«

»


Print this Post

ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்


வணக்கம் ஜெயமோகன்!

அருண் நரசிம்மனின் இந்த பதிவை படித்ததில் இருந்து யோசிக்கிறேன் என்னவாகத்தான் இருக்கும் நம் மக்களின் மனநிலை என்று.குதிரைக்கு சேணம் கட்டின மாதிரி ஒரே வியாபார சிந்தனை-இல்லை கேளிக்கை உணர்வு மட்டும்தான் போலிருக்கு…

-மாயன் (www.ahamumpuramum.blogspot.in)

அன்புள்ள மாயன்,

சில நாட்களுக்கு முன் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுநடுவே அவர் சொன்னார். ‘முக்கியமான கோயில்களிலே எல்லாம் ஒருத்தராவது நின்னு சிற்பங்களை பாக்கிறாங்களான்னு பாப்பேன். பாத்திரக்கூடாதேன்னு நினைக்கிறமாதிரி உள்ள ஓடுறாங்க’

சிற்பங்களைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே பிராகாரங்களை வலம் வரவேண்டும் என்றும், பிராகாரத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் அமர்ந்து செல்லவேண்டும் என்றும் மரபு வலியுறுத்துகிறது. வலம்வரும்போது கண்களை மூடிக்கொண்டும் பேசிக்கொண்டும் செல்கிறார்கள். அமர்ந்திருக்கும்போது பெரும்பாலும் சண்டை.

ஆம், அருண் நரசிம்மன் சொல்வது உண்மை. தமிழகத்தில் நாத்திகர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச ஆன்மீகம் ஆத்திகர்களிடமில்லை. ஆத்திகர்களை கவனியுங்கள், அனேகமாக அனைவருமே வடிகட்டின சுயநலவாதிகள், லௌகீகவாதிகள், பிழைப்புவாதிகள். தங்கள் அன்றாட வாழ்க்கை சம்பந்தமான தேவைகள் நிறைவேறுவதற்கு பிரார்த்தனையும் வேண்டுகோளும் வைப்பதற்காகவே அவர்கள் கோயில்களுக்கு வருகிறார்கள். எந்தப் பொதுவிஷயத்திலும் ஆர்வமற்றவர்கள். பிறரைப்பற்றி ஒரு கணமேனும் நினையாதவர்கள்.

ஆன்மீகமென்பது உலகை, பிரபஞ்சத்தை முழுமையாக நோக்கும் ஒரு பார்வை. அதன் பகுதியாக அனைத்தையும் அணுகும் மனப்பக்குவம். அதன் விளைவான கருணை, அன்பு, நீதியுணர்வு. இந்த அற்பர்களிடம் அந்தப்பண்பை என்றாவது கண்டிருக்கிறோமா என்ன?

ஆகவேதான் காந்தி காலத்தில் இருந்து இந்தியாவில் மிக அழுக்கான குப்பையான இடமாக நம் கோயில்கள் உள்ளன. எந்தச்சுரணையும் இல்லாமல் எதையும் எங்கும் வீசுவார்கள். திருச்செந்தூர் பழனி போன்ற ஆலயங்களில் கோயில் வளாகத்திலேயே மலம் கிடப்பதை கண்டிருக்கிறேன். ஆணவ-கன்ம-மாயா மலமறுப்பதுடன் உடல் மலத்தையும் அறுக்கிறார்கள் போல.

நாத்திகர்களிலும் வெறும் சத்தங்கள் உண்டு. ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் எதையோ கற்று தங்கள் சுயதேர்வாக நாத்திகத்தை ஏற்றவர்கள். ஆகவே சற்றேனும் வாசிப்போ பொதுச்சமூக உணர்வோ உடையவர்கள். அந்த பிரக்ஞை அவர்களிடம் இருக்கும். நமது ஆத்திகர்களின் இழிந்த மொண்ணைத்தனம் அவர்களிடம் இருக்காது.

கேரளத்தின் ஆலயங்கள் சுத்தமாக இருப்பதற்கான காரணம் கம்யூனிஸ்டுகள் கோயிலுக்குச் செல்வதுதான் என்று ஒருமுறை எம்.கோவிந்தன் சொன்னார். நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும் அது உண்மை. கோயில்களை கேரளப்பண்பாட்டின் பெருமை மிக்க கூறாக நாத்திகர்கள் எண்ணியதன் விளைவே அங்குள்ள கோயில்கள் காக்கப்பட்டமை. கலையுணர்வும் பண்பாட்டுணர்வும் இறைமறுப்புக்கு முரணாக அமையவேண்டியதில்லை என விளக்கிய ஈ.எம்.எஸ். அதற்குக் காரணம்.

இங்கே நம்மூர் ஆத்திகர்களிடமிருந்து நம் ஆலயங்களை காக்கவேண்டியிருக்கிறது. திருப்பணி என்ற பேரில் சிற்பங்கள் மேல் ஆசியன் பெயிண்டை பூசுகிறார்கள். மணலை வீசி மொண்ணையாக்குகிறார்கள். சிமிண்ட் கட்டடங்களைக் கட்டி கல்மண்டபங்களை சரிக்கிறார்கள். மலிவான மார்பிளையும் கக்கூஸ் டைல்ஸ்களையும் தரையில் ஒட்டி ஆலயங்களை அழுக்குக் குவியல்களாக ஆக்குகிறார்கள். தகரக்கொட்டகைகளையும் இரும்புத்தூண்களையும் சிற்பங்களைத் துளைத்து நிறுவுகிறார்கள்.

அடிப்படை அறவுணர்ச்சியும் கலைநுண்ணுணர்வும் கொண்ட நாத்திகர்கள் தமிழகத்திலும் உண்டு. தமிழகத்தில் சூழியலை, வனத்தை காக்க குரல்கொடுப்பபவர்கள் பெரும்பாலும் நாத்திகர்களே. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த ஆத்திகப்பதர்களிடமிருந்து ஆலயங்களைக் காப்பாற்றுங்கள். அவை கடவுள் வாழும் இடங்களாக நீங்கள் நினையாமலிருக்கலாம். அனால் நீங்கள் பண்பாடு என்றும் வரலாறு என்றும் கலை என்றும் எதையெல்லாம் நினைக்கிறீர்களோ அவை திகழும் மையங்கள் அவை. உங்களுக்கும் உரிமையானவை. அவற்றை இந்த உலகியல் வெறிகொண்ட மூடர்கள் அழிப்பதை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்றால் உங்கள் சந்ததிகள் உங்களை சபிப்பார்கள்.

ஜெ

சிற்பப்படுகொலைகள்


சிற்பப்படுகொலைகள் இரு கடிதங்கள்


மணல் வீச்சு

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/47180/