இருகவிஞர்கள்

வீரான்குட்டி இன்று வடகரையில் இருந்து தொலைபேசி ‘நாம எப்ப மறுபடியும் கூடப்போறோம்?’ என்றார். நான் இதுவரை பதிமூன்று மலையாள தமிழ் கவிதைக்கூடல்களை நடத்தியிருக்கிறேன். அவை உற்சாகமான, உத்வேகமான கவிதைச் சந்திப்புகளாகவே அமைந்திருந்தன. ஆனால் இப்போதும் அவற்றைப்பற்றி எதிர்மறையான விமரிசனங்கள் மலையாளத்தில் நீடிக்கின்றன. மலையாளக்கவிதையின் தனித்தன்மையை தமிழ் கவிதை அழகியலைக் கொண்டு சிதைக்க முயல்கிறேன் என்கிறார்கள்.

”’ஆனால் உங்கள் ‘இடபெடல்’ மூலம் மலையாளக்கவிதை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது என்பதை எவருமே மறுக்க முடியாது. நீங்கள் விமரிசனம்செய்த அந்த இயல்புகள் எதுவுமே இன்றைய மலையாளக் கவிதையில் இல்லை. கவிதையை பாடும் கவிஞர்களின் காலம் வழக்கொழிந்துவிட்டது.” என்றார் வீரான்குட்டி.

அது உண்மை. பொதுவாக ஒரு சூழலில் அழகியல் விவாதங்களை அனைவரையும் கடுமையாகச் சீண்டும் விமரிசனங்கள் மூலம் மட்டுமே உருவாக்க முடியும். அந்த விமரிசனத்தில் உண்மை இருந்தால், அதைச் சொல்பவன் சலிக்காமல் வாதிடவும் தயாராக இருந்தால், மெல்ல மெல்ல அந்த தரப்பு வலுப்பெறும்.நிறுவப்படும். என்ன சிக்கல் என்றால் அதன்பின்னரும்கூட அந்தக் கசப்புகள் நீடிக்கும் என்பதே.

ஊட்டி கவிதைச் சந்திப்புகள் அவற்றில் பங்குகொண்டவர்களுக்கு இனிய நினைவாகவே நீடிக்கின்றன. அவர்கள் என்னைக்கூப்பிட்டு மீண்டும் நிகழ்ச்சியை வைக்கச்சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். குருகுலத்தில் இருந்தும் சொல்கிறார்கள். என்ன சிக்கல் என்றால் எனக்கு சலிப்பு. ஒரு கவிதையரங்கை உருவாக்க நான் ஒருமாதம் உழைக்கவேண்டியிருக்கிறது. கவிதைகளை மொழியாக்கம் செய்வது பெரும்சிக்கல் இருபது கவிஞர்களின் பத்து கவிதைகள் வீதம் இருநூறு கவிதைகள்! அதன்பின் கடிதங்கள், பதில்கள்…

 

பி.பி.ராமச்சந்திரன், ராஜ சுந்தர ராஜன்: புகைப்படம் விஷ்ணு பிரசாத்

என்ன காரணத்தால் எங்கள் கவிதைக்கூட்டங்கள் இனிமையாக அமைகின்றன? முதல் விஷயம் பிரிந்துசெல்லும்போது உபயோகமாக காலம் சென்றது என்ற உணர்வு உருவாவதுதான். கவிதைக்கு வெளியே அர்த்தமில்லாமல் விவாதம் நகர்வதற்கு அனுமதிப்பதில்லை.  செறிவான விவாதம் மட்டுமே நிகழும்.

இரண்டாவதாக ஜனநாயகப்பண்பை கடைப்பிடித்து அனைவரையும் அழைத்து உள்ளே கொண்டுவருவதில்லை. ஒத்த நுண்ணுணர்வு கொண்டவர்களே வருவார்கள். சம்பந்தமில்லாமல் ஒருவர் வந்தால்கூட அவர் தன் முக்கியத்துவமின்மையால் சீண்டப்பட்டு  மொத்த உரையாடலையும் சீரழித்துவிடுவார்.

கவிதை ஒருங்குகூடலில் ஒருவிஷயம் கவனித்திருக்கிறேன், கவிதைகளில் பொதுத்தன்மை உடையவர்கள் கவிதையரங்குக்கு வெளியே ஒன்றாக சேர்ந்துவிடுகிறார்கள். பி.ராமனுக்கும் யுவன் சந்திரசேகருக்கும் இடையே அப்படி ஒரு உறவு உருவாகியது. வந்த முதல்முறையே ராஜசுந்தர ராஜனுக்கும் பி.பி.ராமச்சந்திரனுக்கும் இடையே ஓர் நல்லுறவு உருவாகியது. 

 
பி.பி.ராமச்சந்திரன் ராஜசுந்தரராஜனைப் போலவே மென்மையான அந்தரங்கமான அதேசமயம் பிரகாசமான கவிதைகளை எழுதுபவர். அவரது ஒரு கவிதையின் தலைப்பே ‘எளிமை’ [லலிதம்] என்றுதான். மறைபொருள்கள் இல்லாத கவிதைகள். அதே பாணிதான் ராஜ சுந்தரராஜன் கொள்வதும். பூடகங்களும் புதிர்களும் இல்லாத நேரடியான கவிதைகள் சாலையோரம் பூத்திருக்கும் காட்டுமலர்களின் எளிமையே அழகாக ஆகும் மகத்துவம் கொண்டவை.

 

 

 

சவால்

பி.பி.ராமச்சந்திரன்

ஜி. எட்டு தேசத்தலைவர்களின்
உச்சிமாநாடு நடந்த வட்டமேஜையில்

தட்பவெப்ப நிலைமாற்றம் குறித்த
முதல்கட்ட அறிக்கையின் மீது

உலகத்தர பாதுகாப்புமுறைகளின்
கண்களை ஏமாற்றி

அசாதாரண உடல் திறனுடன்
பேப்பர் வெயிட் வடிவில்
பதுங்கியிருந்த ஒரு உயிர்

சட்டென்று
மேஜைமேல் ஏறி
உலகை அதிர்ச்சியடையச்செய்தபடி
இவ்வாறு எதிர்ப்புக்குரல் எழுப்பியது
‘க்ராக்-ரோம் ! போக்-ரோம் ! க்ராக்-ரோம்!’

செப்டெம்பர் பதினொன்றின்
நடுங்கும் நினைவுகளை எழுப்பிய
இந்த கலகக்காரன்
திருநாவாய ஊருக்குக்கு பக்கம்
கொடைக்கல் மிஷன் ஆஸ்பத்திரி வளவில்
பாதுகாக்கப்பட்ட நினைவாக இருக்கும்
மணிக்கிணறில் இருந்து வந்த
ஒரு தற்கொலைப்போராளி என்று சொல்லப்படுகிறது!

 

துண்டிப்பு

ராஜசுந்தர ராஜன்

மழெ இல்லே தண்ணி இல்லே

ஒரு திக்கிலே இருந்துங்
கடுதாசி வரத்து இல்லே

அடைக்கலாங்குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலே

நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்

முந்தைய கட்டுரைபழசி ராஜா தள்ளிவைப்பு
அடுத்த கட்டுரைநெடுங்குருதி 3