வேதாந்தம் மற்றும் அத்துவிதம் குறித்து மனக்கசப்புகளும் முன்தீர்மானங்களும் நிரம்பிய ஒரு சூழலில் நின்றபடி நாம் பேசுகிறோம் . இந்த மனக்கசப்புகளின் நடைமுறை அரசியல்த்தளங்களுக்கு நான் செல்ல விரும்பவில்லை . அவை நாமனைவரும் அறிந்தவையே. வேதாந்தம் அல்லது அத்துவிதம் என்ற சொல்லே இங்கே நமக்கு கசப்பு அளிப்பதாக ஆனது ஏன் என்பதை மட்டும் முதலில்பார்க்கலாம்
தமிழ்ச் சூழலில் சங்கரவேதாந்தம் இன்று ஒரு பழமைவாத அமைப்பின் முக அடையாளமாக உள்ளது. அவ்வமைப்புக்கு எதிராக சுதந்திர சிந்தனையாளர்களின் பல வழியினர் நடத்தும் கருத்துப் போராட்டம் இன்றும் தொடரக்கூடிய ஒன்றாகும். நாம் அதிலிருந்து தொடங்கி சங்கரரையும் வேதாந்தத்தையும் அறியும் முறையில்தான் இந்த முன்முடிவுகள் உதிக்கின்றன. இரண்டாவதாக தமிழ் நாட்டில் பிரபலமாக உள்ள இரு தத்துவ தரிசனங்கள் சைவசித்தாந்தமும் , விசிட்டாத்துவித வேதாந்தமும் . இவை அத்துவித வேதாந்தத்துக்கு மற்றான நோக்கு கொண்டவை. ஆகவே சமநிலை கொண்ட ஒரு தத்துவப்பார்வை வழியாகவே நாம் இன்று நம் மரபை அணுகவேண்டியுள்ளது.
தத்துவ ஆய்வின் முன்னுதாரண வழிமுறை
தத்துவப்போராட்டங்களில் எதிர்த்தரப்பை அழிவின் மூல ஊற்றாகக் காணும் ஒரு போக்கு பிரபலமாக உள்ளது. அது சென்ற மதமேலாதிக்கக் காலகட்டங்களில் வலுவாக உருவாகி வந்த ஒரு மனநிலை. நமது பௌத்த, சமண, சைவ, வைணவ நூல்களில் மதக்காழ்ப்பின் இருள் நிரம்பி கிடக்கிறது. அதே மனநிலைதான் இன்றுவரை தமிழகத்தில் தொடர்கிறது என்பதைக் காணலாம். சுதந்திர சிந்தனைக்கும் மதநோக்குக்கும் இடையே மட்டுமல்ல , சுதந்திர சிந்தனையின் தரப்புகளூக்கு இடையேகூட கடுமையான வெறுப்பு நிரம்பிய மோதல்களே நிகழ்கின்றன என்பதை நாம் அறிவோம். உதாரணமாக இங்குள்ள மார்க்ஸிய அடிப்படை கொண்ட சிந்தனையாளர்களுக்கு இடையே சென்ற நாற்பது வருடத்தில் நிகழ்ந்த மோதல்களைப் பார்த்தாலே போதும்.
தத்துவம் என்பது உலகை ஒரு குறிப்பிட்ட வகையாக விளக்கும் முறைமை. ஆகவே மாற்று விளக்கங்களுடன் அது மோதுவதை நாம் தவிர்க்க இயலாது. தத்துவம் என்பது வேர்ப்பரப்பு , அதிலிருந்தே அரசியல் சமூகவியல் அறவியல் ஒழுக்கவியல் அடிப்படைகள் உருவாகி வருகின்றன. ஆகவே தத்துவ மோதல் மிக்க விசையுடன் பலவிதமான உள்ளோட்டங்களுடன் நடப்பதையும் தவிர்க்கமுடியாது.
ஆனால் தத்துவ விவாதங்களை நடத்துவதில் நாராயண குரு காட்டிய வழி ஒன்று உள்ளது. தத்துவத்தை முழுமுற்றான உண்மை ஒன்றுக்கான ஒருங்கிணைந்த தேடலாக அவர் காண்கிறார். ஆகவே தத்துவத்தின் மாறுபட்ட தரப்புகளை ஒன்றையொன்று நிரப்பும்தன்மை கொண்டவையாக அணுகுகிறார். ஒவ்வொரு தத்துவமும் அதுவரையான ஒட்டு மொத்த தத்துவ அமைப்பில் உள்ள ஒரு குறையை ஈடுகட்டும்பொருட்டு உருவானது என்ற நோக்கு அவருடையது . இதை அவர் ஒருங்கிணைப்பு நோக்கு [சமன்வயம்] என்ற சொல்லால் சுட்டினார். ஆதலால் தான் வாழ்ந்த காலகட்டத்தில் நாராயணகுரு எந்த தத்துவ மோதல்களிலும் ஈடுபடவில்லை . ஆனால் அதுவரையிலான தத்துவநோக்குகளை கூர்ந்து அவதானித்த பேரறிஞர் அவர். தமிழ் மலையாலம் சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆழ்ந்த புலமையுடையவர். அன்று வரையிலான தத்துவ அமைப்பில் அவர் அவதானித்த போதாமைகளை நிரப்பும்பொருட்டு மட்டுமே அவர் தன் நூல்களை எழுதினார்.
இந்த ஒருங்கிணைப்புப் பார்வையை இன்று நாம் சாதாரணமாக தவறாகவோ குறைத்தோ மதிப்பிட்டுவிடுவோம். இன்று மத அரசியல் சார்ந்து எல்லா தரப்புகளையும் ஒற்றை அமைப்பாக மாற்றும் நோக்குடன் செய்யப்படும் சமரசம் போன்றதுதான் அது என்று சிலர் எண்ணக்கூடும். அப்படியல்ல, நாராயண குரு தத்துவ வேறுபாடுகளை மிக மிக முக்கியமாக கருதியவர். ‘அரியும் அரனும் ஒன்று ‘ என்பதுபோன்ற எளிய சமரசநோக்கு அல்ல அவருடையது . நவீன தத்துவ மொழியில் சொல்லவெண்டுமானால் நாராயணகுரு தத்துவத்தை ஒரு பெரும் உரையாடலாக , நவீனக் கலைச்சொல்லால் சுட்டவேண்டுமென்றால் சொற்களனாகக் [Discourse ] கண்டார். உரையாடலின் எல்லா தரப்புமே முக்கியம்தான். உரையாடலின் இயக்கசக்தி அத்தரப்புகளின் மோதல் மூலம் உருவாவது. ஒவ்வொரு தத்துவமும் விரிவான சொற்களனில் எந்த இடத்தை நிரப்புகிறது என்று அவர் பார்த்தார். அது தத்துவ மொழியாடல் முறை எனலாம். [ Dialogic Philosophy ]
அடிப்படையில் நாராயணகுரு ஒரு அத்துவிதர் . இங்கே கவனம் கொள்ளவேண்டிய விஷயம் ஒன்று. நாராயண குருவின் காலகட்டத்து கேரளமே இந்தியாவில் மிக உச்சகட்ட சாதிவெறி நிலவிய பகுதி. இந்தியாவில் வேறெங்குமே தீண்டாமை தூரக்கணக்கில் கடைப்பிடிக்கப்பட்டதில்லை . நாராயணகுருவின் சாதி எட்டடி தள்ளிநின்று உயர்சாதியின் ‘தூய்மையை’ பேணவேண்டிய ஒன்று. இந்த அமைப்பை உருவாக்கியவர் சங்கரர் என்ற நம்பிக்கை சமீப காலம் வரை வலிமையாக இருந்தது. சங்கர வேதாந்தம் அதன் உச்சகட்ட சீரழிவில் கேரள சூழலில் புழங்கியது. இத்தகைய வரலாற்றுத்தருணத்தில் செயல்பட்ட நாராயணகுரு சங்கரர் மீது காய்தலோ உவப்போ அற்று தூய தர்க்க முறைப்படி அவரது கோட்பாடுகளை அணுகியது மிகவும் முக்கியமானது. நாராயணகுரு சங்கரன் என்று சாதாரணமாகவே ‘ மகாசங்கர பகவத் பாதரை ‘ குறிப்பிடுகிறார். சங்கரரை மறுக்க அல்லது எள்ள வேண்டிய இடத்தில் அதற்கு தயங்குவதுமில்லை . ஆனால் அவர் பேசியது சங்கரவேதாந்தத்தின் தொடர்ச்சியாகவே.
நாராயணகுருவின் நோக்கே ஒரு தத்துவ மாணவன் முன்னுதாரணமாக கொள்ள வேண்டியது என்பது என் எண்ணம்.
ஆதி வேதாந்தமும் பிற்கால வேதாந்தங்களும்
இந்தக் கட்டுரையில் பொதுத்தகவல்களை , அல்லது உள்விவாதங்களை அதிகம் பேச முற்படவில்லை . இலக்கிய நோக்கில் வேதாந்தம் மற்றும் அத்துவிதம் , விசிட்டாத்துவிதம் , துவிதம் போன்ற பிற்கால வேதாந்த மரபுகளை அணுகும்போது அவசியமான அடிப்படைத் தெளிவுகளைப்பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன்.
முதலில் வேதாந்தம் என்ற சொல்லைப்பற்றி தெளிவு கொள்ள வேண்டும். வேதம் + அந்தம் என்று இணைவு கொண்ட இச்சொல் வேதத்தின் உச்சம் அல்லது இறுதி என்று பொருள்படுகிறது. இது ஒரு சிறப்புச்சொல். வேதசாரம் என்று தங்கள் தரப்பை சொல்லிக் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். ஆதி வேதாந்தம் வேதகாலத்துக்கும் உபநிடதகாலகட்டத்துக்கும் பிறகு உருவான ஆறு தரிசனங்களில் ஒன்று. ஆறுதரிசனங்கள் என்பவை ஆறுவகை பிரபஞ்சப்பார்வைகள். வேதகாலகட்டத்தை ஒட்டி உருவான மாபெரும் தத்துவ விவாதச்சூழலின் விளைவாக அதற்குமுன்பே வெறும் பொதுப்பார்வைகளாக இருந்த பல உலகப்பார்வைகள் தத்துவநிலைபாடுகளாக வளர்ச்சி பெற்றிருக்கலாம். அவற்றில் ஆறு தரிசனங்கள் பிற்கால தத்துவ ஆசிரியர்களால் முக்கியமானவையாக தெரிவுசெய்யப்பட்டன. அவை முறையே சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வ மீமாஞ்சை , உத்தர மீமாஞ்சை ஆகியவை .
இவற்றில் சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம் ஆகிய நான்கும் பொருள்முதல்வாத நோக்கை ஆதார அடிபடையாகக் கொண்டவை. அதாவது பிரபஞ்சம் பொருளால் ஆனது, பொருண்மையின் விதிகளால் கட்டுப்படுத்தப்படுவது என்ற நோக்கு கொண்டவை. இரு மீமாஞ்சைகளும் கருத்துமுதல்வாத நோக்கு கொண்டவை. அதாவது பொருள் அடிப்படையில் அதன் சாரமாக உள்ள கருத்தால் ஆனது, கருத்தால் இயக்கப்படுவது என்ற நோக்கு கொண்டவை.
உத்தர மீமாஞ்சையே வேதாந்தம் என அறியப்பட்டது. பூர்வ மீமாஞ்சை வேள்வியையும் வேதங்களின் முழுமுற்றான தன்மையையும் முன்வைத்த புரோகிதவாதமாகும். உத்தர மீமாஞ்சை அதை நிராகரித்து உருவான அறிவுவாதம். கி மு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதராயணரால் ஒருங்கிணைந்த ஒரு தத்துவத்தரப்பாக [அதாவது தரிசனமாக] தொகுக்கப்பட்டது இது. அவரது பிரம்மசூத்திரம் என்றநூலே வேதாந்தத்தின் அடிப்படைநூலாகும்.
வேதாந்தத்தில் இருந்து கிளைத்தவையே பிற்கால வேதாந்தங்களான அத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவைதம் ,துவிதாத்துவிதம் ஆகியவை. இவற்றின் முதலாசிரியர்கள் தங்கள் தரப்பை பிரம்மசூத்திரத்துக்கு உரை எழுதுவதன்மூலமே முன்வைத்து நிறுவியுள்ளனர் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். ஆதிவேதாந்தங்களுக்கும் பிற்கால வேதாந்தங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பௌத்த மதத்துடன் நிகழ்ந்த தத்துவமோதல்களால் உருவாக்கப்பட்டவை என்று சொல்லலாம். பௌத்தமதத்தில் பிற்காலத்தில் பல பிரிவுகள் முளைத்து வளர்ந்தன என நாம் அறிவோம். அவை சூனியவாதத்தையும் அறிவகவாதத்தையும் [ விக்ஞானவாதம்] முன்வைத்தன. மேலும் அவை தங்கள் வாதமுகங்களை நியாய மரபின் தர்க்க முறைமையைக் கையாண்டு முன்வைத்தன. அவற்றுடனான விவாதம் மூலம் வேதாந்தம் தன் தரப்பைமேலும் விரிவாக்கி கொண்டது. நியாயமரபின் தர்க்கமுறையை அதுவும் கைக்கொண்டது. விளைவாகவே பிற்கால வேதாந்தமுறைகள் உருவாயின.
ஆகவே நாம் விவாதங்களில் வேதாந்தம் என்ற சொல்லை பொத்தாம்பொதுவாகப் பயன்படுத்தக்கூடாது . வேதாந்தம் என்றால் அது ஆதிவேதாந்தம் அல்லது உத்தர மீமாஞ்சையே. பிற்காலவேதாந்தங்களை நாம் அவற்றின்பெயரிலேயே பயன்படுத்தவேண்டும். அவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் மிக துல்லியமானவை. முக்கியமாக பருவுவுலகம் முற்றிலும் பொய்யே என அத்வைதம் வாதிடுவதுபோல ஆதிவேதாந்தம் வாதிடுவது இல்லை என்பதை நாம் காணலாம். விசிட்டாத்வைதமும் துவைதமும் பருவுலகை நிராகரிப்பது இல்லை. இவ்வேறுபாடுகளை மழுங்கடிக்காமலேயே பேசவேண்டும். மேலும் நான் ஏற்கனவே சொன்னதுபோல நாராயண குருவின் அணுகுமுறையைபின்பற்றி அவை ஒன்றையொன்று முழுமைசெய்பவை என்று எண்ணி அணுகுவது பயனளிக்கும்.
வேதாந்தம் : முதல்முழுமைவாதம்
வேதாந்தத்தின் தத்துவமையம் என்ன என்ற வினாவுக்கு பிரம்ம சூத்திரம் என்ற அந்நூலின் பெயரே பதில் சொல்கிறது, பிரம்மம். ரிக்வேதம் முதலே இவ்வுருவகம் உருவாகி வலிமையுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். வேதங்கள் நாம் பொதுவாக கற்றறிந்துள்ளதுபோல இயற்கையை வழிபடக்கூடிய எளிய மதநூல்கள் அல்ல. அவை மாபெரும் தொகைநூல்கள் . பலவிதமான நோக்கு கொண்ட பாடல்கள் அவற்றில் உள்ளன. இரு வகை மத அடிப்படைகள் வேதங்களில் உள்ளன என்று நாம் உருவகிக்கலாம். ஒன்று பல்லிறைக் கோட்பாடு இன்னொன்று ஓரிறைக் கோட்பாடு. பல்லிறைக் கோட்பாடு இயற்கைசக்திகளை மனிதத்தன்மை கொண்ட இறையுருக்களாக உருவகித்து அவர்களுக்கு வேள்விகள் செய்வதைக் குறித்து பேசுகிறது. ஓரிறைக் கோட்பாடு பிரபஞ்சத்தின் சாரமான இறைவல்லமை ஒன்றைப்பற்றி பேசுகிறது. அனைத்தும் ஒன்றே என்ற அழுத்தமான குரலை ரிக்வேதம் உக்கிரமாக எழுப்புகிறது . குறிப்பாக அதன் பத்தாம் மண்டிலத்தில் உள்ள பல பாடல்களில் ஓரிறைக் கோட்பாடு மிக விரிவாக , தீவிரக் கவித்துவத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தை ஆளும் , பிரபஞ்சமே ஆகி நிற்கும் முதல்முழுமையாக உருவகிக்கபட்டுள்ள அது பிரம்மம் என்று சொல்லப்படுகிறது. ரிக்வேதத்தில் உள்ள ‘சிருஷ்டிகீதம்’ அந்த தரிசனத்தை வெளிப்படுத்துவது என ஆய்வாளார் பலர் புகழ்ந்துள்ளனர்.
ரிக்வேதத்திலிருந்து இருவகை இறைக் கோட்பாடுகளும் முளைத்தெழுந்தன. பல்லிறைக் கோட்பாடும் வேள்வியும் பூர்வமீமாஞ்சை ஆயிற்று. புரோகித மதம் ஆக வளர்ந்தது . இன்று நாம் காணும் பலநூறு தெய்வங்கள், புராணங்கள், ஆலயங்கள், சடங்குகள் எல்லாம் அது பிற வழிபாட்டுப்போக்குகளுடன் உரையாடி உருவாக்கியவையே. ரிக்வேதத்து ஓரிறைக் கோட்பாடு உபநிடதங்களில் தத்துவார்த்தமான வளர்ச்சி கொண்டது. உபநிடதங்களிலிருந்து அது தர்க்க அடிபடை கொண்டு வளர்ந்ததன்மூலம் உருவானதே வேதாந்தமாகும். பிற்காலவேதாந்தங்கள் அனைத்துக்கும் உபநிடதங்களும் மூலநூல்களே என்பதை நாம் அறிவோம்.
பிரம்ம தத்துவம் பலபடிகள் கொண்டது. பிரபஞ்சத்தை ஒற்றைப்பேரிருப்பாக உருவகித்துக் கொண்ட ரிக்வேதம் அப்பிரபஞ்சத்தின் சாரமாக உள்ள கருத்து அல்லது சக்தியும் அப்படி முதல்முடிவற்ற ஒன்றே என்று உருவகித்தது . அப்படி உருவகிக்கப்பட்ட முழுமுற்றான, அனைத்துமேயான , அனைத்துக்கும் அப்பாற்பட்ட மையமே பிரம்மம் எனலாம் . உபநிடதங்களில் பிரம்மத்தை வரையறை செய்யும் பல வரிகள் உள்ளன ‘ ஈசோவாஸ்யம் இதம் சர்வம்’ இவையனைத்திலும் ஈசம் உறைகிறது [ஈசோவாஸ்ய உப நிடதம் ] ‘ தத்வமசி ‘ அது நீயேதான் [ சாந்தோகிய உபநிடதம் ] போன்றவரிகள் புகழ்பெற்றவை. நாம் அறியும் பொருள்வயப்பிரபஞ்சம் ஒரு மாயத்தோற்றமே என்றும் இதன் அடிப்படையாக ஓர் உள்ளுறைக் கருத்து உள்ளது என்றும் வேதாந்தம் சொல்கிறது. அந்த கருத்துதான் முதல்முழுமை அல்லது பிரம்மம்.
தத்துவ வரலாற்றில் வேதாந்தத்தின் பங்களிப்பு
இங்கே முக்கியமான ஒரு வரையறையை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும். இன்று தமிழ்ச் சூழலில் வேதாந்திகளாக அறியப்படுபவர்கள்தான் வேள்விகளை முன்னின்று நடத்துபவர்களும் சடங்குவாதிகளும் ஆலயவழிபாட்டாளர்களுமாக இருக்கிறார்கள். ஆகவே நாம் வேதாந்தத்தை சாதாரணமாக வேள்வி , புரோகிதம் , ஆலயம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறோம். ஆனால் வேதாந்தம் அடிப்படையில் ‘தூய அறிவு வாதம்’ ஆகும். வேள்வியும் பல்லிறைக் கோட்பாடும் உருவான அதே வேத காலத்தில் அதற்கு நேர் எதிரான தத்துவத்தரப்பாக உருவானது வேதாந்தம். உபநிடதங்களில் வேதமந்திரங்களையும் புரோகிதர்களையும் மிகக்கடுமையாக நிராகரிக்கும் பற்பல வரிகள் உள்ளன. சாந்தோக்ய உபநிடதம் , முண்டக உபநிடதம் போன்றவற்றில் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வேள்விச்சடங்குகளுக்கு எதிராக நேரடியான தாக்குதல்களைக் காணலாம். முண்டக உபநிடதம் வேள்விச்சடங்குகளை செய்பவர்களை நிலையில்லா தோணிகள் என்று குறிப்பிடுவதை பொதுவாக மேற்கோள்காட்டுவது உண்டு.
‘முக்குணங்களுடன் வளர்ந்து நிற்கும் வேதங்கள் என்ற மரத்தை ஆகவே நீ வெட்டி வீழ்த்துவாயாக ‘ என்று கீதையில் பார்த்தனுக்கு சாரதி சொல்கிறார். சங்கரர் விவேகசூடாமணியில் ‘ யோகத்தாலோ சாங்கியத்தாலோ மதச்சடங்குகளினாலோ [வேள்விகளாலோ] வெறும் கல்வியினாலோ வீடுபேறு கிடைப்பதில்லை . ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்பது அனுபவமாதலே வீடுபேறு ‘ [ விவே:5. 58] என்று திட்டவட்டமாக வரையறை செய்கிறார்.அதாவது வேதாந்தம் ரிக்வேதகாலம் முதல் இன்றுவரை பல வடிவங்கள் கொண்டு தொடர்ந்துவரும் தூய அறிவுவாதமாகும். எந்த ஒரு சிந்தனையும் காலப்போக்கில் பலவாறாக விளக்கப்படும், திரிக்கப்படும், தலைகீழாக்கப்படும், வளர்க்கப்படும். வேதாந்தம் பலவகையான வடிவங்கள் எடுத்தது. நாம் அதன் மூலக் கட்டுமானத்தையே நம் தேடலின் அடிப்படையாக கொள்ளவேண்டும். அந்த தளத்தில் வேதாந்தத்தின் எல்லா வடிவங்களும் அறிவார்ந்த தேடலையே ஆன்மீகமாக முன்வைப்பவையும் நிறுவன மதத்தையும் சடங்குகளையும் எதிர்ப்பவையும் ஆகும்.
வேதாந்தத்தின் முக்கியப்பங்களிப்பு இவ்வாறு அது உபநிடத காலம் முதல் விவேகாந்தந்தர் மற்றும் நாராயணகுரு காலம்வரை நிறுவனமதத்துக்கு எதிரான அறிவார்ந்த தேடலாக நின்றதே யாகும். இன்றும் வேதாந்தத்தின் ஏதாவது ஒரு கூறே அறிவார்ந்த ஆன்மீகம் என்ற வரையறைக்கு உரியதாக உள்ளது. நிறுவனமதம் உருவாக்கும் நம்பிக்கைசார்ந்த அடிமைத்தனம் , அமைப்புகளின் ஆதிக்கம் , சடங்குமுறைகள் மூலம் சுரண்டல் போன்றவற்றை எதிர்த்து ஒவ்வொருமுறையும் இந்துமெய்ஞானமரபில் ஒரு புதிய திறப்பை உருவாக்க அதனால் முடிந்துள்ளது. கண்டிப்பாக , வேறு எந்த ஆன்மீகக் கோட்பாட்டையும்போல அதுவும் சிதைக்கப்பட்டு திரிக்கப்பட்டுள்ளது. சங்கரர் உருவாக்கிய அமைப்புகள் எல்லாமே அவரது நேர்மாணவர்களினாலேயே நிறுவனமதம் நோக்கி கொண்டுசெல்லப்பட்டு புரோகிதவாதத்துக்கு அடிமையாக்கப்பட்டன. சங்கரவேதாந்தம் பெருமளவுக்கு மாற்று உரைகள் எழுதப்பட்டு அதற்கேற்ப திரிக்கப்பட்டது. பிரம்மாண்டமான அறிவியக்கம் ஒன்றின்மூலம் நாராயணகுருவின் இயக்கம் அதை மீட்டது. நாராயணகுரு, நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி , முனி நாராயண பிரசாத் என ஒரு ஆசிரிய மாணவ வரிசையே அதற்கென நீணடகால உழைப்பை செலுத்த வேண்டியிருந்தது.
வேதாந்தமே இந்துஞானமரபின் தத்துவார்த்தமான உச்சம் . இந்து ஞானமரபின் ஆன்மீகவாத [ அல்லது சாரம்சவாத ] நோக்கின் சிறந்த தத்துவநிலைபாடும் அதுவே. .ஆகவே இந்துஞானமரபுக்குள் நிகழ்ந்த எல்லா விவாதங்களிலும் அத்வைதம் மிக முக்கியமான ஒரு தரப்பாக இருப்பதை நாம் காணலாம். இந்து ஞானமரபுக்கும் பௌத்த சமன மெய்ஞானமரபுகளுக்கும் நிகழ்ந்த உரையாடல்களிலும் அதுவே முக்கியமான தரப்பு. சாங்கியம் யோகம் நியாயம் ஆகியவற்றுடன் வேதாந்தம் கொண்ட் விரிவான தர்க்கமோதல்களின் தடையத்தை நாம் சங்கரரின் பிரம்மசூத்திர பாஷ்யத்திலும் விவேகசூடாமணியிலும் காண்கிறோம். அவற்றின் முக்கியமான அம்சங்களை உள்ளிழுத்துக் கொண்டு வளர வேதாந்த்தால் முடிந்தது. அதேபோல பௌத்த மதத்தின் யோகாசார மரபின் உயர்தள தத்துவ தளத்துடன் மோதும் திராணி இருந்த ஒரே இந்து ஞானமரபும் அதுவே. நீண்ட விவாதம் வழியாக அது சூனியவாதத்தையும் அறிவகவாதத்தையும் தன்னுள் இழுத்துக்கொண்டு பௌத்தத்தை தாண்டியது.
மூன்றாவதாக வேதாந்தத்தின் பங்களிப்பு இந்திய மறுமலர்ச்சிக்கு அது அடிப்படையாக அமைந்தமையே. அறிவார்ந்த தேடலுடன், மானுட சமத்துவம் குறித்த பிரக்ஞையுடன் இந்துஞானமரபை நோக்கி திரும்பியவர்கள் அனைவருமே வேதாந்தத்தையே கண்டு கொண்டார்கள். அதற்கான காரணங்கள் 1] வேதாந்தத்தின் அறிவார்ந்த நோக்கு . சடங்குகளுக்கும் அமைப்புகளுக்கும் அது எதிராக இருந்தமை. 2] அதில் உள்ளடங்கியிருந்த பிரபஞ்ச சமத்துவ நோக்கு 3 ] அது சுயசிந்தனைக்கு சிந்தனைசுதந்திரத்துக்கு அளித்த முதலிடம் 4] அது இந்திய மெய்ஞானமரபின் பெரும்பாலான தத்துவ நிலைபாடுகளை தன்னுள் கொண்டிருந்தமை 5] பிளேட்டோ முதல் இம்மாநுவேல் காண்ட், ஹெகல் வரையிலான மேலைகருத்துமுதல்வாதிகளுடன் நெருக்கமாக அதை உரையாடவைக்கமுடியும் என்ற சாத்தியம்.
ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த சரஸ்வதியை வேதாந்தத்தை நவீன காலகட்டத்துக்கு ஏற்ப மறுஆக்கம் செய்ய முதலில் முயன்றவர் என்று சொல்லலாம். அவர் அடிப்படையில் வேதங்களின் முதன்மையை முக்கியப்படுத்தும் வைதீகவாதி. ஆனால் வேதங்களை சடங்குகளின் அடிப்படையில் விளக்கிய சாயனரின் நோக்கை கடுமையாக எதிர்த்து அவற்றை அறிவார்ந்த விளக்கத்துக்கு உள்படுத்த முயல்கிறார். அதற்கு வேதங்களை வேதாந்தநோக்கில் மறுஉரை அளிக்கிறார். அது ஒரு தொடக்கம். அதன் பிறகு அம்முயற்சி பலதளங்களில் பல கோணங்களில் நிகழ்ந்தது. பகவத் கீதையை ஏராளமான உரைகள் மூலம் இந்து ஞானமரபின் மூலநூல்களில் ஒன்றாக முன்னிறுத்தும் முயற்சி அப்போது தொடங்கி இக்கணம் வரை நிகழ்கிறது. வேதாந்தமரபின் மூன்றுதத்துவஅடிப்படைகளில் [ உபநிடதம், கீதை , பிரம்மசூத்திரம்- பிரஸ்தானத்ரயம்] கீதை ஒன்று. கீதைக்கு திலகரின் கீதாரகஸ்யம் முதல் வினோபாவின் கீதைப்பேருரைகள் , சின்மயானந்தாவின் கீதை உரைகள் வரை வந்துள்ள முக்கியஉரைகள் எல்லாமே வேதாந்தத்தின் அறிவார்ந்த நோக்கில் இந்துஞான மரபை மறுதொகுப்பு செய்ய முயல்பவையே.
நவீன காலகட்டத்துக்கு ஏற்ப வேதாந்தம் மறுபிறவி எடுத்தமைக்கு இரு பேரியக்கங்கள் முக்கியமான காரணங்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரும் சுவாமி விவேகானந்தரும் உருவாக்கிய ராமகிருஷ்ண மடம். நாராயணகுருவின் இயக்கம். இவற்றுக்கு இடையே பொதுவான கூறுகளே மிக அதிகம். ராமகிருஷ்ண இயக்கம் அறிவார்ந்த மதம் மற்றும் சேவை என்ற வகையில் தன் அடிப்படையை அமைத்துக் கொண்டது. நாராயண இயக்கம் அறிவார்ந்தமதம் மற்றும் சமூகப்போராட்டம் என்ற கோணத்தில் தன் அடிப்படையை மைத்துக் கொண்டது எனலாம்.
வேதாந்தம் அறிவு ஒன்றே சாரமான உண்மை என்கிறது . அறிவதெல்லாம் அறிவையே , அறியாமையும் ஒரு வகை அறிதலாகவே நிகழ முடியும் என்கிறது நாராயணகுருவின் அறிவு என்றநூல் . ‘அறிவில் அமர்தல் ‘ என்பதே வீடுபேறு அல்லது விடுதலை என அவரது ‘தெய்வ தசகம்’ சொல்கிறது. அறிவின் உச்சநிலை சமபாவனையே. இப்பிரபஞ்சம் திரிபுபட்ட அறிதலே என்ற உணர்விலிருந்து பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையுமே சமமாகக் காணும் , அனைத்தையுமே முழு அறிவு நோக்கி கொண்டு செல்லமுயலும் மனநிலையே சமபாவனை. அத்தகைய பாவனை உடைய ஒருவனுக்கு மனிதர்களில் மட்டுமல்ல எந்த உயிரினங்களுக்குள்ளும் உயர்வுதாழ்வு இல்லை . ‘பேதபுத்தி’ என்பதே அறியாமைக்குச் சமானமான சொல்லாக வேதாந்தத்தில் உள்ளது. கீதையிலும் சொல்லப்பட்டுள்ளது. இவ்வடிப்படையை உணர்ந்த வேதாந்திகளே ஆரம்பகால சமூகப்போராளிகள் பலர்.
தலித் விடுதலைக்காக போராடிய சுவாமி சகஜானந்தா , கேரள தலித் போராளி அய்யன்காளி ,அவரது குருவான சுபானந்த குரு, அய்யா வைகுண்டர் போல பற்பல பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகங்களிலிருந்துவந்த சமத்துவப்போராளிகளுக்கு வேதாந்தமே முக்கிய ஆயுதமாக இருந்தது என்பது நம் முன் உள்ள ஓர் வரலாற்று உண்மையாகும். இந்து மரபுகள் அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள விழைந்த அம்பேத்கார் கூட வேதாந்தத்துக்கு நெருக்கமானதும் அத்வைதத்துக்கு முன்னோடியுமான பௌத்தஞானமரபையே ஏற்றுக் கொண்டார். வேதாந்தத்தின் சாரமான சமத்துவ நோக்கிற்கு ஆதாரம் இது.
இம்மூன்று அடிப்படைகளிலேயே நாம் வேதாந்தத்தை பரிசீலிக்கவேண்டும்.
தமிழிலக்கியமும் வேதாந்தமும் : மணிமேகலைக் காலம்
தமிழிலக்கியத்துடன் வேதாந்தத்துக்குள்ள உறவை இரு அடிப்படைகளில் அறிய முயலவேண்டும். ஒன்று வேதாந்தத்தின் சாரமாக உள்ள தத்துவநோக்குக்கும் தமிழ்மனநிலைக்கும் உள்ள உறவென்ன ? இரண்டு, வேதாந்தம் எப்படி தமிழில் பாதிப்பை செலுத்தியது ?
என் தனிப்பட்ட நோக்கில் வேதாந்தப்பார்வையின் அடிப்படை தமிழில் இருந்தது என்று எண்ணுகிறேன். கண்டிப்பாக அனைத்தையும் ஒன்றாகக் காணும் தத்துவ நோக்கு ரிக்வேதத்தில் உள்ளதே . ஆனால் அகம் புறம் என்ற பிரிவினையும் ,அகத்தை புறத்துக்கு ஆதாரமாகக் கொள்ளும் நோக்கும் சங்கப் பாடல்களில் மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. அது ஆதித் தமிழ்ச் சிந்தனையின் முக்கியமான கூறாக இருந்திருக்கலாம். தொடர்ந்து தமிழ் மரபு இந்த அகப்புறப்பிரிவினையை வளர்த்தெடுப்பதைக் காணலாம். பிற்பாடு சைவ சித்தாந்த மரபானது அகம் புறம் அகப்புறம் புறப்புறம் என இந்த பிரிவினையை மேலும் விரிவாக வகுத்துக் கொள்வதைக் காணலாம். இதை என்னால் ஓர் எழுத்தாளனாக என் உள்ளுணர்வுசார்ந்தே சொல்லமுடியும் , ஆய்வாக முன்வைக்க இயலாது
இந்த அபேத உணர்வு தமிழ்ச்சிந்தனையில் இருந்தமையினால்தான் பௌத்தமும் சமணமும் இங்கே எளிதாக வேரூன்றமுடிந்தது என்பது என் எண்ணம். அவற்றை வடக்கிலிருந்து வந்து இங்கே ஆதிக்கம் செலுத்திய சிந்தனையாக நான் நினைக்கவில்லை . தமிழின் சாரமான
சிந்தனைக் கூறுகளை தத்துவார்த்தமாக வளர்த்தெடுக்கும் கருவிகளை அவை அளித்தன. அவற்றை பயன்படுத்திக் கொண்டு இங்கே சிந்தனை வளர்ச்சி ஏற்பட்டது. தமிழ் பௌத்தமும் தமிழ்சமணமும் வட இந்திய பௌத்தம், சமணத்திலிருந்து மாறுபட்டவை.
விரிவாக இங்கே அதைப்பற்றி பேச இடமில்லை. சில உதாரணங்களைக் காட்டலாம். வட இந்திய சமணம் அதிதீவிர துறவை, அகமறுப்பை முன்வைத்தபோது நம் சமணகாவியமான சீவக சிந்தாமணி அகத்துறையையும் கலைகளையும் முதன்மைப்படுத்தும் ஒர்ஆக்கமாக உள்ளது. வட இந்திய சமணமும் பௌத்தமும் பெண்களுக்கு முக்கியத்துவமளித்தவையல்ல. பெண்தெய்வங்களும் பெண் ஞானிகளும் அவர்களுக்கு இல்லை. பெண்களுக்கு துறவும் வீடுபேறும் இல்லையென்றே புத்தர்கூட எண்ணினார். தன் செவிலித்தாயான கௌதமி வந்து கோரியபோதே மிகவும் தாமதித்து பெண்களுக்கு சங்கத்தில் சேரும் உரிமையை அளித்தார் .பெண்களை இரண்டாம்பட்சமாக கருதும் கோட்பாடுகளை சமணமதத்தில் நிறையவே காணலாம்.
ஆனால் தமிழில் பத்தினி வழிபாடு அவ்விரு மதங்களுக்கும் ஏற்புடையதாக இருந்ததை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். நம்மிடமுள்ள பெரும் பௌத்த நூலின் மையம் மணிமேகலை என்ற பெண். மணிமேகலை காப்பியம் புத்தருக்கு எதிரான கலகம் என்று சொல்லலாம்.
இவ்வேறுபாடு முக்கியமானது. தமிழில் இருந்த சிந்தனைகளை வெறுமே பௌத்தம் சமணம் என்று சொல்லிவிடலாகாது , முறையே தமிழ்பௌத்தம் தமிழ்ச்சமணம் என்ற சொற்களையே கையாளவேண்டும்.
மணிமேகலையின் ‘சமயக்கணக்கர் தம் திறங்கேட்ட காதை’ தமிழில் அன்றுவலுவாக இருந்த தத்துவநிலைப்பாடுகளைப்பற்றி விரிவாக பேசுகிறது. எறத்தாழ எல்லா அமைப்புகளும் தீவிரமாகவே மோதிக் கொண்டிருந்ததை அதில் காண்கிறோம். அளவைவாதம் அப்பட்டியலில் முதலில் குறிப்பிடப்படுவது கவனத்துக்குரியது.
வேதவியாசனும் கிருதகோடியும்
ஏதமில் சைமினி எனுமிவாசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத்
தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் [மணிமேகலை]
என்று தன் தரப்பை சொல்லும் வைதீக அளவைவாதி கிருதகோடி என்று குறிப்பிடுவது பாதராயணரையே என முக்கியமான உரையாசிரியர்கள் சொல்லியுள்ளனர். இங்கே சைமினியின் பூர்வமீமாஞ்சையையும் சேர்த்து இருமீமாஞ்சைகளையும் வைதீகர் தங்கள் சிந்தனையின் பகுதியாகக் கொள்வது கவனத்துக்குரியது. தத்துவதரப்பில் இதுவே விரிவாக முன்வைக்கப்படுகிறது. இது வேள்வியை அடிப்படையாகக் கொண்ட வைதீகப் புரோகித மதம் அல்ல என்பது தெளிவு. பொதுவாக சம்ஸ்கிருத நூல்களை அடிப்படையாகக் கொண்டு மேலைச்சிந்தனையாளர் இந்திய ஞானமரபை வகுத்த முறைமைக்கும் மணிமேகலைக்கும் பலவகையான முரண்பாடுகள் உள்ளன. அதில் முக்கியமானது இந்த அளவைவாதம் எது என்ற வினா.
இதை நான் இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். அளவைவாதம் என இங்கே மணிமேகலை குறிப்பிடுவது வேதாந்தத்தை முதன்மையாக தன்னுள்கொண்டு பேசும் வைதீக மரபையே. அதாவது இக்காலகட்டத்தில் வேதாந்தம் தனியான ஓரு சிந்தனையமைப்பாக இயங்கியிருக்கவில்லை . அது வைதீகநோக்கின் அறிவார்ந்த உச்சநுனியாகவே இருந்தது. வைதீகநோக்குகளின் ஒட்டுமொத்தமாகவே இங்கே அளவைவாதம் சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில்தான் விஷ்ணுபுரம் நாவலில் விஷ்ணுபுரத்தை ஆளும் வைதீகத்தை அனைத்து வேதமையநோக்குகளையும் உள்ளாடக்கிய தரப்பாக உருவகம் செய்திருக்கிறேன்.
இதற்கு உதாரணமாக சுட்டவேண்டியது அளவைவாதி உலகை அறியும் அறிதளம் அல்லது அளவையின் [பிரமாணம் ]பத்து வகைமைகளில் ஒன்றாக அருத்தாபத்தி குறிப்பிடப்படுகிறது .பொருளுதய அறிதளம் அல்லது அருத்தாபத்தி பிரமாணம் இல்லாத ஒன்றை நம் பிரக்ஞை உருவாக்கி அறியும் அறிதளம். பிரபாகர மீமாஞ்சையில் இது ஒரு முக்கியக் கோட்பாடு. ஒன்றை பிறிதெனக் கண்டு அறிகையிலும் சரி, சில அடிப்படைகளைக் கொண்டு ஊகம் செய்யும்போதும்சரி இல்லாத ஒன்றை புதிதாக மனம் உருவாக்கிக் கொள்ள இயலும் . அறிதளங்களில் நேர்காட்சி, ஊகம், முன்னறிவு ஆகியவற்றுக்கும் நியாயமரபு உருவாக்கிய உவமைக்கும் அடுத்த நான்காவது அறிதளமாக இதை பிரபாகர மீமாஞ்சை முன்வைக்கிறது
இன்மையுணர்வு அறிதளம் அல்லது [அனுபலப்தி பிரமாணம் ] எதுவுமே இல்லாமலிருக்கும்நிலையை உணரக்கூடிய ஒரு புலன் மனதுக்கு உண்டு என்றும் அதுவும் அறிதளங்களுள் ஒன்றே என்றும் வாதிடும் கொள்கை. குமரிலபட்டரின் பட்ட மீமாஞ்சை இதை முக்கியப்படுத்துகிறது. அறிதளங்களில் நேர்காட்சி, ஊகம், முன்னறிவு ஆகியவற்றுக்கும் நியாயமரபு உருவாக்கிய உவமைக்கும் அடுத்த நான்காவது அறிதளமாக இதை பட்ட மீமாஞ்சை முன்வைக்கிறது . இதை மணிமேகலையில் அபாவ அளவை என்று அளவைவாதி சொல்கிறார். அதாவது எல்லா வேதாந்தமரபுகளும் அடங்கிய ஒன்றே மணிமேகலை சுட்டும் அளவைவாதம்.
இதை விரிவாக முன்வைக்கும் மணிமேகலை இதன் பல்வேறு மாறுநிலைகளாக அல்லது விளைநிலைகளாக பிற சிந்தனைமுறைகள சுட்டுகிறது. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதையில் பௌத்தமெய்ஞானம் முன்வைக்கப்படுவது அளவைவாதத்துக்கு எதிராகவேயாகும். இவ்விரு காதைகளையும் ஒப்பிட்டு ஆராய்பவர் மிக விரிவான ஒரு விவாதத்தின் சித்திரத்தை அடையக் கூடும். இதனடிப்படையிலேயே நான் விஷ்ணுபுரத்தின் முக்கியமான விவாதம் வேதாந்தத்தை உள்ளடக்கிய வைதீகப்பெருமரபுக்கும் பௌத்தத்துக்கும் இடையே நிகழ்ந்ததாக எழுதினேன். துரதிருஷ்டவசமாக மேலோட்டமான வாசிப்புள்ள சிலர் அதை வைணவ பௌத்தமோதலாக எடுத்துக் கொண்டு அப்படியொன்று இங்கே நிகழவேயில்லை என்று சொல்லித்திரிந்தனர். அடிப்படைப் பயிற்சியற்றவர்களுடன் விவாதிக்கும் சோர்வு காரணமாக நான் அவ்விவாதத்தை முன்னெடுக்கவில்லை .
மணிமேகலை பிரமவாதம் என்று சொல்வது வேதாந்தத்தையல்ல, வைதீக ஓரிறைவாதத்தையே. அதைப்போல அது வேதவாதம் என்பது பூர்வ மீமாஞ்சையை அல்ல பூர்வமீமாஞ்சையின் தர்க்க அடிப்படை ஏதும் இல்லாத வேள்விமரபை மட்டுமே. இதை அவற்றுக்கு அளிக்கப்படும் தர்க்கங்களைப் பார்த்தால் அறியலாம். ஆக இப்படி தொகுத்துச் சொல்லலாம். பழந்தமிழகத்தில் வேதாந்தப்பெருமரபு முக்கியமான மெய்ஞானத் தரப்பாக இருந்துள்ளது. பௌத்தமும் சமணமும் சைவமும்அதனுடன் ஆழ்மான விவாதத்தில் ஈடுபட்டுள்ளன. மணிமேகலையின் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகவென பாவை நோற்ற காதை ஆகிய இருகாதைகளில் விளக்கப்படும் பௌத்த நெறிகளைக் கூர்ந்து பார்க்கும்போது அது வேதாந்த அடிப்படைகளுடன் விவாதத்தில் ஈடுபட்டு தன்னை விரிவாக்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அதாவது மணிமேகலையில் உள்ள பௌத்தமானது யோகாசார மரபின் தொடக்கநிலையில் உள்ளது. சூனியவாதமும் அறிவகவாதமும் முளைவிடும் நாற்றங்கால்போல உள்ளது.
அறிவகவாதத்தின் பிறப்பிடம் காஞ்சி என்று கொள்ளலாம். திக்நாகரும் தர்மகீர்த்தியும் பிறந்த ஊர். மணிமேகலை பௌத்த மெய்ப்பொருளை அடைந்த ஊர் . அறிவகவாதம் வேதாந்தத்துடன் உரையாடி தன்னை உருவாக்கிக் கொண்ட பௌத்த மெய்ஞானம் என வகுக்கலாம். அதன் பிறகு அறிவகவாதம் அடைந்த தர்க்கமுழுமையை தான் உள்வாங்கிக் கொண்டு மேலெழுந்த அத்வைதம் தமிழகத்தின் சேரநிலப்பகுதியில் உருவாயிற்று.
அத்துவிதமும் தமிழும் : மத்தியகாலகட்டம்
அத்துவிதம் முழுமுதன்மையான பிரம்மமே உண்மை பிறவெல்லாம் மாயை என்று வாதிடும் வேதாந்த தரப்பு. அ+த்வைதம் என்றால் இரண்டின்மை என்று பொருள். இக்கோட்பாட்டின் ஆதிகுரு ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டில் கேரளத்தில் காலடி என்ற சிற்றூரில் பிறந்தவர். வேதாந்த மரபைசேர்ந்த கௌடபாதர் என்பவரின் மாணவரான கோவிந்தரின் மாணவர். அத்துவிதத்துக்கு அடிப்படைகள் ரிக் வேதம் முதலே உள்ளன. உபநிடதங்களில் அவை கூர்மைப்பட்டன . சங்கரர் பாதராயணரில் இருந்து தொடங்கி அவரை நிராகரித்து மேலே செல்கிறார். பாதராயணரின் பிரம்ம சூத்திரம் பிரம்மம் தன்னிலிருந்து பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்ற கொள்கை கொண்டது. இது வளர்ச்சிநிலை [பரிணாமவாதம் ] வாதம் என்று சொல்லபடுகிறது. சங்கரர் அப்படி பிரம்மம் தன்னை இன்னொன்றாக்கினால் பிரம்மத்தின் முழுமுதல்தன்மை குறைவுபடுகிறது என்றார். ஆகவே அவர் பிரம்மம் எவ்விதத்திலும் மாற்றம் அடையாத முழுமுதன்மை என்று சொல்லி பிரபஞ்சம் அதன் மாயத்தோற்றமே என்று வாதிட்டார். இது உருமயக்கவாதம் [ விவர்த்த வாதம் ]எனப்படுகிறது. இதுவே வேதாந்தத்துக்கும் அத்வைதத்துக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடாகும்.
சங்கரரின் விமரிசகரான ராமானுஜாச்சாரியார் சங்கரரை மாறுவேட பௌத்தன் என்றார். காரணம் சங்கர வேதாந்தத்தில் அந்த அளவுக்கு பௌத்த செல்வாக்கு உண்டு என்பதே. நாகார்ச்சுனர் முதலியோரால் முன்வைக்கப்பட்ட பௌத்த சூனியவாதம் இயற்கை என்ற முடிவற்ற பிரவாகத்தின் கணங்களையே உண்மை என்று அறிகிறோம் என்றது . நாம் அறிந்ததுமே உண்மை மாறிவிடுகிறது. நாம் அறிந்தது நம்மில்தான் நிலையாக உள்ளது. ஆகவே நம்மால் இயற்கையை அறியமுடியாது. இவ்வாறுமுற்றிலும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட பிரம்மாண்டவெளியே சூனியம் . அதன் அடுத்தபடியாகிய அறிவக வாதம் பிரபஞ்சம் நிலைநிற்பது நாம் அறிந்து நம் அறிவாக அகத்தில் நிறுத்தியுள்ளவற்றிலேயே என்றது. நாம் அறிவதெல்லாம் நம் அறிவை மட்டுமே என்றது. புறப்பிரபஞ்சம் உண்டா என்ற வினாவுக்கு அறியமுடியாது என்பதே சூனியவாதிகளின் பதில். புறப்பிரபஞ்சமென்பது நமது அறிதல் மட்டுமே என்பது அறிவகவாதிகளின் பதில்.
சங்கரர் இக்கோட்பாடுகளில் இருந்தே தொடங்குகிறார்.சங்கரர் சொல்லும் பிரம்மம் முழ்முற்றான ஒருமை என்ற அளவில் பௌத்தர்கள் சொல்லும் மகாதர்மத்துக்கு இணையானதே. பருண்மையான புறவுலகம் என்பது இல்லை, பருண்மை என்பதே நம் புலன்கள் உருவாக்கும் ஒருவகை அறிதல்தான் என்பது அறிவகவாதிகளின் கோட்பாடு. மாறாக அத்துவிதம் புறவுலகம் உண்மையில் உள்ள ஒன்றுதான், ஆனால் அதன் குணங்கள், சாரங்கள், வடிவங்கள் எல்லாமே மாயை என்கிறது. அதாவது பௌத்தம் அறிதலே பிரபஞ்சம் என்று சொல்லும்போது அவ்வறிதலுக்கு ஒரு சாரம் இருப்பதை மறுக்கிறது. அத்துவிதம் அனைத்துக்கும் பிரம்மம் என்ற சாரத்தை முன்வைக்கிறது.
சங்கரர் சொல்வதென்ன என்ற வினாவுக்கு அவரது சில அடிப்படைசொற்றொடர்களை முன்வைப்பதே சிறந்த வழியாகும். ஏனெனில் சங்கரவேதாந்தம் மிகசிக்கலாக பற்பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் இணைந்த ஒன்றே இன்றைய அத்துவிதம். ‘பிரம்மமே உண்மை. பிரபஞ்சம் பொய். உயிர் பிரம்மம் .வேறு ஒன்றுமில்லை ‘ [ ப்ரம்ம சத்ய : ஜகன் மித்ய: ஜீவோ ப்ரம்மைவ நாபர:] விவேக சூடாமணியில் சங்கரர் சொல்லும் விளக்கம் மேலும் திட்டவட்டமானது “‘நிரந்தரமானவையும் அழியக்கூடியவையுமான பொருட்களை வேறுபடுத்திக் கொண்டு பிரம்மம் மட்டுமே உண்மை என்றும் உலகம் மாயையே என்றும் அறிக”
சங்கர வேதாந்தத்தின் நேரடியான பாதிப்பினை நாம் தமிழிலக்கியத்தில் அதிகமாக காணமுடியவில்லை என்பதே என் எண்ணமாகும். ஆனால் மாயாவாதத்தை நாம் பலவகையில் தமிழிலக்கியத்தில் காண்கிறோம். சங்கரரின் வரிகளுக்கு சமானமான வரிகளை நாம் சித்தர்பாடல்களில் தொடர்ந்து காணலாம் . சித்தர்பாடல்களை சைவசித்தாந்தத்தின் ஒருபகுதியாகவே பொதுவாக கருதிவருகிறோம். ஆனால் உண்மையில் அப்படி சித்தர்பாடல்களை கருதமுடியாது என்பதே உண்மையாகும். சித்தர்மரபு என்பது மிகப்பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட ஒன்று. தொகுத்தவர்கள் சைவர்கள் . சைவ மரபுக்கு சித்தர் பாடல்களில் அதிக இடம் உண்டு. ஆனால் பலவகையான தத்துவஓட்டங்கள் ஊடுருவும் ஒருவகையான சொற்களனாக சித்தர் பாடல்களைக் கொள்வதே உகந்ததாகும்.
உதாரணமாக இந்த சிவ் வாக்கியர் பாடல் .
அவ்வெனும் எழுத்தினால் அகண்டமாகி நின்றனை
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து வந்தனை
ம்வ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அகர உகர மகாரமாய் நின்றதே சிவாயமே
சைவ சித்தாந்தம் உருமயக்க வாதத்தை ஏற்பதல்ல என்பது நாம் அறிவோம் . அதில் பதி பாசத்தால் பசுவை ஆட்டுவிக்கும் சக்திமட்டுமே. ஆனால் இப்பாடல் காட்டுவது துல்லியமான உருமயக்க வாதத்தை. இதற்குச்சமானமான பல பாடல்களை ஆரம்பகால சித்தர்களில் காணலாம்.
சித்தர் பாடல்களில் உள்ள அத்வைதப் பாதிப்பு மாயை என்ற கருதுகோளை ஒட்டியதாகவே பொதுவாக உள்ளது.
மாயாவாதம் மூன்று தளம் கொண்டது
1 ] மனிதன் அறிவது முழுமையான உண்மையை அல்ல. அவனது அறிவுக்கு அப்பால்; அவனறியாத அல்லது அறியமுடியாத ஒன்று உள்ளது அதன் சில தளங்களையே அவன் அறிகிறான் [ பண்டை வேதாந்தம்]
2 மனிதனின் அறிவு தன்னளவில் உண்மையை குறைப்படுத்தி மட்டுமே அறியும் இயல்புகொண்டது. ஆகவே அவன் தன் அறிவால் உணரக்கூடியதெல்லாமே அவனால் திரிக்கப்பட்ட உண்மையையே [ பிற்கால பௌத்தம்]
3] மனிதன் அறிவதெல்லாம் அவனது மனமயக்கமே. அவன் அறிவதற்கு அப்பால் உள்ள முழுமுதல் உண்மையின் மாயத்தோற்றமே அவனது அறிதல்கள் [ அத்துவித வேதாந்தம்]
இதில் சித்தர்கள் மூன்றாவது வகை நிலைபாட்டையே எடுக்கிறார்கள்
மாயாவாதத்தின் மூன்று நிலைகளில் சங்கரரின் அத்துவிதமே சரியான மாயாவாதம் என்று சொல்லப்படுகிறது. பிற மாயாவாதங்களைப் போலன்றி நாம் அறிபவை முற்றாகவே பொய்த்தோற்றங்களே என்று வாதிடுவது அதுதான். சங்கர மாயாவாதம் இந்தியமெய்ஞான மரபில் மிக ஆழமாக வேரூன்றியது. சங்கரர் தன் கருத்துக்களுக்கு உபநிடதங்களை மேற்கொள் காட்டினாலும் ஆப்தவாக்கியங்களை வெகுவாக திரித்து பொருள்கொண்டே அதை நிகழ்த்துகிறார் என்பது இந்தியவியலாலர்களின் கருத்தாகும். மோனியர் வில்லியம்ஸ் [Monier Williams ]தன் இந்திய ஞானம் [Indian Wisdom] என்ற நூலில் ‘இந்திய சிந்தனையில் வேரோடியுள்ள மாயாவாதத்துக்கு உண்மையில் உபநிடதங்களில் ஆதாரம் இல்லை. அது பௌத்த இறக்குமதியே’ என்று சொல்கிறார்.
மாயாவாதம் பிற்கால தத்துவ ஞானியரால் மிகத்தீவிரமாக மறுக்கப்பட்டது. அதை முற்றாக மறுத்தவர்கள் பாஸ்கர ஆச்சாரியார் ராமானுஜர், மத்வர், விக்ஞான பிக்ஷ¤ ஆகியோர். சைவசித்தாந்தமும் பிற சைவஞான மரபுகளும் அதை ஏற்கவில்லை. ஆனால் சற்று உருமாறிய நிலைகளில் மாயாவாதம் எல்லா சிந்தனைகளிலும் காணப்படுகிறது. அத்வைதத்தின் முழுமுற்றான மாயாவாத நோக்கை மறுத்து ஆனால் அதன் அடிப்படையான தரிசனங்களை ஏற்று மறு ஆக்கம் செய்து உருவானவை என சைவசித்தாந்தம், விசிட்டாத்துவைதம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவையே தமிழில் ஆழவேரோடி தமிழிலக்கியத்தின் பெரும்படைப்புகளை உருவாக்கின.
பிரம்மமும் சீவங்களும் பிரபஞ்சமும் வெவ்வேறானவை என்றும் பிற அனைத்தையும் பிரம்மமே உருவக்கி தன்னிலடக்கிக்கொண்டுள்ளது என்றும் சொல்லும் பிற்கால வேதாந்த மரபு விசிட்டாத்வைதம். விசிட்டாத்துவிதத்தின் மையகுரு ராமானுஜர். ஆனால் அதன் விளைநிலம் நம்மாழ்வாரின் பாடல்களே. நூற்றாண்டில் வாழ்ந்தவரான நம்மாழ்வார் ஆழ்வார்களில் முதன்மையானவர். நெல்லையருகே ஆழ்வார் திருநகரி [திருக்குருகூர்] என்ற ஊரில் பிறந்தவர். பிற ஆழ்வார் பாடல்களில் வெளிப்படும் உக்கிரமான பக்தியுடன் தத்துவ நோக்கும் வெளிப்படும்பாடல்கள் அவரால் எழுதப்பட்டவை. பத்தாம் நூற்றாண்டில் நாதமுனி ஆழ்வார்பாடல்களை தொகுத்து அளித்தார். அவரது மாணவரும் மகனுமாகிய யமுனாச்சாரியார் ‘சித்ரத்ரயம்’ என்ற நூலை இயற்றினார். இதுவே ஒருவகையில் விசிட்டாத்துவிதத்தின் முதல் நூல்.
பதினொன்றாம் நூற்றாண்டில் காஞ்சீபுரமருகே ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் பிறந்தார். இவர் யாதவப்பிரகாசர் யமுனாச்சாரியார் ஆகிய இருவருக்கும் மாணவர். அத்வைதத்தை எதிர்த்து பாஸ்கராச்சரியார் உருவாக்கியது பிரிவொருமைக் கோட்பாடு [பேதாபேதவாதம் ] பிரபஞ்சமாக பிரம்மமே தோற்ரமளிக்கிறது என்ற அத்வைதைக் கோட்பாட்டின் மறுப்பு இது. அதேசமயம் பிரம்மத்திலிருந்தே அனைத்தும் உருவாகி அதிலேயே மறைகின்றன என்று சொல்வது. நாம் காணும் பிரபஞ்சமும் இதன் குணங்களும் மாயை அல்ல. இது பிரம்மத்தின் உண்மைத்தோற்றமேயாகும். பிரம்மமே குணவடிவமாக பரிணாமம் கொண்டு பிரபஞ்சமாகியது .ஆகவே பிரம்மம் குணங்களுக்கு அப்பாற்பட்டது என்பது உண்மையல்ல. இது பிரிவு தோற்றம். ஆனால் அனைத்துமே பிரம்மத்தில் முடிபவைதான். பிரம்மம் மட்டுமே முழுமுதற்பொருள். பிரிவொருமைக் கோட்பாடு மற்றும் ஆழ்வார்பாடல்களில் உள்ள பிரபத்தி இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்டதே ராமானுஜரின் விசிட்டாத்துவிதம். ராமானுஜரின் முக்கிய நூல்கள் பிரம்மசூத்திரத்துக்கு எழுதப்பட்ட ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதாந்த சம்கிரஹம் ஆகியவை. .
விசிட்டாத்துவிதம் முழுக்கமுழுக்க தமிழ் பண்பாட்டில் உதித்ததும் தமிழ் பண்பாட்டின் குரலாக ஒலிப்பதும் ஆன ஒரு தத்துவக் கோட்பாடு. ஆழ்வார் பாடல்களில் வெளிப்படும் பிரபத்தியை நாம் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் காண்கிறோம். அதாவது ஆழ்வார்களுக்கு முன்னரே இக்கோட்பாடு நம் நாட்டார் வாய்மொழி மரபில் வாழ்ந்துள்ளது. ஆழ்வார் பாடல்களின் அழகியலும் உணர்வுநிலைகளும் முழுக்க முழுக்க சங்க இலக்கிய அகத்துறையின் நீட்சியே.
தமிழ் பண்பாட்டின் மூன்று முக்கிய தத்துவ அம்சங்கள் விசிட்டாத்துவிதத்தில் உள்ளன.
1] எந்நிலையிலும் ஒருமையை ஏற்காமல் பன்மையை நோக்கி செல்லும் நோக்கு
2] உலக வாழ்வை நிராகரிக்காமல் அதை கொண்டாடும் நோக்கு
3] தர்க்கத்துக்குப் பதிலாக அழகியலையும் உணர்வுகளையும் முன்வைக்கும் போக்கு.
விசிஷ்டாத்வைதமே பிற்பாடு பக்தியியக்கம் மூலம் இந்தியாவெங்கும் பரவிய கிருஷ்ணபக்தி மரபுக்கு அடிப்படையாகும். அவ்வகையில் பார்த்தால் அத்துவிதம் ஓர் அறிவார்ந்த பாதிப்பையே உருவாகியது. விசிட்டாத்துவிதமோ பெரும் மக்களியக்கமாக ஆயிற்று. அதன் பாதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு சிந்தனைகளில் கூட பலவகைகளில் தொடர்கின்றன. குறிப்பாக காந்தியின் ஆன்மீகம் விசிட்டாத்துவித அடிப்படை கொண்டதேயாகும்.
சைவசித்தாந்தம் அத்வைதத்தின் நேரடியான பாதிப்பு கொண்ட தத்துவ மரபு . பொதுவாக சைவத்தை மூன்றாக பிரித்துப் பார்க்கவேண்டும் என்பது என் எண்ணம். சைவவழிபாடு மிகப்புராதனமானது. சைவமதம் பிற்பாடு உதித்தது. சைவசித்தாந்தம் என நாம் இன்று அறிவது பிற்காலத்தையது. சைவசித்தாந்ததில் உள்ள மாயை சம்பந்தமான கோட்பாடுகள் பெரும்பாலும் அத்வைதத்தை அடியொற்றியவையே. சைவமரபு மாயையை மனிதனின் [ ஆத்மாவின்] மும்மலங்களில் [ மூன்று தளைகளில் அல்லது குறைபாடுகளில் ] ஒன்றாகக் காண்கிறது. அத்வைதம்போல அதை பிரம்மத்தின் [ சிவத்தின் அல்லது பதியின் ] இயல்பாக காணவில்லை என்பதே வேறுபாடு .
பொதுவாக வேதாந்தநோக்கு தமிழ் மரபில் மறைமுகப்பாதிப்பாகவே காணக்கிடைக்கிறது . நேரடியாக நோக்கினால் ஸ்மார்த்த பிராமணர்களின் ஒரு வகை தர்க்க ஆசாரமுறையாகவே நீண்ட நெடுங்காலம் இங்கே அது புழங்கியது.
நவீன இலக்கியமும் வேதாந்தமும்
தமிழ் நவீன இலக்கியத்தின் முதற்புள்ளிகள் இருவர் வேதாந்த மரபிலிருந்து வந்தவர்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியுள்ளது. இருவருமே ஸ்மார்த்த பிராமணர்கள் .ஆகவே அத்வைதம் இருவருக்கும் மரபாக கிடைத்திருக்கலாம். இருவருமே விவேகாந்தரின் நவீன அத்வைத நோக்கால் கவரப்பட்டவர்கள் .பி ஆர் ராஜம் ஐயர் ‘கமலாம்பாள் சரித்திரத்தின்’ பிற்பகுதியில் வேதாந்த நோக்கை விரிவாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது முக்கியத்தேடல் வேதாந்த ஞானமே. வேதாந்தத்துக்காகவே ஆங்கிலத்தில் பிரபுத்தபாரத்ம் இதழை அவர் நடத்தியிருக்கிறார்.
தமிழ் நவீன இலக்கியத்தின் அனைத்து புதுவழிகளுக்கும் முன்னோடியான சுப்ரமணிய பாரதியே தமிழ்மரபின் ஆகபெரிய வேதாந்தி என சொல்லலாம். கவிஞராக மட்டுமல்ல, தத்துவ வாதியாகக் கூட அவரே முதன்மையானவர். ‘தூய அறிவே சிவமென கூறும் சுருதிகள்’ தான் பாரதியின் வேதங்கள். வேதாந்தநோக்கு முழுமையாகவும் வெளிப்படையாகவும் பாரதியின் படைப்புலகில் வெளிப்படுவதை ஏராளமான வரிகள் மூலம் விளக்க முடியும்.
பாரதி தன் ஞானாசிரியையாக குறிப்பிடுவது சுவாமி விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை. விவேகானந்தரின் மதம் அறிவார்ந்த அத்வைதமாகும். பாரதியின் அத்வைதம் விவேகானந்தரின் செயலூக்கம் கொண்ட அத்வைதம் என்றால் அது மிகையல்ல.
” மண்ணில் வேலிபோடலாம் வானத்திலே வேலிபோடலாமா என்றான் ராமகிருஷ்ண முனி. போடலாம். மண்ணிலும் வானம்தானே நிரம்பி நிற்கிறது ? மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா? ” [பாரதி வசனகவிதை. சக்தி ]
அது சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ணபரமஹம்சருக்கு அளித்த விளக்கம் அல்லது மீறல். வானத்தைக் கட்ட மண்ணைக் கட்டும் முயற்சியே விவேகாந்த வேதாந்தம் . பாரதி முன்வைப்பது அதையே. தன் கட்டுரைகளில் கவைக்குதவாத மாயாவாதம் பேசும் மூடத்தனத்தை நிராகரிக்கும் பாரதி செயலூக்கத்தையே ஞானத்தின் விளைவாக முன்வைக்கிறார். ஆனால் உயர்தளத்தில்
‘ ஒன்று பிரமம் உளது உண்மை அ·து உன்
உணர்வு எனும் வேதமெல்லாம் [அறிவே தெய்வம்]
என்றதெளிவே அவரிலிருந்தது. ஒரு பிரம்மம் உண்டு, அதுவே உன் உணர்வு என்று சொல்வதே அவரது வேதம்.
தாயுமானவர் அபேதானந்த சுவாமி என பலரை பாரதி பாடியிருந்தாலும் அனைத்துப் பாடல்களிலும் வேதாந்தத் தெளிவே வெளிப்படுகிறது. அவரது குருவாக சுயசரிதையில் வெளிப்படும் கோவிந்தசாமி
சாமி நீ சாமி நீ கடவுள்நீயே
தத்வமசி ந்த்வமசி நீயே ய·தாம் [சுயசரிதை]
என்றுதான் உபதேசிக்கிறது.
பாரதியின் சமத்துவநோக்க்கு அதற்காக அவர்கொண்ட புரட்சிமனப்பான்மை ஆகிய அனைத்துக்கும் ஊற்றாக விளங்கிய தத்துவசாரம் வேதாந்தமே என்றால் மிகையல்ல. ஆழ்வார் பாடல்களின் உணர்வை உட்கொண்டு அவர் கண்ணன் பாட்டு பாடும்போதுகூட கண்ணன்தரிசனம்
ஈனமனிதக்கனவெலாம் எங்கண்
ஏகிமறைந்தது கண்டிலேன் அறி
வானத் தனிச்சுடர் நான் கண்டேன் அதன்
ஆடல் உலகென நான் கண்டேன் [கண்னன் என் ஆண்டான்]
என அத்வைத தரிசனமாகத்தான் உள்ளது. கண்ணனேகூட ‘ உலகாக மாறி ஆடும் அறிவு’ எனற தனிச்சுடராகவே இருக்கிறான்.
பாரதிக்குப் பிறகு தமிழில் அவரது நோக்கை தன் நோக்காக எடுத்துக் கொண்ட ஒரு சிந்தனையாளர் வரிசை உருவாயிற்று. அவர்களில் திருலோக சீதாராம் வேதாந்த நோக்கை ஆழ்ந்து ஏற்றுக் கொண்டவர் . பாரதிக்குப் பிந்தைய படைப்பாளிகளில் அத்வைத நோக்கை வெளிப்படுத்திய முக்கியமான படைப்பாளிகள் மௌனி , ந. பிச்சமூர்த்தி , க நா சுப்ரமணியம் ஆகியோர்.
பிச்சமூர்த்தியின் வேதாந்தம் மாயாவாதத்தை நுண்ணியதளத்தில் நிறுத்திவிட்டு புலன்களறியும் புறவுலகைக் கொண்டாடும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ‘ உடல் நன்று .புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவையுடையது. மனம் தேன் .அறிவு தேன். உணவும் அமுதம் .உணர்வே அமுதம் உணர்வு தெய்வம்’ [பாரதி வசன கவிதை : இன்பம் ] என்ற பாரதியின் நோக்கே அவரிடமும் வெளிப்பட்டது
“முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி ”
எனும் குரலே பிச்சமூர்த்தின் அகக்குரல். ‘ அமுதத்தை நம்பு. ஒளியை நாடு ‘ என அது அறைகூவுகிறது [ ஒளியின் அழைப்பு ] வாழ்க்கையை ஒரு லீலையாகக் காணும் நோக்கு ந.பிச்சமூர்த்தியில் இருந்தது. அதையே அவர் வேதாந்தத்திலிருந்து பெற்றார் எனலாம். ரமண மகரிஷி பிச்சமூர்த்திக்கு வேதாந்த நோக்கை அளித்த குருவாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது . ஆனால் இந்தவேதாந்தம் அவரை இலக்கிய ஆக்கத்தின் மோதல்களை தவிர்த்து விலகி நின்று உலகைப்பார்க்கும் தப்பித்தல் நிலையை அடையச்செய்தது . இதை என் ‘ கனவுகள் லட்சியங்கள் ‘ நூலில் ஆராய்ந்துள்ளேன்.
மௌனியின் படைப்புலகில் வேதாந்தம் மாயாவாதச் சாயலாக பல்வேறுவரிகளில் வெளிப்படுகிறது. புகழ்பெற்ற ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ?” ஒரு மாயாவாதக் கவித்துவக் கேள்வியே. மனமே புறவுலகமாக நிகழ்வதன் சித்திரத்தை அளிப்பவை என அவரது கதைச்சித்தரிப்புகளை வகுக்க முடியும். நவீன தமிழ் புனைவுலகில் வேதாந்தத்தின் மாயாவாத நோக்கை விரிவாக முன்வைத்த நாவல் க நா. சுப்ரமனியத்தின் ‘பொய்த்தேவு’ . கணந்தோறும் கடவுள்களை, அக்கடவுள்களால் ஆளப்படும் உலகை உருவாகி வாழும் மனித அகத்தின் தேடலை காட்டிய படைப்பு அது.
அடுத்தகாலகட்ட படைப்புக்களில் நகுலன் அத்வைதப்பாதிப்பு உடையவர். ராமகிருஷ்ணர் மற்றும் ரமணர் மீது நேரடியான ஈடுபாடு நகுலனுக்கு உண்டு என்பதை அவர் பதிவு செய்துள்ளார். அவரது ‘நினைவுப்பாதை’ வாழ்க்கையை ஒரு கனவுப்பரப்பாக சித்தரித்து அதற்கப்பால் உள்ள மூழுமுதல்தன்மை என்ன என்ற வினாவை எழுப்பிக் கொள்ள முயல்வது . நகுலனின் அத்வைத நோக்கு விரிவாக ஆய்வு செய்வதற்குரியது. பிரக்ஞை என்பது பல அடுக்குகளினாலானது என்று சொல்லும் நகுலன் அதன் மேல் அடுக்கு வாழ்க்கையின் அலைகளாகவும் ஆழத்து அடுக்கு வாழ்க்கையை உருவாக்கும் சாரமாகவும் இருப்பதைக் காட்ட முயல்கிறார். தன் சொந்தப் பிரக்ஞையை நோக்கி , பக்தன் இறைவனைக் காணும் பாவனையில் திரும்பிக் கொண்டவை அவரது ஆக்கங்கள். சம்பத் எழுதிய ‘இடைவெளி ‘ வேதாந்த நோக்கின் சாயல்கள் கொண்ட ஆக்கம் எனலாம். மரணத்தை கா·ப்கா பாணி சித்தரிப்பு வழியாக தத்துவ விசாரணை செய்யும் அந்நூலில் வேதாந்தத்தின் தத்துவ அடிப்படைகள் நுட்பமான முறையில் ஓடியுள்ளன. இங்கு பேசப்பட்ட அத்தனை படைப்பாளிகளும் ஸ்மார்த்த பிராமணர்கள் என்பது தற்செயலல்ல.
நவீன இலக்கியத்தில் மூன்று கருதுகோள்களாக வேதாந்தம் பங்கேற்கிறது 1] மாயாவாதம். வாழ்க்கையை அர்த்தமற்ற நிகழ்வுகளின் வலையாக , கனவுபோன்ற நிகழ்வாக பார்க்கும் நோக்கு 2] மத நிராகரிப்பு , இறை மறுப்பு. பிரக்ஞையை அல்லது தூயஅறிவை இறைவடிவமாக மனிதனை ஆக்கும் சக்தியாக முன்வைப்பது 3 ] உயிர்க்குலங்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதும் முழுமையான சமபாவனை. அறிதலின் உச்சத்தில் அனைத்தும் ஒன்றே என்ற இரண்டின்மை உணர்வை அடைதல் . இக்கூறுகள் இலக்கியத்தில் எங்கு வெளிப்பட்டாலும் அங்கு அத்வைதத்தின் பாதிப்பு உண்டு எனலாம்.
பாரதிக்குப் பிறகு தமிழில் பொதுவாக மாயாவாதம், பிரக்ஞைமையநோக்கு என்ற தளங்களில் மட்டுமே வேதாந்தம் வெளிப்பட்டுள்ளது. பாரதி வேதாந்தத்தை சமபாவனைக்கான, ஒருமைத்தரிசனத்துக்கான , தத்துவக் கருவியாக கையாண்டவர் . அவ்வாறாக அதை ஒரு போராட்ட ஆயுதமாகவும் மெய்ஞானத்துக்கான வழிகாட்டியாகவும் உணர்ந்தவர். அந்நோக்கு பிற்பாடு தமிழில் இல்லை. பிற்பாடு அது வாழ்க்கையைப்பற்றிய ஒரு குறிப்பிட்டவகையான பார்வையாகவே நின்றுவிட்டது.
[2005ல் தஞ்சை தமிழ் பல்கலையில் தமிழ் பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை]
இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்
முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை,தொடர்ச்சி
- Jun 1, 2008: jeyamohan.in » Blog Archive » வேதாந்தம்,தமிழிலக்கியம்:கடிதங்கள்
- Jun 2, 2008: jeyamohan.in » Blog Archive » வேதாந்தம் தமிழிலக்கியம்:இன்னுமிரு கடிதங்கள்
கட்டுரை குறித்த கருத்துக்களை [email protected] எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.