பகுதி ஒன்பது : மொழியாச்சொல்
[ 3 ]
மீண்டும் நினைத்துக்கொண்டதுபோல மழை தொடங்கியது. மாலைநேரத்து மழைக்கே உரிய குளிரும் இருளும் அறைகளுக்குள் நிறைந்தன. சாளரக்கதவுகளில் சாரல் அறைந்த ஒலி கேட்டபடி பிருதை தன் அறைக்குள் தனித்திருந்தாள். அவளுடைய நெற்றிப்பொட்டு மட்டும் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க சுட்டுவிரலால் அதை அழுத்தியிருந்தாள். வெளியே மெல்லிய காலடியோசையுடன் அனகை நெருங்கிவந்து கதவை விரலால் சுண்டினாள். ‘ம்’ என்றாள் பிருதை. அனகை உள்ளே வந்து வணங்கி கதவைத் தாழிட்டாள்.
பிருதை ஏறிட்டுப்பார்த்தாள். “மாத்ரநாட்டு இளவரசர் சற்றுமுன் கிளம்பிச்சென்றுவிட்டார்” என்றாள் அனகை. குந்தி கண்களைத் திருப்பிக்கொண்டு சுவரை நோக்கினாள். “நகர்மக்கள் திரண்டு அவருக்குப்பின்னால் சென்றனர். படகுத்துறையில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி அவரை வாழ்த்தி குரலெழுப்பி வழியனுப்பினர்.” பிருதை மேலே சொல்லும்படி சைகை காட்ட “கம்சர் புரவியிலேயே மதுராபுரிக்குச் சென்றுவிட்டார் என்கிறார்கள். அவரைத்தொடர்ந்து அவரது படைவீரர்களும் சென்றிருக்கிறார்கள். பிறர் இப்போதுதான் படகுகளில் கிளம்புகிறார்கள்” என்றாள் அனகை.
பிருதை “நான் வசுதேவரைச் சந்திக்கவிழைகிறேன்” என்றாள். “அவரும் கம்சருடன் சென்றுவிட்டாரா என்ன?” அனகை “அவர் இங்குதான் இருக்கிறார் இளவரசி. நம் அரசரிடமும் அஸ்தினபுரியின் பிதாமகரிடமும் உரையாடிக்கொண்டிருக்கிறார்” என்றாள். பிருதை “அவரிடம் நான் சந்திக்க விழைவதைச் சொல்” என்றாள். அனகை தலைவணங்கி திரும்பும்போது சற்றே ஒலிமாறுபட்ட குரலில் பிருதை “அனகை” என்றாள்.
அனகை நின்றாள். “அஸ்தினபுரியின் அமைச்சர் என்று அந்த இளைஞரைத்தான் சொல்கிறார்களா?” என்றாள் குந்தி. “ஆம், அவர் மறைந்த மாமன்னர் விசித்திரவீரியரின் அறப்புதல்வர் என்றும் வியாசமுனிவரின் நேர்மைந்தர் என்றும் சொல்கிறார்கள்… அவருக்கு அரசருக்கிணையான அதிகாரமிருக்கிறது.” பிருதை தலையை அசைத்தாள். அனகை அவள் ஏதாவது கேட்பாளென்பதுபோல நின்றாள். குந்தி அவள் செல்லலாம் என்று கையை அசைத்தபின் அவள் பின்னால் வந்து “நில்” என்றாள்.
அனகை திரும்பி நோக்கினாள். “வசுதேவர் என்னை வந்து சந்திப்பது செய்தியாக ஆகலாம். இங்கே மதுராபுரியின் ஒற்றர்கள் உண்டு… நான் அரண்மனைக்குச் செல்கிறேன். அவரும் அரண்மனைக்கு வரட்டும். அரண்மனை இடைநாழியில் நான் அவரை தற்செயலாகச் சந்தித்து சில சொற்கள் பேசுகிறேன்.” அனகை வியப்புடன் “இடைநாழியிலா?” என்றாள். “ஆம், இடைநாழியில் பேசுவது மந்தணமல்ல. அதை அனைத்து ஒற்றர்களும் கண்டு மதுராபுரிக்குத் தெரிவிக்கட்டும்” என்றாள்.
அனகை சென்றபின் பிருதை மீண்டும் தன் நெற்றியை அழுத்திக்கொண்டாள். உடலில் குருதி ஓடும் ஒலியைக் கேட்பவள் போல அமர்ந்திருந்தாள். நாகம் ஏறிய மரத்தின் பறவைகள் போல எண்ணங்கள் எதையோ கண்டு அஞ்சி அமரமறுத்து கலைந்து கலைந்து சிறகடித்துக்கொண்டிருந்தன. சிலகணங்களுக்குப்பின் அவளால் அமர்ந்திருக்க இயலவில்லை. எழுந்து அறைக்குள் உலவத் தொடங்கினாள்.
மழை மெதுவாக ஓய்ந்து துளியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அரண்மனை முழுக்க நெய்விளக்குகளை ஏற்றத் தொடங்கினார்கள். நெய்த்திரி விளக்கை ஏந்திய சேடிகள் இருளில் நடந்து விளக்குகளை ஏற்றி ஏற்றிச் செல்வது மின்மினிகள் அலைவது போலத் தெரிந்தது. மின்மினி சென்று தொட்ட பாவைவிளக்குகள் சுடர்கொள்ள அந்த கீழ்ஒளியில் பெண்பாவைகளின் முகங்களில் நாணப்புன்னகை மலர்ந்தது. அவர்களின் அணிக்கொண்டையின் நிழல்கள் எழுந்து கூரையைத் தொட்டு மடிந்தன.
சற்று நேரத்தில் அனகை மீண்டும் வந்தாள். “வசுதேவரைக் கண்டேன் இளவரசி. தாங்கள் சற்றுநேரம் கழித்து இடைநாழியில் நடந்தால் அவர் உங்களைக் கண்டு எதிரே வருவார்” என்றாள். குந்தி எழுந்து சேடியை அழைத்தாள். அவள் கொண்டுவந்த நறுமண வெந்நீர் பாத்திரத்தில் முகம் கழுவி கூந்தல் திருத்தி உடைகளையும் அணிகளையும் சரிசெய்துகொண்டாள். “நான் அரண்மனைக்குக் கிளம்பவேண்டும்… அரசரை சந்திக்கவிருக்கிறேன்” என அவள் சொன்னதும் சேடி தலைவணங்கி உள்ளே சென்றாள்.
முதற்சேடி முன்னால் சென்று அந்தி பரவிய அந்தப்புர முற்றத்தில் இறங்கி வலம்புரிச்சங்கை ஊதி அவள் கிளம்புவதை அறிவித்தாள். மங்கலத்தாலமும் சாமரமும் ஏந்திய சேடியர் இருபக்கமும் வர பிருதை அந்தப்புர முற்றத்துக்கு அப்பால் இருந்த இடைநாழியில் ஏறி மறுபக்கம் இருந்த அரண்மனை நோக்கிச் சென்றாள். இடைநாழி எங்கும் நெய்விளக்குகள் ஆடிப்புலங்களில் சுடர்பெருக்கி நின்றிருந்தன. தரை மழையீரத்தில் அந்த செவ்வொளியை ஏற்று பளபளத்தது.
எதிரே வசுதேவன் செம்பட்டுச்சால்வையைப் போர்த்தியபடி வருவதைக்கண்டு நடைவிரைவைக் குறைத்தாள். அனகை விரைவைக் குறைக்காமல் முன்னால் நடக்க பிறசேடியர் அக்குறிப்பை உணர்ந்து அவளை முந்திச்சென்றனர். அவளும் வசுதேவனும் அருகணைந்து முகம் நோக்கி நின்றனர்.
வசுதேவன் முறைப்படி பணிந்து “மார்த்திகாவதியின் இளவரசியை வணங்குகிறேன்” என்றான். குந்தி வணங்குவதுபோன்ற அசைவைக் காட்டியபடி “என் மைந்தனைப்பற்றிய செய்தி ஏதாவது கிடைத்ததா?” என்றாள். “இல்லை பிருதை. என் படைவீரர்கள் யமுனைக்கரையின் அனைத்து படகுத்துறைகளிலும் மீனவர் இல்லங்களிலும் விசாரித்துவிட்டனர். குழந்தை படகுடன் நீரில் மூழ்கியிருக்கவே வாய்ப்பு” என்றான்
பிருதையின் கழுத்தின் தசைகள் இழுபட்டு பின் தளர்ந்தன. பார்வையை பக்கவாட்டில் திருப்பி உதடுகளை இறுகக் கடித்து “அவன் இறக்கமுடியாது” என்றாள். வசுதேவன் “…இதென்ன பேச்சு?” என்று தொடங்க “அவன் சூரியனின் மைந்தன். சூரியநாகம் அவனுக்குக் காவல். அவன் இறக்கமாட்டான்” என்றாள். “என்ன பேசுகிறாய் என்று தெரிகிறதா உனக்கு? அரசுசூழ்தல் பயின்ற நீ பேசும் பேச்சுதானா இது?” என்றான் வசுதேவன்.
“நான் அதை உறுதியாக அறிவேன்” என்றாள் குந்தி. “நான் நேற்று ஒரு கனவு கண்டேன். நான் ஆடியில் என்னைப்பார்க்கிறேன். என் ஆடிப்பாவை அந்த மைந்தனுக்கு முலையூட்டுகிறது. அது என் முலைப்பால். ஆனால் இப்பால் நான் திகைத்து நின்றுகொண்டிருந்தேன்…. கனாநூலின் கணிதப்படி அது அக்குழந்தையை எனக்கு நிகரான எவளோ ஏற்று முலையூட்டி வளர்க்கிறாள் என்பதற்கான சான்று. ஆம், அவன் இருக்கிறான்.”
“ஆனால் இன்று நீ அச்செய்தியை வெளியே சொல்லமுடியாது” என்றான் வசுதேவன். “நம் யாதவர்குலத்தில் அது மிக இயல்பான ஒன்று. உனக்கு மைந்தனிருப்பதை நான் கம்சரிடம் சொன்னேன். அதையே மங்கலக்குறியாக அவர் எண்ணினார். ஆனால் ஷத்ரியர்களின் மரபு அதுவல்ல. அவர்கள் மணம்புரிகையில் மகளிர் கன்னியராக இருந்தாகவேண்டுமென்ற நெறிகொண்டிருக்கிறார்கள். அவர்களின் நூல்களும் முறைகளும் நம்பிக்கைகளும் அதை வலியுறுத்துகின்றன.”
“ஆம்” என்றாள் பிருதை. “நான் என் கணவரிடம் அனைத்தையும் சொல்லலாமென்றிருக்கிறேன்.” வசுதேவன் சிலகணங்கள் சிந்தனைசெய்துவிட்டு “அவரை நீ நன்கறிந்தபின் சொல்வதே முறை. சிலநாட்களாகட்டும். அவர் அதை ஏற்பாரென்பதை நீ உறுதிப்படுத்திக்கொள்…” பிருதை உறுதியான குரலில் “நான் எதையும் மறைக்கப்போவதில்லை. நான் யாதவப்பெண் என்பதை அறிந்துதான் அஸ்தினபுரி மணம்கொள்ள வந்துள்ளது. அன்னையரை முதன்மையாகக் கொண்ட நம் முறைமைகளை அவர்களும் நன்கறிவார்கள். எனக்குப்பிறந்த மைந்தனை நான் ஒளித்து வைக்கப் போவதில்லை. ஏனெனில் அவனைப்பெற்றதை நான் பிழையென எண்ணவில்லை. என்றென்றும் நான் பெருமை கொள்ளப்போகும் என் மைந்தன் அவன்” என்றாள்.
“ஆம், ஒளித்துவைக்கப்படும் ஒன்று நம்மைத் தளையிடுகிறது” என்றான் வசுதேவன். “ஆனால் எப்போது எப்படி அதைச் சொல்லவேண்டுமென நீதான் முடிவெடுக்கவேண்டும். அதை நீ அறிவாய்.” அவன் கண்களில் மெல்லிய ஒரு சுருக்கம் நிகழ்ந்தது. “அஸ்தினபுரியின் அரசி என்பது நீ எடுத்துக்கொண்ட சுமை.” பிருதை அவன் கண்களை நேருக்கு நேராக நோக்கி “ஆம், அது மார்த்திகாவதிக்கும் யாதவகுலத்துக்கும் நன்மை பயக்கும் என நான் எண்ணுகிறேன்” என்றாள்.
சினத்தை அடக்கமுடியாதவனாக வசுதேவன் “ஆம்,அஸ்தினபுரிக்கு ஏவல் பணிசெய்ய யாதவர்கள் செல்லமுடியும் அல்லவா?” என்றான். “அண்ணா, கம்சர் எவரையும் வாழவைப்பவரல்ல. யாதவர்களுக்கு அவர் பேரழிவையே உருவாக்குவார்” என்றாள். “ஏன், அவர் தலைமையில்…” என வசுதேவன் பேசத்தொடங்க “…நான் விவாதிக்கவில்லை அண்ணா. கம்சரால் எவரையும் தலைமைதாங்கி முன்நடத்த முடியாது” என்றாள். “சிலர் அழிக்கவே மண்ணில் பிறக்கிறார்கள், இறுதியில் அழிவார்கள்.”
வசுதேவன் திகைத்துப்போய் பார்த்தான். “என்னைச் சிறையெடுக்க அவர் முடிவெடுத்தபோதே அதை உணர்ந்துகொண்டேன். அது சற்றும் சிந்தியாமலெடுக்கப்பட்ட அவசர முடிவு. அப்படி சிறையெடுத்துக்கொண்டுசென்று அந்தப்புரத்தில் சேர்க்கப்படக்கூடிய எளிய பெண்ணா நான் என்பதை அவர் ஒரே ஒரு சூதரை கூப்பிட்டுக் கேட்டிருந்தாலே அறிந்திருக்கலாம். நான் யாதவகுலத்தவள், அந்தப்புரத்தில் ஒடுங்கிய ஷத்ரியப்பெண் அல்ல. ஒருபோதும் என் ஆணவம் அழிவதை ஏற்கமாட்டேன் என அவர் உணரவில்லை. அவரால் மனிதர்களை கணிக்கமுடியாது.”
“அத்துடன் அவரால் சிறப்பாக அரசாளவும் இயலாது” என்றாள் குந்தி. “என்னைச் சிறையெடுக்க அவர் ஒரு எளிய துணைத்தளபதியை அனுப்பினார். என் உடலை ஆராய்ந்து என்னிடமுள்ள ஆயுதத்தை பறித்துக்கொள்ளவேண்டும் என அவனுக்குத் தோன்றவில்லை. என் ஆணைகளை மீறும் துணிவும் வரவில்லை. ஏனென்றால் அவனால் என்னை ஏறிட்டுப்பார்க்கவே முடியவில்லை. ஒருவரைச் சிறையிட எப்போதும் அவருக்கு நிகரான ஒருவரையே அனுப்பவேண்டும் என்பது அரசுசூழ்தலின் விதி…” குந்தி புன்னகைசெய்து “அவர் அரசறிந்தவர் என்றால் ஓர் அமைச்சரை அனுப்பியிருப்பார்” புன்னகை மேலும் விரிய “சூழ்மதியாளர் என்றால் உங்களை அனுப்பியிருப்பார்” என்றாள்.
“ஆம்” என்றான் வசுதேவன். “என்னை அனுப்பியிருந்தால் நான் அதைச் செய்திருப்பேன். வேறு வழியே எனக்கிருந்திருக்காது.” அவன் பெருமூச்சுடன் “ஆயினும் அவர் யாதவர். நம் குலம். அரசர்கள் அவர்களின் மதியால் ஆள்வதில்லை.” பிருதை இடைமறித்து “பிறரது கூர்மதியை பெற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவரல்ல கம்சர்” என்றாள். வசுதேவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “அண்ணா அவரிடமிருந்து விலகிவிடுங்கள். மதுவனத்துக்கே திரும்பிச்செல்லுங்கள். கம்சர் மதுராபுரியை அழிப்பார் என எனக்கு ஐயமே இல்லை. அவரிடமிருந்து மார்த்திகாவதியை காக்கவே நான் அஸ்தினபுரியின் இளையஅரசருக்கு மாலையிட்டேன்.”
“நீ சல்லியரை மணப்பாய் என நான் நினைத்தேன்” என்றான் வசுதேவன். அதுவரை அவன் கண்களை நோக்கிப்பேசிய குந்தி பார்வையை விலக்கி “அதனால் எப்பயனும் இல்லை. மாத்ரபுரி மார்த்திகாவதியைவிடச் சிறிய அரசு” என்றாள். வசுதேவன் அக்கணத்தில் அனைத்தையும் உறுதிசெய்துகொண்டவனாக “ஆனால் அவர்…” எனத் தொடங்கியதும் நாகம் தலைதிருப்புவதுபோலத் திரும்பி சீறும் குரலில் “நான் எதனாலும் எவருடைய உடைமையும் ஆவதில்லை” என்று குந்தி சொன்னாள்.
வசுதேவன் மேலும் பேசுவதற்காக வாயெடுத்தான். “என் மைந்தனைத் தேடுவதை நிறுத்தவேண்டியதில்லை” என்றபின் குந்தி முன்னால் நடந்து சென்றாள். அவளுடைய கூந்தல் நெளிவதை மேலாடை உலைந்து ஆடுவதைப் பார்த்துநின்றபோது வசுதேவன் அவள் சொல்லாத ஒன்றையும் உணர்ந்துகொண்டான். அரசுசூழ்வதில் அவன் ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை என அவள் எண்ணுகிறாள். அவனிடம் அவள் எதையுமே கேட்கவில்லை, ஆணைகளையும் அறிவுரைகளையும் மட்டுமே சொல்கிறாள்.
சினம் கொண்டு அவன் அங்கே நின்றிருப்பதை திரும்பிப்பாராமலேயே பிருதை உணர்ந்தாள். நடக்கநடக்க அவள் அகம் கசப்பில் நிறைந்தது. சேடி அவள் வருகையை அறிவித்ததும் மந்திரசாலையில் இருந்து குந்திபோஜன் எழுந்து வாசலுக்கு வந்து “வருக இளவரசி… உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தோம்” என்றார். மந்திரசாலையில் ரிஷபரும் தேவவதியும் இருந்தார்கள். தேவவதியின் விழிகள் பிருதையின் விழிகளை நொடிநேரம் தொட்டு மீண்டன. பிருதை அவளைப்பாராமல் புன்னகை புரிந்தாள்.
பிருதை அமர்ந்ததும் குந்திபோஜன் “நம் குலமூதாதையரும் குடிகளும் குழம்பியிருக்கிறார்கள் பிருதை” என நேரடியாகவே தொடங்கினார். பிருதை “நமக்கு வேறுவழியில்லை தந்தையே” என்றாள். “நம்மால் மதுராபுரியின் அசட்டு அரக்கனை வேறெவ்வகையிலும் எதிர்கொள்ளமுடியாது” அவர்கள் எண்ணத்தில் ஓடுவதை உணர்ந்தவளாக “மாத்ரநாட்டு இளவரசர் எவ்வகையிலும் நமக்கு உதவமுடியாது. இன்று சுயம்வரத்தில் இருந்து அவர் மதுராபுரியின் பகைமையைப் பெற்று மீண்டிருக்கிறார்.”
குந்திபோஜன் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். “அவர் எதனால் அவ்வாறு எதிர்பாராதபடி கிளம்பி வந்தாரென்று எனக்குப்புரியவில்லை.” தேவவதியின் கண்கள் மீண்டும் குந்தியின் கண்களை தொட்டுச்சென்றன. “தேள்கடித்த குரங்கு என்று சொல்வார்கள். அந்நிலையில் இருக்கிறார் மதுராபுரியின் இளவரசர்… அவரது தந்தை எக்கணமும் உயிர்விடலாம். அவர் அரசரானால் நாம் நம் படைக்கலங்களைத் தாழ்த்தவே நேரமிருக்காது.”
“நம்மை அவர் நெருங்கமாட்டார்” என்று குந்தி சொன்னாள். “பீஷ்மரின் தலைமைத்திறனும் அஸ்தினபுரியின் படைத்திறனும் அவருக்குத் தெரியவில்லை என்றாலும் அமைச்சர்களுக்குத் தெரிந்திருக்கும்.” குந்திபோஜன் உரக்கச்சிரித்து “ஆம், நாம் அவர்களின் ஒரு படைப்பிரிவைக்கூட இங்கே நிறுத்திக்கொள்ள முடியும்” என்றார். தேவவதி மெல்ல அசைந்த உடையோசை கேட்டது. “அதற்காக நம் இளவரசி இத்தனை பெரிய முடிவை எடுத்திருக்கவேண்டியதில்லை” என்றாள். “அஸ்தினபுரியின் இளவரசரால் எழுந்து நடக்கவே முடியவில்லை.”
இருவர் விழிகளும் சந்தித்துக்கொள்ள முதல்முறையாக தேவவதியின் கண்களில் ஒரு புன்னகை இருப்பதை பிருதை கண்டாள். எப்போதும் அங்கே இருக்கும் திகைப்பு மறைந்திருந்தது. அச்சொற்களை அவள் பலநூறுமுறை தனக்குள் சொல்லிக்கொண்டிருப்பாள் என நினைத்ததும் தனக்குள் எழுந்த அலையை உணர்ந்து மெல்ல தன்னை விரித்து பரப்பி அமைதியாக்கிக்கொண்டபின் தேவவதியின் கண்களை நோக்கி “ஆம், அரசி. அவர் நோயுற்றிருக்கிறார். அங்கே மூத்தவரும் பார்வையற்றவர். அரசாட்சியை முழுக்க விதுரதேவர்தான் நடத்துவதாகச் சொன்னார்கள்” என்றபின் புன்னகைத்தாள்.
தீச்சுட்ட புழு போல தேவவதியின் அகம் அதிர்ந்து சுருண்டுகொள்வதை கண்நகர்வு வழியாகவே அறிந்து குந்தி மேலும் விரிந்த புன்னகையுடன் “அமைச்சர் விதுரர் அனைத்து வல்லமைகளும் கொண்டவர் என்கிறார்கள். அஸ்தினபுரியில் அவரையே அனைவரும் மன்னராக எண்ணுகிறார்கள்.” தேவவதி பதற்றத்துடன் தன் மேலாடை நுனியை எடுத்து விரல்களில் சுழற்றத்தொடங்கினாள். ஆனால் விரல்கள் நடுநடுங்க விட்டுவிட்டாள்.
குந்திபோஜன் “ஆம் இளவரசி, நான் விதுரரிடம் உரையாடினேன். அவர் அறியாத ஏதுமில்லை. அரசு சூழ்தலில் நீ இனி எதையாவது கற்கவேண்டுமென்றால் அதை அவரிடமே கற்கமுடியும்” என்றார். “நீ அவரைச் சந்தித்ததில்லை அல்லவா?” என்று அவர் கேட்டதும் பிருதை புன்னகையுடன் “பார்த்தேன்” என்று மட்டும் சொல்லிவிட்டுத் திரும்பி தேவவதியை நோக்கி உதடுகள் விரிய புன்னகை செய்தாள். “எங்கே?” என்றார் குந்திபோஜன். “நம் உபவனத்தின் கொற்றவை ஆலயத்தில் வாள்வணக்க பூசனைக்குச் சென்றிருந்தபோது” என்றாள். மீண்டும் தேவவதியை நோக்கியபோது தன் உடலிலும் கண்களிலும் நாணச்சிவப்பு படர்ந்திருக்கச் செய்தாள்.
தேவவதி அமர்ந்திருக்க முடியாமல் எழுந்துவிட்டாள். அவள் எழுந்ததைக் கண்டதும் குந்திபோஜன் “என்ன?” என்றார். “நான் அந்தப்புரம் செல்லவேண்டியிருக்கிறது. சுயம்வரத்துக்கு வந்த பெண்களுக்காக ஒரு பூசனை நிகழவிருப்பதாக என் சேடி சொல்லியிருந்தாள்” என பதறும் குரலில் சொன்னபடி தேவவதி குந்தியைப் பாராமலேயே “வருகிறேன்” என்று சொன்னபின் ஆடைகள் சரசரக்க வெளியேறினாள். குந்திபோஜன் சிரித்து “அரசு சூழ்தலின் கதைகளைக் கேட்டாலே அவள் பதற்றம் கொள்கிறாள். எளிய யாதவப்பெண்” என்றார்.
“அரசே, நானல்லவா எளிய யாதவப்பெண்?” என்றாள் பிருதை. “நீங்கள் பேரரசி…. நீங்கள் நேற்று எடுத்த முடிவை எண்ணி நான் இன்னும்கூட வியந்துகொண்டிருக்கிறேன்” என்றார் ரிஷபர். அவர்கள் இருவரின் விழிகளைக் கண்டதும் அங்கே அவளுக்கும் தேவவதிக்கும் நடுவே நிகழ்ந்தவை அனைத்துமே அவர்கள் உணராதவை என்ற எண்ணம் வந்து பிருதை புன்னகை செய்தாள். “நாம் கம்சரிடம் இனி செய்யவேண்டியதென்ன?” என்று குந்திபோஜன் கேட்டார்.
பிருதை “தாங்கள் அவருக்கு ஒரு தூதனுப்பவேண்டும்…” என்றாள். “ரிஷபரே செல்வது முறை. அவரிடம் நான் இம்முடிவை எடுத்ததில் நீங்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் அஸ்தினபுரி மார்த்திகாவதியை விழுங்கிவிடுமென அஞ்சுவதாகவும் தெரிவியுங்கள். மார்த்திகாவதிக்கு கம்சரே காவலாக என்றுமிருக்கவேண்டும் என்றும், யாதவப்பெருங்குலங்களின் தலைவர் அவரே என்றும் சொல்லுங்கள்.”
ரிஷபர் புன்னகை செய்தார். “அவர் செய்யக்கூடியது ஒன்றுதான் தந்தையே. இப்போது தன்னை அஸ்தினபுரியின் எதிரி என அவர் நினைத்துக்கொண்டுவிட்டார். ஆகவே மகதத்துக்குத் தூதனுப்புவார். மகதமும் அஸ்தினபுரியும் புரியப்போகும் பெரும்போரில் மகதத்தை ஆதரிப்பதைப் பற்றி எண்ணிக்கொள்வார்.” குந்திபோஜன் “நம் தூதை அவர் நம்புவாரா?” என்றார். “நம்ப மாட்டார். ஆனால் நாம் நம்பிவிட்டதாக நினைப்பார். நாம் அப்படி நம்பிக்கொண்டிருக்கட்டும் என நினைத்து சிலகாலம் நம்மை விட்டுவிடுவார். நாம் நமது எல்லைகளையும் துறைகளையும் அஸ்தினபுரியின் படைகளைக்கொண்டு பலப்படுத்திக்கொள்ள காலஇடை கிடைக்கும்.”
“ஆம்” என்று குந்திபோஜன் பெருமூச்சு விட்டார். “ஏன் இந்தப்போர்கள் என்றே புரியவில்லை. இதையெல்லாம் சிந்தனைசெய்தால் ஏன் யாதவர்கள் அரசுகளாக ஆகவேண்டும் என்றும் தோன்றுகிறது… கன்றுமேய்த்து குழலூதி காட்டில் வாழ்பவர்கள் வில்லும்வாளுமாக ஏன் நகரங்களைக் காக்கவேண்டும்?” பிருதை எழுந்தபடி “நம் சந்ததிகளுக்காக” என்றாள். ரிஷபர் “ஆம் அரசே, இப்படித்தான் அனைத்து அரசுகளும் உருவாகியிருக்கின்றன. விதைகள் வெடிக்காமல் செடிகள் முளைப்பதில்லை” என்றார்.
குந்தி மீண்டும் தன் அறைக்கு வந்தபோது இரவுக்கான ஒலிகள் எழுந்திருந்தன. அப்பால் மார்த்திகாவதியின் உயரமற்ற கோட்டைமீது காவல்முரசு மெல்ல அதிர்ந்தடங்கியது. அவள் உள்ளும் புறமும் களைத்திருந்தாள். அவளுக்காக சேடியர் காத்து நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்ததுமே பிருதை புரிந்துகொண்டு அனகையிடம் “அஸ்தினபுரியின் அரசருக்கு உடல்நலமில்லை என்றார்கள்” என்றாள். “உடல்நிலை தேறியிருக்கிறது என்று செய்தி வந்தது” என்று அனகை சொன்னாள். அவள் கண்களை ஒரு கணம் நோக்கியபின் குந்தி தலையசைத்தாள்.
தைலமிட்ட நறுநீரில் நீராடி செம்பட்டாடை உடுத்து, கால்நகங்களில் அணிவளையங்கள் முதல் தலைவகிடில் பொன்மலர்ச்சுட்டி வரை நூற்றெட்டு நகைகள் அணிந்து பிருதை மங்கலத் தோற்றம் கொண்டாள். தன் வெண்கால்களில் செம்பஞ்சுக்குழம்பு பூசும் முதுசேடியரை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது போல நோக்கியபடி அமர்ந்திருந்தாள். தொய்யில் எழுதிய தோள்களும் செந்தாமரைக்கோலமிட்ட கைவெண்மைகளும் பொன்பொடி பூசப்பட்ட கன்னங்களும் உடலெங்கும் மின்னும் மணிகளுமாக தன்னை ஆடியில் பார்த்தபோது ஓர் ஓவியத்துக்குள் அவள் புகுந்துகொண்டதுபோலத் தோன்றியது.
அனகை அவள் கூந்தலில் பட்டுநூலை சுற்றிக்கட்டியபடி “யாதவர்களின் மணநிகழ்வுக்கு அத்தனை ஷத்ரியர்கள் ஏன் வந்தனர் என்று தெரிகிறது இளவரசி” என முகமன் சொன்னாள். பிருதை “இந்த ஆடிப்பாவையில் என்ன குறை இருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றாள். அனகை திடுக்கிட்டு “என்ன குறை?” என்றாள். பிருதை “இதோ உதடுகளின் இருபக்கமும் உள்ள இந்த மெல்லிய சுருக்கம்… அது முன்பு எனக்கு இருக்கவில்லை.” அனகை ஒன்றும் சொல்லவில்லை. “அது எனக்கு ஒரு அழுத்தமான ஐயம்கொண்ட முகத்தை அளிக்கிறது” என்றாள் பிருதை.
பெருமூச்சுடன் திரும்பியபடி “பெண்ணுடல் மீது ஆண்கள் பெருங்காதல் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள். அப்படியென்றால் எதற்காக இத்தனை அணிகள்?” என்றாள் பிருதை. “அவர்கள் பெண்ணுடலை குறையுடையதாக எண்ணுகிறார்கள். அணிகளால் அந்தக் குறையை நிறைத்துக் கொள்கிறார்கள்” என்ற அனகை சிரித்தபடி “அந்தக்குறை தெய்வங்கள் உருவாக்குவது. அதை மனிதர்களின் பொருட்களைக்கொண்டு நிரப்ப முயல்கையில்தான் முடிவில்லா அணிகளும் ஆடைகளும் கவிதைகளும் கலைகளும் உருவாகின்றன” என்றாள். பிருதை இன்னொரு முறை ஆடியில் பார்த்தபின் “நான் சொல்லப்போகிறேன்” என்றாள்.
“இளவரசி” என்று அனகை அவள் முன்னால் வந்தாள். “நான் என் மைந்தனைப்பற்றி சொல்லவிருக்கிறேன் அனகை” என்றாள் குந்தி. “இளவரசி, ஷத்ரியர் மரபுகள்…” என அனகை தொடங்கியதுமே “யாதவப்பெண்களை பிறப்பிலேயே அன்னை என்று குலமூதாதையர் வணங்குகிறார்கள். என் குலவழக்கத்தை நான் ஏன் மறைக்கவேண்டும்?” என்றாள் குந்தி. அனகை “அரசர் அதை எவ்வாறு ஏற்பார்?” என்றாள். “அவர் ஏற்றாகவேண்டும்…” என்று குந்தி சொன்னாள்.
அனகையின் கண்களுக்குள் நெய்விளக்குகளின் செவ்வொளி தெரிந்தது. “பாண்டுரர்கள் ஆண்மையற்றவர்கள் என்று வைத்தியநூல்கள் சொல்கின்றன. அதை இதற்குள் மார்த்திகாவதியின் நகரமே அறிந்திருக்கும். ஆகவேதான் பீஷ்மபிதாமகர் தன் மைந்தனுக்கு உடல்நலமில்லை என்றபோதும் மணமங்கல இரவை இன்றே வைத்துக்கொள்ளவேண்டுமென ஆணையிட்டிருக்கிறார்” என்றாள் பிருதை.
அனகை “ஆம் இளவரசி, இளைய மன்னரைப்பற்றி சேடிகளும் அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்” என்றாள். “நானே அவருக்கு மாலையிட்டிருக்கிறேன். எனவே நான் அவரது ஆண்மையின்மையை ஒருபோதும் வெளியே சொல்லமாட்டேன் என பீஷ்மபிதாமகர் நினைக்கிறார். இங்கேயே மணமங்கல இரவு முடிந்து மறுநாள் நான் நிறைநீராடினால் அச்செய்தியே இளையஅரசரின் ஆண்மைக்கான சான்றாக ஆகிவிடும் அல்லவா?” பிருதை புன்னகையுடன் “நான் அதைத்தான் செய்யவிருக்கிறேன். அதற்குப்பதிலாக அவர்கள் என் மைந்தனை ஏற்றுக்கொள்ளட்டும்” என்றாள்.
“அதற்கு…” என அனகை தொடங்கியதுமே “இளையமன்னர் அதை ஏற்கவில்லை என்றால் அவருக்கு ஆண்மையில்லை என்று கூறி நான் வெளியே வந்துவிடுவேன்” என்று குந்தி சொன்னாள். அனகை “ஆணை” என்றாள். “அஸ்தினபுரிக்கு நான் சென்றபின் என் மைந்தனைத் தேடிக் கண்டடைந்து அவனை தன் அறப்புதல்வனாக இளையமன்னர் ஏற்கவேண்டும்… அதை அவர்கள் செய்வார்கள். வேறு வழியே அவர்களுக்கில்லை” என்றாள் குந்தி.
அனகை “ஆணை” என்றபின் தலைவணங்கி வெளியே சென்றாள். வெளியே நின்ற முதுசேடி உள்ளே வந்து “தாங்கள் சற்று நறும்பால் அருந்துகிறீர்களா இளவரசி?” என்றாள்.