அண்ணன் ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த சில வருடங்களாக எங்களை வதைத்து வரும் ஒரு பிரச்சனையைப் பற்றி எழுதியதற்கு நன்றி. நான் ஈழத்தமிழன் அல்லன். ஆனால், என் பால்யத்தில் இருந்து நான் வாழ்ந்து வரும் சமூகம் அது. முதன் முதலாய் ஈழச்சொந்தங்கள் அகதிகளாய் வந்திறங்கிய நாள் இன்னும் என் நினைவில் இருக்கிறது. என்னுடைய வீட்டின் பின்னால் இருக்கும் அகதி முகாம் (ஏதிலிகள் முகாம்) என்பது கிட்டத் தட்ட என்னுடைய வீட்டின் ஒரு பகுதிதான். அங்கே தினமும் ஒரு வேளையெனும் உணவு உண்டிருக்கிறேன். அங்கேதான் நான் வளர்ந்தேன். அங்கிருந்துதான் என்னுடைய அரசியல், இலக்கிய சிந்தனைகளைப் பெற்றேன். அங்கேதான் மன-வன்முறை என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன். ஒருபோதும் மற்ற பகுதியினரால் புரிந்து கொள்ளவே முடியாத வாழ்நிலைகளைக் கண்டதும் அங்கேதான்.
உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஆஸ்பெட்டாஸ் தகடுகளால் அமைக்கப்பட்ட 10*10 அறைகள் அவற்றில் மூன்று பேர் முதல் பத்துப் பேர் வரை இருக்க வேண்டும். தற்போது காங்க்ரீட் வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அரசு தரும் படிகளைக் கொண்டும், அரிசியினைக் கொண்டும் வாழ வேண்டும். எப்போதும் க்யூ பிரிவு போலீசின் கண்காணிப்பு, சந்தேகம் ஏற்பட்டாலே உடனே சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி விடுவார்கள். அதோடு அவ்வளவுதான்.
இப்போது நாம் பேச வேண்டியது பன்முகப்பட்ட பிரச்சனைகளைப் பற்றி.
1. முகாம்களில் இருக்கும் ஈழத்தில் பிறந்த மக்கள்:
இவர்களுக்குத் தங்களை தமிழகத்துடன் அடையாளப் படுத்துவதில் எந்த தடையும் இல்லை. ஆனால் தங்களுக்குப் பின் தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாக ஆகும் என்ற ஒவ்வொருவரும் யோசிக்கின்றனர். இவர்கள்தான் (கொஞ்சம் வெளிநாட்டுத் தொடர்பு உள்ள) பெரும்பாலும் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பவர்கள். முடிவு 10க்கு 3 என்ற அளவில் வெற்றி. மற்றவர்கள் காணாமல்/இறந்து போவார்கள்.
2. மேலே சொன்ன மக்களின் வாரிசுகள் (இந்தியாவில் பிறந்தோர்/ சிறு வயதிலேயே வந்தோர்)
படிப்பதற்கான சூழல் இன்மையால் இடை நிறுத்தம், பொருளாதாரத் தேவைகள் மற்றும் சூழலால் கல்வி இழப்பு போன்றவை அதிகம்.
3. முகாம்களின் வாழிட/ வாழ்வாதாரப் பிரச்சனைகள்:
வேலைக்குச் செல்ல முடியாது, ஆனால் அரசு கொடுக்கும் பரிவுத் தொகையை வைத்து 2 நாள் கூட உணவு உண்ணமுடியாது. அதனால் உள்ளூரில் வேலை செய்வார்கள். காலையும் மாலையும் கையெழுத்து இட வேண்டும். மற்ற முகாம்களுக்குப் போக அனுமதி பெற வேண்டும். பதினைந்து நாளுக்கு ஒருமுறை பரிவுத்தொகை பெறாதோர் பெயர் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். அப்புறம் சேர்ப்பது என்பது புதுப்பதிவு போல்தான். (எளிதானதல்ல)
4. அவர்களின் கல்விப் பிரச்சனைகள்
அரசுப் பள்ளிகள் இருப்பதால் படிப்பார்கள். ஆனால் உயர்நிலைப் பள்ளிகளுக்கு வரும் போது தேவைகள் அதிகமாவதால் வேலைக்குச் செல்வார்கள். அதன் பின் கல்வி முற்றுப் பெற்றுவிடும். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கல்வியை இழப்பது இப்படிதான். இதிலும் மீறி சிலர் படிப்பார்கள் என்னதான் மதிப்பெண்
வாங்கினாலும் கல்லூரிகளில் சேருவது கடினம். முன்பு, இவர்களுக்காக சில இடங்கள் மருத்துவ, பொறியியல், விவசாயப் படிப்புகளில் கொடுக்கப்பட்டது. (ஆமாம் இடஒதுக்கீடுதான்.) கடந்த பத்து ஆண்டுகளில் அதுவும் இல்லை. அப்படி BE (Agri) படித்த ஒரு தம்பி வேலை கொடுக்கப்படாததால் (தனியாரிலும் கூட) வீடுகளுக்கு வர்ணம் பூசும் வேலை செய்தான். பின் கனடாவுக்கு படகில் செல்ல முயன்று கடந்த இரு வருடமாய் எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை. இது நிச்சயம் இடக்கறடக்கல்தான் – உண்மையில் அவன் இறந்திருப்பான். சில நூறு பேராவது இப்படி தான் உயிரை இழந்திருக்கின்றனர்.
5. உடலியல் பிரச்சனைகள்
மிக அதிகமாக கிட்னி சார்ந்த நோய்கள் ஏற்பட்டு இறப்பு, ஆஸ்பெட்டாஸ் மூலம் ஏற்படும் மூச்சு மற்றும் கான்சர் நோய்கள், சரியான மருத்துவ வசதிகள் இன்மையால் ஏற்படும் இறப்புகள், நெருப்பினால் ஏற்படும் விபத்துக்கள்.
6. வேலை வாய்ப்பு
மற்றும் மிக முக்கியமாக
7. “சுதந்திரம்”
செய்யப்பட வேண்டிய மாற்றம் இங்கேதான் ஆரம்பம் ஆகிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் திக்கற்று அகதியாய்ப் போனவர்களுக்குப் பத்து ஆண்டுகளில் குடியுரிமை தருகிறார்கள். ஆனால் நான் 30 ஆண்டுகள் ஆன பின்னும் கூட நாம் நம் சகோதரர்களை அகதியாகவே கொட்டடியில் வைத்திருக்கிறோம். முதலில் அவர்களுக்கு சுதந்திரமாக இருக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். முறையான வேலை செய்யும் அனுமதி வழங்கப்பட்டால், மேலே சொன்ன விசயங்கள் ஒவ்வொன்றாய் அவர்களாலேயே தீர்க்கப்பட்டுவிடும். ஆனால் அதற்கு அவர்கள் இந்தியக் குடி மக்களாய் அறிவிக்கப்பட வேண்டும். இது ஒரு நீண்ட கால வேலை. அதற்கு முன் குறுகிய காலத்தில் வாழ்வாதாரப் பிரச்சனைகளைக் களைய வேண்டும். மிக முக்கியமாக ஈழத்தமிழர் மேல் அக்கறை கொண்டுள்ள அரசியல் அல்லாத இயக்கங்கள் இதை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் இதுவரை ஈழப்பேரழிவிற்கு எதிராகக் குரல் கொடுத்த யாரும், எந்த அரசியல் இயக்கமும் (சில தொண்டு நிறுவனங்கள் தவிர்த்து) இதற்காக முழு மூச்சில் செயல்பட்டதில்லை. அதை எல்லாம் விட முக்கியம் ஈழத்தை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் இதை அரசியல் ஆக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் இது ஈழத்தமிழனின் பிரச்சனை அல்ல, சக மனிதனின் பிரச்சனை.
இந்தக் கட்டுரையை எழுதியதற்கு, எம் முகாம் மக்களின் சார்பில் நன்றி.
அன்புடன்,
பா.சரவணன்