‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34

மதுராபுரியில் வசுதேவன் காலையில் நீராடி ஆயர்குலத்துக்குரிய பசுவின் கொம்புகள் போன்ற செந்நிறத் திலகத்தை அணிந்து வெண்பட்டுச்சால்வையுடன் தன் மாளிகையின் முகமண்டபத்தை அடைந்தபோது தவிர்க்கவியலாத செய்திகளை மட்டும் கேட்டு ஆணைகளை விடுத்துவிட்டு உத்தரமதுராவுக்குச் செல்வதைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் அவனுக்காக கம்சனின் தூதன் காத்திருந்தான். “இளையமன்னர் உடனடியாக தங்களை சந்திக்கவிரும்புகிறார்” என்றான் தூதன். “அனைத்துப்பணிகளையும் விட்டுவிட்டு அரண்மனைக்கு வரும்படி ஆணை.”

உத்தரமதுராவில் பிருதை இருப்பது கம்சனுக்குத் தெரிந்துவிட்டது என்று உடனடியாக வசுதேவன் எண்ணிக் கொண்டான். இளவரசனிடம் சொல்லவேண்டிய சொற்களை கோர்த்தபடி ரதத்தில் கம்சனின் மாளிகையான தருணவனத்துக்குச் சென்றான். அடர்ந்த மரங்களுக்கு நடுவே செவ்வண்ணக் கற்களால் கட்டப்பட்ட மரப்பட்டைக்கூரைகொண்ட மாளிகை கலிங்க யவன வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது. மாளிகை வாயிலிலேயே கம்சன் வசுதேவனை எதிர்கொண்டான். கொழுத்த பெரிய கரங்களை விரித்தபடி ஓடிவந்து அவனை எதிர்கொண்டான். அவன் கைகளைப்பற்றியபடி ‘வருக’ என்று அழைத்துச்சென்றான்.

தன் மதிசூழறையில் கதவுகளை மூடிவிட்டு வசுதேவனை சாய்வு மஞ்சத்தில் அமர்த்தி எதிரே அமர்ந்துகொண்டான் கம்சன். “வசுதேவரே…தாங்கள் இதற்குள் அறிந்திருப்பீர்கள்” என்று நேரடியாகவே தொடங்கினான். “சென்ற சிலநாட்களாகவே தந்தையின் உடல்நிலை சீர்கெட்டு வருகிறது. நேற்று அவர் குருதி உமிழ்ந்திருக்கிறார். அவரது மூச்சுப்பைகளுக்குள் குருதி இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள்” என்றான். பரபரப்புடன் தன் தொடைகளைத் தட்டியபடி “அவருக்கு முதுமைவந்துவிட்டது. சென்ற சில ஆண்டுகளாகவே அவரால் நடமாடவும் முடியவில்லை” என்றான்.

உக்ரசேனர் நோயுற்றிருப்பதை வசுதேவன் அறிந்திருந்தான். முந்தையநாள் மதியம்கூட அரண்மனைக்குச் சென்று நோயின் செய்திகளை மருத்துவர்கள் குறித்து அளித்த ஓலைகளை வாசித்து தன் ஆணைகளுடன் ஓலைநாயகத்திடம் அளித்து அரண்மனை ஓலைக்காப்புகளில் வைக்கச்சொல்லிவிட்டு வந்திருந்தான். ஆனால் மாலையானதும் பிருதை ஈற்றுநோவு கொண்டிருப்பதை புறா வழியாக அறிந்தான். இரவெல்லாம் அதைப்பற்றியே எண்ணி அக்கவலையிலேயே மூழ்கியிருந்தான். புறாக்கள் அவன் அரண்மனைக்கும் உத்தரமதுராவுக்கும் பறந்துகொண்டிருந்தன. குழந்தைபிறந்த செய்தி விடியலில் வந்ததுமே நிமித்திகரை கூட்டிவரச்சொல்லி பிறப்புநிமித்தங்களைக் கேட்டறிந்தான். அதன்பின்னரே குளிக்கச்சென்றான்.

கம்சன் “நான் அரண்மனையில் இருந்தேன். நேற்று மாலையிலேயே எனக்கு செய்திவந்துவிட்டது. அரண்மனையில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் பிறகு உணர்ந்துகொண்டேன். அரசனின் இறுதிக்காலத்தில் அமைச்சனின் பணிகள் மிகுந்துவிடுகின்றன என்று. நீங்கள் இரவெல்லாம் புறாக்களை அனுப்பிக்கொண்டிருந்ததையும் துயிலாமல் அறைக்குள் உலவிக்கொண்டிருந்ததையும் என் ஒற்றன் சொன்னான். ஆவன அனைத்தையும் செய்துவிட்டீர்கள் என நான் அமைதிகொண்டேன்” என்றான். “நான் அரசு ஏற்கும் நாள் நெருங்கிவிட்டதென்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். தந்தை இன்று மதியத்தைத் தாண்டுவது கடினம்.”

“ஆம் அதை நான் நேற்றே அறிந்தேன்” என்றான் வசுதேவன். கம்சன் தன் தொடைகளைத் தட்டியபடி “நேற்று என் ஒற்றர்கள் இன்னொரு செய்தியையும் அளித்தனர். நேற்றிரவெல்லாம் உத்தரமதுராவின் அரண்மனையில் இருந்து புறாக்கள் சென்றுகொண்டே இருந்திருக்கின்றன. நள்ளிரவுக்குமேல் பத்துமுறை புரவிகளும் ரதங்களும் அரண்மனைக்கு வந்திருக்கின்றன. அங்கே என்ன நடக்கிறது?” என்றான். வசுதேவன் இமைக்காத விழிகளுடன் அவன் சொல்லப்போவதைக் காத்துநின்றான்.

கம்சன் “வசுதேவரே, எனக்கும் என் சிறியதந்தைக்கும் நல்லுறவில்லை என நீங்கள் அறிவீர்கள். தேவகர் என்னை கல்வியறிவற்ற மூடன் என்றும் முரடன் என்றும் எண்ணுகிறார். தன் சபையில் பலமுறை அதைச் சொல்லியிருக்கிறார் என்றும் நானறிவேன். அவர் சென்ற முப்பதாண்டுகளாக உத்தரமதுராபுரியை ஆட்சி செய்துவருகிறார். மதுராபுரியின் அரசை ஆள என்னை விட அவருக்கே ஆற்றல் உள்ளது என்ற எண்ணமும் கொண்டிருக்கிறார்” என்றான். “என் தந்தையின் மறைவுக்குப்பின் மதுராபுரியை வென்று யாதவ அரசைக் கைப்பற்ற அவர் முயலப்போகிறாரா என்ற ஐயம் எனக்கிருக்கிறது.”

“அவர் அப்படி எண்ணக்கூடுமென நான் நினைக்கவில்லை. மதுராபுரியின் இளவரசராக நீங்கள் மாமன்னர் உக்ரசேனராலேயே பட்டம்கட்டப்பட்டிருக்கிறீர்கள். அந்த பட்டம்சூட்டுவிழாவிலும் கூட தேவகர் கலந்துகொண்டிருக்கிறார்” என்று வசுதேவன் சொன்னான். ஆனால் கம்சன் சொல்லும்போதே தேவகருக்கு அந்த எண்ணம் இருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

“நீங்கள் என் சிறியதந்தையின் அறவுணர்ச்சியை நம்புகிறீர்கள் அமைச்சரே. நான் அவரது இரு தம்பியருடைய அதிகார விருப்பை ஐயுறுகிறேன். உபதேவனும் சுதேவனும் இந்தச்சின்னஞ்சிறிய உத்தரமதுராபுரியின் ஆட்சிக்குள் அடங்குபவர்கள் அல்ல. அவர்களுக்கு இன்றிருப்பது ஆக்னேயபதத்தின் சாலைகளில் ஒன்றின்மீதான ஆட்சியுரிமை மட்டுமே. தேவகர் மதுராபுரியை கைப்பற்றினாரென்றால் அவர்கள் சிற்றரசர்களாக எழமுடியும்.”

“ஆம், அந்த வாய்ப்பும் உள்ளது” என்றான் வசுதேவன். “நான் சொல்கிறேன்… தேவகரின் திட்டங்கள் என்னவென்று நான் சொல்கிறேன்” என கைகளை விரித்துக்கூவினான் கம்சன். “வசுதேவரே, நாம் தொன்மையான யாதவர் குடி. நமக்கிருப்பது தாய்முறை மரபுரிமை. இங்கே அரசு என்பது உண்மையில் பெண்களுக்குரியது. ஹேகய மன்னரின் காலகட்டம் வரை அவ்வழக்கமே இருந்தது. பெண்ணின் காவலனாக பெண்ணின் மூத்த தமையன் நடைமுறை ஆட்சியை நடத்துவான். கார்த்தவீரியர் காலகட்டத்தில் அவர் ஆட்சியின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். தன்னை ஷத்ரிய மன்னராக அறிவித்துக்கொண்டார். அதன்பின் மதுராபுரி மட்டும் தன்னை ஷத்ரிய அரசாக அறிவித்துக்கொண்டு ஷத்ரிய முறையை கடைப்பிடிக்கிறது. மார்த்திகாவதியில் இன்னமும்கூட பெண்முறை அரசுரிமைதான். ஆகவேதான் அவர்கள் பெண்ணை தத்தெடுத்தார்கள்.”

அச்செய்திகள் அனேகமாக முந்தையநாள் இரவில்தான் கம்சனின் மனதுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் என வசுதேவன் உய்த்துக்கொண்டான். அது யாரால் செய்யப்பட்டதென்றும் அவனுக்குத் தெரிந்தது. பெருமூச்சுடன் “இதெல்லாம் நானறிந்தவையே” என்றான். “ஆம் அதை நானும் அறிவேன். ஒரு தெளிவுக்காக சொல்லிக்கொள்கிறேன்” என்றான் கம்சன். “இன்னமும் கூட யாதவர்குடிகளில் சடங்குகளுக்கு அன்னையரையே அரசிகளாக முன்னிறுத்துகிறார்கள். அவர்களின் வழியையே மரபுரிமைக்கு கணக்கிடுகிறார்கள்.”

“ஆம்” என்றபோது அவனை அறியாமலேயே வசுதேவன் குரலில் சலிப்பைக் காட்டிவிட்டான். கம்சன் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை. எழுச்சியுடன் உரத்த குரலில் “நன்றாக சிந்தித்துப்பாருங்கள் வசுதேவரே. என் தந்தைக்கு ஒரு தமக்கை இருந்தாள். அவள் பெயர் காளிகை. அவளுக்குத்தான் யாதவ முறைப்படி இவ்வரசுக்கு உரிமை. அவள் இளமையிலேயே மறைந்தபோது அவள் மைந்தன் அஜனுக்கு என் தங்கை ரஜதகீர்த்தியை மணம் புரிந்துகொடுத்தார் என் தந்தை…ஏன் தெரியுமல்லவா?”

வசுதேவன் தலையை அசைத்தான். கம்சனின் மனம் ஓடும் வழி அவனுக்குத் தெளிவாகிவிட்டது. “ஏனென்றால் என் தந்தை அறிந்திருந்தார். இவ்வரசு உண்மையில் அவரது மருகனான அஜனுக்குரியது. அஜன் அரசைக்கோரி யாதவர்களை திரட்டமுடியும். ஆகவேதான் அவனுக்கு என் தங்கையை மணம் முடித்துக்கொடுத்தார்.”

கம்சன் சொன்னான் “அஜன் சிறுவயதிலிருந்தே என் சிறியதந்தையின் வளர்ப்பில் உத்தரமதுராபுரியில் வாழ்கிறான். இளமையிலேயே அவனை நான் வெறுத்தேன். அவனுடைய கோழைத்தனம் எனக்குப்பிடிக்கவில்லை. வாழைபோல வெளுத்து குளிர்ந்த அவன் உடல் எனக்கு குமட்டலை உருவாக்கியது. அவனை இளவயதில் ஓடும்ரதத்தில் இருந்து நான் கீழே தள்ளிவிட்டேன். தேர்ச்சக்கரத்தில் விழுந்து அவன் இறப்பான் என எண்ணினேன். ஆனால் கால் முறிந்ததுடன் தப்பிவிட்டான். ஊனமுற்ற அவனை என் சிறிய தந்தை அழைத்துக்கொண்டு சென்றார். அவனுக்கு என் மேல் வெறுப்பு இருக்கும். இந்த அரசு முறைப்படி அவனுக்குரியது என்று அவனிடம் சொல்லப்பட்டிருக்கும்…ஐயமே இல்லை.”

“ஆனால் சென்ற ஏழு தலைமுறைக்கும் மேலாக மதுராபுரியின் முறைமைகள் எல்லாமே ஷத்ரியர்களுக்குரியவை. தந்தைமுறையில்தான் இங்கே அரசுரிமை கைமாறுகிறது” என்று வசுதேவன் சலிப்புடன் சொன்னான். கம்சனின் உடலசைவுகளை அவன் உள்ளம் முதல்முறையாக அகவிலக்குடன் பார்த்தது. கொழுத்த பெரிய உடல். தசையுருளை போன்று அசையும் கைகள். ஒவ்வொரு எண்ணம் உருவாகும்போதும் எழுந்தும் அமர்ந்தும், தொடைகளை வேகமாக ஆட்டியும், ஏளனத்துடன் வாயைக்கோணலாக்கி சிரித்தும், உதட்டோரங்களில் எச்சில் நுரைக்க அவன் பேசும் முறை.

“ஆம், ஆனால் இதுவரை மதுராபுரி யாதவர்களை நம்பி இல்லை. சுங்கச்செல்வத்தையும் கலிங்கப்படைகளையும் நம்பி இருந்தது. மகதத்துக்கு நாம் அளிக்கும் கப்பமே நம்மை நிலைநிறுத்திவந்தது. இதுவரை மதுராபுரிக்குள் உரிமைக்கான பூசலும் எழுந்ததில்லை. இன்று அப்படி அல்ல. இன்று நாம் யாதவகுலங்களால் சூழப்பட்டிருக்கிறோம். அவர்களின் விருப்பு நம் அரசியலை முடிவுசெய்யும் இடத்தில் இருக்கிறோம்.” கம்சன் மீண்டும் தொடையைத் தட்டியபடி உரக்கக் கூவினான். “யாதவமுறைப்படி இவ்வரசு எவருடையது? காளிகைக்கும் அஜனுக்கும் உரியது. அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி என் சிறியதந்தை அரசைக்கோரினால் நான் என்ன செய்யமுடியும்?”

வசுதேவன் பேசுவதற்குள் கம்சன் தொடர்ந்தான். “என் சிறியதந்தைக்கு ஏழு மகள்கள். தேவகி, சிருததேவி, சாந்திதேவி, உபதேவி, ஸ்ரீதேவி, தேவரக்ஷிதை, சகதேவி என்னும் ஏழு பெண்களையும் சப்தகன்னியர் என்று சூதர்கள் பாடிப்பாடி பாரதவர்ஷம் எங்கும் புகழ்பரப்பியிருக்கிறார்கள். தேவகியை மகதத்தின் பிருகத்ரதனுக்கு மனைவியாகக் கொடுக்க தேவகர் தூதனுப்பியிருக்கிறார். அந்தச் செய்தியை ஒற்றர்கள் கொண்டுவந்தனர். பிறபெண்களை வங்கனுக்கும் அங்கனுக்கும் கோசலனுக்கும் கேகயனுக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஏதேனும் இரண்டு மணம் நிகழ்ந்தால்கூட தேவகரின் அரசியல் விருப்பங்களை எவராலும் கட்டுப்படுத்த இயலாது.”

கம்சன் அந்தச்செய்திகளால் கவலைகொண்டிருப்பதாக அப்போது வசுதேவனுக்குத் தோன்றவில்லை. அச்செய்திகளை தன்னால் தொகுத்துப் புரிந்துகொண்டு முன்வைக்கமுடிவதைப்பற்றிய அக எழுச்சியே அவனிடமிருந்தது. சொல்வது வழியாக அவன் அவ்வெண்ணங்களை மேலும் தெளிவாக்கிக் கொள்கிறான் என்று பட்டது. அத்துடன் அத்தகைய ஓர் இக்கட்டு அவனுள் தெளிவில்லாத ஒரு உவகையை நிறைப்பதாகவும் தோன்றியது.

இக்கட்டுகள் மனிதர்களின் அறியாத ஆற்றல்களை வெளிக்கொண்டு வருகின்றன. அவ்வாற்றல்களை தங்களில் தாங்களே உணரும்போது அவர்கள் களிப்படைகிறார்கள். ஆகவேதான் மனிதர்கள் வீரச்செயல்களில் இறங்குகிறார்கள். இடுக்கண்களை விரும்புகிறார்கள். கம்சனின் உள்ளம் இந்த இக்கட்டில் அவனுடைய சூழ்ச்சித்திறனை கண்டுகொண்டிருக்கிறது. ஆனால் அதுமட்டும் அல்ல. அவனில் தெரிவது வேறொன்று.

VENMURASU_EPI_84
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“அத்துடன் இன்னொரு செய்தியும் உள்ளது” என்று கம்சன் சொன்னான். “தேவகர் தன் தம்பி சுதேவனுக்கு உங்கள் தங்கை பிருதையை மணமகளாகக் கோரியிருக்கிறார். குந்திபோஜனுக்கு தூது அனுப்பப்பட்டிருக்கிறது.” கம்சனின் சிறிய கண்கள் ஒளியுடன் இடுங்கின. “அதை உடனடியாக என் ஒற்றர்கள் என்னிடம் வந்து சொல்லிவிட்டார்கள்.” பிருதை என்ற சொல் காதில் விழுந்ததும் தன் உடலில் உருவான மிகச்சிறிய அசைவை அது நிகழ்ந்ததுமே உணர்ந்தான் வசுதேவன்.

அதைவெல்ல உருவாக்கிக் கொண்ட சலிப்புடன் “இளவரசே, இவையனைத்துமே பழைய செய்திகள். இவற்றை நான் நன்கறிவேன். மகள்களைப் பெற்ற அரசன் அவர்களுக்கு மணமகன் தேடுவதும் சரி இளவரசியர் இருக்கும் செய்தியறிந்து மகள்கொடைகேட்டு செய்தியனுப்புவதும் சரி ஒவ்வொருநாளும் இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பவை” என்றான். “நாம் ஐயங்களை உருவாக்கிக்கொண்டால் நம்மைச்சுற்றி வெறும் சதிகளை மட்டுமே காண்போம். அரசன் தேவையற்ற ஐயங்களை உருவாக்கலாகாது. அரசன் நம்பவேண்டும், அமைச்சன் ஐயப்படவேண்டும், அதுவே அரசமுறை என்கிறது சுக்ரதர்மம்.”

“நான் மூடன் அல்ல” என்றான் கம்சன். உரத்தகுரலில் “நான் அறிவேன்…இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பவற்றை நான் நன்றாகவே அறிவேன். தேவகரின் எண்ணம் இதுதான். அவர் குந்திபோஜரின் உறவையும் பிற யாதவர்களின் ஆதரவையும் நாடுகிறார். அவற்றைக்கொண்டு மதுராபுரியைக் கைப்பற்ற எண்ணுகிறார். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை” என்றான்.

அப்போது கம்சனின் விழிகளைப்பார்த்தபோது தன் நெஞ்சுக்குள் ஓர் அசைவை உணர்ந்தான் வசுதேவன். ஆலமரத்தை விதையாகக் காண்பதுபோல ஏதோ அங்கே தெரிந்தது. ஒரு பித்தின் விதையா அது? ஆம். அதுதான். ஆனால் மதுராபுரியின் அரசர்கள் அந்த ஐயத்தையே மஞ்சமாகக் கொண்டுதான் துயிலமுடியும். பன்னிரு தலைமுறைகளுக்கு முன்பு குங்குரர் தன் தமையன் விடூரதன் குலத்தை துரோகத்தால் அகற்றி அந்நகரைக் கைப்பற்றியதுதான் அவர்களில் எந்தக்குழந்தையும் அறியும் முதல் செய்தி. அதிலிருந்து அவர்களுக்கு விடுதலையே இருப்பதில்லை.

உக்ரசேனர் ஒவ்வொருநாளும் தேவகரை அஞ்சிக்கொண்டிருந்தார் என வசுதேவன் அறிந்திருந்தான். உத்தரமதுராபுரியைச் சுற்றி மாபெரும் உளவுவலை ஒன்றை அவர் அமைத்திருந்தார். அது அளித்த செய்திகளைத்தான் கம்சன் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மதியூழ்கை அறியாதவனுக்கு உளவுச்செய்திகளால் எப்பயனும் இல்லை. அவனுடைய அச்சங்களையும் ஐயங்களையும் அவை வளர்க்கும். அவனை மேலும் தனித்தவனாகவும் சமநிலையிழந்தவனாகவும் ஆற்றலற்றவனாகவும் ஆக்கும்.

“ஒரே வழிதான் உள்ளது” என்று கம்சன் சொன்னான். “நான் நேற்றே இதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். தந்தையின் உடல்நிலை இழியும்தோறும் என் திட்டங்கள் தெளிவடைந்தபடியே வந்தன.” வசுதேவன் “சொல்லுங்கள்” என்றான். கம்சன் “வசுதேவரே, மார்த்திகாவதியின் இளவரசியான பிருதை உங்கள் தங்கை. அவளை நான் மணம் செய்துகொண்டால் அனைத்தும் சீரடைந்துவிடும்” என்றான்.

பிறிதொரு தருணத்தில் என்றால் அவன் வந்துகொண்டிருக்கும் வழியை வசுதேவன் எளிதில் உய்த்துணர்ந்திருப்பான். அப்போது இருந்த அகக்குழைவில் பிருதை உத்தரமதுராபுரியில் இருப்பதை கம்சன் அறிந்துவிட்டானா என்ற துணுக்குறலையே அவன் அடைந்தான். உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமலிருப்பதற்காக தன்முன் பேசிக்கொண்டிருப்பவனின் முகத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் பார்வையை ஊன்றிக்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்வது வசுதேவனின் வழக்கம். விழிகளை கம்சனின் இடக்கன்னத்தில் இருந்த கரிய மச்சத்தைவிட்டு விலக்காமல் தலையை அசைத்தான்.

“சிந்தித்துப்பாருங்கள் வசுதேவரே… எல்லாமே முறைப்பட்டுவிடும். மார்த்திகாவதியின் பகைமை அகலும். விருஷ்ணிகளின் நூற்றெட்டுகுலங்களும் என்னை ஆதரிக்கும். விருஷ்ணிகளும் போஜர்களும் என்னை அரசனாக ஏற்பார்களென்றால் நான் எதற்காக அஞ்சவேண்டும்? சிறியதந்தையும் அவரது மூன்று மைந்தர்களும் என்னைத்தான் அஞ்சவேண்டும்…” அவன் கண்களில் மீண்டும் அந்த அனல் வந்து சென்றது. “அஞ்சியாகவேண்டுமே” என்று சொல்லி நகைத்தான்.

வசுதேவன் தன் சொற்களை அகத்தில் ஓடிய எண்ணங்களின் சிடுக்கில் இருந்து மெல்ல மீட்டு திரட்டிக்கொண்டான். மெல்ல கனைத்தபடி “ஆனால் நாம் மிஞ்சிச்செல்லவேண்டியதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது இளவரசே” என்றான். “உங்கள் சிறியதந்தையார் என்ன நினைக்கிறார் என்று நாம் இன்னும் அறியவில்லை. நமது ஐயத்தால் நாம் அவரை எதிரியாக்கிக் கொள்ளவேண்டியதில்லை. பொறுத்திருப்போம்…”

“பொறுத்திருந்தால் என் அரசை நான் இழப்பேன். நான் இன்று மாலைக்குள் மார்த்திகாவதியின் முடிவை அறிந்தாகவேண்டும். ஆகவேதான் நான் அதிகாலையிலேயே என் தூதனை மார்த்திகாவதிக்கு அனுப்பிவிட்டேன். அவன் இந்நேரம் குந்திபோஜனை சந்தித்திருப்பான்” என்றான் கம்சன். “உங்களிடம் ஒரு சொல் கேட்கவேண்டுமென எண்ணினேன். ஆனால் நீங்கள் பிற பணிகளில் ஈடுபட்டிருந்தீர்கள். மேலும் நீங்கள் இவ்வெண்ணத்தைக் கேட்டு உவகையை அடைவீர்கள் என்றும் நானறிவேன்” என்றான்.

வசுதேவன் சில கணங்கள் சிந்தித்துவிட்டு முடிவெடுத்து மெல்லியகுரலில் “இளவரசே, நான் தங்களிடம் சிலவற்றைச் சொல்லவேண்டும். தந்தை உடல்நலமில்லாமல் இருக்கையில் தங்கள் வரை அச்செய்தி வரவேண்டியதில்லை என எண்ணினேன்” என்றான். கம்சன் உரக்க “என்னிடம் எதையும் நீங்கள் மறைக்கவேண்டியதில்லை வசுதேவரே” என்றான்.

“பிருதை இங்குதான் இருக்கிறாள்” என்றான் வசுதேவன். “இங்கு என்றால்?” என கம்சன் திகைப்புடன் கேட்டான். “உத்தர மதுராபுரியில்.” சிலகணங்கள் இமையாமல் இருந்த கம்சன் பாய்ந்து எழுந்து “என்ன சொல்கிறீர்கள்? உத்தர மதுராபுரியிலா? அப்படியென்றால் தேவகர் மார்த்திகாவதியின் இளவரசியை சிறையெடுத்துக்கொண்டுவந்துவிட்டார் இல்லையா? தன் தம்பிக்கு அவளை மணமுடிக்கவிருக்கிறார். யாதவர்களின் பின்துணையை அடைந்து விட்டார். அடுத்ததாக அவர் என் நாட்டைக்கோரப்போகிறார்… வசுதேவரே, இனிமேலும் நாம் வெறுமே இருக்கமுடியாது” என்று கூவினான். “இப்போதே நம் படைகள் கிளம்பட்டும்…”

“மீண்டும் மிஞ்சிச் செல்கிறீர்கள் இளவரசே. பிருதை அங்கே இருப்பது தேவகருக்குத் தெரியாது” என்று வசுதேவன் சொன்னான். “அவளை நான் தேவகரின் முதல்மகளின் கன்னிமாடத்தில் சேர்த்திருக்கிறேன்.” கம்சனின் உய்த்துணரும் திறனின் எல்லை தாண்டிவிட்டது என்று வசுதேவன் புரிந்துகொண்டான். அவன் சற்றே திறந்த வாயுடன் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

வசுதேவன் விளக்கினான். கம்சன் மெல்ல காற்று பட்ட புதர்போல அசைவு கொண்டு தலையை அசைத்து “நான் ஒன்றுமட்டும் கேட்க விழைகிறேன் வசுதேவரே…. தேவகிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?” என்றான். “தாங்கள் உய்த்துணர்ந்ததுதான் இளவரசே” என்றான் வசுதேவன். கம்சன் அப்போதும் அதை உள்வாங்கிக்கொள்ளவில்லை. வசுதேவன் “இளவரசே, நான் தேவகரின் மகளை மணக்க விழைகிறேன். அவளும் அவ்வண்ணமே எண்ணுகிறாள். அந்த மணம் நிகழ்வது நம் அரசுக்கு மிகவும் நல்லது” என்றான்.

“எப்படி?” என்றான் கம்சன் தலையை சற்றே சரித்து. வசுதேவன் “இளவரசே, அவளை அங்கனுக்கோ கலிங்கனுக்கோ மகதனுக்கோ மணக்கொடை அளிக்கும் அவரது திட்டம் நிகழாதுபோகும். நான் தங்கள் அரசின் அமைச்சனாதலால் அவர் நமக்கு கட்டுப்பட்டாகவேண்டும். தங்கள் அரசின் அமைச்சனான நான் அவளை மணந்தபின்னர் அவள் இளையவர்களை மணக்க ஷத்ரியர்களும் எண்ண மாட்டார்கள்” என்றான்.

கம்சன் முகம் மலர்ந்தது. “ஆம். சிறந்த திட்டம். வசுதேவரே நீங்கள் என் தங்கையை மணக்கவேண்டும். நான் உங்களுடன் இருப்பேன். மதுராபுரியின் அனைத்துப்படைகளும் செல்வமும் உங்களைத் துணைக்கும்” என்றான். சிரித்தபடி தன் தொடையை அறைந்து “அத்துடன் என் தங்கையை நீங்கள் மணப்பதுபோல உங்கள் தங்கையை நானும் மணந்துகொள்வது நம்மிடையே ஆழ்ந்த உறவை உருவாக்கும்…அதன்பின் மதுராபுரியை எவரும் நெருங்கமுடியாது.”

“ஆனால் என் தங்கை பிருதைக்கு ஒரு மைந்தன் இருக்கிறான்” என்றான் வசுதேவன். கம்சன் உரத்த குரலில் “ஆம், அது சிறந்த செய்தி அல்லவா? யாதவர்களுக்கு மகவுடன் கூடிய பசுவைப்போல மங்கலமானது ஏதுள்ளது? அவனை நான் என் குருதியாக அறிவிக்கிறேன். அவன் என் மைந்தனாக இந்நாட்டை ஆளட்டும்” என்றான்.

வசுதேவன் “இளவரசே நம் குலத்தில் பெண்களின் முடிவே இறுதியானது. நான் பிருதையிடம் அவள் விருப்பமென்ன என்று வினவுகிறேன்” என்றான். “ஆம், அவளிடம் என் சிறப்புகளைச் சொல்லுங்கள். நான் அவளை மதுராபுரியின் அரசியாக்குவேன் என்றும் அவள் புதல்வன் இந்நகரை ஆள்வான் என்றும் சொல்லுங்கள். அத்துடன் உங்கள் நண்பனும் மைத்துனனும் நானே என்று சொல்லுங்கள். அவளால் மறுக்கவியலாது.”

வசுதேவன் “ஆம், நானும் அவ்வண்னமே எண்ணுகிறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்தான். அவனை வாயில் வரை வந்து வழியனுப்பிய கம்சன் “வசுதேவரே, பிருதை அங்கே உத்தரமதுராபுரியில் இருப்பது நல்லதல்ல. அவர்கள் எந்நேரமும் அறியக்கூடும். அவர்கள் அவள் மதிப்பை அறிவார்கள்” என்றான். “இன்று யாதவக்குடிகளிலேயே விலைமதிப்புள்ள பொருள் என்றால் அவள்தான்…”

“ஆம். நான் அவளிடம் பேசுகிறேன்” என்று சொல்லி வசுதேவன் கிளம்பினான். கம்சன் மேலும் சில அடி நடந்து வசுதேவனின் தோளைப்பற்றிக்கொண்டான். “நீங்கள் என்னுடன் இருக்கையில் எனக்கு அச்சமே இல்லை வசுதேவரே…” என்றான். அவன் கண்கள் இடுங்க மீண்டும் அந்த ஒளி வந்தது. “நாம் அந்த நாய்களுக்கு ஷத்ரிய வல்லமை என்றால் என்ன என்று கற்பிப்போம்…”

காலில் சிக்கியது கயிறல்ல பாம்புதான் என்று அறியும் கணம் போல வசுதேவனின் சித்தம் சிலிர்த்தது. கம்சனுக்குள் கொப்பளித்துக்கொண்டிருப்பது உவகைதான் என்று அவன் உணர்ந்தான். கொலைக்காகவும் வதைக்காகவும் அவன் உள்ளம் ஏங்குகிறது!

எத்தனை ஆழத்து உணர்ச்சி அது. அது எழுகையில் மற்ற அனைத்து மானுட உணர்வுகளும் மிகமிக அற்பமானவையாக ஆகிவிடுகின்றன. அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட எவரும் அதை முழுமையாக வென்றுவிடமுடியாது. குலஅறம் அரசஅறம் பேரறம் என்றெல்லாம் அதை கட்டிப்போடலாம். மதவேழத்துக்குச் சங்கிலியிடுவதுபோல. ஆனால் மீறும்போதே வேழம் தன்னை உணர்கிறது, முற்றிலும் வேழமாகிறது. “ஆம் இளவரசே” என்றபடி வசுதேவன் படியிறங்கினான்.

முந்தைய கட்டுரைமீண்டும் மலேசியா 2
அடுத்த கட்டுரைமீண்டும் மலேசியா 3