கலைச்சொற்கள் ஒரு வினா

வடிவமைள்ள ஜெ

நீங்கள் வெண்முரசிலும் பிற எழுத்துக்களிலும் கலைச்சொற்கள் உருவாக்கியதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். என் நண்பர்கள் அதைப்பற்றி கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டதைக்கேட்டு மனம் வருந்தினேன். தமிழில் ஏற்கனவே இருக்கும் வார்த்தைகளை கலைச்சொற்கள் என்று சொல்கிறீர்கள் என்கிறார்கள்.

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்,

கருத்துச் சொல்பவர்கள் யாரென்று பாருங்கள். பெரும்பாலும் ஒரு எளிய மொழியைக்கூட உருவாக்கமுடியாதவர்கள், ஒரு கருத்தைப்புரிந்துகொள்ளமுடியாதவர்கள் அவர்கள். இந்தக்கும்பல் எப்போதும் தமிழில் இருந்துகொண்டிருக்கிறது.

தமிழில் மட்டுமல்ல அனைத்து உலகமொழிகளிலும் கலைச்சொற்களை எழுத்தாளர்கள் உருவாக்கியபடியே இருக்கிறார்கள். பாரதி முதல் இந்த போக்கு தமிழில் தொடங்கி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்று நாம் எழுதும் சிந்திக்கும் மொழி என்பது அப்படி உருவானதேயாகும்.

மூன்று தளங்களில் செயல்படுபவர்களால் இந்தக்கலைச்சொல்லாக்கம் நிகழ்கிறது. 1 மொழிபெயர்ப்பாளர்கள் 2 சிந்தனைகளை அறிமுகம் செய்பவர்கள் 3 புனைவெழுத்தாளர்கள புதிய அயல்சிந்தனைகளை மொழியாக்கம் செய்தோ விவாதத்தின் ஒரு பகுதியாகவோ தமிழுக்குக் கொண்டு வரூபவர்கள் அந்தச்செயலின் இன்றியமையாத தேவையாக சொற்களை உருவாக்குகிறார்கள். தமிழில் தொடக்ககால மொழிபெயர்ப்பாளர்களான டி.எஸ். சொக்கலிங்கம், க.சந்தானம் போன்றவர்கள் பின்னர் சோவியத் மொழிபெயர்ப்பாளர்கள் ஏராளமான சொற்களை உருவாக்கினர். அதன்பின் தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவன மொழியாக்கங்கள் கலைச்சொற்களை உருவாக்கின

மணவை முஸ்தபா, அருளி போன்றவர்கள் பல்லாயிரம் கலைச்சொற்களை உருவாக்கினர். ஆனால் வெறுமே கலைச்சொற்களை மட்டும் உருவாக்கினால் அவை எவ்வகையிலும் நிலைகொள்வதில்லை. அவற்றை அறிவியக்கத்தின் ஒரு பகுதியாக ஆக்கவேண்டும். அக்கலைச்சொற்கள் நூல்கள், கட்டுரைகள் வழியாக அறிவியக்க விவாதத்தில் ஊடுருவவேண்டும். அவற்றை அவர்களால் செய்யமுடியவில்லை

வெ.சாமிநாத சர்மா, பெ.நா.அப்புசாமி போன்றவர்கள் மேலைச்சிந்தனைகளை தமிழுக்கு அறிமுகம் செய்தபோது ஏராளமான கலைச்சொற்களை உருவாக்கி நம் சிந்தனையை வடிவமைத்தனர்..

அதன்பின்னர் சிற்றிதழ் இயக்கம் உருவாகியது. சிற்றிதழ்கள் தொடர்ச்சியாக கலைச்சொற்களை உருவாக்கியபடியே உள்ளன. புதிய சிந்தனைகள் அவற்றுக்கான கலைச்சொற்கள் வழியாகவே உள்ளே வரமுடியும். க.நா.சு முதல் தமிழவன் க.பூரணசந்திரன்,நாகார்சுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி வரை தமிழில் அவ்வாறு உருவாக்கப்பட்ட கலைச்சொற்களைக் கொண்டே நாம் சிந்திக்கிறோம்.

இக்கலைச்சொற்கள் அச்சிந்தனைகள் பரவும்போது கூடவே பரவுகின்றன. உதாரணமாக டிஸ்கோர்ஸ் என்ற சொல்லை நாகார்ச்சுனன் சொல்லாடல் என்ற கலைச்சொல்லாக ஆக்கினார். விவாதம் அல்லது உரையாடல் என்ற மொழியாக்கம் ஏற்கனவே இருந்தது. ஆனால் அது அமைப்புவாதம் பின்அமைப்புவாதத்தில் உள்ள நுட்பமான மேலதிக அர்த்தத்தை சுட்டவில்லை. ஆகவே அது சொல்லாடல் என மொழியாக்கம் செய்யப்பட்டது.

இன்று தினத்தந்தியில் சொல்லாடல் என்ற சொல்லை பார்க்கிறேன். தினதந்தி ஆசிரியர்கள் பின்அமைப்புவாத கட்டுரைகளை வாசித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அச்சொல் வேறெங்கோ கிடைத்திருக்கும். தினத்தந்தியை வாசித்துவிட்டு அச்சொல்லை கையாளும் ஒரு கிராமத்து விவசாயி நாகார்ச்சுனனை அறிந்தே இருக்கமாட்டார். இப்படித்தான் சிந்தனைகள் சொற்கள் வழியாக பரவுகின்றன.

சூழியல் சார்ந்த சிந்தனைகளை தமிழுக்கு அறிமுகம் செய்யும் சு.தியோடர் பாஸ்கரன் தொடர்ச்சியாக உருவாக்கும் கலைச்சொற்களைப்பற்றி நான் ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். வெறும் பத்தாண்டுகளில் அவரது சொற்கள் இல்லாமல் நாம் சூழியல் குறித்துப்பேசமுடியாமலாகியிருக்கிறது. ஓர் எழுத்தாளனின் பங்களிப்பு என்பது இதுவே. கொஞ்சமேனும் வாசிக்கக்கூடிய எவரும் இதையெல்லாம் உணர்ந்திருப்பார்கள்.

கலைச்சொல்லாக்கம் என்பது சிந்தனைக்களத்தில் செயல்படுவதன் மூலமே நிகழ்த்தப்பட முடியும். அது மொழிப்பயிற்சி அல்ல. ஒரு மொழி புதிய சொல்லாட்சிகள் வழியாகவே நவீனப்படுத்தப்படுகிறது. அவ்வாறுதான் நாம் பேசும் தமிழ் உருவாகி வந்திருக்கிறது. எழுபதுகளில் அன்றைய சிந்தனையாளன் பேசிய மொழிக்கும் இன்றைய மொழிக்கும் உள்ள வேறுபாடு அவ்வாறு உருவானதே. அதை உருவாக்குபவர்கள் சிந்தனைக்களத்தில் தொடர்ச்சியாகச் செயல்படுபவர்கள். இதையெல்லாம் ஏதேனும் வகையில் பேசுவதற்கான அடிப்படை தகுதி என்பது சற்றேனும் எதையாவது வாசிப்பதுதான். அவர்களை மட்டும் நீங்கள் கவனியுங்கள்

தமிழ்ச்சொற்களில் மட்டுமே சிந்தனைகளை முன்வைக்கவேண்டும் என்ற விதியை எனக்குநானே போட்டுக்கொண்டு இருபத்தைந்தாண்டுகளாக எழுதி வருகிறேன். தமிழில் புழங்கும் கலைச்சொற்களை விரிவாக அறிமுகம் செய்கிறேன். தேவையான இடங்களில் உருவாக்குகிறேன். இது தமிழில் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய அறிவுசெயல்பாட்டின் பகுதி.என் கலைச்சொற்கள் அல்லது மொழி பற்றிய ஐயங்களாக தொடர்ச்சியாக கலைச்சொற்களைப்பற்றி பலரும் கேட்டு வருகிறார்கள். நான் விரிவாகவே விளக்கமும் எழுதியிருக்கிறேன். ஆர்வமிருந்தால் வாசியுங்கள்

ஜெ

கலைச்சொல்லாக்கம் கடிதம்

கலைச்சொல்லாக்கம் ஆறுவிதிகள்கலைச்சொற்கள் விதிகள்

கலைச்ச்சொற்களின் விதிகள்.

முந்தைய கட்டுரைவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28