அணிவாயில்

மகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர். மலையாளம் வழியாக சம்ஸ்கிருதத்தையும் குறிப்பிடும்படி அறிந்தவர். உலகஇலக்கியத்திலும் தமிழ்-மலையாள நவீன இலக்கியத்திலும் ஆழ்ந்த வாசிப்புள்ளவர். எழுத்தச்சனின் மகாபாரதத்தை அவர் மூன்றுமுறை முழுமையாகவே வீட்டில் முறைப்படி பாராயணம் செய்திருக்கிறார்.

அன்று அதைக்கேட்க ஒவ்வொருமுறையும் ஏழெட்டு பெண்கள் வந்து அமர்ந்திருப்பார்கள். அம்மா தன் இனிய மெல்லியகுரலில் செய்யுள்களை பாடிச்செல்வார். முக்கியமான இடங்களில் மட்டும் பொருள்விளக்கம் சொல்வார். மகாபாரதம் வாசிக்கத்தொடங்கும் அன்று ஒரு தென்னையை நட்டு வாசித்து முடிக்கையில் முளைத்து இலைவிட்டிருக்கும் தென்னையை எவருக்கேனும் கொடுப்பது வழக்கம். வீட்டுக்கு முன்னால் நடவேண்டிய புனிதமான மரம் அது என்ற நம்பிக்கை இருந்தது.

மலையாள வரலாற்றாசிரியரும் நாவலாசிரியருமான என் ஆசான் பி.கே.பாலகிருஷ்ணனை 1986-இல் நான் சந்தித்தபோது அவர் தன் புகழ்பெற்ற மகாபாரதநாவலான ‘இனி நான் உறங்கலாமா?’வை [தமிழாக்கம் ஆ.மாதவன்] வெளியிட்டு கேரளமே அதைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தது. என்னை எழுத்தாளனாக உணரத்தொடங்கியிருந்த காலகட்டம். எனக்கு அந்நாவல் அளித்த வேகம் என்பது வாசகனாக மட்டும் அல்ல, எழுத்தாளனாகவும்கூட. எந்த இளைஞனையும்போல நான் எழுதவிருப்பது அதைவிட மகத்தான ஒரு நாவல் என எண்ணிக்கொண்டேன். அதை பி.கே.பாலகிருஷ்ணனிடம் சொன்னேன். அவர் சிரித்து ‘நடக்கட்டும்…’ என்று வாழ்த்தினார்.

அதன்பின் என்னைக்கவர்ந்த மகாபாரதநாவல்கள் பலவற்றை வாசித்தேன். வி.ஸ.காண்டேகரின் மராட்டியநாவலான யயாதி [தமிழாக்கம் கா.ஸ்ரீ.ஸ்ரீ.] எஸ்.எல்.பைரப்பாவின் கன்னடநாவலான பருவம் [தமிழாக்கம் பாவண்ணன்] எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம் [தமிழாக்கம் குறிஞ்சிவேலன்] போன்ற முதன்மையான பலநூல்கள். குட்டிகிருஷ்ண மாரார் மலையாளத்தில் எழுதிய பாரதபரியடனம் என்னும் மகாபாரத ஆய்வுநூல் என்னை பெரிதும் கவர்ந்த ஒன்று.

நான் எழுதவேண்டிய நூல் என்னுள் வளர்ந்துகொண்டே இருந்தது. வித்வான் பிரகாசம் மலையாளத்தில் எழுதிய வியாசபாரதத்தின் உரைநடை வடிவத்தையும் கொடுங்கல்லூர் குஞ்சுகுட்டன் தம்புரானின் செய்யுள்வடிவ மொழியாக்கத்தையும் முழுமையாகவே வாசித்தேன். பின்னர் கிசாரிமோகன் கங்குலியின் ஆங்கில மொழியாக்கம். கடைசியாக தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியாரின் தமிழ் மொழியாக்கம். மோனியர் விலியம்ஸின் சம்ஸ்கிருத அகராதியும் வெட்டம் மாணியின் புராண கலைக்களஞ்சியமும் என் முதன்மையான வழிகாட்டிநூல்கள்.

மகாபாரதத்தை ஒட்டி பூநாகம் என்னும் நாவலை எழுத முயன்றேன். முழுமைபெறவில்லை. அதன் சிலபகுதிகள் இறுதிவிஷம், களம் போன்ற தலைப்புகளில் கதைகளாக வெளிவந்தன. திசைகளின் நடுவே, நதிக்கரையில், பத்மவியூகம், விரித்த கரங்களில் போன்ற கதைகளையும் பதுமை, வடக்குமுகம் ஆகிய இருநாடகங்களையும் மகாபாரதத்தை ஒட்டி எழுதினேன். அந்தக் கனவு என்றும் என்னுடன் இருந்தது. கடந்த இருபத்தைந்தாண்டுகளாக மகாபாரத நாவலுக்கான ஆராய்ச்சியில் இருந்தேன் என்றால் மிகையல்ல. இன்று எழுதத்தொடங்கும்போதுதான் புராணங்கள், சாஸ்திரநூல்கள், தத்துவநூல்கள் சார்ந்து நான் மேற்கொண்ட ஆய்வின் விரிவே எனக்குத்தெரிகிறது.

கனி விழுவதற்கான கணம் அமைவதுபோல எதிர்பாராத ஒரு கணத்தில் இந்த நாவல் நிகழத்தொடங்கியது. முழுமகாபாரதத்தையும் நாவல் வடிவில் எழுதவிருக்கிறேன். வெண்முரசு என்பது இந்நாவலின் பொதுப்பெயர். என் இளையதளமான www.jeyamohan.in மற்றும் www.venmurasu.in ஆகியவற்றில் இந்நாவல் தொடராக ஒவ்வொருநாளும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

வெண்முரசின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி நாவல்களாக வெளிவரும். முதற்கனல் அவ்வரிசையின் முதல்நாவல். இது வடிவத்திலும் தரிசனத்திலும் தன்னளவிலேயே முழுமையான படைப்பு. அதேசமயம் வெண்முரசின் அணிவாயிலும்கூட.

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம் மகாபாரதத்தில் உள்ளது. இந்தியப் பண்பாடு உருவாகிவந்த முழுச்சித்திரமும் அதில் உண்டு. பாரதவர்ஷம் என்று சொல்லப்படும் நிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் மகாபாரதம் சித்தரிக்கிறது. அனைத்து மக்களையும் விவரிக்கிறது.

அத்துடன் என்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அடிப்படையான அறக்கேள்விகள் அனைத்தையும் அது ஆராய்கிறது. அழியாத ஞானத்தை அவற்றுக்கான விடைகளாக அளிக்கிறது. அந்த ஞானத்தை நோக்கிச்சென்ற மாமனிதர்களின் உணர்ச்சிகளையும் தேடல்களையும் மோதல்களையும் வீழ்ச்சிகளையும் மீட்புகளையும் சித்தரிக்கிறது. ஆகவே ஒரு ஞானநூலாகவும் பேரிலக்கியமாகவும் ஒரேசமயம் திகழ்கிறது. சென்றகால வரலாறாகவும் இன்றைய வாழ்க்கையாகவும் உள்ளது.

இந்நாவல்வரிசை மகாபாரதத்தை முழுமையாக இன்றையசூழலில் மறுஆக்கம் செய்யும் முயற்சி. மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்கிறது. அதிகம் பேசப்படாத சிறிய கதைமாந்தர்களை விரிவாக்கம் செய்கிறது. உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் தரிசனங்களையும் விரிவாக்கம் செய்கிறது. புராணம் இன்றைய நவீன இலக்கியமாக ஆகும் புனைவுச்செயல்பாடு இது.

இப்பெரும்பணியில் என்னை ஆற்றுப்படுத்திய ஆசிரியர்கள் அனைவரையும் வணக்கத்துடன் எண்ணிக்கொள்கிறேன். பிழைதிருத்தம் செய்தும் தகவல்களை சரிபார்த்தும் இந்நூலின் ஆக்கத்தில் பேருதவி புரிந்தவர்கள் ஸ்ரீனிவாசன்-சுதா தம்பதியினர். அழகிய ஓவியங்களை அமைத்து இந்நாவலை ஒரு கனவுபோல நிலைநிறுத்தியவர்கள் ஏ.வி.மணிகண்டனும் ஷண்முகவேலும். இணையதளத்தை வடிவமைத்தவர்கள் ராமச்சந்திர ஷர்மாவும் ஆனந்தகோனாரும். உற்சாகமான எதிர்வினைகளுடன் என்னைத் தொடரும் அரங்கசாமி, சிறில் அலெக்ஸ், கிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்நூலை வெளியிடும் நற்றிணை பதிப்பகம் யுகனுக்கும் நன்றி.

இந்நூலை என் குருவடிவமான இளையராஜா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். அவரது ஆசியுடன் தொடங்கப்பட்ட முயற்சி இது. என்றும் என்னுடன் இருக்கும் நித்ய சைதன்ய யதிக்கும் அவரது குருமரபுக்கும் என் சுயசமர்ப்பணம்.

ஜெயமோகன்

[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் முதற்கனல் நாவலுக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 11