ஒரு வாழ்வுரிமைக்கோரிக்கை

நண்பர் முத்துராமனை இடதுசாரி இயக்கங்களில் ஈடுபாடு கொண்ட இலக்கியவாசகராக எனக்கு ஏழாண்டுகாலமாகத் தெரியும்.[ Muthu Raman [email protected] ] நாகர்கோயில்காரர். சிறிதுகாலம் திரைத்துறையில் பணியாற்றினார். பின்னர் துறைமுகத்தில். தற்போது நூல் பிழைதிருத்தல் போன்ற சிறிய உதிரி வேலைகள் செய்துவருகிறார். அவர் வீட்டுக்கு வந்திருந்தபோது கடைசியாக நாங்கள் சந்தித்தபின்னர் உள்ள அவரது வாழ்க்கையைப்பற்றிச் சொன்னார்.

இளவயதில் தன் குடும்பத்தொழிலில் கடுமையான இழப்பைச் சந்தித்து தந்தை ஈட்டிய சொத்துக்களை இழந்ததன் குற்றவுணர்ச்சி அவருக்குண்டு. அந்தக்குற்றவுணர்ச்சி சில சமீபகாலச் செயல்களால் தீர்ந்தது என்றார். அதில் முக்கியமானது சமீபத்தில் அமிலவீச்சுக்குப் பலியான வினோதினியின் இறுதிக்காலத்தில் உடனிருந்து அவர் குடும்பத்துக்கு உதவியது. இன்னொன்று, குமரிமாவட்ட இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் சில மாணவிகளுக்கு உதவியது.

சென்ற பிளஸ் டூ தேர்வில் உயர்மதிப்பெண் பெற்ற இலங்கை அகதிமுகாமைச் சேர்ந்த இருபெண்களுக்கு படிப்புக்கு வழியில்லை என்ற தினத்தந்தி செய்தியைப் பார்த்து அங்கே சென்றிருக்கிறார் முத்துராமன். அங்கே சென்றபின்னர்தான் அங்கு மேலும் பல குழந்தைகளுக்கு அவ்வகையான உதவிகள் தேவை என்பதை அறிந்திருக்கிறார். அவரே கடுமையான பொருளியல் நெருக்கடியில் இருப்பவர். இருந்தாலும் ஒவ்வொருவரையாக நேரில் சென்று சந்தித்தும், மின்னஞ்சல்கள் மூலம் தொடர்புகொண்டும் உதவிகோரியிருக்கிறார். இரண்டுமாத முயற்சியால் அந்தக்குழந்தைகளின் கல்விக்கு உதவும் மனங்களை கண்டுபிடித்திருக்கிறார். தினத்தந்தி செய்தியில் அவரது பெயரைக் கண்டதும் மனநிறைவாக இருந்தது.

முத்துராமன் பேசியதிலிருந்து நான் அடைந்த மனச்சித்திரங்கள். அவரது முயற்சியில் தமிழகத்தின் அரசியலியக்கங்கள் எவையும் எவ்வுதவியையும் செய்ய முன்வரவில்லை. அவர்கள் அகதிமுகாம்களை எப்போதும் பொருட்படுத்துவதேயில்லை. அவருக்கு முதன்மையான உதவிகளைச் செய்தது நடிகர் சூரியாவின் குடும்பத்தால் நடத்தப்படும் அகரம் அறக்கட்டளை. அதன்பின் எஸ்.ஆர்.எம். பல்கலை. மற்றும் சில கிறித்தவ போதகர்கள்.

அகதிமுகாம்களின் நிலை வருந்தத்தக்க நிலையில்தான் உள்ளது. இன்றும் தொடர் காவல்கண்காணிப்பு உள்ளது. முத்துராமன் அங்கே சென்றுவந்த மறுநாளே அவரை காவல் உளவுத்துறை கூப்பிட்டு விசாரித்திருக்கிறது. அவரது அனைத்து ஆவண ஆதாரங்களையும் கேட்டு பெற்றிருக்கிறது. இந்தக்கெடுபிடி காரணமாகவே அங்கே எவரும் செல்வதில்லை. இலங்கையிலேயே இன்று இத்தனை கெடுபிடிகள் இருக்காது என நினைக்கிறேன். போர் முற்றிலும் முடிந்தபின்னரும் அரசு அவர்களை தடுப்புக்காவலில் வைத்திருக்கும் குற்றவாளிகளாகவே நடத்துகிறது.

ஆகவே இம்மக்கள் எங்கும் வேலைக்குச் செல்லமுடியாது. காரணம் இரவுக்குள் அவர்கள் முகாமுக்குத் திரும்பிவிடவேண்டும். ஒருவாரத்துக்குமேல் எங்காவது செல்வதாக இருந்தால் முன்னரே காவல்துறையிடமிருந்து எழுத்துபூர்வ அனுமதி பெறவேண்டும். அது மிகச்சிக்கலான நடைமுறைகள் கொண்டது, பெரும்பாலும் நிராகரிக்கப்படும். இருபதாண்டுகளாக இதே நடைமுறைதான். இதுதான் அம்மக்களை அடிமைப்படுத்துகிறது. உதாரணமாக களியக்காவிளை அருகே உள்ள முகாமில் இருக்கும் ஒருவர் நாகர்கோயிலில் வேலைக்கு வந்து திரும்ப முடியாது.

அவர்களை வேலைக்கு வைப்பவர்களிடமும் காவல்துறை ஆவணங்களைக் கேட்டும் அடிக்கடி விசாரணைக்கு அழைத்தும் கெடுபிடி செய்கிறது. ஆகவே மிகச்சாதாரண உடலுழைப்புக்கு மட்டுமே அவர்கள் செல்லமுடிகிறது. மிகமோசமான கூலியையே பெறமுடிகிறது. அதில் பேரம்பேச முடிவதில்லை. அதேசமயம் அவர்கள் எங்கும் செல்லமுடியாதென்பதனால் உள்ளூரில் அவர்களுக்கு மாதம் 20 சதவீதம் வரை வட்டிக்குக் கொடுக்க ஆளிருக்கிறார்கள். அனைத்துவகையிலும் அடிமைப்பட்ட மக்கள் இவர்கள்.

இவர்களில் இருந்து படிக்கச்செல்லும் குழந்தைகளுக்கு இந்திய அரசு அளிக்கும் எந்த ஒரு உதவித்தொகையும் இல்லை. எந்த நிதிச்சலுகையும் இல்லை. எந்த விடுதிவசதியும் இல்லை. இட ஒதுக்கீடுகள் இல்லை. கற்று முடித்தால் குடியுரிமை இல்லை என்பதனாலேயே எந்த அரசு வேலைக்கும், அரசுசார் வேலைக்கும் செல்லமுடியாது. அரசு நிதிபெறும் அமைப்புகளில்கூட வேலைக்குச் செல்லமுடியாது. வங்கிக்கடன்கள் இல்லை. எவ்வகை அரசு சார் உதவிக்கும் தகுதி இல்லை.

தனியார் இவர்களை அனேகமாக வேலைக்கு எடுப்பதில்லை. காரணம் குடியுரிமைச் சிக்கல். காவல்துறையின் தீராக்கெடுபிடி. ஆகவே பட்டப்படிப்பு பெற்ற மாணவர்கள்கூட மிகச்சாதாரணமான உடலுழைப்பு வேலைக்கு மட்டுமே செல்லமுடிகிறது. நிர்வாகவியல் படித்துவிட்டு மீன் அள்ளிப்போடும் வேலைசெய்கிறார்கள். வீட்டுவேலை செய்கிறார்கள்.

காங்கிரஸால் ஆளப்படும் இந்திய மையஅரசுக்கு இம்மக்கள் மேல் மிகக்கடுமையான காழ்ப்பு இருப்பது வெளிப்படை. காங்கிரஸ் இவர்களை ஒடுக்கவும் புறக்கணிக்கவும் விரும்புவதால் காங்கிரஸின் நல்லெண்ணத்தை நாடும் எந்த அரசியல்கட்சியும் இவர்களுக்காகப் பேசுவதில்லை. சொல்லப்போனால் இவர்களுக்காக அரசியல் தளத்தில் குரல்கொடுக்க இன்று எவருமே இல்லை.

இந்தியாவுக்கு வந்த திபெத்திய அகதிகளுக்கு நேருவின் காலத்தில் ஐந்தாண்டுகளுக்குள் குடியுரிமை அளிக்கப்பட்டது. வங்க அகதிகள் எட்டாண்டுகளில் குடியுரிமை பெற்றார்கள். ஆனால் இருபத்தைந்தாண்டுகளாகக்கூட குடியுரிமை அளிக்கப்படாதவர்கள் இலங்கை அகதிகள். ஒருநாட்டில் பிறந்த குழந்தைக்கு அங்கே இயற்கைக்குடியுரிமை உண்டு என்பது சர்வதேசச் சட்டம். அந்த உரிமைகூட இவர்களுக்கில்லை. இந்தியமண்ணில் பிறந்த பல்லாயிரம் குழந்தைகளுக்கு அகதி என்ற அடையாள அட்டையை வழங்கியிருக்கும் இந்திய அரசுக்காக நாம் வெட்கிக் கூச வேண்டும்.

இச்சூழலில் ஒரு பெரிய நாடு தழுவிய பிரச்சார இயக்கமாக இதைக் கொண்டுசெல்லாமல் இவர்களுக்கு விடிவு ஏற்படப்போவதில்லை. மேலோட்டமான உணர்ச்சிக்கொந்தளிப்புகளையே நாம் அரசியல்நடவடிக்கை என நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதற்காக இனவெறி மொழிவெறி ஆகியவற்றை பொதுவெளியில் கக்குகிறோம். வெற்று கோஷங்களை எழுப்பி நம் மீது நாமே பழிகளை தேடிக்கொண்டு நமது நியாயமான கோரிக்கைகளையும் வெறும் இனவெறியாக நாமே சித்தரித்துக்கொள்கிறோம்.

இலங்கைத்தமிழர் துயரை அதற்கான ஒரு முகாந்திரமாகவே எண்ணுகிறோம். நமக்கு அம்மக்கள் மீது உண்மையான ஈடுபாடு இருந்திருந்தால் நமது கவனம் இந்த அகதிமுகாம்களை நோக்கியே முதலில் திரும்பியிருக்கும். இன்று ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு இம்மக்களை அவர்கள் விழுந்துள்ள இக்கட்டிலிருந்து மீட்காவிடில் அது ஒரு பெரும் வரலாற்றுப்பழியாகவே நம் மீது எஞ்சும்.

இந்திய அளவில் முற்போக்காகவும் மனிதாபிமானநோக்கிலும் சிந்திக்கும் அனைவரின் ஆதரவையும் திரட்டுவதே முதலில் செய்யவேண்டியது. எவருமே மறுக்கமுடியாத கோரிக்கைகள் இவை. இந்திய அரசு இலங்கைத்தமிழர்களுக்கு அநீதியான பாரபட்சத்தைக் காட்டுகிறது என்பதை இந்தியாவெங்கும் நியாய உணர்வுள்ளவர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல சமூக ஊடகங்களை பயன்படுத்தமுடியும்.

ஆங்கிலத்தில் சமநிலையும் தர்க்கத்தன்மையும் கொண்ட கூட்டான மின்னஞ்சல்கள், சமூகவலைத்தளப்பதிவுகள் மூலம் இளைஞர்கள் இந்தக்கோரிக்கையை வலுவான தேசியக்கோரிக்கையாக ஆக்கமுடிந்தால் மட்டுமே ஏதேனும் பயன் விளையும். தேர்தல் நேரமே அதற்குரியது. சாத்தியமான, சர்வதேசச் சட்டம் வற்புறுத்தக்கூடிய, அனுமதிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் கொண்ட அடிப்படைக் கோரிக்கைகள் இவை.

அதேசமயம் இன, மொழி வெறுப்பையும் பிரிவினைக்கோரிக்கைகளையும் இதனுடன் இணைப்பது இந்த நியாயமான எளிய விஷயத்தை முழுமையாகத் தோற்கடிக்கவும் செய்யும். ஏழு பேர் விடுதலையை இனவாதக்கோரிக்கை என ஏற்கனவே இந்திய ஊடகங்கள் சித்தரிக்க நம்முடைய சமநிலை இல்லாத, தர்க்கபூர்வசிந்தனை சற்றும் இல்லாத கூச்சல்கள் வழிவகுத்துவிட்டன. காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் இலங்கை அகதிகள் மீது காட்டிவரும் பாரபட்சத்தை இந்தக்கோரிக்கை மேலும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுவது அதற்கான பதிலாகவும் அமையும்.

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் இலங்கை அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்கவும் இங்கேயே பிறந்த குழந்தைகளுக்கு இயல்பான குடியுரிமையை அளிக்கவும் இந்திய அரசை கட்டாயப்படுத்தியாகவேண்டும்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 18
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19