பகுதி ஐந்து : முதல்மழை
[ 4 ]
அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட மஞ்சத்திலும் வெய்யநீர் நனைவு இருந்தது. விடாயறிந்து எழுந்து சென்று மண்ணாலான நீர்க்குடுவையில் இருந்து நீரை மொண்டு குடித்தாள். கதவு மெல்ல ஓசையிட்டது. “வா” என்றாள். சியாமை உள்ளே வந்தாள்.
“வெப்பம் திடீரென்று அதிகரித்ததுபோல இருந்தது” என்றாள் சத்யவதி. “நான் வெயில் தகிக்கும் பெரும்பாலை ஒன்றில் நின்றிருப்பதுபோல கனவுகண்டேன்.” சியாமை “படுத்துக்கொள்ளுங்கள் அரசி… நான் விசிறுகிறேன்” என்றபடி அருகே இருந்த மயிலிறகு விசிறியை எடுத்துக்கொண்டாள்.
சத்யவதி படுத்துக்கொண்டாள். கீழே காவல்வீரர்கள் இரும்புக்குறடுகள் ஒலிக்க நடைபழகும் ஒலியும் அவ்வப்போது அவர்களின் ஆயுதங்களின் உலோக ஒலிகளும் கேட்டுக்கொண்டிருந்தன. சியாமை மெல்ல விசிறிய காற்று அவ்வளவு குளுமையாக இருந்தமைக்கு உடல் நன்றாக வியர்த்திருந்ததுதான் காரணம் என்று சத்யவதி உணர்ந்தாள். உள்ளே சென்ற நீர் குடல்களை குளிரச்செய்தது. நன்றாக உடலை விரித்துக்கொண்டபடி பெருமூச்சு விட்டாள்.
இரவில் விழிப்புவந்தால் மீண்டும் துயில்வரும் காலத்தை அவள் கடந்திருந்தாள். கண்களை மூடியிருக்கையில் இமைக்குள் விழிகள் ஓடிக்கொண்டே இருந்தன. கண்களைத் திறக்காமலேயே “அவர்கள் நேற்று அதிகாலையிலேயே சுதுத்ரியைக் கடந்துவிட்டார்கள்” என்றாள். “ஆம்… இரவெல்லாம் பயணம் செய்கிறார்கள். அனேகமாக இன்றுமாலையில் திரஸத்வதியையும் கடந்துவந்திருப்பார்கள்.”
“எல்லையைத் தாண்டியதுமே தூதுப்புறாவை அனுப்பும்படி பலபத்ரரிடம் சொல்லியிருந்தேன். இந்நேரம் வந்திருக்கவேண்டுமே” என்றாள் சத்யவதி. சியாமை புன்னகைசெய்தபடி “பயணத்தின் தாமதங்கள் எப்போதும் இருப்பவை அல்லவா?” என்று பொதுவாகச் சொன்னாள். “ஆம்…எல்லாம் சிறப்பாகவே முடிந்தன என்று செய்திவந்தபோது எனக்கு நிறைவே எழவில்லை. இன்னும் சற்று பதற்றம்தான் ஏற்பட்டது. எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்” என்றாள் சத்யவதி.
“விதுரர் வந்து உங்களிடம் பேசும்வரை அந்தப்பதற்றம் நீடிக்கும் பேரரசி” என்றாள் சியாமை. சத்யவதி “ஆம் அது உண்மை. அனைத்துக்குள்ளும் அறியமுடியாத ஒன்று பொதிந்திருக்கிறது என்ற அச்சமே என்னைப்போன்ற அரசியல் மதியூகிகளின் நரகம். அவன் வந்து அனைத்தையும் தெளிவாக்கும் வரை நான் விதவிதமாக வெறும் கையால் கம்பளம் பின்னிக்கொண்டிருப்பேன்.”
“இந்த வெம்மை… ஏன் இத்தனைநாள் மழை தாமதமாகிறது….மண் மழையை அறிந்து நூறுநாட்கள் கடந்துவிட்டன” என்று சொல்லி சத்யவதி மெல்லப்புரண்டாள். “நூறாண்டுகால வரலாற்றில் இதுவே மழை இத்தனை தாமதிக்கும் வருடம் என்று வானூலாளர் சொன்னார்கள்” என்றாள் சியாமை. “காற்று மாலைமுதலே அசைவை இழந்துள்ளது. கொடிகள் அசைந்து இருநாழிகைகளாகின்றன” சத்யவதி பெருமூச்செறிந்தாள்.
சடசடவென ஏதோ முறியும் ஒலி கேட்டது. மரக்கிளை முறிந்துவிழுகிறது என்று முதலில் சத்யவதி நினைத்தாள். மரங்களின் இலைகள் வழியாக நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாகத் தாவிவருவதுபோன்ற மனச்சித்திரம் எழுந்து உடனே என்ன அசட்டுக்கற்பனை என்ற மறு எண்ணமும் எழுந்தது. அதற்குள் கனத்த நீர்த்துளிகள் சாளரக்கதவுகளை அறைந்தன. திறந்திருந்த சாளரம் வழியாக புற்சரங்கள் போல பாய்ந்துவந்து தரையில் சிதறின. அவற்றை ஏற்றிவந்த காற்று சாளரக்கதவுகளை ஓங்கி அறைந்து, தீபச்சுடர்களை அணைத்து, மறுபக்கக் கதவைத் தள்ளி உள்ளே சென்றது. அரண்மனையின் அனைத்து கதவுகளும் படபடவென அடித்துக்கொண்டன.
“மழையா?” என்று சொன்னபடி சத்யவதி எழுந்துகொண்டாள். “ஆம் பேரரசி, மழைதான்” என்றாள் சியாமை. “அதுதான் இத்தனை வெந்நீர்மையா?” குளிர்ந்த காற்று நீர்ச்சிதர்களுடன் அறைக்குள் சுழன்றடித்தது. சியாமை எழுந்து சென்று சாளரக்கதவுகளை மூடினாள். கதவுகளை அவளால் இழுக்கமுடியவில்லை. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு வெறியாட்டெழுந்த தெய்வதம் குடியேறியதுபோலிருந்தது. அப்பால் மரங்களின் கிளைகள் மிரண்ட புரவிகளென எழுந்து கொப்பளித்தன. ஒரு சாளரக்கதவு கையை மீறி திறந்து அவளை பின்னுக்குத் தள்ளியது. அதன் வழியாகவந்த நீர்த்துளிகள் கூழாங்கற்கள் போல எதிர்ச்சுவரை அறைந்தன.
“விட்டுவிடு” என்று சத்யவதி சொன்னாள். “அறை நனையட்டும்…நான் வேறு மஞ்சத்துக்குச் சென்றுவிடுகிறேன்.” சியாமை பின்னகர்ந்து வந்து அமர்ந்துகொண்டாள். சிலகணங்களில் சாளரம் வழியாக மழை நீர்நிறை ஏரியின் மதகுதிறந்தது போல பொழியலாயிற்று. மரத்தாலான தரையில் நீர் பெருகி வெளியே படிகளில் வழிந்தது. சத்யவதியின் ஆடைகள் நனைந்து உடலுடன் ஒட்டிக்கொண்டன. கூந்தல் கன்னத்தில் ஒட்டிப்பரவ அவள் விரலால் கோதி பின்னால் செருகிக்கொண்டாள்.
இடியோசைக்குப்பின் மின்னல் அதிர்ந்து மரங்கள் ஒளியுடன் அதிர்ந்து மறைந்தன. அடுத்த இடியோசைக்குப்பின் சாளரங்கள் மின்னி அணைவதைக் கண்டாள். அடுத்த இடியோசைக்குப்பின் அறையின் அனைத்து உலோகவளைவுகளிலும் செவ்வொளி மின்னும் விழிகள் திறந்ததைக் கண்டாள். பிறிதொரு இடியோசை அணைந்தகணத்தில் மேகக்குவியல்களில் இந்திர வஜ்ரம் எழுந்ததைக் கண்டாள்.
“அப்படியென்றால் அவள் உள்ளே நுழைந்ததும் மழைபெய்திருக்கிறது” என்றாள் சத்யவதி. “ஆம் பேரரசி, அரசி மழையுடன் வருகிறார்கள். அனேகமாக அவர்கள் நேற்றுமாலையே திரஸத்வதியை கடந்திருப்பார்கள்” என்றாள் சியாமை. “மழைபெய்தால் அதில் மலைவெள்ளம் இறங்கும். வானம் மூட்டமாக இருந்திருக்கும், பீஷ்மர் உடனே நதியைக் கடக்க முடிவெடுத்திருப்பார்.”
சத்யவதி புன்னகையுடன் “திரஸத்வதிக்கு இப்பால் நம்முடைய எல்லை. யோசித்துப்பார், அவள் நதியைக் கடந்து மண்ணில் கால் வைத்ததும் பெருமழை கொட்டத் தொடங்கியிருக்கிறது.” சியாமை சிரித்தபடி “சூதர்களுக்கு நாமே கதைகளை உருவாக்கிக் கொடுத்துவிடலாம்” என்றாள்.
இரவு மழையாலானதாக இருந்தது. மழையோ ஒற்றைப்பெரும்பொழிவென திகழ்ந்தது. மழையோசை ஒன்றையே சொல்லும் முதல்மந்திரம். ஆயிரம் இலைநாவுகள் சுழித்தெழும் நாதம். பல்லாயிரம் நீர்த்தந்திகள் அதிர்ந்தெழும் நாதம். நிலமுரசின் விம்மல். நதியாழின் மீட்டல். மேகச்சல்லரியின் குமுறல். மழைத்தலின் பேரிசை.
விடியற்காலையில் மழை சற்றே ஓய்ந்தது. சத்யவதி கீழே சென்று வெந்நீரில் நீராடி வெள்ளை ஆடைகளும் ஒரே ஒரு வைர ஆரமும் அணிந்து சபாமண்டபத்துக்கு வந்தாள். அரண்மனையில் சாளரத்தை ஒட்டிய பகுதிகளெல்லாம் நனைந்திருக்க அவற்றை சேவகர்கள் மரவுரிகளால் துடைத்துக் கொண்டிருந்தனர். வடக்கு வாயிலில் இருந்து யானைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. அவை மழையை விரும்பி எழுப்பும் குரல் என நினைத்ததும் சத்யவதி புன்னகை புரிந்துகொண்டாள். உள் அங்கண முற்றத்தில் மரக்கூரையின் விளிம்பிலிருந்து நீர் கசிந்து சொட்டிக்கொண்டிருந்தது.
சபாமண்டபத்திற்குச் செல்லும் நீண்ட இடைநாழியின் பக்கவாட்டுத் திறப்புக்கு அப்பால் தெரிந்த அரண்மனைத் தோட்டத்தின் அனைத்து மரங்களும் புதியதாகப் பிறந்துவந்தவை போலிருந்தன. நேற்றுவரை புழுதிபடிந்து சோர்ந்திருந்த மரங்கள் எப்படி ஒரே இரவில் புத்துயிர் கொள்ளமுடியும்? அவை காத்திருந்த கணம் போலும் அது. அதற்காக அவை தங்கள் உயிரனைத்தையும் இலைகளில் தேக்கியிருந்திருக்கவேண்டும்.
சபாமண்டபத்தில் அவளுக்காக அமைச்சர்கள் காத்திருந்தனர். கவரியும் மங்கலத்தாலமும் ஏந்திய சேவகர்களின் நடுவே நடந்து அவள் உள்ளே சென்றபோது அமைச்சர்கள் எழுந்து வாழ்த்தொலித்தனர். அவள் அமர்ந்ததும் அமைச்சர்களின் முகங்களை கவனித்தாள். மழை அவர்களனைவரையும் மகிழ்வித்திருப்பதாகப் பட்டது.
காலை விடியத்தொடங்கியிருந்தாலும் வானம் இருண்டிருந்தமையால் இருள் இருந்தது. மண்டபத்தில் அடுக்குநெய்விளக்குகளில் சுடர்கள் எரிந்தன. அது அந்திவேளை என்ற பிரமையை அகத்துக்கு அளித்துக்கொண்டே இருந்தன அவை.
அவள் அரியணையில் அமர்ந்தபின்னும் வெளியே தெரிந்த ஒளிமங்கலையே பார்த்துக்கொண்டிருந்தாள். கருமேகக்குவியல் மெதுவாக மிக அப்பால் எங்கோ ஓசையிட்டது. அதைக்கேட்டு வடக்குவாயில் யானைகள் இரண்டு சின்னம் விளித்தன. மண்ணில் காலூன்றிய கருமேகங்கள்.
“மழை தொடங்கிவிட்டது பேரரசி” என்றார் எல்லைக்காவலர் தலைவரான விப்ரர். வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும் யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் அங்கிருந்தனர். தளகர்த்தர்களான உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் இருந்தனர். சத்யவதி “செய்தி வந்ததா?” என்றாள்.
“மழையில் செய்திப்புறாக்கள் தாமதமாகும்…அனேகமாக சற்றுநேரத்தில் வந்துவிடும். ஆனால் நேற்றே அவர்கள் நம் எல்லை நதியைக் கடந்திருப்பார்கள்” என்றார் விப்ரர். “திரஸத்வதியில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதா?” என்று சத்யவதி கேட்டாள். “இந்த மழை இன்னும் நான்குநாட்களில் இமயத்தைச் சென்று முட்டும். அதன்பின்னர்தான் திரஸத்வதி பெருகிவரும்” என்றார் விப்ரர்.
“வருவது நம் தேசத்தின் அரசி” என்றாள் சத்யவதி. “ஆகவே மழையாக இருந்தாலும் வெள்ளமாக இருந்தாலும் நம் நகரமக்கள் அனைவரும் வாயிலில் திரண்டாகவேண்டும். அனைத்து மங்கலமுரசுகளும் ஒலிக்கவேண்டும். வேதியரும் சூதரும் வாழ்த்தவேண்டும்.” வைராடர் “நூறு யானைகள் தலைமையில் பட்டத்துயானையே சென்று அவர்களை வரவேற்க ஆணையிட்டிருக்கிறேன் பேரரசி. யானைகளுக்கான அணியலங்காரங்கள் இப்போதே தொடங்கிவிட்டன” என்றார். சோமர் “சூதர்களுக்கும் வைதிகர்களுக்கும் ஆணைகள் சென்றுவிட்டன” என்றார்.
அவள் மனக்குறிப்பை உணர்ந்ததுபோல விப்ரர் “நல்லநிமித்தம் பேரரசி… மழையுடன் நகர்நுழைகிறார்கள்” என்றார். உக்ரசேனர் “இம்முறை மழை மூன்றுமாதம் காக்கவைத்துவிட்டது” என்றார். சத்யவதி அவரைப்பார்த்ததும் “நகரே விடாய்கொண்டிருந்தது” என்றார். விப்ரர் “நகரெங்கும் புதிய அரசியைப்பற்றியே பேச்சு நிகழ்கிறது. நம் அரசருக்காக தன் கண்களையும் இருட்டாக்கிக்கொண்டார் என்றும் புராணநாயகியரான சாவித்ரியையும் அனசூயையையும் நிகர்த்தவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார். உக்ரசேனர் “ஆம், நகர்மக்கள் அதைப்பற்றி பெருமிதம்கொண்டு கண்ணீருடன் கைகூப்புகிறார்கள்” என்றார்.
சத்யவதி “அரச ஊழியர்கள் என்ன சொல்லிக்கொள்கிறார்கள் உக்ரசேனரே?” என்றாள். “அரச ஊழியர்களில் பலவகையினர் உண்டு பேரரசி. ஒற்றர்கள் போன்றவர்கள் பலநாடுகளையும் அரசியலின் பல முகங்களையும் கண்டவர்கள். அவர்கள் சொல்வது வேறாக இருக்கிறது. காந்தார அரசியின் செயல் ஒரு சிறந்த அரசிக்குரியதல்ல என்றும் உணர்ச்சிமேலீட்டில் முடிவுகளை எடுப்பவர் அவர் என்பதைக் காட்டுகிறது என்றும் சொல்கிறார்கள். அரசருக்கு விழியில்லை என்றிருக்கையில் அரசி அவருக்கும் விழியாக இருப்பதே சிறந்த வழியாக இருந்திருக்கும் என்கிறார்கள்.”
“ஆம் அப்படியும் சிந்திக்கலாம்தான்” என்றாள் சத்யவதி. உக்ரசேனர் “அது காந்தார இளவரசி அங்குள்ள முறைப்படி வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான சான்று என்கிறார்கள். அங்கே இளவரசியருக்கும் பிறருக்கும் வேறுபாடில்லை. அவர்கள் குதிரைகளில் பெருநிலவிரிவுகளில் அலைபவர்கள். ஆயுதப்பயிற்சி எடுப்பவர்கள். அரசாள்வதற்கான சிறப்புப் பயிற்சி ஏதும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதில்லை…” என்றார். உக்ரசேனர் தணிந்த குரலில் “அதனால் தாழ்வில்லை. நாம் இங்கே பேரரசியின் தலைமையில் அப்பயிற்சியை அளித்துவிடமுடியும்…ஆனால் விழிகளை மூடிக்கொண்டசெயல் அதற்கும் தடையாக அமைந்துவிட்டிருக்கிறது.”
விப்ரர் “ஆம், அது உண்மை” என்றார். “ஆனால் விழியின்மையால் என்ன ஆகப்போகிறது? இவ்வரசை நடத்தப்போவது விதுரர். அவருக்கு பல்லாயிரம் விழிகள். காந்தார இளவரசியை நம் அரசியாக ஏற்பதில் இங்கே பிராமணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் தயக்கமிருந்தது. அவர் முறையான ஷத்ரியகுடியில் பிறந்தவரல்ல என்று பலரும் பேசிக்கேட்டேன்.”
விப்ரர் தொடர்ந்தார் “பேரரசியாரின் கவனத்துக்கு வந்திருக்கும். ஒரு யானை குட்டி போட்டாலே கவிதை புனைந்து பாடத்தொடங்கிவிடும் நம் சூதர்கள் காந்தார இளவரசியை நம் மன்னர் மணக்கவிருக்கும் செய்தி பரவிய பின்னரும்கூட ஒரு பாடலேனும் புனையவில்லை. ஆனால் அரசி தன் விழிகளை கட்டிக்கொண்டது அனைத்தையும் மாற்றிவிட்டது. இன்று அவர் இந்நகரத்தின் காவலன்னையாகவே மக்களால் எண்ணப்படுகிறார். சூதர்பாடல்கள் பால்கலம் பொங்குவதுபோல இந்நகரை மூடி எழுகின்றன… இப்போது இந்த மழையும் இணைந்துகொண்டிருக்கிறது.”
“ஆம், மக்களின் ஏற்பே முக்கியமானது” என்று சத்யவதி சொன்னாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்து இருபதாண்டுகளாகின்றன. இன்றுவரை என்னை இந்நகர மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.” விப்ரர் “இல்லை பேரரசி…” என சொல்லத் தொடங்க “ஆம், அதை நானறிவேன். என் உடலில் இருந்து மச்சர்களின் வாசனை விலகவில்லை. காந்தாரியின் லாஷ்கரப் பாலைநில வாசத்தை இந்த மழையே கழுவிவிடும்” என்றாள் சத்யவதி.
உக்ரசேனர் பேச்சை மாற்றும்பொருட்டு “பேரரசி, நாம் அனைத்து ஷத்ரியர்களுக்கும் மணநிறைவுச்செய்தியை அனுப்பவேண்டும்…” என்றார். “ஆம், அதுதான் திருதராஷ்டிரன் முடிச்சூடப்போகும் செய்தியாகவும் அமையும்” என்றாள் சத்யவதி. “விப்ரரே, ஓலைகளை எழுத ஆணையிடும். ஐம்பத்தைந்து மன்னர்களுக்கு மட்டுமல்ல, ஆரியவர்த்தத்திற்கு அப்பாலுள்ள நிஷாதமன்னர்கள் கிராதமன்னர்கள் அனைவருக்கும் செய்தி செல்லவேண்டும்” என்றாள்.
வானத்தின் இடியதிர்வுகள் நெருங்கி வந்தன. மின்னல்கள் சபாமண்டபத்தையே ஒளிகொண்டு துடிக்கச் செய்தன. சிலகணங்களில் மழை அரண்மனைவளாகம் மீது பாய்ந்தேறியது. பளிங்குச் சரங்களாக பெருகிக்கொட்டத் தொடங்கின மழைத்தாரைகள். அங்கணமுற்றம் குளமாக நிறைந்து மடைகளருகே சுழித்தது. மழையின் பேரோசையால் மூடப்பட்ட அறைகளுக்குள் இருளும் நீராவியும் நிறைந்து மூச்சுத்திணறச்செய்தன. வீரர்களும் சேடிகளும் சேவகர்களும் எங்கேனும் நின்று மழையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள் ஓலைகளை வாசித்துச்சொல்ல மழையைப் பார்த்தபடி சத்யவதி ஆணைகளைப் பிறப்பித்தாள்.
சத்யவதி இடைநாழி வழியாக சென்றபோது சியாமை எதிரே வந்து பணிந்தாள். சத்யவதி நோக்கியதும் “புறா வந்துவிட்டது. அவர்கள் நேற்று நள்ளிரவில் திரஸத்வதியைக் கடந்திருக்கிறார்கள்” என்றாள். சத்யவதி “அப்படியென்றால் இன்று மாலையே அவர்கள் நகர்நுழைவார்கள். அந்தியில் நல்லநேரமிருக்கிறதா என்று நிமித்திகரிடம் கேட்டு சொல்லச்சொல்” என்றாள். “நானே கேட்டுவிட்டேன். இன்றைய அந்தி மிகமிக புனிதமானது என்றார்கள். அனசூயாதேவிக்குரியது.” சத்யவதி புன்னகையுடன் தலையசைத்தாள்.
சத்யவதியின் பாதங்கள் பலகைத்தரையில் பதிந்த இடங்களில் அவளுடைய சந்தனப்பாதுகையின் வடிவம் நீர்த்தடமாகப் படிந்து சென்றது. அவள் திரும்பி அந்தப்பாதத்தடம் மெல்ல நீர்த்துளிகள் பரவி மறைவதைப் பார்த்தாள். மழை தன்னை சிறுமியாக்கிவிட்டது என நினைத்துக்கொண்டாள். கற்ற கவிதைகளெல்லாம் நினைவிலூறுகின்றன. நீரில் மட்டுமே அவள் அடையும் விடுதலை. அப்போது யமுனையின் நீர்வெளிமேல் மழை வானைத்தொட எழுந்த நிறமில்லா நாணல்காடுபோல நிற்பதை அவள் கண்ணுக்குள் காணமுடிந்தது.
சியாமை மெல்ல “சிறிய அரசிக்கு உடல்நலமில்லை” என்றாள். “ஏன்?” என்று கவனமில்லாதவள்போல சத்யவதி கேட்டாள். “கடுமையான தலைவலியும் உடல்வெம்மையும் இருக்கிறது என்று அவர்களுடைய சேடி வந்து சொன்னாள். ஆதுரசாலையில் இருந்து இரண்டு வைத்தியர்கள் சென்று லேபனமும் ரஸக்கலவையும் கொடுத்திருக்கிறார்கள்.” சத்யவதி “உம்” என்று மட்டும் சொன்னாள். “அந்தச் சேடியையோ வைத்தியர்களையோ கூப்பிட்டு விசாரிக்கலாம்” என்று சியாமை சொன்னதுமே சத்யவதி திரும்பிப்பாராமல் “வேண்டாம்” என கைகாட்டினாள்.
மழை பகலெல்லாம் இடைவெளியே இல்லாமல் பொழிந்தது. பிற்பகலில் மெதுவாகக் குறைந்து இடியோசைகளும் மின்னல்களுமாக எஞ்சியது. கூரைகளும் இலைநுனிகளும் மட்டும் சொட்டிக்கொண்டிருந்தன. காற்றுடன் வீசிய மழையாதலால் பெரும்பாலான சுவர்களும் நனைந்து அரண்மனையே நீருக்குள் இருப்பதுபோல குளிர்ந்துவிட்டிருந்தது. சுவர்களின் வெண்சுண்ணப்பூச்சுகள் நீரில் ஊறி இளநீலவண்ணம் கொண்டன.
சத்யவதி மதிய உணவுக்குப்பின் கீழே இருந்த இரண்டாவது மஞ்சஅறையில் சிறிது துயின்றாள். சியாமை வந்து அவள் கட்டிலருகே நின்று மெல்ல “பேரரசி” என்று சொன்னதும் கண்விழித்தாள். சிவந்த விழிகளால் சியாமையையே பார்த்தாள். “ரதங்கள் இன்னும் ஒருநாழிகையில் கோட்டைவாயிலை அணுகும் பேரரசி” என்றாள் சியாமை.
சத்யவதி எழுந்து விரைவாகச் சென்று நீராடி அந்நிகழ்வுக்கென்றே சியாமை எடுத்துவைத்த பொன்னூல் பின்னல்கள் கொண்ட கலிங்கத்துப் பட்டாடையைச் சுற்றி அரசிக்குரிய அனைத்து அணிகலன்களையும் அணிந்துகொண்டாள். சியாமை அவளை அணிவிக்கையில் அவள் அவ்வாறு விரும்பி அணிகொண்டு நெடுநாளாயிற்று என எண்ணிக்கொண்டாள்.
அந்தப்புரத்தின் முற்றத்துக்கு அவள் வந்தபோது ரதம் காத்து நின்றது. அதன் தேன்மெழுகுப் பாய்க்கூரை நன்றாக முன்னாலிழுத்து விடப்பட்டிருந்தது. மழைமுற்றிலும் நின்றிருந்தாலும் வானம் முழுமையாகவே இருண்டு காற்றில் நீர்த்துளிகள் பறந்துகொண்டிருந்தன. சத்யவதி “அம்பிகை எங்கே?” என்றாள். “அரசி ஒருநாழிகைக்கு முன்னதாகவே கோட்டைவாயிலுக்குச் சென்றுவிட்டார்கள் பேரரசி” என்றாள் சியாமை. சியாமையும் ஏறிக்கொண்டதும் ரத ஓட்டி கடிவாளங்களைச் சுண்ட சற்று அதிர்ந்து ரதம் முன்னகர்ந்தது. முன்னும் பின்னும் அவளுடைய அணியாளர்கள் ஏறிய ரதங்கள் கிளம்பிச்சென்றன.
நகரம் முழுக்க மக்கள் தலையில் ஓலையாலோ பாளையாலோ தோலாலோ ஆன குடைகளை அணிந்தபடி நிறைந்திருந்தனர். ரதத்தின் மேலிருந்து பார்க்கையில் நகரமெங்கும் பளபளக்கும் தோல்கொண்ட பசுக்களும் எருமைகளும் முட்டி மோதுவதாகத் தோன்றியது. கடைத்தெருவில் பெரிய ஓலைக்குடைகளை விரித்து அதன்கீழே மரத்தட்டுகளில் பொருட்களைப்போட்டு விற்றுக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் சுண்ணம், புனுகு, கஸ்தூரி, சந்தனம் போன்ற அணிப்பொருட்கள். விளக்கேற்றுவதற்கான நெய்ப்பொருட்கள். மக்களின் குரல்கள் மழைமூடிய வானத்துக்குக் கீழே பெரிய கூடத்துக்குள் ஒலிப்பவைபோல கேட்டன. அவர்களது ஆடைகளின் வண்ணங்கள் மேலும் அடர்ந்து தெரிந்தன.
வானம் இடியாலும் மின்னலாலும் அதிர்ந்தபடியே இருந்தது. மின்னல்கணங்களில் தொலைதூரத்தின் கோட்டைமீதிருந்த காவல்மாடங்கள் தெரிந்தன. முரசுகளை எல்லாம் தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில்தட்டிகளால் மழைச்சாரல் படாமல் மூடிவைத்திருந்தனர். கருக்கிருட்டில் படைக்கலங்களின் உலோகமுனைகள் மேலும் ஒளிகொண்டிருந்தன. ரதவீதியின் கல்பாவப்பட்ட பரப்பின் இடுக்குகளில் சிவப்புநிறமாக மழைநீர் தேங்கி ஒளியை பிரதிபலித்து சதுரக்கட்டங்கள் கொண்ட மின்னும் சிலந்திவலைபோலத் தெரிந்தது.
கோட்டைமுகப்பில் குடைவிளிம்புகள் ஒன்றுடனொன்று மோத மக்கள் கூடி நிறைந்திருந்தனர். கரிய மழைநீர் சேர்ந்த ஏரி போலிருந்தது கோட்டைமுற்றம். ரதத்துக்காக முன்னால்சென்ற காவல்வீரர்கள் கூச்சலிட்டு மக்களை விலக்கவேண்டியிருந்தது. கோட்டைக்குமேல் வீரர்கள் கவச உடைகளுடன் பறவைக்கூட்டம்போலச் செறிந்து தெரிந்தனர். சத்யவதியின் ரதம் கோட்டைவாசலை அடைந்ததும் அவளை வரவேற்று குறுமுழவு முழங்க கொம்பு பிளிறலோசை எழுப்பியது. அவள் இறங்கி வெள்ளை ஆடையை கொண்டைமேல் சரிசெய்துகொண்டாள். அவளைச்சுற்றி வாழ்த்தொலிகள் எழுந்தன.
முன் ரதத்தில் இருந்து கட்டியங்காரன் இறங்கி கொம்பு தூக்கி ஊதியபடி அவள் வருகையை அறிவித்து முன் செல்ல பின்னால் வந்த ரதத்தில் இருந்து இறங்கிய வீரர்கள் கவரியும் குடையுமாக அவளைத் தொடர்ந்து வந்தனர். அவளுடைய நறுஞ்சுண்ணத்தையும் நீரையும் கொண்டு இடப்பக்கம் சியாமை வந்தாள். வலப்பக்கம் அணிமங்கலப்பொருட்கள் அடங்கிய தாலத்துடன் மூன்று சேடிகள் வந்தனர். வாழ்த்தொலிகள் பட்டுத்திரைச்சீலைகள்போலத் தொங்குவதாகவும் அவற்றை விலக்கி விலக்கி முன்னேறிச்செல்வதாகவும் அவளுக்குத் தோன்றியது.
ரதங்கள் ஓடி வழவழப்பான பாதைக்கற்களில் ஈரம் படிந்து அவை நீர்விட்டெழுந்த எருமையுடல் போல மின்னிக்கொண்டிருந்தன. கோட்டைவாயிலுக்கு வெளியே நகரத்தின் முகப்பில் சிறிய மணிப்பந்தல் போடப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்ட பாயை மூங்கில்கள் மேல் பரப்பி எழுப்பப்பட்ட பந்தலில் அரசியர் அமர்வதற்காக பீடங்கள் வெண்பட்டு மூடி காத்திருந்தன. பெரிய ஏழடுக்கு நெய்விளக்கு அங்கே செவ்வரளி பூத்ததுபோல நின்றது. முன்னரே வந்த அம்பிகை அங்கே வெண்பட்டாடையும் அணிகலன்களுமாக நின்றிருந்தாள். அருகே அம்பிகையின் சேடியான ஊர்ணை நின்றாள்.
பந்தலில் சத்யவதி ஏறியதும் அம்பிகை கைகூப்பி முகமன் சொல்லி வரவேற்றாள். அவள் முகத்தைப் பார்த்தபோது சத்யவதி சற்று அகக்கலக்கத்தை அடைந்தாள். வெற்றியின் நிறைவை இன்னும் சற்று மறைத்துக்கொள்ளலாகாதா இவள் என எண்ணினாள். அதைப்போல எதிரிகளை உருவாக்குவது பிறிதொன்றில்லை. ஆனால் அது அம்பிகை அவளுடைய வாழ்க்கையில் கண்ட முதல் வெற்றியாக இருக்கலாம் என்றும் தோன்றியது.
மூன்று குதிரைகள் பின்கால்களில் சேறு சிதறித் தெறிக்க கோட்டையை நோக்கி வந்தன. அவற்றில் இருந்த வீரர்கள் கைகளால் சைகைசெய்தபடியே வந்தனர். மணக்குழு வந்துவிட்டது என்பது அதன்பொருள் என்று உணர்ந்த கூட்டம் வாழ்த்தொலிகளை கூவத்தொடங்கியது. அம்பிகை நிலையழிந்து பந்தலின் கால் ஒன்றைப் பற்றிக்கொண்டாள். அக்கணம் வானில் ஒரு பெருநதியின் மதகுகளைத் திறந்துவிட்டதுபோல செங்குத்தாக மழை வீழத் தொடங்கியது. சிலகணங்களுக்குள் அப்பகுதியில் மழைத்தாரைகள் அன்றி ஏதும் தெரியவில்லை.
மழைத்திரைக்குள் ஆடும் நிழல்களைப்போல மணக்குழுவின் வண்டிகள் தெரிந்தன. முன்னால் வந்த காவல்வீரர்களின் குதிரைகள் மழைக்காக முகத்தை நன்றாகக் கீழே தாழ்த்தியிருந்தன. ஒவ்வொரு வரிசையாகவே மழையைக் கிழித்துத் தோன்றமுடிந்தது. மழை அறைந்து தெறித்துக்கொண்டிருந்த மரக்கூரையுடன் பீஷ்மரின் ரதம் வந்தது. தொடர்ந்து விதுரனின் ரதம். கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது எவருடைய கொடி என்பதைக் காணமுடிந்தது.
கோட்டைக்குமேல் பாய்மூடிகளை எடுத்து பெருமுரசுகளை ஒலித்தனர். ஆனால் மழை ஈரத்தில் தொய்ந்த முரசின் தோல்வட்டங்கள் எழுப்பிய ஒலி நீர்ப்பரப்பில் கையால் அறைவதுபோலக் கேட்டது. கோட்டைமேல் ஏறிய பீஷ்மர், திருதராஷ்டிரன், விதுரன் மற்றும் அமைச்சர்களின் கொடிகள் கம்பங்களில் ஒட்டிக்கொண்டன. காந்தாரத்தின் கொடி ஏறியபோது மக்கள் அதை உணரவேயில்லை. எவரோ ஆணையிட மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அந்த ஒலி மழைக்குள் நெடுந்தொலைவில் என ஒலித்தது.
உச்சஒலியில் முழங்கிய மழை அங்கிருந்தே மேலும் உச்சத்துக்குச் சென்றது. மழைத்தாரைகள் வெண்தழல் என வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த கூரையுடன் அரசியரின் கூண்டுவண்டி வந்து நின்றது. பேரோசையுடன் வீசிய காற்று எதிர்த்திசை நோக்கிச் சென்று ஏதோ எண்ணிக்கொண்டு சுழன்று திரும்பிவந்து சத்யவதி அம்பிகை சேடிகள் அனைவரின் ஆடைகளையும் அள்ளிப்பறக்கச் செய்து பந்தலை அப்படியே தூக்கி பின்பக்கம் சரித்தது. அவர்கள்மேல் மழை அருவிபோல இறங்கியது.
சேடியர் குடைகளை நோக்கி ஓடமுயல சத்யவதி அவர்களை சைகையால் தடுத்தாள். அவளும் அம்பிகையும் கொந்தளித்த சேற்றுப்பரப்பில் ஆடையை முழங்கால்மேல் தூக்கியபடி கால்வைத்துத் தாவி நடந்து அரசியரின் கூண்டு வண்டியை அடைந்தனர். அதன் குதிரைகள் நீர் வழிந்த தசைகளை உதறி சிலிர்த்துக்கொண்டு, பிடரிமயிர்கள் ஒட்டிக்கிடக்க அடிவயிற்றில் நீர்த்தாரைகள் சொட்டி சரமாக வடிய நின்றிருந்தன.
பலபத்ரர் கை காட்ட நனைந்துகொண்டே சென்ற சேடி ஒருத்தி வண்டியின் பின்பக்க வாயிலைத் திறந்தாள். செவ்வண்ணத் திரைச்சீலை விலகி வெண்ணிறமான கால் வெளியே வருவதை சத்யவதி கண்டாள். கருப்பையில் இருந்து குழவி எழுவதைப்போல! அரசியரின் வெண்கால்கள் நனைந்த செம்பட்டுத் திரை திறந்து வந்தன. செவ்விதழில் வெண்பற்களெழுந்த இளநகை என.
நீலப்பட்டுத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு காந்தாரி இறங்கி கைகளைக் கூப்பியபடி நின்றாள். சத்யவதி ஒரு கணம் அவளைக் கண்டதும் மறுகணம் நீரலை அவளை அறைந்துமூடியது. மீண்டும் காற்றில் மழைச்சரடுகள் விலக அவள் தெரிந்து மீண்டும் மறைந்தாள். அவளைத் தொடர்ந்து பத்து இளவரசிகளும் மழைக்குள் கைகூப்பி நின்றனர். அவர்களின் ஆடைகள் நனைந்து உடலோடு ஒட்ட கூந்தல் கன்னங்களில் வழிய அணிமுழுக்காட்டியது பெருமழை.
சத்யவதி சியாமையிடம் “அவர்கள் அரண்மனையில் விளக்குடன் நுழையட்டும்… இப்போது அவர்களின் கைகளில் மலர்களைக் கொடு. மலரும் சுடரும் ஒன்றே” என்றாள். சியாமையும் ஊர்ணையும் ஒடிச்சென்று மலர்களை இளவரசியர் கைகளில் அளித்தனர். காந்தாரியின் கைகளுக்கு மலரை சத்யசேனை வாங்கி அளித்தாள். சம்படை தசார்ணைக்கு மலரை வாங்கிக்கொடுத்தாள்.
சத்யவதி முன்னால் சென்று “காந்தாரநாட்டு இளவரசியை அஸ்தினபுரியின் அரசியாக வரவேற்கிறேன்” என்றாள். காந்தாரி தலைவணங்கி தன்கையில் இருந்த செந்நிற மலருடன் சத்யவதியின் கையைப்பற்றிக்கொண்டு காலெடுத்துவைத்தாள். மழைச்சாட்டைகளால் அறைபட்டு சேற்றுவெளி துடித்துக்கொண்டிருந்த ஹஸ்தியின் மண்ணில் அவளுடைய கால்கள் பதிந்து கோட்டைக்குள் நுழைந்தன.