குடும்பத்தில் இருந்து விடுமுறை

arun

 

கணிப்பொறிப்பயிற்சி என்று அருண்மொழிக்கு ஒருவாரம் மதுரைக்குப் போகவேண்டியிருந்தது. வழக்கமாக தபால்துறை போன்ற பெரிய நிறுவனங்களில் தங்குமிடம் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். இருந்தாலும் பதற்றத்துடன் வந்து ‘என்ன செய்றது ஜெயன்?’ என்றாள்.’என்னமாம் செய்’ என்று பேரன்புடன் பதில் சொன்னேன். அவள் எதையும் திறம்படச்செய்பவள். அதற்கு முன் ஒரு ‘பேதை’ பாவனையை மேற்கொள்வது மிகவும் பிடிக்கும் அவ்வளவுதான்.

அரைமணிநேரம் கழித்து ‘டிராவல்ஸ் கூப்பிட்டு டிக்கெட் சொல்லிட்டேன்” என்றாள். மேலும் இருபது நிமிடம் கழித்து ”அங்க தங்கறதுக்கு ரூம் சொல்லியாச்சு. போஸ்டாபீஸ் ரெஸ்ட்ஹவுஸிலேயே சொல்லிட்டேன். மதுரையிலே ஒருத்தர் தெரிஞ்சவர் இருக்கார்” மேலும் அரைமணிநேரம் கழித்து ”துணைக்கு தக்கலையிலே இருந்து ஒருத்தவங்க வராங்க”. அங்கே எடுபிடிவேலைக்குக் கூட ஆள் தயார் செய்தபின்னர்தான் கிளம்பினாள்.

கிளம்பும்போது கண்ணில் அப்படி ஒரு சோகம் ”நீ இங்க என்ன செய்வே? தோசை மாவு நெறைய அரைச்சு வச்சிருக்கேன். சாம்பார் சட்டினி ரசம் எலலமே ப்ரிட்ஜ் நெறைய இருக்கு. மொளகாப்டிய தேடாதே, மேல் ஷெல்பிலே பாரு… பாத்திரங்களை அப்பப்ப கழுவி வச்சிரு…என்ன பண்ணபோறியோ என்னவோ” என்றெல்லாம் புலம்பல். ”நான் வேணுமானா அடுத்த மாசம் போறேன்னு சொல்லிடவா?” .நான் ”அடுத்த மாசம்னாலும் நீ போய்த்தானே ஆகணும்?” என்றேன். ”ஆமா…” என்றாள்.

போகும்போது ரயிலில் இருந்தே எஸ்.எம்.எஸ். ”பாப்பாவுக்கு திஙக்கிழமை வெள்ளை டிரெஸ். அவளை டைம்டேபிள் பாத்து எடுத்து வைக்கச்சொல்லு…அஜி கிட்ட கேண்டீன்ல சாப்பிடவேண்டாம்னு சொல்லு” ஆற்றாமல் மீண்டும் ·போன் ”துணியெல்லாம் ராத்திரியே அயர்ன் பண்ணி வைச்சிரு ஜெயன், காலையிலே கரெண்ட் இருக்காது” அதன்பின் உடனே அடுத்த ·போன் ”ராத்திரியே மோட்டார் போட்டிடு. காலையிலே கரெண்ட் போயிருது”

போய் சேர்ந்ததும் ”எப்படா திரும்புவோம்னு இருக்கு…இங்க பிடிக்கவேயில்லை” என்று ஒரு பெருமுச்சு ”ரூமெல்லாம் நல்லா இருக்கா?” ”அதெல்லாம் சூப்பரா தான் இருக்கு..ஆனா.. எனக்கு ஒண்ணுமே பிடிக்கலை எப்படா கெளம்புவோம்னு இருக்கு.. .” அதெல்லாம் ஒரு மென்மையான பாவனைகள் என எனக்குத்தெரியும். நான் அவளை நன்கு அறிவேன். ரயிலில் போகும்போதே துணைக்கு வரும் பெண்ணின் ஆருயிர் தோழியாக ஆகியிருப்பாள். அடுத்த முப்பது வருடம் அந்த நட்பு நீடிக்கும். போய் இறங்கியதுமே ஒட்டுமொத்த பெண்களுக்கும் பிடித்தமானவளாக ஆகி விதவிதமாக வேடிக்கைபேசி கிண்டல்செய்து சிரித்து குலாவ ஆரம்பித்திருப்பாள். சட்டென்று அங்கே அத்தனைபெண்களுக்கும் ஒரு கல்லுரி மனநிலை வந்துவிட்டிருக்கும்.

ஆனால் ஒருவேளை அதெல்லாம் தப்போ, சரியான குடும்பத்தலைவிகள் அப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ என்ற சந்தேகம் காரணமாக அடிக்கடி ·போன் போட்டு ”ஒருமாதிரி இருக்கு. பிள்ளைங்கள்லாம் எப்டி இருக்காங்க?பாப்பா என்ன பண்றா?” என்று கேட்டுக்கொள்வாள்.

போனமுறை பயிற்சிக்குச் சென்றபோது பெண்களை கூட்டிக்கொண்டு  மீனாட்சியம்மனை நாள்தோறும் தரிசித்து, அழகர்கோயில் திருமோகூர் எல்லாம் சுற்றி, கடைசிநாள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் சென்று , விளக்குத்தூண் பகுதி கடைகளில் அலைந்து திரிந்து சுங்கிடி புடவை வாங்கி ,கடைசியில் ஆட்டோகிராப் புத்தகம் முழுக்க ‘என் உயிரினும் உயிரான அருண்மொழிக்கு’ என்று சகபெண்களின் கையெழுத்துக்கள் பெற்று வந்து சேர்ந்தாள். ஒருவாரம் அதே பேச்சு. தினசரி ·போன்கால்கள். ”ஆ…நாந்தான் அருண்மொழி.. கீதா எப்டிடீ இருக்கே? ஒருவாரமா உன் நெனைப்புதான்” என்றெல்லாம் சினேகக் கிரீச்சிடல்கள். ஒருவருடமாகியும் நட்புகள் நீடிக்கின்றன. இப்போதும் அதேதான் நடக்கும்.

கல்லூரிப்பெண்ணாக அருண்மொழி குதூகலமானவள். அவளை சந்திக்கவரும் பழைய தோழிகள் எல்லாருமே என்னிடம் ‘காலேஜ்லே அருண்மொழிய சுத்தித்தான் இருப்போம்… எப்பவும் பேசிட்டே இருப்பா…நெறைய புக்ஸ் படிப்பா’ என்றார்கள். திரும்பவும்  கல்லூரிநாட்கள் தேவைப்படுகின்றன போலும்.

திருமணமாகியதும் ஒரு வீடே பெண்களின் பொறுப்புக்கு வந்துவிடுகிறது. அருண்மொழிக்கு கூடுதலாக ஒரு அலுவலகம். அவள்கீழே எட்டுபேர் வேலைசெய்கிறார்கள். அதி உற்சாகத்தால் எதையும் எப்போதும் செய்யத்தயாரான இரண்டு பிள்ளைகள், கிறுக்குத்தனமான கணவன், சதா அன்புக்கு ஏங்கும் பூதாகரமான கைக்குழந்தைகள் போல இரு நாய்கள் என்று அவளது சுமைகள் மிக அதிகம்.  சட்டென்று எல்லாவற்றையும் கழற்றிப்போட்டுவிட்டு சுதந்திரமாக இருக்கிறாள்.

முக்கியமாக சமையல்பொறுப்பு இல்லை. தினமும் எதைச் சமைப்பது என்ற கேள்வி எதையாவது சமைத்தாகவேண்டுமென்ற கட்டாயம். அருண்மொழிக்கு எந்த ஓட்டல் சாப்பாடும் பிடிக்கும், அவள் சமைக்கவில்லை அல்லவா? மனமுவந்து டிப்ஸ் கொடுப்பாள். காலையில் எழுந்ததும்  இன்றைக்குச் சமைக்கவேண்டாம் என்பதே ஜிலுஜிலுப்பாக இருக்குமாம். சாயங்காலம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சுதந்திரம் பகல் முழுக்க கூடவே படபடத்து சிறகடிக்கும்.

எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் இதெல்லாம் தேவைப்படுகிறது. பலபெண்கள் விசித்திரமான கூச்சம் காரணமாக அதை அவர்களே ஒளித்துக்கொள்கிறார்கள். இப்படி ஓர் கட்டாயம் உருவாகாமல் அப்படி ஒரு ‘குடும்பப் பொறுப்பில் இருந்து விடுமுறை’யை பெண்கள் அடைய முடிவதில்லை. என்னைக்கேட்டால் வேலைபார்க்கும் பெண்களாவது ஏழெட்டுபேர் கூடி ஏதாவது பாதுகாப்பான சிறு பயணங்கள் ஏற்பாடு செய்துகொள்ளலாம். அங்கே கணவன் குழந்தைகள் வீடு எல்லாவற்றையும் மறந்து ஒருவாரம் கல்லூரிப்பெண்ணாக இருந்துவிட்டு வரலாம். அவர்களின் மனதுக்கு ஒரு புதுக்குளியல் போல அது புத்துணர்வளிக்கும்

[ மறுபிரசுரம். முதல்பிரசுரம் 2009 நவம்பர்]

முந்தைய கட்டுரை1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30