இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்:இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்து தத்துவ மரபு ஒரு விவாதம் கட்டுரை கண்டேன். உயர்தர அங்கதம் அதில் நிகழ்ந்திருக்கிறது. தமிழில் இந்தவகையான அங்கதம் மிக மிகக் குறைவு. ஆழமான படிப்பும் அதைச் சார்ந்த அசலான சிந்தனையுமே இத்தகைய அங்கதத்தை உருவாக்க முடியும். உதாரணமாக, ‘பிரம்ம ஸ்வரூபன் அக்கார அடிசிலிலே நெய்போல பரவியிருக்கிறான்’ என்ற அய்யங்காரின் வரிக்கு சைவப்பிள்ளை ”ஏன் புளியோதரையிலே புளீண்ணு சொல்றது”என்று பதில் சொல்வது. அய்யங்கார் வாழ்க்கைமுறை தெரிந்த ஒருவருக்கு கேட்டதுமே சிரிப்புவரக்கூடிய பகுதி இது. ஆனால் யோசித்தால் அது ஓர் உண்மையான தத்துவ விவாதம் என்பதும் தெரியும். .இனித்தால் மட்டும்தான் அது பிரம்மமா? கசந்தாலும் புளித்தாலும் பிரம்மம் அல்லவா? ‘காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானே நீ கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே’ என்ற பாரதியின் வரிகளுடன் இவ்வரியும் இணைகிறது. அங்கதம் அதன் உச்சநிலையில் உயரிய தத்துவமாகவும் அமைய வேண்டும். அதற்கு சிறந்த உதாரணம் இக்கட்டுரை. வாழ்த்துக்கள்.

ஸ்ரீனிவாசன் மோகன்.

அன்புள்ள மோகன்

உங்கள் கடிதம் உற்சாகமளித்தது. என் கட்டுரையில் அந்த தத்துவப்பகுதிகள் அனைத்தும் கிண்டலாக இருந்தாலும் சரியான உதாரணங்களுடன் தான் இருக்கின்றன என்று எண்ணியிருந்தேன். உங்கள் கடிதம் அதை எனக்கே நிரூபித்தது. ‘எதைப்பற்றி நாம் சிரிக்கிறோமோ அதை நாம் முழுமையாக அறிகிறோம்’ நடராஜ குருவின் சொற்கள்.

நன்றி

ஜெயமோகன்

****

அன்புள்ள ஜெயமோகன். 

அருமையான பதிவு. படித்தேன், சிரித்தேன். ரசித்தேன்.  

மேலைத் தத்துவ விவாதம் இன்னும் நன்றாக இருக்கிறது..  .

இதே பாணியில், கணித, அறிவியல் உயர்கல்வி மாணவர்களுக்கிடையில் “How to catch a lion in the sahara desert” ரொம்ப பிரபலம்…

http://www.gksoft.com/a/fun/catch-lion.html 

இதை நீங்கள் முன்பு படித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்..   

உங்கள் பகடி, இதை விட அழகாக, தொடர்ச்சியாக, ஒரு கதை போல, நேர்த்தியாக இருக்கிறது.

அன்புடன்,

ஜடாயு

அன்புள்ள ஜடாயு

தங்கள் கடிதத்துக்கு நன்றி- சற்று ஆச்சரியம். பொதுவாக அத்வைதிகள் அல்லாமல் எவருக்குமே தான் நினைப்பதை தானே நோக்கிச் சிரிக்கும் மனநிலை வராதென்பது என் எண்ணம். அவ்வப்போது இதைப்போல சில இனிய ஏமாற்றங்கள்
ஜெ 

அன்புள்ள் ஜெயமோகன்,

நன்றி.  அப்போ உங்கள் கையால் நானும் அத்வைதி பட்டம் வாங்கி விட்டேன் :))

// அத்வைதிகள் அல்லாமல் எவருக்குமே தான் நினைப்பதை தானே நோக்கிச் சிரிக்கும் மனநிலை //

ஆமாம்.. இதைப் படித்ததும் தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம் ஒன்று உடனே நினைவுக்கு வந்தது..  தானே தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டதாகக் கூறுகிறார் ஆழ்வார், அதுவும் வெட்கத்தோடு!

“கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன்; நாடிக்கண்டேன்.
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்துஅறிதி என்று
வெள்கினேன்; வெள்கலோடும் விலாவறச் சிரித்திட்டேனே!”

****

முந்தைய மடலில் தந்த பாடல் திருநாவுக்கரசருடையது..    ஆழ்வார் பாசுரம் இதோ…  ஒருவரை அப்படியே பார்த்து இன்னொருவர் எழுதியது போல இருக்கிறது.

உள்ளத்தே யுறையும் மாலை
  உள்ளுவா னுணர்வொன் றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
  தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
  உடனிருந் தறிதி யென்று
வெள்கிப்போ யென்னுள் ளேநான்
  விலவறச் சிரித்திட்டேனே!


அன்புடன்,

ஜடாயு

இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்

முந்தைய கட்டுரைவார்த்தை
அடுத்த கட்டுரைஇருத்தலின் சமநிலை:ஓர் உரையாடல்