«

»


Print this Post

மதம் ஆன்மீகம் அவதூறு- ஓர் எதிர்வினை


அன்புள்ள ஜெயமோகன்,

தங்களது இந்தப் பதிவில் ( மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம் )  “..எனக்கு கிறித்தவ திருச்சபை பணம் தந்திருக்கிறது என்று வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறீகள்.  இந்த விஷயம் எனது பதிவில் பெயரிலியாக ஒருவர் இட்ட மறுமொழியைப் பற்றியது.. 

அந்த மறுமொழியுடன் நான் சுத்தமாக உடன்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக,  பிரசுரிக்கமுடியாத unparlimentary words உடன் வரும் மறுமொழிகள் தவிர்த்து, மற்ற எல்லா மறுமொழிகளையும் பதிப்பிப்பது என் வழக்கம், கொள்கை. இந்த மறுமொழி அங்கு இருப்பதன் காரணமும் அதுவே.  தங்களுக்கு இதில் ஆட்சேபம்  என்றால்  அந்த மறுமொழியை நீக்கி விடுகிறேன் – தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.  (இதற்கு முன்பும் சில தடவைகள் இத்தகைய மறுமொழி நீக்கங்கள் செய்திருக்கிறேன்). 

கருத்துக் கூறியவர்களில் ஹரி கிருஷ்ணன், சேதுபதி அருணாச்சலம் இருவரும் ஓரளவு நன்கறியப்பட்ட இலக்கியவாதிகள். அவர்கள் எந்தத் தரப்பையும் சார்ந்தவர்கள் அல்ல.  ஆயினும்,  முதலில் “அது ஒரு தரப்பின் குரல்” “என்றும், இறுதியில் ஒரு மறுமொழியின் அடிப்படையில் “எல்லா அரசியல் தரப்பினரும் செய்வது தான்” என்றும்  நீங்கள் அரசியல்தனமாக முத்திரை குத்தி நிராகரிப்பது  மிகவும் வருத்தம் தருகிறது. இதில் பலியாவது அந்தக் கேள்விகள் தான்.  ஜெயமோகன் போன்ற ஒரு நேர்மையாளரிடம்  கேள்வி தொடுத்தவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

மேலும், மதம் vs தத்துவம் vs ஆன்மிகம் விவாதம் கீதை பற்றிய அணுகுமுறையில் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.  மதநிராகரிப்பு என்ற கருத்தை நீங்கள் முன்வைக்கும்போது கூட ஒரு “குரு மரபு” உங்களுக்குத் தேவைப் படுகிறது. இல்லையா? அந்த குருமரபு என்பதை ஒரு பிரமாணம் ஆக்குவதே இந்து மதம் (அல்லது “ஞான மரபு”)  தானே?  இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூக சூழலில் இது சாத்தியமா?

ஜே.கே, நாராயண குரு மட்டும் அல்ல,  ரமண மரிஷியும், நிஸர்கதத்த மஹராஜும்  கூட எல்லாவித அமைப்புகளையும் நிராகரித்த அத்வைத ஞானிகள் தான்.  சிலரை மதம் சார்ந்தவர்களாகவும், வேறு சிலரை மத நிராகரிப்பாளர்களாகவும்  பார்க்கத் தூண்டுவது காலத்தின் கட்டாயம் மற்றும் அணுகுமுறைச் சார்புகள் மட்டுமே. 

வள்ளலார் இறுதியில் மதத்தை நிராகரித்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் (இதுவே  விவாதத்திற்குரியது). ஆனால் மதம் அவரை நிராகரிக்கவில்லை,  அவர் போற்றிய “வாழையடி வாழையடி என வந்த திருக்கூட்டமதில்”  தானும் கலந்துவிட்டார். 

நாராயண குருவும் அப்படியே.  அவரையும் மதம் நிராகரிக்கவில்லை. சபரிமலை தேவஸ்தானம் போகும் வழியில் உள்ள கடைகளில் எல்லாம் தெய்வச் சித்திரங்களோடு கூட அவர் திருவுருவமும் இருக்கிறது (வழிபாட்டுப் பொருளாகவோ அல்லது விற்பனைப் பொருளாகவோ).

இதில் சூழ்ச்சியையும், சதியையும் பார்ப்பது பிறழ்வு மனப்போக்கு.  இத்தகைய “மத நிராகரிப்பாளர்களையும்” நிராகரிக்காமலிருப்பது மட்டுமல்ல, உயரிய இடமும் அளித்துப் போற்றும் “மதம்” ஒன்று இருக்கிறது. அதுவே இத்தகைய  நிராகரிப்புகளுக்கான மனப் பாங்கையும், சூழலையும் உருவாக்குகிறது என்பது தான் உண்மை.  

உறைவிடம் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் ஊர் ஊராகச் சுற்றும் vagabond களுக்கும், சாதுக்களுக்கும் எப்படி இயல்பாக இந்திய சமூகம் காலம் காலமாக இடம்கொடுத்தது மட்டுமல்ல, அவர்களை அரவணைத்தும் வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இது வியப்புக்குரிய விஷயமாகத் தோன்றாது…

அன்புடன்,

ஜடாயு

பி.கு: இந்தக் கடிதத்தையும் அதே பதிவில் இன்னொரு மறுமொழியாக இடுகிறேன்

அன்புள்ள ஜடாயு

உங்கள் கடிதம் மூலம் உங்கள் நிலைபாட்டை தெரிந்து கொண்டேன். அதற்குமேல் நான் சொல்வதற்கு ஏதுமில்லை.நான் பேசிக் கொன்டிருப்பதும்  நீங்கள் சொல்வதும் முற்றிலும் வேறு வேறு திசைகளில் உள்ளன. அவற்றை அதற்கு மேல் விவாதிப்பதில் என்ன பயன் என்று எனக்கு புரியவில்லை. இரு வேறு கோணங்களில் நின்று நாம் பேசுகிறோம். நான் வெளியே போகும் வழி பற்றி பேசுகிறேன், வெளியே போகும் அனைத்தையும் எப்படி உள்ளே இழுப்பது என்பதைப் பற்றி நீங்கள். ஒருபோதும்  இணையாத இரு தரப்பும் எப்போதுமே இபப்டியே இருக்கும் போலும். உங்கள் இணைய தளத்தின் குரல் ஒற்றைக்குரலாகவே உள்ளது என்பது என் எண்ணம். இப்போதும் அப்படியே
ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/480