காந்திய தேசியம் 3

 ஐரோப்பிய சிந்தனையில் எப்படி அரசு என்ற கருத்துருவம் படிப்படியாக வளர்ந்து உருவாகி வந்ததோ அதைப்போலவே, அதற்கிணையாகவே அரசின்மை  [Anarchism ] என்ற கருத்துருவமும் வளர்ந்துருவாகி வந்திருப்பதைக் காணலாம். மேலான அரசாங்கங்கள் குறித்த கனவுகளைப் போலவே அரசில்லா சமூகங்களைப்பற்றிய கனவுகளும் தொடர்ந்து பரிணாமம் கொண்டிருக்கின்றன

 

இதில் கவனிக்க வேண்டியதென்னவென்றால் அரசு என்ற கருத்துருவம் வளர்ந்து வருவதற்கு அரசின்மை என்ற கருத்துருவம் பெரும் பங்களிப்பை ஆற்றியிருக்கிறது என்பதே. அரசு என்ற கருத்தின் எல்லைகள், சாத்தியங்கள், எதிர்மறைக்கூறுகள் ஆகியவற்றை அரசின்மை என்ற கருதுகோள்தான் தொடர்ச்சியாக மறுபரிசீலனைசெய்யவைத்தது. இன்று ஐரோப்பாவில் உள்ள தாராளவாத  அரசுகள் குறித்த முற்போக்கான உருவகங்கள் எல்லாமே அங்கிருந்த அரசின்மையாளர்களிடம் விவாதித்து உருவாக்கபப்ட்டவையே  .இன்று  ஐரோப்பிய அரசு மறுப்புப் போராட்டங்கள் அனைத்திலும் ஆழத்தில் அரசின்மைக் கோட்பாடு உள்ளது என்பதைக் காணலாம்.

அரசு என்ற கருத்து எப்போது உருவானதோ அப்போதே அரசின்மை கோட்பாடுகளும் உருவாகிவிட்டன. இந்தியா அரசின்மைக்கோட்பாடுகளை அரசுக்கோட்பாடுகளை விட அதிகமாக வளர்த்த தேசம். பண்டைய கிரேக்க சிந்தனைகளில் அரசின்மை என்பது ஒரு முக்கியமான கருத்தாக வளர்ந்து வந்திருப்பதைக் காணலாம்.  ஒறுப்புவாதிகள் [Cynics ] கிரேக்க மரபின் அரசின்மை நோக்கை முன்னெடுத்தவர்கள். இயற்கையுடன் ஒன்றி வாழும் எளிய வாழ்க்கையையே அவர்கள் மானுடத்துக்குரியதாக சொன்னார்கள். பணம் அதிகாரம் புகழ் ஆகிய மூன்றையும் முற்றிலுமாகத்துறப்பதே அதற்கான வழி என்றார்கள்.

மெய்யறிவுவாதம் [Gnosticism] என்று சொல்லப்பட்ட கிரேக்க சிந்தனை மரபு மனிதர்கள் தன்னளவில் அதிதூய ஆத்மாக்கள் என்றும், லௌகீக உலகின் இழிவுகளிலும் கீழ்மைகளிலும் அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், உலகியலில் இருந்து விடுவித்துக்கொண்டு தங்கள் ஆன்மாவை தூய்மைப்படுத்திக்கொள்வதே மீட்பு என்றும் வாதிட்டது.மெய்யறிவுவாத சிந்தனைகளில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. இவர்களும் சமூக அமைப்பையும் அரசையும் எதிர்த்த அரசின்மைவாதிகளே.

ஐரோப்பாவில் நவீன அரசுகளைப்பற்றிய விவாதங்கள் வலுவாக உருவான பதினேழு ,பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அரசின்மைக் கோட்பாடுகளும் பலவகையான விரிவாக்கங்களைப் பெற்று நவீன அரசியல்தரப்புகளாக உருவாகி வந்தன. அரசின்மையாளர்களில் இன்று பல்வேறுவகையான தத்துவநிலைபாடுகள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். முழுமுற்றான அரசின்மைக்காக வாதிடுபவர்கள், அறிவுலகம் அரசின்மையில் செயல்படவேண்டும் என வாதிடுபவர்கள், அரசுக்கு அப்பாற்பட்ட குழுக்களுக்காக வாதிடுபவர்கள், வரம்பில்லாத வாழ்க்கைக்காக வாதிடுபவர்கள் என அவர்கள் பல ரகம்.

பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பொதுவாக அரசு இல்லாத அமைப்புகளைப் பற்றிய ஆர்வம் ஐரோப்பாவில் தீவிரமாக இருந்திருக்கிறது. முற்றதிகாரம் கொண்ட மன்னர்களின் ஆட்சி மற்றும் கிறித்தவசபைகளின் ஆட்சி ஆகியவற்றுக்கு மாற்றாக இதைப்பற்றி சிந்தனைசெய்திருக்கிறார்கள். அரசு இல்லாமல் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளும் பல வகையான கிறித்தவ குழுக்கள் இக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் உதயமாயின. இவற்றை பொதுவாக மெய்யறிவுவாத கிறித்தவர்கள் என்கிறார்கள். தூய்மைவாதக் கிறித்தவர்கள் என்பதும் உண்டு.

அவர்கள் அரசதிகாரத்தை எதிர்த்தமையால் அரசாலும் கிறித்தவ பெரும்சபைகளாலும் வேட்டையாடப்பட்டார்கள். அவர்களில் கணிசமானவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்கா ஆஸ்திரேலியா கனடா போன்ற புத்துலகங்களில் குடியேறினார்கள்.  அமெரிக்காவில் பாஸ்டன் அவ்வாறு தூய்மைவாத கிறித்தவர்கள் குடியேறிய முக்கியமான ஊர். பின்னாளில் தோரோ, எமர்சன் போன்ற அரசின்மையாளர்கள் அந்த மரப்ல் இருந்தே உருவானார்கள். நவீன அரசின்மைக் கோட்பாடுகளின் விளைநிலமாக பாஸ்டன் மாறியது. இன்றும் அமெரிக்காவின் அரசின்மைசிந்தனைகளின் மையமாக பாஸ்டன் இருக்கிறது.

அரசாங்கம் ஏதோ ஒருவகையில் பொருளிழந்து உதிர்ந்துவிடும் என்ற எண்ணம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிந்தனையாளர்கள் நடுவே பிரபலமாக இருந்தது. கதே, லோக், ஹோப்ஸ், லோக், வால்டேர், ரூஸோ, ஹெகல், நீட்சே, ரஸ்கின், ஜெ.எஸ்.மில் போன்ற சிந்தனையாளர்கள் அனைவருமே எப்படி அரசின்மை சாத்தியமாக்கூடும் என்று தங்கள் நோக்கில்  சிந்தனை செய்திருக்கிறார்கள். அந்த சிந்தனைப்போக்கை ஒட்டித்தான்  கார்ல் மார்க்ஸ் கம்யூனிச சமூக அமைப்பின் உச்சத்தில் அரசு உதிர்ந்து போகும் என்று சொன்னார். நவீனத்தொழில்நுட்பம் உலகை ஒருங்கிணைத்து ஒரே சமூகமாக ஆக்கிவிடும் என்றும் அதன் விளைவாக அரசில்லாத புவிச்சமூகம் உருவாகும் என்றும் எண்ணினார்கள். தொழில்நுட்பத்தை நம்பிய அனைவரிடமும் அந்த நம்பிக்கை ஒருவகையில் இருந்தது.

உலகப்போர்கள் நடந்து அரசுகள் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மேலும் வலுவான ராணுவக்கட்டுமானங்களாக ஆவதைக் கண்டபின்னர்  இந்த எண்ணப்போக்கு நேர் தலைகீழாகத் திரும்பியது. அசாதாரணமான வல்லமை கொண்ட எதிர்கால அரசுகளைப் பற்றிய அச்சங்கள் உருவாயின. ஜார்ஜ் ஆர்வலின் ‘1984’ இந்த எண்ணப்போக்கை மிகச்சிறப்பாக முன்வைத்த நாவல். ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘துணிச்சலான புத்துலகம்’ [Brave New world] இன்னொரு குறிப்பிடத்தக்க நாவல். இன்றுவரை அறிவியல் புனைகதைகளின் பிரபலமான கருவாக இருப்பது அதிநவீன தொழில்நுட்பம் மூலம் உருவாகச்சாத்தியமான  முழுமுற்றதிகாரம் கொண்ட எதிர்கால அரசுகளைப்பற்றிய ஊகங்களே.

இந்த ஐயங்கள் அரசு மேல் உள்ள அவநம்பிக்கையை மேலும் பெருக்கின. முதல் உலகப்போருக்குப்பின்னர்தான் ஐரோப்பாவில் அரசின்மைவாதம் மேலும் வீச்சை பெற்றது. இன்று உலகமெங்கும் பலவகையான அரசின்மைவாதக்குழுக்கள் செயல்பட்டுவருகின்றன

 

இரண்டுவகை அரசின்மைகள்

 பொதுவாக ஐரோப்பிய அரசின்மைவாதிகள் அனைவரையும் பொதுவாக இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம்.  ஒன்று புரட்சிகர அரசின்மையாளர்கள். இரண்டு,  தன்நெறி அரசின்மையாளர்கள். புரட்சிகரமான அரசின்மைவாதிகள் பொதுவாக தகர்ப்பாளர்கள். இருந்துகொண்டிருக்கும் அரசாங்க அமைப்பையும் அதற்கு அடித்தளமாக இருக்கும் மனநிலைகளையும் ஆசாரங்களையும் தகர்ப்பதே அவர்களின் இயல்பாக இருக்கிறது.

இத்தகைய சிந்தனைகளுக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைபவர் இவான் துர்கனேவ் எழுதிய ‘தந்தையும் தனயர்களும்  என்ற நாவலின் மையக்கதாபாத்திரமான பஸரோவ். ‘நீங்கள் அனைத்தையும் தகர்ப்பது பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் தகர்த்தால் என்ன மிஞ்சும்? வேறெந்த அமைப்பை நீங்கள் பதிலுக்கு முன்வைக்கிறீர்கள்?’ என்று பசரோவின் நண்பன் அர்க்காதியின் அப்பா கேட்கையில் பஸரோவ் மூச்சுத்திணறி ஆவேசத்துடன் சொல்கிறார். ”நாங்கள் அதைப்பற்றி யோசிக்கவில்லை. இப்போது இதை தகர்த்து எறிவோம். இது பயனற்ற வெற்றுக்குப்பை. இது அழியட்டும். இடிபாடுகளில் இருந்து மானுடம் புதிதாக எதையேனும் கட்டிக்கொள்ளட்டும். அது தேவைக்குரிய உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்”

தன் கொள்கையைப்பற்றி பஸரோவ் சொல்கிறான், ”நான் எதிர்க்கிறேன். அனைத்தையும். அதற்கு காரணம் வேண்டுமென்பதில்லை. அவை இருக்கின்றன என்பதற்காகவே எதிர்க்கிறேன்” இந்த நிலைபாடு  மறுப்புவாதம் [Nihilism] என்று துர்கனேவால் சொல்லப்பட்டது. பின்னர் ஒரு தத்துவக்கலைச்சொல்லாகவே ஆகிவிட்டது. மறுப்புவாதிகள்தான் ஐரோப்பாவின் ஆரம்பகட்டப் புரட்சியாளர்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதம்,அரசியல்,தத்துவம் மூன்று துறைகளிலும் புரட்சியாளர்கள் ஊடுருவினர். ஏற்கப்பட்ட அனைத்தையும் தகர்க்க முற்பட்டனர். ஒவ்வொன்றையும் தங்கள் பிடிக்குள் கொண்டுவந்துவிடலாம் என்றும் ஒவ்வொன்றையும் புதிதாக உருவாக்கிவிடலாம் என்றும் அவர்கள் கனவு கண்டார்கள். இவர்களை அன்றைய அமைப்பு மிகக்கொடுமையான அடக்குமுறைகள் மூலம் எதிர்கொண்டது. ஆனால் அவற்றையும் மீறி பல தேசங்களில் இவர்கள் அரசையும் அமைப்பையும் கைப்பற்றினார்கள்.

புரட்சிகரமான அரசின்மைவாதிகளுக்கும் தாராளஅரசுவாதிகளுக்கும் இடையே பெரும்பாலும் நல்ல புரிதல் இருந்தது. இந்த புரிதலை நாம் உலகம் முழுக்க காணலாம். தாராள அரசு வாதிகள் புரட்சிகர அரசின்மைவாதிகளை தங்களைப்போலவே மாற்றத்தை விரும்புகிறவர்களாகக் கருதினார்கள். மிகச்சிறந்த உதாரணம் என்றால் பிரெஞ்சுப்புரட்சிதான். அது தாராளவாதிகளும் புரட்சியாளர்களும் இணைந்து நடத்திய ஒன்று. தாராளவாதிகள் கையில் இருந்து புரட்சிகர அரசின்மைவாதிகள் கைக்கு அது சென்று சேர்ந்தது.

மார்க்சியம் புரட்சிகர அரசின்மைவாதத்தின் இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த உதாரணம். செவ்வியல் மார்க்ஸியம் அரசின்மைக் கோட்பாட்டில் அழுத்தமாக ஊன்றிய ஒன்று. அதுவே ருஷ்யாவிலும் சீனாவிலும் உலகத்தின் மிகவும் பலம் பொருந்திய அரசுகளை அமைத்தது என்பது ஆச்சரியமானதே. மார்க்ஸின் கொள்கையின்படி தொழிலாளர்களின் முற்றதிகாரம் உருவாகும். அது ஏற்கனவே இருக்கும் அரசு மற்றும் அரசு சார்பான அமைப்புகளை தகர்த்து எறியும். அந்த வெற்றிடத்தில் மக்கள் உழைப்பாளர் குழுமங்களாக [ commune]  அமைந்து தங்களைத் தாங்களே ஆண்டுகொண்டு வாழ்வார்கள். அரசு உதிர்ந்து மறையும்.

இரண்டாவது வகை அரசின்மைவாதம் தன்விலக்கம் சார்ந்தது..மைய ஓட்டமாக உள்ள பண்பாட்டையும்  அதன் அரசு அமைப்பையும் நிராகரித்து விலகி தங்களுக்கு உகந்த மாற்றுச் சமூக அமைப்புகளை அமைத்துக்கொள்பவர்களை தன்விலக்க அரசின்மையாளர்கள் என்று சொல்லலாம். இந்த வகையான அரசின்மையாளர்களின் மரபுத்தொடர்ச்சி கிரேக்க ஒறுப்பியலில் உள்ளது.

மிகச்சிறந்த உதாரணம் கிரேக்க தத்துவ ஞானியான டயோனிசியஸின் கதை.[ Dionysius ] ஒரு மாட்டுவண்டி அருகே வெறுந்தெருவில் படுத்திருந்த அவரிடம் கிரேக்க மாமன்னன் அலக்ஸாண்டர் நீங்கள் ஏன் வேலைசெய்யக்கூடாது என்று கேட்டதாகவும் அவர் ஏன் வேலை செய்யவேண்டும் என்று கேட்டபோது பணம், அதிகாரம், புகழ் ஆகியவற்றுக்காக  என்றான் அவன். அவை எதற்காக என்ற கேள்விக்கு மனமகிழ்ச்சிக்காக என்றான். இப்போதே எனக்கு பூரணமான மனமகிழ்ச்சி உள்ளதே என்றார் அவர். உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும் என மாமன்னன் கேட்டபோது அந்த வண்டி இளவெயிலை மறைக்கிறது, சற்றே விலக்கி வைத்துவிட்டுப்போ என்றாராம் டயோனியஸ்.

கிறித்தவ மரபுக்குள்  மெய்யறிவுவாத கிறித்தவம் ஒரு தனி போக்காக நெடுங்காலம் நீடித்தது . இவர்களும் தன்விலக்க அரசின்மைவாதிகளே .இக்குழுக்கள் மைய கிறித்தவ ஓட்டத்திற்கு எதிராக தங்கள் கிறித்தவ சிற்றமைப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். இவர்கள் பெரிய தேவாலயங்கள், கூட்டுவழிபாடுகள் முதலியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிய முழுக்களாக தனிச் சமூகங்களாக வாழ்ந்தனர். கடுமையான நெறிகளை கடைப்பிடித்தனர். உபவாசம், தூக்கம் தவிர்த்தல் , தவம் போன்றவற்றை தங்கள் வழியாக முன்வைத்தார்கள்.அவர்களுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை கடுமையான ஒடுக்குமுறைகளை பயன்படுத்தியது.ஆனால் பின்னர் அம்மரபுகள் கத்தோலிக்க பெருமரபுக்குள் இழுக்கப்பட்டன. ஹெர்மிட்டேஜ், அபே என்றெல்லாம் சொல்லப்பட்ட தவமடங்கள் இந்த மரபுகளின் உருவாக்கமே. புலன் ஒடுக்கம் என்பது கத்தோலிக்க மதத்திலும் ஒரு பெரும் ஆசாரமாக ஆகியது. புனித ·ப்ரான்ஸிஸ் அதற்கு வழியமைத்தார்

 

.நவீன ஐரோப்பா உருவாகி வந்தபோது இவ்விரு அரசின்மைகளும் இருவகையில் வளர்ந்து பல்வேறு சாத்தியக்கூறுகளை கண்டடைந்தன. ஜனநாயக சிந்தனையின் விதைகளை பரப்பியவர்கள் என்று சொல்லபப்டுகிற  லோக் போன்றவர்களே பொருள்முதல்வாதத்தின் முன்னோடிகளாகவும் இருந்தார்கள். மறுப்புவாதமும் பொருள்முதல் வாதமும் கைகோர்த்துக்கொண்டன. ஏனென்றால் அக்காலகட்டத்தில் எல்லாவகையான அமைப்புகளும் கருத்துமுதல்வாதம் சார்ந்தவையாக இருந்தன. ஒரு மையக்கருத்தின் வெளிவிளக்கமாகவே அமைப்புகள் கருதப்பட்டன. அந்த மையக்கருத்து இன்றியமையாததாகவும் புனிதமானதாகவும் கருதப்பட்டது. ஆகவே பொருள்முதல்வாதம், நிரூபண வாதம் பேசியவர்களில் ஒருசாரார் கடுமையான மறுப்புவாதிகளாக ஆனார்கள். அவர்களை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தத்துவக் கலகக் காரர்கள் எனலாம். ·பாயர்பாக் அவர்களில் ஒருவர்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த தத்துவ மோதல்களை இந்த எளிமையான வகைப்பாட்டில் இருந்து மேலும் மேலும் சிக்கலாக ஆக்கியபடியே செல்லலாம்.. உதாரணமாக மார்க்ஸியத்தின் தத்துவப் பரிணாமத்தை இப்படிச் சொல்லலாம். ·பாயர்பாக் முன்வைத்த தூய பொருள்முதல்வாத அரசின்மைக் கோட்பாட்டில் இருந்து மார்க்ஸ் ஆரம்பிக்கிறார்.  ஹெகெல் வரலாற்றின் இயக்கத்திற்கு ஒரு நோக்கமும் திசைவேகமும் உண்டு என்ற கருத்துமுதல்வாத தரப்பை முன்வைத்தார். வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற  ஹெகலின் கோட்பாட்டின் வளார்ச்சிநிலையாகவே மார்க்ஸ் முரணியக்க வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என் தத்துவத்தை உருவாக்கினார். பொருளியல் ஆற்றல்களின் முரணியக்கத்தாலேயே வரலாற்றின் முன்னகர்வு சாத்தியமாகிறது என விளக்கினார். அதாவது பொருள்முதல்வாதச் சிந்தனைகளும் கருத்துமுதல்வாதச் சிந்தனைகளும் ஒன்றை ஒன்று உள்வாங்கி வளார்வதை நாம் இக்காலகட்டத்தில் காண்கிறோம்.

இவ்வாறு மறுப்புவாதமாக ஆரம்பித்த மார்க்ஸின் கோட்பாடு புரட்சிகர அரசின்மைவாதமாக விரிவு பெற்று தாராளவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு பல இடங்களில் ஜனநாயகக் கோரிக்கையாக செயல்பட்டது. பல இடங்களில் மையத்தேசியத்துக்கான கோரிக்கையாக விளக்கவும்பட்டது.  ஆனால் லெனின் மூலம் அது மையஅதிகார அரசாங்கமாக ஆகியது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில்  இருவகை அரசின்மை உருவகங்களும் ஒன்றுடன் ஒன்றுபலவகையிலும் கலந்து ஏராளமான கருத்துநிலைகளை உருவாக்கியிருந்தன. பலவகையான புரட்சிகர அரசின்மைக் குழுக்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. அவற்றில் தொழிலாளர்களின் குழுமியங்களும் [communes] அடக்கம்.  அத்தகைய குழுமியங்கள் எதிர்கால அரசில்லாத சமூகத்தின் மாதிரிகளாக எண்ணப்பட்டன. புருதோன்வாதிகள், ஃபேபியன் குமுகத்தினர் போன்றவர்கள் அத்தகைய சில சமூகக்குழுக்களை விரிவாக உருவாக்குவதைப் பற்றிய கனவுகளை முன்வைத்தார்கள். அவர்களுடன் விவாதித்த மார்க்ஸ் ‘குழுமியவாதம்’ என்று பெயர் சூட்டப் பெற்ற கம்யூனிச கோட்பாடுகளை அவற்றைச் சார்ந்தே உருவாக்கினார்.

ப்ரெஞ்சு தத்துவ சிந்தனையாளரான புருதோன் [Pierre-Joseph Proudhon]தன்னை ஒரு அரசின்மைவாதியாக அறிவித்துக்கொண்டவர். மார்க்ஸியக் கோட்பாடுகள் மேல் ஆரம்பத்தில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவர்’உடைமை என்பது திருட்டே’ என்ற அவரது வரி பிரபலமானது. ‘புரூதோனுக்கு மறுப்பு’ என்றபேரில் சோவியத் வெளியீடாக வந்துள்ல நூலில் கார்ல் மார்க்ஸ் உடைமையில்லாத சமூக குழுக்களை அமைக்கும் புருதோனின் சிந்தனைகளை மறுத்து, மேலும் விரிவான வரலாற்றுப் பார்வையில், தனியுடைமைகளே இல்லா ஒட்டுமொத்தச் சமூக அமைப்பை முன்வைக்கிறார்.

இந்தக்காலகட்டத்தின் கலைஞர்கள் சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்களை அரசின்மைவாதம் கவர்ந்திருக்கிறது. அரசின்மையும்,. சுதந்திரமும், படைப்பூக்கமும்  பிரிக்க முடியாதவையாகவே கருதபப்ட்டன. ஃபேபியன் குமுகம் ஒரு முக்கியமான கருத்தாக பேசபப்ட்ட நாட்களில் ஜார்ஜ் பெர்னாட் ஷா, வெர்ஜீனியா வுல்ஃப், போன்ற பல பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் அந்தக்கருத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். நெடுங்காலம் அரசின்மைக்குழுமங்களை கற்பனைசெய்த எழுத்துக்கள் அமெரிக்காவிலும் வந்துகொன்டிருந்தன.

 உதாரணமாக ஜான் ஸ்டீன்பெர்க்கின் கோபத்திராட்சைகள் [The Grapes of Wrath, John Steinbeck] என்ற புகழ்பெற்ற அமெரிக்க நாவல். இது காலத்தால் பிந்தியது. என்றாலும் அது ஐரோப்பியக் கனவுகளை பின்பற்றுகிறது. இதில் கேசி [Jim Casy] என்ற ஒரு முன்னாள் பாதிரியாரின் தலைமையில் தொழிலாளர்கள் ஒரு குழுமியத்தை உருவாக்கி ஒரு ‘இலட்சிய அரசின்மைச் சமூகத்தை’ உருவாக்குவதன் சித்திரம் உள்ளது. கேஸிக்கு ஸ்டீன்பர்க் ஏசுகிறிஸ்துவின் சாயலை அளித்துள்ளமையும் கவனத்திற்குரியது.

அரசு இல்லாத சமூகங்களை அமைக்கும் முயற்சியின் விளைவாகவே பழங்குடிச்சமூகங்கள் மேல் தனியான கவனம் விழுந்தது. அவற்றில் எப்படி அரசு என்ற உருவத்தின் வேர்கள் உள்ளன, உருக்கொள்கின்றன என்ற ஆய்வுகள் உருவாயின.இந்தக்காலகட்டத்தை நவீன அரசதிகாரம் குறித்த மையக்கருத்துக்கள் அனைத்துமே உருவான ஒரு காலம் என்று சொல்லமுடியும் . இன்றும்கூட நவீன அரசியல் கருத்துக்களை வடிவமைத்த, அரசதிகாரம் மற்றும் குடிமையதிகாரம் குறித்த கோட்பாடுகளை உருவாக்கிய, பெரும்பாலான சிந்தனையாளர்களில் அரசின்மை கொள்கை ஆழமான செல்வாக்கைச் செலுத்திருப்பதைக் காணலாம். உதாரணம், மிஷேல் ஃபூக்கோ, நோம் சாம்ஸ்கி.

புரட்சிகர அரசின்மைவாதிகள் பெரும்பாலான இடங்களில் தாராள அரசுக்காக போராடியவர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். ஆனால் ஜெர்மனியின் நாஜிக்களும் புரட்சிகர அரசின்மைவாதிகளின் பெரும்பாலான கோஷங்களை தாங்களும் எழுப்பியே முற்றதிகாரத்தைப் பிடித்தார்கள். இந்தக்கலவை ஒவ்வொரு குழுவிலும் ஒவ்வொரு வகையில் செயல்பட்டதைக் காணலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘நடையர்’ ஜான் ஸ்டுவர்ட் [John “Walking” Stewart]  நவீன இயற்கைவாத அரசின்மையாளார்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தவர்.  மிகசுவாரசியமான வாழ்க்கை கொண்டவர் ஜான் ஸ்டுவர்ட். இந்தியாவில் சென்னையில் பிரிட்டிஷ் அரசில் ஒரு குமாஸ்தாவாகப் பணியாற்றியவர் இந்தியாவில் சில யோகிகளால் கவரப்பட்டார். அதன் பின்னர் சென்னையிலிருந்து கிளம்பி கால்நடையாகவே பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தான் சென்று அரேபியாவில் நுழைந்து ஐரோப்பாவுக்குச் சென்றார். இதன் வழியாக மனிதனின் இயற்கைவாழ்க்கையைப்பற்றிய அரசினமைக் கோட்பாடு ஒன்றை உருவாக்கிக் கொண்டார். அது அக்கால பிரிட்டனில் உள்ள அரசின்மைவாதிகளை பெரிதும் கவர்ந்திருக்கிறது

ஜான் ஸ்டுவர்ட்  இயற்கையில் உள்ள ஒவ்வொன்றிலும் ஒரு உட்கருத்து அவற்றின் அமைப்பிலேயெ உள்ளது என வாதிட்டார். அதைப்புரிந்துகொண்டு அதற்கேற்ப மனிதன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் மட்டுமே சிக்கல் இல்லாத சீரான வாழ்க்கை அவனுக்கு அமையும். அவரது சிந்தனைகளின் பாதிப்பு     ஐரோப்பிய இயற்கை வாதிகள் அனைவரிடமும் உண்டு. காந்தி கூட அவரது ‘நடைப்பித்தை’ ஸ்டுவர்ட்டிடம் இருந்து பெற்றுக்கொன்டிருக்கலாம் . தோரோ அவரது முன்மாதிரிடாகக் கொண்டது மில் அவர்களையே. இன்றுவரை உலகம் எங்கும் உள்ள இயற்கைவாதிகளுக்கு தோரோ முக்கியமான முன்னுதாரணம். உலக அளவில் இன்று தன்விலக்க அரசின்மைவாதம் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் இயற்கைவாதிகளே

 

தேசியத்தலைவர்களும் தேசிய உருவகங்களும்

இந்திய சுதந்திர்ப்போராட்டத்தின் பின்புலத்தில் ஒவ்வொரு தலைவரையும் அவர் மனதில் இருந்த தேசிய உருவகம் என்ன என்பதை வைத்தே நம் புரிந்துகொள்ள வேண்டும். இப்பிரிவினை முழுமுற்றானதாக இருக்காது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். அவர்களின் பேச்சு செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் அரசு உருவகம் பெரும்பாலும் இந்தத் தரப்பைச் சார்ந்தது என்று ஊகித்து வரையறைசெய்துகொள்வது அன்றைய விவாதச்சூழலைப் புரிந்துகொள்ள உதவிகரமானது என்று மட்டுமே கொள்ள வேண்டும்.

மையத்தேசியவாதத்தின் மிகச்சிறந்த உதாரணமாக அமைபவர் சாவார்க்கர். 1905-1909 வாக்கில் லண்டனில் இருந்த சாவார்க்கர் ஐரோப்பாவில் அன்று உருவாகி வந்த மையத்தேசியவாதத்தை மிகவும் கூர்ந்து கவனித்து அத்தகைய ஒன்றை இந்தியாவிலும் உருவாக்கும் கனவை வளர்த்துக்கொண்டார். இதில் ஆர்வமூட்டும் கூறு என்னவென்றால் சாவார்க்கருக்கு முன்னுதாரணமாக அமைந்தது பிரிட்டிஷ் மையத்தேசியம் உருவாக்கிய சாம்ராஜ்யமே. அதைத்தான் அவர் எதிர்த்துப் போராடினார், ஆனால் அதைத்தான் அவர் தன் தரப்பாக உருவாக்கவும் எண்ணினார் — ஓர் இந்து சாம்ராஜ்யம் ! அந்தக்கனவு சாவார்க்கரில் இருந்து வளர்ந்து ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கமாக ஆகி இன்று வரை இந்திய அரசியலில் ஒரு மைய விசையாக நீடிக்கிறது.

இரண்டாவது தாராள தேசியவாதத்தின் மிகச்சிறந்த உதாரணமாக அமைபவர் நேருதான். நேரு தன் வாழ்நாளெல்லாம் கனவுகண்டது முழுமையான ஒரு தாராளவாத-நலம்நாடி அரசையே எனலாம். இந்திய சுதந்திரத்தின் ஆரம்ப காலங்களில் அவருக்கு இந்திய சமூகத்தின் முழுமையான ஆதரவு இருந்தது. அந்நிலையில் அவர் முற்றதிகாரம் நோக்கிச் செல்லும் உணர்வை அடைவதற்குப் பதிலாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவின் குடியாட்சி அமைப்புகளை வலுவாக நிறுவத்தான் முயற்சி செய்தார். இந்தியக் குடியாட்சியின் மையத்தூண்களாக இன்றும் இருக்கும் தேர்தல் ஆணையம், தணிக்கைத்துறை, நீதிமன்றம், இதழியல் போன்ற பல அமைப்புகள் இன்றும் அரசியல்சட்ட பாதுகாப்புடன் சுதந்திரமாகச் செயல்படும் தளத்தை அமைத்தவர் அவரே. ஆகவே இந்தியக் குடியாட்சியின் சிற்பியும் அவரே

இந்திய அரசின்மைவாதிகளில் மறுப்புவாதம் சார்ந்த அணுகுமுறைக்கு மிகச்சிறந்த உதாரணம் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் அவர்களையே சொல்லவேண்டும். முழுமையான மறுப்பாளராகவும் கலகக்காரராகவுமே அவர் இருந்தார். எதையும் கட்டி எழுப்ப அவர் முயன்றதில்லை. பின்னர் அவர் பெயரால் கட்டி எழுப்பப்பட்ட அனைத்துக்குமே அவர் எதிரானவர் என அவரது எழுத்துக்கள் காட்டுகின்றன. ஈ.வே.ரா எல்லாவகையிலும் ஓர் அரசின்மைவாதியாகவே இருந்தார். எந்த ஒரு அரசு உருவகமும் அவரை உள்ளடக்கியதாக அமைய முடியாது. அவர் பெயரால் உருவான அரசுக்குக்கூட அவர் வெளியேதான் இருந்தார்.

ஒருங்கிணைக்கபப்ட்ட எச்சிந்தனை மேலும் அவர் ஐயப்பட்டார். மரபான எதையும் அவர் ஏற்க மறுத்தார். வலியுறுத்தப்பட்ட எதையுமே முன்விளைவு பின்விளைவுகளைப் பார்க்காமல் எதிர்த்தார். அவரது முன்னுதாரணங்கள் ஐரோப்பாவில்தான் இருந்தன என்றாலும் அவரது மன அமைப்பு இந்திய சார்வாக மரபைச் சேர்ந்தது. மறுப்பே அவரது தத்துவம் என்று சொல்லலாம். ஐரோப்பிய சிந்தனையாளர்களைப்போல அவ்ரும் மறுப்புவாதத்தை பொருள்முதல்வாதச் சிந்தனைகளின் அடிப்படையில் அமைத்துக்கொண்டார். ஈ.வே.ரா அவர்கள் பகுத்தரிவுவாதம் என்று சொன்னது மறுப்பு நோக்கம் கொண்ட பொருள்முதல்வாத அமைப்பையே. அவருக்கும் அவர்காலகட்ட மார்க்ஸியர்களுக்கும் இடையே இருந்த முரண்பாடு என்பது இதுதான். அவர் மார்க்ஸியர்கள் ஐரோப்பாவில் நிராகரித்து முன்னே சென்றுவிட்டிருந்த பொருள்முதல்வாத மறுப்புவாதத்தைச் சேர்ந்தவர்.

இந்தியாவின் புரட்சிகர அரசின்மைவாதிகளில் முக்கியமான ஒரு முன்னுதாரணம் ஜெயப்பிரகாஷ் நாராயணன். கடைசிவரை  அமைப்புமனிதராக மாற மறுத்து தன்னை ஒரு நிரந்தர எதிர்ப்பாளராகவே நிறுத்திக்கொண்டவர் அவர். அவரே உருவாக்கிய ஜனதா அரசுகூட அவருக்கு உவப்பானதாக அமையவில்லை. தெளிவாக விளக்கவில்லை என்றாலும் எப்போதும் ஜெயப்பிரகாஷ் நாராயணன்  தீராத புரட்சிகரம் ஒன்றையே தன் அரசியலாக கொண்டிருந்தார். அதைத்தான் அவர் ‘முழுப்புரட்சி’ என்று எப்போதும் சொல்லிவந்தார். எல்லா தளங்களிலும் தலைகீழ் மாற்றம் என்பதே அவர் உத்தேசித்தது. அவரில் இருந்த அரசின்மையும் அதன் விளைவான கட்டுப்பாடின்மையும் அவரை எந்த அமைப்புக்குள்ளும் அடங்க மறுத்து தனிமனிதராகவே கடைசிவரை நீடிக்கச்செய்தன.

இந்திய இடதுசாரி இயக்கங்கலுக்குள் பல வகையான அரசின்மைவாதிகளை நாம் காணமுடியும். உதாரணமாக கேரள கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆரம்ப காலத்து தலைவரான கெ.பி.ஆர் கோபாலனைச் சொல்லலாம். அவர் நிரந்தரமான புரட்சிவாதி. அவரால் ஏற்க முடிந்த ஓர் அரசுருவகமே கிடையாது எனலாம். சோஷலிஸ்டுகளில் அபப்டி பலர் இருந்தார்கள். யு.ஆர்.அனந்தமூர்த்தியின் நாவலான ‘அவஸ்தே’ அத்தகைய ஓர் அரசின்மைவாதியின் வாழ்க்கையைப் பற்றிய வலுவான சித்தரிப்பு. ஆனால் இந்திய இடதுசாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அரசின்மைக்காக போராடவில்லை. ருஷ்யாவில் வலுவான மையத்தேசியம் உருவான பிறகே இந்தியாவில் பொதுவுடைமை சிந்தனை ஆரம்பிக்கிறது. ஆகவே இங்கே அது புரட்சிகர மையத்தேசியமாகவே முன்வைக்கப்பட்டது.

இந்த நான்கு அரசுக் கருத்தியல்களில் பலவகையான கலவைகளை நாம் நம்முடைய அரசியல் முன்னோடிகளில் காணலாம். இவர்களை இவ்வாறு அவர்கள் முன்வைக்கும் அரசு மாதிரி என்ன என்று பிரித்துக்கொண்டோமென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு இடையேயான உறவுகளையும் ஒவ்வொருவரும் எடுத்த நிலைபாடுகளையும் இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். சாவார்க்கரின் மையத்தேசிய உருவகமே இன்று வரை இந்துதேசியவாதத்தின் அடிப்படை. சியாமபிரசாத் முகர்ஜி, தீ ன்தயாள் உபாத்யாயா முதல் அத்வானி வரை அதுவே தொடர்கிறது. ஆனால் நாம் வாஜ்பாய் அவர்களின் அரசியலுரைகளை வாசிக்கையில் அவரது மனம் தாராளவாத அரசு ஒன்றையே முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறது என்பதைக் காணலாம்.

 முன்னோடிகளில் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு மையத்தேசிய உருவகத்தையே மனதில் கொண்டிருந்தார். இந்தியாவின் பண்பாட்டு மேன்மை மற்றும் உலகத்தலைமை வகிக்க அதற்கிருக்கும் வரலாற்றுத்தகுதி ஆகியவற்றைப் பற்றி அவர் ஆவேசமாகப் பேசிவந்தது அதையே காட்டுகிறது.சாராம்சத்தில் சுபாஷ் காந்தியைவிட சாவார்க்கருக்கே நெருக்கமானவர்.

அதேபோல ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக வந்த அம்பேத்கார் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளை உருவாக்குவதில் நேருவுக்கு உதவியவர். ஜனநாயகத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். ஆனால் மையத்தேசிய அரசே அவரது மனதில் இருந்தது. அரசியல் நிர்ணயசபை விவாதங்களில் அதிகாரப்பரவலாக்கம் சார்ந்த எந்த ஒரு கருத்தையும் அவர் மறுத்து நிராகரிப்பதைக் காணலாம். மகாவீர் தியாகி போன்றவர்கள் அம்பேத்கார் இந்திய அரசியல் சட்டத்தில் காந்தியத்தை முற்றாகவே கழுவி விட்டுவிட்டார் என்று குற்றம் சாட்டினார்கள். அம்பேத்காரைப் பொறுத்தவரை முற்போக்கு எண்ணம் கொண்ட ஒரு மைய அரசு,  தன் எல்லா உட்கூறுகளையும் வலுவான அதிகாரம் மூலம் வழிநடத்தும் அரசே சிறப்பானது. உட்கூறுகளுக்கு ஜனநாயக உரிமைகள் அளிக்கப்பட்டால் அது மையத்தை வலிமையிழக்கச் செய்து அதன் முன்னகர்வை தடைசெய்யும். இது சாராம்சத்தில் ‘தத்துவவாதியான ஆட்சியாளன்’ என்ற பிளேட்டோவின் குடியரசுக் கோட்பாட்டில் இருந்தே ஆரம்பிக்கிறது

இக்காரணத்தால் அம்பேத்காருக்கு எப்போதுமே ஹிந்துமகாசபையுடன் நல்லுறவு இருந்திருக்கிறது. ஹிந்து மகாசபையின் டாக்டர் மூஞ்சேயுடன் அவர் அரசியல் உடன்பாடுகளுக்கு வந்திருக்கிறார். இந்து மகாசபையினரின் மகாராஷ்டிரப்பற்று அவரையும் ஒரு மராட்டியப்புதல்வராக காண முற்பட்டிருக்கிறது. அம்பேத்காரின் வரலாற்றில் இந்த அம்சம் இன்று பேசப்படுவதில்லை. 1952ல் அம்பேத்கார் கடைசியாக தேர்தலில் நின்றபோது அவருக்கு பின்னர் பாரதீய மஸ்தூர் சங்கை நிறுவிய ஆர்.எஸ்.எஸ்காரரான தத்தோபந்த் டெங்கடி தேர்தல் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

அதேபோல பட்டேலையும் சொல்லலாம். காந்தியின் மாணவராக அரசியலில் விளங்கிய பட்டேல் ஜனநாயக நோக்கையே பிரதானமாகக் கொண்டிருந்தார். ஆனால் அவரது அகம் நாடிய அரசு என்பது மையத்தேசிய அரசே. இந்தியாவை இன்றைய உறுதியான மைய அரசாங்கமாக ஆக்கியவர் அவரே. இக்காரணத்தால் பட்டேலுக்கும் ஹிந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்பால் ஓரு மதிப்பு இருந்தது. அவர்களின் இந்துதேசியம் என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை என்றாலும் பண்பாடு சார்ந்த மையத்தேசிய உருவகத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஆனால் நேரு கடைசிவரை இந்துதேசியவாதிகளை சற்றும் ஏற்க முடியாதவராக இருந்தார். அவரது மனச்சாய்வு புரட்சிகர அரசின்மையையும் புரட்சிவாதிகளையும் ஏற்றுக்கொள்வதாக இருந்தது. அவரது கடுமையான விமரிசகர்களாக இருந்தாலும் அவருக்கு சோஷலிஸ்டுகளிடம் பெரிய மனவேறுபாடுகள் இருக்கவில்லை. இந்திய இடதுசாரிகளுக்கு நேரு அரசியல் எதிரியாக இருந்தாலும்  அவர் அவர்களுக்குப் பிடித்தவராகவே இருந்தார். அவர்கள் படேலை காங்கிரஸின் வலதுசாரிமுகமாகவும் நேருவை இடதுசாரி முகமாகவும் பார்த்தார்கள்.

ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ்.ஜோதிபாஸ¤ , சி.அச்சுதமேனன் போன்ற மார்க்ஸிய பெருந்தலைவர்களைப் பார்க்கையில் அவர்கள் மார்க்சியக் கருத்தியலின் உள்ளே இருந்தாலும் அவர்களின் அரசியல் கருத்துருவம் என்பது தாராளவாத அரசே என்பதைக் காணலாம். அவர்கள் ஜனநாயகவாதிகளாகவே கடைசிவரை இருந்திருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களின் ஆழத்தில் நேரு மீது ஒரு பிரியம் இருந்துகொண்டிருந்தது.

இந்தியாவின் தன்விலக்க அரசின்மைவாதிகளில் முதன்மையானவர் காந்தி. இன்றும் அரசின்மை சார்ந்த மாற்று அமைப்புகளை அல்லது குழுக்களை உருவாக்கும் அனைவரிலுமே ஏதேனும் ஒருவழியில் காந்தியின் வலுவான பாதிப்பு இருந்துகொண்டிருக்கும். காந்தி லண்டனில் இருந்தபோது அவரை மிகவும் ஆழமாகப் பாதித்தவர்கள் இயற்கைசார்ந்த தன்விலக்க அரசின்மைக் கருத்துக்களை முன்வைத்தவர்களான தல்ஸ்தோய், ரஸ்கின், தோரோ போன்றவர்கள். நடையர் ஜான் ஸ்டுவர்ட்டின் சிந்தனைகளின் நேரடிப்பாதிப்பையும் நாம் காந்தியில் காணாலாம். அதாவது காந்தி ஓர் அரசை உருவாக்க முயன்றவரல்ல. அவர் அரசுவாதியே அல்ல. அவர் அரசின்மைவாதி. ‘அடிப்படையில் காந்தியம் என்பது ஓர் அராஜகம். அதை எந்த ஒரு அரசு அமைப்பும் எதிரியாகவே கருதும்’ என்று அதை சரியாகவே அஷிஷ் நந்தி சுட்டிக்காட்டுகிறார்.

எதிர்கால இந்தியாவைப்பற்றிய காந்தியின் கனவு அங்கிருந்தே ஆரம்பிக்கிறது. அவரது ‘ஹிந்துசுயராஜ்ய’த்தின் வேர் அந்த ஐரோப்பிய  அரசின்மைவாத  மரபிலேயே உள்ளது.

[மேலும்]

முந்தைய கட்டுரைபசும்பொன்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைகண்ணகி நடந்த மதுரை