பெரு மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலை வாசித்து வருகிறேன். சில அடிப்படை சந்தேகங்களுக்கு தங்களின் வாயிலாக விளக்கம் அறிய ஆவலாயுள்ளேன்.
வேதங்கள், தத்துவங்கள், தரிசனங்கள் போன்றவற்றை தங்கள் நூலிலிருந்து ஓரளவு புரிந்துகொள்கிறேன். ஆனால் ஆறு பெரும் மதங்கள் (சைவம், வைணவம் முதலிய) தோன்றியது எவ்விதம் என்று புரியவில்லை. ஆறு தரிசனங்களில் எங்கும் மதங்கள் இருப்பதாக தெரியவில்லை. எனில் மதங்கள் தோன்றியதின் மூலம் என்ன? அதற்கான காலகட்டம் எது? தரிசனங்களுக்கும், மதங்களுக்கும், புராணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
மேலும் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்றவைகளுக்கு வேதாந்தம் மூலமா? இவைகள் கருத்துமுதல்வாத தளத்தில் செயல்படுபவையா?
கேள்விகளில் பிழை இருப்பின் மன்னிக்கவும்.
பிறகு, தங்களின் வெண்முரசு வாசித்து வருகிறேன். ஒரு புது உலகை அறிமுகப்படுத்தி பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது.
நன்றி,
பணிவுடன்,
பூபதி துரைசாமி
அன்புள்ள பூபதி,
நீங்கள் கேட்ட வினாக்களுக்கான விடைகள் அந்நூலிலேயே விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. தரிசனங்கள் என்றால் என்ன என்ற வினாவுக்கு விடையாக.
தரிசனங்களை முன்பு மதங்கள் என்றே சொல்லிவந்தனர். பல நூல்களில் அப்படிச் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம். குழப்பம் வேண்டாம் என்றுதான் தரிசனங்கள், மதங்கள் என இருவேறு சொற்கள் கையாளப்படுகின்றன. தரிசனங்கள் என்பவை மதமாக பரிணாமம் அடையாத பிரபஞ்சப்பார்வைகள்.
ஆறு மதங்களும் மூன்று அடுக்கு கொண்டவை. முதலில் அவை புராதனமான பழங்குடித் தொன்மங்களாக இருந்துள்ளன. பின் தத்துவதரிசனமாக மலர்ந்துள்ளன. பின்னர் பல்வேறு வழிபாட்டுமுறைகளை இணைத்துக்கொண்டு முழுமையான மதங்களாக ஆயின. பலநூற்றாண்டுகால வரலாறுள்ள ஒரு பரிணாமம் இது. சுவீரா ஜெயஸ்வாலின் ‘வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ வைணவம் வளர்ந்த வரலாற்றைச் சொல்லும் நூல்.
ரிக்வேதத்தின் கடைசிப்பகுதியான பத்தாம் காண்டம் நேரடியாகவே தத்துவ வினாக்களுக்குச் செல்கிறது. அதனால் வேதங்களின் இறுதிப்பகுதி என மெய்யியல் சொல்லப்பட்டிருக்கலாம். அல்லது வேதங்களுடன் உபநிடதங்கள் இணைக்கப்பட்டபோது தத்துவப்பகுதிகள் வேதத்தின் உச்சங்கள் என எண்ணப்பட்டிருக்கலாம். வேதாந்தம் என்றால் வேதத்தின் முடிவு என்று பொருள்.
அது ஒரு பொது அர்த்தமுள்ள சொல். பொதுவாக வேதம் முன்வைக்கும் பிரம்மதத்துவம் பற்றிய விளக்கங்களின் தொகுப்பே வேதாந்தம். உத்தரமீமாம்சம் என்றும் சொல்லப்பட்டது. வேதாந்தமரபில் கிளைத்தவையே அத்வைதம் விசிஷ்டாத்வைதம் துவைதம் சுத்தாத்வைதம் போன்றவை. ஆகவே அவற்றை பிற்கால வேதாந்தங்கள் என்கிறோம்.
ஜெ