மூன்று வேட்பாளர்கள் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

எனக்கு முற்றிலும் உடன்பாடில்லாத உங்களின் கருத்து மிக, மிக அபூர்வமானது. பிறரால் தூற்றப்பட்ட உங்களின் கருத்துக்கள் அனைத்துமே முற்றிலும் எதிர்பாராத, தூற்றுகின்ற எளிய மனிதர்களால் சிந்திக்கவியலாத கோணத்திலிருந்து கூறப்பட்டிருக்கும். எனது சிந்தனையை புரட்டிப் போட்ட, தூக்கம் வராமல் யோசிக்க வைத்த பல கட்டுரைகள் உங்களுடையது. ஏறக்குறைய நானொரு ஜெயமோகனதாசன் என்பது பலரும் அறிந்த ஒன்றே.

இருப்பினும் உங்களின் சமீபத்திய “மூன்று வேட்பாளர்கள்” கட்டுரையை என்னால் ஜீரணிக்க இயலவில்லை என்பதே உண்மை. நான் பிறந்த என் தேசத்தின் மீது மாளாக் காதல் கொண்டவன் என்னும் முறையில் நீங்கள் மிகவும் உயர்ந்த முறையில் எடுத்துக் கூறியிருக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலும், ஞாநியும், உதயகுமாரும் அதற்குத் துளியும் தகுதியற்றவர்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். கொள்ளையடிக்கும், சுரண்டலை நியாயப்படுத்தும் இன்றைய இந்திய அரசியல் முறைக்கு மாற்று தேவை என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் அந்த மாற்றத்தை அர்விந்த் கெஜ்ரிவால் போன்ற அரைவேக்காட்டு மனிதர்களால் கொண்டுவரவே இயலாது என்பதுவே நிதர்சனம். ஆரம்பத்தில் பிற படித்த இந்தியர்களைப் போலவே கேஜ்ரிவாலை ஆதரித்தவன். ஆனால் ஒரு முதலமைச்சராக கேஜ்ரிவால் செய்த கோமாளித்தனங்களும், அவரைச் சுற்றியிருக்கும் தேசவிரோத நபர்களும், வெளி நாட்டுப் பண உதவிகளும் கேஜ்ரிவாலின் மீதான எனது நம்பிக்கையை முற்றிலுமாக அழித்துவிட்டன. இதனைக் குறித்து நிறைய எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் நீங்கள் அறிந்ததுதான்.

அதே சந்தேகம் எனக்கு உதயகுமாரின் மீதும் இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானது என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை. ரஷ்யாவிலிருந்தோ அல்லது வேறு ஒரு நாட்டிலிருந்தோ இறக்குமதி செய்யப்படும் எந்த ஒரு அணு உலையும் சந்தேகத்திற்குரியதே. எனவே அதனை எதிர்த்துப் போராடும் கூடங்குளம் மக்களை நான் ஆதரிக்கிறேன். அதே சமயம் உதயகுமார் போன்றவர்களின் தீவிரவாத கிறிஸ்தவப் பின்னனியும் ஆராயப்பட வேண்டும். உதயகுமார் போன்றவர்களின் நோக்கம் சந்தேகத்திற்குரியது.

ஞாநியைப் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. தோற்றுவிட்ட ஒரு சித்தாந்தத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பரிதாபகரமான மனிதர். குட்டும், ஷொட்டும் வைத்து அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகள் சுவராசியமானவை என்பதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

இவர்களால் அல்லது இவர்கள் போன்றவர்களால் இந்தியாவிற்கு ஒரு ‘திடீர்’ மாற்றத்தைக் கொண்டு வர இயலும் என்று என்னால் நம்ப இயலவில்லை. கிடைத்த வாய்ப்பில் சத்தமும், கூச்சலுமிடுவதனைத் தவிர வேறொன்றும் நிகழப்போவதில்லை. மேலும் ஏ.கே. அந்தோணி, அச்சுதானந்தன் போன்றவர்கள் நேர்மையானவர்கள் என்று நீங்கள் சொல்வதுவும் என்னால் ஏற்றுக் கொள்ளவியலாத ஒன்றே. அதற்கான காரணங்கள் பல உண்டென்றாலும், இங்கு நான் எழுதி என்ன ஆகப்போகிறது?

பெரும் அரசியல் கட்சிகளுக்கு இவர்களால் சிறிதளவாவது அச்சம் ஏற்பட்டிருப்பது ஒரு வெற்றிதான். அந்தக் கருத்துடன் முற்றிலும் நான் உடன்படுகிறேன்.

உங்களுக்குத் தெரிந்த, எனக்குத் தெரியாத பின்னனித் தகவல்கள் உங்களின் இந்தக் கட்டுரைக்குக் காரணமாயிருக்கலாம் என்று நான் நம்புகிறேன். அப்படி ஏதாகிலும் இருந்தால் தயவுசெய்து பகிரும்படி வேண்டுகிறேன். என்னைத் திருத்திக் கொள்ள உதவும்.

நன்றி.

அன்புடன்,
நரேந்திரன்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
அடுத்த கட்டுரைஏன் தமிழ்ச்சொற்கள்?