பொன்னூஞ்சல் ஆடும் இளமை

அன்பின் ஜெ..

பழம் நினைவு – அதுவும் மகிழ்ச்சியான ஒன்றை அசை போடுவதென்றால் என்ன இனிமை.. வாயில் இனிப்பு இல்லாமேலேயே நாக்கு இனிப்பின் சுவையை உணர்வது போல.

1970/71 ஆக இருக்கலாம். என் தாய் மாமனுக்குப் பெண் பார்க்கச் சென்றோம். அவர் வேலை செய்யும் CST பஸ் ஸர்வீஸில் ஏறி, டிக்கட் வாங்காமல், அவருக்குத் தெரிந்த டிரைவர் / கண்டக்டருடன் அவர் உரத்துப் பேசிச் சிரித்துக் கொண்டு வர, அதைப் பெருமையாக, அவர் கால்களுக்கிடையே நின்று பயணித்துக் கொண்டே கவனிக்கிறேன்..

பவானியிலிருந்து மேட்டூர் செல்லும் வழியில் குப்பிச்சி பாளையம் ஸ்டாப்பில் இறங்கி, வருங்கால அத்தை வீட்டுக்கு செல்கிறோம்.. வீட்டில் பென்ச் போடப்பட்டு, நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்.. மடக்குச் சேர்கள் விரிக்கப் பட்டு, உட்கார்கிறோம். பெரிய பெரிய டம்ப்ளர்களில், கருப்பட்டி சாறாக காப்பித் தண்ணி வருகிறது.. அத்தை வீட்டு மனிதர்கள் சைடில் சில சிறுவர்கள் இருக்கிறார்கள்..

உள்ளேயிருந்து, எனக்கு அழைப்பு வருகிறது.. குட்டிப் பையனாக இருக்கும் என்னைப் பார்க்க என் வருங்கால அத்தை அழைக்கிறார்கள்.. எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. எல்லோரும் கிண்டல் செய்வார்களே என தயங்குகிறேன்.. தரதரவென ஒரு உறவினர் இழுத்து என்னை உள்ளே செலுத்துகிறார்.. உள்ளே வெள்ளை நிறத்தில், புதுப் புடவை கட்டி, என் வருங்கால அத்தை அமர்ந்திருக்கிறார்கள்.. வெள்ளை நிறமென்பதால், செல்லப் பெயர் “பாப்பாத்தி”. இழுத்து அருகில் அமர்த்துகிறார்கள்.. நெளிகிறேன்..

”(உ)க்கோரு.. ஒன்ற பேரென்ன?”

சொல்கிறேன்.

“எத்தனாவது படிக்கிறே?”

சொல்கிறேன்.

அதற்குள் காப்பித் தண்ணி வருகிறது. அதை வாங்கி, ஊதி, எனக்குப் புகட்டத் துவங்க, நெளிகிறேன்.. வேகமாகக் குடித்து விட்டு, எழுந்து ஓட, என் சட்டையைப் பிடித்து இழுக்கிறார்கள்.. பிய்த்துக் கொண்டு ஒடி மாமன் கால்களுக்கிடையே நிற்கிறேன்..

“என்னடா? ஒங்கத்தையப் புடிச்சிருக்கா? “ என்கிறார் மாமா.. சொல்லாமல் நிலம் பார்த்து நெளிய, “ என்றா ஒன்னியவா பொண்ணு பார்க்கறாங்க? இந்த நெளி நெளியறே” என உறவினர்கள் கிண்டல்.

பின்னர், திருமண தினத்தன்று மாமனின், பஸ் கம்பெனியில் ஒரு பஸ்ஸை எடுத்துக் கொண்டு செல்கிறோம். அது ஒரு பிரமாண்டமான விஷயம். வானத்தை விடப் பெரியது அன்றய எனக்கு.. ”எங்க மாமன் பஸ்ஸூ” எனப் பெருமையடித்துக் கொள்கிறேன். வழக்கமாகத் தார் சாலையில் மட்டுமே ஓடும் பஸ், அன்று திருமணத்திற்காக, எங்கள் அத்தை வீட்டு ரெட்டை வண்டித் தடத்தில் இறங்குகிறது; திரும்புகிறது.. என் முகமெங்கும் பெருமிதம் பொங்கி வழிகிறது.

வாழ்க்கை பல கணங்களில் வெறிப்பாய்ச்சலாக இருக்கிறது. பல முறை, சோர்வான தளர் நடையாக இருக்கிறது. ஆனால், மிகச் சில கணங்களில் மட்டுமே, ஒரு குதிரையின் சீரான மந்தகாச நடையில் (Canter) அடுத்த கணம் பற்றிய சிந்தனை எதுவுமின்றி, சந்தோஷமாகப் போகிறது.

இன்றைய பகுதி – பீலித்தாலம் படித்த போது அப்படி ஒரு உணர்வு வந்தது. திருதராஷ்டிரனின் கலக்கமும், ஆர்வமும் முரட்டுத்தனமாக மட்டுமே வெளிப்பட்டாலும், அதை விதுரனால் மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.. அவனின் அந்த முரட்டுத்தனமாக வெளிப்படும் உல்லாசம் வெகு இனிமை.

“என்னிடம் நீ அதைச் சொல்லத் தயங்கலாம். ஆனால் நீ சொல்லியே ஆகவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். சொல்லவில்லை என்றால் என் கைகளால் உன் மண்டையை உடைக்கவும் தயங்கமாட்டேன்.” சட்டென்று சினம் கொண்டு உரத்தகுரலில் “அப்படி நானறியாத அகம் உனக்கு எதற்கு? நீ அறியாத அகம் என எனக்கு ஏதும் இல்லையே?” என்றான்.” – என்றுதான் விதுரன் மேலிருக்கும் பேரன்பைக் கூட வெளிப்படுத்த அவனால் முடிகிறது.

நானிருக்கும் வரை உனக்கு எந்த அவமானமும் வராது என்பதை, அவனால், “ஆம் அது உண்மை” என்றான் திருதராஷ்டிரன் தலையை உருட்டியபடி. “உனக்கு அது நிகழலாம். அதைத்தவிர்க்கவேண்டுமென்றால் நான் இறந்தபின் நீ வாழக்கூடாது.” என்றுதான் சொல்லமுடியும்.

சமீபத்தில், பாலு மகேந்திராவின் நினைவில் தூர்தர்ஷன் “முள்ளும் மலரும்” திரையிட்டது. அதில், என்னைத் திருமணம் செய்து கொள் என்று சரத்பாபு ஷோபாவிடம் சொன்னதும், பீரிட்டுக் கிளம்பும் ஒரு பாடல். “அடிப் பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை” – அதன் துவக்க இசையில் இளமை உண்மையிலேயே துள்ளும்.. அந்தக் காட்சியில், சிரிக்கும் இலைகள்.. குலுங்கும் மலர்கள் என மிக அழகாக பாலு மகேந்திரா, ராஜாவுடன் ஒரு டூயட் பாடியிருப்பார்..

ஒரு 2-3 மணிநேரம் இன்பக் கனவில் ஆழ்த்தி விட்டதற்கு நன்றி.

பாலா

முந்தைய கட்டுரைமலேசியா பயணம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 22