எம்.ஓ.மத்தாயின் நினைவுகள்-1

 1. நிழல் வரலாறு

 

”நம்முடைய பழைய மன்னர்களின் பேரதிருஷ்டம் என்னவென்றால் அவர்களின் அடைப்பக்காரர்கள் வரலாறு ஏதும் எழுதவில்லை” ஒரு தனிப்பட்ட உரையாடலில் பி.கெ.பாலகிருஷ்ணன் சொன்னார். ஆனால் அது உண்மையில்லை என்றே நினைக்கிறேன். அக்கால வரலாறென்பதே வாய்மொழி வரலாறுதானே, அடைப்பக்காரர்கள் தங்களுக்கான வாய்மொழி வரலாற்றை உருவாக்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள்

பிரபல மலையாள இதழியலாளரான நரேந்திரன் சொன்னதாக ஒரு கூற்று உண்டு. ‘இரண்டுவகை வரலாறுகள் உள்ளன. ஒன்று அதிகாரபுர்வ வரலாறு, இன்னொன்று கிசுகிசு. முதலில் சொன்னது உண்மை போன்ற பொய், பின்னது பொய் போன்ற உண்மை.” சமீபகாலமாக முக்கியமான இடங்களில் இருந்தவர்கள் கிசுகிசுக்களைச் சேகரித்து எழுதும் தன் வரலாறுகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றின் பிரச்சினை என்னவென்றால் இவற்றை எழுதியவர்களின் இயல்பையும் அவர்களின் வாழ்க்கையையும் கணக்கில்கொண்டுதான் இவற்றை நாம் வாசிக்கவேண்டும் என்பது.

முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான எம்.ஓ.மத்தாய் எழுதிய ‘நேரு யுக நினைவுகள்’  [Reminiscences of the Nehru Age] இப்போது மறக்கப்பட்ட நூல். உக்கிர இந்துத்துவர்கள் மட்டும் அவ்வப்போது நேரு குடுமத்தை கரிபூச அதை மேற்கோள்காட்டுகிறார்கள். ஆனால் அதை எழுதியவரின் உளவியலுடன் இணைத்து வாசிக்க முடிந்தால் பயனுள்ள ஒரு நூல் என்றே நினைக்கிறேன்.

மத்தாய் 1945 ல் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் நேருவுக்கு உதவியாக இருக்க விரும்புவதாக அதில் சொல்லியிருந்தார். அப்போது மத்தாய் மலாயாவில் அமெரிக்கப் படைகளுக்கு உதவும் செஞ்சிலுவை சங்கத்தில் சிறிய உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். மத்தாயின் பின்னணியையும் பின்னர் அவரது மனநிலையையும் வைத்துப்பார்த்தால்  அவருக்கு தேசசேவை, தியாகம் இதிலெல்லாம்  எந்த ஆர்வமுமில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அதிகாரத்துக்குப் பக்கத்தில் செல்லவே அவர் விரும்பினார்.அதற்கான காலம் கனிந்துவிட்டது என உணர்ந்திருந்தார். இந்தியாவில் அதிகாரக் கைமாற்றம் நடக்கப்போகிறதென உணர்ந்து ஏராளமானவர்கள் காந்திக்குலாயுடன் காங்கிரஸ¤க்குள் படைஎடுத்த காலகட்டம் அது.

நேரு இரண்டாவது கடிதத்துக்குப் பதில் எழுதினார்.  மலாயாவில் நேரு சுற்றுப்பயணம்செய்யும்போது அவரைச் சந்திக்கும் மத்தாய் தன் ஆங்கிலப்பேச்சுவன்மையால் எளிதில் நேருவைக் கவர்கிறார். ஓர் அந்தரங்கக் காரியதரிசி தேவையான இடத்தில் நேரு இருந்தார், ஆனால் அதை அவரே உணரவில்லை. காந்தியமனநிலை கொண்ட காங்கிரஸ் தலைவராக இருந்த நேரு தன் கடிதங்களுக்கு தானே பதில் எழுதினார். தானே கணக்குவழக்குகளை கவனித்துக்கொண்டார், பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டார். அவருக்கு ஒரு ஸ்டெனோ கூட இல்லை. அவருடைய கடிதங்கள் தட்டச்சு செய்யப்படவில்லை. அந்த வகையான கற்பனையே அவர் மனதில் உதிக்கவில்லை

முதலில் மத்தாய் என்ன உதவியைச் செய்யக்கூடும் என்றே நேருவுக்குப் புரியவில்லை. ஆனால் மத்தாய் மலாயாவில்செய்துகொண்டிருந்த வேலை செஞ்சிலுவை சங்கச் செயலாளரின் அலுவலக உதவியாளர் தான். இந்தியாவில் அப்போது பிரமிட் வடிவிலான நிர்வாக முறை இருந்தது. அமெரிக்க வழியிலான செயலாளர் முறையை மத்தாய் பயின்றிருந்தார். மத்தாய்க்கு எந்தவிதமான ஊதியமும் தரமுடியாத பொருளாதார நிலையில் தான் இருப்பதாக நேரு சொன்னார். மத்தாய் தன்னை வேலைசெய்ய அனுமதிக்கும்படியும் பணம் தேவையில்லை என்றும் சொன்னார். நேருவின் அனுமதியுடன் மத்தாய் நேருவின் கடிதப்போக்குவரத்தை சீராக்கினார். கணக்குகளை ஒழுங்குபடுத்தினார். மிகமிக திறன் வாய்ந்த ஒரு செயலர் என்பதை நிரூபித்தார். நேருவுக்கு அவர் அவசியம்தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது.

மத்தாயின் சொற்களிலேயே நேரு எந்தவிதமான அலட்டலும் இல்லாத எளிமையான ஆளுமை. சட்டென்று கோபம் வந்தாலும்கூட மனிதர்களை சமானமாக நடத்தக்கூடியவர். ஆகவே மத்தாயை அவர் ஒரு மகனைப்போலவே நடத்தியிருக்கிறார். ஆனால் என்ன இருந்தாலும் பணியாள் பணியாள்தான்.

வாழ்நாளெல்லாம் பெரிய மனிதர்களுடன்,சரித்திர புருஷர்களுடன் பழகிவந்தவர் மத்தாய். நேரு வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் வேலையைக்கூட அவர் செய்தது வரிகளுக்கு இடையில் வாசித்தால் தெரிகிறது. ஆகவே மிக நுட்பமான ஒரு சுய இழிவு அவருக்கு இருந்திருக்கலாம். சமானமாக நடத்துவது, உபச்சாரமாக பேசுவது, மென்மையான நடத்தை எல்லாம் இருந்தாலும் உயர் அதிகாரத்தளத்தில் ஒருவர் உண்மையில் யார் என்பது நுட்பமாக உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கும். ஓரளவுக்கு உயர்மட்டப்பழக்கம் உடையவர்களுக்கு இது எளிதில் புரியும்.

ஆகவே உயர்வட்டத்தில் இருக்கும் எளியவர்கள் ஒருவகை இரட்டை ஆளுமைக்கு ஆளாகிறார்கள். ஒருபக்கம் அவர்கள் பணிவே உருவானவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒரு சந்திப்பில் கூட இருந்தால்டாந்த அறைக்குள் அவர்கள் இருப்பதே தெரியாது. ‘ஆளிலி’ [Non entity] களாக இருப்பார்கள். ஆனால் மறுபக்கம் தங்கள் அதிகார செல்லுபடியாகும் இடத்தில் அவர்கள் பலமடங்கு வீங்கிப்பெருத்த ஆளுமை ஒன்றைக் காட்டுவார்கள். தங்கள் அடையாளத்தையும் பங்களிப்பையும் பற்றி ஓயாமல் அடிக்கோடிட்டுப் பேசுவார்கள்.

மத்தாயின் இந்நூலில் அவரது ஆளுமையின் இரண்டாவது முகம் வெளிப்படுகிறது. அவர் தன்னை தேசங்களின் தலைவிதியைத் தீர்மானித்த ஒரு யுகபுருஷன் போலக் கற்பனைசெய்துகொள்கிறார். நான்  நான் என்றே இந்த சுயசரிதை பேசுகிறது. நேரு தன்னை சமானமாக நடத்தியதை தன்னுடைய அதிகாரத்திறனால் வாய்த்தது என்கிறார். ‘மறுநாள் பெர்னாட் ஷாவை நானும் நேருவும் சந்திக்கப்போக ஒழுங்குசெய்யபட்டிருந்தது’ ‘சர்ச்சிலுடனான சந்திப்பிற்கு நாங்கள் இருவரும் சென்றோம்’என்பது மாதிரியான வரிகளை மத்தாய் என்ன மனநிலையில் இருந்து எழுதியிருப்பார் என எளிதில் ஊகிக்கலாம்.

‘யானைமேல் ஓர் ஈ அமர்ந்து பாலத்தைத்தாண்டி வந்தது. வந்தபின் ஈ சொன்னது, நானும் யானையும் சேர்ந்து பாலத்தை உலுக்கு உலுக்கு என்று உலுக்கிவிட்டோம் என்று’. குஷ்வந்த்சிங் மத்தாயின் நேரு யுக நினைவுகளைப்பற்றி ரத்தினச்சுருக்கமாக இப்படி விமரிசனம்செய்திருக்கிறார். மத்தாய் தன் நூலில் எந்த தேசத்தலைவரைப்பற்றியும் மதிப்புடன் எழுதவில்லை –நேரு, அம்பேத்கார் இருவரையும் தவிர. அந்த மதிப்பின்மையை தான் வெளிப்படுத்தி வந்ததாகவும் எழுதுகிறார்.

மலையாள இதழாளர் நரேந்திரன் ஒருமுறை நேரு அலுவலகத்துக்குச் சென்றபோது மூத்த அரசியல்வாதியும் சுதந்திரப்போராட்ட தலைவருமான ஒருவர் அமர இடமில்லாமல் நின்று கொண்டிருக்க மத்தாய் இருகால்களையும் மேஜைமேல் தூக்கிப்போட்டு சுருட்டு பிடித்து புகையை அவர் முகத்தில் விடுவதை கண்டதாக எழுதியிருக்கிறார்.

எளிமையான கேள்வி இதுவே, மத்தாய் யார்? ஒரு குமாஸ்தா, எடுபிடி. தேசத்துக்கு அவர் என்ன செய்தார்? நன்மையாக ஏதும் செய்திருக்க வாய்ப்பில்லை. பலநூறு பக்கங்கள் எழுதும் மத்தாய்கூட தான் தேசத்துக்கோ பொதுநலனுக்கோ ஏதும்செய்ததாக எழுதமுடியவில்லை. சில தனிநபர்களுக்காக சில தருணங்களில் நேருவிடம் பரிந்து பேசியதை மட்டுமே அவரால் சொல்லமுடிகிறது. தேசநலனுக்காக இளம்வயதில் அனைத்தையும் துறந்து இறங்கி அடிபட்டு சிறைபட்டு வந்த தலைவர்களை அலட்சியப்படுத்த என்ன தகுதி மத்தாய்க்கு?

அவர்கள் சிலசமயம் ஆங்கிலம் பேசத்தெரியாதவர்களாக இருக்கலாம். சிலசமயம் ஒரு ராஜதந்திர  உரையாடலை நிகழ்த்த முடியாதவர்களாக இருக்கலாம். அவர்களில் பலருக்கு கள அரசியல் உண்டு. அந்த கட்டாயங்களுக்கு ஆட்பட்டு அவர்கள் சிபாரிசுகளுக்கு வந்திருக்கலாம். ஆனால் மத்தாய் அவர்களை எவரையுமே சாதகமான கோணத்தில் பார்க்கவில்லை. மத்தாய் பரமசிவன் கழுத்துப்பாம்பு.

ஏன் மத்தாய் அந்த இடத்தில் இருந்தார்? ஒன்று, நேருவுடனான உறவை அவர் மிகச்சரியாக வைத்துக்கொண்டார். உண்மையிலேயே மத்தாய் நேருவுக்கு மிக உதவியாக இருந்தார். செயலாளராக மட்டுமல்ல, மத்தாய்  ஒரு மாபெரும் சதி நிபுணர். சதிகளில் பழக்கமில்லாத நேருவுக்கு அரசியலதிகாரத்தைக் கையாள அப்படி ஒருவரின் உதவி தேவைப்பட்டது.

இரண்டு, அந்தரங்கச் செயலாளாராக ஒருவர் சிலவருடம் இருந்துவிட்டால் அவர் நிறையத்தெரிந்தவர் ஆகிவிடுகிறார். அது அவருக்கு ஒரு வலிமையை அளிக்கிறது. அவர் வன்முறையில் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் அந்தரங்கச்செயலாளரை எளிதில் ‘அகற்ற’ முடியும். நேருபோன்ற ஜனநாயகவாதியால் அது முடியாது. 

அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் அடைப்பக்காரர்கள் ஒருகட்டத்தில் விலகவேண்டியிருக்கும். மத்தாய் ராஜகுமாரி அமிர்தகௌருடன் சேர்ந்து ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து அந்த ஊழலில் பெயர் கெட்டுப்போனமையால் விலக்கப்பட்டார்.ஆனாலும் நேரு இருந்தவரை அவர் முக்கியமானவராக இருந்தார். இந்திரா காந்தி அவரை நெருங்கவிடவில்லை. ஒதுக்கப்பட்டவராக சென்னைக்கு வந்து வாழ்ந்தவர் அந்த நினைவுகளை இந்திரா 1977 தேர்தலில் தோற்று ஜனதாக்கட்சி ஆட்சியில் இருக்கும்போது தன்னுடைய சுயசரிதையை மத்தாய் எழுதினார்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டாலும்கூட மத்தாயின்நூல் முக்கியமானது என்றே நான் நினைக்கிறேன். அதன் பக்கங்களில் இருந்து நமக்கு அதிகாரபூர்வ வரலாறுகளில் இல்லாத ஒரு நுண்வரலாறு கிடைக்கிறது. காழ்ப்புடன் சித்தரிக்கப்பட்டிருந்தாலுகூட அரசியல் மனிதர்களின் பலவீனங்களின் ஒரு சித்திரம் கிடைக்கிறது. அவற்றையும் கருத்தில்கொண்டு நாம் வரலாற்றைப் பார்க்க முடிகிறது.

ஆனால் இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும், இந்தியாவில் யார் ஜனநாயகவாதிகளோ அவர்களைப்பற்றியே இத்தகைய வரலாறுகள் எழுதப்படுகின்றன. எந்த எல்லைக்கும் செல்லத்துணியும் நம் உள்ளூர்த்தலைவர்களைப் பற்றி எவரும் எழுதுவதில்லை. எழுதினால்  அவர்களைப்பற்றிய பிரபல வரலாறுகள் அந்த இரண்டாம் வரலாற்றின் கால்புள்ளி அரைப்புள்ளி அளவுக்கே இருக்கும் என்றுபடுகிறது.

 

[மேலும்]

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் அக் 31 2009

முந்தைய கட்டுரைஎம்.ஒ.மத்தாயின் நினைவுகள் 2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 12