எம்.எஸ்.கடிதங்கள்,கடைசியாக…

அன்பின் ஜெ..

எம்.எஸ் குறித்த சமீபத்திய கடிதங்களையும், உங்கள் பதிலையும் படித்தேன். சலிப்பாக இல்லையா உங்களுக்கு..  வெத்து வாதங்கள்,  மன இருளில் இருந்து ஓங்கி எழுந்து வரும் கசப்புகள். இவர்கள் அனைவரும் உங்கள் மூலம் வேறு யாருடனோ பேசுவது போலவே எனக்குத் தோன்றுகிறது.. நீங்கள் ஒரு திசையில் பேசிக் கொண்டிருக்கீறீர்கள்.. இவர்கள் வேறு எங்கோ, வேறு யாருடனோ பேசிக்கொண்டிருக்கீறார்கள். என்னால் இவ்வாறு உரையாட முடிவதேயில்லை.. இருபது-முப்பது நிமிடங்கள் விவாதித்து பார்ப்பேன். உடல் அதிர்ந்து, குரல் உடையும் வரை  எத்தனை விரிவான தர்கங்களை வைத்தாலும் நான் பிடித்த முயலுக்கு மூணேமுக்கால் காலு என்று நிர்ப்பவர்களுடன் பேசி என்ன பெரிய பிரயோஜனம்….. இவ்விதமான விவாதங்களுக்குப் பின் எனக்கு எஞ்சுவது களைப்பே.. ஒன்றும் புரியவில்லை..

 இப்பொழுது கூட இப்படி ஒரு விவாதத்தில் கலந்து கொண்டு திரும்பி, பின்னர் எம்.எஸ் குறித்த கடித்தங்களை படித்து மனம் நொந்து, நொடிந்து, நூடில்ஸ்ஸாகிக் போன  களைப்பிலெயே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.    காந்தி பற்றி ஒரு சிறு புரிதல் கூட இல்லாமல், போட்டு மொத்து மொத்து என்று மொத்திக் கொண்டிருந்தார்கள். அஷிஸ் நந்தி, ராம் குஹா படித்திருக்கீர்களா, டி.ஆர்.நாகராஜ், ஷீமேக்கர், எரிக்ஸன்.. இவர்கள் எல்லாம் காந்தி குறித்து எழுதியது ஏதாவது தெரியுமா என்று கேட்டால் பதில் இருக்காது… ஆனால் எங்கோ வாய்மொழியாக கேள்விப்பட்ட விஷயத்தை வைத்து மட்டையடி அடித்துக் கொண்டிருப்பார்கள்.  இவ்விடங்களில் எல்லாம் என்னைக் காற்பது எனக்குள் இருக்கும் உள்ளார்ந்த திமிர் மட்டுமே… போங்கடா, போய் படிச்ட்டு வாங்க என்று சொல்லிவிடுவேன். இத்திமிர் மட்டும்  இல்லையேல்  இருநூறு பேர் உள்ள அரங்கில் உடைந்து, நொறுங்கி போய் வந்திருப்பேன் என்று தான் தோன்றுகிறது..

அன்புடன்
அர்விந்த்

அன்புள்ள அரவிந்த்

உண்மைதான். பொதுவாக விவாதங்களில் ஒரு சலிப்பு எப்போதும் உண்டு. ஏனென்றால் விவாதங்களில் கருத்துத்தரப்புகள் மட்டும் இல்லை, சம்பந்தப்பட்டவர்களின்  அகங்காரமும் சேர்ந்தே உள்ளது. நான் ஒரு மாற்றுக் கருத்து முழுமையாக நிரூபிக்கப்பட்டபின்னர் அதை உடனே ஏற்றுக்கொள்பவர்களாக சிலரையே கண்டிருக்கிறேன்.

ஆனாலும் விவாதங்கள் தேவை. ஏனென்றால் கருத்துக்கள் விவாதம் மூலமே வளர முடியும். ஒரு சூழலில் எந்த ஒரு கருத்தும் விவாதவடிவத்தில்யே நீடிக்கிறது. நம் மூளையில்கூட ஒரு கருத்து எதிரும்புதிருமான வாதங்களால் ஒரு விவாத வடிவிலேயே உள்ளது.

விவாதங்களின் பயன் என்னவென்றால் நம் கருத்தை தெளிவாகச் சொல்லிவிட்டோம் என்றால் காலப்போக்கில் விவாதத்தின் மையப்புள்ளி நம்மை நோக்கி மெல்ல நகர்வதை நாம் காணமுடியும் என்பதே. நான் பலமுறை அதைக் கண்டிருக்கிறேன். ஆகவேதான் நான் விவாதிக்கிறேன். கோபம் கொள்வதில்லை

ஜெ

 

 

 

 

//ஜி.என்பியிடம் இருந்த ‘காதல்’ அல்ல பிரச்சினை. வெறும் காதல் என்றால் அதில் வரலாறு ஒன்றுமில்லை. அதில் இருந்த மன்றாடல், அந்த மன்றாடல் குரூரமாக புறக்கணிக்கப்பட்ட முறை, அதுவே இங்கே பிரச்சினை.//

என்ன ஜெ இப்படி சொல்லிவிட்டீர்கள்? ஜி.என்.பி. மீது இது மிகவும் கடுமையான வார்த்தைகள். ஜி.என்.பி ஒரு குரூர மனதினன் என்று முடிவே கட்டிவிட்டு சொல்வதுபோல இருக்கிறது.
 
எம்.எஸ். அவரை விரும்பியது மிகவும் இயல்பான ஒரு விஷயமே. விரும்பாமல் இருந்திருந்தால் அது ஆச்சரியமாகியிருக்கும். ஜி.என்.பி அதை தாண்டிச்சென்றதும் இயல்பானதே. இதில் குரூரம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். இது நடக்காமல் தடுத்ததில் சதாசிவத்தின் பங்கு என்ன என்றும் பார்க்கவேண்டும் அல்லவா? சதாசிவம் என்ற தங்கக்கூண்டுக்குள் மட்டுமே சுதந்திரமாகத்திரிந்த ஒரு குயில் என்று வேண்டுமானால் சொல்லலாம். திருமணத்திற்கு முன்னும், பின்னும். எம்.எஸ்.ஸின் கடிதங்களை மிகவும் நேரிடையானதாக நீங்கள் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
 
சம்பந்தமில்லாமல் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. எம்.எஸ் காஞ்சி மடத்திற்கு சதாசிவத்தோடு செல்கிறார். தமிழ் பிராமணப்பெண்கள் அணியும் மடிசார் புடவை அணிந்துகொண்டு. பெரியவர் அவரை அதை சாதாரணமாக மாற்றிக் கட்டிக்கொண்டு வணங்க வா என்று பணித்திருக்கிறார். பின்னர் ஒருநாள் அவரே “மைத்ரீம் பஜத” என்று எழுதி இவரிடம் கொடுத்திருக்கிறார் வெளிநாட்டில் பாடுவதற்கு. (அதன் பின்னரே பல ஆன்மீக இசைத்தட்டுக்கள், சஹஸ்ர நாமம் போன்றவை வெளிவந்தது என்று நினைக்கிறேன். தெரியவில்லை)
 

ராமச்சந்திர ஷர்மா

அன்புள்ள ராம்

எனக்கு ஜி.என்.பி குறித்து எதுவும் தெரியாது. இக்கடிதங்கள் காட்டும் ஜி.என்.பியையே நான் சுட்டிக்காட்டினேன். அவரை கொடூரமானவர் என்று சொல்லவில்லை. அக்கால ஆண்களின் பொது மனநிலையே அதுதான். ஐம்பதுகளில்கூட சினிமாக்களில் மனைவிகள் கணவர்களிடம் ‘ உங்களுக்கு பணிவிடைசெய்யும் பாக்கியத்தை கொடுங்கள் அத்தான் கொடுங்கள்’ என்றுதானே காலில் குப்புறவிழுந்து மன்றாடுகிறார்கள்

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,
நீங்கள் ஏன் சார் இதைப்பற்றியெல்லாம் எழுதிக்கிட்டு….பாத்தீங்கல்ல…எல்லாருக்கும் பத்திக்கிட்டு வருது…பேசாம ஒரு மூன்று எழுத்து நடிகைக்கும் ஒரு நான்கு நடிகருக்கும் அது என்று எழுதினால் கை தட்டி ரசிப்பார்கள்.  இந்த மனோநிலை என்று மாறுமோ? ஒரு நல்ல கட்டுரை அதன் யாதார்த்தத்தை எண்ணி கூட ரசிக்க முடியவில்லை என்றால், எங்கே போய் சொல்வது? 
அன்புடன்
இளம்பரிதி

 

 

அன்புள்ள இளம்பரிதி

ஒரு கிசுகிசு நம்மைப்பற்றியதாக இல்லாமல் இருக்கும்போதே நம்முடைய மனம் கிளர்ச்சி அடைகிறது இல்லையா?

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோ,

தங்களின் அக்னி பிரவேசம் கட்டுரை கண்டேன்.

கே. ஜே. யேசுதாஸ் – ஐ தமிழ் பிராமணர்கள் எப்படி ஏற்று கொண்டார்கள்? பிராமணர்களின் ஆதிக்கம் நிறைந்த இசை உலகில் அவராலும் எப்படி புக முடிந்தது? மிக உயர்ந்த நிலையை எப்படி  அடைய முடிந்தது? பதில் மிக எளிமையானது. அவரின்  திறமைக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. திறமையின் முன் ஜாதி மற்றும் மத  வேறுபாடுகள் மிக எளிமையாக மறக்க பட்டன.

எம்.எஸ். அம்மாவும் அப்படிதான். எம்.எஸ் – வின் பின்னணி அவர்களை ஏற்று கொள்ள எந்த தடையாகவும் இருக்கவில்லை. ஒரு சிறு உறுத்தல் கூட என்னிடம் கிடையாது, உங்களின் மற்றும் ஜார்ஜ் -ன் கட்டுரைகளை படித்த பின்பும் கூட. (இந்த கட்டுரைக்கு முன்பே அனைத்து விஷயங்களும் தெரியும்).

//எம்.எஸ்ஸின் சாதியை மிக இழிந்தது என எண்ணும் ஓர் ஆழ்மனநிலையே அது சொல்லப்பட்டதும் அதிர்ச்சி அடைகிறது. அது எம்.எஸ்ஸின் பிம்பத்தை தகர்க்கிறதென எண்ணுகிறது.//

நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்த விஷயங்கள் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததுதான். பிறகு என்ன அதிர்ச்சி? அனைவரும் அறிந்த உண்மையை மீண்டும் உரக்க சொல்லுவதால் யாருக்கு என்ன லாபம்?

சில விஷயங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, மறக்க பட வேண்டும். அவை ஞாபக படுத்த படுவதால் என்ன பயன்?

என்னுடைய அதிர்ச்சி எல்லாம் தாங்களும் தரம் தாழ்ந்து விட்டீர்களோ என்று மட்டுமே.

மற்றபடி திரு கண்ணன் அவர்களின் கடிதத்துடன் நான் முழுமையாக ஒத்து போகிறேன்.

– சிற்றோடை

 

அன்புள்ள சிற்றோடை

‘தரம் தாழ்தல்’ என இங்கே நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ அது எழுத்தாளனின் கடமை. உங்களுக்கு வேண்டுமென்றால்  வாமனன் போன்றோர் எழுதும் கருவிலே திரு வகை புராணங்கள் உவப்பாக இருக்கலாம். ஆனால் எனக்கு உண்மையே முக்கியமானது.

ஜேசுதாஸ் தன் திறமையால் அத்தனை சாதாரணமாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர் என்னென்ன அவமதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார் அவரைப்பற்றி என்னென்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் வரலாறு

அதைமீறி அவர் அங்கீகாரம் பெற்றார் என்றால் அது மேதைகளின் வழி. அவர்களின் பாதையை அவர்களே உருவாக்குகிறார்கள்.

ஜெ

 

 

ஜெயமோஹன் அவர்களுக்கு,

ஓர் அக்கினிப்பிரவேசம் கட்டுரை தொடர்பான என் எண்ணங்கள். ஒரு மனிதனின் அந்தரங்கம் புனிதமானது என்று ஒத்துக்கொள்ளும் நீங்கள் அதை சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி வெளியிடுவது எந்த வகையில் சரி? M.S. அவர்களுக்கு அதில் இஷ்டம் இல்லையென்றே தோன்றுகிறது (இல்லையெனில் இத்தகவல் ஏற்கனவே பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும்). தாங்களே சொல்லியிருப்பது போல் ஒரு அரசியல்வாதியைப் பற்றி (அவர் இறந்து பல வருடங்களானால் கூட) அவர் அந்தரங்கத்தை எழுத முடியாத சமூகத்தில், – உதாரணம் பெரியார், அண்ணா – இறந்துவிட்ட, ஒரு lame பெண்ணைப் பற்றி பக்கம் பக்கமாக ஒரு கற்றறிந்தவர் (!?) எழுதுவதும் அதைப் பற்றி (என்னையும் சேர்த்து) பல பேர் தம் எண்ணங்களை வெளியிடுவதும் மிக ஆபாசமாக தோன்றுகிறது.

நம்மைப் பொறுத்தவரை, ஏன் பிராமணர்கள் மீது துவேஷம் என்றால், அவர்கள்தான் திருப்பி தாக்குவது இல்லை அவ்வளவே. மற்றபடி ஒருவர் பிராமணரோ இல்லையோ அவர் பலவீனமாக இருந்தால் நமது அறிவு, புத்தி அனைத்தையும் திரட்டி தாக்க தயாராகிவிடுவோம். மேலும் ஒருவர் திறமையானவராக இருந்து, அவர் பிராமணர் இல்லையென்றால் அதனை வெளிப்படுத்த உலகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்த விழைவோம்.  நடிகர் விவேக்கை பிராமணர் என்று எண்ணியிருந்ததை ரஜினி வெளியிட்டதை நீங்கள் பரப்ப விழைவதும் அதில் அடக்கம்.

அமெரிக்காவில் எல்லா பிரபலங்களுக்கும் ஒரே நீதி என்கிறீர்கள். இது எந்த வகையில் நீதி. இந்த அந்தரங்களை அறிய மேலை நாடுகளில் நடக்கும் முயற்சிகளையும் அதன் விளைவுகளையும் அறிந்திருக்கிறீர்களா? Dianaவும், அவர் காதலரும் இறந்தது எதனால்? இந்த அந்தரங்கம் அறியும் முயற்சியின் உச்சகட்ட விளைவுதானே? ஒரு மனிதனின் உயிரைவிட அவன் அந்தரங்களுக்கு முக்கியம் கொடுக்கும் வக்கிரம் இந்தியாவிற்கும் வரவேண்டுமா? இவ்வகை “அந்தரங்க வெளியீடு” முயற்சிகள் வக்கிரங்களாவது possible தானே?

M.S. அவர்கள் எப்படியிருப்பினும் அவர் பாடிய பாடல்கள், அதில் உள்ள அந்த தெய்வீக உணர்வு மாறப் போவது இல்லையெனும்போது எதற்கு இந்த தகவல்கள்? தீயும் மனித மனமும் ஒன்றுக்கொன்று எதிரான திசையில் செல்பவை. தீ என்றும் மேல் நோக்கியும், நம் மனம் என்றும் கீழ் (கீழான விஷயங்களை) நோக்கியுமே செல்லும். மெத்த படித்தவர்கள் இதற்கு விதிவிலக்கில்லை.  நமக்கு அடுத்த தலைமுறைக்கு நாம் எவ்வகை விஷயங்களை விட்டு செல்ல போகிறோம்? M.S. பாடிய பாடல்களையா? அல்லது அவர் அந்தரங்க வாழ்க்கையையா?

வருத்ததுடன்,
தும்பிக்கையாழ்வான்

அன்புள்ள தும்பிக்கையாழ்வான்

நாம் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்லவேண்டும் என்றால், நம்முடைய சமூகம் எத்தனை சாதிய இழிவுபடுத்தல்களுடன் இருந்தது என்ற உண்மையையும் அதை எம்.எஸ் போன்றவர்கள் தங்கள் மேதமையால் எப்படி வென்றார்கள் என்ற உண்மையையும்தான். பொய்களை அல்ல.

பிராமணர்களை எங்கே யார் இழிவுபடுத்தினார்கள்? இத்தனை சாதிய உணர்வுடன் இருக்கும் நீங்கள் உள்ளூர எம்.எஸ்ஸை அங்கீகரிப்பீர்கள் என என்னை நம்பச் சொல்கிறீர்களா என்ன? அந்தரங்கம் அது இது  என்பதெல்லாம் இந்தக்கடிதத்துக்கான ஒரு பாவனை அவ்வளவுதான்.

ஜெ

 

எம் எஸ் அவர்கள் பற்றிய எதிர்வினைகள் பல சம்பம்தமே இல்லாமல் இருந்தன. பலர் சொல்வது, ‘இதுவெல்லாம் எங்களுக்கு முன்னமே தெரியும் அதனால் அவர் மீதான மதிப்பு எந்த விதத்திலும் குறையவில்லை, நீங்கள் ஏன் இப்போது இதை சொல்கிறீர்கள்’ என்பதே. எனக்கும் தான் இந்தக் கட்டுரை எந்த விதத்திலும் அவரை குறைத்து மதிப்பிடவோ, அவரது பாடல்களை ரசிப்பதற்கு தடையாகவோ இல்லையே. ஆனால் அவர்களை போல் எனக்கு இதெல்லாம் முன்பே யாரும் சொல்லித் தெரியாது. அவர்களுக்கு அவர் பாட்டியோ தாத்தாவோ சொன்னது போல, எனக்கு இந்த வரலாறு உங்கள் வழியாக தெரிகிறது. இதனால், மேலும் எம் எஸ் அவர்களின் பாடல்களின் ஆழத்தை புரிந்துகொள்ள  முடிகிறது (அவரது சில பாடல்களை மறுபடியும் கேட்டபோது, அந்த ஆழமான இரைஞ்சல்கள் உருக்கின, எனக்கும் இசை பற்றி எதுவும் தெரியாது ரசிப்பதை தவிர.)

உங்கள் மீது சாடுபவர்கள் எல்லோரும், ‘நான் பிராமணன் அல்ல, நான் பிராமணன் என்பதால் சொல்லவில்லை’  என்கிறார்கள். நான் தந்த வட்டத்திற்குள் இல்லை என்று சொல்லிவிட்டு அந்த வட்டத்தை சுற்றி வருபவர்கள் ஆகத்தான் அவர்கள் எனக்கு தெரிகிறார்கள். உங்கள் இந்த கட்டுடைப்பை அசிங்கமான கோணத்தில் பார்ப்பவர்கள் எவரென்று இப்போது எனக்கு புரியவில்லை.

லோகியின் கட்டுரைக்கும், எம் எஸ் இன் கட்டுரைக்கும் பெரிய அளவில் எனக்கொன்றும் வித்யாசம் தெரியவில்லை. சமமாகவே அலசியுள்ளீர்கள். இரண்டிலுமே எனக்கு தெரிந்தது மீண்டெழும் கலைஞனின் மனமே. லோகியுடன் உங்களுக்கான நட்ப்பினாலும் அந்த துறையின் புரிதலினாலும் அது ஒரு நீண்ட கட்டுரை ஆனது. எம் எஸ் ஐ பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை வைத்து சிறிதாய் சொல்லி செல்கிறீர்கள். அவ்வளவே.

இந்த கட்டுடைப்பை என் போன்ற இன்றைய தலைமுறை முன் நிகழ்த்தியதால் பதறுபவர்களுக்கு சொல்லிக் கொள்கின்றேன். யாருக்குத் தான் இளம் வயதில் காதல் இல்லை. என் அம்மாவிற்குக் கூடத் தான் சிறு வயதில் ஏதாவது காதல் இருந்திருக்கும். அதானாலென்ன..அந்த பழைய ஏமாற்றங்கள் எனக்கு தெரிந்தால் என் அன்னையை இன்னும் என் மனம் விரும்பாதோ.. சிறு வயதிலிருந்தே உங்கள் வீட்டில் சொல்லி வளர்க்கப் பட்டதால் மட்டும் அவர் அன்னை ஸ்தானத்தில் இல்லை. எனக்கு அன்னை போன்ற எல்லோருமே அன்னையர் தான். அப்படித் தான் நினைக்கும் என் மனம். இந்திய மனம்.

நன்றி
ஆனந்த்

 

அன்புள்ள ஆனந்த்

இங்கே இப்போதுஎ ழுந்து வந்திருப்பது எம்.எஸ் குறித்த அந்தரங்கமான விஷயங்கள் வெளியாகலாமா என்ற கேள்வியே அல்ல. எம்.எஸ்ஸின் அந்தரங்கம் குறித்த ஓரளவு ஆதாரமுள்ள எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன. அவை அனைவருக்கும் தெரிந்தவை. எதையுமே ஜார்ஜ் அவர் நூலில் பொருட்படுத்தவில்லை. அவரது சமூகச்சூழலை அவர் எப்படி மீறிவந்தார் என காட்டும் ஆவணங்களை மட்டுமே அவர் பொருட்படுத்துகிறார். அது இந்தக் கடிதம் எழுதும் அனைவருக்குமே தெரியும். இது தங்கள் பலவீனங்களில் ஒன்று சொல்லிக்காட்டப்பட்டமைக்கு எதிராக மானசீக அக்ரஹாரங்களில் வாழ்பவர்களின் எதிர்ப்பு மட்டுமே

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்
ஜி.என்.பி.,எம்.எஸ். இருவரின் உணர்வுநிலைகள் குறித்தும் சமநிலையான புரிதலுடன் நீங்கள் எழுதியிருக்கிற கட்டுரை ஜார்ஜின் எழுத்து நோக்கத்தையும் தெளிவுபடுத்துகிறது.
பக்குவமான வாசகர்கள் உங்கள் எழுத்திலிருக்கும் நியாயத்தை நன்குணர்வார்கள்.கடிதங்கள்-அதன்வழியே வெளிப்படும் காதல் ஆகியன {புனிதம் சார்ந்தவையோ காதல் சார்ந்தவையோ} ஒரு சமூகத்தை உணர்ந்துகொள்ள நமக்குப் பயன்படும் தரவுகள். நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திக் கொள்வதும் நடுநிலையோடு
பார்ப்பதும் எந்த வகையிலும் அந்த மகாகலைஞர்களைக் கொச்சைப்படுத்தாது.இன்றிருக்கும் நடிகர்களை இதுபோல் எழுத முடியுமா என்கிற கேள்விதான்,எம்.எஸ். அவர்களை இன்றைய கலையுலகின் நிலைக்கு இழுத்து வந்து இன்றைய கலைஞர்களின் வரிசையில் அமர்த்தி அழகு பார்க்கிறதோ என்று தோன்றுகிறது.
 
-மரபின் மைந்தன் முத்தையா
 

அன்புள்ள முத்தையா

மிக எளிமையாக இது சுட்டுவது ஒன்றே, ஒரு சாதாரணமனான விமரிசனம் தன் சாதியைப்பற்றி வந்தால்கூட பொங்கி எழுவது. ஆனால் தன்னை சதிக்கு அப்பாற்பட்டவர்களாக காட்டிக்கொண்டு  வேறு ஒரு திசையில் அந்த கசப்பைக் கொட்டுவது. இதற்கு ‘எங்க சாதி ஒசந்த சாதி’ என்று ந்டனமிட்டுச்செல்லும் தேவர் பையன்கள் எவ்வளவோ மேல்

ஜெ

முந்தைய கட்டுரைகாந்திய தேசியம் 4
அடுத்த கட்டுரைகாந்திய தேசியம் 5