‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 35

அரண்மனைக்குச் சென்று மன்னரின் உடல்நிலை பற்றி ஆராய்ந்தான் வசுதேவன். உக்ரசேனரின் உடல்நிலை கம்சன் சொன்னதுபோல அணையும் தருவாயில் இருக்கவில்லை. அவன் அரண்மனைக்கூடத்துக்குச் சென்றபோது கலிங்கத்தில் இருந்து வந்திருந்த வைத்தியர்குழுவின் தலைவரான பிரபாகரர் வந்து வணங்கி வழக்கம்போல மன்னரின் உடல்நிலை பற்றிய அன்றைய செய்திஓலையை அளித்தார்.

வசுதேவன் அதை வாங்கி வாசித்துவிட்டு புருவங்கள் முடிச்சிட பிரபாகரரை ஏறிட்டுப்பார்த்தான். “மன்னரின் உடல்நிலையில் இக்கட்டு இருப்பது உண்மை. ஆனால்…” என அவர் இழுத்தார். அவன் நோக்கியதும் கண்களை தாழ்த்திக்கொண்டார். “சொல்லுங்கள்” என்றான் வசுதேவன்.

“இளவரசர் அவசரமுடிவுகளுக்குச் செல்கிறார் அமைச்சரே. மன்னர் உடனடியாக உயிர்துறக்கும் நிலை இல்லை. அவருக்கு இளைப்புநோய் இருக்கிறது. நேற்று அது சற்றே கூடுதலாக ஆகி நுரையீரல் வழியாக குருதி வந்திருக்கிறது. அதை நஸ்யங்கள் வழியாக இன்று கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். பொதுவாக மூச்சுநோய்கள் எவரையும் உடனே கொல்வதில்லை. அவை வதைக்கும், படுக்கவைக்கும், ஆனால் உயிரை பாதிப்பதில்லை.”

அதை தான் எதிர்பார்த்திருந்ததை வசுதேவன் உணர்ந்தான். தன் உடலசைவுகளில் உள்ளத்தில் ஓடிய அமைதியின்மை தெரியாமலிருக்க இரு கைகளின் கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து அழுத்திக்கொண்டு எதிரே நின்ற பிரபாகரரின் முகத்தையே நோக்கினான்.

“இறந்துவிடுவாரா என்று இளவரசர் நேற்று ஏழெட்டுமுறை கேட்டார். இன்றுகாலை இறந்துவிட்டாரா என்று கேட்டு தூதன் வந்தான். சற்று முன் இறந்ததுமே செய்தியை அறிவிக்கும்படிச் சொல்லி தூதன் வந்திருக்கிறான்” என்றார் பிரபாகரர். “கேலிக்குரியதாகத் தோன்றுகிறது அனைத்தும்…இங்கே எல்லா சேவகர்களும் இதையெல்லாம் அறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.”

“அது இளவரசரின் பதற்றத்தையே காட்டுகிறது” என்றான் வசுதேவன். “இல்லை அமைச்சரே. அதே வினாவுடன் அமைச்சர் கிருதசோமரின் தூதர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார் பிரபாகரர். “நீங்கள் கிருதசோமரின் சொற்களுக்கு கட்டுப்பட்டவரல்ல. அதை அவருக்குச் சொல்லுங்கள்” என்றான் வசுதேவன். பிரபாகரர் “அதை நான் அவரிடம் சொல்லமுடியாது அமைச்சரே. கிருதசோமர் இப்போது இளவரசரின் அருகிலேயே இருந்துகொண்டிருக்கிறார்” என்றார்.

“மன்னரின் உடல்நிலையை நாழிகைக்கு ஒருமுறை எனக்குத் தெரிவியுங்கள்” என்று சொல்லிவிட்டு வசுதேவன் கிளம்பியபோது பிரபாகரர் பின்னால் வந்தார். “சொல்லுங்கள்” என்றான் வசுதேவன். “எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றார் அவர். “என்ன ஐயம்?” என்று கேட்டபோது தன் முதுகில் ஏதோ ஊர்வதுபோல ஓர் நரம்பசைவை வசுதேவன் உணர்ந்தான். “இல்லை… நீங்கள் அரசரிடம் சொல்லுங்கள் அமைச்சரே…” என்று பிரபாகரர் சொல்லி கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

“என்ன?” என்றான் வசுதேவன். “இளவரசர் காட்டும் இந்த அவசரம் அவப்பெயரை உருவாக்கிவிடும்…அவரிடம் சொல்லுங்கள்.” வசுதேவன் “சொல்கிறேன்… நீங்கள் உங்கள் கடமையை முறைப்படிச் செய்யுங்கள்” என்றான். கடமையை என்ற சொல்லில் அவன் கொடுத்த அழுத்தத்தை பிரபாகரர் புரிந்துகொண்டதை அவரது இமைச்சுருக்கம் காட்டியது.

திரும்பும் வழியில் வசுதேவன் கிருதசோமனைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். மறைந்த பேரமைச்சர் கிருதரின் மைந்தர். அவரது முன்னோர்கள் குங்குரரின் காலம் முதலே மதுராபுரியின் பேரமைச்சர்கள். கிருதரின் மூதாதையான சோமகர்தான் குங்குரருக்கு தன் தமையன் விடூரதன் குலத்தை வீழ்த்தி மதுராபுரியின் அரசுரிமையை கைப்பற்றும் வழிகளைக் கற்பித்தவர். யாதவகுலத்தில் எதிர்ப்பை வெல்ல மகதத்துக்கு பெருந்தொகையை கப்பமாகக் கொடுக்கவும் கலிங்கத்து படைகளை ஊதியத்துக்கு அழைத்துவரவும் அவரே வழிகாட்டினார். அன்றுமுதல் மதுராபுரி அவர்களின் ஆணைக்குள்தான் இருந்தது.

உக்ரசேனரின் அவைக்கு வந்த வசுதேவன் அரசு நூல்களை கிருதரிடம்தான் கற்றுக்கொண்டான். அவனுடன் இணைமாணாக்கனாகவே கிருதரின் மைந்தன் கிருதசோமன் இருந்தான். கம்சனின் அன்பைப்பெற்று வசுதேவன் வளர்ந்தபோது அதை கிருதர் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அவரது மறைவுக்குப்பின் வசுதேவன் பேரமைச்சனாக ஆகவேண்டுமென கம்சன் சொல்ல உக்ரசேனர் அதை ஏற்றுக்கொண்டபோது கிருதசோமன் சினம் கொண்டான். மதுராபுரிக்கு முதல்முறையாக பிராமணரல்லாத ஒருவர் அமைச்சரானதை அவையின் பிராமணர்கள் அனைவருமே உள்ளூர விரும்பவில்லை என்பதை வசுதேவன் அறிந்திருந்தான். அந்த வெறுப்பும் அச்சமும் நாள்செல்லச்செல்ல கிருதசோமனிடம் முனைகொள்வதையும் கண்டான்.

உக்ரசேனர் நோயில் விழுந்ததும் கம்சனின் உள்ளத்தை ஐயங்களால் நிறைத்து அந்த வழியினூடாக உள்ளே சென்று நிலைகொள்ள கிருதசோமனால் முடிந்திருக்கிறது. அது அவனது முயற்சி மட்டும் அல்ல. அவையின் பிராமணர்கள் அனைவருமே ஏதேனும் வகையில் அதனுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். அவையில் வசுதேவன் பேரமைச்சனாக இருந்தாலும் கருவூலமும் கோட்டைக்காவலும் சுங்கமும் சாலைச்சாவடிகளும் அரண்மனையாட்சியும் கிருதரின் குலத்தைச்சேர்ந்த பிராமணர்களிடமே இருந்தது. அரச சபையில் வசுதேவன் எப்போதும் தனிமைப்படுத்தப்பட்டவனாகவே இருந்தான். மென்மையான இனிய முகமன்களுக்கும் முறைமைச்சொற்களுக்கும் அடியில் பட்டில்பொதிந்த உடைவாள் போல பிறிதொன்று இருந்துகொண்டே இருந்தது.

வசுதேவன் தன் மாளிகைக்கு வந்ததுமே சேவகனிடம் “நான் உடனடியாக உத்தரமதுராபுரிக்குச் செல்லவேண்டும், ரதங்களைப் பூட்டுக” என்று ஆணையிட்டான். தன் அறைக்குள் சென்று ஓலையில் அன்றைய நிகழ்வுகளை எழுதி புறாவின் கால்களில் கட்டி பிருதைக்கு அனுப்பிவிட்டு கீழே வந்தான். அவன் சேவகன் “தங்கள் காலையுணவு” என்று சொன்னதும் அங்கேயே நின்றபடி அவன் தந்த தேனையும் அப்பத்தையும் பழங்களையும் உண்டான். அப்போது வாசலில் வந்து தலைவணங்கிய சேவகன் மார்த்திகாவதியில் இருந்து தூதன் வந்திருப்பதைச் சொன்னான்.

மார்த்திகாவதியில் இருந்து தூதனாக வந்திருந்தவர் துணைஅமைச்சர் ரிஷபர் என்பதைக் கண்டதுமே வசுதேவன் எச்சரிக்கை கொண்டான். அவரை அவன் தலைவணங்குவதை காணாமலிருக்கும்பொருட்டு இருசேவகர்களையும் வெளியே அனுப்பிவிட்டு அவரை வணங்கி முகமன் சொன்னான். அவர் அவனுக்கு ஆசியளித்துவிட்டு “இங்கே பேசலாமா?” என்றார். வசுதேவன் ஆம் என தலையை அசைத்தான்.

“மாமன்னர் குந்திபோஜர் உடனடியாக மார்த்திகாவதியின் இளவரசி குந்தியை அவரது அரண்மனையில் கொண்டுசேர்க்கும்படி ஆணையிட்டிருக்கிறார்” என்றார். வசுதேவன் கண்களுக்குள் நிகழ்ந்த சிறிய அசைவை அக்கணமே வென்று “அவ்வண்ணமே செய்கிறேன்” என்றான். “பிருதை…” என அவன் தொடங்குவதற்குள் ரிஷபர் “அவர் மதுவனத்தில் இல்லை என எனக்குத்தெரியும்” என்றார்.

“ஆம் உத்தமரே, அவள் இப்போது உத்தரமதுராபுரியில் தேவகரின் மகள் தேவகியின் கன்னிமாடத்தில் இருக்கிறாள்” என்றான் வசுதேவன். அது உண்மை என ரிஷபர் உடனே புரிந்துகொள்வார் என்றும் உண்மையுடன் பொய்யை அவன் எப்படிக் கலக்கப்போகிறான் என்பதையே அவர் ஆராய்வாரென்றும் அவன் உணர்ந்தான். “நான் தேவகியிடம் அணுக்கமான உறவுடன் இருக்கிறேன் ரிஷபரே, அவள் பெறும் குழந்தையை பிருதை பேணவேண்டுமென்பதற்காகவே அவளை கன்னிமாடத்துக்குக் கொண்டுவந்தேன்.”

சொன்னதுமே ரிஷபர் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார் என வசுதேவன் உணர்ந்தான். அவர் அறிந்த செய்திகளுடன் அது சரியாகவே இணைந்துகொண்டுவிட்டது. “சேய் நலமாக உள்ளதல்லவா?” என்ற வினா அவரில் இருந்து எழுந்ததுமே அவர் அங்கே மருத்துவச்சிகள் வந்துசென்றதை அறிந்திருக்கிறார் என்று அவன் அறிந்தான். “ஆம் நலம்” என்று பதில்சொன்னான்.

“அஸ்தினபுரியில் இருந்து ஒரு தூதுவந்திருக்கிறது” என்று ரிஷபர் சொன்னார். அவன் கண்களை பார்த்தபடி “பிருதையை பெண்கேட்டிருக்கிறார்கள்.” வசுதேவன் அச்சொற்களை ஒவ்வொன்றாக தன்னுள்ளே மீண்டும் சொல்லிக்கொண்டபின் “யாருக்காக?” என்றான். “அஸ்தினபுரியின் மருமகளாக பிருதையை அளிக்க நாம் ஒப்புக்கொள்கிறோமா என்று மட்டும்தான் கேட்டிருந்தார்கள்” என்றார் ரிஷபர். “அங்குள்ள நிலைமையை வைத்துப்பார்த்தால் அவர்கள் விசித்திரவீரியரின் மைந்தரும் அவர்களின் பேரமைச்சருமான விதுரருக்காகவே நம் பெண்ணைக் கேட்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.”

“குந்திபோஜர் என்ன நினைக்கிறார்?” என்றான் வசுதேவன். “அவர் மகிழ்ச்சியில் திளைக்கிறார். மார்த்திகாவதியின் நலனுக்கு இதைவிடச்சிறந்த வாய்ப்பென ஏதும் வரப்போவதில்லை என எண்ணுகிறார்” என்றார் ரிஷபர். வசுதேவன் “ஆனால் விதுரர் சூதகுலத்தவர் அல்லவா?” என்றான்.

“ஆம். ஆனால் ஷத்ரியர்களின் கண்ணில் நாம் இன்னும் சூத்திரர்கள்தான்” என்றார் ரிஷபர். “நாம் விதுரரின் உதவியுடன் மார்த்திகாவதியை ஒரு வலுவான அரசாக நிலைநாட்டுவோமென்றால் அடுத்த தலைமுறை எவருடைய உதவியுமில்லாமல் ஷத்ரிய பதவியை அடையும். யார் மண்ணைவென்று அதை வைத்துக்கொள்ளவும் வல்லமைகொண்டிருக்கிறானோ அவனே ஷத்ரியன் என்பதே நியதி.” அவர் அதைச் சொன்னபாவனையிலேயே அனைத்தையும் இயக்குவது அவரது திட்டங்களே என்று வசுதேவன் உணர்ந்துகொண்டான்.

“குந்திபோஜர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்” என்றார் ரிஷபர். “யாதவர்கள் இன்று பலகுலங்களாகப் பிரிந்து பல அரசுகளாக சிதறிக்கிடப்பதனால்தான் பாரதவர்ஷத்தில் அவர்களுக்கான இடம் உருவாகாமல் இருக்கிறது. அவர்களை ஒருங்கிணைப்பவர் எவரோ அவர் ஐம்பத்தாறு ஷத்ரியமன்னர்களும் ஒதுக்கிவிடமுடியாத வல்லமைகொண்ட ஷத்ரியசக்தியாக எழுவது உறுதி…”

“ஆம்” என்று வசுதேவன் சொன்னான். “ஆனால் அதிலுள்ள இக்கட்டு என்னவென்றால் அப்படி ஒரு புதிய ஷத்ரிய சக்தி எழுவதை ஷத்ரியமன்னர்கள் விரும்புவதில்லை. அதை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும்தான் முயல்வார்கள். அதில் பிழையும் இல்லை. அதுதான் அவர்களுக்குரிய அறம். அதை மீறி எழவேண்டியதே புதிய ஷத்ரிய சக்தியின் அறம். இந்தப்போட்டியை தகுதியுடையது மட்டும் எழுந்துவருவதற்கான ஒரு தேர்வாக வைத்துள்ளது விதி என்று கொள்வதே விவேகமாகும்” என்று ரிஷபர்சொன்னார்.

VENMURASU_EPI_86
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவரது கண்களையே வசுதேவன் நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு யாதவ சிற்றரசின் அமைச்சராக இருக்கும் பிராமணனுக்கு என்ன திட்டம் இருக்கமுடியும்? அதை உடனே உய்த்தறிந்து புன்னகையுடன் ரிஷபர் சொன்னார் “நான் பிராமணன். ஷத்ரியர்களின் மோதலும் வெற்றியும் எனக்குரிய களமல்ல. ஆனால் நான் எவருக்காக பணிபுரிகிறேனோ அவர்களுக்காக என் அறிவையும் விவேகத்தையும் முற்றிலுமாகச் செயல்படுத்துவது என் கடமை… அதையே செய்கிறேன்.” அவரது புன்னகை விரிந்தது “ஆம், அதன் வழியாக நான் வளர்வேன். என் குலம் வல்லமை பெறும். அதுவும் என் அறமேயாகும்.”

வசுதேவன் “அவ்வாறே ஆகுக” என்று வாழ்த்தினான். ரிஷபர் சற்று குனிந்து அவனை நோக்கி “ஒருபோதும் மதுராபுரியை இப்போதிருக்கும் எல்லைகளுக்கு அப்பால் வளர்வதற்கு ஷத்ரியர்கள் விடப்போவதில்லை. அதை உக்ரசேனர் அறிந்திருந்தார். ஆகவேதான் அவர் விருஷ்ணிகளையும் போஜர்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்றார். அவரால் அது முடியவில்லை என்றாலும் மோதல் இல்லாமல் இருக்க முடிந்தது. ஆனால் இனி மதுராபுரியை ஆளப்போகும் மன்னன் மூடன். அவனால் அந்தச் சமநிலையை ஒருபோதும் பேணமுடியாது” என்றார்.

அச்சொற்களை கேளாதவன் போல முகத்தை வைத்துக்கொண்டான் வசுதேவன் . ரிஷபர் “மார்த்திகாவதி அஸ்தினபுரியின் பின்பலத்தை அடையுமென்றால் மதுராபுரியை ஒரேநாளில் வென்றுவிடமுடியும்….” என்றபோது அவர் குரல் தாழ்ந்தது. “மதுராபுரியில் மார்த்திகாவதியுடன் குருதியுறவுள்ள ஒரு விருஷ்ணிகுலத்தவர் ஆட்சி செய்யமுடியும் என்றால் யாதவர்களின் வல்லமைகொண்ட முக்குலங்களும் ஒன்றாகிவிடுகின்றன. அடுத்த தலைமுறையில் நாம் நமது நிலங்களை எவர் துணையும் இல்லாமல் ஆட்சிசெய்ய முடியும்.”

மெல்லிய குரலில் ரிஷபர் தொடர்ந்தார் “ஒருதலைமுறைக்காலம் நாம் எவருக்கும் கப்பம் கட்டாமலிருந்தால் நம்முடைய படைபலமும் செல்வமும் பெருகும்….யாதவமன்னன் ஒருவன் அதற்கடுத்த தலைமுறையில் ஒரு ராஜசூய வேள்வியும் ஒரு அஸ்வமேதவேள்வியும் செய்வானென்றால் பாரதவர்ஷத்தின் அத்தனை ஷத்ரியர்களும் அவனை ஏற்றுக்கொண்டாகவேண்டும்… யார் கண்டார்கள், பெருநியதிகள் ஆணையிடுமென்றால் யாதவர்குலத்துச் சக்கரவர்த்தி ஒருவர் இந்த பாரதவர்ஷத்தை ஒருகுடைக்கீழ் ஆளவும் முடியும்….ஓம் அவ்வாறே ஆகுக .”

ஓடைநீரில் குருதித்துளி கோடாக நீள்வது போல அந்த நீளமான சொற்றொடர்களுக்குள் ஓடிச்சென்ற உட்குறிப்பை வசுதேவன் புரிந்துகொண்டான். அவன் உடலில் மெல்லிய நடுக்கம் ஓடியது. மூச்சு கோசங்களுக்குள் அசையாமல் நின்றது. அவன் அதை அழுத்தி வெளிவிடவேண்டியிருந்தது. ஆனால் கண்களை அசைக்காமல் வைத்திருந்தான்.

“அரசுகளும் மன்னர்களும் எப்போதும் விதியால் முடிவெடுக்கப்படுகின்றன யாதவரே. ஆனால் விதி அதை ஒருபோதும் எவர் மடியிலும் கொண்டுசென்று போடுவதில்லை தாவினால் கையெட்டும் தொலைவிலேயே நிற்கச்செய்கிறது. தானிருக்கும் இடத்தில் இருந்து எழுந்து தாவாதவர்கள் அதை அடைவதேயில்லை” என்று ரிஷபர் பொதுவாகச் போலச் சொன்னார்.

இயல்பாக வசுதேவன் சிந்தைக்குள் கிருதசோமனின் முகம் மின்னிச்சென்றது. அமைச்சுத்திறனில் அந்தணரை ஒருபோதும் விஞ்சிவிடமுடியாது என்ற எண்ணம் எழுந்தது. ரிஷபர் அங்கே வரும்போது அவர் சொல்லவேண்டிய சொற்களை உருவாக்கிக்கொண்டிருக்கவில்லை. அவனுடைய முகத்தை நோக்கி அக்கணங்களில் அச்சொற்களை சமைத்துக்கொள்கிறார். ஆனால் அவை எங்கே தொடங்கவேண்டுமோ அங்கே தொடங்கின. எங்கே முடியவேண்டுமோ அங்கே முடிந்தன. நேரடியாக முகத்திலறையவில்லை, சுற்றி வளைக்கவுமில்லை. ஆனால் ஆயிரம் பட்டுத்துணிகளுக்கு அப்பால் அவன் அகத்தில் மறைந்துகிடக்கும் வாளை அவர் தொட்டுப்பார்த்துவிட்டார். அவன் பெருமூச்சுவிட்டான்.

“நல்லது உத்தமரே. நான் இன்றே பிருதையை மார்த்திகாவதிக்கு அனுப்புகிறேன்” என்றான் வசுதேவன். “தேவகியை நீங்கள் மணம்கொள்வதும் உகந்ததே” என்று புன்னகையுடன் ரிஷபர் சொன்னார். “ஏனென்றால் உத்தரமதுராவுக்கும் இங்கே ஆட்சியுரிமையில் ஒரு குரல் உள்ளது. உக்ரசேனரின் தங்கைமகன் அஜன் அங்கேதான் இருக்கிறான். உக்ரசேனரின் மகள் ரஜதகீர்த்தியை அவன் மணம்கொண்டிருக்கிறான். தேவகருடைய ஒத்துழைப்பும் நமக்குத்தேவை.” வசுதேவன் அவர் கண்களைச் சந்திப்பதை விலக்கி “ஆம்…” என்றான்.

ரிஷபர் வணங்கி வெளியேறினார். வாயில் திறந்ததும் எளிய சூதனைப்போல அவனை வணங்கினார். அவனும் சூதர்களுக்குரிய பரிசிலை அவருக்கு அளித்து வழியனுப்பினான். அவன் தன் உடல் பதறிக்கொண்டே இருப்பதையும் சொற்களனைத்தும் புற்றிலிருந்து எழுந்த ஈசல்கூட்டம் போல சுழன்றுகொண்டே இருப்பதையும் உணர்ந்தான். நிலைகொள்ளாமல் தன் அரண்மனைக்குள் அங்குமிங்கும் நடந்தான். மதுராபுரியின் அரசு. ஏன் கூடாது? இது இன்றும் சூரசேனம் என்றே அழைக்கப்படுகிறது. வரலாற்றின் வளையம் திரும்பி வருகிறதா என்ன? வரலாறு ஒரு வனமிருகம். அது பழகிய பாதைகளை விட்டு விலகாது. ஆனால்…

சேவகன் வணங்கி “தேர் ஒருங்கிவிட்டது” என்றான். தலையை அசைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றான் வசுதேவன். ஆட்டுமஞ்சத்தில் அமர்ந்துகொண்டு காலால் அதை மெல்ல ஆட்டியபடி வெளியே தெரிந்த மரங்களின் இலையசைவுகளை பார்த்துக்கொண்டிருந்தான். ஆம். சூரசேனம், சூரசேனம் மீண்டு எழுமென்றால் அது நிகழலாம். ‘அது’. அவனுடைய எளிய உடலால் அந்த எழுச்சியைத் தாளமுடியவில்லை. ‘அது..’ வேண்டாம். வேண்டாம். இப்போதே எண்ணவேண்டுமென்பதில்லை…ஆனால்…

வசுதேவன் எழுந்து சேவகனை அழைத்து மது கொண்டுவரச்சொன்னான். கலிங்கம் வழியாக வரும் யவனமது எப்போதும் அவன் மாளிகையில் இருக்கும் என்றாலும் அவன் அதை பெரும்பாலும் அருந்துவதில்லை. அதன் வாசனை அழுகிய பூக்களுடையதுபோலத் தோன்றியது. கண்களைமூடிக்கொண்டு அதை முகர்ந்தால் அவனுடைய அகக்கண்ணில் புழுக்களின் நெளிவு தெரியும். ஏதேனும் நிகழ்வுகளால் அகம் கலைந்து இரவில் நெடுநேரம் துயில் வராதிருக்கையில் மட்டும் அவன் அதை அருந்துவான்.

சேவகன் தேன்கலந்த பொன்னிற மதுவை வெள்ளிக்கோப்பையில் கொண்டுவந்தான். அதை ஒரே மிடறாகக் குடித்துவிட்டு சால்வையால் உதடுகளை துடைத்துக்கொண்டான். இருமுறை குமட்டியபோது போதாதென்று தோன்றியது. இன்னொரு முறை கொண்டுவரச்சொல்லி குடித்துவிட்டு ஆட்டுகட்டிலிலேயே அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தான். ஆம், சிலதருணங்களில் வரலாறு என்பது வெறும் வாய்ப்புகளின் விளையாட்டு. வெறும் வாய்ப்புகள். அதை அளிப்பவை மனிதர்களை பகடைகளாக ஆடவைக்கும் விண்கோள்கள்.

விடூரதன் பெண்களில் ஈடுபட்டிருந்தார். அந்தப்புரத்திலேயே வாழ்ந்தார். மகதத்துக்கான கப்பத்தை ஒவ்வொருமுறையும் தம்பி குங்குரர்தான் முத்திரையிட்டு அனுப்பினார். மகத மன்னனின் அரண்மனைக் கொலுவிழவுக்குச் சென்றிருந்தபோது மகதமன்னன் குங்குரரை ‘மதுராபுரியின் அரசரே’ என்று சபையில் அழைத்தான். அது வரலாற்றின் வாய்ப்பு. வெறும் வாய்ப்பு அது. ‘ஆம், சக்கரவர்த்தி’ என்றார் குங்குரர். வரும் வழியிலேயே விடூரதன் குலம் அரசை இழப்பது முடிவுசெய்யப்பட்டுவிட்டது.  அக்குலம் யமுனைக்கரை காடுகளில் மாடுமேய்த்து அலையும் விதியும்… வாய்ப்புகள் வந்து நிற்கின்றன. ஆனால்…

பளிங்குமீது நீராவி வியர்ப்பதுபோல அவன் சிந்தைகள் ஈரமாகி குளிர்ந்து திரண்டு தயங்கி வழியத்தொடங்கின. அதுவரை நிகழ்ந்தவற்றை ஒவ்வொன்றாக எண்ணித் திரட்டத் தொடங்கினான். ஒன்று அவன் கையில் நின்றபோது நூறு நழுவி வழிந்தன. சரி ஏதாவது ஆகட்டும் என ஆட்டுகட்டிலிலேயே படுத்துத் தூங்கிவிட்டான்.

அவன் ஒரு கொந்தளிக்கும் கரிய நதி வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அவனுடைய படகு மிகச்சிறியதாக ஒரு மரக்கோப்பை அளவுக்கே இருந்தது. அதை அலைகள் தூக்கி வீசிப்பிடித்து விளையாடின. கன்னங்கரிய அலைகள். பளபளக்கும் நீர்ப்பரப்பு. அது நீரல்ல என்று அவன் அறிந்தான். அவை நாகங்களின் உடல்கள். லட்சக்கணக்கான நாகங்கள் அங்கே நதிபோல பின்னி நெளிந்து ஓடிக்கொண்டிருந்தன. அவற்றின் பத்திகள்தான் அலைகளாக எழுந்துகொண்டிருந்தன. அவற்றின் நாநுனிகள் செந்நிறத்துமிகளாகத் தெறித்தன. அவன் அச்சத்துடன் படகின் விளிம்பைப்பற்றிக்கொண்டான். துடுப்பு போடுவதை நிறுத்திவிட்டான்.

கரையில் ஓர் ஆலமரம் தெரிந்தது. அதன் கீழே அவன் அன்னை நின்றுகொண்டிருந்தாள். அவள் கைநீட்டி அவனை அழைத்தாள். அவளருகே சென்று விட அவன் விரும்பினான். ஆனால் அலைகள் அவனை விலக்கி விலக்கிக் கொண்டு சென்றன. அவனுக்கு தாகமெடுத்தது. ஆனல் நதியில் நீரே இல்லை. நாகங்கள். நாகங்களைக் குடிக்கமுடியுமா என அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். நாகங்களாலான நதியா? இதென்ன, மண்ணுலகா வானுலகா பாதாளமா? இல்லை இது கனவு. நான் கனவைத்தான் கண்டுகொண்டிருக்கிறேன். வெறும்கனவு… கனவென்றால் நான் இப்போது விழித்துக்கொள்ளமுடியும். நீர் அருந்த முடியும். ஆனால் என் அன்னை மறைந்துவிடுவாள். தாகம்…

தாகம் என்ற சொல்லுடன் வசுதேவன் விழித்துக்கொண்டான். ஆட்டுகட்டிலில் அவன் கிடப்பதை அப்போதுதான் உணர்ந்தான். உடல் வியர்வையில் நனைந்திருந்தது. எழுந்து சென்று மண்குடுவையில் இருந்த நீரை எடுத்து குடித்தான். அது யவன மதுவின் இயல்பு. அதை எப்போதெல்லாம் அருந்தினானோ அப்போதெல்லாம் தாகம் தாகம் என்று அவன் அகம் தவித்திருக்கிறது. மீண்டும் ஆட்டுகட்டிலில் அமர்ந்தபோதுதான் என்ன செய்கிறோம் என்ற எண்ணம் வந்தது. உடனே திகைத்து எழுந்து நின்றுவிட்டான்.

சால்வையை அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடிச்சென்று ரதத்தில் ஏறிக்கொண்டான். சாரதியிடம் உத்தரமதுராவுக்குச் செல்ல ஆணையிட்டபின் இருக்கையில் தலையைப்பற்றியபடி அமர்ந்துவிட்டான். தலையின் இருபக்கமும் வலித்தது. இருமுறை ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டன். நான் ஒரு எளிய யாதவன். நூல்களைக் கற்றால் மதியூகி ஆகிவிடலாமென எண்ணிக்கொண்ட மூடன். நான் மதியூகி அல்ல. மதியூகியின் அகம் இக்கட்டுகளை உவக்கிறது. இதோ என் களம் என எம்புகிறது. மேலும் மேலும் இக்கட்டுகளுக்காக ஏங்குகிறது. நான் நூல்களில் அனைத்தையும் கற்றவன். உண்மையான இக்கட்டுகளில் என் அகம் திகைத்துவிடுகிறது.

ரதம் கன்னிமாடத்துக்கான சாலையில் ஓடத்தொடங்கியதும் வசுதேவன் அமர்ந்திருக்கமுடியாமல் எழுந்து நின்றுவிட்டான். ஏதோ உள்ளுணர்வால் அவனுக்கு எங்கோ பிழை நிகழ்ந்திருப்பதை அறியமுடிந்தது. பிழை நிகழுமென அறிந்தேதான் மதுவை அருந்தி நேரத்தை கடத்தினேனா என்று கேட்டுக்கொண்டதும் தலையை மீண்டும் அறைந்துகொண்டான். ஒன்றுமில்லை, எல்லாம் என் வீண்சிந்தைகள். ஒன்றும் நிகழ்ந்திருக்காது… ஆனால் …

கன்னிமாடத்தை அணுகியதுமே அவனுடைய அகம் நீர்பட்ட பால்நுரைபோல அடங்கியது. தன்னைப்பழித்த உள்ளத்துடன் ரதத்தை விட்டு இறங்கி காவலர்கள் முன்பு நின்றான். காவலர்தலைவனிடம் உள்ளே சென்று தேவகியை அவன் பார்க்க விழைவதாகச் சொன்னான். காவலர்தலைவன் முகத்தில் இருந்த ஐயத்தை அவன் தெளிவாகவே கண்டுகொண்டான். “இங்கே யாராவது வந்தார்களா?” என்று அவன் கேட்டான்.

காவலர்தலைவன் தயக்கத்துடன் “ஆம் அமைச்சரே. சற்றுமுன்புதான் தங்கள் ஆணையை தாங்கிவந்த மதுராபுரியின் காவலர் மார்த்திகாவதியின் இளவரசியை அழைத்துச்சென்றார்கள்” என்றான். “மதுராபுரியின் காவலர்களா?” என்று வசுதேவன் கேட்டான். “ஆம், தளகர்த்தர் சுபூதரே நேரில் வந்திருந்தார்.” வசுதேவன் தன் கால்கள் தளர்வதை உணர்ந்தான். அவனுக்கு அந்த உள்ளுணர்வை அளித்தது எது என அப்போதுதான் புரிந்தது. அரண்மனை முகப்பில் சேற்றுப்பரப்பில் பெரிய வண்டி ஒன்று வந்து சென்ற சக்கரத்தடம் தெரிந்தது. அந்தத் தடம் மதுராபுரியில் இருந்தே பாதையில் இருந்துகொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைமலேசியா படங்கள்
அடுத்த கட்டுரைபகற்கனவின் பாதை- கடிதம்