி” (1855), “அருஞ்சொல் அகராதி” (1875) என்பவை ஆங்கிலம்-தமிழ் கலைச்சொற்கோவைகளுக்கு முன்னோடிகளாய் அமைபவை. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏறத்தாழ 80 கலைச்சொற்களுடன் கூடிய “நூற்றொகை விளக்கம்” என்னும் நூலை பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை வெளியிட்டார் (1888). சி. ராஜகோபாலாச்சாரியார், வெங்கடசுப்பையர் இருவரும் தமிழ் அறிவியல் கலைச்சொற் சங்கத்தை அமைத்தார்கள் (1916). சென்னை அரசினால் அறிவியல் கலைச்சொற் குழு அமைக்கப்பட்டது. (1923). “சட்டச் சொற்றொகுதி” வெளியிடப்பட்டது (1930). சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் அறிவியல் கலைச்சொற் குழுவைத் தோற்றுவித்தது (1934).
இலங்கை, இந்தியப் புலமையாளர்களும் சென்னை, திருவாங்கூர் பல்கலைகழகங்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட அரும்பணியின் பெறுபேறாக இயற்பியல், வேதியியல், கணிதவியல், இயற்கை அறிவியல், உடற்றொழிலியல்-சுகாதாரவியல், புவியியல், வரலாறு, பொருளியல், நிருவாகம், அரசியல், குடியியல் சொற்களை உள்ளடக்கிய “கலைச்சொற்கள்” 1936ம் ஆண்டு டி. லக்ஷ்மணபிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், எஸ். வையாபுரிப்பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, எஸ். வேலாயுதபிள்ளை ஆகியோர் தலைமையில் இயங்கிய குழுவினால் அது மீள்நோக்கப்பட்ட பின்னர், 10,000 பதங்கள் கொண்ட புதிய “கலைச்சொற்கள்” விபுலாநந்த அடிகளால் பதிப்பிக்கப்பட்டது (1938).
மருத்துவர் கிறீன் கலைச்சொல்லாக்கம் குறித்து எழுதிய மடல் ஒன்றில் தமது உள்ளக் கிடக்கையை இவ்வாறு வெளிப்படுத்தினார்:
“…நான் சொற்கோவை ஒன்றை ஆக்கப் போகிறேன். (1) அதில் ஆங்கில, இலத்தீன் சொற்களைத் தமிழில் வரையறுக்கப் போகிறேன். (2) ஏற்கெனவே நல்ல மருத்துவச் சொற்கள் தமிழில் இருக்கின்றன. (3) வடமொழி அறிஞர்கள் ஊடாகப பல சொற்களைக் கொணரலாம். (4) இன்னும் பல சொற்களைத் தமிழிலேயே உருவாக்கலாம்…” (1850).
அதே வழிமுறைகளையே விபுலாநந்த அடிகளும் கலைச்சொல்லாக்கத் துறைஞர்களுக்கு விதந்துரைத்தார்:
(அ) உயிருள்ள மொழியானது பிறமொழித் தொடர்பு கொண்டு தனக்குரிய சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக்கொள்ளுதல் வேண்டும்.
(ஆ) வடமொழியிலிருந்தெடுத்துத் தமிழ் ஆன்றோராலே தமிழுருவாக்கி வழங்கப்பட்ட சொற்களைப் பிறமொழிச் சொற்களெனக் கடிந்தொதுக்குதல் மேற்கொள்ளாது அவைதம்மை ஆக்கத் தமிழ்மொழியாகத் தழுவிக்கொள்வதே முறையாகும்.
(இ) ஒரோவிடத்து ஆட்சிப்பட்ட வடமொழிப் பதங்களைத் தமிழில் வழங்குதல் குற்றமாகாது.
இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆற்றிய பேருரை ஒன்றில் மேற்படி வழிமுறைகளை அடிகளார் மேற்கொண்டு விரித்துரைத்தார்:
“ஆங்கிலம் போன்ற வளர்ச்சியடைந்த மொழியோடு ஒப்பிடும்போது தமிழிலே சொல்வளம் குறைவாக இருப்பதை உணரலாம். இதனால், தமிழ் மொழி வளங்குன்றிய மொழியென்று ஆகிவிடாது. தமிழ்மொழியிலே புதுப்புதுச் சொற்களை ஆக்கிக் கொள்ளவேண்டியது கற்றவர் கடமை. முதற்கண் தமிழ் மொழியிலேயே ஆட்சியில் இருக்கும் சொற்களை எல்லாம் ஆராய்ந்து அவற்றிலே பயின்றுள்ள கலைச்சொற்களையும் ஏனைய சொற்களையும் வரையறுத்துக் கொள்ளல் வேண்டும். காலப்போக்கிலே தமிழில் வந்து கலந்துகொண்ட வட மொழிச் சொற்களைக் கடிந்து ஒதுக்காது அவற்றையும் ஆக்கத் தமிழாக தழுவிக்கொள்ள வேண்டும். வேண்டிய போது அயன்மொழிச் சொற்களை தழுவிக் கொள்வது தவறாகாது. ஆனால் அவ்வாறு தழுவிக்கொள்ளப்படும் அயன்மொழிச் சொற்கள் தமிழ் உருவம் பெற்று தமிழோடு வேற்றுமையின்றிக் கலந்து இசைக்கத்தக்கனவாக இருத்தல் வேண்டும். தமிழிலுள்ள உரிச்சொற்களின் அடியாகப் புதுச்சொற்களை ஆக்கிக்கொள்ளலாம். அவ்வாறு ஆக்கப்படும் புதுச்சொற்களும் நேர், நிரை என்ற வாய்ப்பாட்டில் அடங்கத்தக்கவாறு சுருக்கமும், இனிமையும் பெற்றிருத்தல் வேண்டும். எவ்வகையிலும் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பியல்பு மாறுபடாதவாறு பாதுகாத்தல் எங்கள் கடமையாகும்” (மகேசுவரி பாலகிருஷ்ணன்).
முதற்கண் தமிழில் மண்டிக் கிடக்கும் கலைச்சொற்களை வெளிக்கொணர வேண்டும் என்பது அடிகளாரின் ஆசை. எடுத்துக்காட்டாக, புறநானூற்றின் முதலாவது பாடலிலேயே ஊர்தி, மறை, உரு, திறன், ஏமம் என்னும் ஐந்து கலைச்சொற்கள் பயிலப்பட்டுள்ளன:
கண்ணி கார் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை:
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப:
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு திறன் ஆகின்று; அவ் உருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்:
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே –
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரத்து,
தாழ்சடைப் பொலிந்த, அருந்தவத்தோற்கே.
ஊர்தி = vehicle
மறை = scripture
உரு = figure
திறன் = skill
ஏமம் = security
பிறிதோர் எடுத்துக்காட்டு: “நாலடியார்”:
இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டாற்றுப் பட்டு முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று (288).
Oxford அகராதியின்படி townhouse என்பது a row house ஆகிறது. அந்த வகையில் “நிரைமனை,” townhouse இரண்டும் நேரொத்த சொற்கள் ஆகின்றன.
“வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே” என்பது அருணகிரிநாதரின் “திருப்புகழ்” வரி. இதில் “மணம்”, “புணர” இரண்டையும் சேர்த்து “மணம்புணராமை” என்னும் சொல்லை வருவிக்கலாம். இதற்கு நேரொத்த ஆங்கிலச் சொல்: celibacy (abstention from sexual relations and marriage – Oxford).
வேறு சில எடுத்துக்காட்டுகள்:
internal combustion = அகங்கனலி (நற்றிணை: 163)
lunar eclipse = திங்கள் கோள் நேர்தல் (பெரும்பாணாற்றுப்படை)
mechanised curtain = எந்திரவெழினி (சீவகசிந்தாமணி: 740)
unmanned aircraft = வலவன் ஏவா வான ஊர்தி (புறநானூறு: 27)
tribunal = அறங்கூறவையம் (சிலப்பதிகாரம்: 5, 135)
சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று நால்வகைப்படுத்தும் தொல்காப்பியர், “கடிசொல் இல்லை காலத்துப்படினே” என்று அறிவுறுத்துகிறார் (452). அவ்வாறு மக்கள் வழக்கில் நிலைகொண்ட வேற்றுமொழிச் சொற்களுக்கு, அதாவது மக்கள் பேசி, எழுதி, வாசிக்கும் வேற்றுமொழிச் சொற்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்:
கக்கூசு (இடச்சு)
சப்பாத்து (போர்த்துக்கேயம்)
சாரம் (மலே)
துவக்கு = துப்பாக்கி (துருக்கி)
தோட்டா (உருது)
பாண் (பிரெஞ்சு)
பிக்கு (பாளி)
புனல் = funnel (ஆங்கிலம்)
விசயம் (வடமொழி)
விதானை (சிங்களம்)
“வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” (தொல்காப்பியம்).
அதாவது, வடமொழிச் சொற்களை வடமொழி எழுத்துக்களைக் கொண்டு ஒலிப்பதை விடுத்து அவற்றுக்கு இணையான தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உச்சரிக்க வேண்டும். அதற்கமைய வடமொழி உச்சரிப்பை தற்சமம் என்றும், தமிழ்மொழி உச்சரிப்பை தற்பவம் என்றும் வழங்குகிறார் பவணந்தி முனிவர்:
தற்சமம்
வடமொழி தமிழ்
குங்குமம் குங்குமம்
மணி மணி
மேரு மேரு
வாரி வாரி
தற்பவம்
வடமொழி தமிழ்
ஹரி அரி
சரஸ்வதி சரசுவதி
பங்கஜம் பங்கயம்
வருஷம் வருடம்
மறைநூல்களுள் காலத்தால் முற்பட்ட இருக்கு வேதத்திலேயே தமிழ்ச் சொற்கள் பயிலப்பட்டுள்ளதை ஐராவதம் மகாதேவன், பேராசிரியர் ஆபிரகாம் எரழி (Professor Abraham Eraly, Gem in the Lotus, 2004), வென்டி தொனிகர் (Wendy Doniger) முதலிய புலமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவ்வாறு தமிழிடம் வடமொழி கடன்பட்ட சொற்களுக்கு ஒருசில எடுத்துக்காட்டுகள்:
தமிழ் வடமொழி
¬____________________
நீர் நாரம்
சடை சடா
கைதை கேதக
மாலை மாலா
பல்லி பல்லீ
“அருவி” என்னும் அருந்தமிழ்ச் சொல்லின் அறபுமொழித் திரிபே “அரிம்” என்கிறார் ஏ.என்.எம். ஷாஜஹான் (புத்தளம்: வரலாறும் மரபுகளும், இலங்கைக் கல்வித் திணைக்களம், கொழும்பு, 1992, ப.27). “கிட்டத்தட்ட 2,000 சொற்கள் அல்-குர் ஆனிலும், தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் ஒன்றாகத் தோன்றுவதைப் பார்க்கலாம்” என்று தமிழ்மணி மானா மக்கீன் கூறுகின்றார் (மஞ்சரி தீபாவளி மலர், சென்னை, 1998, ப.22). அவருடைய எடுத்துக்காட்டுகள் சில:
தமிழ் அறபு
________________
இல்லை இலா
அரசு அர்ஷ
கற்பூரம் கா/பூர்
சந்தனம் ஸந்தல்
அடிகளார் உணர்த்தியவாறு ஆங்கிலத்தில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவற்றுள் அண்ணளவாக அரைவாசி பொதுச்சொற்கள், அரைவாசி கலைச்சொற்கள். ஆண்டுதோறும் ஆங்கிலத்துள் ஏறத்தாழ 500 புதிய சொற்கள் வேறு நுழைகின்றன. தமிழ் உட்பட வேறெந்த மொழியாலும் ஆங்கிலத்தின் சொற்பெருக்கிற்கு ஈடுகொடுக்க முடியாது.
எனினும் “தமிழ்மொழியிலே புதுப்புதுச் சொற்களை ஆக்கிக் கொள்ளவேண்டியது கற்றவர் கடமை. ஆக்கப்படும் புதுச்சொற்களும் நேர், நிரை என்ற வாய்ப்பாட்டில் அடங்கத்தக்கவாறு சுருக்கமும், இனிமையும் பெற்றிருத்தல் வேண்டும்” என்று அடிகளார் அறிவுறுத்தியதை மேலே சுட்டிக்காட்டினோம். கலைச்சொல்லாக்கத்தில் மொழியமைதி பேணப்பட வேண்டும் என்பது அதன் பொருள். சில எடுத்துக்காட்டுகளுடன் அதனைக் கருத்தில் கொள்வோம்:
Synchronised swimming என்பது a form of swimming in which participants perform co-ordinated dance-like leg and arm movements in time to music (Oxford). இதை எவ்வாறு தமிழ்ப்படுத்தலாம் என்று சிந்திக்கும் எவருக்கும் “இசைபட வாழ்தல்” பற்றிப் பேசும் குறள் (231) நினைவுக்கு வரக்கூடும். சற்று வேறு பொருளில் வள்ளுவர் அவ்வாறு கூறினாலும் கூட, அது எமக்கு வழிகாட்டுவதாய் அமைந்துள்ளது. அதாவது synchronised swimming என்பதை நாம் “இசைபட நீந்தல்” என்று தமிழ்ப்படுத்தலாம். “இசை” இங்கு ஒரு சிலேடையாகி, இசை (music), இசைவு (co-ordination) இரண்டையும் குறிப்பது கவனிக்கத்தக்கது.
“மறுமலர்ச்சி” என்பது nascentia என்னும் இலத்தீன் சொல்லின் அடியாகப் பிறந்த renaissance என்னும் பிரெஞ்சுச் சொல்லின் அரிய தமிழாக்கம். அவ்வாறு தமிழ்ப்படுத்தியவர் வ.வே.சு. ஐயரே என்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் துணிபு. அதனைக் குறித்து ஐயரே இப்படி எழுதுகிறார்: “மரங்களில் புதிய மலர்கள் பூப்பது போல் நமது ஜாதியிலும் புதிய வேகமும் புகழும் பிறக்கப் போகின்றன என்றதற்கு இந்த இயக்கங்கள் அறிகுறியாயிருப்பதால், இவற்றின் தொகுதிக்கு நாம் மறுமலர்ச்சி என்று பேரிடுகிறோம்.”
கிரேக்க மொழியில் “அச்சம்” என்று பொருள்படும் phobos என்னும் சொல்லை அடியொற்றி ஆங்கிலத்தில் எழுந்த சொல் phobia. ஏற்கெனவே ஆங்கிலத்தில் fear என்னும் சொல் வழங்கி வருகையில் எதற்காக இந்த இரவல்? அதற்கான விடையில் கலைச்சொல்லாக்க உத்திகளில் ஒன்று பொதிந்துள்ளது: Phobos, fear இரண்டும் முறையே கிரேக்க, ஆங்கில மொழிகளில் உணர்த்தும் வழமையான அச்சத்தை விஞ்சிய ஓர் அச்சம் பற்றி, அதாவது an abnormal or morbid fear or aversion (Oxford) பற்றி உளவியல் பேசுகிறது. அதாவது phobia என்பது வழமைபிறழ்ந்த அல்லது நோய்மைசார்ந்த ஓர் அச்சம் அல்லது வெறுப்பு. இதனை நாம் வெருட்சி என்று கொள்ளலாம். இனி, கிரேக்க மொழியில் உச்சி என்று பொருள்படும் akron என்னும் சொல்லை phobia என்பதுடன் சேர்த்து acrophobia என்னும் சொல் ஆங்கிலத்தில் வழங்கி வருகிறது. இதனை நாம் உயரவெருட்சி எனலாம். இதை அடியொற்றி வேறு சில எடுத்துக்காட்டுகள்:
achluophobia = இருள்வெருட்சி
agoraphobia = வெளிவெருட்சி
arsonphobia = தீவெருட்சி
asthenophobia = மயக்கவெருட்சி
autophobia = தனிமைவெருட்சி
மேலே இரு உண்மைகள் புலனாகின்றன: (1) சொற்பிறப்பியல் அல்லது ஒரு சொல்லின் தோற்றுவாய் அதன் பொருளை நாம் புரிந்துகொள்ள எமக்குத் துணைநிற்கும். அதேவேளை, (2) தோற்றுமொழிச் சொல் வேற்றுமொழிக்குப் பெயரும்பொழுது அதன் பொருள் சற்று வேறுபடக்கூடும். இதற்கு இன்னோர் எடுத்துக்கட்டு: இலத்தீன் மொழியில் arsion என்பது “எரிதல்” என்று பொருள்படுகிறது. ஆங்கிலத்தில் அதே பொருளை உணர்த்தும் burning வழக்கில் இருக்கிறது. எனினும் இலத்தீன் வழித்தோன்றிய arson என்னும் ஆங்கிலச் சொல் “தீவைப்பு” என்னும் குற்றச்செயலை உணர்த்துகிறது. வடமொழியில் தனிமையைக் குறிக்கும்“ஏகாந்தம்” தமிழுக்குப் பெயரும்பொழுது (சான்றோரின்) இனிமை மிகுந்த தனிமையைக் குறிக்கிறது. “இனிது, இனிது ஏகாந்தம் இனிது!”
தனிமை = loneliness
ஏகாந்தம் = solitude
வேண்டியபோது அயல்மொழிச் சொற்களைத் தமிழ்மயப்படுத்திப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்துகிறார் அடிகளார். உரிய தமிழ்ச் சொல்லாக்கம் கைகூடும் வரை (நன்னூலார் வடமொழிக்கு வகுத்த தற்சம, தற்பவ விதிப்படி) ஆங்கிலச் சொற்களையும் நாம் தமிழ்மயப்படுத்தலாம். இலங்கையிலும், இந்தியாவிலும் ஏற்கெனவே இத்தகைய தமிழ்மயமாக்கம் ஓங்கி வந்துள்ளது. 1956 முதல் இலங்கை அரசகரும மொழித் திணைக்களம், சட்ட வரைநர் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மூன்றும் வெளியிட்ட சொற்கோவைகளிலிருந்து அத்தகைய தமிழ்மயமாக்கத்துக்கு சில எடுத்துக்காட்டுகள்:
albumin = அல்புமின் (உடலமைப்பியல் – இழையவியல் சொற்றொகுதி, 1965)
alfalfa = அலுபலுபாப்புல் (புவியியல் சொற்றொகுதி, 1958)
argon potassium = ஆகன் பொற்றாசியம் (வரலாறு – தொல்பொருளியல் சொற்றொகுதி, 1970)
bacteria = பற்றீரியம் (உடற்றொழிலியல் – உயிரிரசாயனவியல் சொற்றொகுதி, 1964)
Crusoe Economy = குரூசோ பொருளாதாரம் (பொருளியல் சொற்றொகுதி, 1957)
gamma = காமா (பெளதிகவியல் சொற்றொகுதி, 1975)
haemophilia = எமோபிலியா (பிறப்புரிமையியல் – குழியவியல் சொற்றொகுதி, 1964)
magnesium = மகனீசியம் (சட்ட மருத்துவச் சொற்றொகுதி, 1965)
The Paris Commune = பாரிசுச் சமிதி (குடிமையியல் – ஆட்சியியல் சொற்றொகுதி, 1958)
wicket = விக்கற்று (உடற்கலைச் சொற்றொகுதி, இலங்கை, 1963)
ஒருபுறம் தமிழ்மயமாக்கம் தொடர்கையில், மறுபுறம் கலைச்சொல்லாக்கம் ஓங்குவது கண்கூடு. அதேவேளை தமிழ்மயமாக்கம், தமிழ்ச் சொல்லாக்கத்துக்கு இடம்கொடுத்து ஒதுங்குவதும் கவனிக்கத்தக்கது. சில எடுத்துக்காட்டுகள்:
ஆங்கிலம் மங்கும் தமிழ்மயமாக்கம் ஓங்கும் சொல்லாக்கம்
______________________________________________________________________________________
advocate அப்புக்காத்து வழக்குரைஞர்
bus வசு பேருந்து
doctor இடாக்குத்தர் மருத்துவர்
hospital ஆசுப்பத்திரி மருத்துவமனை
police பொலிசு காவல்துறை
நிகண்டுகளை விதந்துரைக்கையில், “நிகண்டுகளிலே வந்த பதங்களை எடுத்தாள்வது எவ்வாற்றாலும் பொருத்தமுடையதாகும்” என்று அறிவுறுத்துகிறார் அடிகளார். தமிழில் 36 நிகண்டுகள் இருப்பதாக முனைவர் தொ. பரமசிவன் கணக்கிட்டுள்ளார். அவற்றுள் முதன்மை வாய்ந்த மூன்றையும் அவர் இவ்வாறு கணித்துக் கூறியுள்ளார்:
நிகண்டுகள்
திவாகரம் (8ம் நூற்றாண்டு; 9,500 சொற்கள்)
பிங்கலம் (10ம் நூற்றாண்டு; 14,700 சொற்கள்)
சூடாமணி (1520ம் ஆண்டு; 11,000 சொற்கள்)
நிகண்டுகளில் இடம்பெறும் சொற்கள் பின்வரும் துறைகளைச் சார்ந்தவை: நிருவாகம், வேளாண்மை, கட்டிடக்கலை, சோதிடம், வானவியல், தாவரவியல், மரவேலை, கடற்றொழில், புவியியல், ஆட்சி, கணிதம், மருத்துவம், உலோகவியல், இசை, கடற்செலவு, கப்பல்கட்டல், சிற்பம், புடைவை, விலங்கு மருத்துவம். ஆழ்ந்து பரந்து விரிந்த தமிழ்ச்சொற் சுரங்கத்தை மேற்படி நிகண்டுகளும், பின்வரும் அகராதிகளும், கலைச்சொற்கோவைகளும் அகழ்ந்து குவித்துள்ளன:
அகராதிகள்
யாழ்ப்பாண அகராதி (1842)
வின்சுலோ தமிழ்-ஆங்கிலம் அகராதி (1862)
வின்சுலோ ஆங்கிலம்-தமிழ் அகராதி (1888)
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (1937)
Tamil Lexicon, சென்னைப் பல்கலைக்கழக தமிழ்–ஆங்கிலம் அகராதி (1924-36)
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்–தமிழ்ச் சொற்களஞ்சியம் (1963)
கிரியாவின் தற்காலத் தமிழ்–தமிழ்–ஆங்கில அகராதி (1992)
Oxford English–English–Tamil Dictionary (2009)
கலைச்சொற்கோவைகள்
தமிழ்நாட்டுச் சொற்கோவைகள் (தமிழ் இணையக் கல்விக்கழகம்: http://www.tamilvu.org)
ஈழநாட்டுச் சொற்கோவைகள் (நூலகம்: www.noolaham.org)
கலைச்சொற்கோவை (தமிழ்ச் சொற்கோவைக் குழாம்: http://kalaichotkovai.blogspot.ca)
பொதுச் சொற்களையும், கலைச்சொற்களையும் நாடும் துறைஞர்களுக்கும் விழைஞர்களுக்கும் இணைய வாயிலாகக் கிடைக்கும் மேற்படி நிகண்டுகளும், அகராதிகளும், கலைச்சொற்கோவைகளும் துணைநிற்றல் திண்ணம். உலகம் முழுவதும் பரந்துவாழும் கலைச்சொல்லாக்கத் துறைஞர்கள் ஏற்ற மாற்றங்களுடன் அவற்றை இயன்றவரை பயன்படுத்துவது அடிகளார் அடிகோலிய பணிக்கு உரிய கைமாறு புரிவதாய் அமையும்.
அன்று கலைச்சொல்லாக்கத்துக்கு அடிகளார் விதந்துரைத்த வழிமுறைகள் என்றென்றும் செல்லுபடியாக வல்லவை. இன்று உலகளாவிய முறையில் கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபடும் துறைஞர்கள் அடிகளாரின் வழிமுறைகளைக் கருத்தில் கொண்டு தமது பணியை முன்னெடுத்துச் செல்லல் தகும்.
“பழைமையும் புதுமையும், துவைதமும் அத்வைதமும், பெளதீக விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானக் காட்சியும், மேற்றிசையறிவும் கீழ்த்திசைச் சமயமும், மனமொடுங்கிய தியான நிலையும் மன்பதைக்குத் தொண்டு புரிதலும் சமரசப்பட வேண்டிய காலம் இது (விபுலாநந்த ஆராய்வு, ப. 140).
உசாத்துணை
1. வித்துவான் க. செபரத்தினம், விபுலாநந்த அடிகள், தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சன்றோரும், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2005, ப. 250-1
2. அருள் செல்வநாயகம், விபுலாநந்த வெள்ளம், ஓரியண்ட் லாங்மன், சென்னை, 1961)
3. கலாநிதி நா. சுப்பிரமணியன், ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள், சவுத் விஷன், சென்னை, 2005
4. கலாநிதி இளையதம்பி பாலசுந்தரம், விபுலாநந்தம், இராவ் பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை வெளியீடு, கனடா, 2004
5. பெ.சு. மணி, வ.வே.சு. ஐயர் கட்டுரைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1993).
6. (இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அடிகளாரிடம் கல்விகற்றவரும், அரசகரும மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவரும், அங்கு மொழிபெயர்ப்புக் கண்காணிப்பாளர் வ. சிவராசசிங்கம் தலைமையில் இயங்கிய கலைச்சொல்லாக்கக் குழுவின் செயலாளராக விளங்கியவருமாகிய) மகேசுவரி பாலகிருஷ்ணன், தமிழறிஞர் விபுலாநந்தர் வாழ்வும் பணிகளும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை, 1992, ப.184-5
7. Gregory James, Colporul, A History of Tamil Dictionaries, Cre-A, Chennai, 2000, p.385
மணி வேலுப்பிள்ளை