‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 33

பிருதை சைத்ரமாதம் விஷுவராசியில் குழந்தையைப் பெற்றாள். தேவகியின் கன்னிமாடத்தில் அவள் கருமுதிர்ந்து குழந்தைக்கு அன்னையானசெய்தி அரண்மனை மந்தணமாகவே இருந்தது. வசுதேவனின் கோரிக்கையை ஏற்று பிருதைக்கு கருநோக்கு மருத்துவம் செய்ய நான்கு மருத்துவச்சிகளை தேவகர் அனுப்பிவைத்தார். அந்நான்குபேரும் வந்த சில நாட்களிலேயே தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பின்னர் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர்கள் ஊர் திரும்பவில்லை என்று ஊரார் சொன்னதை ஒற்றர்கள் வந்து சொன்னபோது வசுதேவன் ஐயம்கொண்டான். அடுத்து வந்த மருத்துவச்சி வந்த அன்றே இரவில் தன் ஆடைகளை தோல்மூட்டையாகக்கட்டி எடுத்துக்கொண்டு கிளம்பியபோது ஒற்றர்கள் அவளைப் பிடித்து வசுதேவனிடம் கொண்டுவந்தனர்.

அந்த மருத்துவச்சி அழுதுகொண்டிருந்தாள். அவள் கண்களில் தெரிந்த அச்சம் வசுதேவனை குழப்பியது. அவளிடம் “அன்னையே, நீ அஞ்சவேண்டியதில்லை. நீ இளவரசியை விட்டுச்செல்வதற்கான காரணத்தை மட்டும் சொல்வாயாக” என்றான். அவள் கைகூப்பி “அந்தக்கரு விஷம் கொண்டது. அது மருத்துவச்சிக்கு உயிராபத்தை விளைவிக்கும்” என்றாள். “ஏன்? அதன் இலக்கணங்களைச் சொல்” என்றான் வசுதேவன்.

மருத்துவச்சி மீண்டும் கைகூப்பியபடி சொன்னாள். “அமைச்சரே, நான் இங்கே வரும் வழியிலேயே தீக்குறிகளைக் கண்டேன். என் இல்லம்விட்டு வெளியே வருகையில் காகம் ஒன்று கரைந்து என்னை விலக்கியது. மூன்று வௌவால்கள் பகலில் என் பாதையின் குறுக்கே பறந்து சென்றன. கன்னிமாடத்தில் நான் நுழைந்தபோது ஒருசேடி கொதிக்கும் நீரை தன் காலில் ஊற்றிக்கொண்டு கதறினாள். நான் கன்னிமாடத்துக்குள் நுழைந்த கணமே என்னை எவரோ பார்க்கும் உணர்வை அடைந்தேன். இமையாத வல்லமைகொண்ட விழிகள் அவை. இளவரசியின் அறைக்குள் செல்வதற்கு முன்னரே நான் அந்த வாசனையை அடையாளம் கண்டேன்.”

மருத்துவச்சி சொன்னாள். கருவின் வாசனை என்று பொதுவாக பிறர் சொன்னாலும் மருத்துவச்சிகளுக்கு அந்த வாசனையின் வேறுபாடுகள் தெரியும். குருதியின் உப்புவீச்சம் இருந்தாலும் ஒவ்வொன்றிலும் கருவின் இயல்புக்கேற்ப வெவ்வேறு வாசனைகள் கலந்திருக்கும். புதிய பறவைமுட்டைகளின் வெண்கருவின் வாசனையும், மூன்றாம்நாள் காயத்தின் சீழ்வாசனையும் கலந்திருந்தால் அது இயல்பான கரு என்போம். புளித்த பசும்பாலின் வாசனை வருமென்றால் அன்னையின் உடலில் பித்தம் ஏறியிருக்கிறதென்று பொருள். மட்கிய தோலின் வாசனை வருமென்றால் அன்னையில் வாதம் ஏறியிருக்கிறது. அழுகிய இறைச்சியின் மெல்லிய வாசனை வருமென்றால் அவளில் கபம் ஏறியிருக்கிறது.

ஆனால் நானறிந்த வாசனையே வேறு. அது என்ன வாசனை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அச்சத்தில் நிலையழிந்து போயிருந்தேன். வந்த கணம் முதல் அக்கன்னிமாடத்தின் அனைத்து அறைகளையும் சுற்றிச்சுற்றிவந்து நுணுகிப்பார்த்தேன். அவ்வாசனை அவள் அறையில் மட்டுமே நிறைந்திருந்தது. அந்த வாசனையை நான் நன்கறிந்திருந்தேன். ஆனால் அதை என்னிடமே சொல்ல என் அகம் அஞ்சியது.

இளவரசியின் கைகளைப்பற்றி ஆய்வெடுத்தேன். அவள் நாடி ரதசாலைப்புரவி போல சீரான நடையில் சென்றது. அவள் குருதி வசந்தகால நீரோடைகள் போல இனிய ஒலிகளுடன் ஒலித்தது. திரைச்சீலைகளுடன் விளையாடும் தென்றல் போல மூச்சு அவள் நுரையீரலில் ஆடியது. அவளுடைய வயிற்றில் ஆகவனீய நெருப்பு போல சீராக பசி எரிந்தது. அவள் சித்தத்தில் மழைத்துளிகள் சொட்டும் தாளத்தில் காலம் நிகழ்ந்தது. அவளுடைய இதயத்தில் உயிர் கருவறைச்சுடர் போல அசையாமல் ஒளிவிட்டது.

அப்படியென்றால் தாமரைமொட்டுக்குள் இருக்கும் வாசனை அவள் வாயில் வரவேண்டும். அவள் கண்கள் செவ்வரி ஓடும் கங்கையின் சாளக்கிராமம் போலிருக்கவேண்டும். அவளுடைய உள்ளங்கைகள் அல்லிபோல வெளுத்திருக்கவேண்டும். அவள் கழுத்து பனம்பாளைபோல மென்மையான வரிகளுடன் இருக்கவேண்டும். அவள் வயிறு பீதர்களின் அழகிய வெண்களிமண் பானைபோல சீரான உருண்டையாக இருக்கவேண்டும். அவள் கனவில் நீரோடைகளும் மேகங்களும் மலர்களும் வரவேண்டும்.

ஆனால் அவையனைத்துமே நேர் மாறாக இருந்தன. அவள் கண்களின் வெண்பரப்பில் செண்பகம் போல நீலவரிகள் ஓடின. அவளுடைய உள்ளங்கைகள் ஊமத்தை மலரிதழ்கள் போல ஊதாநிறம் கலந்த செவ்வெண்ணிறம் கொண்டிருந்தன. அவள் கழுத்தில் செம்புக்கலங்களில் களிம்புத்தீற்றல் போல பச்சை படர்ந்திருந்தது. அவள் வயிறு கணம்தோறும் உருமாறிக்கொண்டிருந்தது. விளையாடும் முயல்களுக்குமேல் பட்டுத்துணியைப்போட்டு மூடியது போல அது அசைந்தது. நான் அவள் வாயை முகர்ந்தபோது அங்கு நான் வந்ததுமுதலே அறிந்த அந்த வாசனையை உணர்ந்தேன். அவள் கருவறை வாயிலிலும் அவ்வாசனையே திகழும்.

நான் துயிலவேயில்லை. எண்ணங்களை ஓட்டி அங்கே நானறிந்தவை என்ன என்று ஆராய்ந்தேன். ஒரு கணத்தில் என் உடல் அதிர எழுந்து அமர்ந்துவிட்டேன். அவ்வறையில் அவளுடன் நானிருக்கையில் என்னை எவரோ கூர்ந்து நோக்கியபடி உடனிருக்கும் உணர்வை என் உடலும் சித்தமும் அறிந்தது. என்னை அந்த தேவன் நோக்கிக்கொண்டிருந்தான். என் ஒவ்வொரு அசைவையும் அவன் கணக்கிட்டுக்கொண்டிருந்தான்.

மெல்ல எழுந்து மீண்டும் இளவரசியின் அறைக்குள் சென்றேன். இளவரசியின் அறைக்கு வெளியே ஏவலுக்கிருந்த சேடி துயின்று சரிந்திருந்தாள். அறைக்குள் மஞ்சத்தில் கிடந்த இளவரசியின் துயிலின் ஓசை கேட்டது. அமைச்சரே, துயிலோசையிலே கருவின் இலக்கணம் உள்ளது. சத்வகர்ப்பம் கொண்டவர்கள் பசுபோலவும் மூங்கில்காற்று போலவும் மூச்சுவிடுவார்கள். ரஜோகர்ப்பம் கொண்டவர்கள் குதிரை போலவும் நீரோடுவது போலவும் மூச்சொலிப்பார்கள். தமோ கர்ப்பம் கொண்டவர்கள் யானைபோலவும் காட்டுத் தீ எரிவதுபோலவும் ஒலிப்பார்கள். ஆனால் இளவரசியின் மூச்சு நாகத்தின் சீறல் என ஒலித்தது.

நான் அந்த அறைக்குள் சென்றபோது அங்கே இன்னொருவர் இருப்பதை என் உடல்சருமத்தால் கண்டேன். இரு கணங்களுக்குப்பின்னரே என் கண்கள் அதைக் கண்டன. அறைமூலையில் என் இடையளவுக்கு பத்தி தூக்கி ஒரு ராஜநாகம் நின்றிருந்தது. அதன் கண்களில் அறையில் எரிந்த சுடர் சிறுதுளியாகத் தெரிந்தது. நான் அஞ்சி மெய்சிலிர்த்து நின்றுவிட்டேன். கைகளைக் கூப்பியபடி காலெடுத்து பின்னால் வைத்து மெதுவாக வெளியே வந்து என் அறைக்கு ஓடிச்சென்று என் ஆடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அமைச்சரே, இளவரசியின் கருவில் இருந்த வாசனையும் நாகங்களின் வாசனையே. நாகமுட்டைகள் விரியும்போது வரும் வாசனை அது. புதுமழை பெய்த பாலைமண்ணின் வாசனையும் எண்ணையில் வேகும் அப்பத்தின் வாசனையும் கலந்திருக்கும். அவள் கருவில் இருப்பது நாகங்களின் அரசனான குழந்தை. அவனைக் காக்கவே ராஜநாகம் அவ்வறைக்குள் குடியிருக்கிறது. அவள் கருவை எடுக்கையில் சற்றேனும் பிழை நிகழ்ந்தால் மருத்துவச்சி உயிர்துறப்பாள் என்றாள் மருத்துவச்சி.

“அன்னையின் உயிருக்கு இடுக்கண் உண்டா?” என்றான் வசுதேவன். மருத்துவச்சி தயங்கியபின் “இவ்வகை கருக்களை நான் நூலிலேயே கற்றிருக்கிறேன். குழந்தை வாழும், அன்னையை மீட்கவே முடியாது. அவளது உயிரை உண்டுதான் அது வெளியே வரும்” என்றாள் மருத்துவச்சி. வசுதேவன் அவளுக்குப் பரிசில் கொடுத்து அச்செய்தியை அரசமந்தணமாகவே காக்கவேண்டுமென்று ஆணையிட்டு அனுப்பினான்.

மருத்துவர் கூற்றின்படி வசுதேவன் தன் தூதனை அனுப்பி கங்கையின் கரையில் வாழ்ந்த நாகர்குடிகளில் இருந்து முதுநாகினியை வரவழைத்து அவளிடம் பிருதையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். ஆறுமாதக் கருவுடன் அவளை மறுமுறை பார்த்தபோது வசுதேவன் திகைத்துவிட்டான். அவள் உடலெங்கும் பச்சைபடர்ந்து தொன்மையான செப்புச்சிலை போலிருந்தாள். வசுதேவன் அவளருகே சென்று “பிருதை, நீ நலமாக இருக்கிறாயா?” என்றான். “ஆம்…” என அவள் சொன்னாள். “நான் நாகங்களுடன் எங்கோ வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது…எப்போதாவதுதான் இந்த அரண்மனைக் கன்னிமாடத்தில் நானிருப்பதை உணர்கிறேன்” என்றாள்.

அவளுடைய பேச்சும் புன்னகையும் எல்லாம் பித்திகளுடையது போலிருக்கின்றன என்று தேவகி சொன்னாள். பொருளாக மாறாத சொற்களையே அவள் பேசினாள். விண்ணில் பறக்கும் நீர்களைப் பற்றியும் மண்ணுக்கு அடியில் எரியும் நெருப்பைப்பற்றியும் நாகங்கள் புல்நுனிகளாக நெளியும் பெரும்புல்வெளிகளைப்பற்றியும் சொன்னாள். அவள் சொல்வனவற்றை நாகினி மட்டுமே புரிந்துகொண்டாள். நாகினியும் அவளும் ஒருவரை ஒருவர் கண்ணுடன்கண் நோக்கியபடி பகலெல்லாம் அமர்ந்திருப்பதைக் கண்டு தான் திகைத்ததாக தேவகி சொன்னாள்.

“அவள் உடல் நீலமாகிவிட்டது. நகங்கள் நீலத்துத்தம்போல ஒளிவிடுகின்றன” என்றாள் தேவகி. “அவளுடைய குருதியில் நீலம் கலந்திருப்பதாக சேடிகள் சொல்கிறார்கள். துவைத்து காயப்போடப்பட்ட அவளுடைய மேலாடை ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதை எடுத்தபோது உள்ளே மூன்று நாகப்பிஞ்சுகள் சுருண்டு கிடப்பதைக் கண்டு சேடிகள் அலறினர்.” வசுதேவனின் கைகளைப்பற்றிக்கொண்டு அவள் சொன்னாள் “தமக்கை இந்தக் கருவை ஈன்று உயிர்தரிப்பாளென நான் நினைக்கவில்லை.”

கொடிமண்டபத்தில் அவளுடன் இருந்த வசுதேவன் பெருமூச்சுவிட்டான். “ஆம் நானும் அவ்வண்ணமே அஞ்சுகிறேன். ஆனால் நாகினி அவளை உயிருடன் மீட்டு எனக்களிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறாள்” என்றான். “அவளே இவள் உயிரைக்கவர்ந்து சென்றுவிடுவாளென அஞ்சுகிறேன். அவளுடைய நீலமணி விழிகளை என்னால் ஏறிட்டு நோக்கவே இயலவில்லை. அவள் மானுடப்பெண்தானா என்றே ஐயம் கொள்கிறேன் .”

VENMURASU_EPI_83_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

கரு முதிரமுதிர பிருதை தன் குழந்தையைப்பற்றியே பேசத்தொடங்கினாள். நீலமோடிய விழிகளை விழித்து நீலம்பரவிய உதடுகள் துடிக்க அவள் அவன் சூரியனின் மைந்தன் என்றாள். நான் தாமரை, சூரியனைக் கண்டதும் மலர்ந்தேன். அவன் என் புல்லிவட்டத்தில் வந்து அமர்ந்துகொண்டான். இளஞ்சூரியனின் வெம்மையை நான் அறிகிறேன். இந்த பாரதவர்ஷத்தின் அதிபனை நான் கருவுற்றிருக்கிறேன். முத்து கருக்கொண்ட சிப்பியின் வலியை நான் அறிகிறேன். அனலை துப்பப்போகும் எரிமலை என நான் புகைந்து விம்மிக்கொண்டிருக்கிறேன் என்று அவள் சொன்னாள்.

பத்துமாதம் தாண்டியும் கரு வெளியே வரவில்லை. “அது ராஜஸகுணம் நிறைந்த தேவபீஜம். வளர்ச்சி முழுமையடைந்த பின்னரே கண்விழிக்கும்” என்று நாகினி சொன்னாள். தேவகி நாகினியிடம் கவலையுடன் “இன்னொரு மருத்துவரை அழைத்து கேட்கலாமா?” என்றாள். “தேவையில்லை. இந்தக்குழந்தை பன்னிரண்டு மாதங்கள் கருவில் இருக்கும். வரும் சித்திரை மாதம் விஷுவ ராசியில் இவன் கருவுற்று முந்நூற்றி அறுபத்தாறுநாட்கள் முழுமையடையும். அன்றே இவன் பிறப்பான்” என்றாள் நாகினி.

நாகபுராணங்களின்படி அனைத்து தேவர்களுக்கும் நாகங்கள் பிறந்தன. வருணனுக்கு கருணைகொண்ட நீர்ப்பாம்புகளும், அக்னிக்கு எரிதழல்போன்ற கோதுமைநாகங்களும், இந்திரனுக்கு பல்கிப்பெருகும் கருநாகங்களும், வாயுவுக்கு வல்லமைகொண்ட மலைப்பாம்புகளும் பிறந்தன. யமனுக்கு காத்துக்கிடக்கும் கட்டு விரியன்கள் பிறந்தன. விருஷ்டி தேவிக்கு பச்சைப்பாம்புகள் பிறந்தன. பூமாதேவிக்கு மண்ணுள்ளிப்பாம்புகள் பிறந்தன. விண்ணகதேவர்களின் அரசனான சூரியனுக்குப் பிறந்தது ராஜநாகம்.

சூரியன் பிறதேவர்களின் ஆற்றல்களை எல்லாம் தனக்கென எடுத்துக்கொள்பவன். வருணனின் கடல்களை அவன் உண்கிறான். அக்னியின் வெந்நெருப்பை தன் தழல்களாக்கிக் கொள்கிறான். இந்திரனின் மேகங்களை தன் சாமரங்களாகக் கொண்டிருக்கிறான். வாயுவின் ஆற்றலை தன் விளையாட்டுக்கருவியாக கையாள்கிறான். பூமியில் தன் கருவைப் பொழிந்து வளர்க்கிறான். சூரியனின் மைந்தனான ராஜநாகமும் தனக்கு எந்த ஆற்றல் தேவையோ அந்தப் பாம்பைப் பிடித்து உண்கிறது. ஆகவே அதை நாகசூரியன் என்று வழிபடுகின்றனர் நாகர்கள் என்றாள் நாகினி.

பிறக்கவிருக்கும் சூரியனின் மைந்தனுக்காக நாகங்களின் அரசன் காவலிருக்கிறான். என்றும் சூரியமைந்தனின் பின்னால் நாகங்களின் காவல் இருந்துகொண்டே இருக்கும். அவன் கண்களில் கூர்மையாகவும் அவன் கைகளில் விரைவாகவும் அவன் நாவில் விஷமாகவும் அவை திகழும். போர்களில் அவன் இடக்கையில் வில்லாகவும் வலக்கையில் அம்பாகவும் அவை இருக்கும். நாகபாசன் என்றே அவன் அழைக்கப்படுவான் என்று நாகினி குறியுரைசெய்தாள்.

அவள் சொன்னதைப்போலவே பன்னிரண்டுமாதங்கள் நிறைந்தபின் சித்திரை மாதம் வளர்பிறை முதல்நாள் மகம் விண்ணொளிநாளில் அதிகாலை முதல்கதிர் எழும் நேரத்தில் பிருதை மைந்தனைப்பெற்றாள். முந்தையநாள் மாலையே பிருதைக்கு கருவலி கண்டது. அவள் தன் வயிற்றுக்குள் நெருப்புத்தழல்கள் கொந்தளிப்பதாக உணர்ந்தாள். வேல்கள் தன் தசைகளைக் கிழிப்பதையும் பாறைகள் ஒன்றுடன் ஒன்று முட்டி உரசிக்கொள்வதையும் அறிந்தாள். வலி தாளாமல் அவள் கைகளால் மஞ்சத்தை அறைந்துகொண்டு கழுத்துநரம்புகள் புடைக்க வீரிட்டலறினாள். அவளுடைய கண்ணீர் தோள்களிலும் முலைகளிலும் சொட்டியது.

இரவெல்லாம் அவளுடைய அலறல் கன்னிமாடத்தை நிறைத்திருந்தது. அவள் இறப்பது உறுதி என எண்ணிய அரண்மனை மகளிர் அதை இறப்பின் ஓலமென்றே எண்ணினர். ஆகவே அவள் அழுகை நின்றபோது அவள் இறந்துவிட்டாளென எண்ணி வாய்பொத்தி கண்ணீர் விட்டனர். குழந்தையின் அழுகையும் ஒலிக்கவில்லை. தேவகி அழுதபடி ஈற்றறைக்கு வெளியே நிலத்தில் அமர்ந்துவிட்டாள்.

முதுநாகினி மட்டுமே ஈற்றறைக்குள் இருந்தாள். கரியநிறமும் சுருள்குழலும் கொண்ட குழந்தை இரண்டு முழநீளமிருந்தது. அதை நாகினியே கையில் எடுத்து பிருதைக்குக் காட்டினாள். வலியால் சித்தமழிந்து கிடந்த பிருதை மயக்கு நிறைந்த விழிகளால் குழந்தையை நோக்கி மெல்லிய குரலில் “ஏன் இவ்வளவு நீளமாக இருக்கிறான்?” என்று மட்டும் கேட்டாள். அவள்மேல் குளிர்ந்த நீல நீரலைகள் பரவிச்செல்வதாக உணர்ந்தாள். அதில் மூழ்கி மூழ்கி தன்னை இழந்தாள்.

குழந்தை அழவில்லை. ஆனால் நெய்யில் எரியும் தழல்போல உயிர்த்துடிப்புடன் நெளிந்தது. தன் சிவந்த சிறிய கைகளை இறுகப்பற்றி ஆட்டிக்கொண்டு கருவிழிகளை விழித்து உதடுகளைக் குவித்து அவளைப்பார்த்தது. நாகினி அந்தக் குழந்தையை கீழே தாழ்த்தியபோது தரையில் அவளுடைய இடையளவு உயரத்துக்கு பத்தி விரித்து நின்றிருந்த ராஜநாகம் தெரிந்தது என்றும் அவள் குழந்தையை அதற்குக் காட்டினாள் என்றும் ஒளிந்து நோக்கிய தாதி சொன்னாள். நாகம் மும்முறை நிலத்தைக் கொத்தி ஆணையிட்டபின் திரும்பி எண்ணை ஓடை போல வழிந்து மறைந்தது என்றாள்.

தன் முலையுண்டுகொண்டிருந்த குழந்தையை பிருதை உணரவேயில்லை. அவள் ஈன்றதன் சோர்வில் மூன்றுநாட்கள் துயின்றபடியே இருந்தாள். அவள் உடலில் இருந்த நீலத்தை முழுக்க குழந்தை உறிஞ்சி உண்டது என்றனர் சேடிகள். அவன் முலையுண்ணும்தோறும் பிருதை வெளுத்து உயிர்க்குருதியின் நிறத்தை அடைந்தாள். நாகினி அவளுடைய விழுத்துணிகளை கொண்டுசென்று நாகதிசையில் எரித்துவிடவேண்டுமென ஆணையிட்டிருந்தாள். அந்தத் துணிகளுடன் எரிக்கச்சென்ற சேடியர் புதர்களின் அடியில் நீரோடைகள் ஓடிவரும் ஒலியைக் கேட்டனர். துணிகள் எரியும்போது புதர்களின் அடியிலும் இலைகளிலும் மரங்கள்மேலும் நீரோடைகளிலும் அனைத்து குலங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான பாம்புகள் தலைதூக்கி அவ்வெரிதலை நோக்கியிருக்கக் கண்டதாகச் சொன்னார்கள்.

குழந்தை பிறந்த செய்தியை வசுதேவனுக்கு தூதர்கள் அறிவித்தனர். வசுதேவன் அஷ்டவிருட்சம் என்னும் கிராமத்தில் இருந்த சதானீகர் என்ற மூத்த நிமித்திகரை தூதர்களை அனுப்பி வரவழைத்தான். அரண்மனைக்கு வந்த சதானீகரை தன் அறைக்குள் அமரச்செய்து கதவை மூடிவிட்டு குழந்தை பிறந்த வேளையையும் குழந்தையின் உடலில் இருந்து எடுத்த மூன்று இழை முடியையும் நிமித்திகரிடம் அளித்தான். பல்லாயிரம் பிறப்புநிமித்தங்களைக் கண்டு சலித்த முதியவிழிகளுடன் வேளை குறிக்கப்பட்ட ஓலையை நோக்கிய சதானீகர் திடுக்கிட்டு எழுந்தார்.

“இந்த வேளையா? இதுவேதானா?” என்றார். “ஆம்… இதுதான்” என்றான் வசுதேவன். சதானீகர் திகைப்புடன் அந்த ஓலையை மீண்டும் மீண்டும் பார்த்தார். பிறகு நடுங்கும் கைகளுடன் அந்த முடிச்சுருளை எடுத்து தன் கண்ணருகே கொண்டுசென்று நோக்கினார். அதை தன் நெஞ்சுடன் சேர்த்துவைத்து கண்களை மூடி நடுங்கும் உதடுகளும் அதிரும் இமைகளுமாக சிலகணங்கள் அமர்ந்திருந்தார். விழித்து பரவசத்துடன் எழுந்துகொண்டு அகவிரைவு கூடிய சொற்களில் சொன்னார்.

”அமைச்சரே, இவன் கதிரவன்மைந்தன். பரிதிதெய்வம் சித்திரை விஷுவராசியில் அதிஉச்சத்தில் இருக்கும்போது மிகச்சரியாக புலரிக்கணத்தில் பிறந்திருக்கிறான்… இப்படி ஒரு பிறப்பு அரிதிலும் அரிதென்று நிமித்திகநூல் சொல்கிறது. நூல்வகுத்தபடி நோக்கினால் இவனை சூரியனின் நேர்மைந்தன் என்றே சொல்லவேண்டும்… கதிரோன்ஒளி இவனிடம் இருக்கும்… வெய்யோன்மறம் இவன் தோள்களில் இருக்கும்… இவன் மாமனிதன்… வரலாறே இவனைப்பற்றி பேசும்.. யாதவரே, மானுடகுலங்கள் பிறந்து பிறந்து அழியும்…பேரரசுகள் துகள்களாக தூசாகி மறையும். நாம் காணும் இந்த மலைகள்கூட ஒருவேளை கரைந்து காற்றாகலாம்…இவன் புகழ் அழியாமல் நிற்கும்…தலைமுறை தலைமுறையாகப் பிறந்துவரும் இந்த மண்ணின் குடிகளெல்லாம் இவனை அறிந்திருப்பார்கள். இவனையறியாதோர் இனி பாரதவர்ஷத்தில் வாழப்போவதில்லை.”

வசுதேவன் அதைக்கேட்டு திகைப்பையும் பின்பு ஆழ்ந்த அச்சத்தையும்தான் அடைந்தான். “சதானீகரே, தாங்கள் சொல்வது மிகையாக உள்ளது. இவன் பிறந்திருப்பது எளிய யாதவகுலத்தில். எங்கள் குலமோ இன்று மல்லிடும் மதயானைகள் நடுவே வாழும் மான்கூட்டம் போல அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது” என்றான்.

சதானீகர் “அமைச்சரே, நான் சொல்வதை விளங்கிக்கொள்ளுங்கள். நிமித்திக நூல்களின்படி சூரியன் புஷ்கரத்தீவுக்கு நடுவே வானத்தில் ஏழுவண்ணமுள்ள ஒளியாலான குதிரைகள் இழுக்க ரதமோட்டிச் செல்கிறான். அப்போது இந்த பூமியின் மூன்றில் ஒருபங்கை அவன் ஒளியால் நிறைக்கிறான். மூன்றில் ஒருபங்கில் அந்தியும் காலையும் நிகழ்கிறது. மூன்றில் ஒருபங்கு இருளில் இருக்கிறது. இந்த மூன்று பங்கும் ஒருபோதும் சமமாக இருப்பதில்லை…” என்றார்.

தன் கையிலிருந்த வெண்சுண்ணக்கட்டியால் தரையில் கோடிழுத்து சதானீகர் விளக்கினார் “உத்தராயணத்தில் வடக்குப்பகுதியில் பகல் அதிகம். தட்சிணாயணத்தில் தெற்குப்பகுதியில் பகல் அதிகம். நடுவே விஷுவராசியில் சூரியன் வரும்போது மட்டும்தான் இவை மூன்றும் சரிசமமாக இருக்கின்றன… கணக்குப்படி பார்த்தால் அந்தச் சமநிலை அரைக்கால் கணம்தான் நீடிக்கும். நிகழ்ந்ததுமே அச்சமநிலை தவற ஆரம்பித்துவிடும். கதிரோன் தன் நிலைகோட்டில் இருந்து விலகிவிடுவான்… அந்தச் சரியான கணத்தில் இவன் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது…”

கைகளை விரித்து கண்கள் வியப்பில் உறைந்திருக்க உரத்தகுரலில் சதானீகர் கூவினார் “இது அற்புதம்… நினைக்கமுடியாத அற்புதம்… இவன் சூரியனின் நெஞ்சுக்குரிய மைந்தன்… ஐயமே இல்லை.”

முந்தைய கட்டுரைமீண்டும் மலேசியா 1
அடுத்த கட்டுரைமீண்டும் மலேசியா 2