சிங்கப்பூர் உரை கடிதங்கள்

அன்புள்ள ஜெ

உங்கள் சிங்கப்பூர் வூட்லண்ட்ஸ் புத்தகாலயத்தில் நடந்த சொற்பொழிவு மிக ஆழ்ந்த கருத்துக்களை கொண்டு மிக நன்றாக இருந்தது. ஜப்பானை பார் என்று சொல்லாமல் கிரியேடிவ் ஆக இருக்கவேண்டும் என்பதை மிகுந்த எடுத்துக்காட்டுகளோடு பேசினீர்கள்….

மேலைநாடுகளில குறிப்பாக அமெரிக்காவில், நடத்தும் ஆராய்ச்சிகளும் அவர்களின் சிந்தனைகளும் கருத்துக்களும் மிகுந்த வியப்பூட்டுகின்றன. இதற்கெல்லாம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சரியான சூழ்நிலை இருக்கிறதா? மிக முக்கியமானது கருத்து சுதந்திரம். இன்றைய தமிழ்நாட்டில் மாற்றுக் கருத்து எதுவும் பொறுத்துக்கொள்ளப்படாத நிலை உருவாகிவிட்டது. ஒரு மாற்றான கருத்து வந்தால் அதை ஆக்க பூர்வமாக விவாதிப்பது என்பது இல்லாமல் அதை சொன்னவரை கிழ்த்தரமாக தாக்குவது என்பதுதான் நடக்கிறது,

அரசியலில் மட்டும் இருந்த இந்த நிலை இப்போது மற்ற துறைகளுக்கும் பரவி உள்ளது மிக சோகமானது, மிக ஆழ்ந்த காழ்ப்புணர்ச்சி என்பது மிக சாதரணமாக இருக்கிறது, இது இல்லாத தலைவர்களும் சிந்தனையாளர்களும் இருக்கும் இடத்தில்தான் creativity மலரும்…. यथा राजा तथा प्रजा ॥

அன்புடன்

கண்ணன்

அன்புள்ள கண்ணன்,

நன்றி.

கருத்துச்சுதந்திரம் தமிழகத்தில் உள்ளதென்றே நினைக்கிறேன். முழுமுற்றான கருத்துச்சுதந்திரம் என ஒன்றில்லை. கருத்துக்கள் நேரடியாக வன்முறையாக மாற அரசும் சமூகமும் அனுமதிப்பதில்லை.

தமிழகத்தின் பிரச்சினை கருத்துக்களை இங்குள்ளவர்கள் கவனிப்பதில்லை என்பதே. இதுவே ஜனநாயகத்தின் பிரச்சினை. அடக்குமுறைச் சமூகத்தில் கருத்துக்கள் ஒடுக்கப்படும், மீறிவரும் கருத்துக்கள் கவனம்பெறும். மாற்றத்தை உருவாக்கும் வல்லமையும் கொள்ளும். ஜனநாயகத்தில் எல்லா கருத்துக்களும் வெறும் ஒலிகளாக மாறி மறையும். கேளிக்கைக்குரல்களே ஓங்கி ஒலிக்கும்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களைச் சந்தித்து உரையாடியது மனதில் மிகுந்த குளிர்ச்சியை உணரச் செய்தது. உங்கள் அறையில், நேற்று மதியம் சந்தித்தது முதல் இன்று மதியம் வரை நான் பெற்றுக் கொண்டது அதிகம். ஹெமிங்வே பற்றிய தங்கள் கருத்து, கடல்புரத்தில் பற்றி நாம் பேசியது, மகாபாரதத்தில் எனக்குப் பிடித்த கதைமாந்தர் என்று நாம் யாரையாவது குறிப்பிட்டுச் சொல்லி மகாபாரதத்தை சிறுமைப்படுத்தக் கூடாது என்று பலவற்றைப் பற்றியும் பேசியது மனதில் என்றென்றும் குமிழியிட்டுக் கொண்டே இருக்கும்.

குறிப்பாக, நாம் உணவருந்தும்போது திருக்குறள் பற்றி தாங்கள் பேசியவை இதுவரை பலரும் அறியாதது. உண்மையில், திருக்குறளிற்கு உங்கள் உரை வெளிவந்தால் தமிழுக்கும், தத்துவத்துறைக்கும், ஒரு பெரிய கொடையாக இருக்கும். காரில் நாம் “வூட்லண்ட்ஸ்” வந்தபோது உங்களின் அடுத்த பயணம் பற்றிச் சொன்னீர்கள். அந்தப் பயணம் பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய வாழ்த்துகிறேன். உங்களுடன் அருகமர்ந்து தேநீர் பருகியது, என் வாழ்வில் என்றென்றும் மறக்கமுடியாத ஒரு தருணம்.

திங்களன்று மாலை என் குழந்தையுடன் தங்களைச் சந்திக்க ஆசை. உங்கள் நேரம் மற்றும் திட்டங்கள் பற்றி தெரியவில்லை. மீண்டும் உங்களை சந்திக்கும் பேறு அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய சிறிய பங்களிப்பாக ஏதேனும் நினைவுப் பொருளை தங்கள் குடும்பத்திற்கு சமர்ப்பிக்கவும் ஆவலாய் உள்ளேன்.

மிக்க அன்புடன்,
கணேஷ்

அன்புள்ள கணேஷ்,

ஆம், நான் எழுதவிரும்பும் பெருநூல்களில் ஒன்று அது. பார்ப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 16
அடுத்த கட்டுரைவெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும்