அம்மா வந்தாள் நாவலை மீண்டும் படிக்க நேர்ந்தது, பதினைந்து வருடம் கழித்து. இது மூன்றாவது முறை. இம்முறை தி.ஜானகிராமனின் எண்ண ஓட்டச் சித்தரிப்புகள் சற்று சலிப்பூட்டின. உரையாடல்களில் ஒரே பாணியை பல இடங்களில் பல கதாபாத்திரங்களில் கடைப்பிடிக்கிறாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரத்தின் ஒரேயொரு அம்சத்தை மட்டுமே அவர் கவனிக்கிறார் என்ற எண்ணமும் வலுவாக உருவாகியது. ஆனாலும் இப்போதும் அது சுவை குன்றாத முக்கியமான ஆக்கமாகவே தோன்றியது, அப்படி தொடர்வாசிப்புக்கு ஈடுகொடுக்கும் தமிழ்ப் படைப்புகள் உண்மையில் மிகவும் குறைவேயாகும்.
அம்மா வந்தாள் நாவலின் தொடக்கமே நுட்பமான சில எண்ணங்களை உருவாக்கியது. அப்புவுக்கு இந்து மீது ரகசிய ஈர்ப்பு உண்டு என்பது நாவலில் நிறுவப்பட்டுவிட்ட ஒன்று. பவானியம்மாள் அவளை தனியாக, அப்புவின் பொறுப்பில் விட்டுவிட்டு கல்யாணத்துக்குப் போயிருக்கிறாள். அந்த நாள் அப்புவுக்கு முக்கியமானது. எந்த ஆணின் மனதையும் படபடக்கச்செய்யகூடியது அந்த தருணம். ஆனால் அப்பு காவேரிக்கரையில் கிடந்து காவேரியின் அழகை, அதன் மோனத்தை ரசித்துக் கொண்டு அங்கே அவர் வந்து சேர்ந்த நாட்களை எண்ணிக் கொண்டு அவளைப்பற்றிய நினைவே இல்லாமல் இருக்கிறான்.
ஒரு கோணத்தில் இதை புனைவைதொடங்கும் சாதாரணமான முறை என்று சொல்லலாம். கதைச்சூழலையும் கதைநாயகனையும் இயல்பாக அறிமுகம் செய்வது தி.ஜானகிராமன்னின் நோக்கம். கதைநாயகனின் அந்தரங்க நினைவோட்டத்தில் கதையை தொடங்குவது இன்னும் வசதி- அவனுடைய குணச்சித்திரத்தை காட்டிவிடலாம். அவன் அங்கேவந்ததுதான் கதையின் தொடக்கப்புள்ளி என்பதனால் அதைப்பற்றிய நினைவோட்டமாக இருந்தால் இன்னும் நல்லது. மேலும் தி.ஜானகிராமன்னுக்கு காவேரிக்கரை சார்ந்தஒரு மோகம் உண்டு. காவேரியை வருணித்தால் அவருக்கு கதை சொல்லும் மனநிலை இயல்பாக படிகிறது.
ஆனால் புனைவின் கோணத்தில் நோக்கினால் அந்த சிந்தனைகளுக்கு வேறு ஒரு தளம் அமைகிறது. இந்து அங்கே தனியாக இருப்பது அப்புவுக்கு தெரியும். அதை அவன் ‘நினைக்காமல்’ இருக்க முயல்கிறான். அதனால்தான் அவன் காவேரியையும் இளமைப்பிராயத்தையும் பற்றி எண்ணிக் கொள்கிறான். முடிந்தவரை தாமதமாக வருகிறான். அதில் அவனது எதிர்பார்ப்பும் அச்சமும் கலந்திருக்கிறது.
தி.ஜானகிராமன் எழுதியதற்கு முதலில் சொன்னவை காரணமாக இருக்கலாம். ஆனால் இரண்டாவதாகச் சொன்ன வாசிப்பை நிகழ்த்துவதற்கு நாவல் முழுக்க இடமிருக்கிறது. இதுவே அந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது. தமிழில் நுண்ணிய அடித்தளங்கள் கொண்ட மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று அம்மா வந்தாள்.
இந்துவுக்கு அப்பு மேல் உள்ள ஈடுபாடு அதுவரை எபப்டி அப்புவுக்கு தெரியாமல் இருந்தது என்ற கேள்வியும் நாவலை வாசிக்கும்போது எழுகிறது. அவள் அங்கேயே தான் இருக்கிறாள். அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். பவானியம்மா இல்லாத இரவில் இந்து சற்றே அத்து மீறுகிறாள், சரி. ஆனால் அவள் இருக்கும்போதும் பிறகு அப்படி அத்து மீறுகிறாளே? ஒரு பார்வை ஒரு சிரிப்பில்கூட அப்புவுக்கு இந்துவின் மனம் தெரியவில்லையா?
அந்த வினாவுக்கு நாவல் அளிக்கும் பதில் அப்பு கிளம்பிச் செல்கிறான், அவன் வராமலிருந்துவிடக்கூடும் என்ற எண்ணத்தில் இருந்தே அந்த வேகம் இந்துவுக்கு வருகிறது என்பதுதான். உண்மையில் பவானியம்மாவுக்குக் கூட அது உள்ளூர தெரிந்திருக்கலாம். நாவலின் இறுதியில் அவள் தன் வாழ்நாள் கனவான வேதபாடசாலை என்பதையே விட்டுவிட்டு இந்துவை பூடகமாக அப்புவின் மனைவியாக ஆக்குகிறாள். அவளுக்கு இந்துவின் காதல் சற்றும் அதிர்ச்சியை அளிக்கவில்லை. உள்ளூர அப்புவுக்கு இந்துவின் மீதான கவர்ச்சி இருந்துகொண்டிருப்பதை பிறகுநாம் காணும்போது அந்த காதல் பரிமாற்றம் எப்படியோ அங்கே நிகழ்ந்திருக்கிறது என ஊகிக்க முடியும்.
நாவலில் தண்டபாணியின் குணச்சித்திரம் அதேபோல மிகவும் பூடகமானது. அவரது வேதாந்த உபன்யாசம் மூலம் நாம் அவரை முதலில் காண்கிறோம்.ஆனால் அவரது ஆளுமையில் அந்த அம்சமே இல்லை. அது மனைவிமீதான காமமும் பக்தியுமாக அடிபணிந்து நிற்பது. அதை அவரே அஞ்சித்தான் வேதாந்தத்தால் மூடிக் கொள்கிறார். அப்புவிடம் அம்மாவின் தொடர்பு குறித்து பேசும்போது அவர் ‘சும்மா வேடிக்கைதான் பாக்க முடியும்’ என்று சொல்லும் வேதாந்தம் அவரே உருவாக்கிக் கொண்ட ஒரு தற்காப்பு ஆயுதம் மட்டுமே.
அம்மாவின் குணச்சித்திரத்தைச் செதுக்க தி.ஜானகிராமன் அதிக கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அலங்காரம் என்ற பேரில் தொடங்கி. அப்பு தண்டபாணி இருவரின் கோணத்திலும் அம்மாவை அறிமுகம் செய்கிறார். அப்புவுக்கு அம்மா ஒரு கம்பீரமான பெண். பிழம்பு. தண்டபாணி அவளிடம் குழந்தைத்தன்மையும் கம்பீரமும் கலந்த ஒரு கவர்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறார்.
நாவலின் உச்சமான ஒரு மௌனப்புள்ளி , இந்துவை அணைக்கையில் அப்பு அம்மாவை எண்ணுவதுதான். இதுவே இந்நாவலை சென்றகாலங்களில் ஈடிபஸ் உளச்சிக்கல் என்ற கோணத்தில் பலரை ஆராயச்செய்தது. இந்துவிடம் இருந்த அலங்காரத்தின் கூறு என்ன? அதை தி.ஜானகிராமன் சொல்வதில்லை. தோற்றத்தில் அவர் அவர்களை மிகத் தெளிவாக வேறுபடுத்துகிறார். இந்து கொடிபோல. அலங்காரம் மரம் போல.
ஆனால் இந்து, அலங்காரம் இருவரும் தி.ஜானகிராமன் மீண்டும் மீண்டும் உருவாக்கிய இரு கதாபாத்திரங்கள்தான் என்பதை நாம் கவனிக்கலாம். ‘செம்பருத்தி’யில் வரும் பெரியஅண்ணிதான் அலங்காரம். சின்னஅண்ணிதான் இந்து. செம்பருத்தியின் புவனா இந்த நாவலிலும் வந்து போகிறாள்– அப்பு பெண்பார்க்கச் சென்ற இடத்தின் பெண்ணாக.
அலங்காரம் இந்து இருவரிடமும் இருக்கும் பொது அம்சம் தாபம்தான் என்று படுகிறது. எண்ணையை எட்டித்தீண்டும் தீத்தழல் போல அவர்கள் ஆணை எட்டிப் பிடித்துக்கொள்கிறார்கள். அந்த வேகமே பொதுவான அம்சம். அப்படியானால் அம்மாவின் உள்ளே எரிந்த காமத்தை அப்பு முன்னரே அறிந்திருந்தானா? நாவலில் அபப்டி இல்லை. ஆனால் அம்மாவைப் பற்றிய அப்புவின் எண்ணங்களில் எல்லாம் அவளது வேகம் பதிவாகியிருக்கிறது. அது இச்சா சக்தியின் வேகம். அதுவே காமம். அதுவே இந்துவிலும் எரிந்தது.
அந்தக் காமம் வெறுமொரு ஆராதகனாக இருக்கும் தண்டபாணியை தாண்டி சிவசு என்ற இலக்கை நோக்கிச் சென்றதா? இந்நாவலில் சிவசுவிடம் அலங்காரம் கண்டது என்ன என்ற வினா மிக முக்கியமானது. தண்டபாணியின் செயற்கைத்தனம், அவரது உலகமறுப்பு அலங்காரத்தை அவரை விட்டு விலகச் செய்ததா என்ன? சிவசு மிக ஆழம் இல்லாத மனிதன். ஆனால் செயல்வேகமே உருவானவன். அதுதான் அவனைநோக்கி அலங்காரத்தை ஈர்த்திருக்க வேண்டும்.
தண்டபாணி மகனிடம் சொல்கிறார், பெண்ணுக்கு எல்லாமே வேண்டும். ஆண் முரடனாகவும் இருக்கவேண்டும் சொன்னபேச்சும் கேட்கவேண்டும். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டும் புகழும் வேண்டும். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான் என்கிறார். கல்யாணமே செய்யவேண்டியதில்லை என அப்பு சொல்கிறான். கை தப்புசெய்கிறது என்பதற்காக கையை வெட்ட முடியுமா என்கிறார் தண்டபாணி.
அலங்காரத்தை கண்டு கொள்வது அப்புவுக்கு ஒரு சுயதரிசனம். அவன் இந்துவிடம் மீள்கிறான். அதை நுட்பமாக புரிந்துகொண்டுதான் அலங்காரம் சொல்கிறாள் ”நீயும் அம்மா பிள்ளைதான்’ என்று.
தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்களிடம் இருக்கும் ஒரு முக்கியமான கூறு குறித்து ஒரு அவதானிப்பு என்னிடம் உண்டு. அந்த அவதானிப்பு இந்நாவலிலும் உறுதியாகியது. அவர்களுடைய நுண்ணுணர்வு கண் சார்ந்தது அல்ல,காது சார்ந்தது. இந்நாவலில் தி.ஜானகிராமன் சென்னை ,காவேரிக்கரை இரண்டையும் முழுக்க முழுக்க காது உணரும் சித்திரமாகவே எழுதிக் காட்டுகிறார். காட்சிச் சித்திரங்கள் அதை துணைகொள்கின்றன. உரையாடலும் ஒரு காதுச் சித்திரமே. மௌனி,லா.ச.ரா முதல் யுவன் சந்திரசேகர் வரை இந்த அம்சம் தொடர்கிறது.
காது உணரும் உச்சமாக இசையைச் சொல்லலாம். இப்படைப்பாளிகளிடமிருந்து நம்மால் இ¨சையுலகை பிரித்துப் பார்க்க முடியாது. மோகமுள் முழுக்கமுழுக்க இசையைச் சார்ந்தது என்றால் இந்நாவல் அந்த இடத்தில் ஒலியை வைத்திருக்கிறது.
தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்களிடம் இருக்கும் ‘அம்பாள்’ என்ற ஆழ்படிமம் பற்றி நான் ஏற்கனவே தி.ஜானகிராமன் பற்றி எழுதும்போது பேசியிருக்கிறேன்– [ஏழு விமரிசனநூல்கள்] அழகும் உக்கிரமும் கலந்த பெண். கொல்லும் கவர்ச்சி. அச்சமூட்டும் காமம். அந்த சித்திரங்களை நாம் தி.ஜானகிராமன் போலவே மௌனியிடமும் லா.ச.ராவிடமும் காணலாம். அலங்காரம் அந்த பெண் சித்திரங்களில் முக்கியமான ஒன்று. அதுவே அம்மா வந்தாள் நாவலின் வெற்றி
[அம்மா வந்தாள். தி.ஜானகிராமன். ஐந்திணை பதிப்பகம்.சென்னை]
[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2008 மே]