மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் பொய்கள்

1. விருதுகளினால் இலக்கிய மதிப்புகள் தீர்மானமாவதில்லை. ஆகவே எனக்கு விருதுகளில் நாட்டமில்லை. சென்ற வருடத்திய விருது — க்குக் கொடுக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே

2. எனக்கும் மற்ற மூத்த எழுத்தாளர் — க்கும் காழ்ப்பும் போட்டியும் நிலவுவதாகச் சொல்லப்படுவது அவதூறு. நான் அவருடன் உண்மையில் மிகுந்த நட்பு கொண்டவன். அவர் என் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார் தெரியுமா?

3. நல்ல எழுத்தாளனாக இருக்க நிறையப் படிக்க வேண்டும். நான் நிறையவே படிப்பேன்.[என் நூல்களை]

4. இன்றைய இலக்கியப் போக்குகளை ஊன்றி கவனித்து வருகிறேன். சிறு பையன்கள் எழுதுவதையெல்லாம்கூடப் படிக்கிறேன்

5. இளம் எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுகிறார்கள். குறிப்பாக – – – ஆகியோர் அருமையாக எழுதுகிறார்கள். அவர்களுடைய எழுத்தில் உள்ள சுதந்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

6. இளம் எழுத்தாளர்களுக்கும் எனக்கும் நடுவே தலைமுறை இடைவெளி ஏதும் இல்லை. சொல்லப்போனால் எனக்கு இளம் எழுத்தாளர்களின் நடுவேதான் சுதந்திரமே இருக்கிறது

7. பாராட்டி எழுதும் விமரிசனங்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிப்பதில்லை

8. எழுத்தாளர்  — எழுதிய நூலுக்கு நான் முன்னுரை எழுத நேர்ந்ததனால் அதைப் பாராட்டவில்லை. உண்மையிலேயே அது எனக்குப் பிடித்த நூல்

9. தலித் எழுத்தாளர்கள் நம்மை நிராகரிப்பது நியாயம்தானே. அவர்களின் வரலாற்று வலி அப்படிப்பட்டது

10 .என்னை விமரிசிக்கும் உரிமை எல்லாருக்கும் உண்டு. என் விமரிசகர்களும் என் நண்பர்களே

11.நான் ஒருபோதும் சன்மானத்தை வைத்துப் பத்திரிகைகளை அளப்பதில்லை.

12. நான் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்ததே இல்லை

13. நான் எழுத வந்ததே விபத்துதான். — சொல்லித்தான் நான் எழுதுவது இலக்கியம் என்றே எனக்கு தெரியும். எழுத வந்ததில் எனக்கு மகிழ்ச்சி இல்லை

14. விமரிசகர்  — என்னைத் தூக்கி விட்டதாகச் சொல்லப்படுவது பொய். அவர் என் நண்பர். அவரை நான் நேர் பேச்சில் கடுமையாக விமரிசிப்பேன் தெரியுமா?

15.நான் எந்த இலக்கியக் குழுக்களிலும் இல்லை. இலக்கியத்தில் குழு அரசியல் அபாயகரமானது

16. இலக்கிய வம்புகளை நான் படிபப்தே இல்லை

17. நான் எழுதுவது எனக்காகவே.

18. என் மனைவி நான் எழுதுவதை விரும்பிப் படிப்பாள்

19. என் கடிதங்களைத் தொகுப்பதை நான் விரும்பவில்லை.

20. எனக்குப் பாராட்டுக்கூட்டங்கள் விமரிசனக் கூட்டங்கள் ஆகியவற்றில் நாட்டமே இல்லை. அவற்றில் பொய்யான புகழுரைகள் பேசப்படுகின்றன

21.ஓர் எழுத்தாளனாக எனக்கு நிறைவு உள்ளது. நான் எழுதிய படைப்புகள் ஆயிரம் வருடம் நிற்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு

22.நான் என்னை வயதானவனாக உணர்வதில்லை

23. எனக்கு அரசியலில் நம்பிக்கை இல்லை.

24. எனக்கு சாதி மத நம்பிக்கைகள் இல்லை. என் குழந்தைகள் கலப்புத் திருமணம் செய்துகொண்டால் ஆதரிப்பேன். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்த மாட்டேன்

25. நான் டிவி சீரியல்கள் பார்ப்பதே இல்லை.[அதில் வரும் பெண்களை ஏறிட்டும் பார்க்க மாட்டேன்]

இன்னொரு இணைப்பில் இதை எழுதத் தூண்டிய கட்டுரை

இளம் பேராசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள்

http://ommachi.wordpress.com/2008/04/30/ilam-peraciriyargal-kurum/

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2010

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 23
அடுத்த கட்டுரைபேய்களின் உலகம்