அன்புள்ள ஜெயமோகன்,
வலசைப்பறவை 6 , பகற்கனவின் பாதையில் என்று தலைப்பில் எழுதப்பட்டிருந்த கருத்துக்கள் உள்ளதை உள்ளபடி விளக்கிக் கூறுகின்றன.
கு.ப.ரா. பற்றி பத்து வருடங்களுக்கு முன்பு திண்ணையில் இதே கருத்துக்களை மிதமான வார்த்தைகளில் கூறியிருக்கிறீர்கள்.
நாற்பது வருடங்களாக தமிழ், இந்திய, ரஷ்ய இலக்கிய நூல்களை வாசித்து வருகிறேன்.தி,ஜா.வின் சிறுகதைகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். கடன் தீர்ந்தது, பாயசம், கொட்டு மேளம் போன்ற சிலவற்றை விரும்பி இருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு மோகமுள் வாசிக்க ஆரம்பித்து பின் முடியாமல் மூடி வைத்துவிட்டேன்.
உங்கள் சிபாரிசு பட்டியலில் மோகமுள் இருந்ததால் சில வருடங்களுக்கு முன் சிரமப்பட்டு வாசித்து முடித்தேன். ஓரிரு இடங்கள் சிந்திக்க வைத்தன. உதாரணம் – இதற்குதானா? என்று யமுனா கேட்கும் ஒற்றை சொல் கேள்வி. அந்த கேள்வியே தி,ஜா., கு.ப.ரா., மௌனி ஆகியோரின் எழுத்தைப் பார்த்து எழுப்பப்பட்ட ஒன்றோ என்று இன்று நினைத்துக் கொண்டேன். அம்மா வந்தாள், செம்பருத்தி ஆகியவற்றை சிரமப்பட்டு வாசித்து முடித்தேன். மற்றபடி அவை ஏன் இத்தனை புகழ் பெற்றன என்பது புதிராகவே இருந்தது. உங்களது வலசைப்பறவை தந்த விளக்கம் எனக்கு விடை தந்தது.
அக்காலத்து ஆங்கில துப்பறிவாளரான ஷெர்லாக் ஹோம்ஸின் பாதிப்பில் தேவன் எழுதி அன்று பெரும்புகழ் பெற்ற பல கதைகளுக்கும் இன்று அருங்காட்சியக மதிப்பு தவிர வேறு இலக்கிய மதிப்பு உண்டா என்று தெரியவில்லை.
1. மகாபாரதக் கடலின் ஆழத்தில் மூழ்கி நீந்துவதால், மேற்பரப்பு அலைகளில் ஆடும் இக்கதைகளின் சிறுமை உங்களுக்கு மேலும் தெளிவாகத் தெரிகிறது என்று நினைக்கிறேன்.
2. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எழுதியவற்றில் இன்று உங்களால் ஏற்க முடியாதவை என்று எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?
3. ஜேன் ஆஸ்டின் எழுதிய பிரைட் அன்ட் பிரிஜுடிஸ் (Pride and Prejudice) உலகப் புகழ் பெற்ற, சச்சரவில் ஆரம்பித்து கல்யாணத்தில் முடியும் காதல் கதை. அந்த பிரபு-பேதை-மோதல்-காதல் சூத்திரத்தை வைத்து இன்றுவரை ஆயிரக்கணக்கான கதைகள் வந்துவிட்டன. பிரைட் அன்ட் பிரிஜுடிஸ் பற்றி நீங்கள் எங்கும் எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதை வாசித்திருக்கிறீர்களா? அதன் இலக்கிய மதிப்பு பற்றிய தங்கள் கருத்து என்ன?
அன்புடன்,
சந்திரசேகரன்
அன்புள்ள சந்திரசேகரன்
சின்னஞ்சிறு உலகியல் நுட்பங்கள் என்பதில் ஒரு சலிப்பு எப்போதேனும் உருவாகாமல் ஒருவனால் பேரிலக்கியங்களை வாசிக்க முடியாது. தத்துவம் சார்ந்த ஒரு முழுமைநோக்கு அல்லது வரலாறுசார்ந்த முழுமைநோக்குதான் பேரிலக்கியங்களை உருவாக்கும் விசை. அதைச் சென்று தொட பெரும் தடையாக இருப்பது இப்படி அன்றாடவாழ்க்கையின் எளிய விஷயங்களில் முழுமையாகத் தொலைந்துபோவதுதான்.
என்னுடைய நாவல்களில் எவை அப்படி எனக்கு இன்று உவப்பற்றவையாக மாறியிருக்கின்றன என்று கேட்டால் அவ்வாறு சில உள்ளன, அவற்றைச் சொல்வது சரியாக இருக்காது என்றே பதில் சொல்வேன். சிறிய உலகியல் நுட்பங்கள் அல்லது அழகுகளுடன் எழுத்தை நிறுத்திவிட நான் முயன்றதேயில்லை. ஆனால் அடைய முடியாதுபோன ஆக்கங்கள் பல உள்ளன.
நான் ஜேன் ஆஸ்டினை வாசித்தது என் இருபது வயதுகளில். அன்றே அது எனக்கான படைப்பல்ல என்றே உணர்ந்தேன். ஏற்கனவே இதை எழுதியிருக்கிறேன். அவை அன்றைய பிரிட்டிஷ் வாழ்க்கையை, மனித உறவுகளின் சில தருணங்களை, மானுடவாழ்க்கை மாறிவந்த பரிணாமத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆனால் இலக்கியத்துக்கு அவை போதாது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு இப்பாலிருந்து நான் என் உழைப்பைச்செலுத்தி வாசிக்க அந்தk காரணம் போதாது. நான் ஒரு படைப்பை வாசிப்பது என்னை அறிந்துகொள்வதற்காகவும்தான்.
பிரிட்டிஷ் நாவல்களில் மிகச்சில படைப்புகள் மட்டுமே என்னைக் கவர்ந்திருக்கின்றன. உதாரணமாக ஜார்ஜ் எலியட்டின் சிலாஸ் மார்னர், சாமர்செட் மாமின் கேக்ஸ் ஆண்ட் ஏல், மேரி கொரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன்.
ஆனால் பெரும்புகழ்பெற்ற பல பிரிட்டிஷ் படைப்புகள் இன்று என் நினைவிலேயே தெளிவாக இல்லை. எமிலி பிராண்டியின் வுதரிங் ஹைட்ஸ், தாமஸ் ஹார்டியின் டெஸ்ஸ் ஆஃப் டி.யூபர்வில்ஸ், ஜேன் ஆஸ்டினின் பிரைட் ஆண்ட் பிரஜுடீஸ் போன்றவை வாசிக்கும் காலத்திலேயே கவராதவை.
அதைப்போல டிக்கன்ஸின் ஆலிவர்டிவிஸ்ட், டேல் ஆஃப் டூ சிட்டீஸ் போன்றவை வாசித்த காலத்தில் என்னைக் கவர்ந்தவை. பாராட்டி விரிவாக எழுதியிருக்கிறேன். இன்று அவை எனக்கு பெரிய படைப்புகளாகப் படவில்லை. அதேசமயம் பிக்விக் பேப்பர்ஸ் முக்கியமான நாவல் என நினைக்கிறேன்.
இதேபோல அமெரிக்கப் படைப்பாளிகளில் நதானியேல் ஹாதர்ன், பேர்ல் எஸ் பக் போன்றவர்கள் பெரும் படைப்பாளிகளாக அங்கே சொல்லப்படுகிறார்கள். எனக்கு அவர்கள் ஆழமான படைப்பாளிகளாகத் தோன்றவில்லை. அங்கே எல்லைக்குள் நிறுத்தி பேசப்படும் ஐசக் பாஷவிஸ் சிங்கர் நான் வழிபடும் படைப்பாளி.
ஏன் இந்த வேறுபாடு? ஒரு படைப்பாளி ஒரு மொழிக்கு, ஒரு பண்பாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பால் முக்கியமானவராக கருதப்படலாம். அந்தப்பண்பாடு வரலாற்றுக்காரணங்களால் அவரை தூக்கிப்பிடிக்கலாம். ஆனால் அவர் மானுடத்துடன் பேசும் படைப்பாளியாக இல்லை என்றால் அவ்வெல்லைக்கு அப்பால் அவருக்கு மதிப்பில்லை. இவர்கள் அப்படிப்பட்ட தேச,கால எல்லைக்குட்பட்ட எழுத்தாளர்கள். இன்று இவர்களிடம் நான் கண்டடைய ஏதுமில்லை.
ஆனால் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ் போன்ற ருஷ்யப்பெரும்படைப்பாளிகள் அப்படி அல்ல. கதே, தாமஸ் மன், ஹெர்மன் ஹெஸ் போன்றவர்கள் அப்படி அல்ல. எமிலி ஜோலா, மார்ஷல் புரூஸ்த் போன்ற பிரெஞ்சு படைப்பாளிகள், லூகி பிராண்டல்லோ போன்ற இத்தாலிய படைப்பாளிகள் அல்லது நிகாஸ் கஸந்த்ஸகிஸ் போன்ற கிரேக்க படைப்பாளிகள் அப்படி அல்ல. உதாரணமாகச் சொல்கிறேன். அவர்கள் எந்தவகையிலும் ஐரோப்பிய நுண்ணுணர்வு இல்லாத கீழை மனதினனான எனக்கும் பெரும்படைப்பாளிகள். இதுவே எல்லை கடந்த பெரும்படைப்பாளியின், மானுடத்திடம் பேசும் படைப்பாளியின் அடையாளம்.
அந்த அம்சம், மானுடத்துடன் பேசும் அம்சம் என்ன? அதை வகுக்க முடியாது. ஆனால் கால, இட மாறுதல்களுக்கு அப்பாற்பட்ட மானுட எழுச்சியையும் சரிவையும் தத்துவம் வழியாக, வரலாற்றுணர்வு வழியாக, கவித்துவம் வழியாக தொட்டுணரும் இயல்பு என்று சொல்லலாம்.
ஜெ