மூன்று வேட்பாளர்கள்

வரவிருக்கும் மக்களவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூன்று முக்கியமான வேட்பாளர்கள் போட்டியிடலாமென சொல்லப்படுகிறது. அரசியல் சிந்தனையாளரான ஞாநி, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியான சுப.உதயகுமார் , அவரது போராட்டத்தோழர் மை.பா.ஜேசுராஜ் ஆகியோர்.

தேர்தல் சார்ந்த எந்த விவாதங்களிலும் ஈடுபடவேண்டாமென்றிருக்கிறேன். என் கவனம் இப்போது அதில் இல்லை. வெண்முரசு மட்டும்தான் என் உலகம். அக்கவனம் திசைதிரும்பினால் நான் மீண்டு வருவதும் கடினம். ஆனால் இந்த தேர்தல் போட்டியைப்பற்றி சொல்லாமலிருக்க முடியாது.

ஞாநி, சுப.உதயகுமார் இருவரையும் நான் நெடுங்காலமாக அறிவேன். அவர்கள் அனுமதித்தால் நண்பர் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம். அவர்கள் இருவருடைய தனிப்பட்ட நேர்மையைப்பற்றி எனக்கு இக்கணம் வரை துளிகூட மாற்றுக்கருத்து வந்ததில்லை. இலட்சியவாதத்தை நான் நம்புவதே இன்றும் இத்தகைய மனிதர்கள் சாத்தியமாகிறார்கள் என அறிந்திருப்பதனால்தான்.

ஞாநி தனிமனிதர் என்ற நிலையில் சமநிலையற்ற உணர்ச்சிகளுடையவர். அரசியல்சிந்தனையாளர் என்றவகையில் எளிய இடதுசாரி அரசியல்சரிகளைச் சார்ந்து மட்டுமே சிந்திப்பவர். அவை சார்ந்து எனக்கு முரண்பாடுகளுண்டு. ஆனால் கடந்த முப்பதாண்டுகாலமாக தமிழக அரசியலை ஒரு பொது அறத்தில் நிலைநின்று கடுமையாக விமர்சித்து வருபவர். தமிழகத்தின் அரசியல் பிரக்ஞையின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது.

சுப.உதயகுமாரின் அவரது தனித்தமிழகம் சார்ந்த எண்ணங்கள், ஆரிய திராவிட இனவாதம் சார்ந்த முன்முடிவுகள் எனக்கு உடன்பாடானவையல்ல. ஆனால் பொதுக்களத்தில் தான் நம்பிய ஒன்றுக்காக தொடர்ந்து போராடுபவர். சமீபகால தமிழகவரலாற்றில் ஒரு பொதுப்பிரச்சினைக்காக மக்கள்போராட்டம் ஒன்றை இவ்வளவு தீவிரமாக நடத்தமுடியுமென நிரூபித்ததே அவரை ஒரு தலைவராக ஆக்குகிறது. தமிழகத்தின் அகக்கனல் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்த சமீபகால மக்கள் தலைவர் அவர் மட்டுமே என நினைக்கிறேன்.

இவர்கள் தேர்தலரசியலில் ஈடுபடுவதன் நோக்கமும் விளைவுகளும் என்ன? பொதுவாக இலட்சியவாதம் மீதான நம்பிக்கையை முற்றாக இழந்துவிட்ட நாம் நக்கலும் நையாண்டியுமாகவோ, அற்பமான நடைமுறைவாதம் வழியாகவோ இதைப்பற்றி விவாதிப்போம். நம் ஐயங்களை முன்வைப்போம். இவர்கள் வெற்றிபெறமுடியுமா, வெற்றிபெறாவிட்டால் போட்டியிட்டு என்ன பயன் என்றெல்லாம் பேசுவோம். நாம் அவநம்பிக்கையாளர்கள் அல்ல, அவநம்பிக்கையை சொல்வது நமக்கு வசதியாக இருக்கிறது, அவ்வளவுதான்.

சமூக ஊடகங்களில் இவர்களை பதவி ஆசை புகழாசை என்றெல்லாம் விமர்சிக்கும் பதர்கள் கீழ்த்தர அரசியல் கேடிகளை தூக்கிக் கொண்டாடிக்கொண்டிருப்பவர்கள் என்பதே இவர்களுக்கான முதல் தகுதியாக ஆகிறது. இவர்கள் இன்றைய மாற்று அரசியலின் சக்திகள்.

ஒரு முழுமைப்பார்வையில் இதைப்பார்க்கலாமென தோன்றுகிறது. முதல் விஷயம் இப்போதைக்கு இவர்கள் ஆட்சியைப்பிடிக்கப்போவதில்லை என்பது உறுதி. ஆகவே அரசை எப்படி அமைக்கப்போகிறீர்கள் என்ற வினாவே எழவில்லை. இவர்கள் உருவாக்கச் சாத்தியமான பாதிப்பு என்பது இன்றைய உறைந்துபோன வணிக அரசியல் சூழலில் ஒரு சிறு இலட்சியவாதம் நோக்கிய நகர்வை மட்டுமே. அந்நிலையிலேயே இவர்களின் பங்களிப்பை மதிப்பிடமுடியும்.

இன்றைய தேர்தலரசியலில் மக்களுக்கு நம்பி முழுமனதுடன் வாக்களிக்கும் வாக்காளர்களே இல்லை என்றாகியிருக்கிறது. இவர்களைப்போன்றவர்கள் போட்டியிடுவதென்பது அவ்வாய்ப்பை வழங்குகிறது. ‘யார் சார் யோக்கியன்?’ என வழக்கமாக நம்மிலுள்ள அயோக்கியன் எழுப்பும் வினாக்களுக்கு பதிலாக இது அமைகிறது. வாய்ப்பை மக்கள் பயன்படுத்தவில்லை என்றால் அது மக்களின் பிழை.

இத்தகையவர்கள் போட்டியிடுவதே தேர்தல்களத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஓர் ஆக்கபூர்வமான மாற்றத்தை உருவாக்கும். இன்னொரு அரசியல்கேடிக்கு எதிராக இன்னொரு அரசியல்கேடியை வேட்பாளராக நிறுத்துவது போல இயல்பாக இவர்கள் போட்டியிடும் களத்தில் செய்ய முடியாது. ஒருபாவனையாகவேனும் அறிவுஜீவிகளை, நேர்மையானவர்களை முன்னிறுத்தவேண்டிய கட்டாயம் காலப்போக்கில் உருவாகலாம்.

உதாரணமாக இந்தத் தேர்தலில் தனக்கான சுயநடத்தை விதிகளை உதயகுமார் குமரிமாவட்டத்தில் அச்சிட்டு வினியோகிக்கிறார். அந்தத் துண்டறிக்கை ஒரு பொதுவிவாதமாக ஆனாலேகூட அது பிற வேட்பாளர்களிடம் கடும் அழுத்தத்தை அளிக்கும்.

இதை கேரளத்தில் கண்கூடாகவே கண்டிருக்கிறேன். எளிமையையும் அறத்தையும் இயல்பாகக் கொண்ட ஓர் இடதுசாரி தலைவர் போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் அதேபோன்ற ஒருவரையே வேட்பாளராக நிறுத்தமுடியும். அந்தோனி ஏன் நேர்மையான அரசியல்வாதி என்றால் நாயனாரும் அச்சுதானந்தனும் நேர்மையானவர்கள் என்பதனால்தான்.

தேர்தல் அரசியல் ஒரு பெரிய களம். அதில் இவர்கள் நிற்பதன்மூலம் எந்த விழுமியங்களை இவர்கள் முன்வைக்கிறார்களோ அவற்றை மேலும் அழுத்தமாக பிரச்சாரம் செய்ய முடியும். அவர்களின் குரலை கவனிக்கச்செய்ய முடியும்.

அவர்கள் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றால் வெறும் லாபநஷ்ட வணிகமாக மாறிப்போன இன்றைய அரசியலில் கொள்கை சார்ந்த சிலகுரல்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அவர்கள் செல்லவில்லை என்றால் அக்குரல்கள் ஒலிக்கவே போவதில்லை. கணிசமான வாக்குகள் பெற்றாலேகூட அரசியலுக்கு ரவுடிகள் போதும் என்று நினைக்கும் நமது கட்சிகளுக்கு ஒரு மெல்லிய மறுசிந்தனையை உருவாக்கும்.

ஆம் ஆத்மி கட்சியில் அணு உலைக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்படாத நிலையில் உதயகுமார் எப்படி அதில் சேரலாமென ஒரு குரல் டீக்கடையில் எழுந்தது. ஞாநி இடதுசாரி, அவரெப்படி இடதுசாரித்தன்மை அற்ற ஆம் ஆத்மியில் சேரலாமென இன்னொரு வினா. ஜனநாயகமென்பதையே அறியாத குரல்கள் அவை.

ஒரு கட்சியில் அனைவரும் ஒத்த கருத்துடன் இருக்கவேண்டியதில்லை. அக்கட்சியில் தன் குரலை முன்வைத்து அதை தன்னை நோக்கி இழுக்க வாய்ப்புண்டு என்றால் அவர்கள் அதில் சேர்வதில் பிழையில்லை. ஞாநி அக்கட்சியை இடதுசாரி சிந்தனைகள் நோக்கி கொண்டுசெல்லமுயலலாம். அணு உலை பற்றிய அதன் கருத்தை மாற்ற உதயகுமார் முயலலாம். அப்படித்தான் ஜனநாயகம் செயல்படும். குறைந்தபட்சம் இப்போதைக்கு வேறெந்த கட்சியிலும் அவ்வாய்ப்பு இல்லை என்பதையாவது ஒத்துக்கொள்ளவேண்டும்.

ஆம்ஆத்மி டெல்லியில் அரசு அமைத்ததன் மூலம் பெரிய பிழை ஒன்றைச்செய்தது என்றே நான் நினைக்கிறேன். ஊழலுக்கு எதிரான போரில் அது ஒரு பின்னடைவாக அமையும் என்றும் படுகிறது. ஆனால் தேர்தலரசியலில் அதன் இருப்பு என்பது எதைப்பற்றியும் கவலைப்படாத பிழைப்பு அரசியல்வாதிகளை எரிச்சலூட்டுவதை, கவலைப்படச்செய்வதைக் காண்கிறேன். இன்றைய சூழலில் அதுவே ஒரு பெரும் சாதனை.

அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை இந்திய வரலாற்றில் ஒரு முதன்மையான நிகழ்வு. இந்திய அரசியல் எவரால் எப்படி ஆட்டிவைக்கப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். அக்குரல் பெருகவேண்டும். ஓங்கி ஒலிக்கவேண்டும்.

ஆகவே எவ்வகையிலும் இவர்களின் அரசியல் நுழைவு வரவேற்கத்தக்கது. என்னைப்பொறுத்தவரை வாக்காளனாக நான் நிறைவுகொள்ளும் தருணம்.

ஜெ

உதயகுமாரின் தேர்தல் அறிக்கை

ஆம் ஆத்மியில் ஞாநி

முந்தைய கட்டுரைஅகதிகள் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21