களப்பிரர்,பாண்டியர்,நூல்கள்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் எழுத்து வேகம் பிரமிக்க வைக்கிறது. என் படிப்பு வேகம் கூட இவ்வளவு
இல்லை! பதிவுகள், புத்தக விமர்சனங்கள், சினிமா, காந்தி, அசோகவனம்,
சிறுகதைகள் எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுகிறீர்கள்! எப்படி
உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?

காவல் கோட்டம் கட்டாயமாக வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை
உருவாக்கிவிட்டீர்கள். பெரிய புத்தகம் என்றால் இப்போதெல்லாம் கொஞ்சம்
தயக்கம். அதுவும் எஸ்.ரா.வின் நெகடிவ் விமர்சனத்தை படித்த பிறகு தயக்கம்
அதிகமாக இருந்தது. உங்கள் விரிவான விமர்சனம் ஆவலைத் தூண்டுகிறது.

லோகிததாஸ் சீரிசும் அப்படித்தான். தமிழில் கிரீடம் படம்
பார்த்திருக்கிறேன், பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை. இப்போது
மலையாளத்தில் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

சட்டநாத கரையாளர் பதிவும் அருமை. இந்த புத்தகத்தையும் தேடித் பிடித்து
வாங்க வேண்டும்.

உங்களிடம் ஒரு விஷயம் இன்னும் புரியவே இல்லை. ஒரு புறம் மிக கறாராக
படைப்புகளை விமர்சிக்கிறீர்கள். இன்னொரு புறம் நா.பா.வின் ராணி
மங்கம்மாள் நல்ல சரித்திர நாவல் என்கிறீர்கள்! கபாடபுரம் மாதிரி
புத்தகங்களை விட ராணி மங்கம்மாள் பெட்டர்தான். ஆனால் அதில் – பொன்னியின்
செல்வன் மாதிரி – நல்ல கதைப் பின்னல் (plot) கூட இல்லையே? பாப்புலர்
நாவல்களை பற்றி கொஞ்சம் கருணையோடு பேச நினைக்கிறீர்கள் போல. ஆனால் உங்கள்
பாப்புலர் நாவல் லிஸ்டில் இருந்து சில பல நாவல்களை நான் தேடி படித்தேன் –
வாசந்தியின் ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன, பொன்னர்-சங்கர், கயல்விழி,
சமுதாய வீதி போன்றவை மறக்க வேண்டியவை, படிக்க வேண்டியவை இல்லை என்று நான்
நினைக்கிறேன். இது ரசனை வேறுபாடு மட்டும்தானா என்று புரியவில்லை. நீங்கள்
சீரியஸாக போட்டிருக்கும் பட்டியலில் அனேகமாக எல்லாம் எனக்கும்
பிடிக்கிறதே!

அன்புடன்
ஆர்வி

 

களப்பிரர் காலம் குறித்த கட்டுரையில் முனைவர் க.ப.அறவாணனின் “களப்பிரர் காலம் பொற்காலம்’ என்ற நூலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்நூலுள்  உள்ளடக்கமாக உள்ள களப்பிரர் காலம் தமிழரின் அரசாட்சி கோலோச்சிய காலம் என்ற மையப் பொருள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதா?

கார்த்தி

 

அன்புள்ள கார்த்தி

களப்பிரர்காலம் ஒரு பொற்காலம் என்று சொல்லலாம் என்றே தோன்றுகிறது.  அக்காலத்து நீதிநூல்கள், அக்காலத்து இலக்கணா நூல்கள் அதையே காட்டுகின்றன. கல்விமூலம் தமிழகத்து  இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணையவைக்கப்பட்ட காலமாக அது இருந்திருக்கவேண்டும். வன்முறை இல்லாமல் அதை சமணம் நிகழ்த்தியும் இருக்கவேண்டும். அதை அறவாணான் சொல்கிறார்

அப்படி ஒரு பொற்காலம் இருந்தால் அது தமிழர்களுடையதாகத்தானே இருக்கவேண்டும் என மேற்கொண்டு அவர் செல்வது அவரது சார்புநிலைக்கு மட்டுமே சான்று.

ஆனால் களப்பிரர் இங்கே நடத்தியது ‘அன்னியர்’ ஆட்சி அல்ல. அபப்டி இன்றைய கருத்தை அன்றைய வரலாற்றில்போடுவதே அபத்தமானது. அன்று மக்கள் கூட்டம்கூட்டமாக இடம்பெயர்வதும் சென்ற இடத்தில் அங்குள்ள மக்களுடன் கலந்து வேரூன்றுவதும் சாதாரணம். தமிழகத்தின் மக்கள் என்பதே அப்படி வந்துகொண்டே இருந்த பல்வேறு சமூகங்களின் பெரும்கூட்டுதான். களப்பிரரும் ஒரு தலைமுறைக்குப்பின்னர் தமிழர்களாகவே ஆகியிருப்பார்கள்.தமிழுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கும்தான் பங்களித்திருப்பார்கள்

அந்தக்கோணத்தில் பார்த்தால் களப்பிரர் தமிழரே. அவர்களின் ஆட்சிக்காலம் தமிழரின் பொற்காலமே
ஜெ

 

அன்புள்ள ஆர்வி

உண்மைதான். நான் வணிக இலக்கியங்களை வ்ரிவான விமரிசன அணுகுமுறையுடன் எழுதுவதில்லை. ஏதேனும் ஒரு சிறப்பம்சம் அவற்றில் இருந்தாலே போதும் என எண்ணுவேன். உதாரணம் ராணி மங்கம்மாள் மங்கம்மாளின் துயரம்தோய்ந்த வாழ்க்கையை வெகுஜன வாசகர்களுக்காகச் சொல்வதேபோதுமானது என்ற எண்ணம் இருக்கிறது

இன்னொருவிஷயம், பல வணிக நாவல்களை நான் மிக நெடுங்காலம் முன்பு வாசித்திருப்பேன். மறுவாசிப்பு கொடுத்திருக்க மாட்டேன். இலக்கிய நூல்களை எப்படியும் ஓரளவு முதிர்ச்சி அடைந்தபின்னர் மீண்டும் வாசித்திருப்பேன். இதுவும் ஒரு காரணம் என்று படுகிறது.

ஜெ

 

 

aஅன்புள்ள ஜெயமோகன்,

எப்படி இருக்கிறீர்கள்? நான், தங்கள் வலைப்பதிவுகளை தொடர்ந்து
படித்துக்கொண்டு வருகிறேன். இவ்வளவு நாட்கள் வெறும் படிக்கும் பழக்கமே
இருந்த எனக்குள், ஒரு எழுதும் ஆர்வத்தை உங்கள் எழுத்து மூலம் தூண்டி
உள்ளீர்கள். என்னுடைய எழுத்து படைப்புத்திறன் மிக்கதாக இருக்குமா என்பது
ஒரு பெரிய கேள்விக்குறி. அனால், என்னுடைய சிந்தனைகளை கட்டுரைகளாக எழுத
முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய தேதிக்கு என்னால் தமிழில் ஒரு
பத்தியேனும் சரியாக எழுத முடியுமா என்பது சந்தேகம் தான். எழுத
ஆரம்பிப்பதற்கு தமிழ் மொழியில் ஆளுமை அவசியம் இருக்க வேண்டும் என்பதில்
யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதற்கு முதல் அடியாக தமிழ்
இலக்கணத்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழ் இலக்கணத்தை
கற்கவும், சொல் வளத்தை பெருக்கிக்கொள்ளவும் தாங்கள் பரிந்துரை செய்யும்
நூல்கள் எவை?

– சீனு

PS: Im using Google’s tranliteration tool. Please bear with me if the
tamil fonts are not getting displayed properly

 

அன்புள்ள சீனு

சுந்தர ராமசாமி ‘எழுது  அதுவே அதன் ரகசியம்’ என ஒரு கவிதையில் சொல்கிறார்

ஆகவே எழுதுங்கள். எழுத எழுதத்தான் எழுத்தின் சவால்களும் சிக்கல்களும் தெரியவரும். அவை ஒவ்வொருவருக்கும் ஒருவகை. நீங்கல் செவிப்புலன் சார் நுண்னுணர்வு குறைவானவர் என்றால் உங்களால் உரையாடலை நன்றாக எழுத முடியாது. சிலரால் தர்க்கபூர்வமாக எழுத முடியாது. அந்தச்சிக்கல்களை அவர்கள் எழுதி எழுதித்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

மொழியை வாசிப்பதற்கு தனி நூல்கள் என ஏதுமில்லை. இலக்கண நூல்களை, சொற்பயிற்சி நூல்களை வாசித்து மொழியறிவுபெற்ற எவருமே இல்லை. இலக்கண அறிவும் சொல்லறிவும் மட்டுமே பெற முடியும். பலவகையிலும் வாசித்தலே ஒரே வழி. பிடித்தமானவற்றை நிறைய வாசியுங்கள். மொழி அதுவே உருவாகி வரும்.

ஒருவர் வாசிப்பதை தனக்குள் பேசி தெளிவாக்கிக்கொள்ள முயலும்போதே அவருக்கான மொழி உருவாக ஆரம்பித்துவிடுகிறது

கூகிள் ரீடரில் அதிகமாக எழுதமுடியுமா என்ன? NHM writer / முரசு போன்ற எதையாவது இறக்க்கிக்கொள்ளுங்கள். உங்கல் தமிழ் இப்போதைக்கு சீராகவே இருக்கிறது

எழுதுங்கள். எழுத எழுத ஒன்று தெரியும், யார் வாசிக்கிறார்களோ இல்லையோ எழுத்து நம்மை மகிழ்ச்சியாக தெளிவாக வைத்திருக்கும். அதுவே பெரும் பேறு

வாழ்த்துக்கள்

ஜெ

 

 

ஜெயமோகன் சார்… 
இந்த நியூஸ் படிச்சிருப்பீங்க. இதப்பத்தி தெரிஞ்சுக்கலாமா … பேசுவீங்களா…
– அன்புடன் சஞ்சய்.

http://www.dinamalar.com//General_detail.asp?print=1&news_id=17529&ncat=IN&archive=1&showfrom=10/4/2009

ஆரியர் – திராவிடர் பிரிவு கட்டுக்கதையே: விஞ்ஞானிகள் தகவல்
அக்டோபர் 04,2009

ஐதராபாத்: “நமது அரசியல்வாதிகளின் பிரபல முழக்கமான ஆரியர் – திராவிடர் கொள்கை வெறும் கட்டுக் கதையே’ என்று, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.இந்தியர்களின் மரபுவழி உண்மை குறித்து, செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானிகள் குமாரசாமி தங்கராஜன், லால்ஜி சிங் இருவரும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்த 132 பேர்களின் மரபணு சோதனை செய்யப் பட்டது.

 

ஆறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், 25 வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் உயர்வகுப்பினரும், தாழ்த் தப்பட்டவரும், பழங்குடியினரும் அடங்குவர். இவர்களின் மரபணுக்களில், ஐந்து லட்சம் மரபணு மாற் றங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவுக்குள் ஆரியர் நுழைந்து இங்குள்ள மக்களுடன் கலந்தனர் என்பதை, இந்த மரபணு மாற்றங்கள் காட்டவில்லை. மாறாக, இந்தியச் சமூகத்துக் குள்ளேயே, கலப்பு ஏற்பட் டுள்ளது என்பதைத்தான் அறுதியிட்டுக் கூறுகின்றன.

 
மேலும், இன்றைய ஜாதிமுறைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த பல்வேறு இனக் குழுக்களிலிருந்து வந்தவைதான் என்றும், இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது குறித்து, விஞ்ஞானி லால்ஜிசிங் கூறுகையில்,” இந்த ஆராய்ச்சி வரலாற்றை மாற்றி எழுதப் போகிறது. நமக்குள் வடக்கு – தெற்கு என்ற பிரிவினை இருந்ததில்லை என்பதை இது நிரூபித்துள்ளது,’ என்றார்.விஞ்ஞானி குமாரசாமி தங்கராஜன் கூறியதாவது:

 
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இங்குள்ள திராவிடர் எனப்பட்ட மக்களுடன் கலந்தனர் என்பதில் எவ்வித உண்மையும் கிடையாது. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்தமான் மற்றும் தென் மாநிலங்களில் தான், மனித இனம் குடியேறி வாழ ஆரம்பித்தது. 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் வடபகுதி மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக ஆரம்பித்தனர். ஒரு நிலையில், தென் மாநிலங்களில் இருந்தவர்களும், வடமாநிலங்களில் இருந்தவர்களும் ஒன்றாக கலக்க ஆரம்பித்தனர்.

 

 இதன் விளைவாக புதிய இனங்கள் உருவாகி, மக்கள் தொகை பெருகியது. இதனால் தான் இன்றைய மக்களிடையே மரபணு ரீதியில் எவ்வித வித்தியாசமும் காணப்படுவதில்லை. இந்தியச் சமூக உருவாக்கத்தின் போது, நிலவி வந்த பல்வேறு இனக் குழுக்களிடமிருந்துதான் ஜாதிகள் தோன்றின. ஜாதிகளுக் கும் பழங்குடியினருக்கும் இடை யே முறையான வேறுபாடுகள் இல்லாததால், அவர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்பது மிகவும் கடினமே. இவ்வாறு தங்கராஜன் தெரிவித்தார். ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்டு பொது சுகாதாரப் பள்ளி, பிராட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி., ஆய்வு மையங்களுடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது.

 

சஞ்சய்.

 

 
 அன்புள்ள சஞ்சய்

கட்டுக்கதை என்ற சொல் கொஞ்சம் அதீதமானது. சிலர் அப்படிச் சொல்கிறார்கள். அது ஒரு சமூகவியல் ஊகம்  [Hypothesis] அன்று இந்தியாவின் விரிவான சமூகப்பன்மையை புரிந்துகொள்ள அது முன்வைக்கப்பட்டது. அக்காலத்தில்  ஆஸ்திரேலியா போல உலகின் பலநாடுகளில் இருந்த நிலைமையை முன்மாதிரியாகக் கொண்டது. கரிய இன மக்கள் அங்கே வாழ்வார்கள், அவர்களை விட மேம்பட்ட வெள்ளை மக்கள் வந்து  அவர்களை வெல்வார்கள். அந்த சூத்திரம் அப்படியே இங்கேயும் போட்டுபார்க்கப்பட்டு ஆரிய திராவிட வாதம் உருவாக்கபப்ட்டது

இந்திய சிந்தனைமரபின் பின்னணியில் நின்று, இந்திய மூலநூல்களில் பயிற்சியுடன் அந்த ஊகம் ஆராயபப்படவில்லை. எளிதாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்கு அரசியல் காரணங்கள் இருந்தன.அந்தக் கோட்பாட்டை வைத்துப்பார்த்தால்கூட இந்தியாவின் 90 சதம் மக்கள் திராவிடர்களே. தனித்திராவிடர்கள் தெற்கைவிட மேற்கே அதிகம்.

அம்பேத்கார் முதலிய அசலான சிந்தனையாளர்கள் அக்காலத்திலேயே ஆரிய திராவிடவாதத்தை ஏற்கவில்லை. முழுமையாக நிராகரித்துவிட்டார்கள். எனக்கு அதை ஏற்பதில் உள்ள தயக்கமே அதை ஏற்றுக்கொண்டால் திராவிடர்கள் ஒருவகை பண்படா மக்கள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும். அது உண்மை அல்ல. இந்தியாவின் ஒட்டு மொத்தப் பண்டைய பண்பாடும் ஒரேபோலத்தான் இருந்திருக்கிறது. சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல்லூர் வரை.

இங்கே பல இனங்கள் வந்திருக்கலாம். ஆனால் அதெல்லாமே வரலாற்றுக்காலகட்டத்துக்குப் முன்னர். அதன் பின் அப்படி ஒரு இன மேலாதிக்கம் நிகழ்ந்தமைக்குச் சான்றுகள் ஏதும் இல்லை. என் நண்பர்களான சோதிப்பிரகாசம், குமரிமைந்தன் போன்ற திராவிடவாதிகளும் ஆரியபடையெடுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. அந்த ஊகமே மெல்லமெல்ல வலுவிழந்து வருகிறது

ஏன், ஒட்டுமொத்த இந்தியப்பண்பாடும் தென்னகத்திலிருந்து மேலேறிச் சென்றதாக இருக்கலாகாது?

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. தங்களுக்கு கடிதம் எழுதி நிரம்ப  நாளாகிவிட்டது. நான் இப்போது நைஜீரியாவில் இருக்கிறேன். இங்கே இந்தியர்கள் இருகிறார்கள். இந்திய தொழிலதிபர்கள் மற்றும் அவர்களிடம் பணிபுரியும் இந்தியர்கள். பணிபுரியும் இந்தியர்களின் நிலை நன்றாக இருக்கிறது. உள்ளூர் நைஜீரியா வாசிகள் பெரும்பாலும் கீழ்நிலை பணியாளர்களாகதான் இருகிறார்கள். இந்த நாட்டைபற்றி கொஞ்சம் சொல்லியாகவேண்டும். இது இந்திய போலவே ஒரு குடியரசு நாடு. இங்கே பல மொழி பேசும் மக்கள் இருகிறார்கள். இதுவும் ஒரு பிரிட்டிஷ் காலனி நாடு. அனைவரையும் இணைப்பது ஆங்கிலம்தான். இங்கு இருபது மொழிசார் இனவகுப்பு. ஒரு மொழியினர் மற்ற மொழியினரை அனுகவிடுவதில்லை. எல்லாம்
அவ நம்பிக்கை. அதனால் மொழி இன சண்டைகள். எங்கும் லஞ்ச, ஊழல். அதனால் வறுமை. இங்கே இரெண்டு ஜாதிகள் உண்டு. பணக்காரன் மற்றும் ஏழை. நடுத்தர வர்க்கம் எனபது இல்லை. மண் வளம் உண்டு. மழை வளம் உண்டு.  வற்றாத ஜீவநதி நைஜெர் பாய்கிறது. பெட்ரோல் வளமும் உண்டு. ஆனால் வறுமை எனபது தவிர்கமுடியாத ஒன்று. உண்பது நமக்கெல்லாம் ஒரு அன்றாட கடமையாக இருக்கிறது. ஆனால் அவர்கள் உண்பதை பொதுவாக மறந்துவிடுகிறார்கள்.  சிறிது பணம் கிடைத்தாலும் சேமித்துவைக்கும் வழக்கமில்லை. கிடைதபணத்தை அன்றே செலவளிதுவிடுவார்கள்.

ஒரு வழிகாட்டுதல் இல்லாமையாலும், கல்வியறிவு இல்லாமயலும் இந்த நாடு எத்தர்கள் கைகளில் அகப்பட்டு சாமானியர்கள் வறுமையில் இருகிறார்கள். சிலர் இதனால் திருட்டு மற்றும் வழிபரிகளில் ஈடுபடுகிறார்கள்.  பெண்கள் சிலர் விபச்சாரம்.  கிழக்கு மாநிலங்களின் சேர்த்த இளையவர்கள் இப்பொது ஆள் கடத்தலில் ஈடுபட்டிருகிறார்கள்.

ஒரு நெல்சன் மண்டேலா போல தலைவன் இருந்தால் இந்த தேசம் விழிப்பையும் என்று எண்ணுகிறேன். அந்த தலைவன் எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டும்.  அது நடக்குமா எனபதுதன கேள்வி. இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு தேசதுக்குகூட தலையெழுத்து அல்லது விதி இருக்குமோ என்று நினைக்கதோன்றுகிறது.

காலனியாதிக்கநாடுகள் இப்போது விட்டுவிட்டு போய்விட்டால் கூட அவர்கள் பிரித்தாள விதைத்த வேறுபாடுகள் எங்கும் வேர்விட்டு வளர்த்துவிட்டன. புற்று நோய் போல ஊடுருவி இன மொழி வேறுபாடுகள் ஆப்ரிக்க மண்ணை அழிதுகொண்டிருகிறது. இது பற்றி நீங்கள் எழுதியதுண்டா?

அன்புடன்
குரு


Thanks & Best Regards

Gurumoorthy Palanivel

அன்புள்ள குருமூர்த்தி அவர்களுக்கு

உலகை ஒன்றாக்கிய இணையம் வாழ்க.

நான் நைஜீரியாவை பின்னணியாக வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன் ‘தேவதை’ என்று நினைக்கிறேன். பலவகையிலும் இந்தியவரலாற்றுக்கு சமானமானது. வெள்ளையரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. வெள்ளைய வரலாற்றாசிரியர்கள் உருவாக்கிய இரட்டை இன கோட்பாடு [முற்றிலும் அடிபப்டை இல்லாத ஒன்று அது. இரு இனத்திலும் மக்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறிக்கொள்ளலாம்!] மூலம் உருவான பகைமை இருநாடு கோட்பாடாக ஆகி வன்முறைக்கு வித்திட்டு பேரழிவை உருவாக்கியது. இப்போது மெல்லமெல்ல அந்த பேதங்களை மறந்து அது மேலெழுந்து வருகிறது. உடனே மேலைநாட்டு ஊடகங்கள் மீண்டும் பிரிவினையை வித்திட்டு ஊட்டி வளர்க்கின்றன. சிமொண்டா அடிச்சி என்ற  அமெரிக்காவில் பிறந்த நைஜீரிய ஆங்கில எழுத்தாளரை மாபெரும் நைஜீரிய எழுத்தாளராக மேலை ஊடகங்கள் விருது கொடுத்து கௌரவிக்கின்றன. அவர் பழைய பயாப்ரா பிரிவினையின் புண்களை செயற்கையாக ஊதிப்பெருகச்செய்ய முயல்கிறார். விரைவிலேயே அங்கே மீண்டும் இனவாதம் வெடித்து வன்முறை உருவானால் ஆச்சரியமில்லை.

மற்றபடி நைஜீரியாவில் இருந்து வரும் கோடிக்கணக்கான ரூபாய் ‘பெறுமானமுள்ள’ மின்னஞ்சல்கள் அந்நாட்டை மறக்கமுடியாததாக ஆக்கி வைத்திருக்கின்றன

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்

நான் உங்கள் ‘தோள்சீலை போராட்டம்’ குறித்த கட்டுரையில் பாண்டியர்களே பரதவர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது உண்மையா? மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் அவர்கள் மிகவும் குறைவானவர்கள். அவர்கள் எப்படி நாடாண்டிருக்க முடியும்? நான் நாடார்களோ தேவர்களோ பாண்டியர்களாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்

சிவா
அன்புள்ள சிவா

இன்று இந்த விவாதத்தை நடத்தவே முடியாது. ஏனென்றால் எல்லா சாதியுமே மூவேந்தர்களும் தாங்களே என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆதாரங்கள் எல்லாம் யாரும் தேடுவதில்லை. மாற்றுக்கருத்துள்ளவர்களை வசைபாடுவதும் மிரட்டுவதுமே இங்கே வரலாற்றை நிறுவி விடும்

தேவர்கள் போர்வீரர்களே ஒழிய மன்னர்களாக இருந்ததில்லை. சில சிறிய ஜமீன்கள் மட்டுமே அவர்களுக்குரியவை. நாடார்கள் பெரும்பாலும் வணிகர்கள். கடைசிவரை பாண்டியர்கள் எந்த தேவர்களிடமும் மண உறவு வைத்ததில்லை. திருவிதாங்கூர் கொல்லம் கண்ணனூர் மன்னர்களிடமே மண உறவு வைத்திருந்தார்கள்.
 
அக்காலத்து அரசாட்சி என்பது மக்கள் பின்புலம் சார்ந்தது அல்ல. ஐதீகம் சார்ந்தது. பாண்டியர் குலம் கடல்கொண்ட தென்னாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற ஐதீகமே அவர்களின் அதிகாரம்

பழையோர் என்ற பெயர் பாண்டியர்களுக்கு உண்டு. மீன்கொடி இன்னொரு அடையாளம். பண்டைய கல்வெட்டுகளில் அவர்கள் பரத குலத்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பல ஆதாரங்கள் அப்படி ஓர் ஊகத்தை நிகழ்த்த இடமளிக்கின்றன

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வாசிப்பு பழகுனர் கப்பியாம்புலியூரன் எழுதிகொண்டது. நலம்.நலம் அறிய ஆவல்.

கடந்த சில மாதங்களாக தங்களின் வலை பக்கத்தை படித்து வருகிறேன்.அந்த ஆவலில் “ஊமைசென்னாய்” மற்றும் “நிகழ்தல்” இரண்டு புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.நிகழ்தல் வாசிக்க வாசிக்க இனிமையாக இருந்தது.உங்க வாழ்க்கைல நிகழ்ந்த சம்பவங்கள் அதை தங்கள் எழுதியுள்ள விதம் மிகவும் அருமை.

அதே சமயம் ஊமைசென்னாய் சிறுகதை தொகுப்பை என்னால் எளிமையாக படிக்க முடியவில்லை.அதனால் முதல் இரண்டு சிறுகதைகளுடன் புத்தகத்தை மூடிவிட்டேன்.மீண்டும் ஒரு நாள் அந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று என்னியுள்ளேன்.

என்னுடன் பழகும் இலக்கிய நண்பர்களுடன் (பழகுனர்கள் என்பதே சால பொருந்தும்)  பேசியதில் தங்களின் எழுத்துக்களை புரிந்து கொள்ளவே நான் நிறைய வாசித்த அனுபவம் தேவை என்பது புரிந்தது.

சில மாதங்களாகவே என்னுடைய வாசிப்பை அதிகரித்து வருகிறேன்.விரைவில் தங்களின் புத்தகங்களை வாசித்து புரிந்துகொள்ளும் அளவுக்கு தயாராகிவிடுவேன்.

தற்போது எஸ்.ரா-வின் துணைஎழுத்து,கதாவிலாசம்,தேசாந்திரி,எப்போதுமிருக்கும் கதை,உறுபசி.
ல.சா.ரா வின் “நான்”
கிவாஜ வின் சிறுகதை தொகுப்பு
ஜெயகாந்தனின் சபை நடுவே,சிறுகதை தொகுப்பு
இந்திரா பார்த்தசாரதி யின் திரைகளுக்கு அப்பால்
தேவதச்சனின் கடைசி டைனோசர்–இது எனக்கு சுத்தமா புரியல.ஆனா படிச்சிட்டேன்.
சாரு வின் மதுமிதா சொன்ன பாம்புகதைகள்,தப்பு தாளங்கள்

இப்படி என்னோட சின்ன பட்டியல் நீடு கொண்டே போகுது…

என்னை போன்ற வாசிப்பு பழகுனனுக்கு உபயோகமான குறிப்புகள் இருந்தால் எழுதவும்.

என்றும் அன்புடன்


கப்பியாம்புலியூரன்
அன்புள்ள கப்பியாம்புலியூரன்

வாசிக்க ஆரம்பிக்கும்போது சிலசமயம் ஒரு திணறல், புரிந்துகொள்ள ஓர் இடறல் , இருக்கும். கொஞ்சநாளிலேயே அது விலகிவிடும். அது ஒருபெரிய விஷயமே அல்ல. உட்கார்ந்துவாசித்தால் முன்று வருடத்திற்குள் தமிழில் உள்ள எல்லா முக்கியமான நூல்களையும் வாசித்துவிடலாம். அவ்வளவுதான் இருக்கிறது.

புரிதலுக்கு சிரமமாக ஏன் இருக்கிறது என்றால் நீங்கள் இலக்கியம், கதை குறித்து ஏற்கனவே வைத்திருக்கும் மனப்ப்திவுடன் இந்த புதிய விஷயங்கள் பொருந்தி போகவில்லை என்பதனாலேயே. ஆகவே உங்கள் மனக்கருத்தை மாற்றிக்கொள்ளும் மனநிலையுடன் படைப்புகளை வாசியுங்கள். புரியாததை எரிச்சலுடன் பார்க்கவோ புறக்கணிக்கவோ செய்யாதீர்கள்

நான் அறிமுக வாசகர்களுக்காக ‘நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’ என்ற நூல் ஒன்றை எழுதியிருக்கிறேன். உயிர்மை பதிப்பக வெளியீடு. அது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

ஜெ

முந்தைய கட்டுரைகாவல்கோட்டம் 5
அடுத்த கட்டுரைக்ரியா சொல்வங்கி