‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39

பகுதி எட்டு : பால்வழி

[ 1 ]

அஸ்தினபுரியில் இருந்து அந்தியில் மணக்குழு கிளம்பும்போதே சாரல் பொழிந்துகொண்டிருந்தது. மரக்கிளைகள் ஒடிய, கூரைகள் சிதைய பெய்த பெருமழை ஓய்ந்து மழைக்காலம் விடைபெற்றுக்கொண்டிருந்த பருவம். வானில் எஞ்சியிருந்த சிறுமேகங்கள் குளிர்ந்து சற்றுநேரம் பெய்து இலைகளை ஒளிகொள்ளச்செய்து கூரைகளைச் சொட்டச்செய்து ஓய்ந்தன. ஆனால் இரண்டுமாதகாலம் தொடர்ந்து பெய்த மழையின் ஈரத்தை வைத்திருந்த காற்றில் எப்போதுமே மெல்லிய நீர்த்துகள்கள் பறந்துகொண்டிருந்தன. துருக்கறை ஊறிய வெள்ளைத்துணிபோலத் தெரிந்த கலங்கிய வானுக்குப்பின்னால் வெப்பமே இல்லாத சூரியன் நகர்ந்தான்.

பாண்டுவை அன்றுகாலை முதலே அம்பாலிகை அலங்கரிக்கத் தொடங்கியிருந்தாள். அவன் எப்போதும் பின்மதியம் தாண்டியபின்னரே துயிலெழுவான். அவனுடைய மஞ்சத்தறை வெளியே இருந்து ஒளிவராமல் கரவுப்பாதைகள் வழியாக காற்றுமட்டும் மெல்ல வீசும்படி அமைக்கப்பட்டிருந்தது. அங்கே பகலிரவுகள் இல்லை. வெளியே பகலின் வீச்சு அணையத்தொடங்கியபின்னரே அவனை முதுசேடியர் வெள்ளித்தாலத்தில் நறுமணநீருடன் எழுப்புவார்கள். அவனை மிக மெல்ல பலமுறை அழைத்து எழுப்பவேண்டுமென்றும் காலடியோசையோ பிற ஓசைகளோ அவன் துயிலை அதிரச்செய்யலாகாதென்றும் அனைவரும் அறிந்திருந்தனர்.

அவ்வறையின் தரையிலும் சுவர்களிலும் கனமான பஞ்சுமெத்தைகள் தைக்கப்பட்டிருந்தன. முதுசேடியரின் குரலை பாண்டு தன் கனவின் ஆழத்தில் எங்கோ கேட்பான். அடர்வண்ணங்களாலான ஓவியத்திரைபோலப் பூத்துநிற்கும் இமயமலையடிவாரத்துக் காடுகளிலோ நதிக்கரைகளிலோ பொழில்களிலோ அவன் தன் அன்னையுடன் இருந்துகொண்டிருப்பான். அக்குரலைக் கேட்டு தன் விழிப்புக்கு மிதந்தெழுவான். பின் அதை தன் அறையென உணர்ந்து எழுந்துகொள்வான். துயில் எழும்போது அவனுடைய வெளிறிய மெல்லிய உடல் குதிரைப்படை கடந்துசெல்லும் மரப்பாலம் போல அதிர்ந்துகொண்டிருக்கும். நடுங்கும் கைவிரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறிக்கொள்ள கழுத்தின் கனத்த குரல்வளை ஏறியிறங்க கண்கள் மேலே செருகி வெண்விழிகள் தெரியும். மஞ்சள்நிறமான பற்களால் செவ்விய உதடுகளைக் கவ்வியிருப்பான். முட்டிபிடித்த கைகளுக்குள் விரல்கள் வெள்ளைப்பரப்பில் புதைந்திருக்கும்.

முதுசேடியர் அவன் மார்பை தடவியும் கைகால்களை வருடியும் அவன் உடலை சீராக்குவர். அவன் உடல் மெல்ல அதிர்விழந்து படுக்கையில் தொய்ந்ததும் அவன் வாயோரங்களில் வழியும் எச்சிலை துணியால் துடைப்பர். அவன் எழுந்து வெந்நீரில் தன் முகத்தை கழுவிக்கொள்வான். பின்பு சேடியர் உதவ படுக்கையில் இருந்து எழுந்து நிற்பான். இளமையில் ஒருமுறை அவனை அம்பாலிகை உலுக்கி எழுப்பியபோது அவன் அதிர்ந்து அலறி விழித்துக்கொண்டு நடுங்கி வலிப்புவந்து மூர்ச்சையானான். மூச்சு நின்று கண்கள் செருகி வாய்கவ்விக்கொண்டு அதிர்ந்து நின்ற உடம்பு மெல்ல நீலமாகியது. ஓடிவந்த அரண்மனை மருத்துவர் கிலர் அருகே இருந்த தீபச்சுடரை எடுத்து அவன் கால்களில் வைத்துச் சுட்டார். அவன் உடல் துடித்தபோது கைகால்கள் நெகிழ்ந்து மூச்சு சீறிக்கிளம்பியது. அதன் பின் அவன் நினைவுக்கு வர மேலும் இரண்டுநாட்களாயின.

அவன் உடலின் நரம்புகள் மிகமிக மெல்லியவை என்றார் கிலர். அவை சிறு அதிர்ச்சியைக்கூட தாளாதவை. விரல்நுனியில் நீர்த்துளியைக் கொண்டுசெல்வதுபோல அவன் உடலுக்குள் உயிரை பேணியாகவேண்டும் என்றார். அதன்பின் அவன் உரத்த ஒலிகளைக் கேட்டதேயில்லை. விழுந்ததில்லை, கால்தடுக்கியதில்லை, நிலைதடுமாறியதில்லை. அவன் சினம்கொள்ளும்படியோ துயர் அடையும்படியோ எதுவும் நிகழ்ந்ததில்லை.

பாண்டுவின் குதிகால்கள் நிலத்தை அறிந்ததில்லை. குதிரைபோல அவன் முன்விரல்களால் நடந்தான். ஆகவே காலில் இரும்புச்சுருள் கட்டப்பட்டது போல எம்பி எம்பி நடப்பதே அவன் இயல்பு. அவனுடைய வலத்தோள் இடத்தோளைவிட தூக்கப்பட்டிருக்கும். மெலிந்த வெண்முகத்தில் நாசியும் உதடுகளும்கூட வலப்பக்கமாக கோணலாக வளைந்திருக்க வலக்கண் சற்றே கீழிறங்கியிருக்கும். தன்னை வரைந்திருக்கும் திரைச்சீலையை இடப்பக்கமாக கீழே பிடித்து இழுத்திருக்கிறார்கள் என அவன் சொல்வான். எப்போதும் ஓர் ஏளனபாவனை அவன் முகத்திலும் சிரிப்பிலும் இருந்தது. நான் நினைப்பதை என் உடல் சரிவர நடிப்பதில்லை என்பதை கண்டுகொண்டேன். ஆகவே என் உடல் நடிப்பதை நான் எண்ணத் தொடங்கினேன் என அவன் சொல்வான்.

அன்றுகாலை அம்பாலிகையே வந்து அவனை எழுப்பினாள். அவளுடைய குரல்கேட்டதுமே அவன் கண்களை விழித்து புன்னகையுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அவன் உதடுகளை வெந்நீர்த்துணியால் துடைத்தபோதும் அப்பார்வை மங்கலான ஒளிகொண்ட விளக்குபோல அப்படியே இருந்தது. பின்பு அவன் “நீங்களா அன்னையே?” என்றான். “எழுந்திரு…இன்று நாம் மார்த்திகாவதிக்குக் கிளம்புகிறோம்” என்றாள் அம்பாலிகை. “பகலிலா?” என ஆவலுடன் கேட்டபடி பாண்டு எழுந்தான். “பகல் ஒளியில் நீ செல்லமுடியுமா? நாம் மாலையில்தான் கிளம்புகிறோம்” என்றாள் அம்பாலிகை.

முகம் கூம்ப “இப்போது மழைக்காலம்…வெயிலே இல்லையே” என்றான் பாண்டு. அம்பாலிகை “ஆம், ஆனால் மழைமேகங்கள் ஒழிந்துகொண்டிருக்கின்றன. நினைத்திருக்காமல் வான்திரை விலகி ஒளி வந்தால் என்ன செய்வது?” என்றாள். “மாலையில்தானே? இப்போதென்ன விரைவு?” என்றபடி பாண்டு மீண்டும் படுக்கப்போனான். அம்பாலிகை அவன் கைகளைப்பற்றியபடி “அறிவிலி போலப் பேசாதே. நீ அரசன். அரசனுக்குரிய ஆடையலங்காரங்களுடன் நீ செல்லவேண்டும். நீ இங்கிருந்து செல்வதை இந்நகரத்து மக்கள் அனைவரும் பார்த்து உன்னை வழியனுப்பி வைக்கப்போகிறார்கள்…” என்றாள்.

“இன்று அவர்களுக்கு அகம்நிறைந்து சிரிப்பதற்கு ஒரு நாடகம் நிகழவிருக்கிறது” என்றபடி பாண்டு எழுந்தான். “அன்னையே, நான் ஒருவகையில் நல்லூழ் கொண்டவன். உலகமே என்னை நோக்கிச் சிரித்தாலும்கூட நான் நோக்கிச் சிரிப்பதற்காக உங்களை எனக்களித்திருக்கிறது இயற்கை” என்றான். “போதும், எனக்கு உன் பேச்சுகளே புரிவதில்லை. உன்னை நன்னீராட்டவும், ஆடையணிகள் அணிவிக்கவும் மருத்துவரும் சேடியரும் நின்றிருக்கிறார்கள்” என்றாள்.

பாண்டு “நீரா? அது எப்படி இருக்கும்?” என்றான். பாண்டுவை மூன்றுமாதங்களுக்கு ஒருமுறைதான் சேடியரும் மருத்துவரும் சேர்ந்து மூலிகை நீராட்டுவார்கள். மற்றநாட்களில் நறுமணநீர் நனைத்த துணியால் அவன் உடலை மெல்லத்துடைப்பது மட்டுமே. அதையும் ஆதுரசாலையில் மருத்துவர்களே செய்வார்கள். அவனுடைய நரம்புகளின் மேல் கையின் அழுத்தம் படிந்துவிடலாகாது என்பதை மருத்துவர் கடுமையான எச்சரிக்கையாக மீளமீளச் சொல்லியிருந்தனர்.

மெத்தைமேல் முன்விரல்களை ஊன்றி எம்பி எம்பி நடந்து சென்று வாயிலைத் திறந்த பாண்டு “வெளியே ஒளியிருக்கிறதா?” என்றான். “ஆம்…” என்று அம்பாலிகை சொன்னாள். “ஆகவேதான் காலையிலேயே அனைத்து திரைச்சுருள்களையும் கீழிறக்க ஆணையிட்டேன்.” பாண்டு “அன்னையே, என் விழிகளும் உடலும் ஒளிக்காக ஏங்குகின்றன” என்றான். “மெல்லிய ஒளி என்றால் ஏன் நான் அதை எதிர்கொள்ளக் கூடாது?” அம்பாலிகை சினத்துடன் “உனக்கே தெரியும் வெய்யோனொளி பட்டால் உன் தோல் வெந்து சிவந்துவிடுகிறது. உன் விழிகள் பார்வையை இழந்துவிடுகின்றன. சிறுவனாக இருக்கையில் ஒருமுறை வெளியே சென்றுவிட்டாய். உன் பார்வை மீள பதினைந்து நாட்களாயின. உன் தோலில் அப்போது பட்ட கொப்புளங்களின் தடம் இப்போதுமிருக்கிறது” என்றாள்.

பாண்டு பெருமூச்சுடன் “காட்டில் வளரும் காளான்களைப்போல ஒரு வாழ்க்கை” என்றான். திரும்பி “எங்கே ஆதுரசாலைப் பணியாளர்கள்? அவர்கள் இன்று ஒரு அரிய மூலிகை வேரை கழுவவேண்டும் அல்லவா?” என்றான். அம்பாலிகை “நீ எனக்கு என்றும் அரியவனே. என் உயிரை வாழச்செய்யும் சஞ்சீவி” என்றாள். “ஆம், நான் வாழ்வதன் நோக்கமே உங்களை வாழச்செய்வதுதான்” என்றான் பாண்டு. அம்பாலிகையின் முகம் கூம்பக்கண்டு அருகே வந்து அவள் முகவாயைத் தொட்டு முகத்தைத் தூக்கி “என்ன இது? என் நல்லூழ் அது என்றல்லவா சொன்னேன்?” என்றான்.

“இல்லை…நீ சொல்வதைத்தான் இங்கே அனைவரும் சொல்கிறார்கள் என நானறிவேன்” என கண்களில் நீர் நிறைய அம்பாலிகை சொன்னாள். “மாயநீர் யானத்தில் என் இறைவர் வந்தபோது நான் அவரிடம் வல்லமையும் அழகும்கொண்ட மைந்தனுக்காக கோரவில்லை. என் அறியாமையால் எனக்கொரு விளையாட்டுப்பாவையையே கோரினேன். ஆகவேதான் நீ வந்தாய். அனைத்தும் என் பிழை என்கிறார்கள். உன்னைக் காணும்போதெல்லாம் என் நெஞ்சு விம்முகிறது. உண்மையிலேயே என் பிழையின் விளைவைத்தான் நீ சுமக்கிறாயா என்ன? நான் இப்பெரும்பாவத்துக்கு எப்படி கழுவாய் ஆற்றுவேன்?”

“பதிலுக்கு நீங்கள் எனக்கொரு அழகிய விளையாட்டுப்பாவையாகவே இருக்கிறீர்களல்லவா? அதுவே கழுவாய்தான்…” என்று சிரித்த பாண்டு அவள் கன்னங்களைத் துடைத்து “என்ன இது? இந்த வினாவுக்கு நான் இதுவரை ஆயிரம் வெவ்வேறு பதில்களைச் சொல்லிவிட்டேனே. எவையுமே நினைவில்லை போல. அவற்றை குறித்துவைத்து ஒரு அழகிய குறுங்காவியமாக ஆக்கியிருக்கலாமென்று தோன்றுகிறதே” என்றான். புன்னகையுடன் “எல்லாமே அர்த்தமற்ற உளறல்கள்” என்றாள். “ஆம், அவையெல்லாம் கவிதைகள்” என்றான் பாண்டு.

VENMURASU_DAY_90
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பாண்டுவை ஆதுரசாலையின் நீராட்டறையில் வைத்தியர்கள் எதிர்கொண்டழைத்துச்சென்றனர். முதலில் அவன் உடலில் மருத்துவத்தைலம் போடப்பட்டது. அவன் கால்விரல்களிலும் கைவிரல்களிலும் சிலதுளிகள் தைலம் விடப்பட்டு மெல்ல சுட்டு விரலால் நீவப்பட்டது. அதன் பின் கால்களிலும் கைகளிலும் தைலத்தை நீவி மெல்ல உடலெங்கும் பரப்பி இறுதியில் உச்சந்தலைக் குழிவில் தைலத்தைத் தேய்த்தனர். மூலிகைகள் கொதிக்கவிடப்பட்ட வெய்யநீராவி அவன் மேல் படச்செய்யப்பட்டது. அவன் உடல் வியர்த்து சூடான பின்னர் அவன் வெந்நீர் தொட்டிக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.

சூடான நீர் அவன் கால்களில் சிறிது விடப்பட்டது. பின்னர் தொடைகளிலும் கைகளிலும் விடப்பட்டு மெல்லமெல்ல உடல் முழுக்க நனைக்கப்பட்டபின் அவன் தலையில் வெந்நீரை விட்டனர். உடல்நனைந்தபின் அவனை வெந்நீர்த்தொட்டிக்குள் அமரச்செய்தனர். கடற்பஞ்சால் அவன் உடலை மெதுவாக வருடி தேய்த்து குளிப்பாட்டினர். அவர்கள் உதடுகளைக் கடித்தபடி மிகுந்த எச்சரிக்கையுடன் தன் உடலை கையாள்வதைக் கண்டு பாண்டு “நீங்கள் ஏதாவது பேசலாம் அருணரே. நான் குரல்கேட்டால் உடைந்துவிடமாட்டேன்” என்றான்.

மருத்துவரான அருணர் “ஆம்…அரசே” என்றார். ஆனால் அவர்களின் கண்கள் மேலும் எச்சரிக்கை கொண்டன. “நான் உண்மையிலேயே எக்கணமும் இறக்கக்கூடியவனா?” என்று பாண்டு கேட்டான். “அரசே உங்கள் பிறவிநூல் அவ்வண்ணம் சொல்லவில்லை” என்றார் அருணர். “உங்கள் மருத்துவநூல் என்ன சொல்கிறது?” என்று பாண்டு கேட்டான். “தங்கள் உடலின் நரம்புகள் மென்மையானவை. அவ்வளவுதான். தங்களுக்கு நோய்களென எவையும் இல்லை.” பாண்டு உரக்கச்சிரித்து “அருணரே, நோய் என்றால் என்ன?” என்றான். அருணர் “மாறுபட்ட உடல்நிலை. வருத்தும் உடல்நிலை. உயிரிழப்புக்கான காரணம்” என்றார். “வரையறைகளை மனப்பாடம் செய்திருக்கிறீர்… எனக்கு நீங்கள் சொன்ன மூன்றுமே உள்ளதே” என்றான் பாண்டு.

நீர் துவட்டப்பட்டபின் அவனை அமரச்செய்து அகிற்புகையால் அவன் கூந்தலை ஆற்றினர். அவன் உடலெங்கும் நறுமணத்தைலங்கள் பூசப்பட்டன. சேடியரால் அழைத்துச்செல்லப்பட்ட அவன் பெரிய ஆடிமுன் அமரச்செய்யப்பட்டான். சேடியர் அவனுக்கு ஆடைகளை அணிவித்தனர். பாண்டு மிக மென்மையான கலிங்கத்துப் பட்டாடைகளை அணிந்து அவற்றின்மேல் பட்டுநூல்களை கட்டிக்கொண்டான். “இவை பொன்னூல் வேலைப்பாடுகளா?” என்று கேட்டான். “அரசே, தங்கள் உடைகள் எடைகொண்டவையாக அமையலாகாதென்பதனால் இவை பொன்னிற நூல்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன” என்றாள் விஜயை என்னும் சேடி.

பாண்டு சிரித்துக்கொண்டு “இளவரசுக்கான மணிமுடியும் தக்கையால் செய்யப்பட்டிருக்குமா?” என்றான். “ஒன்று செய்யலாம், ஒரு ஏவலன் எந்நேரமும் என் பின்னால் நின்று என் மணிமுடியை எந்நேரமும் தூக்கிப்பிடிக்கும்படி சொல்லலாம்.” உரக்கச் சிரித்து பாண்டு “அந்தச் சேவகனுக்கு பீஷ்மர் என்று பெயரிடலாம். பொருத்தமாக அமையும்” என்றான். விஜயை மெல்ல “இந்தப்பேச்சுக்கள் எவ்வண்ணமாயினும் அவர் செவிகளை அடையலாம் இளவரசே” என்றாள். “அடையட்டுமே… அவர் என்னை என்ன செய்வார்? எனக்கு உவக்காத எதையும் என்னிடம் எவரும் சொல்லமுடியாது. அவற்றை என் அன்னை கொலைமுயற்சிகள் என்றே பொருள்கொள்வாள்.”

“நான் வியப்பது ஒன்றைத்தான்” என்றாள் விஜயை. அவன் கூந்தலை சிறியபட்டுச்சரடுகளால் சடைத்திரிகள் போலக் கட்டி அவன் தோளில் பரப்பியபடி “நான் இளவயதில் தங்கள் தந்தை விசித்திரவீரிய மாமன்னரை கண்டிருக்கிறேன். அவரைப்போலவே நீங்கள் இருக்கிறீர்கள்…” என்றாள். பாண்டு “தோற்றமா?” என்றான். “இல்லை…தோற்றமில்லை. அவரது உடல் வேறு… ஆனால் சிரிப்பு பேச்சு எல்லாமே அவரைப்போலத்தான்.” பாண்டு “விந்து வழியாக அல்லாமல் குலம் தொடரமுடியும் என்று முனிவர்கள் வகுத்தது வீணாகுமா என்ன? தந்தையின் நோயும் நொடிப்பும் அவ்வண்ணமே என்னை வந்தடைந்தன” என்றான்.

விஜயை “நன்றும் தீதும் நாம் செய்யும் வினைப்பயன் மட்டுமே” என்றாள். “ஆம்… எளிதில் கடந்துசெல்ல அப்படியொரு ஒற்றை விடை இல்லையேல் வாழ்வே வினாக்களால் நிறைந்து மூடிவிடும்” என்றபின் பாண்டு “விசித்திரவீரியர், அதற்கு முன் தேவாபி. அதற்கு முன்?” என்றான். விஜயை பதில் சொல்லவில்லை. “சொல், விஜயை, அதற்கு முன்பு யார்?” விஜயை “கண்வ முனிவருக்கு ஆரியவதி என்னும் பெண்ணில் பாண்டன் என்னும் மகன் பிறந்தான். அவன் வெண்ணிறமாக இருந்தான்” என்றாள்.

“அவனை கண்வர் காட்டிலேயே விட்டுவிட்டார் இல்லையா?” என்றான் பாண்டு. “ஆம், அவனால் வேதவேள்விகளைச் செய்யமுடியாதென்று அவர் எண்ணினார். அவனை காட்டில் ஒரு வாழைமரத்தடியில் விட்டுவிட்டு கண்வரும் ஆரியவதியும் திரும்பிவிட்டனர். அவனை வெண்முயல்கள் முலையூட்டி வளர்த்தன.” பாண்டு புன்னகையுடன் “அவன் முயல்களின் தலைவனாக ஆனான், இல்லையா?” என்றான்.

விஜயை “அவன் வளர்ந்து காட்டின் இருளிலேயே வாழ்ந்தான். அவன் ஒளியை அறிந்ததே இல்லை. அங்கே அவன் வாழ்ந்துகொண்டிருந்தபோது அக்காட்டில் தேன் எடுக்கவந்து வழிதவறிய மலைப்பெண்ணான ஸித்தி என்பவளைக் காப்பாற்றினான். அவளை அவன் மணந்து பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்றான். அக்குழந்தைகளில் இருந்து உருவானது பாண்டகர் என்னும் குலம். அவர்கள் இன்னும் இமயமலைச்சாரலில் வாழ்கிறார்கள். வேர்கள் போல வெண்ணிறம் கொண்ட அவர்கள் மலைக்குகைகளின் இருளில் வாழ்பவர்கள். இரவில் காட்டுக்குள் அலைந்து வேட்டையாடுபவர்கள். மின்மினி ஒன்றை கையில் விளக்காகக் கொண்டு வேட்டையாடுபவர்கள்” என்றாள்.

பாண்டு “எதற்கும் ஒரு புராணமிருக்கிறது இங்கே” என்றபடி எழுந்துகொண்டான். விஜயை சொன்னாள் “கண்வர் ஆயிரம் வருடம் தவம்செய்தபின் சொர்கத்துக்குச் சென்றபோது அவரது மகள் சகுந்தலையின் வழிவந்த பரதகுலத்து மைந்தர்களும் மேனகையில் அவருக்குப்பிறந்த இந்தீவரப்பிரபை வழியாக வந்த மைந்தர்களும் அவரது மைந்தன் மேதாதிதியும் அவன் வழி மைந்தர்களும் அவரைக் கைப்பிடித்து அழைத்துச்சென்றனர். வழியில் இருண்ட குகைப்பாதை ஒன்று வந்தது. மைந்தர்கள் விழியொளி இல்லாது திகைத்து நின்றுவிட்டனர்.”

விஜயை “அப்போது வெண்ணிற உடல்கொண்ட ஆயிரம் மைந்தர்கள் வந்து அவர் கைகளைப்பற்றி இருண்ட பாதையில் அழைத்துச்சென்றனர். நீங்கள் யார் என அவர் கேட்டார். உங்கள் மைந்தன் பாண்டனின் குலத்தவர் என அவர்கள் பதிலிறுத்தனர். கண்வர் குகையைக் கடந்து இந்திரநீலம் என்னும் ஒளிமிக்க பாலம் வழியாக தவத்தாருக்குரிய தனிஉலகைச் சென்றடைந்தார்” என்றாள். பாண்டு புன்னகையுடன் அவளை சிலகணங்கள் நோக்கியபின் எழுந்துகொண்டான்.

அம்பாலிகை ஓடிவந்து “அனைவரும் கிளம்பிக்கொண்டிருக்கின்றனர்…. இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்றாள். அவள் வெண்பட்டு ஆடையும் வெண்மணியாரங்களும் அணிந்திருந்தாள். “அரசி, இன்னும் நேரமிருக்கிறது. மாலையில்தான் நாம் கிளம்புகிறோம்” என்றாள் விஜயை. “மாலை ஆவதற்கு இன்னும் அதிகநேரமில்லை… பீஷ்மபிதாமகரின் ரதம் அலங்கரிக்கப்படுகிறது” என்றாள் அம்பாலிகை. “நகரமே அலங்கரிக்கப்பட்டிருக்கவேண்டுமல்லவா? நான் உப்பரிகையில் நின்று பார்த்தேன். எதுவுமே கண்ணுக்குப்படவில்லை.”

“அது வழக்கமில்லை அரசி… நாம் இன்னும் மணம் கொள்ளவில்லை. யாதவர்களின் சுயம்வரத்துக்கு இளவரசர் செல்கிறார், அவ்வளவுதானே?” என்றாள் விஜயை. “அவள் மகன் மணம்கொண்டு வந்தபோது மட்டும் பெருமுரசம் முழங்கியது. நகரம் முழுக்க அணிகொண்டு நின்றது” என்று அம்பாலிகை முகம் சுருக்கிச் சொன்னாள். “அரசி, அது மணம்கொண்டு திரும்பும்போது… நாமும் இளவரசியுடன் வருகையில் அனைத்தும் நிகழும்” என்றாள் விஜயை. “ஒன்றும் குறைவுபடக்கூடாது….என்ன குறை இருந்தாலும் நானே சென்று பேரரசியிடம் கேட்பேன்” என்று அம்பாலிகை சொன்னாள்.

பேரரசியின் சேடியான சியாமை வந்து “பேரரசி எழுந்தருளவிருக்கிறார்” என்றாள். பாண்டு “ஏன், ஆணையிட்டால் நானே சென்றிருப்பேனே” என்றான். “நீ ஏன் செல்லவேண்டும்? நீ மணம் கொள்ளச்செல்லும்போது உன் பாட்டியாக அவர்கள் வந்து வாழ்த்துவதல்லவா முறை?” என்றாள் அம்பாலிகை. விஜயை “இளவரசே, நான் இந்த அறையை ஒழுங்குசெய்கிறேன். பேரரசி நுழையும்போது வாழ்த்தும் மங்கல இசையும் முழங்கவேண்டும்” என்றாள்.

குடையும் கவரியும் மங்கலத்தாலமுமாக சேடியர் சூழ சத்யவதி அரண்மனைக்குள் வந்தாள். பாண்டு எழுந்துசென்று அவள் பாதங்களைப் பணிந்து முகமன் சொல்லி வரவேற்றான். சத்யவதி அவன் தலைமேல் கைவைத்து “நிறைமணம் கொண்டு திரும்புக” என்று வாழ்த்தினாள். தன் கரங்களால் அவன் நெற்றியில் மஞ்சள்திலகமிட்டு “நீ திரும்பும்போது இந்நகரமே உன்னை வாழ்த்துவதற்காக கோட்டைவாயிலில் நிற்கும்” என்றாள்.

அரண்மனை வளாகத்தில் இருந்த ஏழு அன்னையர் கோயிலிலும், கணபதி, விஷ்ணு, சிவன் ஆலயங்களிலும் பூசனைகள் செய்து வணங்கியபின்னர் மணக்குழு கிளம்பிச்சென்றது. பீஷ்மரின் ரதமும் விதுரனின் ரதமும் முன்னால்செல்ல பாண்டு இருந்த கூண்டுவண்டி தொடர்ந்து சென்றது. காவல்வீரர்களும் கொடியேந்தியவர்களும் சூதர்களும் அணிவகுத்துச் சென்றனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முழங்க அவர்கள் சென்று மறைந்ததை அரண்மனை முற்றத்தில் நின்றபடி சத்யவதி பார்த்தாள். அம்பாலிகை கண்ணில் ஊறிய நீரைத் துடைத்தபடி தலைகுனிந்து தன் சேடி சாரிகையுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தாள்.

களைத்த நடையுடன் அரண்மனைக்குள் செல்லும்போது சத்யவதி சியாமையிடம் “மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்?” என்றாள். “சிறிய இளவரசர் மணம்கொள்வதற்குத் தகுதியானவரல்ல என்று சொல்லவில்லை” என்றாள் சியாமை. “அவருடைய நரம்புகள் மிகமெல்லியவை என்று மட்டுமே சொன்னார்கள். அவரால் அதிர்ச்சிகளையும் நிலைகுலைவுகளையும் தாங்கிக்கொள்ள முடியாது. அவர் மணம்கொண்டபின்னர் படிப்படியாக நாளடைவில் காமத்தை அறிந்தாரென்றால் ஆபத்தில்லை.”

சத்யவதி “அது உண்மை அல்ல” என்றாள். “மருத்துவர்கள் உள்ளத்தைப் பார்க்கவில்லை, உடலை மட்டுமே பார்க்கிறார்கள். காமம் தனக்கு உயிராபத்தை வரச்செய்யுமென பாண்டுவுக்குத் தெரியும். ஆகவே அது அவனுள் மேலும் பலமடங்கு வளர்ந்திருக்கிறது. அவனால் பிற சாதாரணமனிதர்களைப்போலக்கூட காமத்தை எதிர்கொள்ளமுடியாது. அவன் அகமும் ஆகமும் அதிரும் அனுபவமாகவே அது இருக்கும்.”

சியாமை பதில் சொல்லாமல் பார்த்தாள். “அவனைத் தடுக்கும்தோறும் மேலும் அது வலுப்பெறும். விலக்கும்தோறும் விரைவுகொள்ளும். விலகும்தோறும் வல்லமை பெறும் ஈர்ப்பே காமம்” என்று சொன்ன சத்யவதி “அவனுள் அந்த விசை வளர்வதைக் கண்டேன்” என்றாள்.

“இளவரசர் இயல்பாக இருப்பதாகத்தான் எனக்குப்பட்டது” என்றாள் சியாமை. “ஆம், அது அவனுடைய பாவனை. நுண்ணிய அறிவுடையவர்கள் காமத்தை வெட்குகிறார்கள். அதை மறைக்க ஏளனமென்னும் திரையை போட்டுக்கொள்கிறார்கள்” சத்யவதி சொன்னாள். “கூரிய வாளை நோக்கி வானிலிருந்து விழுபவனின் பெருங்களி கொண்ட முகம் அவனிடமிருந்தது.”

முந்தைய கட்டுரைஏப்ரல் நன்னாளில்
அடுத்த கட்டுரைசாரைப்பாம்பின் பத்தி