«

»


Print this Post

மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்


அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் எழுதிய கீதைகட்டுரைகள் குறித்து நிகழும் இந்த விவாதத்தைக் கவனித்தீர்களா? [ கீதை இந்துமதநூலா, தத்துவநூலா?: எதிர்வினை ] உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளனவே?

ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்,

உங்கள் ஆதங்கம் புரிகிறது. இணைப்பை வாசித்தேன். அதில் உள்ள மறுமொழிகள் உட்பட அது ஒரு தரப்பின் குரல்.

அதில் சொல்லப்பட்டுள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள்.

மதத்துக்கும் ஆன்மீகத்துக்குமான உறவை இப்போது இந்த கீதை விவாதத்தில் இணைத்துக்கொள்ள போவதில்லை. அதன் ஒருமை கெட்டுவிடும். ஆன்மீகம்X மதம் என்ற கோணத்தில் நான் ஏராளமாக பேசியிருக்கிறேன். ஆன்மீகம் என்ற சொல்லை எப்போதெல்லாம் சொல்கிறேனோ அப்போதெல்லாம் மதம் சார்ந்த பொருளில் அல்ல என்று சொல்வது என் வழக்கம். இதுவரை ஒரு தரப்பினர் கடுமையாக உழைத்து அதை தவறாகபுரிந்துகொண்டு வந்தார்கள். இப்போது அவர்களின் எதிர் தரப்பினர் அதை விட கடுமையான உழைப்புடன் தவறாகக் புரிந்துகொள்கிறார்கள்.

என் நோக்கில் ஆன்மீகம் என்பது ஒரு தேடல். முழுமையான இறுதியான புரிதல், அப்புரிதலை அனுபவமாக்கிக் கொள்ளுதல் என்ற இலக்கை நோக்கியது அது. இந்த இறுதி இலக்கை ‘ ஆத்ம சாட்சாத்காரம்’ [சுயபேறு] என்று அத்வைதம் சொல்கிறது. நிப்பானம் என்று பௌத்தம் சொல்வதன் இன்னொரு விளக்கம்தான் இது. அது மிக அந்தரங்கமான ஒரு ஆழ்பயணம். அதில் புற அமைப்புகளுக்கு பங்கு ஏதும் இல்லை.அறிதல்கள் அனைத்தையும் அந்த இலக்கை நோக்கிக் குவிப்பதையே ஆன்மீகப் பயணம் என்று சொல்கிறேன். கீதை உட்பட உள்ள மெய்ஞான நூல்களை அந்தக் கோணத்திலேயே வாசிக்க வேண்டும் என்பது என் குருமரபு எனக்குக் கற்பித்தது.

மதம் என்பது நம்பிக்கைகள்,சடங்குகள், குறியீடுகள் ஆகியவற்றின் அடிபப்டையிலான ஓர் நிறுவனம். அந்த கூறுகளை விளக்கமளித்து இணைப்பதற்காகவே அங்கே தத்துவம் உள்ளது. அது மரபின் பெரும் சேமிப்புக் கிடங்கு. அதனாலேயே அதை எவரும் நிராகரித்து விடமுடியாது. அதேசமயம் அதைக் கடந்தால் மட்டுமே ஆன்மீகப் பயணம் சாத்தியமாகும். அமைப்புகள் தேவை இல்லை என்றல்ல. அரசியலுக்கு ,கருத்துக்களை நிலைநாட்டவும் பரப்பவும் அவைதேவை. ஆனால் அவை ஆன்மீகமாக பயனற்றவையே.

இதனால்தான் ஆன்மீக ஞானிகளிடமெல்லாம் தெளிவான மத மறுப்பு அம்சத்தை நாம் காண்கிறோம். அவ்வாறு ஆன்மீக ஞானிகள் மதத்தை கடந்து செல்லும்போது மதச்சார்பானவர்கள் கொள்ளும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. தன் இறுதிநாட்களில் வடலூர் வள்ளலார் சைவ மதத்தை தீர்மானமாக நிராகரித்தார். அதன் சாத்திரங்கள் சடங்குகள் எதிலும் சாரமில்லை என்று தான் கண்டதாகவும் அவற்றை உதறவேண்டும் என்றும் சொன்னார். அந்நாள் வரை அவரை பேணிய முதன்மைச் சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் அடைந்த ஏமாற்றமும் சினமும் அடிகளையே நிராகரித்து கைவிடும்படிச் செய்தது அவரை.’கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என வள்ளலார் மனம் நொந்தது அதனாலேயே.

நாராயணகுருவை அவரது அக்காலச் சீடர்களில் பெரும்பாலானவர்கள் கைவிடும்படி செய்ததும் குருவின் மத நிராகரிப்பே. தான் உருவாக்கிய அனைத்தையும் உதறி குரு இலங்கைக்கும் பின்னர் மதுரைக்கும் சென்றார். அன்று பெரும் ஆலமரமாக  வளர்ந்துவிட்டிருந்த மொத்த நாராயண இயக்கத்தையே கைவிட்டுவிடுவதைப் பற்றி சிந்தனைசெய்தார். பின்னர் நாராயண இயக்கத்தையே இரண்டாகப் பிளந்து தன் மாணவர்கள் கட்டும் அடங்கிய துறவியர் அ¨மைப்பை தனியாக உருவாக்கினார். அங்கும் நில்லாமல் தன் முதன்மைச் சீடரான டாக்டர் நடராஜனிடம் ‘எந்த அமைப்புக்குள்ளும் மதத்துக்குள்ளும் நில்லாதே. பிச்சைக்காரனாக இரு…இவையனைத்தயும் விட்டு விட்டு ஓடு’ என்று வழிகாட்டினார். அவ்வாறு விட்டு விட்டு சென்று இந்தியாவெங்கும்  பிச்சை எடுத்து அலைந்து டாக்டர் நடராஜன் நடராஜ குருவாக ஆனார்.

பிரம்மஞான சங்கத்தை விட்டு விலகிய ஜெ.கிருஷ்ணமூர்த்தியை , அவர் தன் கடைசிக் கணம் வரை போதித்த ஆன்மீகத்தை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறுதான் ஓஷோவின் வசைகளையும் நக்கல்களையும் பாலியல்கதைகளையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த மதக் குரல் எப்போதும் ஒலிப்பது. அக்குரலுடன் விவாதிப்பது எளிதல்ல. தன் முதன்மை மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியாரையே வள்ளலாரால் சொல்லிப் புரியவைக்க முடியவில்லையே.

**

இரண்டாவது விஷயம் சிறில் அலெக்ஸ் இந்த இணைய தளத்தை நடத்துவது பற்றியது. அவரது நல்லெண்ணம் நேர்மை ஆகியவற்றை கேள்விக்குரியதாக்குவது. என்னுடைய நேர்மையை ஐயப்படுவது. இதெல்லாம் எல்லா அரசியல் தரப்பினரும் எப்போதுமே செய்வதுதான். இதில் அரசியல்வாதிகள் நடுவே பேதமே இல்லை. அது அரசியலின் ஒரு அங்கீகரிக்கபப்ட்ட வழிமுறை.

எனக்கு கிறித்தவ திருச்சபை பணம் தந்திருக்கிறது என்று வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன். இதை வாசித்த பிறகாவது அவர்கள் தந்தால் ஒரு புதிய திருச்சபையை நானும் உருவாக்குவேன்- திருச்சபையின் பணம் வாங்கிய போதகர்கள் பெரும்பாலும் செய்துவருவது இதைத்தான்.

இதன் விளைவாக நடக்கப்போவது அனேகமாக ஒன்றுதான். சிறிலை இருபக்கமும் ஐயபப்டுவார்கள். மனம்சலித்து சிறில் விட்டுவிட்டுப் போவார். இந்த இணையதளம் அப்படியே நின்றுபோகும். அப்படிப் போனால் நான் இம்மிகூட கவலைப்படவும் போவதில்லை. இதையெல்லாம் சுமந்தலைவது என் வேலையுமல்ல

http://jataayu.blogspot.com/2008/05/blog-post.html

கீதை அகம்

கீதைவெளி

கீதைத்தருணம்

கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்

நம்மாழ்வார்-ஒரு கடிதம்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/476

1 ping

  1. jeyamohan.in » Blog Archive » மதம் ஆன்மீகம் அவதூறு- ஓர் எதிர்வினை

    […] இந்தப் பதிவில் (http://jeyamohan.in/?p=476)  “..எனக்கு கிறித்தவ திருச்சபை பணம் […]

Comments have been disabled.