இருத்தலின் சமநிலை:ஓர் உரையாடல்

அன்புள்ள திரு.ஜெ !
 
உங்கள் பதிவை தொடர்ந்து படித்துவருகிறேன். திண்ணையில் உங்கள் குரு, நித்ய ச்ஐதன்ய யதியின் நினைவுக்கூட்டத்தில் ஆற்றின உரையினை தன்னை விலக்கி அறியும் கலை படித்தபோதே கேட்கவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் ..
 

“உங்கள் தனிமை உங்கள் மனம் முழுக்க விஷ்ணுபுரம் நிரம்பியிருப்பதனால் வந்தது அல்ல. நீங்கள் உங்களையே விஷ்ணுபுரமாக கற்பனை செய்துகொண்டதனால் வந்தது” என்று ஸ்வேததத்தன் சூரியதத்தரிடம் கேட்பதும்

“சரித்திரத்தின் லீலையில் தானும் ஒரு துளி என அவர் உணரவில்லை.  தன்னை சரித்திரத்தின் சிற்பி என்று எண்ணிக்கொண்டார். அந்த சுமையே அவரை கூன்விழவைத்தது” என்று கோர்க்கியைப்பற்றிய நித்யாவின் விமர்சனமும் ஒன்றேதான் அல்லவா ?

அன்புடன்
முத்துக்குமார்.

*

அன்புள்ள முத்துக்குமார்

நீங்கள் குறிப்பிட்டது சரியே. கூர்ந்த வாசிப்புக்கு நன்றி. அத்வைத நோக்கில் மிகபபெரிய பாவம் என்பது பேதபுத்தி தான். தன்னை பிரபஞ்சத்தில் இருந்து பிரித்து நோக்குதல். நானும் பிரபஞ்சமும் என்று சிந்தனை செய்தல். அனைத்து தவறுகளுக்கும் காரணமான தன்னகங்காரம் என்பது இதன் விளைவே. ஏதோ ஒருவகையில் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஓஷோ என நவீன ஆசிரியர்கள் அனைவருமே சொல்வது இதைத்தான். நித்யா நடராஜகுரு அனைவருமே சொல்லியிருக்கிறார்கள். வரலாற்றை தனிமனிதர்களின் பங்களிப்பாக நோக்கும்போதும் இதுவே நமக்குப் படுகிறது

ஜெயமோகன்

*

அன்புள்ள திரு.ஜெ !
 
உங்கள் வேகமும் அக்கறையும் அயரவைக்கிறது. மிக்க நன்றி. உங்கள் எழுத்துக்களை வாசிப்பதினூடாக எழும் ஐயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன். 
 
உங்கள் பதிலை theoritical-ஆக புரிந்துகொள்ள முடிகிறது. ஓஷோவின் (உன் அற்புத ரோஜா மலரட்டும்) உதாரணம் – “ஆற்றோடு எதிர்த்து களைத்துப்போகாமல் இயைந்து அதன்போக்கோடு ஆனந்தமாய் வளைந்து நெளிந்து சுழித்துப்போய் கடலோடு கலப்பது” படித்தபோது அந்த வாசிப்பே மிக இன்பமாக இருந்தது. ஆனால் practical-ஆக மிக கடினமாக இருக்கிறது.
 
உறவுக்கூட்டத்தோடு, நண்பர்களோடு, குடும்பத்தோடு, சக மனிதர்களோடு, மற்ற உயிர்களோடு, இயற்கையோடு (பிரபஞ்சம் இவைதான் என்ற என் புரிதல்படி) உறவாடும்போது என் தன்முனைப்புதானே இயல்பாக உள்ளுக்குள் படமெடுத்து நிற்கிறது. அவ்வாறிருக்க, என்னை எப்படி அவற்றின் பகுதியாக உணர்ந்து இயைந்து போக ?
 
அவர்களோடு / அவற்றோடு மோதல், உரசல், சண்டை போன்ற சிக்கல்கள் இல்லாத பிரியம் மிகுந்த உறவை பேணுதல் என்பது ‘நானும் ஒரு துளி’ என்று இயைந்து போவதற்கு ஒப்பாகுமா ? (மறுபடி ஸ்வேததத்தனின் வரிகளே நினைவுக்கு வருகின்றன – “உங்கள் மனம் முழுக்க விஷ்ணுபுரம் இருந்திருக்குமாயின் விஷ்ணுபுரத்தின் ஒரு நாய் துயரப்படுவதைக்கூட உங்களால் தாங்கமுடியாது”)
 
என் புரிதல் மற்றும் கேள்வி சரியா ?
 
அன்புடன்
முத்துக்குமார்

*

அன்புள்ள முத்துக்குமார்,

நித்ய சைதன்ய யதிக்கும் அவரது ஆசிரியரான நடராஜ குருவுக்கும் இடையேயான உரையாடலில் ஓர் இடம் வருகிறது. நித்யாவுக்கு உடல்நலம் சரியில்லை. நடராஜ குரு சொல்கிறார். ‘உனது முன்னோர் படை நடத்தி நிலங்களை வென்று அடிமைகளை வைத்து வேலைசெய்தவர்கள். உன் உடம்பில் ஓடுவது அந்த ரத்தம். அதில் ரஜோ குணம் அதிகம். உன்னால் ஒரு குருகுலத்தில் சும்மா இருப்பது சாத்தியமல்ல. அப்படி இருந்தால் உன் நரம்புகள் தொய்வடைந்து நீ நோயாளி ஆவாய். ஆகவே நீ கிளம்பி இந்தியா முழுக்க சுற்று. பிச்சை எடு. அலைந்து திரி. தேக்கி வைக்கபப்ட்ட உன் ‘அக ஆற்றல்’ முழுக்க வெளியே வரட்டும். செலவழியட்டும். அதன் பின்னால்தான் உன்னால் ஓர் இடத்தில் அமர முடியும்….”

துரதிருஷ்ட வசமாக இப்போது நாம் கோட்பாடுகளை சிந்தனைகளை தெரிந்துகொள்வது எளிதாகி உள்ளது. ஒன்றை நாம் தெரிந்து கொள்வதனாலேயே நாம் அதற்குள் செல்வதில்லை. கூண்டுப்புலியை வெளியே நின்று நோக்குகிறோம் ,அவ்வளவுதான். மனிதனின் அக ஆற்றல் – அவனில் உறையும் ரஜோ குணம், அதை செயலாற்றல் எனலாம், டைனமிக் ஃபோர்ஸ்- மிக மிகத் தீவிரமான ஒன்று. அவன் செயலாற்றவே பிறந்துள்ளான். இயற்கையை எதிர்த்து நீந்துவதே அவன் இயல்பு. அகங்காரமே அவனது தன்னிலை. முடுக்கி விடப்பட்ட இயந்திரம் அவன். அந்த இயந்திரத்தை நிறுத்துவதற்கே அதேயளவுக்கு ஆற்றல் தேவையாகிறது. அவனை சும்மா இரு, ஓட்டத்தில் மித என்றெல்லாம் சாதாரணமாகச் சொல்ல முடியாது.

கணியன் பூங்குன்றன் சொல்வதுபோல ‘ஓடும் நீரில் புணைபோல் ‘ ஒழுகுவதே  பிரபஞ்சத்தின் இயல்பு நிலை. ஆனால் செயலூக்கம் கொண்டு உலகை வெல்ல நினைப்பதும் ஒருக்ணமும் ஓயாமல் இயங்குவதும் கூட பிரபஞ்ச இயல்பே. ஒவ்வொரு உயிருக்குள்ளும் இயங்கும் பிரபஞ்ச ஆற்றலின் இயல்பு நிலை அது. ஒவ்வொரு புல்லிலும் ‘வளர்ந்து உலகை மூடுக’ என்ற கட்டளை உறைகிறது. 

ஆகவே எளிதாக இருத்தல்  என்பதும் மிதத்தல் என்பதும் பிரபஞ்சத்தின் இரு  அடிபப்டை இயல்புகளுக்கு நடுவேயான முழுமையான சமநிலை என்றே பொருள்படும்.  அது எளிதாக அடையப்படும் நிலை அல்ல. கீதையும் சரி, பதஞ்சலி யோகமும் சரி இரு கோணங்களில் அதையே பேசுகின்றன. கர்ம யோகம் சென்பது செயலாற்றியபடியே அக அளவில் நதிப்புணையாக இருப்பது.பல கோணங்களில் நம் மரபில் பேசப்பட்டுள்ள விஷ்யம் இது

ஜெ

 தன்னை விலக்கி அறியும் கலை

விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்

விஷ்ணுபுரம்:இருகடிதங்கள்

முந்தைய கட்டுரைஇந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்:இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெபாஸ்டின் கவிதைகள்