பசும்பொன்: கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு
 
”தேவர் அவர் தேசத்துக்குச் செய்த தியாகங்களுக்காக அத்தனை சாதியினராலும் இந்தியாவில் உள்ள அத்தனை மக்களாலும் மதிப்புடனும், அவர் தங்களுக்கும் தலைவர் என்னும் பிரியத்துடனும் நினைவுகூரப்படுவதே அவருக்குச் செய்யும் நியாயம் ஆகும்.”
 
நான் படித்த வரையில் அவர் அனைத்திந்திய ஃபார்வர்டு பிளாக்கில் இயங்கினாலும் ஒட்டு மொத்த இந்தியாவுக்காக என்ன தியாகம் செய்தார் என்பது விளங்கவில்லை. தொழிற்சங்க வேலை நிறுத்தம், காங்கிரஸ் விரோதம் மற்றும் இமானுவல் கொலை போன்ற பிரச்சனைகளுக்காக சிறை சென்றிருக்கிறார். காந்தியின் காங்கிரஸை மறுத்த அவர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டாரா என்று தெரியவில்லை. போஸுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். அவர் பெரும்பாலும் சுயசாதி வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார். அதைக் கொண்டு வளர்ந்திருக்கிறார். இந்திய மக்கள் ஒட்டு மொத்தமாக அவருக்கு எந்த விதத்தில் கடன்பட்டுள்ளார்கள்?
 
மேலும் 1957-இல் முதுகுளத்தூரில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நடந்த மறவர்-தலித் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டன. தொடர்ந்து நடந்த அமைதிக் கருத்தரங்கில் தலித் தலைவர் இமானுவல் கொல்லப்படுகிறார். இதை ஒன்றையுமே தேவர் இருந்த போதே அவரால் தடுக்க முடியவில்லையே? சொல்லப்போனால் இமானுவேல் வழக்கில் தேவரே சிறை செல்கிறார். இதற்கு பின்னுள்ள உண்மையை ஆதாரமின்றி கற்பனை செய்ய எனக்கு விருப்பமில்லை. தேவர் ஜெயந்தியின் போதான கலவரச்சூழல் அவரது காலகட்டத்து பூசலின் தொடர்ச்சியாகவே எனக்கு படுகிறது. தேவர் இளைஞர்கள் வன்மத்தால் எழுதப்பட்ட வரலாற்றில் மாட்டிக் கொண்டவர்கள். அதிலிருந்து விடுபட நகரமயமாக்கல் நிகழ்ந்து அவர்கள் பொருளாதார அனுகூலத்துக்காக பொது நீரோட்டத்தில் பெரும்ளவு கலந்தால் உண்டு. சிரமம் தான்; ஆனால் நடக்கலாம். 


Regards
R.Abilash
http://thiruttusavi.blogspot.com/
 
 
 
அன்புள்ள அபிலாஷ் சந்திரன்

இன்னும் கொஞ்ச நளில் காமராஜரைப் பற்றியும் இதேபோன்ற வரலாற்றுச் சந்தேகங்கள் எழும் என நினைக்கிறேன். தலைவர்களை சாதிச்சிறைக்குள் அடைக்கும் முயற்சியின் விளைவு. நான் அம்பேத்காரைப் பற்றி எழுதியபோதும் இதை எதிர்கொண்டேன். அவர் தலித்துக்களின் தலைவர் என்பதற்கு மேல் அவரது பங்களிப்பு குறித்து எவருக்குமே தெரியவில்லை.

முத்துராமலிங்கத் தேவர் மிக இளம் வயதிலேயே  அரசியலுக்கு வந்தவர். அன்று அவரது சாதியைச்சேர்ந்த மக்கள் மீதிருந்த கொடுமையான குற்ற பரம்பரைச் சட்டத்துக்கு எதிராக போராடியபடித்தான் அவரது அரசியல் முக்கியத்துவம் உருவாகியது. குற்றபரம்பரைச் சட்டத்தை தீவிரமாக ஆதரித்து மேலும் பரப்ப முயன்ற ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிராகவே தேவர் காங்கிரஸில் சேர்ந்தார்.

ஆனால் ஒரு காங்கிரஸ் தலைவராகவும் போராளியாகவும் அவர் தேவர் சதியின் நலன்களுக்காக மட்டுமே போராடுபவரக இருக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் தென்னாட்டில் காங்கிரஸே அவரை நம்பித்தான் இருந்தது. அவர் காங்கிரஸின் எல்லா போராட்டங்களிலும் முன்னணி போராளியாக இருந்திருக்கிறார். அதேசமயம் காங்கிரஸில் பிளவுகள் உருவாகும் நேரங்களில் பலமுறை பதவிகளை துறந்து சமரசம் செய்துகொண்டுமிருக்கிறார். நாம் வரலற்றில் காணும் தேவர் பதவி மோகம் இல்லாத தீவிரமான் ஊழியர்

அவர் தன்னளவில் சாதி வெறிக்கு அப்பாற்பட்டவரகவே இருந்தார் என்பதற்கு பல ஆதர்ங்கள் உள்ளன. அவரே ஆலயப்பிரவேச போராட்டத்தை நடத்தியிருக்கிறார். பள்ளர்கள் பறையர்கள் உள்ளிட்ட பிற சதியினரை ஒருங்கிணைக்க களப்பணி ஆற்றியிருக்கிறார். அவரைப்பற்றிய்ய காங்கிரஸ் பதிவுகள் எல்லாமே அவரை ஒரு அயராத போராளியாகவே சித்தரிக்கின்றன. அவரது எதிரியான ராஜாஜியின் குறிப்புகள் கூட
அவரது அரசியல் தவரு அவர் ஃபார்வர்டு பிளக்குக்குச் சென்றது . அது அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதை அன்று எவரும் ஊகித்திருக்க முடியாது. சுபாஷ் நட்டை விட்டு ஓடியதுடன் இந்தியாவில் ஃபார்வர்டு பிளாக் உறைந்துவிட்டது

தேவர் காந்தியை ஏற்கவில்லை, காரணம் அவரது மனம் அகிம்சை போராட்டத்தை நம்பவில்லை. ஆனல் அவர் காங்கிரஸில் இருந்த நாள் வரை காந்தியின் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்

முதுகுளத்தூர் நிகழ்ச்சி குறித்தெல்லாம் விரிவாகவே எழுதவேண்டும். ஆனல் ஒன்றை மட்டும் கவனிக்க வேண்டும். பல்வேறு தனிச்சதிகளான தேவர்கள் ஒன்றாக அனது பிரிட்ட்ஷ் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலமே. அவரக்ளுக்கிடையே இன்றுகூட ஒருங்கிணைப்பு இல்லை. அப்படியானால்  ஐம்பதுகளில் என்ன நிலை நிலவியிருக்கும்? தேவர் தன் சாதியையும் தேவர் சாதிக்குழுக்களையும் முழுக்க கட்டுப்படுத்தும் நிலையில் எப்போதுமே இருந்ததில்லை.

தேவருக்கு இருக்கும் கடவுள் பிம்பம் கடந்த இருபது வருடங்களில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான்

ஜெ 

 

 

 

மதிப்பிற்குரிய ஜெ,
 
பசும்பொன் கிராமத்துக்கு நீங்கள் போயிருந்த கதை வசந்தகுமார் சொல்லி அறிந்திருந்தேன். அங்கிருந்து 10 கி.மீ. சாலை வழி (அல்லது ஐந்து கி.மீ. குறுக்கு வழி) தெற்கே போனால் என்னை ஈன்ற கிராமம் வந்துவிடும். என்றாலும் பசும்பொன் அளவிலேயே எங்கள் நாட்டு நிலவளம் கண்டிருப்பீர்கள். எங்கள் திக்கத்து செல்வ வளம் கண்டிருப்பீர்கள். இந்த லட்சணத்திலும் எங்கள் மக்களின் வீராப்பும் கண்டிருப்பீர்கள். வேறு என்ன செய்ய? எங்கள் இன்மையை இட்டு நிரப்ப ஐயாவைச் சாதித் தலைவர் ஆக்கிவிட்டோம்.
 
எங்கள் குழந்தை சௌந்தர்யாவுக்கு அக்டோபர் 29 பிறந்த நாள். அவளைப் பெற்றவன் அதற்காக சென்னை வந்திருந்த இடத்தில், குருபூஜை காரணமாக அவனைச் சிறைப்பிடிக்க உத்தரவு வந்திருக்கிறது என்று காவல் நிலையத்தில் இருந்து தகவல் வர (உள்ளூர் பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கிறான்) அவன் குழந்தையை அழ விட்டுவிட்டு ஊர் திரும்பிவிட்டான். 
 
காமராஜரை இரண்டு விஷயங்களுக்காக நான் வெறுக்கிறேன்: 1) காட்டுக் கருவேல (வேலிக் கருவேல) விதைகளைத் தூவ அனுமதித்ததற்காக, 2) கீழத்தூவலில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் காரணம் உருவான 1958 சாதிக் கலவரத்துக்காக. இத் தகவல்கள் மறுக்கப்படலாம். அன்று எனக்கு வயது மூன்றுதான், ஆனால் எரியும் கிராமங்கள் இன்னும் என் கண்ணுக்குள் திகுதிகுக்கின்றன. எனக்கு அடுத்துப் பிறந்த என் தம்பி ஒருவனைச் சாகக் கொடுத்த நாளும் அதுவே. 
 
‘தேடல்’ ஜோதிவினாயகம் தாய்தந்தையர் நான் முதுகுளத்தூர்ப் பக்கம் என்றதும் முதலில் என்னைக் கொண்டையங் கோட்டையன் என்று கருதினார்கள் (அவர்கள் அது). இல்லை, நான் பள்ளன் என்றதும் பிறகும் அவர்கள் இன்னும் மிகையாகவே அன்பு காட்டினார்கள். மறவ மள்ளர் காலத்தவர்களோ என்னவோ! ஆனால் காமராஜர் காலத்துக்கு முன்னரே இரு சாதிகளுக்கு இடையிலும் பகை உண்டு என்று ஒரு முறை கோணங்கி சொன்னார். வரலாறு தெரியாதவன் நான்.
 
எங்கள் சௌந்தர்யாவின் அம்மாவழித் தாத்தா, அதாவது எங்கள் அக்கா கணவர் பெயர் இராமலிங்கம் (எம்.எல்.ஏ). எங்கள் அத்தை, பசும்பொன் தேவரின் பெயரை அவருக்கு இட்டார்கள். இன்று பாருங்கள் குருபூஜை நாளில் ஒரு அடக்குமுறை கால்பரப்பி நிற்கிறது. கொண்டாடப்படவேண்டிய ஒரு நாள் அச்சமூட்டுவதாக மாற்றப்பட்டிருக்கிறது. காமராஜர் நாடார் தலைவர் ஆகித் தீர்ந்தது போல இவரும் சாதித் தலைவர் ஆகிப் போனார். என்ன சொல்ல?
 
– ராஜசுந்தரராஜன்

அன்புள்ள ராஜ சுந்தர ராஜன்

ஒவ்வொன்றுக்கும் அதற்கான காரணங்கள் அக்காலத்தில் இருந்திருக்கும். நான் காமராஜரின் நோக்கங்களை ஐயப்பட மாட்டேன்

1950 களில் தமிழகத்தில் காடழிவு மிக உக்கிரமாக இருந்தது. 1943 பெரும் பஞ்சத்துக்குக் காரணங்களில் ஒன்று அதற்கு முந்தைய பெரும் பஞ்சங்களில் விறகுக்காக மக்கள் எல்லா மரங்களையும் வெட்டி தமிழகத்தை மொட்டையாக்கியதுதான். ஆகவே மிக அதிகமக விறகு உற்பத்திசெய்யும் ஒரு மரம் தேவைப்பட்டது. அதற்காகவே சீமைக்கருவேலம் அறிமுகமாகியது

இன்றும் தமிழகக் காடுகளைக் காப்பது சீமைக்கருவேலமே. அதன் விலை காட்டுகிறகின் விலையை விட குறைவாக இருப்பதே காடுகளை விறகாக ஆகாமல் காக்கிறது.

அகவே ஒருபோதும் வரலாற்றை ஒற்றை தனியனுபவங்களைக் கொண்டு அளவிடதீர்கள். எல்லா விஷயங்களிலும்
ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

பசும்பொன் பற்றிய கட்டுரை காலத்தின் தேவை
இது போன்றதொரு கட்டுரையை மூன்று வருடங்களுக்கு முன்பு தினமலர் செய்தி மலரில் எழுதினேன். பின்னர் சில மாற்றங்களோடு உயிரோசையில் அதை வெளியிட்டேன். இப்போது அந்தக் கட்டுரை எனது வேறு வேறு உலகங்கள் என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அதை வெளியிட்ட அன்று எழுத்தாளர் சுரேஷ்குமார் தேவரைப் பற்றிய எனது மதிப்பீட்டை ஏற்றுக் கொள்ள முடியாத மதிப்பீடு எனக் கூறினார் என்பதை நினைவூட்டி இத்துடன் இணைத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
அ.ராமசாமி.

பதற்றமாகும் நினைவு நாட்கள்

அ.ராமசாமி

ஜெயந்தி என்பது வேறொன்றும் இல்லை. பிறந்த நாள் தான். பிறந்த நாளை, பிறந்த நாள் என்று கொண்டாடுவதற்குப் பதிலாக ஜெயந்தி என்று கொண்டாடுவது வெறும் பெயரளவு மாற்றம் அல்ல. ஜெயந்தி என்ற சமஸ்கிருதச் சொல்லால் பிறந்த நாள் அழைக்கப்படும் போது சமஸ்கிருதமயமாக்கப் பட்டதாக மாறி மேல்நிலையாக்கமும் பெறுகிறது. அதனால் சமஸ்கிருதக் கருத்தியலும் சேர்ந்து கொள்கிறது . பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வெறும் மனிதர்களுக்கானது. ஜெயந்தி மனிதர்களுக் கானதல்ல; மகான்களுக்கானது என்பது அதன் உள்கிடை.

கிருஷ்ணனின் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என வைணவ சமய நம்பிக்கை கொண்டவர்கள் கொண்டாடுவது போல மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்த நாளை இந்தியா கொண்டாடத் தொடங்கிய போது அவர் காந்திமகான் ஆனார் என்பதை நாம் அறிவோம். தனது சொந்த வாழ்க்கையைப் பொதுவாழ்க்கைக்கு உரியதாகக் கொடுத்த அவர் அதற்கீடாகப் பெற்றுத் தர விரும்பியது இந்திய தேசத்தின் மனிதர்களுக்கான அரசியல் விடுதலை மட்டும் அல்ல. தேசத்தின் மக்களைப் பாகுபடுத்தி வந்த சமய, சாதி, இன வேறுபாடுகள் சார்ந்த கீழ்மைகளையும் இல்லாததாக ஆக்கும் சமூக விடுதலையையும் தான்.

அகிம்சை, உண்மை பேசுதல், எளிமையான வாழ்க்கை முறை என நடைமுறைச் சாத்தியங்களற்ற  தனிமனிதக் கொள்கைகளைக் காந்தி முன் மொழிந்தார் என்ற விமரிசனங்கள் அவர் மீது உண்டு . ஆனால் அவை தனது நலம்,தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் அரசுப்பதவிகளைப் பெற்றுத் தருவது ,  தனது சாதியின் மேலாண்மையை நிறுவுதல், தனது மதத்தின் மீதான பெருமையைக் கூறி அடுத்த மதத்தினரை அச்சுறுத்துவது, தனது தேசத்தின் வல்லாண்மையை ஏற்றுக் கொள்ளும்படி பிற நாடுகளைக் கட்டுப் படுத்துவது போன்ற  பரப்புரைகள் என்று யாரும் குற்றம் சாட்டியதில்லை.  அவருடைய பரப்புரைகள் இவற்றையெல்லாம் ஒழிப்பதற்கான வழிமுறைகள் என்று நம்பியதால் இந்திய தேசம் மட்டும் அல்ல இந்த உலகமே அவரை மகாத்மா என்று கொண்டாடியது; கொண்டாடுகிறது.

தனிமனித வாழ்க்கையில் காந்தியின் பரப்புரைகள் பின்பற்றப் படவில்லை; அரசியல் வெளியோ பின்பற்றப் பட வேண்டும் என்ற சிந்தனைகள் கூட  இல்லாமல் எதிர்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. என்றாலும் அவரது நோக்கங்கள் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவனாகக் கருதப் படுகின்றன. அவரது ஜெயந்திக்குப் பின் இருக்கும் மகான் என்ற அடையாளம் ஏற்கப்பட்டுப் பலகாலம் ஆகி விட்டது. இன்று அக்டோபர் இரண்டு இந்திய தேசத்தின் பொதுச் சடங்காக ஆகி இருக்கிறது. அரசுகள் ஒவ்வொன்றும் அதனைக் கொண்டாடுகின்றன.

காந்தி பிறந்த நாள் அக்டோபர் இரண்டு. ஆங்கிலக் காலண்டரின் பத்தாவது மாதம்¢. அம்மாதத்திற்கு 31 நாட்கள் உண்டு. முதல் தேதிக்கு அடுத்த நாள் காந்தி ஜெயந்தி .அந்த மாதத்தின் கடைசித் தேதிக்கு முந்திய நாள் தேவர் ஜெயந்தி. தேவர் பிறந்த நாளை தேவர் குருபூஜை எனக் கொண்டாடி வந்த அவரது கட்சித் தொண்டர்களும் அவரது சாதியினரும் அந்தப் பெயரை விட்டுவிட்டு  ஜெயந்தி என்பதற்கு மாறி விட்டனர். அப்படி மாறியதால் அவர் அந்த சாதிக்கும் அவர் நடத்திய பார்வர்ட் பிளாக் என்ற கட்சிக்கும் உரியவராக இருந்த நிலை மாறிப் பொது மனிதராக மாறியிருக்கிறார்; மாற்றப் பட்டிருக்கிறார். அனைத்துக் கட்சிகளும் அரசும் ஒரு தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் தான் அவர்,வெறும் மனிதர் என்ற நிலையில்  இருந்து  மாமனிதராக மாறும் நிலை ஏற்படுகிறது.

காந்தியின் அடையாளங்கள் பலவற்றில் ஒத்த தன்மையுடையவர் முத்துராமலிங்கத் தேவர். அவரும் ஆங்கிலக் காலனிய ஆதிக்கத்திற்கெதிராக நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. அவரது போராட்டம் காந்தீய வழியிலானது  அல்ல. காந்திய வழியை விமரிசித்து மாற்று வழியை முன் மொழிந்த சுபாஸ் சந்திர போஸின் வழியிலானது. தேவரின் செயல்பாடுகள் தமிழகம் என்ற சிறிய வெளியில் இருந்தது என்றாலும் தேசியத்தின் மீதும் , காந்திக்கு இருந்த தெய்வ பக்தியின் மீதும் இவருக்கும் மிகுந்த ஈடுபாடு உண்டு. வியாபார குழுக்களின் நலனை முன்னிறுத்திய காந்தியின் போராட்டங்கள் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றவை. அதே போல் தேவரின் முக்கியப் போராட்டமான ரேகைச் சட்ட எதிர்ப்பு தேசிய அடையாளம் கொண்டது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள்  உறுதி செய்துள்ளனர்.

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இனக்குழுக்களை- சாதிகளை- அடக்குவதற்காகப் போடப் பட்ட சட்டம் தான் ரேகைச் சட்டம் என அழைக்கப் பட்ட குற்ற பரம்பரைச் சட்டம். அதன்படி ஆங்கில அரசாங்கம் அடங்க மறுத்த இனக்குழுக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் காவல் நிலையங் களையும் சிறைகளையும் ஏற்படுத்தியது. ஆங்கிலேயர்கள் காலத்தில் பாளையங்கோட்டை, மதுரை, கடலூர், வேலூர் போன்ற சிறைகள் உருவாக்கப் பட்ட பின்னணியில் இந்தக் குற்றப் பரம்பரைச் சட்டமும் அந்தப் பகுதியில் அடங்க மறுத்த இனக்குழுக்களாக வன்னியர், கள்ளர், மறவர், குறவர்  போன்ற குழுக்களும்   இருந்தன.

குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப் பட வேண்டும் எனப் போராடிய தேவர் , அம்மக்களுக்குச் சலுகைகள் வழங்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் கூட முன் வைத்தார். அதன் மூலம் அவர்கள் கற்க  வேண்டும்; புதிய புதிய வெளிகளுக்குள் பயணம் செய்ய வேண்டும்; ஒதுக்கப் பட்டவர்களாக இருந்த நிலை மாற வேண்டும்; அனைவரோடும் கலந்து மக்களாட்சியின் பலனை அவர்கள் பெற வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கைகளின் பின் இருந்த நோக்கங்கள். அதாவது ஜனநாயகத்திற்கு ஏற்றவர்களாக மாற்றுவது என்பது தான் அதன் அடிப்படை நோக்கம். ஆனால் நடைமுறை எதார்த்தம் வேறாக இருக்கிறது. மக்களை விடுவிக்கப் போராடிய தலைவர்களை இன்று சுயநலம் சார்ந்த மனிதர்கள் சாதிக் கூண்டுக்குள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் இன்று சாதியத் தலைவர்களாக ஆக்கப்படும் ஆபத்து நடந்து கொண்டிருக்கிறது.

காலனிய அடையாளத்தைத் தூக்கி எறியப் போராடிய பல தலைவர்களின் இலக்குகள் விடுதலைக்குப் பின்பு பல்வேறு காரணங்களால் திசைமாற்றம் பெற்றன என்பதும் கூட உண்மைதான். புதிதாக அறிமுகமான ஜனநாயக நடைமுறையைச் சரியாகப் புரிந்து கொள்ளாத கூட்டத்தை வழி நடத்தத் திணறிய அவர்கள் , தன்னை ஏற்றுக் கொண்ட கூட்டத்தின் போக்கிற்கு வளைந்து கொடுத்த நிலைகளும் கூட ஏற்பட்டன. காலனியவாதிகளை விரட்டிய அதே நிலை பாட்டை ஐரோப்பிய கருத்தியல் நிலைபாடான ஜனநாயகத்தின் மீதும் காட்டி வெறுப்புடன் பலர் விமரிசித்தனர். இந்தியப் பாரம்பரியம் என்ற பெயரில் சாதிய வேறுபாடுகளும், பெண்ணடிமைத் தனமும் கூட இங்கு ஏற்றுக் கொள்ளப் படுகின்ற போக்கு காணப்பட்டது; காணப்படுகிறது.

தேவரின் பிற்கால அரசியலை இத்தகைய பின்னணியில்  விளங்கிக் கொள்ளாமல், தனது சாதியின் ஆதிக்கத்திற்காகப் போராடியவர் என்று விளங்கிக் கொண்டதின் விளைவுகளால் தான் தமிழ் நாட்டுக் கிராமங்களின் தெருக்கள் சாதிக் கோடுகளால் பிளவு பட்டுக் கிடக்கின்றன. தொடர்ந்து அந்த வேலையை வெவ்வேறு இயக்கங்களும் தனி நபர்களும் செய்து கொண்டு போகும் போது மாமனிதரின் அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கப்படும் ஆபத்தும் ஏற்பட்டு விடும்.

தேவர் ஜெயந்தி நாளான அக்டோபர் 30 தென் தமிழ்நாட்டிற்குப் பதற்ற நாட்களுள் ஒன்றாகி  ஆண்டுகள் பல ஆகி விட்டது போல் ஜூலை 23 திருநெல்வேலியின் பதற்ற தினமாகிப் பத்தாண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்த நாள் மற்றும் ஒரு நாள் தான் . ஆனால் திருநெல்வேலியில் வசிப்பவர்கள் அப்படி நினைத்¢துவிட முடியாது. அதுவும் நீங்கள் வீட்டை விட்டு வெளியேறி பேருந்து மூலமாகவோ, இரு சக்கர வாகனம் மூலமாகவோ நகரத்தின் பல இடங்களுக்கும் சென்று வரக்கூடிய பணி எதிலாவது ஈடுபடும் நபராக இருந்தால், நிச்சயம் அந்த நாளை இன்னொரு நாளாக எண்ணி மறந்து விட முடியாது. நகரத்தின் நுழைவுகளிலும் நாற்சந்திகளிலும் அரசு அதிகாரக் கேந்திரங்களிலும் நிற்கும் காவல்துறையினரின் கண்காணிப்பும் உசார்களும் உங்களை நினைவு களுக்குள் திருப்பி விட்டு விடும். குறிப்பாகத் தாமிரபரணியாற்றுப் பாலத்தின் வழியாகச் செல்ல நேர்ந்தால் காவல்துறையினரின் கூடுதல் கண்காணிப்பு உங்கள் கவனத்தைக் கவராமல் போகாது.

 திருநெல்வேலி மக்களின் மனதில் மறந்து விட முடியாத நாளாக அந்த ஜூலை 23 இல்  நெல்லை சந்திப்பிலிருந்து கிளம்பிய அந்தப் பேரணி மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசின் தலையீடு தேவை என்பதை வலியுறுத்தியது. டாக்டர் கே.கிருஷ்ண சாமியின் தலைமையில் செயல்பட்ட புதிய தமிழகம் கட்சியே மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்கை எடுத்த இயக்கம். அன்று அவ்வியக்கம் தேர்தல் கூட்டணி வைத்திருந்த மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் , தமிழக முஸ்ல¦ம் முன்னேற்றக்கழகம் போன்றனவும், இடது கம்யூனிஸ்டுக் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவும்,பல தன்னார்வ நிறுவனங்களும் பேரணியில் பங்கேற்றன.

பேரணி ஜனநாயகப் போராட்ட வடிவங்களில் ஒன்று என்ற அடிப்படியில் தான் இவையனைத்தும் கலந்து கொண்டிருக்கும்.பேரணியின் முடிவில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தரப்படும் மனு அரசின் கவனத்தை மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையின் பக்கம் திருப்பி விடும் என்ற நம்பிக்கையும் கூட அவர்களுக்கு இருந்திருக்கும். ஆனால் அந்த நம்பிக்கை, பேரணி முடிவதற்குள் சிதறடிக்கப்பட்டது. பேரணி மையப்படுத்திய மாஞ்சோலைப் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டு அந்தப் பேரணியே ஒரு பெரும் பிரச்சினையாக மாறியது. தாமிரபரணி ஆற்றின் நீருக்குத் தாகமெடுத்ததால், குண்டடிபட்டும் தடியடிபட்டும் மிதிக்கப்பட்டும் விசிறியடிக்கப்பட்ட பதினேழு மனித உடல்களால் நதியின் தாகம் தீர்க்கப்பட்டது.

அன்று முதல் திருநெல்வேலியில்  சாவு என்ற சொல்லின் பொருளை மாற்றி எழுதும் வித்தையும்  தொடங்கியது. செத்துப் போனார்கள் என்பதற்கும் கொல்லப்பட்டார்கள் என்பதற்கும் இடையில் அவர்கள் உயிர் ஊசலாடவில்லை. உடல்கள் தான் சில நாட்கள் ஊசலாட்டத்தில் இருந்தன. உறவினர்களிடமும் தரப்படாத அந்த உடல்கள் மாவட்டத்தின் வெவ்வேறு சுடுகாடுகளில் எரிக்கப்பட்டன. நடந்தபோன அந்த நினைவு ஒவ்வோராண்டும் நினைக்கப்படுவதின்மூலம் உருவாக்கப்படும் உணர்வுகள் பற்பலவாய் இருக்கின்றன. நினைக்கும் இயக்கங்களின் நோக்கங்களும் வெவ்வேறாய் இருக்கின்றன. ஆனால் அரசு எந்திரம் உருவாக்க நினைக்கும் உணர்வு ஒன்றே ஒன்று தான். பதற்றம்;பதற்றம்; அதன் வழியாக அச்ச உணர்வு. அச்ச உணர்வு தொற்றிக் கொள்ளும் பதற்றம்.

வீரவணக்கத்திற்குரிய போராளிகளாகவும், நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய தியாகிகளாகவும், போராட்ட உணர்வெனும் பயிருக்கான விதைகளாகவும் உரமாகவும் இயக்கங்கள் முன்னெடுக்கின்ற அந்த நாளை பதற்றத்திற்குரிய ஒரு நாளாக ஆக்குவதின் மூலம்  இன்னொன்றும் நினைவு படுத்தப்படுகிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இன்று நினைக்கப்படும் இந்த நாள் சட்ட ஒழுங்கை மீறிய நாள் எனவும் ,  நினைக்கின்றவர்கள் சட்டம், ஒழுங்கை மீறி ஒழுங்கைக் குலைத்துப் பொது வாழ்க்கைக்குக் குந்தகம் ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதும் நினைவு படுத்தப்படுகிறது.  தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர்களாகவும் தனிப்பாதுகாப்புக்கு உரியவர்களாகவும் ஆக்கப் படுகிறவர்கள், பதற்றத்தை உருவாக்குபவர்களாகவும் வன்முறையோடு தொடர்புடையவர்களாகவும் பொதுப்புத்திக்குள் பதிக்கப்படுகிறார்கள்.ஒவ்வொரு தலைவருக்கும் வெவ்வேறு நேரத்தை ஒதுக்கிக் கொடுப்பதன் மூலமும்  தனித்தனியாகப் பாதைகளை ஒதுக்கி அனுமதி அளிப்பதன் மூலமும் பதற்றம் அதிகரிக்கப்படுகிறது என்பது உணரப்பட வேண்டிய ஒன்று.

அதிகாரத்தின் நுண் அரசியல் இப்படிச் செயல்படுவதை உணர்ந்து மாற்று வழிகளைத் தேட வேண்டியது இயக்கங்களின் பணி. நிகழ்வு நடந்த இடத்திற்குச் சென்று நினைவு நாள் நிகழ்ச்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்ற நிலைபாட்டைத் தலைவர்கள் தவிர்த்து விட்டாலே போதும் அதிகாரத்தின்  நோக்கம் சிதறிப்போகும். நினைவு நாள் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்ட இடத்தில் தான் நடத்த வேண்டும் என்பதைவிட பரவலாகப் பல இடங்களுக்குக் கொண்டு போவதில் தான் நினைவின் எல்லை கூட விரிவடையும்.

திருநெல்வேலிக்கு ஜுலை 23 பதற்ற நாளாக இருப்பது போலத் தமிழ்நாட்டின் பல இடங்களில் வேறுசில நாட்கள் பதற்ற நாட்களாக உள்ளன என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.அக்டோபர் 30, பசும்பொன்னை மையப்படுத்தித் தென்மாவட்டங்கள் பதற்றங் கொள்கின்றன. கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை  நகரமும் மாவட்டமும் பதற்றம் கொள்கிறது. சென்னை நகரத்திற்கு இத்தகைய பதற்ற நாட்கள் இல்லையென்றாலும் நினைவு நாட்கள் பல உண்டு. அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பிறந்த நாட்களும் இறந்த நாட்களும் நிரந்தரமானவை. டிசம்பர் ,6  ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் தவிர்க்க முடியாத பதற்ற நாளாக ஆகிப் பல வருடங்களாகிவிட்டன.

 

Visit my blog www.ramasamywritings.blogspot.com and write ur comments

 

அன்புள்ள அ.ராமசாமி

 

நன் எண்ணும் திக்கிலேயே நீங்களும் சிந்திக்கிறீர்கள். நன்றி. இன்று உருவாகியிருக்கும் இந்தப்பதற்றத்தை ஜனநயக வழிகளில் தணிக்க அரசியல்தலைவர்கள் முயலவில்லை என்றால் அது மேஉம் பதற்றத்தையே உருவாக்கும். எல்லா சதிகளும் அரசியல் ரீதியாக திரளும் காலகட்டம் இது
ஜெ

 

முந்தைய கட்டுரைகாந்திய தேசியம் 2
அடுத்த கட்டுரைகாந்திய தேசியம் 3