இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபின்னர் இந்திய அரசியலில் பலவகையான தரப்புகள் உருவாகிவந்தன. பிரிட்டிஷ் ஆட்சிககலத்தில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவும் இந்திய சுதந்திரத்துக்கு எதிராகவும் இருந்த சக்திகள் சுதந்திர இந்தியா அளித்த ஜனநாயக வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தேர்தலரசியலில் இறங்கின. அவர்களின் சமூகப்பிளவுவாத, தேசப்பிரிவினைவாதப் பிரச்சாரங்கள் ஜனநாயகத்தில் சிலசமயம் வெற்றியும் பெற்றன. உதாரணம் திராவிட இயக்கம், அகாலி தள் போன்றவை.
இவர்கள் சுதந்திரப்போராட்ட காலத்தில் காந்திக்கும் காங்கிரசுக்கும் எதிராக, பிரிட்டிஷாருக்கு ஆதரவாகச் சொல்லிவந்த அதே வாய்ப்பாடுகளை காங்கிரஸ் என்ற மையக்கட்சிக்கு எதிராகச் சொல்லத்தலைப்பட்டார்கள். காலப்போக்கில் இந்த நோக்கில் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றி திரிபுபட்ட வரலாறுகளையும் விளக்கங்களையும் எழுதினார்கள். இன்றைய இளைஞனுக்கு கிடைப்பது ஒருபக்கம் அரசாங்கத்தின் பாடப்புத்தக வரலாறு. மறுபக்கம் பிளவுவாதப் பிரச்சாரம். இவற்றுக்கு நடுவே வரலாற்றை நடுநிலையுடன் பார்ப்பதற்கான வெளியே இந்தியச் சூழலில் இல்லை.
இந்த இரு தரப்பாலும் இந்தியதேசியம் என்பது இன்றுள்ள இந்திய அரசாங்க அமைப்பின் கருத்தியலாக முன்வைக்கப்படுகிறது. இந்திய அரசாங்கம் என்பது இந்தியதேசியத்தின் மீது அமைந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால் இந்திய தேசியம் என்பது அது அல்ல. அது இந்த தேசத்தின் மக்களின் மனநிலையில் உள்ளது. அந்த மக்களில் பெரும்பாலானவர்களின் மனநிலையில் தேசம் என்ற கருத்து நீடிக்கும் வரை அது இருக்கும். அந்த அகவயமான கருத்துநிலையே இந்திய தேசியமாகும்.
அந்த தேசியப்பிரக்ஞையின் நேரடியான வடிவம் அல்ல இந்திய அரசு என்பது. எந்த ஒரு அரசும் அந்த மக்களின் நேரடியான பிரதிநிதி அல்ல. அந்த மக்களின் தேசியப்பிரக்ஞை அந்த அரசை உருவாக்கும் சக்திகளில் ஒன்று என்று மட்டுமே சொல்ல முடியும். அந்த மக்கள் அரசியல் பிரக்ஞையும் ஜனநாயக விழிப்புணர்வும் ஒற்றுமையும் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே அந்த தேசியபிரக்ஞை அவர்களின் அரசாங்கத்தை உருவாக்குவதில் தீர்மானிக்கும் பங்களிப்பைச் செலுத்த முடியும். இல்லையேல் அது பலவீனமான ஒரு தரப்பாகவே எஞ்சும்
இந்தியாவில் உள்ள பொருளியல் அதிகார மையங்கள், பல்வேறு வெளிநாட்டுச் செல்வாக்குகள் ஆகியவற்றுடன் இந்திய மக்களின் தேசியப்பிரக்ஞையும் பங்குபெறும் ஒரு பெரிய முரணியக்கத்தின் சமரசப்புள்ளியே இந்தியாவின் அரசமைப்பு. அது இந்திய தேசியத்தின் முகமாகக் காட்டப்படுகிறது அவ்வளவுதான். இந்திய மக்களின் மனதில் உள்ள இந்திய தேசியம் என்பது அவர்களின் எதிர்பார்ப்புகளும் கனவுகளும் கலந்த ஒன்று.
அது என்ன என்பதை இந்தியாவின் பண்பாட்டுப்பின்புலத்தில், வரலாற்றுத் தொடர்ச்சியில், இன்றைய இந்தியாவின் இலட்சியங்களில் தான் தேட வேண்டும். ஆனால் அதற்கு முன் இந்திய தேசியத்தைப்பற்றி நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் எதிர்மறைப் பிம்பங்களை பார்ப்போம்.
இந்திய தேசியம் யாருக்கு எதிரி?
இந்தியாவின் நவீனத் தேசிய உருவாக்கத்தின் வரலாற்றைப் பார்க்கும் ஒரு நடுநிலையான ஆய்வாளர் அது பல்வேறு படிநிலைகள் வழியாக வளர்ந்து வந்திருப்பதைப் பார்ப்பார். இந்திய பக்தி இயக்கத்தின் கடைசியில் அந்த இயக்கத்தின் இன்றியமையாத நீட்சியாக இந்து சீர்திருத்த/ மறுமலர்ச்சி இயக்கங்கள் உருவாகிவந்தன. தன்னுடைய கட்டுரை ஒன்றில் யூ.ஆர்.அனந்தமூர்த்தி பக்தி இயக்கத்துக்கும் சீர்திருத்த இயக்கத்துக்கும் உள்ள உறவென்பது ராமகிருஷ்ண பரம ஹம்சருக்கும் விவேகானந்தருக்குமான உறவு என்கிறார்.
இந்துமதச் சீர்திருத்த இயக்கங்கள்தான் இந்தியா ஒரு கலாச்சாரதேசம் என்பதை தர்க்கரீதியாக முன்வைத்தவை. இந்த நாடு அரசியல்ரீதியாக பொருளியல்ரீதியாக தனிநாடுகளாக இருந்தாலும் பல்லாயிரம் வருடங்களாக ஒரே பண்பாட்டுக்கட்டமைப்பாக இருந்துவருகிறது, ஆகவே இதை ஒரு தேசியம் என்றே சொல்ல வேண்டும் என்று அவை கண்டடைந்தன. ஆரம்பகால இந்து மதச்சீர்த்திருத்தவாதிகள் அனைவருமே தங்கள் எழுத்துக்களில் அதை வலுவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அதுவல்லாமல் இன்று சிலர் கூறுவதுபோல இந்திய தேசியம் என்பது பிரிட்டிஷ்காரர்களின் உருவாக்கம் அல்ல. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருந்த பல தனித்தேசங்கள் மீது ஒட்டுமொத்தமான ஒரு மேலாதிக்கமாக இருந்ததே ஒழிய நாற்பத்தேழில் இந்தியாவை விட்டுச்செல்வதுவரை பிரிட்டிஷார் இந்தியாவை ஒரே அரசியல் அமைப்பாகவோ, ஒரே பொருளாதார அமைப்பாகவோ, ஏன் ஒரே நிர்வாக அமைப்பாகவோ கூட ஆக்கவில்லை என்பது மிகச்சாதாரணமாக எவரும் வாசித்தறியக்கூடிய உண்மை. உதாரணமாக திருவிதாங்கூர் பிரிட்டிஷாருக்குக் கப்பம் கட்டியதே ஒழிய மற்றபடி ஒரு தனி அரசியல்,பொருளியல் தேசமாகவே சுதந்திரம் வரை நீடித்தது. அப்படி பற்பல சம்ஸ்தானங்கள் இருந்தன. அதைத்தவிர பிரெஞ்சு, போர்ச்சுக்கல் பகுதிகள் தனி அரசியல்தேசங்களாகவே நீடித்தன.
இந்தியாவை ஒரு தேசமாக கடைசிவரை பிரிட்டிஷார் ஒத்துக்கொள்ளவுமில்லை. பிரிட்டிஷார் காங்கிரஸ¤டன் நடத்திய எல்லா சர்ச்சைகளிலும் இந்தியா என்பது ஒரே தேசமல்ல, ஆகவே காங்கிரஸ் இந்திய தேசத்தை பிரதிநிதிகரிக்கவில்லை என்றே வாதிடுவதைக் காணலாம். 1947ல் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுவிட்டுச் செல்லும்போதுகூட இந்தியாவை தனித்தேசங்களாகவே விட்டுச்சென்றார்கள். இந்தியாவின் எந்த ஒரு தேசத்துக்கும் தனியாகப்போகும் உரிமை உண்டு என்ற நிபந்தனையை வைத்தே அதிகாரத்தைக் கொடுத்தார்கள். இந்தியாவின் தனிநாடுகள் ஒருபோதும் ஒரு ஒற்றைத் தேசியமாக ஆக ஒத்துக்கொள்ளாது என்றும் ஆகவே இந்தியா போரிட்டு அழியும் என்றும் நினைத்தார்கள்.
ஆனால் பிரிட்டிஷாரை அதிர்ச்சி கொள்ளவைத்தபடி ஓரிரு மாதங்களில் இந்தியா ஒரே தேசமாக ஆகியது. அதற்கு பெரிய படையெடுப்புகளோ போர்களோ தேவையாக இருக்கவில்லை. இந்தியாவெங்கும் பல்வேறு சம்ஸ்தானங்களில் இருந்த மக்கள் அந்தந்த அரசர்களுக்கு எதிராகத் திரண்டு போராடி இந்தியாவை ஒரே தேசமாக ஆக்கினார்கள். ஆனால் இந்தியா ஒரே தேசமாக ஆனபின் இந்தியா என்ற தேசியத்தை நிகழ்த்தியது தாங்களே என வெள்ளையர்களின் வரலாற்றாசிரியர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.
இதேமோசடிதான் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும் செய்வது. இந்தியா ஒரே தேசமல்ல என்று அவர்கள் நாற்பத்தேழு வரை வாதிட்டார்கள். அதன் அடிப்படையிலேயே அவர்கள் தனிநாடு கோரினார்கள். ஹைதராபாத் போன்ற இஸ்லாமிய சம்ஸ்தானங்கள் தனிநாடுகள் என்றார்கள். இந்தியா பல நாடுகளாகச் சிதறும் என்று எழுதினார்கள். மாறாக இந்தியா வலுவான ஒரே நாடாக இணைந்தபோது அந்த இணைப்பை அக்பர் நடத்தினாரா, இல்லை ஷெர்ஷா நடத்தினாரா, இல்லை முகமதுகோரியே செய்துவிட்டாரா என்ற விவாதங்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்தியாவை பட்டேல் எப்படி ஒற்றுமைப்படுத்தினார்? ராணுவ வல்லமை மூலம் அல்ல. ஒப்புநோக்க அந்தப் பெரும்பணிக்கு மிகமிகக் குறைவாகவே படைபலம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அன்று இந்திய சம்ஸ்தானங்கள் இந்திய மைய அரசுக்கு எதிராகப் போரை தொடுத்திருக்க முடியுமா? முடியும், அந்த அரசுக்குள் இருந்த மக்கள் அந்த அரசுகளை ஆதரித்திருந்தால். தேசப்பிரிவினையின் விளைவான மதப்பிரிவினையால் அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவம் பலவீனமாக இருந்தது. அதன் முக்கியமான வெள்ளைய தளபதிகள் வெளியேறிவிட்டிருந்தார்கள். மக்களாதரவுடன் சம்ஸ்தானங்கள் போரிட்டிருந்தால் இந்திய அரசு தாக்குபிடித்திருக்காது.
பட்டேலுக்கு உதவியப் பெரும் சக்தி அந்தந்த சம்ஸ்தானங்களில் இருந்த மக்கள்தான். அவர்கள் ஏற்கனவே காங்கிரஸால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஏற்கனவே ஒரு தேசமாக இருந்தார்கள். தனிநாடு கோரிய திருவிதாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யரை மக்களே மூக்கை வெட்டி துரத்திவிட்டார்கள். ஐதராபாதில், கோவாவில் இணைப்புக்குத் தயங்கிய எல்லா சம்ஸ்தானங்களிலும் மக்களியக்கம் எழுந்துதான் இணைப்பை சாத்தியமாக்கியது.
ஆக இந்தியாவை ஒரு தேசமாக ஆக்கிய சக்திகள் இரண்டு. ஒன்று , பல்லாயிரம் வருடங்களாக இங்கே இருந்து வந்த பண்பாட்டுத்தேசியத்தின் அடித்தளம். இரண்டு அதை அடையாளம் கண்டுகொண்டு ஒரு அகில இந்திய இயக்கமாக முன்னெடுத்த இந்து சீர்திருத்த இயக்கங்கள், அவற்றின் விளைவாக உருவான இந்திய மறுமலர்ச்சி. அவற்றில் இருந்தே காங்கிரஸ் தன்னுடைய தேசிய உருவகத்தை பெற்றுக்கொண்டது.
இந்தியாவில் இருந்த, இன்றும் இருக்கும், இந்தப் பண்பாட்டுத்தேசிய உருவகத்தை அபத்தமாக மறுக்கும் வாதங்கள் எழுதிக் குவிக்கப்படுகின்றன. மார்க்ஸிய அறிஞரான கெ.சச்சிதானந்தன் எனக்களித்த பேட்டியில் இதை வரலாற்று ரீதியாகவே மறுக்கிறார். ‘இந்தியாவில் உருவான எந்த ஒரு இயக்கமும் இந்தியாவைத்தழுவி விரிவதாகவே இருந்தது. வைதிக மதம், சமணபௌத்த மதங்கள், பக்தி இயக்கம், இந்து சீர்திருத்த இயக்கங்கள், இந்திய தேசவிடுதலை இயக்கம். அது மட்டுமல்ல, இடதுசாரி எழுச்சி, நக்சலைட் எழுச்சி, தலித் எழுச்சி போன்றவையும் ‘பான் இண்டியன்’ தன்மை கொண்டவையே’ என்றார் அவர்
விவேகானந்தர் நடத்திய பவிராஜக யாத்திரை இமயம் முதல் கன்யாகுமரி வரை நீண்டது. அதில் உள்ளடங்கியிருப்பது ஒரு இந்திய பண்பாட்டுத்தேசிய மனவரைபடம். அதே பயணத்தை பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் இங்கிருந்து வடக்கே நோக்கி நடத்தினார். அந்த வரைபடம் எப்போதுமே இந்தியாவில் இருந்தது. அதை அரசியல் வரைபடமாக மாற்றியது இந்துசீர்திருத்த இயக்கங்களும் காங்கிரஸ¤ம் என்று சொல்லலாம்.
வேடிக்கை என்னவென்றால், இந்தியா எப்போதுமே ஒரு தேசமாக இருந்ததில்லை என்று சொல்பவர்கள் தமிழகம் மட்டும் ஒரு தேசமாக இருந்தது என்பார்கள்! தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலமும் உறுதியான அரசியல் தேசியமாக இருந்ததில்லை என்பதே வரலாற்று உண்மை. இந்திய அரசியல் தேசியம் உருவானதற்கான வரலா¡ற்றுக்காரணம் ஒன்றே ஒன்றுதான். பல்லாயிரம் வருடங்களாக மக்கள் இடம்பெயர்ந்து ஒருவரொடொருவர் கலந்து இந்த நிலப்பகுதியில் வாழ்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே ஓர் ஒற்றைச் சமூகமாகவே இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இணைந்து வாழ வழிவகைசெய்யும் ஒரு தேச உருவகமே மோதலைத்தடுத்து அவர்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும். .
இந்த தேசிய உருவகம் இங்குள்ள இந்த இன்றியமையாமையில் இருந்து எழுந்தது. இங்குள்ள மக்களுக்கு மேலான ஒருவாழ்க்கை தேவை என்ற பெரும் கனவில் இருந்து எழுந்தது. ஆகவே ஒற்றுமை, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அது காங்கிரஸாலும் காந்தியாலும் நவீனத்தேசியமாக உருவாக்கப்பட்டது. பட்டேலாலும் அம்பேத்காராலும் அது நிகழ்த்தப்பட்டது.
இது ஒற்றைத்தேசியமல்ல என்று விடாமல் கூறிவந்தனர் அன்றைய பிரிட்டிஷ் வரலாற்றறிஞர்களும் பிரிட்டிஷ் அரசும். இந்த தேசத்துக்குள் தேசங்களை கண்டுபிடித்து தனித்தனியே அவற்றை வளர்க்க முற்பட்டனர். முஸ்லீம்களையும் சீக்கியர்களையும் தனித்தேசங்கள் என்றனர். தலித்துக்கள் தனித்தேசம் என்றனர். கூர்க்காக்கள் தனித்தேசம் என்றனர். அந்த பிரிவினைப்போக்குகளை இந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை வைத்தே எதிர்கொண்டது காங்கிரஸ்.
முஸ்லீம்கள் தனித்தேசக்கொள்கையை முன்னெடுத்து இந்த நிலப்பகுதியை பிரித்தனர். ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் இன்றும் இந்த நிலத்தில் இந்த தேசியத்திற்குள்தான் வாழ்கிறார்கள். ஒருவேளை நாளை ஒரு தமிழ்த்தேசியம் அமைந்தாலும் அவர்கள் அதற்குள்தான் வாழ்ந்தாகவேண்டும். இதுவே அவர்கள் ஒரு தனித்தேசியம் என்ற கோரிக்கை எத்தனை அபத்தமானது என்பதற்கான ஆதாரம். ஆனால் இன்றும்கூட முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள் அந்த தனித்தேசியக் கோரிக்கையில் இருந்த முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்வதில்லை. அதன் மூலம் நிகழ்ந்த மானுட அழிவுக்குப் பொறுப்பேற்பதில்லை. வழக்கம் போல அந்தப்பழியையும் காந்திதலையில் போட்டுவிடுகிறார்கள். எவ்வளவு அறுபுதமான தலை! பூமி மாதிரி, எதையும் தாங்கும்!
அதேபோல திராவிட இனவாதம் இங்கே ஒரு பிரிவினைத்தேசியமாக முன்வைக்கப்பட்டது. அந்த வாதத்தின் அபத்தம் சில வருடங்களுக்குள் வெளிவந்தது. திராவிடர்கள் என அவர்கள் சுட்டிய கன்னடர்களோ தெலுங்கர்களோ மலையாளிகளோ அதை இம்மியும் பொருட்படுத்தவில்லை. உடனே அது மொழித்தேசியமாக உருமாற்றம் செய்யப்பட்டது. தமிழ்பேசும் மக்கள் ஒருகோடிப்பேர் இந்தியா முழுக்க உள்ளார்கள். தமிழ்நாட்டு மக்களில் குறைந்தது நான்கு கோடிப்பேர் தமிழ் பேசுபவர்கள் அல்ல. அவர்களை அன்னியப்படுத்தமல் தமிழ்த்தேசியம் நிலைநிற்காது. ஆகவே ஒரு மாபெரும் மானுட அவலத்தையே மொழித்தேசியம் உத்தேசிக்கிறது என்பது வெளிப்படை.
இன்றைய இந்தியாவில் ஆக முற்போக்கான, ஆக நடைமுறைச் சாத்தியம் கொண்ட, ஆக மானுடநேயம் கொண்ட தேசிய உருவகம் என்பது நவீன இந்திய தேசியம்தான். அது இந்துக்கள், முஸ்லீம்கள்,சீக்கியர்கள்,கிறித்தவர்கள் உட்பட அனைவரையும் அரவணைத்துக்கொள்வதாகவே உருவகிக்கப்பட்டிருக்கிறது. எவரையும் இரண்டாம் குடிமக்களாக ஆக்கும்படியாக அதன் கோட்பாட்டுக் கட்டமைப்பு இல்லை. எவரையும் அது மேலாகவோ கீழாகவோ நிறுத்தவில்லை. அதன் ஜனநாயக அமைப்புக்குள் தன் வலிமையைத் திரட்டிக்கொள்ளும் எந்த ஒரு சமூகமும் அதன் அதிகாரத்தை அடையமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
இதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் தேசியங்கள் இனவாத, மதவாத, மொழிவாத ·பாசிஸக் கோட்பாடுகளை தங்கள் அடிப்படைக் கட்டமைப்பாகக் கொண்டவையாகவே உள்ளன. அவை தங்களுக்குள் உள்ள ஒரு பெரும்பகுதி மக்களை ‘பிறர்’ ஆக பார்ப்பவை. அவர்களை இரண்டாம்குடிமக்களாக உருவகித்துக்கொள்பவை. எந்தவகையான ஜனநாயக அடிப்படையும் இல்லாதவை.
இதற்குக் காரணம் நவீன இந்திய தேசியம் என்பது காந்தியாலும் நேருவாலும் வளர்த்து இன்றைய நிலைக்கு கொண்டுவரப்பட்டது என்பதே. அவர்கள் எந்த இன, மொழி, மத அடிப்படையிலும் அந்த தேசியத்தை உருவகிக்கவில்லை. அவர்களின் ஒட்டுமொத்த எழுத்திலும் அவர்கள் ‘பிறனை’ உருவகிப்பதை நாம் பார்க்க முடியாது.மீண்டும் மீண்டும் ஒத்துப்போவதைப்பற்றி விட்டுக்கொடுப்பதைப்பற்றி சேர்ந்து இயங்குவதைப்பற்றி மட்டுமே அவர்கள் பேசுகிறார்கள். இறந்தகாலத்தின் கனவில் இருந்து அவர்கள் தங்கள் தேசிய உருவகத்தை அடையவில்லை வரும்காலம் குறித்த இலட்சியத்தில் இருந்து அடைந்தார்கள்.
காந்தி உருவகித்த எதிர்கால இலட்சியத்தை நேரு பெரும்பாலும் நிராகரித்தார். ஆனால் அவர் காந்தியிடம் இருந்து பெற்றுக்கொண்டது ஒற்றுமையையும் விட்டுக்கொடுத்தலையும் ஜனநாயகத்தையும் தன் அடிப்படை விதிகளாகக் கொண்ட ஒரு தேசிய உருவகத்தைத்தான். நேரு காந்தி சொன்னதற்கு மாறாக மையநிவாகம்கொண்ட தாராளவாத அரசு ஒன்றை அமைத்திருக்கலாம். ஆனால் அவரது அரசு அதன் எந்த நிலையிலும் ஒரு ஜனநாயக அமைப்பாக மட்டுமே இருந்தது.
இந்திய தேசபிரிவினைக்குப் பின்னர் இஸ்லாமியர் மீது இந்தியாவில் இருந்த கசப்பு வளராமல் தடுத்தவர் நேரு. இஸ்லாமியர் தங்கள் தேசப்பற்றை நிரூபிக்கவேண்டும் என்று பட்டேல் எண்ணினார், ஏனென்றால் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து முஸ்லீம்லீகுக்கு வாக்களித்த கோடிக்கணக்கான தென்னக மக்கள் பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இங்கேதான் இருந்தார்கள். ஆனால் நேரு இந்தநாடு அவர்களுக்கும் உரியதே என்றார். அவர்களையும் உள்ளடக்கியதே தன்னுடைய தேச உருவகம் என்றார் அவர். இன்றும் அதுவே நீடிக்கிறது.
ஆனால் தேசத்தைப்பிளந்து ரத்த ஆறை ஓடவிட்ட சில வருடங்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் தன்னை ஒருங்கிணைத்துக்கொண்ட முஸ்லீம் லீக் அமைப்பு இந்திய அரசு என்பது ஓர் இந்து அரசு, இது பார்ப்பன-பனியா தேசியம், இதற்குள் நாங்கள் இணையமுடியாது என்று மீண்டும் பேச ஆரம்பித்தது. அப்போதுகூட நேரு அவர்கள் தங்கள் நலன்களுக்காக இணைந்து போராடும் உரிமையை அளிக்கும் ஒரு நவீனத்தேசியத்தையே தான் உருவகிப்பதாகச் சொன்னார். அவர்கள் மத அடிப்படையில் திரள்வார்கள் என்றால் அதுவும்கூட தன் தேசிய உருவகத்துக்குள் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்றார். அதற்கிணையான இன்னொரு முற்போக்குத்தேசியம் இந்த மண்ணில் இன்றுவரை முன்வைக்கப்படவில்லை என்பதே வரலாற்று யதார்த்தம். பதிலுக்கு அந்த நேருவை இந்துவெறியர் என்றார்கள் அவர்கள்!
நேரு உருவாக்கிய அந்த தேசியம்தான் உலகின் எந்த ஒரு நாட்டிலும் இன்றுவரை உருவானதிலேயே ஆகச்சிறந்த அணைத்துப்போகும் தன்மை கொண்டது. அமெரிக்க தேசியத்தைவிட, பிரிட்டிஷ் தேசியத்தைவிட ! சட்டபூர்வமாகவும், நடைமுறையிலும், அடிப்படை மனநிலையிலும்….ஐயமிருக்கும் எவரும் உலக வரலாற்றை மேலோட்டமாகவேனும் புரட்டிப்பார்க்கலாம். அந்த தேசியத்தை விமரிசிக்கும் பிரிவினை-பிளவுவாதச் சக்திகளே காந்தியும் நேருவும் உருவாக்கிய தேசிய உருவகத்தைப் பற்றிய அவதூறுகளைக் கிளப்புகின்றன. அவற்றின் மொழி, இன அடிப்படைவாத பிளவுக்கருத்தியலுக்கு இந்திய தேசியம் எதிரியாகத் தெரிவதில் எந்த ஐயமும் இல்லை. அவை பிளவுபடுத்த நினைப்பவற்றை இந்திய தேசியம் ஒருங்கிணைக்கிறது.
மிகச்சிறந்த ஓர் உதாரணம், கண்முன் நடந்தது. இந்தியாவில் பேசப்படும் தமிழ்த்தேசியவாதத்தின் நீட்சியே இலங்கையில் ஈழத்தேசியமாக உருவாகியது. அந்தத் தேசியம் ஒரு குறைந்தபட்ச ஆட்சியதிகாரத்தை அடைந்தபோது அதனால் இஸ்லாமியர்களை உள்ளே வைத்துக்கொள்ள முடியவில்லை. அது இஸ்லாமியரை முழுக்க ஒட்டுமொத்தமாக அகதிகளாக விரட்டி அடித்தது. அந்தச் செயலை தமிழகத்து தமிழ்த்தேசியர்கள் மிக மிக இயல்பாக, தவிர்க்கமுடியாத ஒன்றாக எடுத்துக்கொண்டார்கள் என்பதையும் நாம் கண்டோம்.
அந்த பிளவுபடுத்தும் தேசியத்திற்கும் இந்திய தேசியத்திற்கும் இடையே ஒரு எளிய ஒப்பீட்டை நடத்தினால்கூட எது முற்போக்கானது என்பது எவருக்கும் தெரியும். இன்றும் இரு பாகிஸ்தான் போர்களுக்குப் பின்பு, ஏராளமான தீவிரவாதச் செயல்பாடுகளுக்குப் பின்பு, இந்திய அரசையும் இந்திய தேசியத்தையும் அவை தங்கள் அரசும் தங்கள் தேசியமும் அல்ல என்றும் தாங்கள் ஒரு இஸ்லாமிய அரசின் கீழ் மட்டுமே வாழமுடியும் என்றும் இஸ்லாமிய அமைப்புகளில் கணிசமானவை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையிலும்கூட, இந்திய தேசிய உருவகம் என்பது இஸ்லாமியர்களை உள்ளடக்கியதாகத்தான் நீடிக்கிறது.
அந்தத் தேசிய உருவகம் முழுமையானது என்றோ, பிழைகள் அற்றது என்றோ சொல்லவில்லை. ஆனால் இதை விட மேலான, இதைவிட முற்போக்கான, இதைவிடச்சிறப்பான ஜனநாய அடிப்படையும் ஒருங்கிணைக்கும் வல்லமையும் கொண்ட ஒரு தேசிய உருவகத்தை நாம் கனவுகாணலாம், அதற்காகப் போராடலாம். ஆனால் இந்த தேசியத்துக்கு மாற்றாக இன்று முன்வைக்கப்படும் பிரிவினைத்தேசியங்கள் எல்லாமே இன்னும் பழங்காலத்தை நோக்கி திரும்பி அமர்ந்து சென்ற பொற்காலங்களைப்பற்றிய கனவுகளை அசைபோடும் பழமைவாத தேசியங்கள். நூற்றாண்டுகளாக தங்களுடன் வாழும் மக்களில் பாதியினை அன்னியப்படுத்தும் ·பாஸிச தேசியங்கள்.
இன்னும் வேடிக்கை என்னவென்றால், இந்த ·பாஸிச பிரிவினைத்தேசியங்கள் இந்திய தேசியத்தில் எதையெல்லாம் குறைகளாகச் சொல்கிறார்களோ அதையெல்லாம் இவர்களேதான் உருவாக்கினார்கள் என்பதே. ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் முன்வைக்கும் இந்திய தேசியத்துக்கு எதிராக அவநம்பிக்கைகளையும் எல்லைக்கசப்புகளையும் வளர்த்தவர்கள் இவர்களே. இப்போது இவர்களே அவற்றைச் சுட்டி இந்தியா ஒரு தேசமல்ல என்கிறார்கள்!
[ மேலும்]