தி.க.சிவசங்கரனை எனக்கு திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் சுந்தர ராமசாமி அறிமுகம் செய்தார். அவருக்கு தி.க.சியின் இலக்கிய நோக்கு, அடிப்படை ரசனை ஆகியவற்றின் மீது மதிப்பில்லை. வறட்டுத்தனமான மார்க்ஸியத்தின் சரியான உதாரணம் என அவரை நினைத்தார். ஆனால் அவரது கொள்கைப்பற்றுமீது மதிப்பிருந்தது. ஆழமான நட்பும் நீடித்தது.
அது கம்யூனிஸ்டுகள் சோர்வில் மூழ்கிக்கிடந்த காலம். சோவியத் ருஷ்யா உடைந்து சிலமாதங்களே ஆகியிருந்தன. சுந்தர ராமசாமியைப்பார்த்ததும் தி.க.சி அவர் கையைப்பிடித்துக்கொண்டு ‘என்ன ராமசாமி இப்டி ஆயிப்போச்சு’ என்றார். தி.க.சி கண்கலங்கியபோது சுந்தர ராமசாமியும் கண்கலங்கியதாகத் தோன்றியது. அவரது வழக்கப்படி வாயை இறுக்கமாக மூடிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார்.
தொடர்ந்து தி.க.சி சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். அந்த இலக்கியக்கூட்டத்தின் அமைப்பாளர்கள் வந்து அழைக்கும் வரை. சுந்தர ராமசாமிக்கு சோவியத் ருஷ்யாவின் கம்யூனிசம் மற்றும் சர்வாதிகாரம் பற்றிய கடும் விமர்சனம் இருந்தபோதிலும் அதன் வீழ்ச்சி ஒரு பெரிய சோர்வை அளித்தது என எனக்குத்தெரியும். ஆனால் அந்த அளவுக்கு வருத்தமிருக்குமென நான் நினைக்கவில்லை. திரும்பும்போது சுந்தர ராமசாமியிடம் அதைப்பற்றி கேட்டேன். அவர் காரில் அவரது உணர்ச்சிகளைச் சொல்லிக்கொண்டே வந்தார்
எனக்கு அப்போது தி.க.சி பற்றி எந்த மதிப்பும் இருக்கவில்லை. இத்தனைக்கும் என் முதல் நாவல் ரப்பர் வந்தபோது முதலில் பாராட்டி ஊக்கமூட்டி எழுதிய சிலரில் ஒருவர் அவர். அதன்பின் திசைகளின் நடுவே தொகுப்பையும் பாராட்டி எழுதியிருந்தார். சோவியத் ருஷ்யா இருந்தவரை தி.க.சியை ஒரு நிறுவன ஆதரவாளராகவே என்னால் பார்க்கமுடிந்தது. ஆனால் அந்த யுகம் முடிந்தபின்னரும் நீடித்த அவரது பற்றுறுதிதான் அவரை கொள்கையாளராக எனக்குக் காட்டியது
அதன்பின் எப்போதும் அவருடன் நன்மதிப்புடன் நல்லுறவுடன் இருந்தேன். நெல்லை செல்லும்போதெல்லாம் அவரைச் சென்று சந்திப்பதுண்டு. ‘வே நீ ஒரு ஃபாசிஸ்ட்…ஆனா கலைஞன்’ என்று உரக்க கூவிச்செல்வார். எல்லா சந்திப்புகளுமே உற்சாகமான கேலி கிண்டல் நடுநடுவே வசைகளுடன் இருக்கும். பின்தொடரும் நிழலின் குரல் நாவலுக்காக நான் அவரால் எப்படியும் அதைவிட மும்மடங்கு பக்க அளவுக்கு திட்டப்பட்டிருப்பேன்.
இருமுறை அவரது பிறந்தநாளன்று வாழ்த்துவதற்காகச் சென்றிருந்தேன். பக்கத்தில் இருந்த ஓட்டலுக்குச்சென்று அவரதுசெலவில் இனிப்புடன் விருந்துண்டுதான் செல்லவேண்டுமென ஆணையிட்டு அதற்கு பொறுப்பாக அவரது நண்பர் ஒருவரையும் கூடவே அனுப்பிவைத்தார்.அவருக்குப்பிடித்த கதைகள் வெளிவந்தால் தொலைபேசியில் கூப்பிட்டுப்பாராட்டுவார். கடைசியாக அறம் கதைகள் வெளிவந்தபோது ஒவ்வொரு கதைக்கும் கூப்பிட்டுப்பாராட்டினார். அவருக்கு யாரோ தினமும் அச்சுநகல் எடுத்துக்கொடுத்திருந்தனர்.
முதுமை அவரை நெடுங்காலம் நெருங்கவில்லை. காரணம் மிகமெல்லிய சிறிய உடல் என்பதே. மூச்சு, செரிமானம், இதயம் ஆகியவை பழுதின்றி இருந்தன. தொடர்ச்சியாக வாசித்தும் விவாதித்தும் எப்போதும் ‘களத்தில்’ இருந்தார். அவ்வகையில் அவர் கம்யூனிஸ்டாக இருந்தது அவருக்கு உதவியது. அவரைச்சுற்றி எப்போதும் இளம் நண்பர்கள் இருந்தனர். மற்ற எழுத்தாளர்களுக்கு அமையாத நல்லூழ் அது. அவரது கணீர்க்குரல் இன்னொரு வரம். முதியவர்கள் தனிமைப்படுவதற்கு அவர்களின் குரல் தளர்ந்து அவர்கள் பேசுவது பிறருக்கு புரியாமல் போவது ஒரு முக்கியமான காரணம்.
அவரது வாழ்க்கையில் முக்கியமான முதல் இழப்பு வல்லிக்கண்ணன் மரணம். அப்போது அவரைப்பார்க்கச்சென்றிருந்தேன். அவர் வல்லிக்கண்ணனைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ‘நானும் அவரும் சேக்காளிக’ என்று மட்டும் பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.பின்னாளில் வல்லிக்கண்ணனின் படத்தைத்தான் அவரது இல்லத்தில் சட்டமிட்டு வைத்திருந்தார்
அவரது மனைவி. உடல்நலமில்லாமல் படுக்கையில் இருந்தபோது அவர்களை அவர்தான் கவனித்துக்கொண்டார். அவர் இறந்தபோது நான் ஊரில் இல்லை. சிலநாட்கள் கழித்து துக்கம் கேட்கச் சென்றிருந்தேன். ‘ரொம்ப முடியாம இருந்தா…போனது நல்லதுதான்…எனக்கு ஒண்ணும் துக்கமில்ல’ என்றார். ஆனால் பேச்சுநடுவே அவர் அவர்களைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தபோது கண்கள் கலங்கி அழுதுவிட்டார்.
‘கண்ணுல கண்ணீரா வருது…வாசிக்கவே முடியுறதில்லை…லென்ஸ் மாத்தணும்’ என்றபடி கண்ணாடியைத் துடைத்து போட்டுக்கொண்டார். கம்யூனிஸ்டுகள் அழக்கூடாதே. ‘இதெல்லாம் எதுக்கு உங்கிட்ட சொல்றேன்னா நீ இதையெல்லாம் எழுதணும்…இதெல்லாம் ஒரு பீரியட்…அந்த டைம் பற்றி எழுதலேன்னா அதெல்லாம் அப்டியே போய்டும்….சமூகவியலுக்கு இதெல்லாம் தேவை’ என்றார்.
அதன்பின் அவரது முதல்மகனின் மரணமும் அவரை பெரிதும் சோர்வுறச்செய்தது. அவரது முதல்மகன் நல்ல வாசகர். அவரும் ஓர் எழுத்தாளராக வருவார் என தி.க.சி எதிர்பார்த்திருந்தார். அவர் சங்கப்பாடல்களுக்கு உரை எழுதியிருக்கிறார். எனக்கு அறிமுகமில்லை. அதற்கு துக்கம் கேட்க தி.க.சியை பார்க்க சென்றபோது அதைப்பற்றி ஒன்றுமே பேசாமல் காவல்கோட்டம் பற்றி மட்டுமே பேசிவிட்டு வந்தேன்.
தி.க.சியிடம் எப்போதும் எனக்கு மோதலும் பிரியமும் சம அளவில் கலந்த உறவிருந்தது. சென்ற தலைமுறையில் நான் மிகமிகக் கடுமையாக விமர்சனம் செய்த சிந்தனையாளர் அவரே. இலக்கியத்தில் நான் முழுமையாக நிராகரிக்கும் அரசியல்சார்ந்த குறுக்கல்வாதத்தின் முகம் அவர். என் தலைமுறையில் அவர் மிகக்கடுமையாக விமர்சனம் செய்த எழுத்தாளனும் நானே. ஆனால் எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு நீடித்தது. அதற்கான காரணம் அவரது அபாரமான நகைச்சுவை உணர்ச்சி.
அவரை ஒருமுறை காணச்சென்றபோது வேறு ஏதோ வழியில் நுழைந்து சந்துகளில் வழிதவறிவிட்டேன். நூறுமுறை சென்றாலும் குழப்பும் நெல்லைத்தெருக்களில் ஒன்றில் அவர் இருந்தார். எவருக்கும் எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் என்றால் யாரென்றே தெரியவில்லை. ஒரு பிச்சைக்காரர் ‘அதோ அந்த குப்பைத்தொட்டிபக்கத்தில சாமி’ என்று சுட்டிக்காட்டினார்.
அதை தி.க.சியிடம் சொன்னேன். ‘ஆமா, நாங்க திரும்ப அவருகிட்ட நோட்டீசையும் ரசீதையும் நீட்டீருவோம்ல…நாங்க ஒரே வர்க்கம்’ என்று சிரித்தார். ‘குப்பைத்தொட்டி பக்கத்தில உங்க வீடுன்னு சொன்னானே’ என்றேன். உடனே அவரது சிறிய புத்தக அலமாரியைச் சுட்டிக்காட்டி ‘குப்பையா வச்சிருக்கோம்ல’ என்றார். அதில் என் நூல்கள் இருந்தன. ‘குப்பைய அள்ளுறவன்கிட்டத்தானே அதெல்லாம் வந்து சேரும்?’ என்றார்
மலேசியாவிலிருந்து வரும்போதே தி.க.சி இறந்த செய்தி வந்தது. நினைவுகள் வந்தபடியே இருந்தன. பெரும்பாலும் எல்லாமே புன்னகைக்கச் செய்யும் இனிய நினைவுகள். தி.க.சிக்கு அஞ்சலி.