எம்.ஒ.மத்தாயின் நினைவுகள் 2

2.மறுவரலாற்றில் நேரு

மத்தாய் ஒரு நல்ல எழுத்தாளர் அல்ல. அவரது நூல் உதிரி உதிரி நிகழ்ச்சிகளால் ஆனதாகவும் சீரற்ற முறையில் விஷயங்களைச் சொல்வதாகவும்தான் உள்ளது.அவர் தன்னைப்பற்றிய தகவல்களை மிகக் குறைவாகவே சொல்கிறார். அதே சமயம் நேருவுடனான அவரது உறவைப்பற்றி துண்டுச்செய்திகளாக நிறையச் சொல்லிச் செல்கிறார். அவற்றின் வழியாக ஒரு நேரு வரைபடம் நம் மனதில் உருவாகிறது. அது மத்தாயின் சிருஷ்டி அல்ல, அந்நிகழ்ச்சிகள் இயல்பாக உருவாக்குவது அது

நேரு சம்பிரதாயங்கள் இல்லாத நேரடியான மனிதர். தன்னை மேலே தூக்கிக்கொள்ள எதையும் அவர் செய்வதில்லை. இயல்பாக மனிதர்களிடம் பழகுகிறார். தன்னுடைய அமைச்சரவை சகாக்களிடம் ஒரு விஷயம் விவாதிக்க விரும்பினால் நேரடியாக அவர்களின் இல்லத்துக்கே சென்று பேசுகிறார். மத்தாயிடம் மட்டுமல்ல அதிகாரிகளிடம் ஏதாவது அவசரமாக சொல்வதற்கு இருந்தால்கூட அவரே நேரடியாக எழுந்துசென்று பேசுகிறார்.

 

 

எந்தப் பயணத்திலும் நேருவுக்கு தனித்தேவைகள் என ஏதுமில்லை. எங்குசென்றாலும் அங்குள்ள உணவை அவரால் உண்ண முடியும். தனக்காக வசதிகள் கோரி கடிதங்கள் எழுதப்படுவதை நேரு அருவருப்பாகவே எண்ணினார்.மிருதுளா சாராபாய் நேருவுக்கே தெரியாமல் மாநில முதல்வர்களுக்கு நேருவுக்கு என்ன வகையான வசதிகள் தேவை என ஒரு கடிதம் எழுதியபோது நேரு அதைப்பொருட்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்கு எழுதினார். ஒருமுறை பத்மஜா நாயிடு அப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியபோதும் அவர் கடிந்து கொண்டு நேருவுக்காக எந்த ஏற்பாடும் செய்யவேண்டியதில்லை என்று கடிதம் எழுதும்படி மத்தாயிடம் சொல்கிறார்.

அதிகாரம் உள்ளவர்களிடம் அப்படி நடந்துகொண்டார் என்று சொல்லமுடியாது. எளியவர்களிடமும் நேருவின் நடத்தை அப்படித்தான் இருக்கிறது. மௌலானா அபுல்கலாம் ஆசாத், வி.கெ.கிருஷ்ணமேனன் போன்ற பலர் அவரது தயவிலேயே அரசியலில் இருந்தவர்கள். ஆனால் நேரு அவர்களை மிகமரியாதையாக நடத்துகிறார். அவர்களின் தன்னகங்காரம் புண்படாமல் ஒவ்வொருமுறையும் நடந்துகொள்கிறார்

நாளெல்லாம் வேலைசெய்பவர் நேரு. ஓய்வுநாட்களிலும் வேலைசெய்கிறார். அவரை ஓய்வெடுக்க வைப்பதற்கு எந்த வழியும் இல்லை. மத்தாய் நேருவிடம் சொல்கிறார், ‘உங்கள் உதவியாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, அவர்களும் வாழவேண்டும்’ என்று.  அந்த மனிதாபிமானக் கோணம் உடனடியாக நேருவின் மனதை பாதிக்கிறது. ஆகவே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்களில் ஓய்வெடுக்க அவர் சம்மதிக்கிறார்.

நேரு உபச்சாரங்களைச் சொல்வதில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் மிக அந்தரங்கமான நேயத்துடன் மனிதர்களிடம் அவர் பழகுகிறார். மனிதர்களை அவர்களின் இயல்பான பலவீனங்களுடன் எடுத்துக்கொள்ளவும் அவர்களை மன்னிக்கவும் அவரால் முடிகிறது. ஒருவரது தகுதியை அவரது பங்களிப்பைக்கொண்டே அவர் மதிப்பிடுகிறார், அவர்களின் தவறுகள் அல்லது குறைகளை வைத்து அல்ல

உதாரணமாக ர·பீக் அகமது கித்வாய் செய்யும் பிழைகள் தொடர்ச்சியாக அவரது கவனத்துக்கு வருகின்றன. ஆடம்பரத்தில் ஆர்வம் கொண்டிருந்த ர·பீக் அகமது கித்வாய் தொழிலதிபர்களிடம் அவ்வப்போது பணம் பெற்றுக்கொள்கிறார். அதை கண்டிக்கும்போது கூட நேரு அமைச்சராக கித்வாயின் திறமையை மதிக்கிறார். கித்வாய் நேரு மீது கோபம் கொண்டு பட்டேலிடம் சென்று நேருவைக் கவிழ்க்க தான் துணைநிற்பதாக சொன்னதாகவும் பட்டேல் அவரைத் தவிர்த்து விட்டதாகவும் மத்தாய்சொல்கிறார். அந்தவிஷயம் நேருவுக்குத் தெரியும்போதுகூட நேரு அதைவைத்து கித்வாயை தூக்கி வீச எண்ணவில்லை.

கித்வாய் காங்கிரஸை விட்டுப்போய் ஆசாரிய கிருபளானியின் கட்சியில்சேர்ந்து விடுகிறார். அந்தக்கட்சி எடுபடவில்லை. நேரு ஆளனுப்பி கித்வாயை வரவழைக்கிறார். ”முட்டாள், உனக்கு ஒரு சுண்டெலி அளவுக்குக் கூட மூளை கிடையாது” என்று வைகிறார். அதன்பின் கித்வாயை தன் அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக்கொள்கிறார். ர·பியை நேரு தன் தம்பியைப்போலவே எண்ணினார். அபாரமான திறமைகொண்ட ர·பி கட்டற்றவரும்கூட என்பதை எப்போதுமே புரிந்துகொண்டவராக இருந்தார் நேரு.

அதேபோல ராஜாஜியின் திறமை மேல் நேருவுக்கு மதிப்பிருந்தது. ராஜாஜி நேருவுக்கு எதிராகத் திரும்பி கடுமையான எதிர்ப்பிரச்சாரங்களில் ஈடுபட்ட போதும் அவர் அந்த மதிப்பை மாற்றிக்கொள்ளவில்லை. இக்கட்டான சூழல் ஒன்றில் பட்டேலுக்கும் தனக்கும் இடையே ஒரு ஊடகமாக அமைய ராஜாஜி தேவை என்று தோன்றியபோது ராஜாஜியை அவர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்கிறார்.

நேரு நிதானமான ராஜதந்திரி அல்ல. உணர்ச்சிகரமானவர். சட்டென்று சினம் கொள்ளக்கூடியவர். குறிப்பாக வேண்டியவர்களிடம் அவர் கடுமையாகவே கோபம் கொள்கிறார். ஆனால் மனிதர்களிடம் கடைசி துளி அந்தரங்கத்தைக்கூட திறந்து வைத்து பழகும் மனிதர் அவர். அவருக்கு அவரது சீடர்கள் மற்றும் சேவகர்கள் பலரிடம் இருந்த உறவு என்பது மிகநெருக்கமான, உணர்ச்சிகரமான ஒன்று.

உதாரணமாக நேருவுக்கு மகனைப்போன்ற ‘நாணு’ என்ற ஏ.ஸி.நாரயணன் நம்பியார் மலேசியாவில் இந்திய ஹைகமிஷனராக இருந்தார். அவர் இந்தியா வரும்போதெல்லாம் நேருவின் பிரதமர் இல்லத்தில்தான் தங்கினார். நேரு அவரை கண்டிக்கிறார், கோபித்துக்கொள்கிறார். கடைசிக்காலத்தில் நேரு சீனாவின் துரோகத்தால் மனம் உடைந்து உடல்நிலை மோசமாகி மரணத்தைக் காத்திருந்தபோது தனக்குள் ஆழ்ந்தவராக இருந்தார். அந்தமுறை நாணுவை அவர் கண்டிக்கவில்லை. கிளம்பும்போது  ஏ.எஸி.என் நம்பியார் ‘நீங்கள் என்னை திட்டவில்லை.’ என்று துயரத்துடன் சொல்கிறார். நேரு வெறுமே புன்னகை செய்கிறார். விடை சொல்லும் நம்பியார் மத்தாயிடம் கண்ணீருடன் ‘இனிமேல் நான் நேருஜியைப் பார்க்கமுடியாதென்று தோன்றுகிறது” என்கிறார். நேருவின் பெரும்பாலான உறவுகள் அத்தகைய ஆழமான தனிமனித உணர்ச்சி கொண்டவை.

நேருவின் பலவீனமும் அதுவே. அவரால் எவரையும் மனம் புண்படும்படி கடுமையாக ஏதும் சொல்ல முடிவதில்லை. கொள்கையில் உறுதியாக இருந்து மனிதர்களை வருத்த அவரது அகம் ஒத்துக்கொள்ளவே இல்லை. அவருக்கு தன் உறவினர்களுக்கு சலுகைகள் காட்டுவதும் பதவிகள் அளிப்பதும் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழியில்லை அவருக்கு. விஜயலட்சுமிபண்டிட் அமெரிக்காவில் இந்திய தூதராக இருக்கும்போது மிதமிஞ்சி செலவுசெய்கிறார். நேருவின் பதிப்பகத்தில் இருந்து அவருக்கான பதிப்புரிமைத்தொகையை வாங்கிசெலவுசெய்கிறார். ஆனால் நேருவால் அவரை கண்டிக்க முடியவில்லை. மத்தாயிடம் பதிப்பகத்துக்குக் கடிதம் எழுதும்படி மட்டுமே சொல்கிறார்.

விஜயலட்சுமி பண்டிட் அமெரிக்காவில் தூதராக இருந்தபோது முன்பு டெல்லியில் அமெரிக்க தூதராக இருந்தவ ஹென்றி கிரேடிக்கு  பணம் கடன் கோரி கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில் பணவீக்கம் காரணமாக இந்தியா திணறுவதனால் இந்திய அரசின் பணம் தனக்கு வந்து சேரவில்லை என்று பொய் சொல்லியிருந்தார். பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. ஹென்றி கிரேடி நேருவுக்கு விஜலட்சுமியின் கடித நகலை இந்திய தூதர் வழியாக அனுப்பியிருந்தார். நேரு அதைப் பார்த்து கடுமையாக கோபம் கொள்கிறார். ஆனால் அப்போதுகூட விஜயலட்சுமியை அவரால் பெரிதாக கண்டிக்கவோ தண்டிக்கவோ முடியவில்லை. பணத்தைக் கொடுக்கவே ஏற்பாடுசெய்கிறார்.

அதுவே காந்தியாக இருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப்பார்த்தால் நேரு எப்படிப்பட்டவர் என்று புரியும். காந்திக்கு மனிதர்கள் முக்கியமில்லை, விழுமியங்கள்தான் முக்கியம். விஜயலட்சுமிப் பண்டிட் தன் தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கோரி தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் இல்லையேல் தான் அதற்காக உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் காந்தி சொல்லியிருப்பார். விஜயலட்சுமி பண்டிட் மிக ஆழமாகப் புண்பட்டு போயிருப்பார். ஏற்கனவே தாங்களும் சத்தியசோதனை செய்துகொண்டிருந்தவர்களால் மட்டுமே காந்தியுடன் ஒத்துப்போக முடிந்தது.  

அதைப்போல நெருக்கமான உறவினரான ஜி.பி.ஹத்தீ சிங் உயர் பதவிக்கு ஆசைப்பட்டபோது நேருவால் தட்டமுடியவில்லை. மலாயாவின் தூதராக அவர் நியமிக்கப்படுகிறார். ஆனால் அந்த நியமனத்தால் நேருவின் நற்பெயர் கலையும் என எண்ணும் மத்தாய் சென்று அவரை கலைக்கிறார். அவரது தகுதிக்கு வெறும் ஒரு தூதர் பதவி குறைவானது என்று சொல்லி ஜி.பி.ஹத்தீ சிங்கை விலகச்செய்கிறார். அதை பின்னர் நேருவிடம் சொல்லும்போது நேரு மிக ஆசுவாசமாக உணர்கிறார்.

நேருவின் இந்த இயல்பே அவரை அனைவரையும் அணைத்துப்போகும் ஜனநாயகவாதியாக ஆக்கியது, அதேசமயம் பலவீனமானவராகவும் ஆக்கியது. ஈடிணையற்ற மக்கள்செல்வாக்குடன் இருந்தமையால்தான் அவரால் நீடிக்க முடிந்தது. கட்சிக்குள் அவரது எதிரிகள் அவரை பலமுறை சுவர் வரை உந்தியிருக்கிறார்கள். மூன்று சந்தர்ப்பங்களை மத்தாய் சொல்கிறார். இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக ராஜாஜி வரவேண்டும் என்று நேரு விரும்புகிறார். ராஜாஜிமீது காந்திக்கு இருந்த நம்பிக்கை ஒரு காரணம் என்றால் ஓரு வட இந்தியர் பிரதமராக இருக்கும்போது தென்னிந்தியர் ஜனாதிபதி ஆகலாமென நேரு எண்ணியது  இன்னொரு காரணம்.

கொஞ்சம்கூட ராஜதந்திரம் இல்லாமல் நேரு அதை ராஜாஜியிடமே சொல்லி வைக்கிறார். ஆனால் காங்கிரஸ் காரியக்கமிட்டி ராஜாஜியை ஏற்கவில்லை. அவர்கள் ராஜேந்திரப்பிரசாத்தை முன்நிறுத்துகிறார்கள். காமராஜின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியும் ராஜாஜியை ஏற்கவில்லை. ஆகவே வேறு வழியில்லாமல் நேரு ராஜேந்திர பிரசாத் குடியரசின் தலைவராக ஆக ஒத்துக்கொள்கிறார்.

உண்மையில்  நேரு பிடிவாதமாக இருந்திருந்தால் ராஜாஜியை ஏற்பது தவிர காங்கிரஸ¤க்கு வேறு வழியில்லை, ஏனென்றால் காங்கிரஸின் ஒட்டுமொத்த அமைப்பு என்பது முழுக்கமுழுக்க நேருவைச்சார்ந்ததே. தான் கைவிடப்பட்டதாக உணர்ந்த ராஜாஜி கோபத்துடன் ஊர்திரும்பி நேருவுக்கு எதிரியாக வேலைசெய்கிறார். ஆனால் பூசலிட்டு ஒன்றை நிலைநாட்டுவது நேருவின் இயல்புக்கே மாறானது என்கிறார் மத்தாய்

அதேபோல டாக்டர் ராதாகிருஷ்ணனை அடுத்த குடியரசுத்தலைவராக ஆக்க நேரு விரும்பி வழக்கம்போல அதை அவரிடமே சொல்லியும் விடுகிறார். ஆனால் ராஜேந்திரபிரசாத் மீண்டும் குடியரசுத்தலைவராக நீடிக்க விரும்புகிறார். அதை மீற நேருவால் முடியவில்லை. டாக்டர் ராதாகிருஷ்ணனை மனம் புண்படுகிறார். அம்பேத்கார் 1950ல்  அமைச்சர் பதவியை விட்டுச்சென்றதும் இதேபோன்றதே. நேருவால் கட்சிக்குள் ஒரு பிளவை சமாளிக்க முடியாதென்பதே உண்மை.

நேருவால் பிறர் துன்பங்களை உடனடியாக தன் துன்பமாகவே எண்ண முடிகிறது. சட்டென்று கலங்கிக் கண்ணீர் விடுபவர் அவர். தேசப்பிரிவினைக் காலகட்டத்தில் டெல்லி எங்கும் அகதிகள் நிறைந்து வழிந்த நாட்களில் வெளியே செல்லும்போது கையிலிருக்கிற அனைத்தையுமே  கொடுத்துவிடுகிறார். அவருக்கு அவரது நூல்களின் பதிப்புரிமைத்தொகை அல்லாமல் வருமானம் இல்லை. எவரிடமும் எதையும் பெற்றுக்கொள்ளக்கூடியவர் அல்ல நேரு. ஆகவே குறைவாகவே அவரது பையில் பணம் இருக்கும்படிப் பார்த்துக்கொள்கிறார் மத்தாய்.  ஆனால் நேரு தன் பாதுகாப்பு அலுவலரிடமே கடன் வாங்கி ஏழைகளுக்குக் கொடுக்கிறார்.

நேரு வரைக்கும் சென்ற எந்த ஒரு கருணைக்கோரிக்கையையும் அவர் தட்டியதே இல்லை என்று மீண்டும் மீண்டும் பதிவுசெய்கிறார் மத்தாய்.  துயரமடைந்த ஒருவரின் கதையைக் கேட்டால் கலங்கி தானும் கண்ணீர் மல்கிவிடுகிறார். சட்டத்தையும் வழக்கத்தையுமெல்லாம் மீறி அவர்களுக்கு உதவிசெய்கிறார். ஒரு மனிதாபிமானச் செயலுக்கு சம்பிரதாயம் சட்டம் எதுவுமே தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்.யாராவது சட்டத்தைப்பற்றி சொனால் கோபம் கொண்டு எகிறுகிறார்.

நேரு வரைக்கும் ஒருவிஷயம் சென்றதென்றால் அது நியாயமாகவே முடியும் என்று மத்தாய் ஆழமாக நம்புவதை இந்நூலில் பல இடங்களில் பார்க்கிறோம். இயல்பாகவே எது நியாயமோ அதை நோக்கியே நேருவின் மனம் செல்கிறது. அநீதிகளோ அலட்சியங்களோ அவரைக் கொதிக்கச் செய்கின்றன. ஒரு விஷயம் நியாயம் என்று அவருக்குப் பட்டதென்றால் அவர் அதனுடன் தான் நிலைகொள்கிறார். அதை உறுதியாகவும் உடனடியாகவும் ஏற்றுக்கொள்கிறார்.

அரசியலில் , நிர்வாகத்தில் இது எளிய விஷயம் அல்ல. நடைமுறையில் எதிரி யாரென்று பார்க்கவேண்டியிருக்கிறது. சூழல் என்ன என்றும் விளைவு என்ன என்றும் பார்க்கவேண்டியிருக்கிறது. அப்படிப் பார்க்கையில் அவ்வப்போது சில சிறிய விஷயங்களில் அநீதிகளை கண்டும் காணாமலும் விடாமல் ஒருவர் ஒரு சிறிய நிறுவத்தைக்கூட தலைமைதாங்கி நடத்தவே முடியாது. ஓர் அமைப்பு பெரிய ஓர் இலக்குக்காக சிறிய அநீதிகளை கண்டிப்பாக இழைக்கும். ஆனால் நேரு அந்த மனநிலைக்கே அப்பாற்பட்டவராக இருக்கிறார்.

நேரு ஊழலுக்கு எல்லாவகையிலும் அப்பாற்பட்டவராக இருக்கிறார். எவரிடமும் எந்த பணமும் உதவியும் பெறுபவரல்ல அவர். அதற்கு அவரது ஒழுக்க நெறி மட்டுமல்ல அதுசார்ந்த அகங்காரமும் காரணம் என்று மத்தாய் சொல்கிறார். காங்கிரஸில் எந்த நிதியும் எவரிடமும் பெறாதவராக அவர் இருந்தார். ஆகவே அவர் எவருக்குமே கடமைபப்ட்டவரல்ல.

சுதந்திரப்போராட்ட காலத்தில் வருமானம் இல்லாமல் சிரமப்படுகிறார் நேரு. ஏதாவது வேலைக்குச் செல்லவா என்று காந்தியிடம் கேட்கிறார். அது நல்ல எண்ணம்தான் என்று சொல்லும் காந்தி இதழாளராகவோ அல்லது ஆசிரியராகவோ செல்லலாம் என்றும் ஜி.டி.பிர்லாவிடம் சொல்கிறேன் என்றும் சொல்கிறார். ஆனால் ஜி.டி.பிர்லா உதவ முன்வந்தபோது நேருவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருக்கு அது அவமானமாகப் படுகிறது.

எம்.ஓ.மத்தாய் நேருவிடம் வேலைக்குச் சேரும்போது நேருவின் கையில் பணம் இல்லை. அவர் மத்தாய்க்கு தன்னால் ஊதியம் ஏதும் அளிக்க முடியாது என்று சொல்கிறார். மத்தாய் தான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி ஊதியத்தை மறுத்துவிடுகிறார். நேருவின் கணக்குவழக்குகளை ஜமுனாலால் பஜாஜின் நிறுவன ஊழியர்கள்தான் பார்த்துக்கொள்கிறார்கள். பணம் முறைப்படி கணக்குபோடப்படாமையால் செலவிடப்படாமலேயே இருப்பதை மத்தாய் காண்கிறார்.

தனிவாழ்க்கையில் அசிங்கமான கஞ்சன் என்று மத்தாய் நேருவைச் சொல்கிறார். அவருக்கு அனேகமாக தேவைகளே இல்லை. ஆடம்பரங்களில் அவர் ஆர்வம் கொள்வதே இல்லை. பிறர் செலவுசெய்வதும் அவருக்கு புரிவதில்லை. அவரது செலவுக்குத்தேவையான பணம் அவரது நூல்களின் பதிப்புரிமையில் இருந்தே கிடைத்தது. அதில் கணிசமான பகுதியை மிச்சம் பிடித்து அவர் தன் மகளுக்கும் தங்கைக்கும் ஆனந்தபவன் ஊழியர்களுக்கும் எழுதிவைத்தார். ஆனால் நேரு விட்டுச்சென்ற சொத்து என்பது மிகமிகக் குறைவே.
இந்தியப் பிரதமருக்கும் பிற அமைச்சர்களுக்கும் இன்னும்கொஞ்சம் ஊதியம் வழங்கப்படலாம் என்ற கூற்றை நேரு அது தார்மீகமானதல்ல என்று மறுத்துவிடுகிறார். உங்களுக்கு நூல்கள் வழியாக நல்ல வருமானம் வருகிறதே, பிற அமைச்சர்கள் அப்படியல்ல என்று மத்தாய் சொல்லும்போதுகூட நேரு அதை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்தியக் குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் அவருக்கு அரசு அளித்த அலுவலகச் செலவுப்பணத்தை அதிசிக்கனமாகச் செலவுசெய்து மிச்சபணத்தைச் சேர்த்து தன் பேரக்குழந்தைகளுக்கு சேமிப்புக்கணக்கில் கட்டுகிறார். இந்தத் தகவலை நேருவுக்கு ரகசியமாகச் சொல்கிறார் மத்தாய். அடுத்த காங்கிரஸ் கமிட்டிக்கூட்டத்தில் அதை நேரடியாகக் கேட்டு ராஜேந்திரப் பிரசாத்தை தர்மசங்கடத்தில் ஆளாக்கினார் நேரு. அது அவருக்கு பெரிய முறைகேடாகத் தோன்றுகிறது!

நேரு முழுக்கமுழுக்க மதச்சார்பற்றவர் என்று மத்தாய் எழுதுகிறார்.  அவருடைய குடும்பச்சூழலிலேயே மதம் இல்லை. அவர்களின் நெருக்கமான குடும்ப நண்பர்கள் முஸ்லீம்பிரபுக்கள். முஸ்லீம் உயர்குடிப்பண்பாடே அவரது இல்லத்தில் இருந்தது.  இந்துமத நம்பிக்கைகள் மட்டுமல்ல இந்திய ஆசாரங்களான காலில் தொட்டு வணங்குவது பெரியவர்களைப் பார்த்தால் எழுந்து நிற்பது போன்றவைகூட அவருக்கு எரிச்சலூட்டின. நேருவின் வாழ்நாள் முழுக்க அவர் எதிர்த்தது இந்து அடிப்படைவாதத்தை என்பதனால் அவருக்கு இந்து மரபுமீதே ஒரு கசப்பு இருந்தது என்கிறார் மத்தாய்.

நேரு பிறர் எண்ணும் அளவுக்கு விரிவாக வாசித்தவரல்ல என்கிறார் மத்தாய். அவர் வாசித்தவற்றை விட எழுதியவையும் சொன்னவையும் அதிகம். மூலநூல்களை அவர் வாசித்ததில்லை என்று மத்தாய் சொல்கிறார். நேரு சிறந்த பேச்சாளர் அல்ல. தன் உரைகளை நேரு முன்னதாக எழுதி மனப்பாடம்செய்தபிறகே வாசித்தார். 1947 ஆகஸ்ட் 15ல் அவர் ஆற்றிய வரலாற்றுச்சிறப்பு மிக்க உரையில் ‘ Tryst with destiny’ என்ற சொல்லாட்சியை முதலில் ‘date with destiny’ என்றுதான் நேரு எழுதியிருந்தார். அமெரிக்க பொருளில் date என்பது ஆண்பெண் உறவைக்குறிக்கும் என்று சொல்லி  Tryst என்றோ Rendesvous என்றோ அதை மாற்றலாம் என்று தான் சொன்னதாக மத்தாய் எழுதுகிறார்.

ஆனால் காந்தி கொலையுண்டபோது நேரு ஆற்றிய உரை அவர் தன்னிச்சையாக ஆற்றியது என்கிறார் மத்தாய். அகில இந்திய வானொலிக்கு அதை ஆற்ற செல்லும் வழியில் நேரு மத்தாயை சாலையில் பார்த்து காரில் ஏற்றிக்கொள்கிறார். நேரு இலைபோல நடுங்கிக்கொண்டிருந்தார் என்கிறார் மத்தாய். அவர் எதையுமே யோசிக்கவில்லை. மத்தாய் ஏதோ சொல்ல வருகிறார், பேசாதே என்று நேரு அவரை தன் கையால் தொட்டு சைகை காட்டுகிறார். வானொலி நிலையத்துக்குச் சென்றதுமே நேரு தன்னிச்சையாக உணர்ச்சிகரமாக அந்த உரையை நிகழ்த்தினார்.

துயரத்தின் உச்சியிலும்கூட இந்தியாவின் அமைதி தான் நேருவுக்கு முதல் கவலையாக இருக்கிறது. காந்தியை ஒரு முஸ்லீம் கொன்றுவிட்டான் என்ற எண்ணம் ஏற்பட்டு அதன்மூலம் வன்முறை பரவிவிடக்கூடாது என்று அவர் நினைக்கிறார். இந்துவெறியனால் காந்தி கொல்லபப்ட்டார் என்ற அவரது ஆரம்பச் சொற்றொடர் அதன் விளைவுதான்.    

நேருவுக்கு காந்தியிடம் உள்ள உறவை மத்தாய் போகிற போக்கில் எழுதினாலும் அதன் ஆழத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  நல்ல குருசீட உறவென்பது அப்பாமகன் உறவுக்கு நிகரானது.  அது வணக்கமும் நிராகரிப்பும் கலந்தது. நேருவுக்குக் காந்தி இந்துமதச்சார்பு கொண்டவராகவும் பழைமையானவராகவும் இருபதாம் நூற்றாண்டுக்குப் பொருந்தாத பத்தாம்பசலி திட்டங்களை வைத்திருப்பவராகவும் தோன்றினார்.

நேரு தொழில்நுட்பத்தை வழிபட்டார். நிபுணர்களின் மூளைத்திறனே சமூகத்தின் ஆற்றல் என நம்பினார். வலிமையான அரசு இல்லாமல் ந்ரிவாகம் இல்லை எனக் கருதினார். ஆகவே கிராமநிர்மாணம் போன்ற காந்தியக் கொள்கைகளை அவர் அபத்தமானதாக எண்ணினார். தருணம் கிடைக்கும்போதெல்லாம் நெருக்கமானவர்களிடம் காந்தியைப்பற்றிச் சலித்துக்கொண்டார். அந்தரங்க உரையாடல்களில் ‘பிற்போக்குக் கிழவர்’ என்று சொல்லி நக்கல் செய்தார்.

ஆனால் காந்தியிடம்  அவர் மிகமிக நெருக்கமாக இருந்தார். தன் அந்தரங்கத்தை முழுக்க காந்தியிடமே அவர் கொட்டினார். பூமியில் காந்தியிடம் நெருங்கிய அளவுக்கு நேரு எவரிடமும் நெருங்கவில்லை. ஆகவே காந்தியின் மரணம் நேருவுக்கு மிகப்பெரிய அடியாக இருந்தது. அதன் பின் நேரு உள்ளூர தனிமைப்பட்டார். தோழர்களிடம் அவர் அந்த அளவுக்கு நெருங்கியமைக்கும் அதுவே காரணம்.ஆனாலும் அவர் ஆன்மாவில் காந்தி இல்லாத குறையை கடைசி வரை உணர்ந்தார். காந்தி இருந்தபோது நேருவில் இருந்த தன்னம்பிக்கை பின்னர் வரவே இல்லை.

காந்தி இறந்து பல மாதங்கள் கழித்து ஒருமுறை நேருவின் அறையை மத்தாய் திறக்கும்போது உள்ளே நேரு மௌனமாக கண்ணீர் வடிப்பதைப் பார்க்கிறார். நேரு எதையோ கண்டு தன் பிரியத்திற்குரிய பாப்புவை நினைவுகூர்ந்து அழுகிறார் என்று ஊகித்த மத்தாய் மெல்ல கதவை மூடிவிடுகிறார்.

இயல்பிலேயே ஜனநாயகவாதியான நேருவால் ஜனநாயக முறைமைகளுக்கு அப்பால் சிந்திக்கவே முடியவில்லை. ஆர்.கெ.டால்மியா தன்னுடைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் இலஸ்டிரேட்டட் வீக்லி வழியாக நேருவை கடுமையாகத் தாக்கிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தாக்குதல் தனிமனிதர் தளத்துக்குச் சென்றது. இந்திராகுறித்தும் அவர் வசைகள் எழுதினார். கடும் கோபம் கொண்ட நேரு அந்த இதழ்களுக்கு தான் கட்டிய சந்தாவை ரத்து செய்யும்படியும் மேற்கொண்டு அந்தக் குப்பைகளை வாங்கவேண்டாம் என்றும் சொல்கிறார்– அவ்வளவுதான். அதற்குமேல் அவரால் ஓர் அதிகார பீடமாக நின்று யோசிக்க முடிவதில்லை
 
நேருவுக்குப் பெண்களிடம் பெரும் ஈடுபாடு இருந்தது என்று மத்தாய் எழுதுகிறார். இளம்வயதில் அவர் கமலா நேருவிடம் பெரும் காதலுடன் இருந்தார். ஆனால் இந்திரா பிறந்ததை ஒட்டி கமலா நோயில் விழுந்தார். அத்துடன் கமலா நேரு குடும்பத்தின் உயர்குடிப்பாங்கான ஆசாரங்களில் ஈடுபடமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டு எப்போதும் எரிச்சல் கொண்டவராக ஆனார். ஆகவே நேருவுக்கு அவர் மீது ஏமாற்றம் இருந்தது. கமலா மறைவுக்குப் பின்னர் அவர் பெண் தொடர்புகளில் தாராளமாகவே ஈடுபட்டார்.

ஆனால் நேருவின் பெண்தொடர்புகளை விபச்சாரம் என்றோ, பெண்களை ஏமாற்றுவது என்றோ கொள்ளமுடியாதென்பதே மத்தாயின் நூல் காட்டுவது. அவர் பெண்களிடம் காதலில் விழுகிறார். பெண்கள் அவரை பலவகைகளில் அலைக்கழிக்கிறார்கள், கூட்டிச்செல்கிறார்கள். மிருதுளா சாராபாய், பத்மஜா நாயிடு, ராஜகுமாரி அமிர்த் கௌர், எட்வினா மௌன்ட்பாட்டன் போன்று அவருக்கு காதலிகள் பலர். அவர்களுக்குள் சண்டை சச்சரவு. நேரு பொதுவாக பெண்களிடம் மென்மையானவராகவும் அவர்களை வழிபடுபவராகவுமே இருந்திருக்கிறார். அவர்களை முகர்ந்து வீசும் காமுகனாக அல்ல. பல தொடர்புகளை கடைசி வரை பேணியிருக்கிறார்.

நேருவின் காதலிகள் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பவர்களாக இருக்கவில்லை. ஒரு வரலாற்றுநாயகராகிய அவர் மேல் மோகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் அந்த உறவுகளை நேரு பெரிய ரகசியமாக வைக்கவும் இல்லை. பத்மஜா நாயிடு நேருவின் அதிகாரபூர்வ இல்லத்தில்தான் தங்குகிறார். காதலிகளை நேரு சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்கிறார். கடிதங்கள் எழுதுகிறார், பரிசுகள் வழங்குகிறார்.

நேருவின் சகல பெண் தொடர்புகளையும் பிற பலவீனங்களையும் ஒன்று விடாமல் பட்டியலிடுகிறார் மத்தாய். முன்னுரையில் அதற்கு நியாயிகரணமாக ·ப்ரெடெரிக் மாஸன் எழுதிய நெப்போலியனின் குடும்பம் [Napoleon et sa famille. by Frederic Masson]என்ற நூலை குறிப்பிடுகிறார். வரலாற்றுமனிதர்களுக்கு அந்தரங்கமேதும் இல்லை, இருக்கலாகாது என்று சொல்லும் ·ப்ரெடெரிக் மாஸன் வரலாற்றை அவர்களின் அந்தரங்கம்தானே தீர்மானிக்கிறது என்கிறார்

மத்தாய் “பாலியல் ஒழுக்கம் கொண்ட ஒரு நேரு குடும்பத்தவரை நான் இனிமேல் தான் பார்க்க வேண்டியுள்ளது” என்று கூறுகிறார். தன்னைப் பற்றி “ஹார்மோன் விஷயத்தில் நான் யாரையும் குற்றம் சொல்லும் தகுதி கொண்டவனல்ல” என்கிறார். அதனாலேயே இவ்விஷயங்களில் அவர் அளிக்கும் மொத்த மதிப்பீடும் ஓரு வகை நம்பகத்தன்மை கொண்டதாகிறது. அவர் நேருவை அவதூறுசெய்துவிட்டார் என்ற வசை கிளம்பியது இக்காரணத்தாலேயே. 

ஆனால் மத்தாயின் நூல் நேருவை ஜனநாயகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மாபெரும் மனிதாபிமானியாகவே சித்தரிக்கிறது. அரசியல் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் தன் மனதுக்குப்பட்ட நியாயத்தையே நேரு செய்ததாகவும் அதை மீறி நடக்க நேர்ந்த சில அபூர்வ தருணங்களில் (உதாரணம் : கேரளத்தில் இ.எம். எஸ். நம்பூதிரிப்பாடு அமைத்த முதல் கம்யூனிச அரசைக் கவிழ்த்தது) அவர் மனம் புழுங்கியதாகவும் சொல்கிறார். அநீதியோ காழ்ப்போ தீண்டாத ஆளுமையாகவே இந்த கிசுகிசு வரலாற்றிலும் நேரு வெளிப்படுகிறார் என்பது ஓர் ஆச்சரியம்.  .

“எந்த மனிதனும் தன் வேலைக்காரன் முன் மாமனிதனாக இருக்க இயலாது என்று ஒரு கூற்று உண்டு. நான் உயிரோடு இருக்கும் வரை நேரு மாமனிதரென்றே சொல்லிக்கொண்டிருப்பேன்” என்கிறார் மத்தாய். அப்படி ஒரு மரியாதையை ஈட்டக்கூடிய மனிதர்கள் வரலாற்றிலேயே நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறப்பார்கள் என நான் எண்ணுகிறேன்.

[மேலும்]

[மறுபிரசுரம் / முதற்பிரசுரம் நவம்பர் 1 2009]

முந்தைய கட்டுரைஎம்.ஓ.மத்தாயின் நினைவுகள் 3
அடுத்த கட்டுரைஎம்.ஓ.மத்தாயின் நினைவுகள்-1