மரணதண்டனை பற்றி…

அன்புள்ள ஜெமோ

தூக்குத்தண்டனை தேவை என்பதைப்பற்றிய உங்கள் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். தூக்குத்தண்டனை அளிப்பது எவ்வகையிலும் குற்றங்களைக் குறைப்பதில்லை என்பதை புள்ளிவிவரங்களுடன் நிரூபித்திருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா? வாய்புளித்தமாதிரி இதைப்பற்றியெல்லாம் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பு கொஞ்சம் கவனியுங்கள். தூக்குத்தண்டனை இருப்பதனால் எவ்வளவு குற்றங்கள் குறைந்துள்ளன என்று சொல்லமுடியுமா? ஒருவரை குற்றவாளி என்று சொல்லி தூல்லிட்டுவிட்டு நிரபாராதி என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்? அரசாங்கமே கொலைசெய்வது பெரிய பாவம்.

சாம் எட்வர்ட்

அன்புள்ள சாம்,

அந்தக்காலத்தில் நாங்களெல்லாம் டீக்கடைகளில் அரசியல் பேசுவோம். அப்போது அரசியல் கொஞ்சம் புத்திசாலித்தனமாக பேசப்பட்டது. இன்று அப்படி இல்லை என்பதை இந்தக்கேள்வியே காட்டுகிறது. இதே கேள்வியை நீங்கள் டீக்கடையில் கேட்டிருந்தால் சுடச்சுட பதில் வந்திருக்கும்.

நீங்கள் தூக்குத்தண்டனை என்று சொல்லி முன்வைக்கும் அனைத்துவாதங்களையும் வெறுமே தண்டனை என்று சொல்லியே முன்வைக்கமுடியுமே? சொல்லிப்பார்க்கிறேன்ப், பாருங்கள்

குற்றங்கள் செய்பவர்கள் இருவகை. ஒரு சாரார் உணர்ச்சிவசப்பட்டு குற்றங்கள் செய்பவர்கள் இன்னொரு சாரார் திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள். தண்டனை கிடைக்கும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு குற்றங்கள் செய்பவர்கள் அதைச்செய்யாமலிருக்கப் போவதில்லை. திட்டமிட்டு குற்றம் செய்பவர்கள் எப்படியும் அந்தக்குற்றத்தைச் செய்வார்கள். தண்டனையை அவர்கள் அஞ்சுவதேயில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவேகூட சிறிய குற்றங்களுக்காக தண்டனை பெற்று சிறையில் இருந்தவர்கள்தான் மேலும் பெரிய குற்றங்களைச் செய்கிறார்கள். அவர்களை சிறைத்தண்டனை எந்தவகையிலும் தடுப்பதில்லை, அச்சுறுத்துவதுமில்லை.

கொலைக்காக ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருந்தபடி அடுத்த கொலையை திட்டமிட்டு சிறையில் இருந்தபடியே குண்டர்களைக்கொண்டு அதை நடத்தி மேலும் தண்டனை அடைந்த பலரை நாம் அறிவோம்.

அதாவது தண்டனைகளால் குற்றம் குறைவதே இல்லை. எந்த தண்டனையாலும். சொல்லப்போனால் தண்டனைகளால் குற்றம் அதிகரிக்கிறது. ஆகவே அதிரடி அதிரிபுதிரி முற்போக்கு முடிவெடுத்து தண்டனை என்பதையே ஒழிப்போம். குற்ற்வாளிகளை அரவணைத்து காப்போம். சரியா?

மரணதண்டனை நிறைவேற்றப்பட்டபின் சம்பந்தப்பட்டவர் குற்றவாளி அல்ல என்று தெரிந்தால் என்ன செய்வது என்கிறீர்கள். சரி, மற்ற தண்டனைகள்? பன்னிரண்டு ஆண்டுக்காலம் சிறையில் கழித்தபின் நிரபராதி என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்? பன்னிரண்டு வருடங்களை திரும்பக்கொடுப்பீர்களா? இல்லை ஒருவருடம் என்றால்? ஆகவே தண்டனை என்பதே தவறானது. நிரபராதிகள் தண்டிக்கப்பட வாய்ப்பாகும். தண்டித்தபின் வாபஸ் வாங்கவே முடியாது. ஆகவே தண்டனை என்பதையே தவிர்ப்போம். சரியா?

அரசு ஒருபோதும் மரணதண்டனை விதிக்கக்கூடாது. உயிரைப்பறிக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்கிறீர்கள். சரி, வாழ்க்கையைப்பறிக்கும் உரிமை மட்டும் அரசுக்கு உண்டா என்ன? மனிதர்களைச் சிறையில் அடைத்து வதைக்க மட்டும் செய்யலாமா என்ன? அது மனிதர்களுக்கு எதிரான குரூரம் அல்லவா? ஆகவே த்ண்டனை என்பதையே தவிர்ப்போம். சரிதானே?

தண்டனைகளுக்கும் குற்றங்களுக்கும் எங்குமே நேரடியான உறவு இல்லை. தண்டனைகள் குற்றங்களைக் குறைக்கும் வழிமுறைகளும் அல்ல. குற்றங்கள் வெவ்வேறு சமூக, பண்பாட்டு., உளவியல் காரணங்களால் நிகழ்கின்றன. குறறங்களை தடுக்க முதன்மையான வழி அக்குற்றங்களுக்குக் காரணமான சமூக, பண்பாட்டு, உளவியல் காரணங்களைக் கண்டறிந்து மாற்றியமைப்பதே

ஓர் உதாரணம். இந்தியாவில் கேரளம் போன்ற பகுதிகளில் கூட குடிப்பகை என்ற குற்றத்தொடர் நிகழ்ந்துவந்தது. குடுமப்ங்கள் மாறிமாறி தலைமுறைகளாக பழிவாங்கிக்கொண்டே இருக்கும். கொலைகளுக்கு கணக்குப்பட்டியல்போட்டு வைப்பார்கள். கொலைகள் கௌரவப்பிரச்சினையாகக் கருதப்பட்டன.

நூறாண்டுகளுக்கு முன் நாராயணகுரு ,மன்னத்துபத்மநாபன் போன்ற பல சமூகசீர்திருத்தவாதிகள் அந்தக் குற்றங்களை உருவாக்கும் சமூக, பண்பாட்டு, மனநிலைளுக்கு எதிராக போராடினர். அவர்கள் செய்த ஒரு விஷயம் கொல்லப்பட்டவர்களை தெய்வமாக்கி வழிபடும் முறையை ஒழித்தது. உயிர்ப்பலி கொடுத்து வணங்கப்படும் சிறுதெய்வ வழிபாட்டை தடுத்தது. போர்த்தெய்வங்களை வழிபடுவதை குறைத்து அந்தத் தெய்வங்களை அகிம்சை தெய்வங்களாக மாற்றியது.

அதன் விளைவாக உளவியல் மாற்றம் உருவானது. காலப்போக்கில் குடிப்பகை என்பதே மறைந்தது. ஒரு தலைமுறைக்குள் கேரளத்தின் குடும்பக்கொலைகள் முழுமையாகவே நின்றன என்பது புள்ளிவிவரக் கணக்கு.

இன்று ஆண் பெண் உறவின் சிடுக்குகள் குற்றங்களுக்குக் காரணமாக அமைகின்றன. ஆண்களில் உறையும் ஆணாதிக்கத் திமிரை குடும்பச்சூழலில் இருந்து விலக்குவது மட்டுமே அக்குற்றங்களைக் குறைக்கும். பெண்ணின் இடத்தையும் அவளுடைய உரிமையையும் ஆண்களை உணரச்செய்யவேண்டும். அதைச்செய்பவை மதச்சீர்திருத்தங்கள், சமூக இயக்கங்கள், அரசியலியக்கங்கள், இலக்கியங்கள் முதலியவை

தண்டனை என்பது தற்காலிகமான ஒரு தடை மட்டுமே. அது சமூகம் தன் மக்களுக்கு அளிக்கும் அறிவுறுத்த்ல். இது பிழை, இது பெரும்பிழை, இது ஒத்துக்கொள்ளவேமுடியாத மாபெரும்பிழை என அது சொல்கிறது. தண்டனையின் வேறுபாடுகள் இந்த அளவுகோலாலேயே தீர்மானமாகின்றன. குற்றங்கள் நிகழ்த்தப்படும் மனநிலையும் சரி பாதிப்பும்சரி ஒவ்வொருமுறையும் ஒன்று. தண்டனை சமூகம் அதை எப்படிப்பார்க்கிறது என்பதை ஒட்டி வரையறை செய்யப்படுகிறது

தண்டனை என்பது சமூகத்துக்கு அச்சமூகத்தின் கூட்டு அறம் விடுக்கும் அறிவிப்பு. மரணதண்டனை என்பது அவ்வகையில் ஒரு பெரும் அறிவிப்பு. இது அணுவிடைகூட ஏற்றுக்கொள்ளமுடியாத மாபெரும் பிழை என்ற பிரகடனம் அது. ஒவ்வொரு மரணதண்டனையும் அத்தகைய ஓர் ஆழ்ந்த மனப்பதிவை சமூகத்தில் உருவாக்குவதை கொஞ்சமேனும் நுண்ணுணர்வுள்ள எவரும் உணரலாம்.

அப்படி சிலவற்றை உச்சகட்டமாக ஒரு சமூகம் விலக்குவதென்பது அச்சமூகத்தின் அறத்தின் கூர்மையையே காட்டுகிறது. நான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராகச் செய்யப்படும் திட்டமிட்ட பெருங்குற்றங்களை, ஆண்திமிர்கொண்ட குற்றங்களை இந்திய சமூகம் இன்னும் ஓங்கிய குரலில் ஒறுக்கவேண்டும், அதற்கு இன்னும் பலமடங்கு மரணதண்டனைகள் இங்கே தேவை என்றே நினைக்கிறேன்

எதையும் பெரிய பிழையாக எடுத்துக்கொள்ளாத சமூகம் கருணை கொண்டது அல்ல. போலியானது, மொண்ணையானது.

குற்றத்துக்கும் தண்டனைக்குமான உறவு மகாபாரதம் முதல் தஸ்தயேவ்ஸ்கி முதல் இலக்கியத்தில் மிகமிக விரிவாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒன்றரையணா பத்தி எழுத்தாளர்களும் போலிமனிதாபிமானிகளும் நிதியுதவித் தன்னார்வர்களும் சேர்ந்து முடிவெடுக்கவேண்டிய எளிய விஷயம் அல்ல அது.

ஜெ

முந்தைய கட்டுரைமலேசியப்பயணம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 5