மழைப்பாடலின் வடிவம்

அன்புள்ள ஜெ,

முதற்கனல் நாவலுக்கு நீங்கள் அளித்த வடிவம் சார்ந்த விளக்கம் மிக உதவியாக இருந்தது. ஒரு பெரியநாவலை ஒவ்வொருநாளும் வாசித்தபின்னர் அதை ஒருமுனையில் தொகுத்துக்கொள்ள அது பயன்பட்டது. உண்மையில் அதற்குப்பிறகுதான் அவ்வளவு கதைகளுக்கும் ஒரு யூனிட்டி இருப்பதை நான் கவனித்தேன். எழுத்தாளரிடம் இந்தமாதிரி கேட்பது தவறுதான். ஆனால் மழைப்பாடலுக்கும் அவ்வாறு ஒரு வடிவத்தை நீங்கள் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

பவன்

அன்புள்ள பவன்,

எழுதுவதற்கு முன்னரே அவ்வாறு ஒரு வடிவம் என் மனதில் இருப்பதில்லை. ஆகவே முன்னரே சொல்வதென்பது பெரும்பாலும் முடியாது. எழுத எழுதத்தான் நானே படிப்படியாக கதைகளை தொகுத்தும் விரித்தும் புதியபொருள்கொடுத்தும் அறிந்துகொள்கிறேன். அதாவது நானும் ஒருவகை வாசகனே. எனக்கும் என்ன வரப்போகிறதென தெரியாது.

இதுவரை எழுதியவற்றை வைத்து இப்படிச் சொல்கிறேன். முதற்கனல் ஒரு முன்னுரை போல. மொத்த மகாபாரதக் கதைக்கும் ஒரு முன்குறிப்பு அது, அவ்வளவுதான். கதை அதில் தொடங்கவில்லை. மழைப்பாடலில் கதை தொடங்குகிறது. பின்னர் விரிந்து வரப்போகும் அனைத்துக்குமான அடிப்படைகள் இதில் விளக்கப்படும். மகாபாரதக் காலகட்டத்தின் அரசியல்சூழல், பண்பாட்டுச்சூழல், அதில் பங்குபெறும் மக்களின் வாழ்க்கைநிலைகள், நாடுகளின் அக்காலத்தைய நிலச்சித்திரங்கள், அரசகுலத்தின் உறவுச்சிக்கல்கள் அனைத்தும். அதாவது மழைப்பாடல் பிரம்மாண்டமான ஒரு நிகழ் களத்தை வரைந்து எடுக்கவே முயலும்.

ஆகவே முதற்கனலில் இருந்த உணர்ச்சிகரமான, கூரிய நாடகத்தருணங்களுக்கு பதிலாக இதில் நிதானமான விரிந்த விவரணைகளும் விவாதங்களும் இருக்கலாம். அந்த பெரும் களத்துக்குள்தான் உணர்ச்சிகரத் தருணங்களும் கவித்துவ வெளிப்பாடுகளும் நிகழும். வாசகன் கதையையோ, உணர்ச்சிகளையோ மட்டும் பின் தொடராமல் வெவ்வேறு நிலங்களையும் வாழ்க்கைகளையும் மனிதர்களையும் கற்பனையில் எழுப்பிக்கொள்ளவேண்டிய பொறுப்பு கொண்டிருக்கிறான்.

ஆகவே இதில் நுண்தகவல்கள்தான் முதன்மையான முக்கியத்துவம் கொண்டவை. அவற்றை வெறும் ‘வர்ணனை’ என நினைப்பவர்கள் நாவலை இழந்துவிடக்கூடும். உதாரணமாக தேவபாலபுரம் [கராச்சி அருகே உள்ள தேபல்] இரண்டாம் அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது. அது கடல்வணிகத்தின் அன்றைய சித்திரத்தை அளிக்கிறது. மகாபாரத காலகட்டத்தில்தான் மானுட இனத்தின் வரலாற்றில் உலகளாவிய கடல்வணிகம் உருவாகியது. அன்று வரையிலான உலகப்பொருளியலின் கட்டமைப்பு மாறியது, அதிகாரச்சமநிலை அழிந்தது. அது ஓரு யுக மாற்றம். எல்லா பெரும்போர்களும் அத்தகைய யுகமாற்றங்களின் சந்திப்புகளில்தான் நிகழ்கின்றன.

புராணப்படி மகாபாரதம் திரேதாயுகம் முடிந்து துவாபரயுகம் பிறக்கும்போது உருவானது. சகுனி துவாபர யுகத்தின் அதிபனான துவாபரனின் அவதாரம் என்கின்றன நூல்கள். வணிகயுகம் பிறந்ததன் விளைவான ஒட்டுமொத்த மாற்றமே மகாபாரதப் போராகியிருக்கலாம். அச்சித்திரத்தை அளிக்கின்றன முதலிரு அத்தியாயங்களும். அவற்றை கூர்ந்து வாசிக்கும் வாசகன் இதை உணரலாம். இத்தகைய தகவல்களையும் படிமங்களையும் நினைவில் நிறுத்தி வாசகன் விரிவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்தப் பகுதியில் தொடர் உச்சகட்டங்கள் நிகழமுடியாது. பெரும்பாலும் மனிதர்களின் ஆளுமைகள் உருவாகி வலுப்பெறும் சித்திரங்களே உள்ளன. உரையாடல்கள், எதிர்வினைகள், நுட்பமான நடத்தைக்கூறுகள் வழியாக ஆளுமைகள் காட்டப்படுகின்றன. அவற்றைக் கருத்தில்கொண்டு அம்மனிதர்களின் இயல்புகளை விரிவாக கற்பனையில் கண்டு எடுப்பது வாசகனின் பொறுப்பு. அவ்வாறு ஆளுமைகளை உருவாக்கிக்கொண்டால் மட்டுமே நாவலை முன்னெடுக்க முடியும்.

முதற்கனலில் வரும் பீஷ்மர் தவிர பிறர் மொத்த மகாபாரதத்திலும் நீண்டு செல்லாதவர்கள். சிகண்டி போன்றவர்களுக்கு பரிணாம மாற்றம் இல்லை. நிலைத்த கதாபாத்திரங்கள் அவை. ஆனால் மழைப்பாடலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தெளிவான தனியடையாளத்துடன் தொடர்ச்சியாக மாறுதலடைந்தபடியே செல்லும். அம்மாற்றங்களை வாசகர் கவனிக்க வேண்டும்.

இந்நாவல் முற்றிலும் வேறான இன்னொரு ஆக்கம் என நினைக்கிறேன். முதற்கனலுடன் ஒப்பிடும்போது இதன் இயல்பு குறிப்பமைதி மிக்கது. மொழியும் சித்தரிப்பும் நுட்பங்களை எளிமையாக முன்வைத்துக்கொண்டே செல்லக்கூடியவை. முதல்வாசிப்புக்கு நேரடியான சரளமான கதையோட்டம் இருக்கும். ஆனால் அவற்றில் உணர்த்தப்படும் குறிப்புகளை வாசகர் தொடர்ந்து விரித்தெடுத்தாகவேண்டும்.

இது ஓர் ஒட்டுமொத்த வரலாற்றை பலநூறு கிளைகளாகச் சொல்வதற்கான தொடக்கம். ஆகவே கூடுமானவரை குழப்பமில்லாமலேயே இது விரியும் என நினைக்கிறேன். இது முதற்கனலை விட இருமடங்கு பெரிய நாவலாதலால் மெல்லமெல்லச் சூடுபிடித்து தன் கதையையும் களத்தையும் நிறுவிக்கொண்டபின்னர் விரிந்து எழுந்துசெல்லும்.

ஜெ

முந்தைய கட்டுரைசொல்வனம் நூறாவது இதழ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4