மரணதண்டனை ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,

அவ்வப்போது சில விசயங்களில் எழுதவேண்டும் என நினைப்பேன், ஆனால் போதிய கருத்து அமையாமல் போகிவிடுகிறது. இன்று அவ்வாய்ப்பு கிட்டியது. மரணதண்டனை குறித்தான பதிவில் உங்கள் கருத்தில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் எனது இரு கூடுதல் விசயங்களைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். .

நடைமுறையில், பாதிக்கப்பட்டவருக்கு அரசின் சார்பில் உதவிகள் செய்ய வேண்டும் என்று சட்டம் இல்லை ஆனால் குற்றவாளிக்கு உணவு, மருத்துவம், பாதுகாப்பு, நிர்வாகச் செலவு என பலவற்றை அரசு செய்ய வேண்டும் என்கிறது. துகாராம் ஓம்பலே என்ற சாதாரண காவலர் தன்னுயிரை இழந்து தான் கசாபைப் பிடித்துத் தந்தார். அதன் மூலம் தான் பாகிஸ்தான் சதி வெளியில் தெரிந்தது. ஆனால் அசோகச் சக்கரத்துடன் துகாராம் குடும்பத்தைவிட்டு விட்டு நான்காண்டுகளில் குற்றவாளிக்குச் செலவு செய்த தொகை மட்டும் 30 கோடி. எங்கே இருக்கிறது சமதர்மம்? பாதிக்கப்பட்ட பல நூறு மக்களுக்குக் கூட மொத்தமாக இவ்வளவு செலவளித்து இருக்கமாட்டோம். இன்னும் ஆயுள் தண்டனை என்றால் எத்தனை குடிமகனின் உழைப்பை வாங்கி வீணடித்திருக்க வேண்டும்? குற்றவாளிக்கு ஆயுள் முழுக்கச் செலவு செய்து பாதுகாக்க எத்தனை மக்கள் கூடுதலாக வரிசெலுத்தி உதவுவார் என எண்ண வேண்டும்.

முக்கியமான சிக்கல் வேறொன்றும் உள்ளது, இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், பத்திரிக்கையாளர் டேனியல் பெர்ல் கொலைவழக்கு, காஷ்மீர் படுகொலை வழக்குகளில் சிக்கிய மூன்று முக்கிய கைதிகள் கந்தகார் விமானக் கடத்தலின் போது விடுவிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இந்தியா வந்தது. மாறாக விரைவான மரண தண்டனை வரலாற்றை மாற்றி எழுதியிருக்கும். இன்று கைவிடப்படும் மரணதண்டனைகள் நாளை நமக்கான குழிகளைத் தோண்டுகின்றன. இதனையும் நினைவில் கொள்ளும் போது மரணதண்டனையின் அவசியம் தெரியும். குற்றவாளியையும் பாதுகாக்கவேண்டும், தீவிரவாதிகளிடம் பிணையாகாமல் மக்களையும் காக்க வேண்டும் என்பது தேவைதானா எனவும் மனித உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

——
இதற்கிடையில் கடந்தமாதம் நாவி பிழை திருத்தியை உங்கள் தளத்தில் பகிர்ந்து கொண்டதற்கும், அனுப்பிய முகமறியா நண்பருக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com

அன்புள்ள நீச்சல்காரன்

ஒரு மரணதண்டனைக்கைதிக்குச் செலவழிக்கப்படும் செலவுகளை வெறும் பொருளியல் கணக்காக பார்க்கக்கூடாது. நாட்டில் நீதி நிலவவேண்டும் என்பதோடு நீதி நிலவுகிறது என்ற எண்ணமும் நிலைநாட்டப்படவேண்டும். ஆகவே அனைத்துவிசாரணைகளையும் முறையாகச் செய்வதே ஜனநாயகத்துக்கு உவப்பானது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29
அடுத்த கட்டுரைமதமும் தரிசனங்களும்