கருத்துக்களும் தகவல்களும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

புயலும் மகரந்தங்களும் கட்டுரையை விரும்பிப் படித்தேன்.

சில கருத்துக்கள்:

1) எழுத்தாளர்களை இரு வகையாகப் பிரிக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தொலைநோக்கி (டெலஸ்கோப்) எழுத்தாளர்கள், உலகளாவிய வெளி நோக்கு கொண்டவர்கள். புறம் பார்ப்பவர்கள். நுண்நோக்கி (மைக்ராஸ்கோப்) எழுத்தாளர்கள், மனிதமனத்தின் அடி ஆழத்தைக்கண்டெடுத்தளிப்பவர்கள். அகம் பார்ப்பவர்கள். இதேபோன்று சிந்தனையாளர்களுக்கிடையேயும் விரிந்து நோக்குபவர்களும், ஆழ்ந்து நோக்குபவர்களும் இரு பிரிவாக உள்ளார்களோ? பரந்து நோக்குபவர்கள் மலிந்து ஆழ்ந்து நோக்குபவர்கள் குறைந்து விட்டார்களோ? ஊடகங்களும், இணையமும் – குறிப்பாக சமூக ஊடகங்கள் – டெலஸ்கோப்பாக செயல்படுகின்றன, மைக்ராஸ்கோப்பாக செயல்படுவதில்லையோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

2) இருந்தும், ஊடகங்களும், இணையமும், மனித சரித்திரத்தில் முதன்முறையாக சாமானியனின் வாழ்க்கையின் ஆவணங்களை உருவாக்குகின்றன. செல்ஃபோன் உபயோகத்தின் புள்ளி விவ்ரங்களை ஒரு நகரளவில் தொகுத்தால் அவை சமூகவியலாளர்களுக்கு இன்றியமையாத தரவாக அமையும். கூகிள் தேடல்களும் முகநூல் லைக்குகளும் படித்த வர்க்கம் எவை நோக்கி செல்கின்றன என்று காட்டுகின்றன. இன்றில்லாவிட்டாலும் நாளை இவை ஆழ்ந்த, தரவின் அடிப்படையிலான, சிந்தனையை உருவாக்கும். கடந்த காலத்தைப்போல் நாட்டு நடப்பை யூகத்தினால், ஒரு அனுமானத்தினால் அறிய வேண்டியதில்லை.

காந்த சக்தியைப் பற்றி ஆய்வு செய்து கண்டதை கண்டபடி எழுதி ஒரு நிகழ்வுத் தொகுப்பை (phenomenology) வில்லியம் கில்பர்ட் 1600ல் செய்தார். கோட்பாடுகள் 250 வருடங்களுக்குப் பிறகு மேக்ஸ்வெல் மூலம் தெளிவு பெற்றன. ஊடகங்கள் இன்று நிகழ்வுத்தொகுப்பு செய்வதாகவும் நாளை இவை பலனளிக்கும் என்றும் கொள்ளலாம்.

3) சிந்தனையாளர்களுக்கு ஈடாக செயல்வீரர்களும் சிந்தனையை வளர்ப்பதற்கு காரணிகளாக இருந்திருக்கிறார்கள். மேற்கத்திய சிந்தனை வளர்ச்சியில் அலெக்சாண்டர், நெப்போலியன் போன்றோரின் பங்கு முன்னிலை தத்துவ மேதைகளுக்கு சற்றும் குறையாதது. கடந்த 150 ஆண்டுகளில் நடந்த வளர்ச்சியை காணும்போது இந்த வளர்ச்சிக்குக் காரணியாக இருந்த பல செயல்வீரர்கள் வரும் காலத்தில் சிந்தனை வளர்ச்சிக்கும் காரணிகளாக அமைவார்கள் என்று நம்புகிறேன்.

4) மேலை நாடுகளிலும் சிந்தனையாளர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வெளியே செயல்படுவதாகத் தெரியவில்லை. இந்தியாவில் சிந்தனையாளர்கள் வளராதது பல்கலைக்கழகங்கள் வளராததையே காட்டுகிறது. அரசின் துணை கொண்டு, வர்த்தக நிறுவனங்களின் துணை கொண்டு, பல்கலைக்கழகங்களில் மானுடவியல் துறைகளில் சிறப்புப் பேராசிரியர்களை நியமித்தால், சிந்தனைக்கு வாழ்க்கையை அற்பணிப்பவர்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தால், சீர்ந்த சிந்தனையாளர்கள் உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஒரு சிறந்த கட்டுரைக்கு மிக்க நன்றி

– கே ஆர் வைகுண்டம்

அன்புள்ள வைகுண்டம் அவர்களுக்கு,

ஆம் நீங்கள் சொல்வதையே நானும் நம்புகிறேன். இன்று வந்துகுவியும் தகவல்களைக் கையாளும் ஆய்வுமுறையை, அவற்றை கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளும் புதியவழிமுறையை மனிதகுலம் கண்டுபிடிக்கும்வரை நீடிக்கும் ஒரு தற்காலிக இடறல்தான் இது. கருத்துக்கள் இல்லாமல் மானுடம் வாழமுடியாது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10