இரவும் முறையீடும்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். சில மாதங்களுக்கு முன், தற்செயலாக தங்கள் இணையத்தில் நுழைந்தேன். புதையல் கிடைத்த மாதிரி ஆனது. தினமும் வாசிக்க வாசிக்கத் திகட்டாத தமிழ் அமிழ்தம்! நன்றி.

என்னைப்பற்றி.. நான் குடும்பத்துடன் 1990ல், ஆஸ்திறேலியாவிற்குக் குடி பெயர்ந்து விட்டேன். தங்களின் எத்தனையோ இடுகைகளைப் பலமுறை படித்து ரசித்துள்ளேன். இன்று உங்களுக்கு எழுத முனைந்துள்ளேன்.

அதற்குக் காரணம் முறையீடு என்ற இடுகைதான். தங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இடப்பட்ட இடுகையாகத் தெரிகிறது. நானும் உங்கள் கூட இருந்து அந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டது போல் உணர்ந்தேன்.

“நானும் அறிந்திருக்கிறேன் இந்தக் கருணையை. அதன் நுனியைப் பற்றி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு நம்பிக்கையுடன் ஆறுதலுடன் தூங்கியிருக்கிறேன். எங்கோ யாரோ இருக்கிறார்கள். கேட்கிறார்கள்.” என்ற வரிகள் என்னை உலுக்கி விட்டன.

தங்கள் இணையத்திற்கு நன்றி. தங்கள் குடும்பத்திற்கு என் ஆசிகள்.

அன்புடன்,

ராகவன் ராமன்.

அன்புள்ள ராகவன் ராமன்,

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என்னும் அரிய வரி நினைவுக்கு வருகிறது.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம்.

“தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” … அருமையான வார்த்தைகள். ஆனால் இந்த வார்த்தைகள் இறையின் மேன்மை அறிந்து வரும் வார்த்தைகள். ஒரு சமாதானத்துடன் அடையும் நிலை. இந்த உலகம் மட்டுமல்ல, அண்ட சராசரங்களையும் ஆட்டுவிப்பான் யாரென உணர்ந்த நிலை. கவி அரசர் உணர்ந்து எழுதிய வார்த்தைகள். அது ஒரு மிக உன்னதமான நிலை.

“அன்னவர்க்கே சரண் நாங்களே” என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் சரணாகதி தத்துவம். இங்கே தலைவர் ஸ்ரீமன் நாராயணன்.

ஆனால் அந்த அற்பஜீவி முறையிட்டது. யாரும் கேட்பார் என்றோ, புகலிடம் தருவார் என்றோ எண்ணி இடும் முறையீடு அல்ல. நான் அனுபவித்துள்ளேன். 1999ஆம் வருடம் அவ்வாறு முறையிட்டேன்.. யாரோ கேட்டார்கள், அபயம் நல்கினார்கள். அது “தலைவர் அன்னவர்க்கே சரண் ” என்று உணர்ந்த நிலை அல்ல.

நான் அந்த ” முறையீடு” என்ற இடுகையை வாசிக்கும்போது நான் அதே நிலையில் ஒரு தருணத்தில் நின்றதை நினைத்துக் கொண்டேன். எனக்கு அன்று உதவியவரையும் நினைத்துக் கொண்டேன்.

இனி தங்களது வேறொரு இடுகையைப் பற்றி…

இயற்கை உணவு: என் அனுபவம் என்ற இடுகைக்கு நன்றி. நல்ல அறிவுரைகள். ” இன்றைய மனிதனின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் மலச்சிக்கலே” என்பது மிகவும் சரியே. நான் ஒரேயடியாக சமைக்காத காய்கறிகளையே உண்பதில்லை; முக்கால் பதம்; அரைப் பதம் என்று சமைக்கிறேன்.

தங்களுடன் ஒரு சுட்டியைப் பகிர்ந்து கொள்கிறேன். அருமையான, சைவ அசைவ உணவு வகைகள். சமைக்கும் முறை விளக்கங்கள் – http://www.whfoods.com/ .

எனக்கு மறுபடி அனுப்ப நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. தங்கள் குடும்பத்திற்கு என் ஆசிகள்.

அன்புடன்,

ராகவன் ராமன்.

அன்புள்ள ஜெயமோ,

நானும் இப்போது தான் இரவு நாவல் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். விஜய் மேனின் இரவு பற்றிய அவரது அறிமுக வார்த்தைகள் என்றும் மனதை விட்டு அகலாதவை. இருட்டு பயம் போக்கி அழகான வண்ணத்தை இரவுக்கு அவர் வார்த்தைகள் அளித்ததாகவே நான் எண்ணுகிறேன். கல்லூரிக் காலங்களில் நாங்கள் ஒரு காலமும் பகல் பொழுதில் படித்ததில்லை, இரவுதான் படிப்பதற்கு உகந்தது என்ற ஒரு குருட்டு நம்பிக்கை எனது நண்பர்கள் அனைவருக்கும் இருந்தது. ‘துரு நைட்டு’ என்று நாங்களாகவே அதற்கு பெயரும் வைத்துக் கொள்வோம். அதிகாலை பஜ்ர் தொழுகை வரை நடக்கும்.. இரவின் மூன்றாம் பாகத்தில் இறைவன் அடிவானத்தில் இறங்கி அடியார்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக பெருமானார் (ஸல்) அவர்களின் ஒரு வாக்கும் உள்ளது.

‘இரவு’ தவிர்க்க முடியாத ஒரு தமிழ் நாவல். என் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வருகிறேன்.

-ஹாருன்

அன்புள்ள ஹாரூன்,

இரவு இளமையில் அளிக்கும் போதை மெல்லமெல்ல இல்லாமலாகிறது. இரவைத் தக்கவைத்துக்கொள்பவர்கள் இளமையையும் தக்கவைத்துக்கொள்கிறார்கள்.

காசர்கோட்டில் நான் இரவெல்லாம் விழித்து வாசித்துக்கொண்டிருப்பேன். முத்தாய்ப்பாக என் இல்லத்து அருகே கடற்கரைப்பள்ளி இறைவனே பெரியவன் என முழங்கும். அந்த அனுபவத்தை முன்னர் விரிவாக எழுதியிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25
அடுத்த கட்டுரைபாம்பும் புடவியும்