இலங்கை அகதிகள் குடியுரிமை – எதிர்வினைகள்

ஐயா,

உங்களின் வாழ்வுரிமைக்குரல் படித்தேன். மிகவும் மனிதாபிமான அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரையாக நினைக்கின்றேன்.

இதில் காங்கிரஸை திட்டியிருக்க தேவையில்லை. அதைதான் கூட்டம் கூட்டமாக நிறைய இன(!) பற்றாளர்கள் செய்து கொண்டு இருக்கிறார்களே!!.

திபேத் அகதிகளையும், இலங்கை அகதிகளையையும் நேர் செய்தல் சரியாக வருமா என தெரியவில்லை. இலங்கை அகதிகளின் பின்புலத்தில் ஆயுத மோகமும், வன்முறை சாய்வும் உண்டு. அவர்கள் அகதிகளாக புகுந்து குடியுரிமை பெற்ற அனைத்து நாடுகளிலும் தீவிரவாத ஆயுத கும்பலுக்கு நிதி ஆதாரம் தேடும் அமைப்பை உண்டாக்கி உள்ளார்கள். அவர்கள் மீது கட்டுப்பாடான நிலைப்பாடு இந்திய போலீசாரால் உருவாக்க படவில்லையெனில் இந்தியாவிலும் அப்படியான அராஜக அமைப்பை உருவாக்கி இருப்பார்கள்.

தீவு அரசியலில் நிகழ்ந்த ஜனநாயக முடக்கத்துக்கு, மனித வளைய தாக்குதலுக்கு, கல்வி , தொழில் முடக்கத்துக்கு, விதவைகளுக்கு, அனாதை குழந்தைகளுக்கு, ஊனம் உற்றோருக்கு இந்த புலம் பெயர்ந்த நிதியும் காரணமே.

காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு தனக்கு இருக்கும் குறைவான பொருளாதாரத்தில் கல்வி அமைப்புகள், மருத்துவ அமைப்புகள், நீர் ஆதாரங்கள், வேலைவாய்ப்புகள் ,சாலை அமைப்பு, துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு செலவிட்டு கொண்டிருக்கும் பொழுது, பக்கத்து தீவில் இருந்தவர்கள் தாங்கள் உழைத்த பணத்தை ஆயுத கொட்டடிகளில் செலவிட்டு ஒங்காரம் இட்டு கொண்டு இருந்தார்கள்.

காங்கிரஸ் தோல்வி அடைய பலகாரணங்கள் உண்டு. ஆனால் இலங்கையில் ஒரளவு இன்று அமைதி இருக்கிறதென்றால் அதற்கும் இந்தியாவே காரணம். இந்தியாவின் ஜனநாயக பொறுப்பை ஏற்று நடத்திய காங்கிரஸின் நாடாளுமன்றமும், அதன் தலைவர்களுமே காரணம்.

இது போன்ற ஆயுத மோக சாய்வு உடைய மக்கள் அமைப்பை அமைதியை விரும்பும் மண்ணில் அகதியாக வைத்துக்காப்பது மிக கடினமான செயல். காங்கிரஸ் அரசு செய்தது தற்காப்பு செயல். இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா போன்ற பெரிய முதிர்சியான ஜனநாயக அமைப்பும், தேர்ந்த காவல் துறையும் உள்ள தேசங்களிலேயே இந்த புலம் பெயர் தமிழ் கூடடத்தின் பெரும் பகுதி விசம் போல் ஆயுத கலாச்சாரம் பேசி திரிவது கண்கூடு. இந்த வகை வன்முறை மனநிலையை ஜனநாயக படிகளில் தத்தி ஏறி கொண்டு இருந்த இந்திய தமிழ் நிலத்தில் வைத்து இருந்தால் என்னென்ன கேட்டை உண்டாக்கி இருக்குமென தெரியவில்லை.

இந்திய தமிழ் மண்ணில் அரசியல் கொலைகள் செய்ததில் தீவு அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த கொடுமையான பிண அரசியல் வியாதி பரவி இந்த மண்ணின் அரசியலை முடக்காமல் காத்ததில் காங்கிரசின் பங்கு உண்டு.

தீவு தமிழர்கள் உலகமெங்கும் அகதிகளை உருவாக்கி தீவின் குழந்தைகளுக்கு ஆயுதம் வாங்கி கொடுத்து கட்டாய ராணுவத்தில் இணைத்து அழகு பார்த்து கொண்டிருந்த பொழுது, இந்தியாவின் அனைவருக்குமான கல்வி சட்டம் கொண்டு வர காங்கிரஸ் முயன்று கொண்டிருந்தது.தீவின் ஒரே அரசியல் ஜனநாயக தீர்வை உண்டாக்கியதும் காங்கிரஸ் அரசே ஆகும். அந்த அரசியல் தீர்வை காலால் மிதித்து ஆயுத முழக்கம் வீசியதே தீவு தமிழர் குணமாகும்.

தீவு தமிழர்கள் தங்கள் மிரட்டல் மூலமும், பிற போதைபொருள் வழியிலும் சேர்த்த பணத்தை கண்ணிவெடிகளாக மாற்றி வயல்களிலும், சாலைகளிலும் புதைத்து புறநானூறு புகழ் பாடி கொண்டிருந்த பொழுது, காங்கிரஸ் இந்திய தேசம் முழுதும் மக்களை இணைக்கும் சாலைகளையும், துறைமுகங்களையும்,விமான நிலையங்களையையும் மேம்படுத்தி இந்திய தமிழர்களுக்கு உதவியிருக்கின்றது.

வன்கொடுமை சட்டம், மகளிர் சுயமுன்னேற்ற குழு திட்டம் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் சீரமைக்கப்பட்டு தமிழக தமிழரை மேம்படுத்தி கொண்டிருந்த பொழுது புலம் பெயர் தீவு தமிழர் இந்திய வெறுப்பை ஆணவமாக பேசிக் கொண்டு தங்கள் தீவில் உள்ள பெண்களுக்கு ராணுவ திணிப்பு செய்து, லாம்ப் போஸ்ட் தண்டனை போன்ற அராஜக செயல்பாடுக்ளை நியாப்படுத்தும் வரலாற்றை எழுதி கொண்டிருந்தார்கள்.

அமைதியை நாடி வரும் அனைவரையும் இந்த தேசம் உள்வாங்கும் என்பதற்கு திபேத்திய அகதிகளே சான்று. ஆயுதமும், வன்முறையும் சேர்ந்தமைக்க நினைத்தால் இந்த தேசம் அந்த மனநிலையை அஞ்சுகிறது, விலக்கி வைக்கின்றது. ஒவ்வொரு தேசத்துக்கும் தன் அரசியலமைப்பை தற்காத்து கொள்ளும் அவசியம் உண்டு, தீவு தமிழ் தேசிய அரசியல் மனநிலை இந்திய ஜனநாயக அமைப்பினை வெறுக்க கூடியது, வன்முறையை காமம் போல் நுகர்வது. அந்த உணர்வின் எதிர்வினையே அகதி முகாம். தற்காப்பு நடவடிக்கை இன்னமும் மனிதாபிமானத்தோடு இருந்து இருக்கலாம் என்பதில் மறுகருத்தில்லை. காங்கிரஸ் இந்திய தமிழரை காத்து நின்றதற்கு வசவு மிச்சமாதல் அதன் தலையெழுத்து.

உமாசுதன்.D

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று தங்கள் வலைத்தளத்தில் மேற்கண்ட தலைப்பில் வந்துள்ள கட்டுரையை படித்தேன்.
என்ன சொல்ல தங்கள் மூக்கிற்கு அடியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப்பற்றி
கவலைப்படாத,அக்கறைப்படாத தமிழக பிரதான அரசியல் கட்சிகள்/சமூக இயக்கங்கள்,
இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு போராட்டம் நடத்தி கொண்டிருப்பது ‘முரண் நகையாக’ தோன்றுகிறது.கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத இவர்கள் வானத்தை கீறி வைகுண்டம் காட்ட போகிறார்களாம்.(தனி ஈழபோராட்டம்,பொது வாக்கெடுப்பு,ராஜபக்சே மீது விசாரணை,தண்டனை கட்ச தீவு மீட்பு இன்ன பிற!).

தங்கள் கட்டுரையில் எழுப்பியுள்ள தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் நலன்கள் சார்ந்த ஒரு விசயமும் என் கண்ணுக்கு எட்டிய வரை கீழே கொடுத்திருக்கும் சுட்டியில்-பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ .தி.மு.க.கட்சிகளின் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் எங்கும் இல்லை. இருந்தால் மட்டும் என்ன கிழித்துவிடப் போகிறார்கள் என்பது வேறு விஷயம்.

http://aiadmk.com/documents/manifesto/2014/AIADMK-Election-Manifesto-LS-Elections-2014-Tamil.pdf

http://www.dmk.in/DMK-Manifesto-2014-Tamil.pdf

அன்புடன்,

அ .சேஷகிரி.
அன்புள்ள ஜெ,

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை இயக்கம் இரண்டு வருடம் முன்பு இதற்காக ஒரு மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது –

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை: கையெழுத்து இயக்கம்

அகதிகளாக வந்து இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு முழு குடியுரிமை வழங்கக் கோரி, ஸ்ரீஸ்ரீ தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறார். தமிழகஅரசும் இந்தக் கோரிக்கையை சட்ட மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். அடுத்து வரப் போகும் பாஜக தலைமையிலான அரசு முதல் வேலையாக இதை செய்ய வேண்டும்.

அன்புடன்,
ஜடாயு

ஒரு வாழ்வுரிமைக்கோரிக்கை
http://feedly.com/e/7LSoKpXP

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19
அடுத்த கட்டுரைமலேசியாவில் நான் கலந்துகொள்ளும் ஓர் இலக்கியமுகாம்